சபைப் பிதாக்கள்-II (Church Fathers)

அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப் பிறகு திருச்சபைத் தலைவர்களாக இருந்த சபைப்பிதாக்களைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அப்போஸ்தலர்களைப்போல விவேகமுதும், ஞானமும், திறமையும் கொண்டவர்களாக இவர்களில் அனைவரும் இல்லாவிட்டாலும் ஒரு சிலர் குறிப்பிமத்தக்கவர்களாக இருந்தனர் என்றும் கடந்த இதழில் பார்த்தோம். இவர்கள் காலத்தில் திருச்சபை பல போலிப்போதனைகளை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் பலவீனமடைந்து வந்ததையும் பார்க்கிறோம். சபைத் தலைவர்கள் வேதபூர்வமான தகுதிகளைக் கொண்டிராதபோது திருச்சபை வரலாற்றில் இந்நிலையையே சந்திக்க வேண்டி வந்தது. ஒரு நூற்றாண்டுகள் உலகைத் தன்பக்கம் திருப்பிய திருச்சபை இப்போது தளர்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது.

ஓரிகன் (Origan) (185-254)

கிறிஸ்தவ சபை சந்தித்த திறமைவாய்ந்த தலைவர்களில் ஒருவராக ஓரிகன் விளங்கினார். போதிப்பதிலும், எழுதுவதிலும் அவர் மிகத்திறமைசாலியாக இருந்தார். கிறிஸ்துவை விசுவாசித்ததற்காக பலியான ஒருவருக்கு மகனாக அலெக்சாந்திரியாவில் பிறந்த ஓரிகன் ஆத்மீக சூழல் நிறைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தார். கிளெமன்டின் மாணவாக இருந்து கல்வி கற்ற ஓரிகன் தனது 18ம் வயதில் ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருந்தார். உபத்திரவங்கள் நிறைந்த அந்தக் காலப்பகுதியிலும் எல்லோராலும் பாராட்டப்படும் அளவுக்கு அவருக்கு மதிப்பு உயர்ந்திருந்தது. ஓரிகனை படசாலை அதிகராக நியமித்த டெமீட்ரியஸ் கருத்து வேறுபாடுகளால் ஓரிகனுக்கு எதிரியாக மாறினார். இருந்தாலும் ஓரிகனின் பாடசாலை அநேக மாணவர்களைக் கவர்ந்திழுத்தது. கிழக்கு திருச்சபையின் நல்ல பல பிசப்புக்களை இப்பாடசாலை தயார் செய்திருந்தது.

ஓரிகன் பல நாடுகளுக்கும் போய் சிறந்த ஞானிகளிடம் பயில விரும்பினார். ரோம், யெரூசெலேம் அன்டியோக், கிரீஸ், அரேபியா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஓரிகன் போனார். வெகு விரைவிலேயே இறையியல் போதனைகளில் ஆலோசனை சொல்லக்கூடிய திறமைசாலியாக கிழக்கு திருச்சபையினால் மதிக்கப்பட்டார். 231ல் பாலஸ்தீன சீசரேயாவின் திருச்சபை ஓரிகனைப் போதகர் பதவியில் பிரதிஷ்டை செய்து நியமித்தது. இது ஓரிகனின் எதிரியாக இருந்த டெமீட்ரியஸீக்கு அதி ஆத்திரமூட்டியது. டெமீட்ரியஸ் ஓரிகனை அலெக்சாந்திரிய சபையில் இருந்து ஓழுங்குக் கட்டுப்பாடு மூலம் நீக்கினார். ஓரிகன் பாலஸ்தீனிய சீசரேயாவிலேயே தங்கி எழுதுவதிலும், போதிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், பிரயாணங்கள் செய்வதிலும் நேரத்தை செலுத்தி தனது இறுதிக்காலத்தைக் கழித்தார். கிறிஸ்தவர்களுக்கெதிராக மீண்டும் ஆரம்பித்த துன்புறுத்தல்களின்போது 250ல் சிறைபிடிக்கப்பட்டு ரோம அதிகாரிகளால் பல துன்பங்களை அனுபவித்து 254ல் தன் சரீரத்திர் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மரணமடைந்தார்.

ஓரிகன் வேதத்தை அதிகமாக நேசித்தார். தன் வாழ்வில் தீவிரமாக பல கட்டுப்பாடுகளைப் பின்பற்றினார். மதுவையும், சுவையான உணவையும் துறந்தார். வெறும் தரையில் உறங்குவதை வழக்கமாகக் கொண்டார். மிகக் கடுமையாக உழைத்து அநகே நூல்களை எழுதித் தயாரித்தார். ஜெரோம் ஓரிகனைப் பற்றிக் கூறும்போது, எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் வாசித்துத் தீர்க்கமுடியாத அளவுக்கு நூல்களை அவர் எழுதினார் என்று கூறியுள்ளார். சிலர் ஓரிகன் கட்டுரைகளாகவும், கடிதங்களாகவும் 6000 ஐ எழுதியிருந்தார் என்று கூறுகிறார்கள்.

ஓரிகன் பழைய ஏற்பாட்டு நூலொன்றைத் தயாரித்திருந்தார். இதில் பழைய ஏற்பாட்டு எபிரேய வசனங்க‍ளுக்கு பக்கத்தில் அவ்வசனங்களை கிரேக்க மொழியில் தந்து மேலும் நான்கு பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்புகளையும் தந்திருந்தார். இது ஹெக்செப்லா (Hexapla) என்று அழைக்கப்பட்டது. இது எந்த அளவுக்கு ஓரிகனுக்கு ‍வேதமொழிகளில் பாண்டித்தியம் இருந்தது என்பதை விளக்குகிறது. அத்தோடு பழைய புதிய ஏற்பாட்டு நூல்களின் ஒவ்வொரு நூலுக்கும் விளக்கவுரை எழுதியதோடு பல பிரசங்கங்களையும் எழுத்தில் தந்திருந்தார் ஓரிகன்.

ஓரிகன் ஆரம்ப தத்துவங்கள் (First Principles) என்ற பெயரில் சபை வரலாறு கண்ட முதலாவது முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை எழுதினார். இவற்றைத்தவிர ஜெபத்தைப் பற்றிய ஒரு நூலையும், ஆண்டவ‍ருடைய ஜெபத்தைப்பற்றிய மிகப் பழமையான ஒரு விளக்கவுரையையும், இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்க ஆறுதல் என்ற நூலையும் எழுதினார்.

தன்னுடைய வாழ்நாளில் ஓரிகன் மாறுபாடுகள் கொண்ட ஒரு மனிதராக விளங்கினார். இன்றும் அத்தகைய மனிதராகவே கணிக்கப்படுகிறார். ஒருபுறம் தாழ்மையும், நற்பண்புகள் சொண்ட மனிதராகவும், வேதத்திலும், தத்துவத்திலும் ஆழமான ஞானமுள்ள மனிதராகவும் தென்படுகிறார். இன்னொருபுறம் தனது சிந்தனைகளாலும், எழுத்துக்களாலும் மிகக் கடுமையான வாதப்பிரதாபங்களை ஏற்படுத்திய மனிதராகவும் இருக்கிறார்.

வேதம் மட்டுமே கர்த்தரின் ஆவியால் அருளப்பட்டது என்றும், தத்துவஞானியான பிலேட்டோவோ அல்லது வேறு எவருடைய நூல்களோ வேதத்திற்கு இணையானது இல்லை என்றும் ஓரிகன் சொன்னார். வேதத்தின் அடிப்படையில் மட்டுமே விசுவாசி சிந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். ஆனால், உண்மையி‍ல் ஓரிகனுடைய சிந்தனைகள் அனைத்தையும் பிளேட்டோவின் தத்துவமே வழிநடத்தியது. உதாரணத்திற்கு வேத விளக்க விதிமுறை பற்றி ஓரிகன் போதித்ததைப் பார்ப்போம். வேத வசனங்களை விளக்கும்போது அதற்கு எப்போதும் மூன்றுவிதமான அர்த்தங்கள் உண்டு என்றார் ஓரிகன். முதலாவது சரீரம் (எழுத்துபூர்வமான அர்த்தம்). இரண்டாவது ஆத்துமா (ஒழுக்கம் அல்லது நடத்தை பற்றிய அர்த்தம்), மூன்றாவது ஆவி (ஆவிக்குரிய அர்த்தம்) என்று மூன்று அர்த்தங்கள் உண்டு என்று கூறினார். ஓரிகனின் இந்த விளக்கத்துக்கு பிளேட்டோவின் தத்துவம் காரணமாக இருந்தது. சரீரம், ஆத்துமா, ஆவி என்று மூன்று கூறுகளை மனிதன் கொண்டிருப்பதாக வேதத்தில் இல்லாததை தத்துவஞானியான பிளேட்டோ போதித்தான். இந்த Tricotamist கருத்தை வேதத்தில் பார்க்க முடியாது. இந்தவித சிந்தனைப் போக்குக்கு ஓரிகன் அடிமையாயிருந்தார். இந்துமதம், ரோமன் கத்தோலிக்க மதம் போன்றவற்றின் கலாச்சாரத்தாலும், போதனைகளாலும் பாதிப்படையாமல் தள்ளி நிற்பது எத்தனை அவசியம் என்பதை விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்து மதப் போதனைகளை வைத்து கிறிஸ்தவ விளக்கம் கொடுக்க முயல்கிறவர்களைப் போலவே அன்றைக்கு ஓரிகன் தன் வாழ்வில் பெருந்தவறைச் செய்தார். வேதத்தின் ஒவ்வொரு பகுதியிலும், வசனத்திலும் இந்த மு‍றையிலான மூன்றுவித அர்த்தங்களைப் பார்க்க முயன்ற ஓரிகன் எழுத்து பூர்வமான அர்த்தம் கொடுப்பதைவிட ஒழுக்க நடத்தைகான போதனை இருக்கிறதா என்று பார்ப்பதே மிக அவசியம் என்று நம்பினார். இந்தமுறையில் வேதத்திற்கு விளக்கம் கொடுத்து தன்னுடைய இறையியல் கோட்பாடுகளை ஓரிகன் வளர்த்தபடியால் அவருடைய இறையியல் போதனைகள் வேதத்தின் எழுத்து பூர்வமான அர்த்தத்தோடு தொடர்புடையதாக இருக்கவில்லை.

வேத வசனங்களில் ஆழமான அர்த்தத்தைப் பார்க்க முயன்ற ஓரிகனின் வேதவிளக்க முறை அலகோரிக்கல் (Allegorical) வேதவிளக்க முறை என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உருவகப்படுத்தல் என்பது இதற்குப் பொருள். இது என்ன என்று நாம் விளங்கிக் கொள்வது அவசியம். உருவகம் என்பது இரண்டு அர்த்தங்களைக் கொண்ட ஒரு கதை. கதையின் முதலாவது அர்த்தம் நேரடியான, வெளிப்படையான அர்த்தம். இரண்டாவது அர்த்தம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அர்த்தம். இந்து சமயப் புராணக்கதைகள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்ததே. ஒரு வரலாற்று நூலில் நான் வாசித்த, இந்த உருவகப்படுத்தலை விளக்கும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். – “மூன்று மனிதர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்க உணவு தயாரித்தார்கள்”. மூன்று மனிதர்கள் தங்களுடைய பிள்ளைகளின் பசியைப்போக்க உணவு தயாரித்தார்கள் என்பது இவ்வசனத்தின் நேரடியான விளக்கம். அதேநேரம், இந்த வசனத்தில் மறைத்து‍ வைக்கப்பட்டுள்ள ஒரு இரகசிய அர்த்தம் இருக்கிறது என்று சான் சொல்லலாம். அதாவது, திரித்துவக் கடவுறரே மூன்று மனிதர்கள் என்றும், திருவிருந்தே உணவு என்றும், பிள்ளைகள் சபையைக் குறிப்பதாகவும் நான் அர்த்தம் சொல்லலாம். கதையின் விளக்கத்தின்படி, திரித்துவ அங்கத்துவர்கள் மூவரும் சபையில் ஆத்மவிரத்தியை வளர்க்கும்படி திருவிருந்தை ஏற்படுத்தினார்கள் என்பதே விளக்கம் என்று நான் அர்த்தம் சொல்லலாம். ஓரிகன் வேத வசனங்களுக்கும் அதில் காணப்படும் கதைகளுக்கும் இந்த முறையிலேயே விளக்கம் கொடுத்தார். வேத வசனத்தின் எழுத்து பூர்வமான அர்த்தத்தை ஓரிகன் நிராகரிக்காவிட்டாலும் இந்தமாதிரியான ஆவிக்குரிய அர்த்தமே மிகவும் முக்கியமானது என்று கருதினார்.

இதே முறையில்தான் இன்று தமிழ் கிறிஸ்தவ போதகர்களில் அநேகர் வேதவிளக்கம் கொடுத்து வருகின்றனர். இந்துசமய தத்துவங்ளுக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கும் சிலர் இதையே செய்துவருகின்றனர். கெட்ட குமாரனின் கதையில் அவனுடைய தகப்பன் மனந்திருந்தி வரும் மகனுக்கு கொடுத்த மோதிரத்திற்கும், விலை உயர்ந்த வஸ்திரத்திற்கும், பாதணிகளுக்கும் ஆத்மீக விளக்கம் ‍அளிக்கும் அநேக போதகர்களை நாம் அறிந்திருக்கிறோம். இந்த மாதிரியான உருவகப்படுத்தும் முறை கர்த்தருடைய வார்த்தையையே சிதைத்துவிடும் மிக மோசமான முறையாகும். கிரேக்க தத்துவ ஞானிகள் இந்த வகையிலேயே தங்களுடைய கடவுளர்களைப்பற்றி விளக்கம் கொடுத்தனர். அதையே இன்று இந்து சமயத்திலும் காண்கிறோம். ஓரிகன் பின்பற்றிய இந்த வேதவிளக்க முறை பல தவறான போதனைகளை உருவாக்கவே வழிவகுத்தது. படைப்பில் இரண்டு விதங்கள் இருப்பதாகவும், உலகத்தில் உள்ள எல்லோரும் இரட்சிப்பை அடைவார்கள் என்றும், விழுந்துபோன தூதர்களும் இரட்சிப்பை அடைவார்கள் என்றும் பல தவறான விளக்கங்களைக் கொடுத்தார் ஓரிகன். கர்த்தருடைய வேதத்தை உருவகப்படுத்தும் முறை மிக மோசமானதும் ஆபத்தானதுமாகும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஒரிகனின் இன்னுமொரு போதனை கத்தோலிக்க மதத்திற்கு பிற்காலத்தில் பேருதவி செய்வதாக இருந்தது. ஒரிகன் பிதாவும், குமாரனும் வெவ்வேறான தனித்தன்மை கொண்டவர்கள் என்று விளக்கினார். இக்காலத்தில்தான் ரோமன் கத்தோலிக்கனான செபிலியசின் (Sabellius) செபிலியனிசம் (Sabellianism) என்ற போதனை பரவிக் கொண்டிருந்தது. செபிவியன் கடவுளில் பிதா, குமாரன் ஆவி என்று மூன்று ஆட்கள் இருக்கிறார்கள் என்ற வேத போதனையை நிராகரித்தது. கடவுள் ஒருவர் என்று கூறாமல் அவர் ஒரே ஆள் (only one person) என்று விளக்கினான் செபிலியன். குமாரனும், ஆவியும் ஆட்கள் அல்ல என்றும், பிதாவின் நடத்தைகளை வேறுவிதமாக விளக்கும் ‍வெறும் தத்துவங்களே என்றும் செபிலியனிசம் போதித்தது. இதனால் இதை மொடலிசம் (Modelism) என்றும் மொனாக்கியனிசம் (Monarchianism) என்றும் அழைப்பார்கள். வேறு சிலர், தெய்வீகத் தன்மை இயேசுவில் வந்திறங்கியதாலேயே இயேசுவால் பிதாவின் கட்டளைகளைச் ‍செய்ய முடிந்தது என்றும் போதித்தனர். செபிலியனிசத்தை முழு மூச்சாக எதிர்த்த ஒரிகனுடைய திரித்துவப் போதனைகள் ஒரளவுக்கு மட்டுமே வேதத்தை ஒத்திருந்தன. தத்துவம் ஒரிகனின் சிந்தனைகளைப் பெருமளவுக்கு பாதித்து அவருடைய வேதவிளக்கங்களை மாறுபடுத்தின. நித்தியத்திலிருந்து இருந்த தெய்வீக வார்த்தை பிதாவிடமிருந்து புறப்பட்டதாக விளக்கினார் ஒரிகன். அதுவரைக்கும் அவருடைய போதனை சரியே. ஆனால், வார்த்தை பிதாவிடத்திலிருந்தே தெய்வீகத்தை அடைந்ததாகவும், வார்த்தை பிதாவைவிட ஓரளவு குறைந்த தெய்வீகத்தன்மையையே கொண்டிருந்ததாகவும் விளக்கமளித்தார். இதே முறையிலேயே பரிசுத்த ஆவியைப்பற்றியும் விளக்கினார் ஒரிகன். வார்த்தை (இயேசு) நித்தியத்திலிருந்து இருந்தது என்ற ஒரிகனின் போதனை பின்னால் 4ம் நூற்றாண்டில் தோன்றிய ஏரியனின் தவறான போதனைகளை எதிர்க்க நைசீன் கவுன்சிலுக்கு (325) உதவியது.

திருச்சபையின் கோட்பாடுகளைத் தவறாது பின்பற்றுவதாகக் கூறிய ஒரிகன் வேதத்தின் பல போதனைகளை கண்மண் தெரியாத விதத்தில் தத்துவரீதியாக சிந்தித்து விளக்க ஆரம்பித்தார். இம்மாதிரியான சிந்தனை அவருடைய வேத விளக்கங்களைப் பெரிதும் மாசுபடுத்தி, இவர் ஒரு போலிப்போதகனோ என்று மற்றவர்கள் கேட்கும்படிச் செய்தது. ஒரிகனின் வாழ்க்கையிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. எவ்வளவுதான் நாம் கிறிஸ்துவை உயிருக்குயிராக நேசித்தாலும் வேதத்திற்கு கட்டுப்பட்டே நாம் வேத விளக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் தெளிவாக நேரடியாக போதிக்கும் உண்மைகளை சத்தியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வேத வசனங்களை வேதத்தோடு ஒப்பிட்டுப்படித்து அறிந்து கொள்ளாமல் அதனை உருவகப்படுத்தி நினைத்ததை சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஒரிகன் விட்ட பெருந்தவறு வேதத்தை எழுத்து பூர்வமாக புரிந்து கொள்ளாமல் உருவகப்படுத்த முனைந்ததுதான். இந்த முறையில் வேத விளக்கமளிக்கும் வழக்கம் பிற்காலத்தில் திருச்சபையைப் பெரிதும் பாதித்தது. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கான அத்திவாரமும் ஒரிகன் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s