சிந்திக்க வேண்டிய நேரம் இது!

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து கிறிஸ்தவர்களை சிந்திக்கும்படிச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்கள் சிந்திப்பதை எப்போதோ ஆற்றில் கைகழுவிவிட்டது பழைய கதை. அதற்கு இப்போது நேரம் வந்திருக்கிறது. அப்படி நாம் சிந்திக்கும்படியாக முதல்வர் என்ன செய்திருக்கிறார்? என்று கேட்கிறீர்களா. ஆம்! முதல்வர் ஒருவிதத்தில் நமக்கு நன்மையே செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இதை விளக்குவது அவசியம்.

தமிழகத்தில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே கிறிஸ்தவம் தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கின்றது. அங்கும் இங்கும் எதிர்ப்புகள் இருந்து வந்திருந்தபோதும், பெரியளவுக்கு யாரும் கிறிஸ்தவத்தை எதிர்த்ததில்லை. இந்து சமயத்தில் கிறிஸ்துவைக் காணலாம் என்றெல்லாம் சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் பொய்ச் செய்தி பரப்பி வந்தபோது அவர்கள் மேல் யாரும் கல்லெறிந்ததில்லை. இந்துக்கள் அமைதியாகத்தான் இருந்திருக்கிறார்கள். பெந்த‍கொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் மூளையை வீட்டில் வைத்துவிட்டு அக்கிரகாரங்களுக்குப் போய் பேய் விரட்டும் வேலையில் ஈடுபட்டபோதும் (இதை ஒரு பெந்தகொஸ்தே போதகர் சின்னத்திரையில் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்) ரொம்பவும் அமைதியாகத்தான் இருந்திருக்கிறார்கள். பெரிய கூட்டங்களை நடத்தி பிணி தீர்க்கிறோம் என்ற பெயரில் சமுதாயத்தில் வசதிகுறைந்த அநேகரைப் பலர் ஏமாற்றி வந்தபோதும் அமைதியாக இருந்திருக்கிறார்கள். வடதேசங்களில் கிறிஸ்தவர்களுக்கு பல தொல்லைகள் ஏற்பட்டபோதும் தமிழகம் அமைதி காத்தது. ஆனால், இன்று அந்த அமைதி போய்விட்டது. இதுவரை நான் சொன்ன காரியங்களை கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் செய்து வந்தவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள்தானா? என்ற கேள்வியை நானே கேட்கவேண்டியிருக்கிறது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தவர்கள் ஒருநாளைக்கு பொறுமையிழந்துதான் போவார்கள். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு செய்திருப்பதை நான் வரவேற்பதாக எவரும் நினைத்துவிடக்கூடாது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஆனால், கிறிஸ்தவன் என்று முறையில் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டிருக்கிற முறையை ஆராயும்படித்தான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அரைநூற்றாண்டு காலமாக நடந்துவரும் கிறிஸ்தவ ஊழியங்களை எண்ணிப்பாருங்கள். இந்த ஊழியங்களின் மூலமாக கிறிஸ்தவம் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது? நாம் ஆனந்தப்படும்படியாக வேதபூர்வமான திருச்சபைகள் எத்தனை உருவாகியிருக்கின்றன? கர்த்தரின் வேதத்திற்கு மட்டும் மதிப்புத்தந்து போதிக்கும் இறையியல் கல்லூரிகள் எத்தனை உருவாகி இருக்கின்றன? வேத அறிவிலும், பரிசுத்தத்திலும் வளர்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி வாழ்ந்துவரும் பிரசங்கிகள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டுப்பார்த்தால் முழிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நம்மை ஆனந்தப்படுத்தாது. நெஞ்சில் வலியைத்தான் ஏற்படுத்தும். அரைநூற்றாண்டுகளாக சுவிசேஷத்தை வைத்துக்கொண்டு எதைஎதையோ செய்து வந்தவர்கள்தான் தமிழகத்தில் அதிகமே தவிர மார்டின் லூதரைப்போலவும், ஜோன் கல்வினைப் போலவும், ஜோன் நொக்ஸைப்போலவும், ஜோன் பனியனைப்போலவும், சார்ள்ஸ் ஸ்பர்ஜனைப் போலவும் கிறிஸ்துவுக்காக மட்டும் உழைத்து நேர்மையாகப் பிரசங்கம் செய்து சபை வளர்த்தவர்கள் தொகை மிகவும் குறைவானது. வேதத்தை சத்தியமாகப் போதிக்க வேண்டியது அதைக் கையிலெடுத்துக் கொள்கிறவர்களின் வேலை. அதைத் தவறாகப் பயன்படுத்தினால் கர்த்தரையே கலங்கப்படுத்துவது போலாகும். இந்த வேலையைத்தான் தமிழகத்தில் உள்ள இறையியல் கல்லூரிகளின் பெரும்பாலாவை அரைநூற்றாண்டுகளாக செய்து வந்திருக்கின்றன. இக்கல்லூரிகளின் பெயர்களை நான் சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரியும். தனி ஊழியம், சொந்த ஊழியம் என்று ஊழியங்களை ஆரம்பித்துக் கொண்டு கூட்டங்களைக்கூட்டி அற்புதங்கள் செய்வதாக மக்களை ஏமாற்றிப் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்து வரும் சுவிசேஷப் பிரசங்கிகள் நிறைந்த நாடுகளில் தமிழகத்திற்க முதலிடம் கொடுக்கலாம். இவர்கள் அரைநூற்றாண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்திருப்பதோடு தங்களுடைய சீடப்பிள்ளைகளையும் உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். இந்த இன்டஸ்ட்லி தமிழகத்தில் இன்று பெரிய இன்டஸ்ட்ரியாக இருக்கிறது. இனி இவர்களுடைய பாடு என்னவாகப் போகிறது? இதையெல்லாம் எவராவது மறுக்க முடியுமா? கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் பார்த்துப் பேசியும், சிரிக்கும்படியும் நடந்து கொண்டு பணத்தாலையால் போல்ஸ் கையில் அகப்பட்டு சிறைக்குப்போன போலிப்பிரசங்கிகளைப் பற்றி நாம் பத்திரிகைகளில் வாசிக்கவில்லையா? அரைநூற்றாண்டுகளாக தமிழகத்தில் இந்த வகையில்தான் ஊழியங்கள் பிரமாதமாக நடந்து வந்திருக்கின்றன.

கர்த்தரை அறியாத தமிழக மக்கள் மத்தியில்தான் லஞ்சமும், சாதிவெறியும், பணத்தாசையும், பக்கத்தில் இருப்பவனைத் தன்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், பணத்திற்காக சபையைப்பிரித்துக் கொள்ளுகிறவர்களையும், ஊழியத்தைப் பயன்படுத்தி உல்லாசமாக வாழும் ஊழியக்காரர்களையும், கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரில் கிறிஸ்தவ நாடார்கள், கிறிஸ்தவ உடையார்கள், கிறிஸ்தவ வெள்ளாளர்கள் என்று சாதிப் பெயரில் சபை நடத்தி வருபவர்களையும் கிறிஸ்தவர்கள் மத்தியில் எப்படிப்பார்க்க முடிகிறது? ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் தொகை அப்படியொன்றும் மதமாற்றத்தால் வளர்ந்துவிடவில்லை என்று சிலர் புள்ளி விபரங்களைத் தந்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், கிறிஸ்தவர்கள் அல்லதவர்கள் மத்தியில் இருக்கும் அத்தனைப் பாவங்களும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறவர்கள் மத்தியில் இருந்தால் கிறிஸ்தவம் உண்மையில் எப்படி வளர முடியும்?

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் நல்லதில்லைதான். எந்தவொரு அரசும், நாடும் அத்தகைய சட்டங்களைக் கொண்டுவந்து தனி மனிதனின் சுதந்திரத்துக்கு தடைபோட்டுவிடக்கூடாது. ஆனால், மெய்க்கிறிஸ்தவத்தின் பெயரில் இன்று நடந்து வரும் ஊழல்களை இந்தச் சட்டம் அகற்றிவிடுமானால் அது நல்லதுதானே? இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் காரியங்கள் கர்த்தருக்கே பொறுக்காத காரியங்களாக இருக்கும்போது அவை மேலும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படலாமா? முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகத்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் இன்னுமொரு பெரிய உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தச் சட்டம் வருவதற்கு அனுமதித்திருக்கும் நம்முடைய கர்த்தர் தமிழகத்தில் நடக்கும் காரியங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். கர்த்தருக்குத் தெரியாமலும், அவருடைய அனுமதி இல்லாமலும் எதுவும் எப்போதும் நடந்துவிட முடியாது. இந்த மதமாற்றத் தடைச்சட்டம் தமிழகத்தில் எப்போதும் தொடர்ந்து இருந்துவிடும் என்று சொல்ல முடியாது. அரசு மாறலாம். இன்னொரு அரசு ஆட்சிக்குவந்து அந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம். அனைத்தையும் ஆளுகின்ற நம்முடைய கர்த்தருடைய சித்தப்படியே எல்லாமே எப்போதும் நடக்கும். கொஞ்சக் காலத்துக்கு இந்த சட்டம் இருக்கத்தான் போகிறது. சில தொல்லைகளை மெய்க்கிறிஸ்தவர்கள் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், போலி ஊழியங்கள் தொடர்ந்து நடக்கலாமா? அரசியலில் ஒரு காலையும், சபையில் ஒரு காலையும் வைத்துக்கொண்டு இரண்டையும் குழப்பிக் கொண்டிருக்கும் பிசப்புக்களுடைய செயல்கள் தொடரலாமா? இறையியல் கல்லூரிகளில் இறையியல் படிக்கப்போய் இறைவனையே இழந்துபோன் இறையியல் மாணவர்களின் தொகை இனியும் வளரலாமா? அத்தகைய இறையியல் கல்லூரிகள் தொடர்ந்தும் செயல்படலாமா? அற்புதம் செய்வதாக சொல்லி மனித உணர்ச்சிகளுக்கு தூபம்போட்டு மோசடி செய்துவருபவர்கள் தொடர்ந்தும் இருக்கலாமா? கூடாது! கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் இவர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்குமானால் அதில் எனக்கு கொள்ளை சந்தோஷம்தான்.

நண்பர்களே! இன்றுமொரு உண்மையை எண்ணிப்பாருங்கள். எங்கெங்கெல்லாம் மெய்க்கிறிஸ்தவத்திற்கு ஆபத்தேற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் அது வளர்ந்து வந்திருக்கின்றது. சீனாவிலும், ரஷ்யாவிலும் வேறு பல நாடுகளிலும் போலிக்கிறிஸ்தவர்கள்தான் தொல்லைகளுக்கு அஞ்சி விலகிப்போயிருக்கிறார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பயந்ததில்லை. விலகி ஓடியதில்லை. தங்களுடைய பணிகளைக் குறைத்துக்கொண்டதில்லை. அவர்களுடைய வாழ்க்கை நெறியையும், நெஞ்சுரத்தையும், கடவுள் பக்தியையும் கண்ட கடவுளை அறியாத மக்கள் கடவுளிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதை அரசாலோ, எந்த மனிதனாலுமோ தடுக்க முடியவில்லை. இந்த வகையில்தான் 16ம் நூற்றாண்டுக்கு முன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய அரசுகளால் ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவர்கள் சிறையிலிடப்பட்டார்கள். உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இருந்தாலும் அவர்களுடைய விசுவாசத்தை ஒருவராலுத் எடுத்துப்போட முடியவில்லை. இதுதான் மெய்விசுவாசம், மெய்க்கிறிஸ்தவம். இதே நிலமைதான் முதலாம் நூற்றாண்டில் ரோமராஜ்யத்தின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், கிறிஸ்தவகள் தொகை தொடர்ந்து ஐரோப்பிய கத்தோலிக்க மத அரசுகளாலும் கிறிஸ்தவத்தை அழிக்க முடியாதபோது கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தால் அதை இல்லாமல் செய்துவிட முடியுமா? அப்படி நாம் நினைப்பது தவறு. இச்சட்டத்தால் மெய்க்கிறிஸ்தவர்கள் மேலும் துணிவுடன் ஊழியத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் தொகை வளரும். அவர்களுடைய விசுவாசம் மேலும் உறுதி அடையும். இருவரை வேதப்புத்தகத்தை ஓரளவுக்கு அலட்சியமாக வாசித்தவர்கள்கூட இனி மேலும் ஊக்கத்துடன் அதை வாசிப்பார்கள். துன்பங்கள் மெய்க்கிறிஸ்தவத்தை வளரச் செய்கின்றன. அதேநேரம் போலிகளின் குட்டு வெளிப்பட்டுவிடும். அவர்கள் சுயநலத்துக்காக கூட்டம்கூடி மக்களை ஏமாற்றி வந்தார்கள். இனி அப்படி செய்பவர்களுக்கு ஆபத்து. புத்தியில்லாமல் அக்கிரகாரத்துக்குள் நுழைந்து பேய்விரட்டும் புத்தி அவர்களுக்கு இனி வராது. மோசடிக்காரர்களும், மாயக்காரர்களும் இதில் இனி பணம் வராது என்று அறிந்து விலகி ஓடி விடுவார்கள். அவர்களுக்கு சிறைக்குப்போவதும், துன்பத்தை அனுபவிப்பதும் பிடிக்காது. ஆக, மொத்தத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒருவிதத்தில் நமக்கு நன்மைதான் செய்திருக்கிறார்.

மெய்க்கிறிஸ்தவ நண்பர்களே! நீங்கள் இனி செய்ய வேண்டியது என்ன தெரியுமா? சிந்தித்து புத்தியோடு செயல்பட வேண்டும். முதலில் நாம் மனந்திரும்ப வேண்டும். அரை நூற்றாண்டுகளாக நமக்குக் கொடுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை நாடு வீணடித்ததில் நமக்கும் பங்குண்டு. கிறிஸ்தவர்கள், பிரசங்கிகள், சுவிசேஷகர்கள் என்ற பெயரில் புல்லுருவிகள் நம்மத்தியில் உலவியதற்கு நாமும் பொறுப்பாளிகள். நெகேமியாவும், தானியேலும் தங்களுடைய மக்களுடைய பாவங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்ததுபோல் நாமும் மனமாற்றத்துடன் ஜெபிக்க வேண்டும். இத்தகைய போலிக்கூட்டங்களுக்கு இனி இடம் கொடுக்க மாட்டோம், கர்த்தரின் வழியை மீறி நடக்க மாட்டோம் என்று நாம் ஜெபிக்க வேண்டும். சபைகள் இதை இன்று செய்ய வேண்டியது அவசியம். யார் எப்படி இருந்தால் என்ன? என்ற மனநிலையோடு நாம் வாழ்ந்ததால்தான் நம்மத்தியில் போலிகள் உருவாக நேர்ந்தது. நாமும், நமது மக்களும் மனம்மாறி ஜெபித்தால் கர்த்தர் ஜெபம் கேட்பார்.

சுவிசேஷ ஊழியத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டிய நேரமிது. சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடும்போது கிறிஸ்து யார்? அவர் கொடுக்கும் வாழ்க்கை எத்தகையது என்பதை விளக்குவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைச் சரிவர செய்ய வேண்டுமானால் நீங்கள் வேதத்தைப் படித்து சுவிசேஷ செய்தியை வேதபூர்வமாக சொல்வதெப்படி என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் தவறானவிதத்தில், சுவிசேஷம் சொல்கிறோம் என்ற பெயரில் கர்த்தருக்கு போலித்தனமாக ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபடக்கூடாது. உங்களடைய பேச்சைக்கேட்டு மனமுறுகி யாராவது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று சொல்லிவிட்டு பின்பு மனம் மாறிவிட்டால் உங்கள் பாடு ஆபத்துத்தான். எவருடைய மனத்தையும் நம்மால் மாற்ற முடியாது. அப்படி மாற்றும் முயற்சியிலும் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே நம்முடைய பணியாக இருக்க வேண்டும். மெய்யாக கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்கள் உலகமறிய திருமுழுக்கு பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

திருவிழாபோல் பெருங்கூட்டம் போட்டு எல்லோருக்கும் தெரிய திருமுழுக்கு கொடுப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக சுவிசேஷக் கூட்டங்களில் அதைச் செய்யக்கூடாது. சுவிசேஷம் சொன்ன விநாடியே கர்த்தரிடம் யாரும் வந்துவிடுவார்கள் என்று வேதம் போதிக்கவில்லை. சுவிசேஷத்தைக் கேட்டவர்கள் உண்மையிலேயே இயேசுவை விசுவாசித்திருக்கிறார்களா என்று அறிந்துகொள்ள அவர்களை நாம் சோதித்துப்பார்ப்பது அவசியம். இன்று அநேகர் இதைச் செய்வதில்லை. சுவிசேஷம் கேட்பவர்கள் கூட்டம் முடிவதற்கு முன்பாக கர்த்தரிடம் வந்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவர்களைக் கையுயர்த்த வைக்கும் செயல் வேதத்தில் நாம் பார்க்காத ஒரு முறை. இந்த முறைக்கு முடிவு கட்ட வேண்டும். இனி இதைச் செய்பவர்களுக்கு கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தாலும் ஆபத்து காத்திருக்கிறது.

இது சபையைக் கட்டி வளர்க்க வேண்டிய காலம். போலிகள் இனியும் சபைகளில் தொடர்ந்தும் இருக்க மாட்டார்கள். போலிகள் சபைகளை நாடி வரவும் மாட்டார்கள். அது நல்லதே. நல்ல போதகர்கள் இனி மெய்யான விசுவாசிகளை வேதத்தைப் பயன்படுத்திக் கட்டி எழுப்ப வேண்டும். அவர்களை வேதத்தால் பெலப்படுத்த வேண்டும். அவர்களில் இருந்து சபைக்குத் தேவையான நல்ல ஊழியக்காரர்களை தயார் செய்ய வேண்டும். எதிர்காலத்திற்கு நாம் இப்போதே திட்டமிட வேண்டும். ஒவ்வொரு மெய்ச்சபையும் இறையியல் கல்லூரியாக மாற வேண்டும். ஒவ்வொரு மெய்ப்போதகரும் வேதத்தில் அதிக கவனம் செலுத்திப் படித்து ஆத்துமாக்களை அந்த அறிவில் வளரச் செய்ய வேண்டும். ஆவியின் வல்லமையும், வேத ஞானமும், பரிசுத்தமும், கட்டுக்கோப்பும் கொண்ட நல்ல திருச்சபைகள் நாட்டுக்குத் தேவை. கிறிஸ்தவர்கள் துன்பங்களை சந்திக்க வேண்டிய காலங்களில் அத்தகைய சபைகறே அவர்களுக்குக் கைகொடுக்கும்.

இது கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சியிலும் ஈடுபட வேண்டிய காலம். நாம் போகமுடியாத இடங்களுக்கு இலக்கியம் போக முடியும். அதற்கும் கூட ஒரு காலத்தில் தடை வந்துவிடலாம். இன்று நல்ல பிரசங்கத்திற்கான பஞ்சம் எங்கும் இருப்பதுபோல் நல்ல நூல்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழில் உப்புச்சப்பில்லாத பெந்த‍கொஸ்தே போதனைகளைக் கொண்ட நூல்கள் குப்பைகளாக மலிந்திருக்கும் இக்காலத்தில் இருக்கும் நல்ல நூல்களை வாங்கி வாசித்து மற்றவர்களையும் வாசிக்கச் செய்ய வேண்டும். வாசிப்பு சிந்தனையை வளர்க்கும். சிந்திக்காதவனும், சிந்திக்க மறுப்பவனும் மனநோயாளியைப் போன்றவர்கள். அவர்களால் யாருக்கும் எந்தப்பயனும் இல்லை. அதிகம் உணர்ச்சிவசப்படும் நம்மக்கள் சிந்திப்பதில்லை. இது சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்.

இது தைரியத்தோடு தொடர்ந்து சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய காலம். அரசாங்கமோ, நாடோ நாம் கர்த்தருக்கு அடிபணிவதைத் தடை செய்ய முடியாது. சுவிசேஷத்தைச் சொல்லுவது மதமாற்றச் செய்கையில்லை. அதன் மூலம் மக்களடைய மனமாற்றத்தையே கிறிஸ்தவம் நாடுகிறது. சுவிசேஷத்தை நம்மால் சொல்லாமல் இருக்க முடியாது (அப்போஸ்தலர் 4). பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், புத்தியோடும், ஜெபத்தோடும் நாம் சுவிசேஷ ஊழியத்தைத் தொடர வேண்டும். அதைத்தான் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் செய்தார்கள். நமது பெருமைக்காகவும், நம்மை வளர்த்துக்கொள்வதற்காகவும் நாம் சுவிசேஷம் சொல்லவில்லை. அது நம்முடைய இரத்தத்தில் ஊறியிருக்கும் பணி. பரிசுத்த ஆவியின் வல்லமை‍க்காக நாம் இன்று ஜெபிக்க வேண்டும். ஜெபமில்லாமலும், ஆவியானவரின் துணை இல்லாமலும் ஊழியம் செய்ய முடியாது. ஆவியின் வல்லமையும், மெய்யான பரிசுத்தமும், தேவபயமும் நம்மத்தியில் இருந்திருந்தால் கிறிஸ்துவின் பெயர் நம்நாட்டில் கெட்டிருக்காது. இருக்கும் நிலமை மாறவேண்டும். மெய்க்கிறிஸ்தவத்தையும், மெய்ச்சபைகளையும் நாடறிந்து கொள்ளும்படி நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமிது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s