சாதிகள் இல்லையடி பாப்பா!

பாரதியார் பாடிய பாடலில் சில வரிகள் இவை – “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”. கிறிஸ்துவை அறிந்திராத பிராமணனான பாரதிகூட சமுதாய சீரழிவுக்கு சாதிகள் எந்தளவுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அறிந்து வைத்திருந்தான். சாதிகள் சமுதாயத்திற்கு செய்யும் தீங்கை விளக்கிப் பாடிய, எழுதிய அநேக தமிழ் கவிஞர்கள், அறிஞர்கள் இருக்கிறார்கள். சாதிகள் தமிழ் சமுதாயத்தைப் பிடித்துள்ள ஒரு பெரும் எய்ட்ஸ் வியாமி. அதை எதிர்த்துப் பல போராட்டங்களை சமூக சீர்திருத்தவாதிகள் நடத்தியிருந்தபோதும் அது அழிக்க முடியாத ஒரு நோயாக சமுதாயத்தைத் தொடர்ந்து சீரழித்துக் கொண்டிருக்கிறது. சாதி, தமிழ் சமுதாயத்தை மட்டுமல்லாமல் இந்திய சமுதாயத்தையே அழித்துக் கொண்டிருக்கும் ஒரு வியாதி. அதற்குக் காரணம் மதம் என்ற பெயரில் இந்திய சமுதாயத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஆரிய பார்ப்பனியம்தான். (இன்று அதற்கு இந்து மதம் என்று பெயர்). எங்கெல்லாம் ஆரிய (இந்து) மதம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சாதியைப் பார்க்கலாம். ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் மத்தியிலும், மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியிலும், கடல் கடந்து பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்கள், தமிழர்கள் மத்தியிலும் சாதியின் ஆட்சியைப் பார்க்கலாம். ஒரு முறை நான் அமெரிக்க பத்திரிகையில் வந்த விளம்பரம் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அது ஒரு அணுவிஞ்ஞானியான அமெரிக்க இந்தியர் கொடுத்திருந்த விளம்பரம். திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கம் அந்த இந்தியர் தனக்கு எந்த சாதியில், எந்த நட்சத்திர‍த்தில் பிறந்த, எந்த தோஷமுமில்லாத பெண் தேவை என்று அந்தப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார். அணு விஞ்ஞான அறிவாலோ, மேலைத்தேசத்தாலோகூட அந்த மனிதனின் சாதிப்பற்றை அகற்ற முடியவில்லை. சமுதாயத்தை ஆட்டிவைக்கும் சாத்தானின் ஆவி சாதி.

மனித குலம் இந்த உலகத்தில் சாதிப்பிரிவுகளோடு பிறக்கவில்லை என்பதை கிறிஸ்தவர்களான நாமறிவோம். ஒரே குலம் ஒருவனே தேவன் என்பது கிறிஸ்தவத்தின் போதனை. ஆனால், சாதி எப்படிப் பிறந்தது? மனித குலத்தின் ஒரு பகுதியினர் தங்களுடைய ஆதிக்கத்திற்காக இதை சமுதாயத்தில் நுழைத்தார்கள் என்பது வரலாறு கூறும் விளக்கம். இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த ஆரியர்கள் மத்தியில் சாதிப்பிரிவுகள் இருந்தன. அவர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சமுதாயத்தில் நான்கு சாதிமுறைகளை இவர்கள் வகுத்தார்கள். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பதே இந்த சாதிமுறைகள். இந்த நான்கில் முதலாவதாக இருக்கும் பிராமணர்களே சமுதாயத்தில் முதலிடத்தைப் பெற்று, பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்த சாதியாகக்கருதப்பட்டு சமுதாயத்தில் வைதீகக்காரியங்களைச் செய்யும் அதிகாரமுள்ளவர்களாக இருந்தனர். ஆரம்கத்தில் இது தொழில் முறையாக மட்டுமே இருந்தது. பின்பு அது ஏனைய சாதிகளைவிட உயர்ந்த சாதியாகக் கருதப்பட்டு மற்ற சாதியினரை விலக்கி வைத்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதியாக மாறியது. இதற்கு அடுத்த ஸ்தானத்திலேயே நாடாளும் அரசர்களான சத்திரியர்களும், வணிகர்களான வைசியர்களும், உழைத்துத் தொழில் செய்யும் சாதாரண மக்களான சூத்திரர்களும் இருந்தனர். இந்த நான்கும் புற்றீசல்கள்போல் வளர்ந்து ஆயிரக்கணக்கான சாதிகளாக உருவெடுத்து சமுதாய மக்களில் ஒருவரை இன்னொருவரிடம் இருந்து பிரித்து வைக்கும் பேய்களாக குடிகொண்டன. அதிலும் பிராமண சாதி மற்ற சாதிகளைவிட உயர்ந்த தெய்வீக சாதியாக உருவெடுத்ததோடு ஏனைய சாதியினர் கிட்டவும் நெருங்கமுடியாத புனிதமான சாதியாகக் கருதப்பட்டது. இதனால்தான் பிராமணர்களின் மனுநீதியில், வேறு சாதிகளின் நிழல்பட்டுவிட்டால்கூட பிராமணன் உடனடியாகத் ‘தீட்டுக்கழிக்கும்’ முறை காணப்படுகின்றது. பிராமணன் இவ்வாறு சமுதாயத்தை ஆளும், ஆண்டான் சாதியாகமாற, சாதிகளின் கடைசிப்படியில் இருந்த சூத்திரர்கள் இழிவானவர்களாகக் கருதப்பட்டு மற்ற சாதியினரால் தள்ளிவைக்கப்பட்டு தாழ்ந்த சாதியினராக (தலித்துக்கள்) கருதப்படும் நிலையும் சமுதாயத்தில் தோன்றியது. ஆரியர்கள் இதற்கெல்லாம் உருவம் கொடுத்து, இவற்றைக் கடவுள் ஏற்படுத்திய புனித முறையாக தங்களுடைய வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் வர்ணித்து ஆரியமத தர்மமாக (இந்து தர்மம் என்பார்கள் இந்துத்துவாக்கள்) இந்திய சமுதாயத்தில் அறிமுகப்படுத்தினர். இதுவே பின்பு தமிழ்நாட்டிற்கும், ஸ்ரீலங்காவிற்கும், மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும், வேறு எங்கெல்லாம் இந்தியர்களும், தமிழர்களும் போனார்களோ அங்கெல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கெல்லாம் ஆரிய பிராமணர்கள் தங்களுடைய ஆரிய (இந்து) தர்மத்தை நிலைநாட்டி சமுதாயத்தின் உயிர்நாடியான ஆத்மீகத்துறையை ஆண்டுவருகிறார்கள். இதனால்தான் ‍அமெரிக்காவுக்குப் போய் அணுவிஞ்ஞானியாக வளர்ச்சியடையும் ஒரு கிராமத்து இந்தியனால் பல்விளக்குவதற்குப் பயன்படுத்திய வேப்பங்குச்சியை தூக்கி எறிந்துவிட்டு டூத்பிரஷ்சைப் பயன்படுத்த முடிந்தாலும், சாதியைத்தூக்கி எறிய முடியாமலிருக்கிறது. அது அவனுடைய இருதயத்தை ஆளும் கொடியவியாதி.

ஆரிய (இந்து) தர்மமும், சாதிப்பிரிவும் ஒன்றொடொன்று இணைந்து பிரிக்க முடியாத சகோதரர்கள். சாதிப்பிரிவுகளில்லாத ஆரிய (இந்து) மதத்தைப் பார்க்க மடியாது. ஆரிய (இந்து) மதத்தின் அடையாளமில்லாத சாதிகளையும் பார்க்க முடியாது. இது ஆரிய பிராமணர்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்காக வகுத்து வைத்துள்ள விதிமுறை. இதனால்தான் சாதிகளை வெறுத்த புத்தன் ஆரிய தர்மத்தை விட்டு வெளியே வந்து இன்னுமொரு தர்மத்தைத் தேட முயன்றான். ஆரிய தர்மத்தில் இருந்து பிரிந்த சீக்கியர்களின் மதத்தில் சாதிப்பிரிவைப் பார்க்க முடியாது. இந்த சாதிக்கொடுமை தாங்க முடியாததால்தான் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் (தலித்துக்கள்) தங்களுடைய சமுதாய விடுதலைக்காக பிற மதங்களை நாடிச் செல்லும் நிலமை ஏற்பட்டது. சாதிப்பிரிவுக்கு இடம்கொடுக்காத கிறிஸ்தவத்திலும் அவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டது.

சமீபத்தில் இன்டர்நெட்டில் தமிழ் முரசு பத்திரிகையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஷ்வதிகள் சொல்லியிருந்த கருத்தை வாசிக்க நேர்ந்தது. “அந்தணர்கள் புனிதமானவர்கள், அரசர்கள்கூட அவர்களுடைய கால்களைக் கழுவியிருக்கிறார்கள். ஆகவே, பசுவுக்கும், பிராமணனுக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டும்” என்பது அந்தக் கருத்து. அவர் தொடர்ந்து “அந்தணர்கள் கோபம் கொண்டால் உலகத்துக்கே நல்லதில்லை” என்றும் பேசியிருக்கிறார். நான் இதுவரை சொன்னது எத்தனை உண்மை என்பதை மதிப்புக்குரிய சங்கராச்சாரியாரின் பேச்சு நிரூபிக்கிறதல்லவா? ஆரிய (இந்து) தர்மம் வருணாச்ரம பார்ப்பனிய, சாதிப்பிரிவுகளின் மூலம் சமுதாயத்தை ஒடுக்கி அடிமை நிலையில் வைத்திருக்கிறது. அத்மீகத்துறையை மட்டுமல்லாமல் அது சமூக பொருளாதாரத்துறைகளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

கிறிஸ்தவர்களான நாம் இதுபற்றி ஏன் இந்தளவுக்கு சிந்திக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? சகோதரர்களே, ஆரிய (இந்து) மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் எத்தயை அடிமைத்தனமான சிந்தனையை ஆன்மீகம் என்ற பெயரில் சுமந்து வாழ்கிறார்கள் என்பதை நாம் விளங்கிக்கொண்டால்தான் அவர்களுக்கு விடுதலை கொடுக்கக்கூடிய இயேசுவின் சுவிசேஷத்தை நாம் நல்ல முறையில் அவர்களுக்கு அனுதாபத்துடன் சொல்ல முடியும். பிராமணருக்கும், பிராமணரல்லாத எல்லா சாதியினருக்கும் இயேசுவின் கிருபை இன்று தேவையாயிருக்கின்றது. சாதிப்பிரிவுகளிலிருந்தும், ஆண்டான், அடிமை என்ற பிரிவினையிலிருந்தும், பல தெய்வ வழிபாட்டிலிருந்தும், மூட நம்பிக்கைகளிலிருந்தும் அவர்களுக்கு மீட்பு இன்று அவசியம் தேவைப்படுகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நாயைவிடக் கேவலமாக நடத்தும் சிந்தனைப்போக்கை உருவாக்கி இருக்கும் சாதிவெறியில் இருந்து தமிழ் மக்கள் விடுதலை அடைய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு இன்று அவசியம் தேவை.

வருனாச்ரம சாதிக்கொடுமையைப்பற்றி நாம் எழுதுவதற்கு இன்னுமொரு காரணம் கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிறவர்கள் மத்தியிலும், சில கிறிஸ்தவ சபைப்பிரிவுகள் மத்தியிலும் சாதிச்சிந்தனைகள் தொடரும் கொடுமையை வன்மையாகக் கண்டிப்பதற்காகவும்தான். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் C.S.I சபைகள் சிலவற்றிலும், ஏனைய சபைப்பிரிவுகளிலும், சாதி அடிப்படையில் சபை ஊழியங்கள் நடந்து வருகின்றன. “என்னுடைய சபையில் நாடார்கள் அதிகம். அதனால்தான் சபையில் பணம் புரளுகிறது” என்று சொன்ன, நாடார்கள் மத்தியில ஊழியம் செய்யும் ஒரு போதகரை எனக்குத் தெரியும். சாதி பார்த்து ஊழியம் செய்கிறவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது என்பதை நான் அடித்துச்சொல்ல விரும்புகிறேன். அவர்கள் கிறிஸ்துவையும், வேதத்தையும் நிந்திப்பவர்கள். சாதி பார்த்து திருமணம் செய்யும் ஒருவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும். தேவனுடைய திருச்சபையிலும், பரலோகத்திலும் சாதிக்கு இடமில்லை. சாதிக் கொடுமைகள் வேண்டாத் என்று பாரதி மட்டும் சொல்லவில்லை. கிறிஸ்தவ வேதம் அதை அடியோடு வெறுக்கிறது, அருவருப்போடு பார்க்கிறது. யூதர்கள் இணைந்து வாழ மறுத்த சமாரியருக்கு சுவிசேஷத்தை அறிவித்து, அவர்களுக்கு மத்தியில் இருந்த இனப்பாகுபாடாகிய மதில் சுவரை இடித்து, இரு இன விசுவாசிகளையும் ஒரே சபைக்குள் சேர்ந்து வாழச் செய்தவர் இயேசு. யூதரல்லாத விசுவாசிகளோடு உணவருந்தத் தயங்கிய பேதுருவை எல்லோருக்கும் முன்பாகக் கடுமையாகக்கண்டித்துத் திருத்தினான் பவுல் அப்போஸ்தலன். ஏனெனில் கிறிஸ்தவத்தில் அதற்கு இடமில்லை.

சகோதரனே! நீ உன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சாதிப்பற்றையும், உயர்வு தாழ்வு பார்க்கும் கொடூரமான சிந்தனையையும் உன் உள்ளத்தில் இருந்து வேரோடு அகற்றி இருக்கிறாயா? அது உன்னில் சாகும்வரை உனக்கு பரலோக வாழ்க்கையின் அனுபவம் கிமைக்காது என்பதை மறக்காதே. “வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள் வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப்பூனை; அவை பேருக்கொரு நிறமாகும். எந்த நிறமிருந்தாலும் – அவை யாவும் ஒரே தரமன்றோ? இந்த நிறம் சிறிதென்றும் – இது ஏற்றமென்றும் சொல்லலாமோ?” என்று அங்கலாய்த்தான் மகாகவி பாரதி. அவனால் ஏக்கத்தோடு பாடமட்டுந்தான் முடிந்தது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s