சபைப் பிதாக்கள் (Church Fathers)

இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கன்னா பின்னாவென்று வேதபோதனைகளைப்பற்றி விநோதமாக சிந்திக்கத் தொடங்கிய நொஸ்டிசிசத்தாலும், வேத ஆராய்ச்சியை உதாசீனம் செய்து எல்லைமீறி வெறித்தனமாக உணர்ச்சிகளுக்கு தூபம் போட்ட மொன்டனிசத்தாலும் திருச்சபைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. திருச்சபையின் ஆத்மீகம் பலவீனமடைந்திருந்தது. இக்காலப்பகுதிகளிலேயே சபைப்பிதாக்கள் தங்களுடைய சபையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கினர். அவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவும், கடமைப்பாடுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களில் ஐரேனியஸ், டர்டூலியன், சிப்பிரியன், அலேக்சாந்திரியாவைச் சேர்ந்த கிளமண்ட், ஒரிகன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் மூன்று பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகளை இவர்கள் தீர்மானத்துடன் சந்தித்தபோதும், இப்பிரச்சனைகளைக் குறித்து இவர்கள் எடுத்த தீர்மானங்கள் பிற்காலத்தில் மேலும் பெரிய பிரச்சனைகளை உருவாக்கின.

புதிய ஏற்பாட்டுத் தொகுப்பு (New Testament Canon)

புதிய ஏற்பாட்டு நூல்களாக எவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் இன்னும் முடிவாகத் திர்மானிக்கப்படாமல் இருந்தது. நொஸ்டிசிசத்தைப் பின்பற்றியோர் தங்களுடைய சொந்த நூல்களையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி வந்தனர். அவற்றில் சில நல்லவையாகவும், ஏனையவை மோசமானவையாகவும் இருந்தன. எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கக்கூடிய சத்தியத்தை எப்படித் தீர்மானிப்பது என்பது தொடர்ந்து ஒரு பிரச்சனையாக இருந்தது. ‍மெய்யான வேத நூல்களை நிராகரிக்க முயன்று கொண்டிருந்த மார்க்கியனுக்கு எதிராக திருச்சபை போராட வேண்டியிருந்தது. புதிய ஏற்பாட்டில் அடங்க வேண்டிய நூல்கள் அப்போஸ்தலரால் எழுதப்பட்டதாகவோ அல்லது அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தவர்களால் எழுதப்பட்டதாகவோ இருக்க வேண்டும் என்று ஐரேனியஸ் கூறினார். அவற்றை மட்டுமே அப்போஸ்தல போதனைகளாகவும், வேதமாகவும் ஐரேனியஸ் கணித்தார். சில காலத்திற்குப் பின்பு டர்டூலியன் ஒரு புதிய ஏற்பாட்டை எழுதி அது பழைய ஏற்பாட்டிற்கு சமமானது என்று அறிவித்தார். நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் (கி.பி. 397) எந்தெந்த நூல்கள் புதிய ஏற்பாட்டில் இருக்க வேண்டும் என்ற முடிவான தீர்மானத்திற்கு சபையால் வர முடிந்தது. கி.பி. 367ல் கிழக்கில் அ‍லெக்சாந்திரியாவில் இருந்த சபையும், கி.பி.397ல் மேற்கில் கார்த்தேஜில் இருந்த சபையும் புதிய ஏற்பாட்டு நூல்கள் எவை என்ற தீர்மானத்திற்கு வந்தன.

விசுவாச அறிக்கை

நொஸ்டிசிசத்தைப் பின்பற்றியோரோடு தர்க்கம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் உவமைகளாகக் கருதி விளக்கம் கொடுத்து வந்தனர். அவர்கள் வேத சத்தியங்களையும்கூட திரித்து உவமைகளாகப் பயன்படுத்தி அவற்றிற்கு உண்மைக்கு மாறான விளக்கங்களைக் கொடுத்து வந்தனர். வேதத்திற்கு விளக்கங்கொடுக்கும் இந்தத்தவறான முறையால் திருச்சபைக்கு பெரும் ஆபத்திருந்தது. திருச்சபையை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பதற்காக அக்காலத்தில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் ஒரு அடிப்படை விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இது வேத சத்தியங்களை அவர்கள் உண்மையிலேயே புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள உதவியது. இவ்விசுவாச அறிக்கையே பின்பு அப்போஸ்தலரின் அறிக்கை (Apostle’s Creed) என்ற பெயரை அடைந்தது. சபை எதை விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக அப்போஸ்தலர் காலத்து ஆதி சபை விசுவாசித்த போதனைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டம் என்றார் ஐரேனியஸ். அச்சபைகளின் பாரம்பரியங்கள் இதற்கு உதவும் என்பது ஐரேனியஸின் நம்பிக்கையாக இருந்தது. அக்காலத்தில் ஐரேனியஸின் இக்கருத்துக்கள் ஓரளவிற்கு பயன்பதருவதாக இருந்தன. பின்பு காலம் செல்லச் செல்ல அப்போஸ்தலர்களின் போதனைகள் என்ன, பாரம்பரியங்கள் என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குழப்பமே உருவாகியது.

இக்காலத்தில் Catholic என்ற வார்த்தையை திருச்சபையைக் குறித்து பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதற்கும் இன்று நம் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்நூற்றாண்டில் சபையைத் தாக்கிய நொஸ்டிசிச கள்ளப்போதனை எதிர்ப்பதற்காக இந்தப் பெயரை சபை பயன்படுத்தியது. வேத சத்தியங்களை மட்டும் பின்பற்றிய சபைகள் இணைந்திருந்து எதிரியைத் தாக்க இரு உதவும் என்று சபை நம்பியது. இவ்வார்த்தை சபை ஒற்றுமையைக் குறிக்கும் வார்த்தையே தவிர ரோமன் கத்தோலிக்க மதத்துடன் சம்பந்தமுடையது அல்ல. ரோமன் கத்தோலிக்க மதம் பு‍ரட்டஸ்தாந்து, சீர்திருத்த போதனைகளுக்கு எதிரான ஒரு சமயம். இதற்கும் வேதம் போதிக்கும் கிறிஸ்தவ திருச்சபைக்கும் ஒருக்காலும் தொடர்பில்லை. இரண்டாம் நூற்றாண்டில் கிழக்கில் அலெக்சாந்திரியாவிலும், மேற்கில் கார்த்‍தோஜிலுமாக ஆதி சபை Catholic Church (ஒரே சபை) என்று அழைக்கப்பட்டது. மேற்கில் இருந்த சபையே பின்பு வேதத்தை விட்டு விலகிப்போய் ரோமன் கத்தோலிக்க சபையாக உருமாறியது.

அப்போஸ்தலைப்போன்ற சபைத்தலைவர்கள் (Apostolic succession)

அப்போஸ்தலர்களைப் பின்பற்றி அவர்களைப்போல ஒரு தலைமை திருச்சபைக்கு வேண்டும் என்ற கருத்தையும் ஐரேனியஸ் முன்வைத்தார். அப்போஸ்தலரிடமிருந்து வந்துள்ள போதனைகளையும், பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்கு இது அவசியமாகக் கருதப்பட்டது. பெரிய சபைகளில் யார் இவ்வாறாக தலைமை வகிக்க வேண்டும் என்ற பட்டியலும் போடப்பட்டது. ஐரேனியஸ், இக்காலத்தில் பிசப்புகளுக்கும் மூப்பர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. அவை இரண்டும் ஒரே பதவியைக் குறிக்கும் பெயர்களாகவே கருதினார். இதுவே ஆதி சபையில் அப்போஸ்தலர்களின் போதனையாகவும் இருந்தது. இதேவிதமாகவே ரோம சபையின் எல்லாத் தலைவர்களும் சம அதிகாரமும், தகுதியும் கொண்டவர்களாக ஐரேனியஸ் கருதினார். இக்காலத்தில் மூப்பர் பணி மற்ற சபைத் தலைவர்களில் இருந்து வேறுபட்டு பிசப்பாக அதிகாரம் கொண்டதாக மாறிக் கொண்டிருந்தது. மூன்றாம் நூற்றாண்டில் டர்டூலியனுடையதும், கிளெமன்டினதும் காலத்துக்கு நாம் வரும்போது இத்தகைய அதிகாரம் கொண்ட பிசப்பாட்சி ஏற்பட்டுவிட்டதைக் கவனிக்கலாம். அதன் பின்பு திருச்சபை எபிஸ்கொப்பே ஆட்சி முறையில் ஒற்றுமை கண்டு இதற்கு முன்பிருந்த பிசப்புகளின் பாரம்பரியங்களைப் பின்பற்றத் தொடங்கியது. இதுவே பின்பு ரோமன் கத்தோலிக்க சபை ஆட்சிக்கும், பாரம்பரியங்களுக்கும் இலகுவாக வழி விட்டது. வேதத்தின் அதிகாரமும் நிராகரிக்கப்பட்டு சபைப் பாரம்பரியங்கள் அதிகாரபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கோலைச் சேர்ந்த ஐரேனியஸ் (Irenaeus of Gaul)

180-250களுக்கிடையில் வாழ்ந்த சபைப்பிதாக்களில் முதல்வரான ஐரேனியஸ் 130ல் ஆசியாவில் பிறந்தவர். அப்போஸ்தலரான யோவானின் சீடராக இருந்த பொலிகார்ப்பின் சீடராக ஐரேனியஸ் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரேனியஸீக்கு பொலிகார்ப்பை நன்கு தெரிந்திருந்ததால், பொலிகார்ப் மூலம் யோவானின் போதனைகளையும், ஆதி சபை நடவடிக்கைகளையும் அறிந்து வைத்திருக்க முடிந்தது. ஆகவே, இரண்டாம் நூற்றாண்டின் கடைசிக் காலப்பகுதியில் ஐரேனியஸ் தனக்குள் (யோவான், பொலிகார்ப் ஆகியோரின்) 200 வருடகால அனுபவங்களைக் கொண்டிருந்து நொஸ்டிசிசத்தைப் பின்பற்றியவர்களோடு தர்க்கம் செய்ய முடிந்தது. இக்காலத்தில் ஐரேனியஸ் பாரம்பரியம் என்று அழைத்தவை பெரிதும் உண்மையானவைகளாக ஆதி சபை கடைப்பிடித்த போதனைகளாக இருந்தன. காலம் செல்லச் செல்ல பாரம்பரியம் என்பது உண்மைக்குப் புறம்பானதாக மனிதனால் உண்டாக்கப்பட்டவையாக இருந்தன.

கோலில் (பிரான்ஸ்) பிசப்பாக இருந்த போதீனஸ் கொலை செய்யப்பட்டபோது ஐரேனியஸ் சபையின் பிசப்பாக நியமிக்கப்பட்டார். அவருடைய எழுத்துக்கள் திருச்சபைக்கு நல்ல பலனளித்தன. ஐந்து நூல்களாக ஐரேனியஸ் எழுதிய Against Heresies என்ற நூல் இன்றும் பதிப்பில் இருக்கின்றது. நொஸ்டிஸிசப் போதனைகளில் இருந்து திருச்சபையைக் காப்பதற்காக எழுதப்பட்ட இந்நூலின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

அலெக்சாந்திரியாவும், கார்த்தேஜிம்

அக்காலத்தில் ரோமர்கள் ஆபிரிக்கா என்று குறிப்பிட்டது வட ஆபிரிக்காவையே. இப்பகுதியில் இன்றைய டுனீசியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகளும் அடங்கும். நாம் இப்பதியில் மத்தியத்தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகள் அடங்கிய பிரதேசத்தைக் குறிக்க ஆப்ரிக்கா என்ற பதத்தைப் பயன்படுத்துவோம். இதில் எகிப்து, லிபியா போன்ற நாடுகளும் அடங்கும். ரோமர்களின் காலத்தில் இப்பிரதேசத்தில் இரு முக்கிய நகரங்கள் முதன்மையான இடத்தை வகித்தன. அவை வட கிழக்கிலிருந்த அலெக்சாந்திரியாவும், வட மேற்கிலிருந்த கார்த்தேஜீமாகும்.

அலெக்சாந்திய திருச்சபை: கிளெமென்டும் ஒரிகனும்

ரோம சாம்ராஜ்யத்தில் ரோமுக்குப் பிறகு அலெக்சாந்திரியா முக்கிய இடத்தை வகித்தது. ரோம், ரோம சாம்ராஜ்யத்தின் சட்ட நிர்வாகத் தலைநகராக இருந்தால், ‍அலெக்சாந்திரியா அதன் கலாச்சார மற்றும் புத்திஜீவிகளின் தலைநகராகவும் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு முக்கிய துறைமுகமாகவும் விளங்கியது. ஹெலனிசக் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த இந்நகரில் ஒரு பெரும் யூத சமுராயமும் வாழ்ந்து வந்தது. அலெக்சாந்தியாவில் கிறிஸ்தவம் எப்போது ஆரம்பித்தது என்பது தெரியவில்லை. அப்போலஸ் அங்கிருந்து வந்ததாக அறிகிறோம் (அப்போஸ். 18:24-28). ஹெலனிச‍த்தைப் பின்பற்றிய யூதர்கள் மத்தியில் கிறிஸ்தவம் தலைதூக்கியிருக்கலாம்.

அலெக்சாந்தியாவைச் சேர்ந்த கிளெமன்ட்

அலெக்சாந்தியாவின் முதர் பெரும் கிறிஸ்தவ போதனையாளராக கிளெமன்ட் இருந்தார். இவருடைய எழுத்துக்கள் காலம் அழித்துவிவில்லை. கி. பி. 170-180 களுக்கிடையில் அலெக்சாந்தியாவில் இருந்த கிளெமன்ட் கிறிஸ்தவர்களுக்கெதிராக எழுந்த துன்புறுத்தல்களால் 202க்குப்பிறகு அலெக்சாந்திரியாவில் இருக்கவில்லை. 215இல் வர் ஆசியா மைனரில் மடிந்ததாக அறிகிறோம். கிறிஸ்தவராக மாறிய கிளெமன்ட் ரோம ராஜ்யம் முழுவதும் பிரயாணம் செய்து பல கிறிஸ்தவ ஆசிரியர்களை சந்தித்து அவர்களிடம் ‍கிறிஸ்தவ போதனைகளைப் பெற்றுக் கொண்டார். பென்டேனஸ் (Pantaenus) என்ற மனிதர் கிளெமன்டை மிகவும் கவர்ந்தார். அலெக்சாந்தியாவிலிருந்த பென்டேனஸ் ஸ்டொயிக் தத்துவஞானியாக இருந்து கிறிஸ்துவை அறிந்து கொண்ட மனிதன். கிழக்கிற்கு இந்தியா வரை மிஷனரியாகப் போய்வந்த பென்டேனஸ் அலெக்சாந்தியாவில் நொஸ்டிசிசத்தைவிட கிறிஸ்தவம் மேலானது என்று காட்டம்படியாக ஒரு கிறிஸ்தவ தத்துவ கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். கிளெமன்ட் பென்டேனஸீடன் இருந்து 190ல் அவர் இறந்தபிறகு இக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

கிளெமன்டின் எழுத்துக்களில் மூன்று நம்மை வந்தடைந்துள்ளன. முதலாவது, “கிரேக்கர்களுக்கான போதனை” என்ற நூல். கிரேக்கர்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளுவதற்காக கிளெமன்ட் இதை எழுதினார். கிறிஸ்துவை தெய்வீக வார்த்தையாக இதில் கிளெமன்ட் விளக்கியுள்ளார். இரண்டாவது, “ஆசிரியர்” என்ற நூல். இது புதிதாக கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்களுக்கான நூல். கிறிஸ்தவன் எவ்வாறு வாழு வண்டும் என்ற எளிமையான போதனையை இந்நூல் அளிக்கிறது. மூன்றாவது, “தரைவிரிப்புப் பை” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு விநோதமான நூல். கிரேக்க தத்துவத்தில் நல்ல அறிவைக் கொண்டிருந்த கிளமென்ட் தன் நூல்களில் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி கிரேக்கர்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் விதத்தில் கிறிஸ்தவ போதனை அளித்தார். தமது கிரேக்க தத்துவ அறிவைப் பயன்படுத்தி நொஸ்டிசிசப் போதனைகளுக்கெதிராக வாதாடி கிறிஸ்துவை கிரேக்கர்களுக்கு விளக்க கிளெமன்டின் நூல்கள் முயன்றன. சில வேளைகளில் கிளெமன்டின் எழுத்தக்களில் தத்துவம் அவர் மேல் தேவைக்குமேலான பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததையும் பார்க்க முடிகின்றது. கிரேக்க தத்துவங்களையெல்லாம் விட கிறிஸ்தவம் மேலானது என்பதை தத்துவத்தை நாடி அலைந்த கிரேக்கர்களுக்கு எளிதாக எடுத்துக்கூறக்கூடிய வல்லமை கிளெமன்ட்டுக்குப் பின் அவருடைய சீடரான ஒரிகனுக்கு மட்டுமே இருந்தது என்று கூற வேண்டும்.

இக்காலப்பகுதியில் திருச்சபை சந்தித்திருந்த மிகத்திறமைசாலியான போதகர்களில் ஒருவரான ஒரிக‍னை அடுத்த இதழில் சந்திப்போம். (வளரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s