வாசிப்பின் அவசியத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா? இன்று பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லாமலிருக்கும் காரணத்தினால்தான். இது என் மனதில் நானே வளர்த்துக் கொண்டிருக்கும் கற்பனை என்று எண்ணி விடாதீர்கள். இதை ஒத்துக்கொண்ட அநேக கிறிஸ்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். நம்மக்களுக்கு வாசிக்கும் பழக்கம் ஏன் இல்லாமலிருக்கிறது என்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தேன். அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டேன். நம்முடைய பெற்றோர் நாம் படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்படுவது சகஜம். முழுநேரமும் கல்லூரிப்படிப்புக்கு உதவும் நூல்களை நாம் வாசிப்பதை அவர்கள் பார்க்க ஆசைப்படுவார்கள். டியூஷனுக்குப் போவதையும் ஊக்கப்படுத்துவார்கள். இதையெல்லாம் செய்து நாம் எப்படியாவது பாஸ் செய்து பட்டம் பெற்று வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வாழ்க்கை இலட்சியம். இதனால் அவர்கள் நம்மை எப்போதுமே வேறு எந்தப்புத்தகங்களையும் வாசிக்க உற்சாகப்படுத்துவதில்லை, வாசிக்கவும் விடுவதில்லை. அது வீண் வேலை என்பது அவர்களுடைய எண்ணம்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன். சிறு வயதில் இருந்தே எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடிருந்தது. கல்லூரியில்கூட அதை நான் பாடமாக எடுத்திருக்கிறேன். இலக்கிய ஆர்வத்தால் நான் பல நல்ல நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவுதான் எனக்கின்றிருக்கும் தமிழறிவு என்று நம்புகிறேன். இலக்கியத்தைப் படித்து நான் நேரத்தை வீணடிப்பதாகத்தான் என் பெற்றோர்கள் நினைத்தார்கள். முடிந்தவரை நான் இலக்கிய நூல்களை வாசிப்பதையும்கூட தடுத்துப் பார்த்தார்கள். அப்போது நான் வாசித்த எல்லாமே பயனுள்ளவை என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும் கையில் கிடைத்த நல்ல நூல்களையெல்லாம் வாசித்துத் தள்ளியிருக்கிறேன். இந்த வாசிக்கும் பழக்கம்தான் (வாசித்த புத்தகங்கள் அல்ல) பின்னால் நான் கிறிஸ்துவை அறிந்துகொண்ட பின்பு என்னுடைய இறையறிவுக்கு பெரிதும் உதவியது என்று கூறுவேன். ஆனால், கல்லூரியில் படிக்கும்போது பாடப்புத்தகத்தை மட்டும் வாசித்துப் பாஸ் செய்துவிட்டு அதற்குப்பிறகு நாளிதழ்களில் முதல் பக்கத்தையும், கடைசிப்பக்கத்தையும் மட்டும் படிப்பவர்களாகத்தான் இன்று அநேக தமிழர்கள் இருக்கிறார்கள். போதாததற்கு டெலிவிஷன் கொஞ்சநஞ்சமிருக்கும் வாசிக்கும் ஆர்வத்தையும் இல்லாமல் செய்துவிடுகிறது.
வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால் மனிதனால் சிந்திக்க முடியாது. அறிவு வளர வாசிப்பு அவசியம். வாசிக்க வாசிக்க மனிதனுடைய சிந்தனை வளரும். ஸ்பர்ஜன் போன் பெரிய பிரசங்கிகளைப் பார்த்து நாம் பிரமிப்பது வழக்கம். எத்தனைப் பெரிய பிரசங்கி என்று சொல்லாதவர்கள் இல்லை. ஆனால், வாசிக்கும் பழக்கத்தைத் தன்னில் வளர்த்துக்கொண்டு 12,000 நூல்களை அவர் தன்னுடைய சொந்த நூலகத்தில் வைத்திருந்ததை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஸ்பர்ஜன் வாசிக்காமல் சோம்பேரியாக இருந்து மேதையாகவில்லை. மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd Jones) என்ற வேல்ஸ் தேசத்து பிரசங்கியைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் நூல்களை வாசிப்பதில் மிகவும் அக்கறை எடுத்தவர். அவருக்கு வேகமாக வாசிக்கும் பழக்கம் இல்லாமலிருந்தபோதும் பல நூல்களை ஒரே சமயத்தில் வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பியூரிட்டன் பெரியோர் எழுதிய நூல்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. எந்தப் பழைய புத்தகக்கடையில் அந்தப் புத்தகங்கள் இருந்தாலும் அவற்றை லொயிட் ஜோன்ஸ் வாங்கி வாசிக்கத் தவறவில்லை. ஸ்பர்ஜனும், மார்டின் லொயிட் ஜோன்ஸீம் தங்கள் வாழ்க்கையில் இறையியல் கல்லூரிகளைப் பார்க்கவில்லை. சொந்தப்படிப்பும், இடையறாத வாசிப்புமே அவர்கள் இறையியல் ஞானத்தை வளர்த்துக்கொள்ள உதவியது.
உலகத்தில் கிறிஸ்தவம் தலை நிமிர்ந்து இருந்த காலத்திலெல்லாம் கிறிஸ்தவர்கள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக 16-ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தின் கொடூரமான ஆளுகையின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்ட திருச்சபை வேத சத்தியங்களை விளக்கிப்போதிக்கும் அநேக நூல்களை வெயியிட்டது. லூதரும், கல்வினும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் அருமையான நூல்களை எழுதி வெளியிட்டு திருச்சபைக்குப் பணி செய்தனர். மக்கள் அவற்றை ஆர்வத்தோடு வாசித்து வளர்ந்தார்கள். இதேபோல 17-ம் நூற்றாண்டுகளில் பியூரிட்டன் போதகர்கள் நூற்றுக்கணக்கில் எழுதி வெளியிட்ட தலை சிறந்த நூல்கள் அக்காலத்தில் கிறிஸ்தவம் எத்தகைய உயர்ந்த, சிறந்த நிலையில் இருந்தது என்பதை விளக்குகின்றன. இந்த இரண்டு காலப்பகுதியிலும் ஆத்துமாக்கள் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாகவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறந்த நிலையில் இருந்தார்கள் என்பதையும் அறிகிறோம். இக்காலத்தில் வேதத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக ஆத்துமாக்கள் வாசித்த நூலாக ஜோன் பனியன் எழுதிய மோட்ச பிரயாணம் இருந்திருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நூல்களால்தான் இன்றும் நாம் சீர்திருத்தப்போதனைகளை அறிந்து சீர்திருத்த சபைகளை அமைக்க முடிந்திருக்கிறது. விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் இந்தக்காலத்தில்தான் வெளியிடப்பட்டு இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக்காலப்பகுதிகளை வரலாற்றில் இருந்து அகற்றிவிட்டால் இன்றும் கிறிஸ்தவம் இருண்ட காலத்தில்தான் இருந்திருக்கும்.
கிறிஸ்தவர்கள் வாசிக்காமல் இருப்பது கொடுமை. அதிலும் போதகர்களும், ஊழியக்காரர்களும் வாசிக்காமல் இருந்தால் அவர்கள் செய்யும் ஊழியத்தால் பயனடையப் போகிறவர்கள் ஒருவருமே இல்லை. புத்தகம் வாங்கப் பணம் இல்லை என்று கூறி பல ஊழியக்காரர்கள் வாசிப்பதைத் தட்டிக்கழித்துவிடுகிறார்கள். மூன்று வேளை சாப்பிடும் பணத்தில் மிச்சம் பிடித்தாவது நல்ல நூல்களை வாங்கி வாசிக்கும் தியாகத்தைச் செய்யத் தெரியாதவர்கள் ஊழியத்தை விட்டு விடுவது நல்லது. வேதத்தையும் அதை விளங்கிக் கொள்ள உதவும் நல்ல நூல்களையும் வாசிக்காவிட்டால் ஆத்துமாக்களுக்கு நாம் உணவூட்ட முடியாது என்பது தெரியாத மனிதர்கள் ஊழியத்துக்கு வருவது பேராபத்து. தமிழ் கிறிஸ்தவ உலகத்தை இன்று பிடித்திருக்கும் தலைவலியே அத்தகைய மனிதர்கள் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டிருப்பதுதான்.
வாசிக்காத கிறிஸ்தவன் விசுவாசமுள்ள கிறிஸ்தவனாக வாழ்வான் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. நாம் அன்றாடம் பல தடவை வாசிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் கர்த்தர் நமக்கு வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார். வாசிக்கும் வழக்கமோ, அதற்கு நேரமோ இல்லாதவர்கள் வேதத்தைப்படிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? வேதத்தில் இருக்கும் அநேக சத்தியங்களை முழுமையான அறிந்து கொள்வதற்கு நாம் அதிக காலம் வேதத்தைப் படிக்க வேண்டும். அத்தோடு வேத சத்தியங்களை விளங்கிக்கொள்ள உதவும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டம். அப்படிப் படிக்காவிட்டால் வேத ஞானமில்லாது, கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சிகுன்றி சபைக்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பிரயோஜனமுமில்லாது இருந்து விடுவோம். இந்த நிலையிலேயே இன்று அநேக தமிழ் கிறிஸ்தவர்கள் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கென்றே பிறந்ததுபோல் இன்றைக்கு இறைபோதனையே இல்லாது உணர்ச்சிகளுக்கு மட்டும் தூபம் போடும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைகளும் இருக்கின்றன. இது தமிழ் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி குன்றிய தன்மையை எடுத்துக் காட்டுகிறது. அத்தோடு இன்று தமிழ் கிறிஸ்தவ புத்தகக்கடைகளில் இருக்கும் நூல்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஏனைய மொழிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது கிறிஸ்தவ நூல்கள் என்ற பெயரில் தமிழில் இருக்கும் அநேக நூல்கள் சுண்டல் சுற்றிக் கொடுப்பதற்குத்தான் உதவும். அதேவேளை குறைந்தளவிலான நல்ல நூல்களும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.
வாசிக்கும் பழக்கம் இல்லாமல் கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக வாழ முடியாது என்பதை இதுவரை பார்த்தோம். இன்றுள்ள தமிழ் கிறிஸ்தவர்களை எப்படி இந்தப் பழக்கத்திற்கு உட்படுத்துவது? போதகர்களும், ஊழியக்காரர்களும் முதலில் நல்ல நூல்களை ஆர்வத்தோடு பலமுறை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய போதனைகளில் நீங்கள் வாசித்த நல்ல நூல்களை ஆத்துமாக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நூல்களின் பெயரையும், எழுதியவரையும் குறிப்பிட்டு அவருடைய கருத்துக்களை பிரசங்கத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படிச் செய்வது ஆத்துமாக்களின் ஆர்வத்தைத் தூண்டி அந்த நூல்களை அவர்கள் வாங்கிப் படிக்க வகை செய்யும். அத்தோடு ஒவ்வொரு சபையும் ஒரு நூலகத்தை (Library) வைத்திருக்க வேண்டும். நல்ல ஆவிக்குரிய நூல்களை மக்கள் இரவல் வாங்கி வாசிக்க இது உதவி செய்யும். மேலும், ஒரு புத்தக மேசையை (Book Table) சபையில் வைத்து, குறைந்த விலையில் ஆத்துமாக்கள் அந்தப் புத்தகங்களை சொந்தமாக வாங்கி வாசிக்க உதவி செய்ய வேண்டும். எல்லா நூல்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்து அவை நல்ல பலனளிப்பவையாக இருந்தால் மட்டுமே சபை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். என்னைக் கேட்டால் சீர்திருத்தப் போதனைகளை அளிக்கும் நூல்களைத் தவிர வேறு நூல்களை வாங்கிப் படிக்காமல் இருப்பது நம்முடைய ஆத்மீக வாழ்க்கைக்கு நல்லது. மோசமான போதனைகளை அளிக்கும் நூல்கள் ஆத்துமாக்களின் இருதயத்தை நாசமாக்கிவிடும். இன்று தமிழில் நல்ல நூல்கள் முத்துக்களைப் போலத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளன என்பதையும் மறந்துவிடக்கூடாது. ஆகவே, இருப்பதையும் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நாமே நம்முடைய ஆத்மீக வளர்ச்சிக்கும், சபை வளர்ச்சிக்கும் எதிரிகளாக இருந்து விடுவோம். “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்” (மாற்கு 14:13) என்று வேதம் சொல்லுகிறது. வாசிக்காமல் எப்படி சிந்திக்க முடியும்!