சீர்திருத்த பாப்திஸ்து

சீர்திருத்த பாப்திஸ்து யார்? என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது இன்று அவசியமாகிறது. உலகெங்கும் உருவாகி வளர்ந்துவரும் சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் இன்று தமிழுலகிலும் தீப்பொறிபோல் தோன்றி வளர்கின்றன. அவற்றின் ஆரம்பம் சிறிதாக இருந்தாலும் எதிர்காலம் நிச்சயம் பெரியதாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. “சீர்திருத்த பாப்திஸ்து” என்ற பெயரில் காணப்படும் இரு வார்த்தைகளில் இச்சபைகள் பற்றிய விளக்கம் அடங்கியுள்ளது. பெயரில் என்ன இருக்கின்றது? அது அவசியமில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால், நம் பெயர் நம்மை மற்றவர்களுக்கு இனங் காட்டுவது போல் “சீர்திருத்த பாப்திஸ்து” என்ற பெயர் அச்சபைகள் எதை விசுவாசிக்கின்றன என்பதை அனைவருக்கும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நெஞ்சுயர்த்திப் பறைசாற்றுகின்றது. இவ்வார்த்தைகள் எதை விளக்குகின்றன என்று பார்ப்போம்.

சீர்திருத்தம்

“சீர்திருத்தம்” என்ற வார்த்தை பதினாறாம் நூற்றாண்டில் உலகில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தத்தையும், அத்திருச்சபை சீர்திருத்தத்தால் வெளிக்கொணரப்பட்ட சத்தியங்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். பதினாறாம் நூற்றாண்டில் மார்டின் லூத்தர், ஜோன் கல்வின் போன்றோரைப் பயன்படுத்திக் கர்த்தர் கத்தோலிக்க அடக்குமுறையின் கீழிருந்த மக்களுக்கு கிறிஸ்துவின் மூலம் விடுதலை தந்து, மறுபடியும் அனைவரும் வேதத்தை வாசித்து அதன் போதனைகளைப் புரிந்து நடக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடக்குமுறையால் மக்கள் வாசித்துப் பயன்பெறமுடியாதிருந்த வேதம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு எங்கும் விநியோகிக்கப்பட்டது. இதனால் சத்தியத்தை அறிந்து மக்கள் ஆத்மீக விடுதலை அடைந்தனர். இதனையே “சீர்திருத்தக்காலப்பகுதி” என்று சபை வரலாறு வர்ணிக்கின்றது. இக்காலப்பகுதியில் மறைந்து போயிருந்த சத்தியங்கள் மறுபடியும் வெளிப்படையாக மக்கள் அறிந்து கொள்ளும்படிப் போதிக்கப்பட்டன. வேதம் மட்டுமே அதிகாரமுள்ளது; அனைத்திற்கும் போதுமானது, கிருபையினால் மட்டுமே கிறிஸ்துவுக்குள் விசுவாசம், விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்பது போன்ற அழியாத வேதசத்தியங்கள் வெளிப்படையாக மறுபடியும் இக்காலப்பகுதியில் போதிக்கப்பட்டன. இப்போதனைகளின் அடிப்படையில் ஐரோப்பா முழுவதும் திருச்சபைகளும் நிறுவப்பட்டன. இச்சபைகள் “சீர்திருத்த சபைகள்” என்ற பெயரையும் பெற்றன. லூத்தர், கல்வின், நொக்ஸ் போன்ற தலைசிறந்த சீர்திருத்தப் பிரசங்கிகளையும் இச்சபைகள் போதகர்களாகக் கொண்டிருந்தன.

இச்சபைச்சீர்திருத்தம் தொடர்ந்து நிவைத்திருந்து எதிர்கால சந்ததியும் பயன்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் பதினேழாம் நூற்றாண்டில் கர்த்தரால் எழுப்பப்பட்ட திருச்சபைத் தலைவர்கள் பெரிதும் உழைத்தனர். ஜோன் ஓவன், தொமஸ் குட்வின், ரிச்சட் பெக்ஸ்டர், சிப்ஸ், ஜோன் பனியன் போன்றோர் இவர்களில் சிலர். திருச்சபையின் போதனைகளும், மக்களின் வாழ்க்கையும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்தியதால் “பியூரிட்டன்” (Puritan) என்ற பெயர் இவர்களுக்குச் சூட்டப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே திருச்சபை வாழ்வுக்கும் வளத்துக்கும் அவசியமென்று கருதி இப்பெருமக்கள் விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் எழுதித் தொகுத்து வெளியிட்டனர்.

இவர்களின் வழியில் பதினெட்டாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கர்த்தர் எழுப்பிப் பயன்படுத்திய போதகரும் பிரசங்கியும் சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் பெருமகன் ஆவார். இதே சத்தியங்களை விசுவாசித்து இந்தியா, பர்மா ஆகிய நாடுகளில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சபை நிறுவிய சான்றோர்களாக வில்லியம் கேரி, அடோனிராம் ஜட்சன், ஹென்ரி மார்டின் போன்றோர் இருந்தனர். இவர்கள் வழியில் வேதம் மட்டுமே, கிருபை மட்டுமே, விசுவாசம் மட்டுமே என்ற சீர்திருத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்து உலகின் பல நாடுகளிலும் இன்று வளர்ந்து வரும் சபைகளே சீர்திருத்த சபைகள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றன.

பாப்திஸ்து

பாப்திஸ்து என்ற பெயர் பொதுவாக ஒரு விசுவாசிக்கு விசுவாசத்தின் அடிப்படையில் முழுக்கு ஞானஸ்நானத்தை அளிக்கும் சபைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், பாப்திஸ்து என்ற பெயரில் உலவும் அனைத்து சபைகளும் இதை விசுவாசிக்கின்றன என்று கூறிவிட முடியாது. சார்ள்ஸ் பினியின் போதனையைப் பின்பற்றி அர்ப்பண அழைப்புக் கொடுத்து கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுப்பவர்களுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் “பாப்திஸ்துகளும்” இருக்கிறார்கள். இவர்கள் மனிதனின் இரட்சிப்பு, அவன் கிறிஸ்துவுக்கு எடுக்கும் “தீர்மானத்தில்” தங்கியிருப்பதாக நம்புகிறார்கள். இந்த பாப்திஸ்துகளுக்கும் சீர்திருத்த பாப்திஸ்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அத்தோடு, மனிதஞானத்தின்படி கர்த்தருக்கு முன் அந்நிய அக்கினியை ஆராதனையில் பயன்படுத்தும் பாப்திஸ்துகளும் இருக்கிறார்கள். ஆடலும், பாடலும், கூத்தும் இன்று இத்தகைய சபைகளில் ஆராதனையை அலங்கரிக்கின்றன. பெண்கள் பிரசங்கிப்பதும், சபைக் கூட்டங்களை நடத்துவதும் இவர்கள் மத்தியில் சகஜம். ஆகவே, பாப்திஸ்து என்ற பெயரைக் கொண்ட எல்லோரும் வேதபூர்வமான சத்தியங்களை விசுவாசிக்கும் பாப்திஸ்துகள் என்று எண்ணிவிடக்கூடாது.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சீர்திருத்த பாப்திஸ்துகள் Particular Baptist என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இதற்குக் காரணம் இவர்கள் ஏனைய பொதுவான பாப்திஸ்துகளில் (General Baptist) இருந்து தம்மைப் பிரித்துக்காட்ட இப்பதங்களைப் பயன்படுத்தினர். பொதுவான பாப்திஸ்துகள் கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார் என்ற கோட்பாட்டை விசுவாசித்தனர். ஆனால், சீர்திருத்த பாப்திஸ்துகள் கிறிஸ்து குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார் என்ற போதனையை விசுவாசித்தனர், “Particular” என்ற பதம் இவ்விறையியல் போதனையை வலியுறுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டது. கிருபையின் போதனைகளில் ஒன்றான, கிறிஸ்து குறிப்பிட்ட மக்களுக்காக மரித்தார் என்பதையே இன்றயை சீர்திருத்த பாப்திஸ்துகளுத் விசுவாசிக்கின்றனர். “சீர்திருத்தம்” என்ற பதம் சீர்திருத்தக் காலப்பகுதியையும், அக்காலத்தில் உயிர் கொடுக்கப்பட்ட கிருபையின் போதனைகளையும் குறிப்பதால் இன்று சீர்திருத்த பாப்திஸ்து என்ற பெயரே பொதுவாக வழக்கிலிருக்கிறது.

சீர்திருத்த பாப்திஸ்துகள் விசுவாசிப்பதென்ன?

சீர்திருத்த பாப்திஸ்துகள் பொதுவாக விசுவாசிக்கும் சத்தியங்கள் சுருக்கமாகக் கீழே தரப்பட்டுள்ளன. இவையே சீர்திருத்தப் பாப்திஸ்துகளின் ஊழியத்தின் சிறப்புமிக்க அம்சங்களாக இருக்கின்றன:

1. வேதத்தின் அதிகாரம்

வேதம் மட்டுமே சகல அதிகாரத்தையும் கொண்ட கர்த்தருடைய வெளிப்படுத்தல். இதைத்தவிர வேறு எதன் மூலமும் கர்த்தரின் சித்தத்தை மனிதன் அறிந்து கொள்ள முடியாது. ஆகவே, வேதம் மனிதனின் சகல ஆத்மீகத் தேவைகளையும் நிறைவேற்றப் போதுமானது. இதனால் வேதபூர்வமான பிரசங்கத்திற்கு எப்போதும் சபைகளில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். வேதப்பகுதிகளுக்குத் தகுந்தவிளக்கமளித்து அவற்றின் அடிப்படையில் மட்டுமே போதனைகள் அளிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே சீர்திருத்த பாப்திஸ்துகள் 1689-ல் வெளியிடப்பட்ட பாப்திஸ்து விசுவாச அறிக்கையை சபையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வறிக்கை வேதசத்தியங்களைத் தொகுத்து முறைப்படுத்தி விளக்குகின்றது. இதை சபையார் படித்து வேத அறிவில் தம்மை வளர்த்துக் கொள்ள முடிகின்றது. போலிப்போதனைகளில் இருந்து தம்மைக்காத்துக் கொள்ள முடிகின்றது. அத்தோடு வினாவிடைப் போதனையையும் சபை முறையாக சிறார்களுக்கும், பெரியவர்களுக்கும் வழங்க வேண்டும். சபையின் திட்டங்கள், செயல்கள் அனைத்தும் வேதபூர்வமானதாக இருக்க வேண்டும்.

2. கர்த்தரின் இறை ஆண்மை

கர்த்தர் சர்வ வல்லமையுடையவராயும், அனைத்தையும் கொண்டு நடத்துகிறவராயுமிருக்கிறார். உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் தனது சித்தத்தின்படி தனக்காக குறிப்பிட்ட தொகை மக்களை இரட்சிக்கும்படித் தெரிந்து கொண்டிருக்கிறார். இவர்களை வேதம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அழைக்கின்றது. மனிதன் தன்னுடைய பாவத்தால், அதிலிருந்து விடுபடும் வல்லமையற்று கர்த்தரை அறியாதிருக்கிறான். கர்த்தரின் சித்தத்தின்படி எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளான். கர்த்தர் தனதுரு சுவிசேஷத்தின் மூலம் தாம் தெரிந்து கொண்டவர்களை மனித குலத்தில் இருந்து அழைத்து, பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்களுடைய கண்களைத் திறந்து, கிறிஸ்துவை அவர்கள் விசுவாசத்தின் மூலம் அறிந்து கொள்ளும்படியாகச் செய்கிறார். கிறிஸ்து, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காகத் தன்னைச் சிலுவையில் பலியாகத்தந்து, மரித்து, பின்பு உயிர்த்தெழுந்தார். ஆகவே, இரட்சிப்பு மனிதன் கிரியைகளின் மூலம் அடைய முடியாதப‍டி இலவசமாகத் தேவனுடைய ஈவாக வழங்கப்படுகிறது. இரட்சிப்பைப்பற்றிய இப்போதனையைக் கிருகையின் போதனை என்று பொருவாக அழைப்பார்கள்.

3. வேதபூர்வமான ஆராதனை

கர்த்தரை அவரது வார்த்தையின் அடிப்படையில் மட்டுமே ஆராதிக்க வேண்டும். அந்நிய அக்கினியை கர்த்தர் வெறுக்கிறார். வேதத்தில் இல்லாததையும், அது போதிக்காதவற்றையும் ஆராதனையில் நுழைக்கக்கூடாது. மனித உணர்ச்சிகளுக்குத் தூபமிடுவதாக ஆராதனை அமையக்கூடாது. மனித ஞானத்திற்கும், வேதம் கட்டளையிட்டுப் போதிக்காதவற்றிற்கும் ஆராதனையில் இடமில்லை; வேதம் கட்டளையிட்டுப் போதிப்பவற்றை மட்டுமே ஆராதனையில் பயன்படுத்த வேண்டும். இவ்வேத விதிகள் சில வேளைகளில் The Regulative Principle of Worship என்று அழைக்கப்படுகின்றது. வேதபோதனை, ஜெபம், சங்கீதம் மற்றும் கீர்த்தனைகளைப் பாடுதல் என்பவற்றை உள்ளடக்கியதாக திருச்சபை ஆராதனையும், குடும்ப ஆராதனையும் அமைய வேண்டும். அது ஆவியோடும், உண்மயோடும் கூடியதாக இருக்க வேண்டும். கர்த்தரை மட்டுதே மகிமைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

4. வேதபூர்வமான திருச்சபை

திருச்சபைக்கு முக்கியத்துவமளிப்பதாகவே கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. திருமுழுக்குப் பெற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களைக் கொண்டு ‍அமைந்ததே உள்ளூர் திருச்சபை. ஆகவே, கிறிஸ்தவர்கள் எந்நாட்டிலும் கூடுமானவரையில் திருச்சபை அங்கத்தவர்களாக இருப்பது அவசியம். திருச்சபை அங்கத்தவர்கள் வேத அடிப்படையில் திருச்சபைக்காரியங்களில் ஊக்கத்தோடு பங்குபற்றுபவர்களாக இருக்க வேண்டும். எந்த ஊழியத்தையும் கிறிஸ்தவர்கள் திருச்சபை மூலமாக செய்ய வேண்டும். தனி ஆள் ஊழியங்களையும், சபைக் கட்டுப்பாடற்ற நிறுவன ஊழியங்களையும் திருச்சபை அறியாது. திருச்சபைக்கே திருமுழுக்கையும், திருவிருந்தையும் அளிக்கும் உரிமை உண்டு. திருச்சபைகள் போதகர்கள் மூலம் வேதத்தை மட்டும் போதிப்பதோடு ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு சபை தூய்மையுள்ளதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டம். சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டு சபை நிறுவுதலும் திருச்சபையின் பெரும் பொறுப்பு. இவ்வுலகில் திருச்சபைகள் ஒருபோதும் பூரணமானதாக இருக்க முடியாதபோதும், அவை தனது ஆத்மீகத்தை இழந்ததாக இருக்கக் கூடாது. (மத். 18:15-20; 1 தீமோ. 3:15; எபி. 13:17).

சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் இன்று ஏன் அவசியம்?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே சுவிசேஷ சபைகள் (Evangelical Churches) பொதுவாக வேதத்தின் அடிப்படையில் போதிப்பதையும், திருச்சபைகளை நடத்துவதையும் கைவிட்டுவிட்டன. அநேகமானவை பெந்தகொஸ்தே இயக்கத்தினால் பாதிக்கப்பட்டு வேதத்தின் அதிகாரத்தில் தமது நம்பிக்கையை இழந்துவிட்டன. அந்நியபாஷை பேசுதல், சுகமளித்தல், தீர்க்கதிரிசனம் கூறல், கூத்துக்க, இசைவழி ஊழியம் என்று போய் மனித ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவற்றின் ஊழியங்களும் மாற்றி அமைக்கப்பட்டன. மெக்காவரனின் மனிதநல (Humanism) சபை வளர்ச்சிக் கோட்பாடுகளைப் (Church growth principles) பின்பற்றி அதன் ஊழியங்கள் அமையத் தொடங்கின. பெண்கள் பிரசங்கிப்பதும், போதிப்பதும் திருச்சபை ஊழியத்தில் வழமையாகி போதக ஊழியத்திற்கு மாசேற்படுத்தின. இத்தகைய ஆத்மீகக்குழப்பமுள்ள சூழ்நிலையில் வேதம் மட்டுமே அதிகாரமுள்ளது, அதன் வழியே சாலச்சிறந்தது என்று உறுதியுடன் கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காகப் பாடுபடும் சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் இன்று தமிழர் மத்தியில் தோன்றி வளர்வது அவசியம். பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சிறந்த நமது முன்னோர்களின் வழியில் நமது மக்களும் கிறிஸ்தவத்தின் சிறப்பறிந்து வாழ்வது அவசியம். இதற்குக் குறைந்த எதையும் நாம் ஏற்றுக்கொள்வது கர்த்தருக்கு மகிமையளிக்கும் செயலல்ல.

(சீர்திருத்த பாப்திஸ்துகள் விசுவாசிக்கும் சத்தியங்களைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள 1689 விசுவாச அறிக்கையைப் பெற்று வாசியுங்கள்.)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s