கர்த்தருடைய ஊழியக்காரர்களைக் குறைகூறக் கூடாதென்றும், அப்படிக்குறை கூறுபவர்கள் கர்த்தரின் சாபத்திற்கு உள்ளாக நேரிடும் என்றும் கூறி அதற்கு பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாகக்காட்டி இன்று ஆத்துமாக்களை பயமுறுத்தி வருகிறது ஒரு கூட்டம். கர்த்தருடைய ஊழியக்காரர்களை நாம் கனம் பண்ண வேண்டுமே தவிர அவர்களை ஒருபோதும் குறைகூறக்கூடாதென்கிறார்கள் இவர்கள். இதற்கு இவர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கும் பழைய ஏற்பாட்டு வசனம். “நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும் என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்” என்பதாகும் (1 நாளாகமம் 16:22; சங்கீதம் 105:15). அத்தோடு 2 சாமுவேல் 19:21ஐயும் உதாரணமாகக் காட்டி கர்த்தரின் ஊழியக்காரரைக் குறை கூறுபவர்களைக் கர்த்தர் சபிப்பார் என்றும் பயமுறுத்துகிறார்கள்.
முதலில் நாம் மேலே பார்த்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டவை என்பதை ஆராய்வது அவசியம். வேத வசனங்களை அவை காணப்படும் சூழ்நிலைகளின் அடிப்படையில் விளக்காது தாம் நினைத்தவாறு பயன்படுத்தி விளக்கங் கொடுப்பது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது. இந்த விதத்திலேயே இந்த வசனங்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த வேதப்பகுதிகளை இனி ஆராய்வோம். பழைய ஏற்பாட்டு மக்களுக்கு, அவர்களை வழி நடத்த கர்த்தர் அபிஷேகித்து பல பிதாக்களையும், தீர்க்கதரிசிகளையும் தந்தார். அவர்கள் கர்த்தரின் அங்கீகாரத்தை சந்தேகமில்லாமல் பெற்றவர்கள். அத்தகையோரை நிராகரிப்பது கர்த்தருக்கே விரோதமாக நடக்கும் செயல். இஸ்ரவேல் மக்கள் பல முறை கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளை நிராகரித்துவிட்டு போலித்தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்தார்கள். அது மிகவும் மோசமான செயல். இது தவறு என்று அறிவுறுத்தி இனி அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்கிறது இவ்வசனங்கள் (1 நாளா. 16:22; சங்கீதம் 105:15).
2 சாமுவேல் 19:21ல், சீமேயி கர்த்தரின் அபிஷேகத்தைப் பெற்றிருந்த தாவீதை அவமதித்துப் பேசியிருந்தான். தாவீது இங்கே எந்தத் தவறும் செய்யவில்லை. தாவீது தவறு செய்திருந்து சீமேயி அதனைச் சுட்டிக்காட்டியிருந்தால் அரசனாக இருந்தபோதும் தாவீது மனந்திரும்பி எல்லோரையும்போல் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கே தவறு தாவீதின் மேல் இல்லை. சீமேயி சுயநலத்தால் தாவீதை அவமதித்தான். தவறு சீமேயினுடையது. இருந்தபோதும் தாவீது அவனை மன்னித்து விடுகிறான். இது தெரியாமல் இந்த வசனங்களைப் பயன்படுத்தி கர்த்தரின் ஊழியக்காரரை ஒருபோதும் குறைகூறக்கூடாது என்று வேதம் சொல்கின்றது என்று விளக்கமளிப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில்போட்டு மறைப்பதுபோலாகும்.
அனைத்தையும் சோதித்துப் பாருங்கள்
வேதம், கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்கிறது. “உலகத்திலே அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதியுங்கள்” என்று அப்போஸ்தலனான யோவான் சொல்லியிருப்பதை 1 யோவான் 4:1ல் வாசிக்கிறோம். தொடர்ந்து ஒருவன் தேவனுடைய ஊழியக்காரரா? என்பதை எப்படி அறிந்து கொள்வது என்றும் யோவான் இப்பகுதியில் விளக்ககிறார். இங்கே “ஆவிகள்” என்று யோவான் குறிப்பிடுவது, மனிதர்களைத்தான். முதலில், யோவான் “எல்லா ஆவிகளையும்”, அதாவது கர்த்தரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வருகின்ற எல்லோரையும் உடனடியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று எச்சரிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரையும் கேள்வி முறையில்லாமல் ஏற்றக்கொள்ள வேண்டும், அவர்களைப்பற்றி ஒரு குறையும் சொல்லக்கூடாது என்று யோவான் சொல்லவில்லை. சோதித்துப் பார்க்காமல் எவரையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான் யோவானின் எச்சரிக்கை. எந்த தேவ ஊழியனைப்பற்றியும் எதுவும் சொல்லக்கூடாது, சந்தேகத்தோடு பார்க்கக்கூடாது என்று சொல்லுகிறவர்கள் யோவானின் புத்திமதியைக் காதில் வாங்குவது நல்லது. யோவானைப் பொறுத்தவரையில் சோதித்துப் பார்க்காமல் எவரையும் ஏற்றக்கொள்கிறவன் புத்திசாலி அல்ல. அவன் சுலபமாக மற்றவர்களிடம் ஏமாந்து போகக்கூடியவன். அடுத்ததாக கர்த்தருடைய ஊழியக்காரர்களை அடையாளம் கண்டுகொள்ள ஒரு அறிவுரையையும் 4:2ல் தருகிறார். இதை விளக்கமாக பிறகு பார்ப்போம்.
மத்தேயு 24:4ல் இயேசு, தன் சீடர்களைப்பார்த்து ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார். அதற்கான காரணத்தை விளக்கும் ஆண்டவர் அடுத்த வசனத்தில், “ஏனெனில் அநேகர் என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்” என்றார். நண்பர்களே! இயேசுவின் வார்த்தைகள் இன்று நாம் பின்பற்றம்படியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இயேசு சொல்கிறார்: நம்மை யாரும் வஞ்சித்துவிடாதபடி நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டுமென்று. எவரையும் கேள்விமுறை இல்லாமல் நாம் ஏற்றக்கொண்டால் யார் கர்த்தரின் ஊழியக்காரர், எவர் போலி என்பதை எப்படி அறிந்து கொள்வது? இயேசு சொல்லியிருப்பதை மேலும் கூர்ந்து கவனியுங்கள்: என் நாமத்தைத் தரித்துக் கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு பலர் வருவார்கள என்று இயேசு அப்போதே தன் சீடர்களை எச்சரித்திருக்கிறார். இயேசுவின் வார்த்தைகளுக்கு என்ன பொருள் தெரியுமா? அதாவது, நானே கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு, அற்புதங்களைச் செய்து, நம்மைக் கவரும் வகையில் பேசி, இந்த மனிதன் கர்த்தரின் மனிதனா? இல்லையா? என்று நாம் கண்டுகொள்ள முடியாதளவுக்கு தன்னை உருமாற்றிக்கொண்டு போலிகள் நம்மத்தியில் வந்து நம்மை வஞ்சிக்கப் பார்ப்பார்கள் என்பதுதான் பொருள். அந்தளவுக்கு நம்மை ஏமாற்றிவிடக்கூடியவர்கள் இந்தப் போலிகள். போலிகள் இந்தளவுக்கு நம்மத்தியில் இருந்து நம்மை ஏமாற்றுவதற்காக ஊழியம் செய்வதுபோல் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒருவரையும் சந்தேகிக்கக்கூடாது, அவர்களைப்பற்றி எதையும் பேசக்கூடாது என்று சொல்வது இயேசுவின் போதனைகளோடு ஒத்துப்போகாத பேச்சு. இயேசு சொல்லும் இன்னுமொரு உண்மையையும் பாருங்கள். இந்தப் போலி ஊழியக்காரர்கள் அநேகரை வஞ்சிப்பார்கள் என்று சொல்கிறார். அதாவது அநேகர் அவர்களுடைய வஞ்சக விளையாட்டுக்களுக்க இடம் கொடுத்து வஞ்சிக்கப்படுவார்கள். அந்த நிலமை நமக்கு வராதபடி நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டுமானால் இயேசு சொல்வதுபோல் எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. காதில் விழுவதெல்லாம் நல்ல பிரசங்கம், வாசிப்பதெல்லாம் நல்ல தேவ செய்திகள், கண்ணால் பார்ப்பதெல்லாம் கர்த்தரின் அற்புதங்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணிருந்தும் குருடாயிருக்கும் அநேகர் ஏற்கனவே போலிகளின் வஞ்சனைக்குப் பலிக்கடாக்களானவர்கள். அப்படிப் பலிக்கடாக்களாக நாமும் மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இயேசுவும் நாம் எதையும் சோதித்துப் பார்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார். மத்தேயு 24ல் இயேசு தரும் போதனைகள் இறுதிக்கால நிகழ்ச்சிகள். அந்த இறுதிக் காலப்பகுதியில்தான் நாமும் வாழ்ந்த கொண்டிருக்கிறோம். இயேசு அன்றே எச்சரித்திருப்பதுபோலவே இன்று கள்ளத்தீர்க்கதரிசிகள் எங்கும் கிறிஸ்தவர்களை வஞ்சிப்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் இதுவரை பார்த்த வேதப்பகுதிகள் மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டிலும் போலித்தீர்க்கதரிசிகள் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடக்கூடாது என்று கர்த்தர் பலதடவைகள் இஸ்ரவேலரை எச்சரித்திருப்பதை வாசிக்கலாம் (எசேக்கியல் 37:1-). அதே போல் புதிய ஏற்பாட்டின் பின்வரும் வசனங்களையும் ஆராய்ந்து பாருங்கள், கொலோசெயர் 2:8, 18; 1 தெசலோனிக்கேயர் 2:2; 3:6; 1 தீமோத்தேயு 1:3-7; 4:1-3; 2 தீமோத்தேயு 2:16-18; 3:1-9; 4:3-4; தீத்து 1:10-11; 2 பேதுரு 2:1-3; 3:3; 2 யோவான் 7, 10; 3 யோவான் 9-10; யூதா 4-19. இவற்றோடு வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் ஏழு சபைகளுக்கு அனுப்பிய நிருபங்களில் இயேசு போலித்தீர்க்கதரிசிகளை சபைகளில் அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படித் தொடர்ந்து அனுமதித்தால் குத்துவிளக்குத் தண்டத்தை அவர்கள் மத்தியில் இருந்து எடுத்துவிடுவேன் என்று கடுமையாக எச்சரித்திருப்பதை வாசிக்கலாம். இப்படி வேதத்தின் பல பகுதிகளில் கர்த்தர் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து போலித்தீர்க்கதரிசிகளிடமிருந்தும், போலிப்போதனைகளில் இருந்தும் விலகி இருங்கள் என்று அடிக்கடி சொல்லியிருக்க, எந்த ஊழியக்காரரையும் குறைகூறக்கூடாது, அவர்களை சோதிப்பது நமது கடமை அல்ல. கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி நாடகமாடுபவர்களைப் பற்றி என்ன சொல்வது.
கர்த்தரின் ஊழியக்காரர்கள் யார்?
யார்? எவர்? என்று ஆராய்ந்து பார்க்காமல், ஊழியக்காரர்கள் என்று தம்மை அறிவித்துக்கொள்கிற எல்லோரையும் அரவணைத்துக்கொள்கிற ஒரு வழக்கம் தமிழ் கிறிஸ்தவர்களிடம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இதற்குப் பல காரணங்களைக்கூறலாம். (1). சரியான வேத ஞானமில்லாததால் மெய்யான ஊழியக்காரரை அடையாளங்கண்டு கொள்ளும் பக்குவத்தை அநேகர் இழந்து நிற்கிறார்கள். (2). நமது கலாச்சாரத்தில் இருக்கும் முகத்தாட்சணியம் காட்டம் வழக்கம் போலிகளை இனங்கண்டு தள்ளி வைக்கும் பக்குவத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. (3). ஒருவர் உண்மையான ஊழியக்காரராக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் பலரை ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிடும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இக்காரணங்களால் போலிகள் நம்மத்தியில் காளான்கள் முளைத்து வளருவது போல் அடர்ந்து தளைத்து நிற்கிறார்கள். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் அவர்கள் தங்கள் வியாபாரத்தை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தலை நிமிர்த்தி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இதுவரை பார்த்த வேத வசனங்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் எதையும் சோதித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்வதைப் பார்த்தோம். அப்படியானால், நாம் எந்த மனிதனையும் கர்த்தரின் ஊழியக்காரராக அவசரப்பட்டு உடனடியாக அங்கீகரிப்பது பெருந்தவறு என்பது அவ்வசனங்கள் போதிக்கும் ஆணித்தரமான உண்மை. இனி, மெய்யான ஊழியக்காரரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று பார்ப்போம். எல்லோரையும் கர்த்தருடைய ஊழியக்காரராக அவசரப்பட்டு நாம் அங்கீகரித்துவிடக்கூடாது என்று கூறும் வேதம் மெய்யான ஊழியக்காரரை அடையாளங் கண்டுகொள்வதெப்படி என்றும் தெளிவாக விளக்குகிறது.
(1) ஊழியக்காரர்கள் எப்போதும் சபைத்தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டும்
இன்று போலிச்சுவிசேஷகர்களும், அற்புதங்கள் செய்கிறோம் என்று ஆத்துமாக்களை ஏமாற்றுபவர்களும் அதிகரித்திருப்பதற்குக் காரணம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் திருச்சபைக்கு மதிப்பில்லாமல் இருப்பதுதான். கர்த்தரின் வேதபோதனைகளின்படி திருச்சபைகள் கட்டுக்கோப்போடு அமைந்து இயங்குமானால் தான்தோன்றித்தனமாக இயங்கிவரும் சொந்த ஊழியக்காரர்களுக்கும், சவிசேஷகர்களுக்கம் இடமில்லாமல் போயிருக்கும். திருச்சபை வல்லமையற்றும், ஆத்துமாக்கள் திருச்சபைமேல் அக்கறைகாட்டாமலும் வாழ்ந்து வருவதால் புள்ளுருவிகள் எங்கும் முளைத்து போலி ஊழியங்கள் வளர்ந்து வருகின்றன.
அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துப் பார்த்தால் ஆதிசபை கட்டக்கோப்போடு இயங்கியதைப் பார்க்கிறோம். சபைகளுக்கிடையில் தொடர்பு இருந்து வந்திருப்பதையும் பார்க்கலாம். ஊழியக்காரர்கள் சபைகளால் நியமிக்கப்பட்டு சபை ஊழியப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு சபையில் இருந்து வேறு ஊருக்கு செல்லும் ஊழியக்காரர் தமது சபையின் அனுமதிக்கடிதத்தோடு ஏனைய சபைகளுக்கு போயிருப்பதையும் வாசிக்கலாம். ஊழியக்காரர்கள் என்ற பெயரில் வருபவர்களை அவர்களுடைய சொந்த சபைத்தலைவர்களின் அனுமதிக்கடிதங்கள் இல்லாமல் சபைகள் அங்கீகரிக்கவில்லை. போலி ஊழியக்காரர்கள் என்று அடையாளங்கண்டவர்களைப் பற்றி தங்கள் சபைக்கும், தங்களோடு தொடர்புடைய வேறு சபைகளுக்கம் அவர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஆதி சபையில் கட்டுப்பாடும் கட்டுக்கோப்பும் இருந்தது. அப்போஸ்தலர் நடபடிகளும், புதிய ஏற்பாட்டு நிருபங்களம் சபை அமைப்பு பற்றியும், சபைகள் இயங்க வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவான போதனைகளைத் தருகின்றன. ஆனால், அவற்றைப் பின்பற்றத் தவறியதால் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று போலி ஊழியங்களுக்கும், போலி ஊழியக்காரர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கின்றது.
மெய்யான ஊழியக்காரர்கள் தாங்கள் ஊழியம் செய்யும் சபைக்குக் கட்டுப்பட்டவர்களா இருப்பார்கள். தங்களுக்குக் கர்த்தர் கொடுத்துள்ள ஆடுகளைக் கவனிப்பதைவிட்டுவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்க மாட்டார்கள். வேறு எந்த ஊழியங்களிலும் ஈடுபட்டாலும், தங்களுடைய சபையோடு கூடி ஆலோசித்து சபை அனுமதியோடு அந்த ஊழியங்களில் ஈடுபடுவார்கள். சபைத்தொடர்பிருந்து, சபையால் அனுப்பப்படும் ஊழியக்காரர்கள் ஏற்கனவே சபையால் ஆராயப்பட்டு ஊழியத்திற்கு அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அப்படி சபை இல்லாமல் தங்களை சுயமாக ஊழியத்திற்கு நியமித்துக் கொண்டவர்களின் விசுவாசத்தைப் பற்றியோ, வாழ்க்கை முறை பற்றியோ, அவர்கள் விசுவாசிக்கும் சத்தியங்களைப் பற்றியோ யாருக்கும் ஒன்றுமே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தவறான மனிதர்களாக இருந்துவிட்டால் அவர்களுக்கு இடங்கொடுக்கும் ஆத்துமாக்களின் வாழ்க்கைக்கு பெருங்கேடு ஏற்பட்டுவிடும். இதனால்தான் சபைத்தொடர்பில்லாத ஊழியக்காரர்களையும், ஊழியங்களையும் தவிர்த்துக்கொள்வது நல்லது. சாதாரணமாக ஒரு பொருளை விலைக்கு வாங்கும்போதுகூட அப்பொருளை எந்தக் கம்பேனி தயாரித்திருக்கிறது என்று பார்த்து, நல்ல கம்பேனிப் பொருளாக இருந்தால் மட்டும்தான் விலை கொடுத்து வாங்குகிறோம். லெளகீக காரியங்களிலேயே நாம் இத்தனைக் கவனமாக இருக்கும்போது ஆவிக்குரிய காரியங்களில் மட்டும் அசட்டையாக இருந்துவிட முடியுமா?
இவ்வளவு நேரம் ஊழியக்காரர்கள் சபைத் தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு சபைத்தொடர்பு இல்லாமல் இருந்தால் ஊழியக்காரர்களை எப்படி நல்லபடி ஊழியம் செய்யும்படிப் பார்த்துக் கொள்வது? இன்று கிறிஸ்தவர்களில் அநேகர் மேய்ப்பனில்லாத ஆடுகள்போல், சபையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மேய்ப்பணில்லாத ஆடுகளுக்கு இருக்க ஒரு நிலமிருக்காது, பாதுகாப்பு இருக்காது. அவை நீண்ட நாட்களுக்க உயிரோடிருக்கவும் முடியாது. அதுபோல், சபையில்லாத ஆத்துமாக்களுக்கு சத்துள்ள போதனை கிடைக்காது. மேய்ப்பனின் பாதுகாப்பு இருக்காது, நீண்ட நாட்களுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையை ஜீவனோடு வாழ முடியாது. ஆத்துமாக்களாகிய ஆடுகளும் சபை வாழ்க்கைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து ஊழியக்காரர்கள் வேதபூர்வமான ஊழியம் செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
(2). ஊழியக்காரரின் போதனைகள் வேதபோதனைகளாக இருக்க வேண்டும்
ஊழியக்காரர்கள் முதலில் சபைகளைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். அடுத்ததாக அவர்களுடைய போதனைகள் வேதபூர்வமானவையாக இருக்க வேண்டும். 1 யோவானில் 4:2, 3ல், யோவான் மெய்யான ஊழியக்காரரை அடையாளங் கண்டுகொள்ள ஒரு அறிவுரை தருகிறார். அதாவது, மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது என்கிறார். இதற்குப் பொருளென்னவென்றால், வேதம் போதிக்கின்ற முறையில், அந்த சத்தியத்தில் ஒன்றையும் குறைக்காது, கூட்டாது உள்ளதை உள்ளபடியே போதிக்கின்றவன் மட்டுமே தேவனிடத்தில் இருந்து வந்திருக்க முடியும் என்பதுதான். கிறிஸ்து சரீரமெடுத்து பிறக்கவில்லை என்று போதிக்கிறவன் மெய்யான ஊழியக்காரனாக இருக்க முடியாது. கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை மறுக்கிறவன் மெய்யான கிறிஸ்தவ ஊழியனாக இருக்க முடியாது. இதைத்தான் யோவான் வலியுறுத்துகிறார். மெய்யான ஊழியக்காரனை இனங்கண்டு கொள்ள வேண்டுமானால் அவனது போதனைகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏற்கனவே சபையால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒருவனுடைய போதனையை ஓரளவுக்கு நம்பிக்கேட்கலாம். சபையே தெரியாது, ஏதோ ஒரு இறைநிந்தனை செய்யும் கல்லூரியில் பட்டத்தை வாங்கிக் கொண்டு, ஊழியத்தில் இறங்கியிருப்பவர்களின் போதனைகளை எப்படி நம்பிக்கேட்பது? கர்த்தரின் ஊழியக்காரரின் முதன்மையான ஊழியம் ஆத்துமாக்களுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது. அதை போதனைகள் மூலமே ஒரு ஊழியக்காரனால் தர முடியும். அவனுடைய போதனைகள் வேதபூர்வமாக இல்லாதிருக்குமானால் அவன் கள்ளப்போதகனாகத்தான் இருக்க முடியும்.
நான் பெசும்போதெல்லாம் கிறிஸ்து என் பக்கத்தில் நிற்கிறார் என்று சொல்லும் தினகரனின் பேச்சு அறிவில்லாத ஒரு ஆத்துமாவுக்கு குறிரூட்டுவதாக இருக்கலாம். அந்த ஆத்துமாவுக்கு வேதம் தெரிந்திருந்தால் அந்தப் பேச்சு இறை நிந்தனை என்று அலறி அந்தக்கூட்டத்தைவிட்டு ஓடிப்போயிருக்கும். கம்பராமாயணத்தில் கிறிஸ்துவையும், இந்திய வேதங்களில் இயேசுவையும் காட்ட முயற்சி செய்பவர்களின் கவர்ச்சிப் பேச்சு வேதம் தெறியாத ஆத்துமாக்களுக்கு வேண்டுமானால் உணர்ச்சியூட்டலாம். வேதம் படித்தவர்கள் அவற்றை தேவநிந்தனையாக மட்டும்தான் பார்ப்பார்கள். கர்த்தருடைய ஊழியக்காரருக்கு இந்தக் கவர்ச்சிப் பேச்செல்லாம் பேச வராது. அவர்கள் கர்த்தருடைய வேதத்தைப் படித்து அதிலிருப்பதை மட்டுமே பேச முயல்வார்கள். அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனமும், வெளிப்படுத்தலும் அன்றுபோல் இன்றும் தேவையென்றும், இவைகள் இருந்தால் மட்டுமே ஒரு ஆத்துமா ஆவியைப் பெற்றுக்கொண்டிருக்கிறது என்று நம்பலாம் என்றும், ஆவியின் பெயரால் நாமெல்லோருமே அற்புதங்களைச் செய்யலாம் என்றும் சொல்வோரின் போதனைகள் வேதத்தை ஆராய்ந்து படிக்க மறுத்து, உணர்ச்சிவசப்பட்டு, சிந்திக்க மறுப்பவர்களுக்கு வேண்டுமானால் பொக்கிஷமாகப்படலாம். ஆனால், வேதத்தை மட்டும் நம்பிப்படித்து, போதித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அவை வெறும் மாயப்பேச்சு மட்டுமே.
போலிப்போதனைகளில் இருந்து நம்மைக்காத்துக்கொள்ளவே நமது மூதாதையர்கள் விசுவாச அறிக்கைகளை எழுதி வைத்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சீர்திருத்த சபை ஊழியக்காரர்கள் அவற்றை விசுவாசித்து வேத அடிப்படையில் பிரசங்கிப்பவர்களாக இருப்பார்கள். அப்படி விசுவாசிக்காதவர்களை சீர்திருத்த சபைகள் ஊழியத்திற்கு நியமிக்காது. காளான்கள் போல் இன்று தோன்றியிருக்கும் அநேக சுவிசேஷகர்களும், விரிவுரையாளர்களும், சபை அறியாத போதகர்களும் வேதபூர்வமான இறையியல் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் ஆத்துமாக்களுக்கு சத்தான போதனைகளை ஒருபோதும் அளிக்க முடியாது.
(3) ஊழியக்காரரின் நடத்தை வேதபூர்வமானதாக இருக்க வேண்டும்
ஊழியக்காரரின் நடத்தைக்கு வேதம் மிக முக்கிய இடத்தை அளிக்கிறது. ஊழியக்காரர்கள் இந்த உலகத்தில் பூரணமானவர்களாக இருந்துவிட முடியாது. ஆனால், அவர்களுடைய நடத்தை சாதாரண விசுவாசியுடைய நடத்தையைவிட உயர்வானதாகவும், ஏனைய விசுவாசிகளுக்க உதாரணமானதாகவும் இருக்க வேண்டும். ஒருவருடைய போதனைக்கும், நடத்தைக்கும் ஊழியத்திற்கும் பெருந்தொடர்பிருக்கின்றது. அதனால்தான் பவுல் தீமோத்தேயுவில் ஊழியக்காரர்களுக்கான இலக்கணங்களை விபரிக்கும்போது அவர்களுடைய குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட நடத்தைகளைப் பற்றி சுட்டிக்காட்டுகிறார். தன் மனைவிக்கு விசுவாசமாக இல்லாமல் இன்னொரு பெண்ணோடு தொடர்புவைத்திருந்த மனிதர்கள் எத்தனை பெரிய இறையியல் பட்டம் பெற்றிருந்தாலும் ஊழியத்திற்கு பொருத்தமில்லாதவர்கள். பணமே வாழ்க்கை என்று அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துவருபவர்கள் யூதாசின் உறவினர்கள். அவர்களுக்கும் ஊழியத்திற்கும் பெருந்தூரம். அநேகர் அற்புதம் செய்வதாக பித்தலாட்டம் செய்து ஆத்துமாக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆனால், இது இன்றைக்கு ஆத்துமாக்களக்குப் புரிவதாயில்லை. ஊழியத்திற்கு பணம் தேவை என்று கெஞ்சியும், எழுதியும், கூட்டம் தோறும் பேசியும் வரும் அநேக பச்சோந்திகளுக்கு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை வாரியளித்து வீண் போய்க்கொண்டிருக்கிறார்கள், கண்ணிருந்தும் குருடர்களாயிருக்கும் அநேக ஆத்துமாக்கள். சபைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்து வரும் ஒரு ஊழியக்காரனால் இப்படிப் பணம் பணம் என்று அலைய முடியாது. ஏனெனில் சபை அவன் செயல்களில் எப்போதுமே கவனம் செலுத்தும். அதுதான் சபை ஊழியத்தின் அருமை. நடத்தை தவறும் ஊழியக்காரர்களை மெய்யான சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் திருந்தி வாழ வழிவகைகளை ஏற்படுத்தும். அவர்கள் ஆணவத்தோடு ஊழியம் செய்ய அனுமதிக்காது.
நாம் இதுவரை பார்த்துவந்துள்ள இலக்கணங்களைக் கொண்டிராதவர்கள் விசுவாசமுள்ள ஊழியக்காரர்களாக இருக்க முடியாது. அவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டுமென்று வேதம் சொல்லவில்லை. “நெய்யை சாப்பிட்டு ஆட்டு மயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறவர்களையும், கொழுத்ததை அடித்துச் சாப்பிட்டு, ஆட்டு மந்தையை மேய்க்காதவர்களையும்” கர்த்தர் நிராகரிக்கும்படி சொல்லியிருக்கிறார் (எசேக்கியல் 34). மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்டிருக்கிறவர்களை மேய்க்கும் தொழிலில் இருந்து விலக்கி, ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இருந்துவிடாதபடி அவர்களுடைய வாய்க்குத் தப்பப் பண்ண வேண்டும் என்பதே கர்த்தருடைய கட்டளை (எசேக்கியல் 34:10).
போலிகளை இணங்கண்டு நிராகரிக்க வேண்டும்
நாம் இதுவரை கர்த்தரின் ஊழியக்காரர் யார்? அவர்களை எப்படி இனங்கண்டு கொள்வது? என்று பார்த்தோம். இத்தனைக்கும் பிறகு கர்த்தரின் ஊழியக்காரரை குறைகூறக்கூடாது, அவர்களைப்பற்றிப் பேசக்கூடாது என்று சொல்பவர்கள் வேத அறிவே இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஊழியக்காரனை ஆராய்ந்து, கவனத்தோடு ஊழியத்திற்காக நியமிக்க வேண்டும் என்று வேமம் போதிக்கிறது. “ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே” என்று பவுல் தீமோத்தேயுவை எச்சரிக்கை செய்வதை கவனியுங்கள் (1 தீமோத்தேயு 5:22). “மேலும், இவர்ள் முன்னதாக சோதிக்கப்பட வேண்டும்” என்றும் பவுல் சொல்வதை சிந்தித்துப் பாருங்கள் (1 தீமோத்தேயு 3:10). இதையெல்லாம் செய்வதற்காக கர்த்தர் நியமித்திருக்கும் ஒரே தெய்வீக அமைப்பு திருச்சபை மட்டுமே. இத்தனைப் போதனைகளையும் மீறி, தன்னைத்தானே ஊழியத்திற்காக நியமித்துக்கொண்டு, குடும்ப அங்கத்தவர்களையெல்லாம் அதில் நுழைத்துக்கொண்டு, சொந்தமாக சுவிசேஷ வியாபாரம் நடத்திக்கொண்டிருப்பவர்களை நாம் எப்படி அங்கீகரிக்க முடியும்? அவர்களை அங்கீகரிப்பதும், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வதும், அவர்களுக்கு பணம் அனுப்புவதும், அவர்கள் செய்யும் காரியங்களுக்காக ஜெபம் செய்வதும், அவர்களுடைய பத்திரிகைகளையும், துண்டுப்பிரசுரங்களையும் வாங்கி வாசிப்பதும் கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் விரோதமான, ஆபத்தான் செயல்கள். நம் ஆத்துமாவை அழித்துக்கொள்ளும் செயல்கள். போலி ஊழியக்காரருக்கும், ஊழியங்களுக்கும் தீனிபோட்டு வளர்த்துவிடும் தீச்செயல்கள்.
வேதம் போலிகளை இனங்கண்டு அவர்களை விலக்கி வைக்க வண்டும் என்று சொல்கிறது. அவர்களோடு உறவாடக்கூடாது என்று சொல்கிறது. இயேசு சொன்னார், முடிந்தால் பிசாசு தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கப்பார்ப்பான் என்று. போலிகளை அவர்களுடைய போதனைகளின் மூலமும், நடத்தையின் மூலமும் மட்டுமே இனங்கண்டு கொள்ள முடியும். அதனால் ஆத்துமாக்கள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். எந்தப்போதனைகளையும் கேட்டு ஆராய்ந்து பார்ப்பது அவசியம். ஒரு ஊழியக்காரன் வயதானவராக இருக்கிறார், பல பட்டங்கள் வாங்கியிருக்கிறார், அற்புத ஊழியங்கள் செய்கிறார், இனிப்பாக பேசுகிறார், அவருக்கு கூட்டம் சேர்கிறது என்றெல்லாம் சொல்லி அவருடைய மெய்த்தன்மையை அடையாளங்கண்டு கொள்ள மறுத்து, அவரை ஆதரித்து வந்தால் ஆத்துமாக்கள் அந்த மனிதரின் செல்களால் வீண்போகும் நிலை ஏற்படும். அப்படி அநேகருடைய வாழ்க்கை ஏற்கனவே வீணாகியிருக்கிறது. முகத்தாட்சணியம் பார்த்துப் பழகிப்போன தமிழ்ச் சமுதாயம் தன்னைத் தானே இப்படித் தொடர்ந்து இன்று அழித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
சீர்திருத்த காலத்தில் உலகை ஆண்டு வந்த ரோம சபையின் போலிததனங்களும், புரட்டுக்களும், வேதவிரோதமான போதனைகளும் வெளிப்படையாக தெரிந்தபின், அது கர்த்தரின் சபை என்று சாக்கப்போக்குச் சொல்லி மார்டின் லூதரும் அவரைச் சார்ந்தவர்களும் வாளாவிருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க மதத்தின் தோலை உரித்து அதன் போலித்தனத்தை உலகுக்கு அம்பலப்படுத்தி, மெய்ச்சபைகளை அமைக்க ஆரம்பித்தார்கள். அன்று ரோமன் கத்தோலிக்க சமயம் இயேசுவை விசுவாசிப்பதாகத்தான் நாடகமாடியது. பல்பிடுங்கப்பட்ட பாம்பாக இருந்து இன்றும் அதையே செய்து வருகிறது. இதே நிலையை இன்று லூதரன் சபைகளிலும், மெதடிஸ்ட் சபைகளிலும், சீ. எஸ். ஐ சபைகளிலும், அநேக பெந்தகொஸ்தே ஊழியங்களிலும், தனி மனிதர்களின் சுவிசேஷ வியாபார ஊழியங்களிலும் நாம் பார்க்கவில்லையா?
கர்த்தரின் ஊழியக்காரரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்
போலிகளை இனங்கண்டு நிராகரிக்கும் அதேவேளை மெய்யான ஊழியக்காரரை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்கள் ஆர்வத்தோடும், அன்போடும் ஊழியம் செய்வதற்கான சகல உதவிகளையும் செய்ய வேண்டும். அத்தகைய விசுவாசமுள்ள ஊழியக்காரர்கள் எப்போதும் சபைத்தொடர்புள்ளவர்களாக, கர்த்தருக்குப் பயப்படுபவர்களாக, வேதத்தை மட்டுமே போதிப்பவர்களாக, ஆத்துமாக்களிடம் பணத்திற்காக அலைய மறுப்பவர்களாக, நன்னடத்தையுள்ளவர்களாக இருப்பார்கள். அத்தகைய நல்ல ஊழியக்காரர்கள் மனங்கோனாதபடி நாம் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஊழியக்காரரே உண்மையான அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டவர்கள். அவர்கள் மேல் நாம் கைவைக்கக்கூடாது. அவர்களுக்கு நாம் துன்பம் விளைவிக்கப் பார்க்கக்கூடாது. அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்பட சபையாக நாம் உழைக்க வேண்டும். அவர்களுடைய ஊழியத்தின் மூலமாக நாம் ஆத்மீக விருத்தியடையப்பார்க்க வேண்டும். நல்ல ஊழியக்காரர்கள் கிடைப்பது இன்று முயற்கொம்பு கிடைப்பதுபோல் கடினமாக இருக்கிறது. இருக்கும் நல்ல ஊழியக்காரர்களையும் நாம் இழந்துவிடக்கூடாது. அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களோடு சேர்ந்து உழைத்து சபை வளர்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்.