சீர்திருத்த விசுவாசம்

(இவ்வருடம் ஜனவரி மாத்தில் ஸ்ரீ லங்காவில் வெளியிடப்பட்ட நமது புதிய வெளியீடான “சீர்திருத்த விசுவாசத்தை” மூவர் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். சீர்திருத்த விசுவாசத்தைக்குறித்த இந்த முக்கியமான வெளியீட்டைப் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு உதவுமுகமாக இங்கே தந்திருக்கிறோம் -ஆசிரியர்)

அருள்செல்வன், கிருபை இலக்கியம், ஸ்ரீ லங்கா

நான் இந்து மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவின் கிருபையால்‍தேவனோடு தனிப்பட்ட உறவிற்குள்ளும், சபை ஐக்கியத்திற்கும் வந்தவன். என்னுடைய ஆரம்ப கால கிறிஸ்தவ ஜீவியத்தில் உணர்வுகளால் மட்டும் கிறிஸ்துவைத் தேடியும் அதில் திருப்தி கொண்டும், அதிகம் கேள்விகள் கேட்காமல், ‘உன் சுயபுத்தியில் சாயாதே’ என்ற வசனத்தை தவறான வழியில் பயன்படுத்தி, தெளிந்த புத்தியோடு வேதவசனங்களை ஆராயாமல் துதி, உபவாச ஜெபம் என்று அவற்றில் மட்டும் அதிகமான நேரத்தை செலுத்தும்படி வழிநடத்தப்பட்டவன் நான். இவற்றைச் செய்தவர்களும் அறியாமையினாலேயே அப்படிச் செய்தார்கள் என்பதை நான் அறிவேன்.

இவ்வாறான நிலையில் சீர்திருத்தம் என்றால் என்ன? சீர்திருத்தவாதிகள் யார்? கல்வின் யார்? என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இன்றும் பல ஆரம்ப விசுவாசிகள் இவற்றை அறிந்திராதிருப்பதில் ஒன்றும் ஆச்சரியதில்லை. ஏனெனில், தமிழில் இவற்றை விளக்கும் ஆக்கங்கள் அரிது. ஆனால், கடந்த நான்கு வருடமாக ஒரு சீர்திருத்த சபையில் ஐக்கியம் கொண்டு, சீர்திருத்தப் போதனைகளைக் கேட்டு, அது சம்பந்தமான நூல்களை வாசித்து வருகிறேன். இக்காலங்களில், சிலர் சீர்திருத்தவாதத்தை தவறாக விமர்சித்து, சீர்திருத்தவாதிகள் மத்தியில் உள்ள பிரிவுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதைக் கவனித்தவேளையில்தான் நீங்கள் எழுதிய ‘சீர்திருத்த விசுவாசம்’ என்ற நூலை நான் வாசிக்க நேர்ந்தது. இது தேவனுடைய வழிநடத்தல் என்றுதான் விசுவாசிக்கிறேன். இன்று பல விசுவாசிகள், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏன் இத்தனை சபைப்பிரிவுகள் என்று அங்கலாய்த்து குழம்புவதைக் காண்கிறபோது, தேவனை அறியாத மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் எழுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்த நூலில் போலிப் போதனைகள் உருவாகியவிதத்தையும், அவற்றிற்கெதிராக மெய்க்கிறிஸ்தவர்கள் எடுத்த நடவடிக்கைகளையும் வாசிக்கின்றபோது இன்று அத்தகைய போலிப்போதனைகளுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாதவர்களாய் நாம் வாழ்ந்து வருவதைக் குறித்து என்னால் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்றைய கிறிஸ்தவ உலகில் மெய்க்கிறிஸ்தவனை அடையாளம் காணவும், மெய்யான உபதேசத்தைக் கண்டு கொள்ளவும், போலிகளைக் குறித்து எச்சரிக்கை அடையவும் கிருபையின் கோட்பாடுகள் பயன்படுவதை இந்நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. கல்வின் எழுதிய The Institute of Christian Religion என்ற நூல் கிருபையின் கோட்பாடுகளை மட்டுமன்றி, வேதபூர்வமான திருச்சபை சீர்திருத்தத்தையும் விளக்குவதை இந்நூலின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது.

மேலும், சீரான வேதபூர்வமான ஆராதனைக் கோட்பாடுகள் பற்றி முறையாக விளங்கிக் கொள்ள உதவுகின்ற இந்நூல் தமிழ் கிறிஸ்தவ உலகில் நல்ல ஆரோக்கியமான ஆராதனை முறையை தோற்றுவிக்க உதவும் என்று நம்புகிறேன். வேதம் கற்றுத்தருகின்ற ஊழியத்தையும், நற்செய்திப் பணியையும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. இந்த முறையில் இந்நாட்களில் ஊழியங்கள் நடைபெறுமானால் பல தேவையற்ற குற்றச் சாட்டுகளைக் கிறிஸ்தவ சபைகள் தவிர்த்துக் கொள்ள முடியும்.

இந்நூலை நான் மட்டுமன்றி என் மனைவியும் ஆர்வத்தோடு வாசித்தார். தேவனுடைய இரட்சிப்பு, இயேசு யாருக்காக மரித்தார்? என்பவை பற்றிய போதனைகளில் அவர் மேலும் தெளிவு பெறமுடிந்தது.

மொத்தத்தில் “சீர்திருத்த விசுவாசம்” என்ற இந்நூல் மனிதனுடைய நிலைமையையும், தேவனுடைய தெரிவையும் வேதபூர்வமாக எடுத்துக் காட்டி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. சத்தியத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் வழிநடத்தல், தெளிந்த புத்தியோடு சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ளவும், போலிகளை இனம் காணவும் உதவும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

ஜேம்ஸ் சுப்பிரமணியன் B.Eng, சென்னை, தமிழ்நாடு

இந்த நூலுக்கும் ஆசிரியர் எழுதியுள்ள ஏனைய நூல்களுக்கும் இடையில் ஓர் வேறுபாட்டைக் காண்கிறேன். அது பாதகமானதொரு வேறுபாடல்ல, சாதகமானதே. இந்த நூலைப்படித்தபோது ஆசிரியரின் நூலைப் படிக்கிறேன் என்ற எண்ணத்தைவிட அவரோடு உரையாடுவதைப் போன்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அந்தளவுக்கு மொழிநடை நாம் நடைமுறையில் பயன்படுத்துகிற முறையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. உதாரணத்திற்கு, “கேட்டவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்குவதுபோல ஞானஸ்நானம் கொடுத்து . . .”, என்ற வரிகளைக் கூறலாம்.

கல்வினிச ஐங்கோட்பாட்டின் அவசியத்தையும், சபைகளில் தொடர்ந்து செயற்படுத்த வேண்டிய சீர்திருத்ததையும் விளக்குவதற்கு கவனத்தோடு இந்நூல் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த விசுவாசத்தின் முக்கியத்துவத்தை விளக்குகின்ற அதேவேளை ஆசிரியர் கல்வினிச ஐங்கோட்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தத் தவறவில்லை.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள சபைகளின் நிலமையை ஆராய்ந்தறிந்து, எங்கெல்லாம் சீர்திருத்தம் காணப்பட வேண்டும் என்பதை ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார். சீர்திருத்த சபையைச் சார்ந்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிற சிலர் கல்வினிச ஐங்கோட்பாட்டோடு நின்றுவிடுகிறார்கள். அதுவும் மனிதன் முழுமையான பாவி, என்ற பல்லவியை மட்டுமே பாடிக்கொண்டிருக்கிறார்கள். இரட்சிப்பை அடைய மனிதன் தன்னுடைய பாவநிலையை அறிய வேண்டியது அவசியமானதுதான். ஆனால், அவன் விசுவாசியான பிறகு எப்படி வாழ வேண்டுமென்பது இன்று அனேக சபைகளில் போதிக்கப்படுவதில்லை. இந்த அவல நிலையை ஆசிரியர் தெளிவாக விளக்கி எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் என்பது இரட்சிப்பின் போதனை, வாழ்க்கைநெறி, சபை ஆகிய அனைத்திலும் காணப்பட வேண்டும் என்று விளக்கியிருப்பது அவசியமானது. அதுமட்டுமல்லாமல், “பெந்தகொஸ்தேகாரர்களைத் திட்டிக்கொண்டிருப்பது மட்டும் சீர்திருத்தமாகிவிடாது” என்ற ஆசிரியரின் வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

சீர்திருத்த போதகர்கள் தங்களுடைய பிரசங்க மேடைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆசிரியரின் வார்த்தைகளை நான் வரவேற்கிறேன் “இந்த உலகத்தில் நாம் பரிபூரண நிலையை எட்ட முடியாது ஆகவே, சபை சீர்திருத்தம் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” என்ற எண்ணத்தில் பலர் தங்களுடைய போதக ஊழியங்களை நடத்திவருகிறார்கள். ஆனால், சபை பரிபூரணத்தை இந்த உலகத்தில் அடைய முடியாவிட்டாலும் பரிபூரணமாகிய அந்த இலக்கை நோக்கி நடைபோடுவதையே தனது இலட்சியமாக எப்போதும் கொண்டிருக்க வேண்டும் என்ற கர்த்தரின் கட்டளை அவர்களுக்குத் தெரிவதில்லை.

சீர்திருத்த போதனைகளை அறியாதவர்களையெல்லாம் சபைளில் பிரசங்கிக்க விடுவது சில கல்வினிசப் போதகர்களுக்கு தொழிலாக இருக்கின்றது. நாமே பிரசங்கித்துக்கொண்டிருந்தால் சபை விசுவாசிகள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தவறான எண்ணத்தில் இவர்கள் இதைச் செய்கிறார்கள். “மனிதனுக்குப் பயப்படுவது என்பது சீர்திருத்தவாதிகளின் அகராதியில் எப்போதுமே இருக்கவில்லை” என்ற ஆசிரியரின் வரிகள் இத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு சவுக்கடி போன்றது.

தமிழர்கள் மத்தியில் பெரும்பாலான சபைகளில் ‍பெண்களின் ஆதிக்கம் ஓங்கியிருக்கிறது. ஒவ்வொரு சபைகளிலுமுள்ள குளருபடிகளை ஆராய்ந்து, பெண்கள் சபைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இதை வாசித்தும் சபைகள் சீர்பட முடியாவிட்டால் செய்வதற்கு வேறொன்றுமில்லை.

ஆராதனையின்போது சபைகளில் நாம் செய்ய வேண்டியது என்ன, என்பதை ஊசாவின் உதாரணம் தெளிவாக விளக்குகின்றது. பத்தக்கட்டளைகள் பற்றி இன்று அநேக தவறான கருத்துக்கள் உலவுகின்றன. அது பற்றி நூலில் விளக்கியிருப்பதும் நன்மையானது. நற்செய்தி ஊழியத்தில் சுவிசேஷப் பிரசங்கம் எத்தனை இன்றியமையாதது என்று சாதக பாதக உதாரணங்களோடு விளக்கியிருப்பது பயனுள்ளது. இரண்டாம் அதிகாரத்தில் கல்வினின் ஐங்கோட்பாட்டின் அவசியத்தை உணர்த்த முன்னோர்கள் பலரின் கூற்றை சுட்டிக்காட்டியிருப்பது, நாம் விசுவாசிப்பது வரலாற்றுபூர்வமான விசுவாசம் என்பதை நினைவுபடுத்துகிறது.

ஆசிரியர் ஏற்கனவே வெளியிட்டுள்ள “திருச்சபை சீர்திருத்தம்” என்ற நூலும், “சீர்திருத்த விசுவாசம்” என்ற இந்நூலும் திருச்சபைகளில் வழிகாட்டு நூல்களாக வைத்துப் பயன்படுத்த வேண்டியவை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

என்னுடைய வாழ்க்கையில் நான் வழிதவறிவிடாமல் இருக்கவும், என்னுடைய விசுவாச வாழ்க்கையை அவ்வப்போது சீர்தூக்கிப்பார்க்கவும் இந்த நூல் மிகவும் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மக்களுக்கு எது தேவையென்பதை அறிந்து ‍இவ்விதமான படைப்புக்களைத் தந்து வரும் ஆசிரியருக்கும், வெளியீட்டாளர்களுக்கும் என்னுடைய நன்றி கலந்த பாராட்டுக்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s