கிறிஸ்தவ ஒற்றுமை

கிறிஸ்தவர்கள் ஐக்கியத்தை வளர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், கிறிஸ்தவ சபைகளும், நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் பேச்சை தமிழ் கிறிஸ்தவ உலகில் இன்று கேட்க முடிகின்றது. பல எழுப்புதல் கூட்ட மேடைகளிலும் ரோமன் கத்தோலிக்க குருக்கள், கெரிஸ்மெட்டிக் தலைவர்கள், பாரம்பரிய சபைகளைச் சேர்ந்த தாராளவாதக் கொள்கைகளைப் (Liberalism) பின்பற்றும் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து கிறிஸ்தவ ஒற்றுமை இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு சொல்லி வருகிறார்கள். இத்தலைவர்களோடும், இவர்கள் வழிநடத்தும் சபைகளோடும், சுயாதீன நிறுவனங்களோடும் (Para-Church organizations) எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள விரும்பாது செயல்பட்டு வரும் சபைகளை சிலர் ஒற்றுமைக்கு விரோதிகள் என்ற முறையில் பார்த்தாலும் அதில் வியப்பில்லை.

இதனால் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் பற்றி வேதம் என்ன ‍சொல்கிறது என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் வேதத்திற்கு விரோதமாக நடப்பவர்களோடு ஒரே மேடையில் சீர்திருத்த போதகர்கள் அமரலாமா? அத்தகைய கூட்டங்களை சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ஆதரிக்கலாமா? தமிழகத்தில் தினகரனும், பாதர் பேர்க்மனும், ரோமன் கத்தோலிக்க தலைவர்களும், சாம் ஜெபத்துரையும், தலித் தளபதிகளும் சரிசமமாக அமர்ந்து நடத்தும் கூட்டங்களில் சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன வேலை? என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதிலளித்துத்தான் ஆக வேண்டும். சத்தியத்திற்கு பல கோணங்கள் உள்ளதா? சத்தியத்தை விற்று சமய சமரசப் பணியில் ஈடுபடலாமா? என்ற மனதைத்துளைக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றி சபை நடத்தி வருபவர்கள் வேதபூர்வமாக யாரோடு சேர்ந்து ‍உழைக்க வேண்டும் என்பதையும் வேதபூர்வமாக ஆராய வேண்டும்.

யோவன் 17ம் கிறிஸ்தவ ஒற்றுமையும்

அநேகர் கிறிஸ்தவ ஒற்றுமையைக் குறித்துப் பேசும்போது யோவான் 17ஆம் அதிகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். யோவான் 17இல் இயேசு கிறிஸ்தவ ஒற்றுமைக்காக பிதாவிடத்தில் ஜெபிக்கிறார். ஆனால், அங்கே கிறிஸ்து ஜெபிக்கும் ஒற்றுமை அவருடைய சரீரமாகிய சபையில் விண்ணுலகில் இருக்கும் ஒற்றுமையே தவிர இவ்வுலகில் இருக்கக்கூடிய ஒற்றுமை அல்ல. கிறிஸ்துவின் சரீரத்தில் பரலோகத்தில் இந்த ஒற்றுமை பூரணமாகக் காணப்படுகின்றது. அவ்வொற்றுமையை எவராலும் குழைக்க முடியாது. அவ்வொற்றுமை பாவத்தால் பாதிக்கப்படாது. ஏனெனில், பரலோகத்தில் பாவம் இல்லை. இயேசுவும், பிதாவும் ஒன்றாயிருப்பது போல் விசுவாசிகள் ஒன்றாயிருக்க வேண்டுமென்று இயேசு ஜெபித்தார் (17:21-23). இயேசுவின் இவ்வார்த்தைகள் பூரணமான கிறிஸ்தவ ஒற்றுமையை விளக்குகின்றன. இத்தகைய பூரணமான கிறிஸ்தவ ஒற்றுமை இவ்வுலகில் இருக்கும் என்று வேதத்தில் நாம் எங்கும் வாசிப்பதில்லை. பாவம் இவ்வுலகில் இருக்கும்வரை கிறிஸ்தவர்களை பாவம் பாதிக்காமல் இருக்காது. அவர்களுடைய உறவு உலகத்தாரின் உறவைவிட மேலானதாக இருந்தபோதும் இயேசு ஜெபித்துக் கேட்டுக்கொண்டதைப்போல் பூரணமாக இருக்க முடியாது. அப்படியானால் இயேசுவின் ஜெபம் நிறைவேறியதா? அவருடைய ஜெபத்தை பிதா கேட்டு ஆசீர்வதித்தாரா? இயேசுவின் ஜெபம் நிச்சயமாக பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டது. எங்கு ஆசீர்வதிக்கப்பட்டது? அது பரலோகத்தில் ஆசீர்வதிக்கப்பட்டது. பரலோகத்திற்கு மெய்யான விசுவாசிகள் மட்டுமே போகமுடியும். அங்கே மெய்யான விசுவாசிகளின் மத்தியில் பூரணமான ஒற்றுமை காணப்படுகின்றது. இது புரியாமல் இயேசுவின் வார்த்தைகளை சமயசமரச நோக்கம் கொண்டவர்கள் (Ecumenist) தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

யோவான் 17 இல் இயேசு வேண்டிக்கொண்ட ஜெபம் பரலோகத்தில் ஆசீர்வதிக்கப்பட்டது. விசுவாசிகளிடம் அத்தகைய ஒற்றுமை பரலோகத்தில் நிச்சயம் காணப்படுகின்றது. அவ்வொற்றுமை இவ்வுலகத்தில் விசுவாசிகளிடம் இருக்க (அவர்கள் பாவத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோதும்கூட) அவர்களால் முடிந்ததை செய்ய முடிகிறது. ஆனால், இயேசு ஜெபித்த பூரணமான ஒற்றுமை இவ்வுலகத்தில் விசுவாசிகளிடம் ஒருபோதும் இருப்பதற்கு இடமில்லை. அதை நாடி உழைப்பதிலும் எந்தப்பயனுமில்லை. சத்தியத்தை பூரணமாக விசுவாசித்து, பாவமே இல்லாமலிருந்தால் மட்டுமே விசுவாசிகள் இயேசு ஜெபித்த ஒற்றுமையை இந்த உலகத்தில் அனுபவிக்க முடியும். ஆனால், பாவத்தால் கறைபடிந்த இந்த உலகத்தில் அவர்களால் அப்படி வாழ முடியாது.

வேதம் போதிக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை

நாம் மேலே கூறியவற்றை வைத்து இவ்வுலகில் கிறிஸ்தவர்களிடம் இருக்க வேண்டிய கிறிஸ்தவ ஒற்றுமைப்பற்றி வேதம் எதையும் போதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நிச்சயம் யோவான் 17 அத்தகைய ஒற்றுமையையும் மறைமுகமாக வலியுறுத்துகிறது. யோவான் 17 இன் அடிப்படையில் இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் வேதபூர்வமான ஒற்றுமையை, அது பூரணமானதாக இல்லாவிட்டாலும்கூட அனுபவிக்க முடியும். அத்தகைய ஒற்றுமைப்பற்றி எபேசியர் 4 ஆம் அதிகாரத்தில் பவுல் போதிப்பதைப் பார்ப்போம். இவ்வதிகாரத்தில் பவுல் எந்தவித சந்தேகமுமில்லாமல் கிறிஸ்தவ ஒற்றுமையைப்பற்றி விளக்குகிறார். இப்பகுதியில் பவுல் போதிக்கும் முதலாவது, உண்மை என்னவெனில், கிறிஸ்தவ ஒற்றுமை ஏற்கனவே விசுவாசிகளிடம் இருக்கிறது என்பதுதான். 3ஆம் வசனத்தில் பவுல் ஆவியின் ஒற்றுமையைக் காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். ஆவியின் ஒற்றுமையை உருவாக்குங்கள் என்று அவர் சொல்லவில்லை. கிறிஸ்தவ ஒற்றுமை ஏற்கனவே இயேசு கிறிஸ்துவால் ஒருவாக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து அவருடைய மரணத்தின் பலன்களை அனுபவித்தவர்கள் கிறிஸ்துவின் அன்பை ருசி பார்த்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏற்கனவே ஒற்றுமை நிலவுகிறது. அதைக் கிறிஸ்து தனது பரிசுத்த இரத்தத்தை சிந்தி ஏற்படுத்தியிருக்கிறார். கிறிஸ்தவ ஒற்றுமை மனிதனால் உருவாக்கக் கூடியதல்ல. அதைத் தேவனால், அவரது ஆவியால் மட்டுமே உருவாக்க முடியும். இயேசுவை மெய்யாகவே விசுவாசிக்கிறவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.

இரண்டாவதாக இப்பகுதியில் பவுல் போதிக்கும் உண்மை, விசுவாசிகள் கிறிஸ்தவ ஒற்றுமையை ஜாக்கிரதையாக காத்துக் கொள்ள வேண்டுமென்பதாகும் (3). இயேசு உருவாக்கியிருக்கும் ஒற்றுமையை விசுவாசிகள் மிகக் கவனத்தோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் மேலும் விளக்கமாகப் பார்ப்பதற்கும் முன் இதைப் பவுல் எபேசிய சபைக்கு எழுதினார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதை எழுதும்போது பவுல் உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களையும், எல்லா சபைகளையும் இணைத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. எபேசிய சபையில் இருந்த விசுவாசிகளிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைதான் பவுல் தன் மனதில் கொண்டிருந்தார்.

சபையில் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டுமானானல் அதற்கு மூன்று காரியங்கள் சபை மக்களிடம் காணப்பட வேண்டும் என்று பவுல் விளக்குகிறார். இம்மூன்று காரியங்களும் இல்லாத இடத்தில் ஒற்றுமைக்கு இடமில்லை. 5ஆம் வசனம் இம்மூன்று காரியங்களையும் விளக்குகிறது. முதலாவது சபை மக்கள் ஒரே கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் ஒருவரே, அவர் யார்ஈ எப்படி இருப்பார் என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. பத்துக் கட்டளைகளின் முதல் மூன்று கட்டளைகளும் கர்த்தர் யார் என்பதை விளக்குகின்றன. அவரை வேறு மதங்களின் மூலம் இனங்கண்டுகொள்ள முடியாது. வேற்று மதங்களில் அவரைக் காணமுடியாது. வேதம் மட்டு‍மே கர்த்தர் யார் என்று சொல்கிறது. வேதம் போதிக்கும் நமது கர்த்தர் இறை ஆண்மை உள்ளவர். உலகத்தோற்றத்திற்கு முன்பாக தான் கொண்டிருந்த மீட்பின் திட்டங்களை நிறைவேற்றத் தனது ஒரே குமாரனைக் கர்த்தர் இவ்வுலகிற்கு அனுப்பி தனது மக்களின் மீட்‍பை நிறைவேற்றினார் என்று வேதம் போதிக்கிறது. கர்த்தரின் குமாரனான இயேசு தானும் பிதாவும் ஒன்றே என்று வேதத்தில் போதிக்கிறார். பிதாவும், குமாரனும் திரித்துவத்தின் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அதன் மூன்றாம் அங்கத்தவராக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். இம்மூவரும் ஒரே தேவன் என்று வேதம் போதிக்கிறது. நமது தேவனை நாம் கல்லிலும், முள்ளிலும் காண முடியாது. ரோமன் கத்தோலிக்க மதமும், புற மதங்களும் நமது தேவனைப் போதிப்பதில்லை. அம்மதப்போதனைகளுக்கும் நமது தேவனுக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை. கர்த்தர் ஒருவரே தேவன். அவருடைய குமாரனான இயேசுவின் கிருபையால் விசுவாசத்தின் மூலம் மட்டுமே எவரும் இரட்சிப்பை அடைய முடியும். கிரியைகளும், உலக ஞானமும் ஒருவருக்கும் மீட்பை அளிக்க முடியாது, பரலோக வாழ்வைக் கொடுக்க முடியாது. இந்த சத்தியங்களை சபை மக்கள் விசுவாசித்தால் மட்டுமே சபையில் ஒற்றுமை இருக்க முடியும். கர்த்தரையும் இயேசுவையும் பற்றி வேதம் போதிக்கும் இந்த சத்தியங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படைச் சத்தியங்கள். கிறிஸ்துவின் மூலம் மீட்பை அடையாதவர்களும், இந்த சத்தியங்களை விசுவாசிக்காதவர்களும் மெய்யான விசுவாசிகளாக இருக்க முடியாது.

இரண்டாவதாக, ஞானஸ்நானம் ஒற்றுமைக்கு அவசியம் என்று பவுல் இப்பகுதியில் போதிக்கிறார் (5). இங்கே பவுல் முழுக்கு ஞானஸ்நானத்தை வலியுறுத்தாவிட்டாலும் அதையும் இவ்வசனம் அடையாளம் காட்டாமலில்லை. எந்த ஞானஸ்நானத்தை இவ்வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம். கிறிஸ்துவினால் பரிசுத்தமாக்கப்படும் ஞானஸ்நானத்தையே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். யோவான் 17:19 “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்கு நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்” என்று இயேசு தனது கல்வாரி மரணத்தைப்பற்றி பேசுகிறார். இயேசு தனது மரணத்தின் மூலம் ஏற்படும்மிய மீட்பின் அடிப்படையில் அவரை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிப்பை அடைகிறார்கள். சத்தியத்தால் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள் (யோவான் 17:17) இவர்களே பரிசுத்த ஆவியையும் இரட்சிப்பின்போது அடைந்தவர்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசி அடையும் மறுபிறப்பாகிய அனுபவத்தையே பவுல் இங்கே ஞானஸ்நானம் என்று குறிப்பிடுகிறார். இந்த ஞானஸ்நானமாகிய அனுபவத்தை அடையாதவர்கள் விசுவாசிகளாக இருக்க முடியாது. இந்த அனுபவத்தையே முழுக்கு ஞானஸ்நானமும் விளக்குகிறது. அதனால்தான் முழுக்கு ஞானஸ்நானத்தைத் தவிர்த்த வேறு எந்த ஞானஸ்நானமுறையும் மறுபிறப்பாகிய அனுபவத்தை வேதபூர்வமாக விளக்க முடியாது.

பவுல் ஒற்றுமைக்கு அடிப்பபடையாக இன்னுமொரு அம்சத்தையும் 5ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார். அதுதான் ஒரே விசுவாசம் (ஒரே கர்த்தரும், ஒரே ஞானஸ்நானமும், ஒரே விசுவாசமும்). மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் இருக்க ஒரே கர்த்தரையும், ஒரே ஞானஸ்நானத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். அத்தோடு ஒரே விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். விசுவாசத்திற் பல கோணங்களில்லை. தத்துவத்திற்கு பல கோணங்களுண்டு. தத்துவம் நிலையான சத்தியத்தைப் போதிப்பதில்லை. அதைப் பல உருவங்களில் பார்க்கலாம். இந்துமப் போதனைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அதற்குப் பல கோணங்களுண்டு. கிறிஸ்தவ வேதம் தத்துவமல்ல. அது நிலையானது. அது ஒரே சத்தியத்தை உறுதியாக, தெளிவாகப் போதிக்கின்றது. அதற்குப் பல கோணங்களிருக்க முடியாது. அதற்கு நாம் நினைத்தவாறு பலவிதமான விளக்கங்களைக் கொடுக்க முடியாது. கர்த்தர் யார்? என்றும், கிறிஸ்துவின் மீட்பையும் வேதம் தெளிவாக விளக்குகின்றது. வேதத்தின் எந்தப் போதனைக்கும் இரண்டு அல்லது மூன்றுவிதமான விளக்கங்களை நாம் ஒருபோதும் கொடுக்க முடியாது. இதைத்தான் பவுல் ஒரே விசுவாசம் என்று, இங்கே குறிப்பிடுகிறார். வேதத்தை, வேதம் போதிக்கும் முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாராளவாதக் கோட்பாடும் (Liberalism), சமய சமரசக் கோட்பாடும் (Ecumenism), புதிய சுவிசேஷக் கோட்பாடும் (Neo-Evangelicalism) வேதம் ஒரே சத்தியத்தைப் போதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போதனைகள் வேதத்தின் உறுதியான, நிலையான போதனைகளுக்கு பலவிதங்களில் விளக்கங்கொடுக்கவோ, அவற்றை நிராகரிக்கவோ முயல்கின்றன. இத்தகைய “இஸங்களின்” ஆபத்துக்களிலிருந்து நம்மையும் சபையையும் பாதுகாப்பதற்குத்தான் நமது சீர்திருத்தவாத, பியூரிட்டன் பெரியோர்கள் நமக்கு விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் போதனைகளையும் எழுதித் தந்தார்கள். அவை நிலையான, உறுதியான வேதபோதனைகளை அளிக்கின்றன. ஒரே விசுவாசத்தை சபை மக்கள் கொண்டிராவிட்டால் அங்கு ஒற்றுமை இருக்க முடியாது. பெலேஜியனிச, செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிச, கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே போதனைகளும், தாராளவாத சமய சமரசப் போதனைகளும் தங்கு தடையில்லாமல் பவனிவரும் சபைகளில் கிறிஸ்தவ ஒற்றுமை, ஐக்கியம் என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. அதனால்தான் 14ஆம் வசனத்தில், “நாம் இனிக்குழந்தைகளாயிராமல் மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல் . . . சத்தியத்தைக் கைக்கொண்டு நாம் வளர்கிறவர்களாயிருக்க வேண்டும்” என்று பவுல் சொன்னார். விசுவாசம் ஒன்றே! என்பதை பவுல் இதன் மூலம் ஆணித்தரமாக அ‍டித்துப் போதிக்கிறார்.

இப்பகுதியில் பவுலின் போதனையின்படி சபைகளில் கிறிஸ்தவ ஒற்றுமை இருக்க வேண்டுமானால் சபைகள் ஒரே கர்த்தரை விசுவாசித்து, ஒரே ஞானஸ்நானத்தைப் பெற்று, ஒரே விசுவாசத்தைக்கொண்டு அமைந்திருக்க வேண்டும். இவை இல்லாத இடத்தில் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு இடமில்லை. இன்று வேத போதனைகளுக்கு இடம் கொடுக்காமல் அனுபவத்தின் அடிப்படையில் சேர்ந்திருக்கும் அநேக கூட்டங்களை வேதபூர்வமான திருச்சபைகளாகக் கொள்ள முடியாது. அக்கூட்டங்களில் சேர்ந்திருப்பவர்கள் மத்தியில் மெய்யான ஒற்றுமை இல்லை. தங்களுடைய சொந்த நலனுக்காகவும், சரீர சுகத்தையும், போலி அனுபவங்களையும் நாடி அவர்கள் போகிறார்களே தவிர சத்தியத்தின் மீது இருக்கும் ஆவலாலோ அல்லது கிறிஸ்துவின் மீட்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டதாலோ அல்ல. இதையே கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே கூட்டங்களில் பார்க்கிறோம்.

கிறிஸ்தவ ஒற்றுமைக்கு சபைக்கூட்டு அவசியமா?

கிறிஸ்தவ ஒற்றுமை வளரவும், பாதுகாக்கப்படவும் சபைக்கூட்டு உதவும் என்று சிலர் நினைக்கின்றனர். சத்தியத்தின் அ‍டிப்படையில் ஏற்பாடாத எந்தக்கூட்டுத் உருப்படாது. இவ்வாறு தோன்றியதே World Council of Churches. இது சத்தியத்தின் அடிப்படையில் ஏற்படாத ஒரு போலித்தனமான கூட்டம். இன்று உலகெங்கும் Denominational சபைகளையும் பார்க்கிறோம். வேதத்தை எப்படிப்படித்துப் பார்த்தாலும் புதிய ஏற்பாட்டில் Denominationஐ நாம் பார்க்க முடியாது. ஒவ்வொரு சபையும் தனக்கென்று சபைத்தலைவர்களைக் கொண்டு சுயமாக இயங்கி சத்தியத்தின் அடிப்படையில் வளரும் ஏனைய சபைகளோடு முடிந்தவரையுல் தொடர்பேற்படுத்திக் கொண்டு இயங்கி வந்ததாகத்தான் புதிய ஏற்பாடு போதிக்கிறது. அச்சபைகள் தமது சபைகளுக்கு வெளியில் அதிகாரம் கொண்ட ஒரு குழுடிவ ஏற்படுத்தி அக்குழுவின் தலைமையில் இயங்கி வந்ததாக வேதத்தில் எங்குமே பார்க்க முடியாது. சபைக்கு வெளியில் உள்ள இக்குழுவின் அங்கத்தவர்களாயிருப்பவர்கள் சத்தியத்தை உதறிவிடும்போது எல்லா சபைகளும் பாதிக்கப்படுவதை வரலாறு தொடர்ந்து சந்தித்து வருகின்றது. இதனால்தான் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் Denomination சத்தியத்தைவிட்டு விலகிப்போனபோது ஜோர்ஜ் விட்பீல்ட் சபைக்கு வெளியில் கூட்டங்களில் சத்தியத்தைப் பிரசங்கிக்க நேரிட்டது. தான் இணைந்திருந்த பாப்திஸ்து அமைப்பு (Baptist Denomination) சத்தியத்தைக் காற்றில் பறக்கவிட்டதாலேயே ஸ்பர்ஜன் தனது சபையை அதிலிருந்து விலக்கிக்கொண்டார். தன் வாழ்நாளில் இறுதிவரை அவர் எந்த அமைப்போடும் சேரவில்லை. ஆங்கிலிக்கன் சபை இன்று மீள முடியாத அளவுக்கு மோசமடைந்திருக்கிறது. இதே போக்கில்தான் சீ. எஸ். ஐ சபைகள் தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் இயங்கி வருகின்றன. ஸ்ரீ லங்காவில் பாப்திஸ்து Denomination னும் இப்போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இன்று உலகெங்கும் காணப்படும் பல Denomination அமைப்பைக்கொண்ட சபைகளில் சத்தியத்திற்கு இடமில்லை. அவைகளால் நடத்தப்படும் இறையியல் கல்லூரிகளும் விஷத்தைக் கக்கிக் கொண்டிரு‍க்கின்றன. இச்சபை அமைப்பு முறை (Denomination) ஆரம்பத்தில் ஒற்றுமையை வளர்ப்பதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டெழுந்திருந்தபோதும் அதனால் அதைச் செய்ய முடியவில்லை.

போலியான ஒற்றுமை

கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் இன்று அநேக சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்களும் (Para-church Organizations), சபைகளும் இணைந்து சுவிசேஷ கூட்டங்கள் நடத்துவதும், எழுப்புதல், உபவாசம் மற்றும் ஜெபக்கூட்டங்கள் நடத்துவதும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கின்றது. இவர்கள் எல்லோரும் ஒரே சத்தியத்தை விசுவாசிப்பதில்லை. அப்ப‍டியானால் அவர்கள் கூட்டுச் சேருவதற்கு காரணமென்ன? தாம் விசுவாசிக்கும் காரியங்கள் வேறுபட்டிருந்த போதும் சுவிசேஷத்தை எல்லோருக்கும் சொல்லும் காரியத்தில் நாம் கூட்டுச் சேருவதில் தப்பில்லை என்று இவர்கள் சொல்வார்கள். தாம் விசுவாசிக்கும் காரியங்களில் ஒற்றுமை இல்லாதபோது இவர்களால் எப்படி ஒரே சுவிசேஷத்தை இணைந்து போதிக்க முடியும் என்பது தெரியவில்லை. ரோமன் கத்தோலிக்க சபைத்தலைவர்களும், கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே தலைவர்களும், சீ. எஸ். ஐ சபைத் தலைவர்களும், பாப்திஸ்து, லூத்தரன் சபைத்தலைவர்களும் ஒரே மேடையில் இருந்து சொல்லும் சுவிசேஷம் எப்படிப்பட்ட சுவிசேஷமாக இருக்கும்? சத்தியத்திற்கு வீசை என்ன விலை? என்று கேட்கக்கூடிய இச்சபைத்தலைவர்களால் வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை உள்ளது உள்ளபடியே போதிக்க முடியுமா? ஒரே சத்தியத்தைப் பின்பற்றி ஒரே ஆண்டவரை வழிபடாத இவர்களால் எப்படி சேர்ந்து ‍ஜெபிக்க முடியும்? இவர்கள் கூட்டும் கூட்டங்களால் எழுப்புதல் எழத்தான் முடியுமா? இத்தகைய கூட்டடையே சமய சமரச்கூட்டு (Ecumenism) என்று சொல்லுவார்கள். இதைச் சேர்ந்தவர்கள் எந்த சத்தியத்தையும் உறுதியாகப் பின்பற்றாததால் எவரோடு சேர்வதிலும் இவர்களுக்கு தயக்கமில்லாமல் இருக்கிறது. தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் இன்று பரவிக்காணப்படும் சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்களும், இறையியல் கல்லூரிகள் அனைத்துமே சமய சமரசக் கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. சமயசமரசப் போக்கால் மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை ஒரு நாளும் உருவாக்க முடியாது.

மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்கும் விதம்

மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்ப்பதெப்படி? இதற்கு நாம் வரலாற்றையோ, மற்றவர்கள் காட்டியுள்ள உதாரணங்களையோ பார்க்காமங்ல வேதம் போதிக்கும் உண்மையை அலசிப்பார்க்க முன்வருவோம். முதலில், கிறிஸ்தவ ஒற்றுமை வேதபூர்வமாக இருக்க சபைகள் ஒழுங்கானதாக இருக்க வேண்டும். சபைகள் வேதபூர்வமாக அமைந்து, இயங்கி சுவிசேஷ ஊழியத்தை செய்து, ஒழுங்குக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி நடக்கும்போது சபையில் கிறிஸ்தவ ஒற்றுமையைப்பாதுகாக்கவும், வளர்க்கவும் முடிகிறது. இங்கே நான் முக்கியமாக சீர்திருத்த போதனைகளில் ஆர்வம் காட்டி சபை நடத்தி வருகிறவர்களை மனிதல் வைத்தே இதை எழுதுகிறேன். சபைப்போதகர் சத்தியத்தில் வளரவும், பிரசங்கிக்கவும் தவறும்போது சபை மக்கள் கூடிய சீக்கரமே சத்தியத்தைத் தூக்கி எறிந்து விடுவார்கள். சத்தியம் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அடிப்படை சபை சத்தியத்தை உறுதியாக பின்பற்ற வேண்டும். சத்தியத்தைக் காக்க வேண்டும். இதில் தவறும் கூட்டத் சபையாக இருக்க முடியாது. இதனால்தான் இன்று விசுவாச அறிக்கையும், வினாவிடைப் போதனைகளும் சபைகளுக்குத் தேவைப்படுகின்றது. ஒரே சத்தியத்தை விசுவாசித்து, போதித்து வளராத சபைகள் கிறிஸ்தவ ஒற்றுமையை நினைத்தும் பார்க்க முடியாது. ஒரே சத்தியத்தைப் பின்பற்றும் போது சபையில் ஆடுகள் மட்டுமே இருக்கும். ஓநாய்கள் ஓடிவிடும். இன்று பல போதகர்கள் நெஞ்சில் திறமில்லாமல் ஆடுகளையும், ஓநாய்களையும் சபையில் சேர்த்து வளர்க்கப் பார்க்கிறார்கள். விரைவில் ஓநாய்கள் ஆடுகளைத் தின்று தீர்த்துவிடும் என்பது இவர்களுக்குப் புரியாமல் இருக்கின்றது. சத்தியத்தைப் பின்பற்றும்போது அங்கே பெருங்கூட்டம் இருக்காது. இது அநேக போதகர்களுக்கு பிரியமில்லாததொன்று. இவர்கள் கூட்டமில்லாவிட்டால் தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்று நினைக்கிறார்கள். அதனால் சபையாரைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்வதை மட்டுமே இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். நம் ஆண்டவரின் ஊழியத்தின் இறுதிக்காலத்தில் அவருடன் இருந்தவர்கள் தொகை மிகக்குறைவு. கூட்டம் சேர்ப்பதற்காக அலையும் ஓநாய்களுக்கும் சீர்திருத்தப் போதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. வேதபோதனையின்படி அமைந்த சபையாக இருந்து அங்கு மந்தைகள் குறைவானதாக இருந்தாலும், அது கர்த்தரின் கூட்டமாக சத்தியத்திலும், கிறிஸ்துவின் சமாதானத்திலும் வளரும் சபையாக இருக்கும்.

இரண்டாவதாக கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் வளர ஆத்துமாக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். எபேசியர் 4 இல் பவுல் கூறுவதைக் கவனியுங்கள். “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்” என்கிறார் பவுல். இயேசுவின் அன்பை அறிந்து சபை மக்கள் மேல் அன்பு வைக்காதவர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க முடியாது. கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் தள்ளி நின்று பழகக் கூடாது. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் “எங்களுக்கு இடங்கொடுங்கள்” என்கிறார். இது மூல மொழியான கிரேக்கத்தில் “உங்கள் இருதயங்களை எங்களுக்குத் திறந்து வையுங்கள்” என்றிருக்கிறது. ஒளிவு, மறைவு இல்லாமல் உண்மையான அன்போடு என்னிடம் பழகுங்கள் என்கிறார் பவுல்.

மூன்றாவதாக, கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் இருக்க ஆத்துமாக்கள் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் பவுல் (எபேசியர் 4:15). காற்றால் அலையும் இலைகளைப்போல் போலிப் போதனைகளின் பின் அலையாமல் இயேசுவை நேசித்து சத்தியத்தை அன்போடு பின்பற்ற வேண்டும். சத்தியம் நாம் பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் பார்த்து இரசிப்பதற்காக இது கொடுக்கப்படவில்லை. பின்பற்ற முடியாத எதுவும் சத்தியமாக இருக்க முடியாது. சபை மக்கள் சத்தியத்தில் வளருபவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் எந்தளவுக்கு சத்தியத்தில் வளர்ந்திருக்கிறோம் என்று நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. சத்தியம் முறையாகப் போதிக்கப்படாத சபையில் நாம் இருக்கத் தேவையில்லை. வாராவாரம் வியாதிகளுக்கு ஜெபிப்பதாலும், சரீரத் தேவைகளுக்காக உபவாசம் எடுப்பதாலும் பரிசுத்த வாழ்க்கையில் வரை முடியாது. சத்தியம் வல்லமையோடு பிரசங்கிக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் காணப்பட ஆத்துமாக்கள் பக்திவிருத்தியில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்கிறார் பவுல் (எபேசியர் 4:16). 15ஆம் வசனத்தில் பவுல் “சபை கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு எல்லாவற்றிலும் வளர்வதாயிருக்க வேண்டும்” என்கிறார். வளர்ச்சியடையாதது சபையாக இருக்க முடியாது. ஆனால், சபை எதில் வளர வேண்டும்? சிலர் அது எண்ணிக்கையில் வளர வேண்டும் என்று துடியாய் இருக்கிறார்கள். பவுல் இங்கு எண்ணிக்கையைப்பற்றியே கவலைப்படவில்லை. “எல்லாவற்றிலேயும் நாம் வளர வேண்டும்” என்று கூறும் பவுல், நாம் எதில் வளர வேண்டும் என்றும் இப்பகுதியில் விளக்குகிறார். சபை சத்தியத்தில் வள‍ை வேண்டும் (15) என்று ஏற்கனவே பார்த்தோம். சபை அன்பில் வளர வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம் (2). ஒருவருக்கொருவர் நாம் செய்யும் கிரியைகளில் வளர வேண்டும் என்றும் பார்த்தோம் (2, 16). அத்தோடு சபை பக்திவிருத்தியில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும் பவுல் சொல்கிறார் (16). ஆத்துமாக்கள் சத்தியத்தில் வளர்ந்து, சக ஆத்துமாக்களின் மேல் அன்பு செலுத்தி தங்களுக்கு கர்த்தர் அளித்துள்ள கிருபையின்படி தன் தன் அளவுக்குத் தக்கதாக கிரியை செய்து வளரும்போது பக்திவிருத்தியில் சபை வளர்கிறது என்று பவுல் சொல்கிறார். பக்திவிருத்தி என்பது தன் சம்பந்தப்பட்ட காரியம் என்றும் அதில் சக ஆத்துமாக்களுக்கு சம்பந்தமில்லை என்றும் தவறாக பலர் எண்ணி வருகிறார்கள். ஆகானின் வாழ்க்கையில் இருந்த பாவம் சக ஆத்துமாக்களைப் பாதித்தது பற்றி நாம் யோசுவாவில் வாசிக்கவில்லையா? ஆத்துமாக்கள் பரிசுத்த வாழ்க்கையை யாருக்கும் தெரியாமல் காட்டில் போய் வாழ வேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. பலரறிய சபையில் பல ஆத்துமாக்களுக்கு மத்தியில் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று வேதம் சொல்கிறது. தனியொரு ஆத்துமா பரிசுத்தத்தில் வளரும்போது சக ஆத்துமாக்கள் அதனால் பலனடைகின்றன. ஒரு ஆத்துமா பரிசுத்தத்தில் குன்றும்போது சக ஆத்துமா அதனால் பாதிப்படைகின்றது. சபை கிறிஸ்தவ ஒற்றுமையில் சிறக்க ஆத்துமாக்கள் பரிசுத்த வாழ்க்கையில் வளர்கிறவர்களாயிருக்க வேண்டும். பாவத்தைக் கட்டிலுக்கு அ‍டியில் மறைத்து வாழ்பவர்களாயிருக்கக்கூடாது. பாவத்தை உடனுக்குடன் அழித்து பரிசுத்தத்தில் வளர்பவர்களாயிருக்க வேண்டும்.

இன்று அநேக இளைஞர்கள் இன்டர்நெட்டின் (Internet) அவலத்திற்கு தம்மை சுலபமாக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். பாவத்தை செய்துவிட்டு என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். இன்டர்நெட் அநேக நன்மைகளைக் கொண்டுவந்துள்ளபோதும் விபச்சாரத்தையும், வேசித்தனத்தையும் வீட்டிற்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது. பலவீனமான கிறிஸ்தவ இறைஞர்களும், வாலிபப் பெண்களும் இன்டர்நெட் மையங்களுக்குப் போகாமலிருப்பது நல்லது. உங்கள் இருதயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதற்கு தேவையானதையெல்லாம் அம்மையங்களை நடத்துபவர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இமேயிலைவிட (Email) நமது இருதயம் முக்கியமானது. இமெயில் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட முடியும். உலகம் தொடரத்தான் போகிறது. ஆனால், உன் இருதயத்தைக் கெடுத்துக் கொண்டு நீ பரலோகம் போக முடியாது நண்பனே!

பரிசுத்தமில்லாமல் இன்று அழிந்து கொண்டிருக்கும் போதகர்கள் அநேகர். ஜீம்மி சுவகர்ட், ஜிம் பேக்கர் போன்ற மாயமான்கள் செய்யக்கூடாத பாவத்தை செய்துவிட்டு இன்று மறுப‍டியும் ஊழியத்திற்கு வந்துவிடுகிறார்கள். கர்த்தர் மனந்திரும்புகிறவர்களை நிச்சயம் மன்னிக்கிறார். பெரும் பாவங்களைச் செய்தவர்கள் உண்மையில் மனந்திரும்பினால் அவர்கள் அதில் மீண்டும் விழுந்துவிடாமல் இருக்க சபை துணை செய்ய வேண்டும். அத்தகையோர் சபைக்கட்டுப்பாட்டை ஏற்று போதகர்களின் துணையைப் பெற்றுத் திருந்தி வாழ வேண்டும். ஆனால், வேசித்தனத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்த ஒரு ஊழியக்காரன் மறுபடியும் ஊழியத்திற்கு வருவது அடுக்காது. அவன் திருந்திவிட்டான் என்பதால் தொடர்ந்து ஊழியம் செய்யலாம் என்பது வேதம் போதிக்கும் உண்மையல்ல. திருடன் திருந்தி விட்டான் என்பதால் அவனுக்கு யாராவது பேங்க் ‍மெனேஜர்‍வேலை கொடுப்பார்களா? நெஞ்சில் ஈரமில்லாவர்கள் மட்டுமே இன்று மாம்ச தைரியத்தோடு மறுபடியும் பிரசங்க மேடைக்கு வருவார்கள். இம்மாதிரியான மனிதர்களுக்கு பிரசங்க மேடையைத் திறந்துவிடும் சபைகள் சாத்தானின் குகைகளாகத்தான் இருக்க முடியும். அத்தகைய சபைகளில் நாம் ஒழுங்கு நடவடிக்கையை ஒருபோதும் பார்க்க முடியாது. பரிசுத்த வாழ்க்கையை தேவ பயத்தோடு வாழ முடியாத கூட்டத்தில் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு இடமில்லை. பரிசுத்தத்திற்கு இடம் கொடுக்காத மனிதர்களோடு நாம் கிறிஸ்தவ ஒற்றுமையை ஒருக்காலும் அனுபவிக்க முடியாது.

சபைக்கு வெளியில் கிறிஸ்தவ ஒற்றுமை

இருவரை சபைக்குள் இருக்க வேண்டிய கிறிஸ்தவ ஒற்றுமையைப்பற்றிப் பார்த்தோம். கிறிஸ்தவ ஒற்றுமையை கிறிஸ்துவே ஏற்படுத்தயிருக்கிறார். அதை வேதபோதனைகளின்படி வளர்க்க வேண்டியதே நமது கடமை என்று அறிந்து கொண்டோம். இனி நமது சபைக்கு வெளியில் உள்ள ஏனைய சபைகளோடு இவ்வொற்றுமையை நாம் எப்படி அனுபவிப்பது என்று பார்ப்போம்.

சபைக்குள் கிறிஸ்தவ ஒற்றுமையிருக்க எந்த அடிப்படை அம்சங்களை பவுல் எபேசியர் 4 இன் மூலம் நம்முன் வைத்தாரோ அவற்றின் அ‍டிப்படையில்தான் நாம் சபைக்கு வெளியில் உள்ளவர்களோடும் உறவேற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறான உறவு நமது ஆத்துமாவுக்கு தீங்கிழைக்கும். இதற்காக எல்லோரையும் சந்தேகக்கண்ணோடு பார்த்து தள்ளி வைத்துவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கண் மூடித்தனமாக எல்லோரோடும் ஐக்கியத்தில் வருவதையே வேதம் கண்டிக்கிறது. முக்கியமாக சபைப்போதகர்கள் தவறான கூட்டத்தோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளக்கூடாது. பல சபைப்போதகர்கள் எவரையும் தங்களுடைய பிரசங்க மேடையில் பேச விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து எந்த மனிதனையும் இவர்கள் சபை மேடையை அலங்கரிக்கவிடுவார்கள். இது சபையின் ஆத்மீக அழிவுக்குத்தான் வழி வகுக்கும். பிரசங்க மேடை தேடி அலைந்து கொண்டிருக்கும் அநேக சுய ஊழியம் நடத்தும் பச்சோந்திகளை நாம் இனங்கண்டு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரே கர்த்தரான நம் ஆண்டவரையும், கிறிஸ்துவின் மீட்பின் செயல்களிலும் நம்பிக்கையில்லாதவர்களுடன் நாம் கிறிஸ்தவ உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் அல்ல என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோமே தவிர அவர்களோடு நாம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வர முடியாது. போப் இரண்டாம் போல் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோரை வழிநடத்திக் கொண்டிருந்தாலும் தான் போகும் வழிகளைத்துறந்து கிறிஸ்துவை விசுவாசிக்காதவரை அவரோ அவரைச் சேர்ந்தவர்களா பரலோகம் போகமுடியாது.

அதேபோல், சத்தியத்தை விற்றுப்பிழைப்பவர்களுடனும் நாம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வர முடியாது. சமய சமரசத்தைப் பின்பற்றுவோர், கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே போதனைகளைப் பின்பற்றுவோருடன் நாம் ஐக்கியத்தில் வர முடியாது. இவர்கள் வேதத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் சரீரசுகத்தையும், அற்புதங்களையும், போலி அனுபவங்களையும் நாடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வேதம் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், கர்த்தர் தொடர்ந்து வெளிப்படுத்தல்களைக் கொடுப்பதில்லை என்பதையும் இவர்கள் விசுவாசிப்பதில்லை. வேதபோதனைகளுக்கு இவர்கள் தம்மை ஒப்புக்கொடுக்கமல் வேதத்தை தாம் நினைத்தபடி தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களோடு நாம் ஒருபோதும் ஐக்கியத்தில் வர முடியாது.

சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் தனித்தியங்கிக் கொண்டிருக்கும் சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் நமக்கும் தொடர்பிருக்க முடியாது. இவர்கள் மீகாவைப்போல (நியாயாதிபதிகள் 17) வேதபோதனைக‍ளைப் பின்பற்றாமல் கர்த்தருக்கு தாம் நினைத்தவிதத்தில் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுவிசேஷத்தை சொல்லி ஆத்துமாக்களை வளர்த்தெடுக்க வேண்டிய சபைகளை தங்களுடைய சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதே இந்நிறுவனங்களின் வேலையாக இருக்கின்றது. இவை மொத்தமாக சமயசமரசப் (Ecumenism) போக்குள்ளவை. தமிழ் கிறிஸ்தவ உலகு முழுவதும் இவர்களால் இன்று நிரம்பிப் போயிருக்கின்றது.

வேதத்தில் தொடர்ந்து பிழை கண்டுபிடித்து அதன் அதிகாரத்தைத் துவம்சம் செய்து கொண்டிருக்கும் இறையியல் கல்லூரிகளுடன் நமக்குத் தொடர்பிருக்க முடியாது. இறையியல் கல்லூரி என்ற பெயர் கொண்ட அநேக கல்லூரிகள் சமய சமரச கல்லூரிகளாகவும், தாராளவாதத்தைத் தாராளமாக அள்ளி வழங்கும் வேத விரோத கல்லூரிகளாகவுமே இயங்கி வருகின்றன. சீர்திருத்த போதனைகளில் நாட்டம் கொண்டவர்களுக்கு இக்கல்லூரிகளுடன் தொடர்பிருக்க முடியாது.

யாரோடு நாம் ஐக்கியத்தில் வரவேண்டும்?

எவரையும் சொதித்துப் பார்க்காது, கிறிஸ்தவர்கள் என்றும் கிறிஸ்தவ சபைகள் என்றும் தம்மை அழைத்துக் கொள்பவர்களோடெல்லாம் நாம் ஐக்கியத்தில் இருக்க வேண்டும் என்று வேதம் எங்கும் போதிக்கவில்லை. பவுலும், பேதுருவும், ஏனைய அப்போஸ்தலர்களும் சத்தியத்திற்கு மதிப்புக் கொடுத்து உழைத்தவர்களோடும், அத்தகைய சபைகளோடும் மட்டுமே ஐக்கியத்தில் இருந்துள்ளார்கள். சத்தியத்திற்கு மாறாக நடந்தவர்களை அவர்கள் முகத்தைப் பார்த்து (அவர்கள் அப்போஸ்தலர்களாக இருந்த போதும்) அப்போஸ்தலர்கள் கண்டிக்கத் தவறவில்லை. சத்தியத்தை நாடி அதன் அடிப்படையில் வாழ்ந்து ஊழியம் செய்பவர்களோடும், அத்தகையோரின் சபைகளில் இருப்பவர்களோடும் நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டும். இவர்களோடு இருக்கும் ஐக்கியமே கிறிஸ்தவ ஒற்றுமை வளர உதவும். கிறிஸ்தவ ஒற்றுமை ஜாக்கிரதையாக பாதுகாத்து வளர்க்கப்பட வேண்டியது. அதை வளர்ப்பதனால் நாம் யாரோடு கூட்டுச் சேருகிறோம் என்பதில் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது.

எந்த சத்தியத்தையும் கோட்பாடுகளையும் நாம் பின்பற்றி வருகிறோமோ அவர்களோடு நமக்கு கிறிஸ்தவ ஒற்றுமையும், கிறிஸ்தவ ஐக்கியமும் இருக்க வேண்டும். மந்தைகளுக்கு உணவிட்டு, ஓநாய்களை விரட்டிக் கொண்டிருக்கும் ஊழியக்காரர்களுடன் நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டும். இவர்கள் கர்த்தருக்காக உழைக்கும் கடமைப்பாடுடைய செயல் வீரர்கள். சீர்திருத்த போதனைகளை விசுவாசித்து மனத்தாழ்மையோடு சபை நடத்திக் கொண்டிருப்பவர்களோடு நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டும். இத்தகையோரைக் கண்டறிந்து அவர்களோடு நாம் நல்லுறவேற்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவித போலித்தனமும் இல்லாத அன்பை அடிப்படையாகக் கொண்ட எறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சத்தியத்தை மட்டும் விசுவாசிக்கும் போதகர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து ஆழமான உண்மையான அன்பைத் தமக்குள் வளர்த்துக் கொள்ளாதவரையில் அவர்களுடைய சபைகளுக்கிடையில் உண்மையான ஐக்கியம் இருக்க முடியாது. இன்று அநேக போதகர்கள் இத்தகைய ஆழமான உறவை மற்ற போதகர்களோடு வளர்த்துக் கொள்வதில்லை. இத்தகைய உறவும் அன்பும் இல்லாவிட்டால் சபைத்தேவைகளுக்காக அன்போடு எப்படிப் போதகர்களால் ஜெபிக்க முடியும். சில போதகர்களுக்கு தள்ளி நின்று பழகுவதே வாழ்க்கையாக இருக்கின்றது. இவர்களால் மற்றவர்களோடு நெருங்கிய உண்மையான நட்பை வளர்த்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. சிலருக்கு மற்றவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதே வழமையாக இருக்கின்றது. சுயநலத்தாலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இவர்களால் யாருக்கும் எந்தப்பயனுமில்லை. இவர்கள் சமூக உறவில் தேர்ச்சி அடைய வேண்டியவர்கள்.

சபையோடு சபை இணைந்து செயல்பட வேண்டுமானால் அதற்கு நிச்சயம ஒரு அசோசியேஷன் வேண்டும் என்று சிலர் இன்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சபை ஒற்றுமை அசோசியேஷனால் வளர்ந்ததாக வேதத்தில் எங்குமே வாசிக்க முடியாது. ஒரு சீர்திரத்த சபை இன்னொரு சீர்திருத்த சபையோடு சேர்ந்து உழைப்பதற்கு ஒரு அசோசியேஷனோ (Association) அல்லது கமிட்டியோ (Committe) இருக்க வேண்டிய அவசியமில்லை. சபைக்கு வெளியில் எந்த அசோசியேஷனையும் வேதத்தில் பார்க்க முடியாது. அத்தகைய அசோசியேஷன்களால் உள்ளூர் சபையின் அதிகாரத்திற்குத்தான் எப்போதும் ஆபத்து வந்திருக்கிறது. அசோசியேஷனை நாடுகிறவர்கள் மத்தியில் பதவி ஆசை நிறைந்தவர்களும், ஏனைய சபைகள் மேல் ஆட்சி செலுத்தும் நோக்கம் கொண்டவர்களுமே அதிகம். வெறும் அசோசியேஷன்களாலும், கமிட்டிகளாலும், கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்க முடியாது. இவையெல்லாம் இல்லாமல் கிறிஸ்தவ ஒற்றுமை சீர்திருத்த சபைகள் மத்தியில் வளர முடியும்.

சீர்திருத்த போதகர்கள் மிகுந்த மனத்தாழ்மையுடன் ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தி சத்தியத்தில் வளர்ந்து ஜெபத்தில் கூடிவர வேண்டும். ஒருவருக்கொருவரும், தங்களுடைய சபைத் தேவைகளுக்காகவும், ஜெபிக்கலாம். முடிந்தவரை வேதபோதனையின்படி சபைகள் இணைந்து செயல்படலாம். கிறிஸ்துவின் அன்பும், நம்பிக்கையும், சத்தியமும் இணைப்பதுபோல் வேறு எதுவும் நம்மை இணைக்க முடியாது. இத்தகைய கிறிஸ்தவ ஒற்றுமையை நான் பல போதகர்களுடனும், பல சபைகளுடனும், சபையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எங்களை சத்தியம் இணைத்திருக்கின்றது. சீர்திருத்த போதனைகள் இணைத்திருக்கின்றது. ஒருவரில் ஒருவருக்கு இருக்கும் அன்பும், நம்பிக்கையும் இணைத்திருக்கிறது. அங்கே மாயங்களுக்கும், போலித்தனத்திற்கும் இடமில்லை. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் எம்மை சேர்த்து வைத்திருக்கின்றது. அசோசியேஷனோ, கமிட்டியோ எங்கள் மத்தியில் இல்லை. ஆனால், அவற்றாலெல்லாம் ஏற்படுத்த முடியாத விலை மதிப்பில்லாத அன்பும், நம்பிக்கையும், ஐக்கியமும் எங்களிடம் இருக்கின்றது.

சீர்திருத்தப் போதனைகளை இதுவரை அறிந்திராது, ஆனால் சுவிசேஷத்தை முழு இருதயத்தோடு பிரசங்கித்துக் கொண்டிருக்கும் ஒரு சில நல்ல மனிதர்களும் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகையோரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் சத்தியத்தில் மேலும் தெளிவு பெறும் நாள் வரத்தான் செய்யும். இவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே கூட்டத்தால் ஏற்படும் தீமைகளை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். சபைகளில் ஆடல் பாடல்களுக்கு இவர்கள் இடமளிப்பதில்லை. பிரசங்கத்தை தேவ பயத்தோடு செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் இவர்களுக்கு இருக்கின்றது. இத்தகையோருடன் நாம் நிச்சயம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வளரலாம். நமது ஐக்கியத்தின் மூலம் இவர்களுக்கு சீர்திரத்தப் போதனைகளை நாம் தெளிவுப்படுத்தலாம். சத்தியத்தை நாடும் இவர்கள் அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். சத்தியத்தில் இவர்கள் மேலும் ஆழமாக அறிவு பெறும் நாட்கள் வரத்தான் போகின்றது.

கிறிஸ்தவ சபை ஐக்கியத்தைப் பொறுத்தவரையில் தமிழ் கிறிஸ்தவ உலகில் சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு இந்நாட்களில் ஐக்கியத்தில் வருமளவுக்கு பெருந்தொகையான போதகர்களோ, மந்தைகளோ இல்லை. இருந்தபோதும் இவர்கள் தொகை அதிகரித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது அவர் ஐக்கியத்தில் வந்தோருடைய எண்ணிக்கை மிகவும் குறைவு. சத்தியம் எப்போதுமே பெருங்கூட்டத்தால் பின்பற்றப்படவில்லை.

இறுதியாக ஒரு வார்த்தை

சீர்திருத்தப் போதனைகளை விசுவாசித்து ஆர்வத்துடன் சபை நடத்துபவர்கள் அதிக மனத்தாழ்மையுடன் உழைக்க வேண்டிய நாட்கள் இவை. சத்தியத்தை நாம் அறிந்திருக்கிறோம் என்ற இறுமாப்பு நமக்கு இருக்கக்கூடாது. அதை வெளிப்படுத்திய கர்த்தருக்கு நாம் தினசரி நன்றி கூற வேண்டும். சீர்திருத்த போதனைகளில் நாம் வளர்ந்து கொண்டிருக்கும்போது அதைப் புதிதாக அறிந்து கொள்கிறவர்களோடும், சபைகளோடும் நாம் மிகவும் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் நம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தளவுக்கு வேத அறிவில் வளர்கிறோமோ அந்தளவுக்கு தாழ்மை நம்மிடம் இருக்க வேண்டும். யோவான் ஸ்நானன் கூறியது போல், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்ற மனப்பான்மை நமக்கிருக்க வேண்டும் (யோவான் 3:30). இன்று, அரைகுறை அறிவு சிலரது கண்களை மறைத்து அவர்கள் இருதயத்தைப் பாதித்திருக்கிறது. தாழ்மை இல்லாதவர்கள் ஒருபோதும் மெய்விசுவாசிகளாக இருக்க முடியாது. நமக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தைவிட நமக்குள் இருந்து ஏற்படும் ஆபத்திலிருந்து நம்மை முதலில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வேதம் போதிப்பதுபோல் மாம்சத்திற்கேதுவான அனைத்தையும் நம் சரீரத்திலிருந்தும், ஆத்துமாவிலிருந்தும் அன்றாடம் அழித்துவிட வேண்டும். கர்த்தர் இயேசுவின் அன்பில் நாம் வளர வேண்டும். மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமைக்கு சபையிலும், சபைக்கு வெளியிலும் ஊறு வந்துவிடாதபடி அதை நாம் கட்டிக்காத்து வளர்ப்போம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s