ஏன் பிரசங்கம்? என்ற கேள்வி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இன்று பிரசங்கத்தில் அநேகருக்கு ஆர்வம் குன்றியிருக்கிறது. கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கத்திற்கு அதிக மதிப்புக் கொடுத்து ஆர்வத்துடன் உழைத்து பிரசங்கத்தைத் தயாரிக்கும் போதகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்று பிரசங்கிகள் பிரசங்கிப்பதைவிட ஜெபக்கூட்டங்களையும், சுகமளிப்புக் கூட்டங்களையும், மனித உணர்வுகளுக்குத் தீனிபோடும் இன்னிசைக் கச்சேரிகளையுமே அதிகமாக நடத்தி வருகிறார்கள். அத்தோடு பிரசங்கம் என்ற பெயரில் உளரிக்கொட்டிக் கொண்டிருப்பவர்களே தமிழ் சபைகளில் அதிகம். இதனால் பிரசங்கத்தைக் கேட்டுவளர வேண்டும் என்ற ஆர்வத்தோடு பிரசங்கத்தைக் கேட்கத்துடிக்கும் ஆத்துமாக்களுடைய தொகையும் குறைந்து வருகின்றது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக பிரசங்கத்தைப்பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் இல்லாததும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பிரசங்கத்தைக்குறித்த அவநம்பிக்கையுமே முக்கிய காரணங்கள் என்று கூற வேண்டும். அநேக காலத்துக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழம் போதகர் வேதபூர்வமான பிரசங்கிகளின் அவசியத்தைப் பற்றிப் பேசும்போது, “பரலோகத்தின் அனுபவத்தைத் தன்னோடு பிரசங்க மேடைக்குக் கொண்டுவந்து, இன்னொரு உலகத்தின் எல்லைக் கோட்டுக்குள் இருந்து பேசுகிறவனைப் போன்ற தேவ மனிதர்களே இன்று நமக்குத் தேவை” என்று கூறியிருக்கிறார். ஆத்துமாக்களின் இருதயத்தைப் பிளந்து அவர்களைக் கர்த்தரின் சந்நிதானத்திற்குக் கொண்டுவரக்கூடிய வல்லமை வாய்ந்த வேதபூர்வமான பிரசங்கத்தைப் பற்றி இந்த ஆக்கத்திலே பார்ப்போம்.
பிரசங்கம் கர்த்தரால் தெரிவுசெய்யப்பட்ட தெய்வீக வழிமுறை (Divine method)
பிரசங்கம் கர்த்தரால் தெரிவு செய்யப்பட்ட தெய்வீக வழி முறையாகும். அதனால்தான் வேறு எதையும்விட பிரசங்கத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை வேதமே தெளிவாக விளக்குகிறது. பழைய ஏற்பாட்டில் ஈநோக்கைப் பாருங்கள் (யூதா 1:14). அவன் கர்த்தருடைய செய்தியை முன்னறிவித்தான். அதாவது தீர்க்கதரிசனமாக பிரசங்கித்தான். இதேபோல்தான் நோவாவும் (2 பேதுரு 2:5) நீதியின் பிரசங்கியாக இருந்தான். ஆபிரகாமை நாம் மறக்க முடியுமா? (ஆதி. 18:19), கர்த்தர் தன்னுடைய மக்களை வழிநடத்தும்படியாக அவனைத் தெரிந்து கொண்டார். ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்து ஆத்துமாக்களை வழிநடத்தினான். மோசே நாம் பார்க்கும் அடுத்த பிரசங்கி. அவனுடைய பிரசங்கங்களை நாம் பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். கர்த்தரிடமிருந்து நீதிச்சட்டங்களைப் பெற்று இஸ்ரவேலர் மத்தியில் பிரசங்கித்தான் மோசே. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அனைவரும் பிரசங்கித்தான் மோசே. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அனைவரும் பிரசங்கிகளாகவே இருந்திருக்கிறார்கள். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், யோனா, ஆமோஸ், ஆகாய், மல்கியா எல்லோருமே கர்த்தருடைய செய்தியை அவருடைய மக்கள் மத்தியிலும், ஏனைய நாடுகளிலும் பிரசங்கித்திருக்கிறார்கள். கர்த்தருடைய சித்தத்தை பிரசங்கத்தின் மூலமாகவே தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டிலும் நாம் இதைத்தான் பார்க்கிறோம். மனந்திரும்பி ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று யோவான் ஸ்நானன் தன் வாழ்நாள் முழுவதும் பிரசங்கித்தான். அவனை ஒரு பிரசங்கியாகவே புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய பிதாவின் கட்டளைகளை இவ்வுலகில் நிறைவேற்ற வந்தபோது பிரசங்கிகளிலெல்லாம் சிறந்த பிரசங்கியாகவே வந்தார். போதிப்பதும், பிரசங்கிப்பதும் அவருடைய வாழ்நாளில் முக்கிய பணிகளாக இருந்தன. பெந்தகொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களையே பெரிதுபடுத்துவார்கள். அவர்கள் கிறிஸ்து தன் பிரசங்கத்தின் மூலமாகவும், போதனையின் மூலமாகவும் மட்டுமே ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பை அறித்தார் என்ற உண்மையை வேதத்தில் பார்க்க மறுக்கிறார்கள. இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள், அந்த மனுஷன் பேசுகிறதுபோல் ஒருவரும் ஒருக்காலும் பேசனதில்லை (பிரசங்கித்ததில்லை) என்றார்கள் (யோவான் 7:47).
இயேசு கிறிஸ்து பயிற்சியளித்து, சபையை நிறுவுவதற்காக அனுப்பிய அப்போஸ்தலர்களும் சிறந்த பிரசங்கிகளாகவே இருந்தனர். இயேசு அப்போஸ்தலர்களை பிரசங்கம் பண்ணும்படியாக அனுப்பினார் என்று மாற்கு 3:14 சொல்லுகிறது. அப்போஸ்தலர் 2:14ல் பேதுரு தன்னுடைய குரலை உயர்த்திப் பிரசங்கித்தான் என்று வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் அவன் பிரசங்கித்தபோது அன்று மூவாயிரம் பேர் கர்த்தரிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகள் சொல்லுகிறது. அப்போஸ்தலர்களுடைய பிரசங்கத்தால் சபை தொடர்ந்து வளர்ச்சியடைந்தது என்று அப்போஸ். 6:7ல் வாசிக்கிறோம். பவுல் எபேசிய சபை மூப்பர்களுக்கு பிரியாவிடை அளித்துப் பேசிய பிரசங்கத்தில் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலுமே செலவளித்திருப்பதாகக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம் (அப்போஸ்தலர். 20:18-21).
திருச்சபையின் வரலாற்றைப் பார்த்தாலும் பிரசங்கம் செய்வதே திருச்சபைத் தலைவர்களின் முதன்மையான பணியாக இருந்திருக்கின்றது. வல்லமையான பிரசங்கத்தின் மூலமாகவே திருச்சபையிலும், நாடுகளிலும் எழுப்புதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு உதாரணமாக வேல்ஸ் நாட்டில் டேனியல் ரோலன்ட் (Daniel Rowland), ஹொவல் ஹெரிஸ் (Howel Harris), வில்லியம் வில்லியம்ஸ் (William Williams), இங்கிலாந்தில் ஜோர்ஜ் விட்பீல்ட் (George Whitefield), அமெரிக்காவில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) ஆகியோரின் பிரசங்க ஊழியங்களைக் குறிப்பிடலாம். சபைகள் வளர்ச்சியடைந்து சீர்திருத்தவாதம் தலைதூக்கியிருந்த காலங்களிலெல்லாம் பிரசங்கம் உன்னதநிலையில் இருந்திருக்கின்றது. உலகின் தலைசிறந்த சபைத்தலைவர்களாக இருந்துள்ள மார்டின் லூதர் (Martin Luther), ஜோன் கல்வின் (John Calvin), சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (Charles Spurgeon), மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd Jones) போன்றோரெல்லாம் பரைசங்கத்திற்கே தங்களுடைய சபை ஊழியங்களில் அதிஉயர்ந்த இடத்தைக் கொடுத்துவந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே சிறந்த பிரசங்கிகள் என்பதை உலகம் அறிந்திருக்கின்றது. பிரசங்கத்திற்கு மதிப்பிருக்காத காலப்பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியடையவில்லை, நல்ல பிரசங்கிகளையும் நாடறிந்திருக்கவில்லை.
திருச்சபையை எழுப்பவும், அதை வளர்க்கவும் கர்த்தர் பிரசங்கத்திற்கே அதி உன்னத இடத்தை அளித்துள்ளார் என்பதை வேதமும், திருச்சபை வரலாறும் ஐயமற விளக்குகின்றன. கர்த்தரின் தெய்வீக வழிமுறையான பிரசங்கம் மறுபடியும் உயர் நிலை அடையும் போதே இன்றைய கிறிஸ்தவம் மறுமலர்ச்சியடையும்.
பிரசங்கம் மட்டுமே கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சிறந்த செய்திப்பரிமாற்றல்முறை (Communication channel)
இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் வேத வசனம் ரோமர் 10:13-15. இந்த வசனங்களில் பவுல் பிரசங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குகிறார். கர்த்தரை ஆத்துமாக்கள் தொழுது கொள்ள வேண்டுமானால் அவர்கள் பிரசங்கத்தைக் கேட்மே கர்த்தரை விசுவாசிக்க வேண்டும் என்ற உண்மையை இப்பகுதி ஆணித்தரமாக விளக்குகிறது. பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? என்று பவுல் கேட்கிறார். அப்படிப் பிரசங்கிப்பதற்கு பிரசங்கிகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார். ஆகவே, நற்செய்தியை ஆத்துமாக்கள் கேட்பதற்கு கர்த்தர் ஏற்படுத்தி இருக்கும் செய்திப்பரிமாற்ற வழிமுறை பிரசங்கம் என்பதை இந்த வசனங்கள் விளக்குகின்றன. வேறு முறைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று வேதம் சொல்லவில்லையே என்று சிலர் இன்று வாதாடுகிறார்கள். சுவிசேஷத்தை விளக்குவதற்கு கர்த்தரே ஒரு செய்திப்பரிமாற்ற வழிமுறையைத் தெரிவு செய்து அதை வேதத்தின் மூலம் விளக்கியிருக்கிறபோது வேறு வழிகளில் என்ன தவறு? என்று கேட்கிறவர்களின் சிந்தனையில் நிச்சயம் கோளாறுதான். வேறு வழிகள் சிறப்பான வழிகளாக இருந்திருந்தால் கர்த்தர் பிரசங்கத்தை மட்டும் தெரிவு செய்து குறிப்பிட்டு பவுல் மூலம் பேசி இருக்க மாட்டார். கர்த்தரைப் பொறுத்தவரையில் பிரசங்கமே சுவிசேஷத்தை விளக்குவதற்கான சிறப்பான வழி முறை. இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரசங்கம் என்ற வார்த்தை (Kerusso), அதிகாரத்துடன் தேவ செய்தியை தேவ மனிதன் பிரசங்கிப்பதை விளக்குவதாக இருக்கிறது. ஏனைய எல்லா செய்திப்பரிமாற்றல் முறைகளில் இருந்தும் பிரசங்கத்தைப் பிரித்துக்காட்ட கிரேக்க மொழியில் இருந்து ஒரு சிறப்பான வார்த்தையை வேதம் இங்கு பயன்படுத்தியுள்ளது.
பவுல் 1 கொரிந்தியர் 1:21ல் பைத்தியமாகத்தோன்றுகின்ற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்றே என்று கூறுகிறார். 17ம் வசனத்தில், “சுவிசேஷத்தை பிரசங்கிக்கவே (கர்த்தர்) என்னை அனுப்பினார் . . . சாதூரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே என்னை அனுப்பினார்” என்கிறார் பவுல். 23ம் வசனத்தில் “நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம்” என்று சொல்கிறார். இங்கே பிரசங்கம் என்ற வார்த்தையே எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவிசேஷ ஊழியத்திற்கு வேறு சாதனங்கள் அவசியமாக இருக்குமானால் ஆணித்தரமாக பிரசங்கத்தைக் குறித்து வேதம் இந்தவகையில் பேசாது. இதே பவுல், போதகனான தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு என்று சொல்லுகிறார் (2 தீமோத்தேயு 4:2). இந்தளவுக்கு சுவிசேஷம் சொல்லவும், போதிக்கவும் கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கிற செய்திப்பரிமாற்றல் முறையாக பிரசங்கம் இருக்கிறபோது அதை உதாசீனம் செய்துவிட்டு வேறு முறைகளைப் பயன்படுத்துவது சபை வளர்ச்சிக்கு உதவாது.
மனிதனுடைய இருதயம் கேட்பதைக் கொடுப்பதையே அடிப்படையாகக் கொண்டு ஊழியம் செய்து வருகிறவர்கள் இன்று பிரசங்கத்தை அகற்றிவிட்டு, இசை, வில்லுப்பாட்டு, நாடகம், நடனம், சினிமாப்படம் என்றெல்லாம் சமுதாயத்தில் காணப்படும் வேறு செய்திப்பரிமாற்றல் முறைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு அமைதியாக இருந்து யாரால் பிரங்கத்தைக் கேட்க முடியும்? மனிதனால் அத்தனை நேரம் பொறுமையாக இருக்க முடியாது என்று இவர்கள் அங்கலாய்க்கிறார்கள். அதிகாரத்தோடு இருக்கும் பேச்செல்லாம் இன்றைய சமூதாயத்துக்கு ஒத்துப்போகாது, ஆத்துமாக்களுடைய இருதயத்தை அமைதிப்படுத்தும் வழிமுறைகளே பயன் தரும் என்கிறார்கள். ஆகமொத்தத்தில், மனிதனுடைய இருதயத்தை வேதபிரசங்கத்தின் மூலம் தொட்டு, அவனை சிந்திக்க வைப்பதில் இவர்களுக்கு அக்கறையில்லை, அவன் சந்தோஷப்படும்படி எதையாவது செய்வதை மட்டுமே இவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சிந்திப்பவர்கள் மனிதநலவாதிகள் (Humanists). இவர்களுக்கு கர்த்தருடைய வழிமுறைகளில் நம்பிக்கையில்லை. மனிதனுக்கு எது பிடிக்கிறது? என்பதை வைத்தே இவர்களுடைய ஊழியங்கள் அமைகின்றன. இதிலிருந்து பிரசங்கத்திற்கு இன்று முக்கியத்துவம் இல்லாமல் போயிருப்பதற்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
வேதவசனங்களை விளக்கிப் போதிப்பதற்கு பிரசங்கத்தைப்போல வேறு எதுவும் பயன்படாது
கர்த்தர் தன்னுடைய சித்தத்தை மனிதனுக்கு வெளிப்படுத்த பிரசங்கத்தைத் தெரிவு செய்ததற்கு தத்துவ ரீதியான (Logical) முக்கியமான காரணமொன்றுண்டு. அந்தக் காரணத்தை நாம் இப்போது விளக்கமாக பார்ப்பது அவசியம். கர்த்தர் தம்முடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ளும்படியாக எழுத்தில் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார். எழுத்தில் இருக்கும் வேதத்தை பரிசுத்த ஆவியின் துணையோடு மட்டுமே எவரும் விளங்கிக் கொள்ள முடியும். எல்லா விசுவாசிகளும் வேதத்தைத் தங்களுடைய சொந்த மொழியில் வாசித்து அதன் பொதுவான செய்தியை விளங்கிக்கொள்ள முடிந்தாலும், அது போதிக்கும் இறையியல் பற்றிய மேலான அறிவைப்பெற்றுக்கொள்ள வேதத்தை ஆராய்ந்து படித்து, அதில் அதிக அறிவைப்பெற்றுக் கொண்டிருப்பவர்களின் உதவியையும் நாட வேண்டியிருக்கிறது. அதற்காகவே கர்த்தர் திருச்சபையில் போதகர்களை நியமித்திருக்கிறார். போதகர்கள் வேதத்தை நல்ல முறையில் படித்து “ஜாக்கிரதையாய்” பிரசங்கம் பண்ண வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் (2 தீமோத்தேயு 4). வேதத்தின் மூலமொழிகளான எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளைப் பயன்படுத்தி, வேத வசனங்களை நித்தமும் ஆராய்ந்து அதில் காணப்படும் பல்வேறு இறையியல் போதனைகளையும் தகுந்த முறையில், தங்களுடைய சொந்த மொழியில் ஆத்துமாக்களுக்குப் புரியும்படியாக விளக்கிச்சொல்ல போதகர்களுக்கு உதவக்கூடிய ஒரே முறை, தகுந்த முறை பிரசங்கம் மட்டுமே. வேறு எதனாலும் அதைச் செய்ய முடியாது.
வேதத்தின் ஒவ்வொரு நூலையும் வசனப்பிரகாரமாக வாராவாரம் சபையில் விளக்கிச் சொல்லி, கர்த்தர் ஆத்துமாக்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்று அறிவிப்பது போதகனின் கடமை. கர்த்தரின் சித்தத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் வசனம் இலக்கண, இலக்கிய, வரலாற்றுப் பிரகாரமாக விளக்கப்பட வேண்டும். இதைப் பிரசங்கத்தைத் தவிர வேறு எந்த கருவியின் மூலமாகவும் செய்ய முடியாது. நாடகம், இசை, பாட்டு, கூத்து, சினிமா எதுவுமே இதற்கு உதவாது. லூயிஸ் டெப்னி (Lewis Dabney) எனும் இறையியல் அறிஞர், “இசை, நாடகம் போன்றவை நமக்கு சுவையூட்டுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. நம்முடைய ஆவியின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புவதே அவற்றின் உடனடி இலட்சியமாக இருக்கின்றது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் ஆத்துமாக்கள் பலனுள்ள செய்லகளைச் செய்யும்படிச் செய்வதே பிரசங்கத்தின் உடனடி நோக்கமாக இருக்கின்றது” என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து பிரசங்கத்திற்கும் ஏனைய செய்திப்பரிமாற்றல் முறைகளுக்குமுள்ள தொடர்பை விளங்கிக் கொள்ளலாம். வசனத்தை ஆராய்ந்து, அது போதிக்கும் உண்மையைத் தெளிவாக கேட்பவர்களுக்கு உள்ளதை உள்ளதுபோல் விளக்கிப்போதிக்க கர்த்தர் பிரசங்கத்தைத் தெரிந்தெடுத்திருக்கிறார். “வேத வசனங்களை ஆராய்ந்து இலக்கணபூர்வமாக விளக்கிப் பிரசங்கிப்பதை பிரசங்கிகளிடம் இன்று காணமுடியாதிருக்கின்றது. அநகே இறையியல் கல்லூரிகள் மூல மொழிகளில் போதிப்பதை விட்டுவிட்டன. மூல மொழிகளில் வேத வசனங்கள் எந்த முறையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து ஆராய்ந்து படிக்கும் போதகர்கள் இன்று குறைவு. இது மிகவும் கொடுமை!” என்று கூறும் போதகர் அல்பர்ட் என். மார்டின் (Albert N. Martin) மார்டின் லூதர் (Martin Luther) சொன்னதை நினைவுபடுத்துகிறார்: “மொழிகளை ஆராய்ந்து படிப்பதைத் தொடருங்கள், ஆவியின் பட்டயமான வேதம் இலக்கணமாகிய உறையிலேயே தங்கியிருக்கின்றது.”
இலக்கண, வரலாற்று, இலக்கிய அடிப்படையில் வேதத்தை ஆராய்ந்து விளக்கிப் போதிக்கும் கலையை இறையியல் கல்லூரிகள் இறையியல் மாணவர்களுக்கு இன்று கற்றுக்கொடுப்பதில்லை. இன்று இறையியல் கல்லூரிகளுக்குப் போய் வருபவர்கள் நல்ல பிரசங்கிகளாக இல்லாமலிருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். வேத விளக்க விதிகளின் அடிப்படையில் வேதநூல்கள் ஒவ்வொன்றும் இக்கல்லூரிகளில் ஆராய்ந்து விளக்கப்படுவதில்லை. இக்கல்லூரகளில் இருந்து வெளிவந்து போதகர்களாக சபைகளில் இருப்பவர்களுக்கு வேத நூல்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்க முடிவதில்லை. பிரசங்கம் செய்வதற்கு வேதஞானம் தேவை. அது இல்லாததால் போதகர்கள் இன்று வேறு வழிமுறைகளை நாடி ஆத்துமாக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பெஞ்சமின் வோர்பீல்டின் (Benjamin Warfield) பின்வரும் வார்த்தைகள் ஒவ்வொரு போதகனின் படிப்பறையிலும் பொறித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்: “இன்று நம்முடைய பிரசங்க மேடைகளில் இருக்க வேண்டியவர்கள் பிரசங்கிகளாக உருவாகியுள்ள அறிஞர்களான விசுவாசிகளே.”
வேதவசனங்களை விசுவாசத்துடன் பிரசங்கிப்பதற்கு போதகர்கள் இறையியல் வல்லுனர்களாக இருக்க வேண்டும். அவர்கள் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் (Systematic Theology) தேர்ந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும். வேதத்தைப் பற்றிய பொதுவான அறிவை மட்டும் கொண்டிருந்தால் போதாது. போதகர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பிரசங்கமும் வேதபோதனைகள் அனைத்தையும் அரவணைத்து வேதபூர்வமான இறையியல் (Biblical Theology), முறைப்படுத்தப்பட்ட இறையியல் (Systematic Theology), வரலாற்று இறையியல் (Historical Theology) ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றோடு ஒத்துப்போவதாக இருக்கவேண்டும். தமிழ் கிறிஸ்தவ சபைகள் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு வரும் பிரசங்கப்பஞ்சத்தால் இன்று வாடி நிற்கின்றன. இன்று நம்மத்தியில் இருக்கும் பிரசங்கப் பஞ்சத்திற்கு வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கம் (Biblical Expository Preaching) செய்யக்கூடிய, உடவை வருத்தி பிரசங்கங்களைத் தயாரித்துப் பிரசங்கிக்கும் நல்ல பிரசங்கிகளான போதகர்கள் திருச்சபைகளில் இல்லாமலிருப்பதே முக்கிய காரணம்.
போதக ஊழியத்துக்கு பிரசங்கத்தைப்போல உதவக்கூடியது வேறு எதுவுமேயில்லை
ஆத்துமாக்களை பரிசுத்தவான்களாக தயார்செய்வது ஒவ்வொரு போதகனதும் கடமை (எபேசியர் 4:12). சபை பக்திவிருத்தி அடைவதற்கு போதகன் உழைக்க வேண்டியவனாக இருக்கிறான். அதற்காகவே போதகர்களை (மேய்ப்பர்களை) கர்த்தர் சபைக்குக் கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:13). போதகன் என்ற வார்த்தைக்குப் “போதிக்கிறவன்” என்று பொருள். மேய்ப்பனின் முழுநேர ஊழியமே போதிப்பதுதான். போதக சமர்த்தனாக இருந்து வேதத்தைப் போதிப்பதன் மூலம்தான் போதகன் ஆத்துமாக்களைப் பரிசுத்தவான்களாக வளரும்படிச் செய்கிறான். இந்தப்போதக ஊழியத்தைப் போதகன் பிரசங்கிப்பதன் மூலம் சபையில் நடத்திச் செல்கிறான். ஓய்வு நாளிலும், வேதப்பாடங்கள் நடக்கும் நாட்களிலும், இறையியல் போதனைகளை விசேஷமாக தன் மக்களுக்கு அளிக்கும் காலங்களிலும், கன்வென்சன்களிலும், பிரசங்கத்தின் மூலமாக போதகன் ஆத்துமாக்கள் பக்திவிருத்தி அடைய உழைக்கிறான். பிரசங்கத்தை நிராகரித்துவிட்டு அவன் வேறுவழிகளை நாடினால் ஆத்துமாக்களின் பக்திவிருத்திக்கு அவனால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆத்துமாக்களுக்குப் பிடித்தமான எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், அந்த வழிகளின் மூலம் ஒரு நல்ல போதகனால் போதிக்க முடியாது. அவனுக்கு உதவக்கூடிய கர்த்தரளித்திருக்கும் நல்ல வல்லமையுள்ள கருவி பிரசங்கம் மட்டுமே.
போதக ஊழியத்துக்கு பிரசங்கம் மட்டுமே உதவக்கூடிய கருவியாக இருப்பதால்தான் போதகர்கள் படிப்பதில் நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. தொடர்ந்து படித்துப் பிரசங்கிக்காத மனிதனால் போதக ஊழியத்தை விசுவாசத்தோடு செய்ய முடியாது. வேதத்தை மட்டுமல்லாமல் அவன் சகலவிதமான நல்ல ஆத்மீக விருத்தி தரும் நூல்களையும் வாசிப்பது அவசியம். வாசிக்கும் கலை இன்று தமிழ் கிறிஸ்தவர்களிடமும், போதகர்களிடமும் இல்லாமலிருக்கிறது. இந்தப் பஞ்சமும் போக வேண்டும். தொமஸ் மர்பி (Thomas Murphy) என்ற போதகர் சொல்லுகிறார்: “போதகர்களே! படியுங்கள், படியுங்கள், படியுங்கள். படிக்காவிட்டால் நீங்கள் கிறிஸ்துவில் வளர முடியாது, வாழவும் முடியாது. படிப்பதைப் பலர் கைவிட்டுவிட்டமே இன்று நாம் ஊழியத்தில் பார்க்கும் பல தலைவலிகளுக்கும் காரணம்.” போதக ஊழியத்துக்கு வந்த பல இளைஞர்கள் பின்பு அதில் தொடர்ந்திருக்க முடியாமலும், கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்து போனதற்கும் காரணமாக இருந்திருப்பது அவர்கள் தொடர்ந்து படிக்காமல் இருந்ததுதான் என்று மர்பி எழுதுகிறார்.
வாசிப்பது போதக ஊழியத்தின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து போதகர்கள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களை வாசிப்பதற்காக ஆங்கில அறிவைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்பது பயன்தரும். வேதத்தில் நல்லறிவு பெற்று, நாம் செய்யும் பிரசங்கம் நல்ல முறையில் அமைவதற்காக இத்தனையையும் செய்வது அவசியம். வாசிக்காதவர்களின் சிந்தனை, வளர்ச்சி அடைய முடியாது. வாசிக்காதவன் ஒரு குழந்தையின் சிந்தனையைக் கொண்டிருந்து குழந்தைத்தனத்தோடு நடந்து கொள்வான். வாசிக்காதவர்களுக்கு உலக நடப்பும் தெரியாது. ஆகவே, ஆத்துமாக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, அவற்றில் இருந்து அவர்களை விடுவிக்கும் சமர்த்துடன் வேதப்பிரசங்கம் செய்ய போதகர்களுக்கு வாசிப்பு அவசியம். ஆத்துமாக்கள் பக்திவிருத்தி அடைய, வாசித்துப்படித்துத் தயாரித்த போதகப் பிரசங்கங்களே உதவ முடியும். சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (Charles Spurgeon) 2 தீமோத்தேயு 4:13 ஐக்குறித்து விளக்கும்போது பின்வருமாறு சொல்லுகிறார்: “படிக்காதவர்களை பவுல் எவ்வளவு தூரம் இந்த வசனத்தில் மூலம் கண்டிக்கிறார் பாருங்கள். பவுல் கர்த்தரிடம் இருந்து நேரடியாக வெளிப்படுத்தலைப் பெற்றுக்கொண்டவன், இருந்தாலும் அவன் புத்தகங்களை நாடி ஓடுகிறான். நாற்பது வருடங்களுக்கு மேலாக போதக ஊழியம் செய்திருக்கிறான், இருந்தாலும் இன்னும் புத்தகங்களை நாடி ஓடுகிறான். அவன் ஆண்டவரை நேரடியாக சந்தித்திருக்கிறான், இருந்தாலும் அவனுக்கு இன்னும் புத்தகங்கள் வேண்டியிருக்கிறது. நம்மெல்லோரையும்விட அதிக அனுபவங்களை வாழ்க்கையில் பெற்றிருக்கிறான், இருந்தாலும் அவனுக்கு இன்னும் புத்தகங்கள் தேவைப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் பல நூல்களைப் பவுல் எழுதியிருக்கிறான், இருந்தாலும் இன்னும் புத்தகங்களை நாடி ஓடுகிறான். ஒவ்வொரு பிரசங்கியையும் பார்த்துப் பவுல் சொல்கிறான், வாசிப்புக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.”
போதகர்களை வேதம் ஆடு மேய்க்கும் இடையர்களுக்கு ஒப்பிடுகிறது. மேய்ப்பவன் மந்தைகளின் தேவைகளை அறிந்திருப்பான். அவர்களுடைய தேவைகளை சந்திக்கிறவனாக இருப்பான். மந்தைகளின் தேவைகளை சந்திக்கத் தெரியாத மேய்ப்பன் இருக்க முடியாது. மந்தைகளின் வளர்ச்சி மேய்ப்பன் அக்கறையோடு செய்யும் செயல்களில் தங்கியிருக்கிறது. அதைப்போலத்தான் சபைப்போதகனும். அவன் ஆத்துமாக்களை அக்கறையோடு வழி நடத்துகிறவனாக இருக்க வேண்டும். ஆத்துமாக்களின் தேவைகளைப் போதகப் பிரசங்கங்களின் மூலம் சந்திக்கிறவனாக இருக்க வேண்டும். அவனுடைய பிரசங்கங்கள் அனைத்தும் வேதபூர்வமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆத்துமாக்கள் ஆர்வத்தோடு கேட்டுப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவிதத்தில் நல்ல பல இறையியல் போதனைகளை உதாரணங்களுடன் விளக்குபவனாகவும், நடைமுறைக்கு ஏற்றவையாகவும் இருக்க வேண்டும். நம்முடைய பிரசங்கத்தைக் கேட்கும் ஆத்துமாக்கள் பிரசங்கத்தில் எதுவும் இல்லை என்று தெரிந்தால் ஆர்வத்தை இழந்து பிரசங்கம் கேட்பதைக் குறைத்துக் கொள்வார்கள். பிரசங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களால் பக்திவிருத்திக்குரிய வாழ்க்கையை வாழமுடியாது. சாத்தான் பிரசங்கத்தையும், பிரசங்கத்தைப் படித்துத் தயாரித்துப் போதிக்கும் போதகர்களையும் சபைகளில் காணமுடியாததால்தான் இன்று திருச்சபைகள் பக்திவிருத்தி குறைந்து காணப்படுகின்றன.
பரிசுத்த ஆவியின் கிரியை பிரசங்கத்தின் மூலம் வெளிப்படுவதுபோல் வேறு எதன் மூலமும் வெளிப்படுவதில்லை
இயேசு தான் உயரெடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக அப்போஸ்தலர்களைப் பார்த்துத் தான் போனபின்பு பரிசுத்த ஆவியை அனுப்பப்போவதாக வாக்குக் கொடுத்தார். அவ்வாறு வரப்போகும் ஆவியானவர் இந்த உலகத்து மக்களுடைய பாவங்களைக் கண்டித்து உணர்த்துவார் என்றும் இயேசு கூறினார். பரிசுத்த ஆவியானவர் அதை எப்படிச் செய்யப்போகிறார் என்பதை அநேகர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பெந்தகொஸ்தே கூட்டத்தார் முக்கியமாக இந்த உண்மையை ஆராய்ந்து பார்ப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் பிரசங்கத்தின் மூலமாகவே இந்த உலகத்து மக்களுடைய பாவங்களை உணர்த்தப் போகிறார் என்று வேதம் போதிக்கிறது. எங்கெங்கு வேதபூர்வதான பிரசங்கங்கள் கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக செயல்படுவார் என்பதை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஏனெனில், வேதம் அதை உறுதிப்படுத்துகிறது. இன்று பிரசங்கத்தை நிராகரித்துவிட்டு இசைக்கும், பாட்டுக்கும், ஆட்டங்களுக்கும், நடனத்துக்கும், படக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள், பரிசுத்த ஆவி வல்லமையோடு கிரியை செய்வதைப் பார்க்க முடியாது. கர்த்தருடைய வழியை மீறி அவருடைய ஆவியானவர் செய்லபடுவார் என்று எதிர்பார்ப்பது எத்தனை முட்டாள்தனம்.
பிரசங்கிகள் ஆவியின் வல்லமையை பிரசங்கிக்கும்போது அனுபவிப்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது. போதகர்கள் பிரசங்கத்தை தேவ பயத்தோடு உழைத்துத் தயாரித்து விசுவாசத்தோடு பிரசங்கிக்கும்போது அந்த அனுபவத்தைக் கர்த்தர் அவர்ளுக்கு அளிக்கிறார். இதை சபையாரும் அறிந்து கொள்ள முடியும். இந்த அனுபவத்தைத்தான் பவுல், “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; . . .” என்று கூறுகிறார் (1 தெசலோனிக்கேயர் 1:5). இந்த அனுபவத்தைப் பற்றிப் பேசியுள்ள சீர்திருத்தவாத பிரசங்கிகள் தாங்கள் பிரசங்கம் செய்கிற போது பல தடவைகள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு வழிநடத்தப்பட்டதாகக் கூறியிருக்கிறார்கள். பிரசங்கிகள் பிரசங்கிக்கின்றபோது அவர்களுடைய பேச்சோடு சம்பந்தப்பட்டதாக மட்டுமே இந்த அனுபவம் இருக்கும். அதாவது அவர்கள் பிரசங்கிக்கிறபோது எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் பேசவும், வசனங்களை சுலபமாக நினைவுகூறவும், வேதத்தை விளக்குகிறபோது தெளிவாக விளக்கக்கூடியதாகவும் இருப்பதுதான் இந்த அனுபவம். பெந்தகொஸ்தேகாரர்கள் விளக்குகிற முறையில் நாம் தவறாக இந்த ஆவியானவரின் அனுபவத்தை விளங்கிக் கொள்ளக்கூடாது. பிரசங்கம் மாத்திரமே ஆவியானவரின் இந்த ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கிற, தேவனால் தெரிவு செய்யப்பட்ட, செய்திப்பரிமாற்றல் முறையாக இருக்கிறது. வேறு முறையும் அவை உலகத்து மக்களைக் கவரக்கூடியவனாக இருந்தபோதும் இந்த அனுபவத்தை வெளிப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன.
வேதபூர்வமான பிரசங்கம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி திருச்சபையை வளர்க்கிறது
வேதபூர்வமான பிரசங்கங்களினால் சபை மக்கள் ஆத்மீக வாழ்க்கையில் வளர்ச்சி அடைகிறார்கள். தேவனை அறியாதவர்கள் பிரசங்கத்தைக் கேட்டு கர்த்தரை விசுவாசிக்கிறார்கள். ஆதி சபை பிரசங்கத்தின் மூலமாகவே வளர்ந்ததாக அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். அப்போஸ்தலர்கள் தங்களுக்கு சுவிசேஷத்தை வல்லமையோடு பேசும் ஆசீர்வாதத்தை அளிக்கும்படியாகவே கர்த்தரை நோக்கி எப்போதும் ஜெபித்திருக்கிறார்கள். வேதபூர்வமான பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்கள் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறபடியால்தான் பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் பிரசங்கம் செய்வதில் அதிக கவனத்தைச் செலுத்துபைடி எழுதினார். ஜாக்கிரதையாகப் பிரசங்கம் செய்யும்படி வற்புறுத்தி எழுதினார். போதக ஊழியத்தைப் பற்றி அதிகமாகப் பேசுகின்ற 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து ஆகிய நிருபங்கள் சபைகளில் பிரசங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கிய இடத்தைப் பற்றியே வலியுறுத்திப் பேசுகின்றன. அதற்குக் காரணம் சபை வளர்ச்சிக்கு பிரசங்கம் மட்டுமே போதகர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. ஆகவே கர்த்தருடைய வழியாகவும் இருக்கின்றது.
ஆத்துமாக்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களை நம்வழியில் திருப்புவதற்கு மனிதனால் ஆகக்கூடிய வழிகள் உலகில் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், அந்த வழிகள் மனிதனின் வழிகளாகத் தான் இருக்கும். மனிதன் உலகப்பிரகாரமான, சரீரத்துக்குரிய வழிகளைப் பயன்படுத்தும்போது அதில் அவனுடைய கிரியைகளையே பார்க்க முடியும். இசையின் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் தமிழ் சமுதாயத்தையே இன்று சினிமா உலகம் ஆண்டு வருவது நமக்குத் தெரியாததல்ல. அதற்கும் ஆத்துமாக்களின் ஆத்மீக வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனிதர்களை சினிமாவும், பாட்டும், நடிப்பும் ஈர்க்கிறது என்பதற்காக அவற்றை அத்மீகக் காரியங்களுக்காக நாம் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. அவற்றால் ஆத்துமாக்கள் ஆத்மீக வளர்ச்சியையும் அடைய முடியாது. ஆத்மீக வளர்ச்சி அடைய கர்த்தரின் வழிகளையே நாம் பின்பற்ற வேண்டும். அதற்குக் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதமே பிரசங்கமாகும்.
வேதபூர்வமான பிரசங்கம் கர்த்தரை மகிமைப்படுத்துகிறது
பிரசங்கம் வேதபூர்வமானதாக இருக்கும்போது அது கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. நாம் செய்கின்ற அனைத்தும் கர்த்தரை எப்போதும் மகிமைப்படுத்துபவையாக இருக்க வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதையும், சபை வளர்ச்சியையும் மட்டும் பிரதான நோக்கமாகக் கொண்டு போதகர்கள் பிரசங்க ஊழியத்தில் ஈடுபடக்கூடாது. அவர்களுடைய முதல் நோக்கம் கர்த்தர் தங்கள் ஊழியத்தின் மூலம் மகிமை அடைய வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு போதகரும் அதை மனிதல் வைத்தே ஒவ்வொரு பிரசங்கத்தையும் தயாரிக்க வேண்டும், பிரசங்கிக்க வேண்டும். கர்த்தர் மகிமையை நாடாத பிரசங்கத்தை அவர் ஆசீர்வதிக்க மாட்டார்.
முடிவாக
பிரசங்கம் ஏன்? என்று ஆராய்ந்திருக்கிறோம். பிரசங்கத்தின் மகிமையை இனியாவது வாசகர்கள் உணர்ந்து அதற்குக் கொடுக்க வேண்டிய இடத்தை உங்கள் வாழ்க்கையில் கொடுக்க முன்வருவீர்களா? வேத அடிப்படையிலான பிரசங்கத்தைச் செய்யும் பிரசங்கிகளைக் கொண்டிருக்கும் சபைகளை மட்டும் ஆதரிக்க முன்வருவீர்களா? போலிகளை இனங்கண்டு அவர்களுடைய போலித்தனங்களுக்கு இனியும் இடங்கொடுக்காது உங்களைக் காத்துக் கொள்வீர்களா? இதை வாசிக்கும் போதகர்களே! உங்கள் போதக ஊழியத்தில் பிரசங்கம் அதி உயர்ந்த இடத்தை வகிக்கும்படியாக இனிப்பார்த்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய வழிகளை மீறாமல் நீங்கள் ஊழியம் செய்யும்போது வேத அடிப்படையிலான ஆத்மீக சீர்திருத்தம் ஆத்துமாக்கள் மத்தியில் தானாகவே ஏற்படும். மெய்ப்பிரசங்க வரட்சியினால் வாடிப்போயிருக்கும் தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரசங்க மழை பொழியும் நாள் எப்போது வரும்?