தீமோத்தேயுவைப் பார்த்து பவுல், நீ சுவிசேஷகனாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் (2 தீமோத்தேயு). சுவிசேஷ ஊழியத்தில் அப்போஸ்தலர்கள் பெரும் அக்கறை காட்டினார்கள். இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தை அறிவித்த மனித குமாரனாக வந்தார். அவர் திருச்சபைக்குக் கொடுத்த பெருங்கட்டளை, சுவிசேஷத்தை சகல மக்களுக்கும் எந்தவித வேறுபாடு காட்டாமலும் அறிவிக்க வேண்டும் என்பதே (மத்தேயு 28:18-20). இதெல்லாம் சுவிசேஷ ஊழியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சில உதாரணங்கள். சுவிசேஷ ஊழியத்தின் அவசியத்தை நம்பாதவர்களும், அதில் அக்கறை காட்டாதவர்களும் இருக்க முடியாது. இந்த ஆக்கம் சுவிசேஷ ஊழியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு ஆக்கமல்ல; அவ்வூழியம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும் ஆக்கம். இன்று தமிழ் மக்கள் மத்தியில் நடந்து வரும் சுவிசேஷ ஊழியத்தைப் பார்த்து புறஜாதியார் கிறிஸ்தவத்தை மதிக்காமல் இருப்பதில் வியப்பில்லை. சமீபத்தில் ஒரு இந்து நண்பர் என்னிடம் தன்னுடைய குடும்பத்தாரைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டார். சுவிசேஷ ஊழியம் என்று சொல்லி தன் குடும்பத்தை சிலர் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார். தனக்கு உடல்நலம் சரியில்லாதபோது சுவிசேஷக் கூட்டத்திற்கு வந்தால் உடனே சுகமாகிவிடும் என்று பலர் வற்புறுத்தியும் தான் போகவில்லை என்று கூறிய அவர், இந்தக்கூட்டங்களுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்துகிற ஒருவராவது உடல் நலமில்லாமலிருக்கும் தனக்கு சரீரப்பிரகாரமாக ஒரு உதவியும் செய்வதில்லை என்றார். கூட்டத்திற்கு வருமாறு போன்செய்து வற்புறுத்துகிறவர்கள், உங்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கிறது? ஏதாவது உதவி தேவையா? என்று ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.
இவர் சொன்னதைப்பற்றி நான் சிந்தித்துப் பார்த்தேன். அதில் உண்மை இருப்பதை எப்படி மறுக்கமுடியும்? சுவிசேஷத்தை வியாபாரப் பொருளாக மாற்றி, எதைச் செய்தாவது அதை மற்றவர்கள்மேல் திணிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறவர்களுக்கு கிறிஸ்துவை அறியாதவர்கள் பட்டுக் கொண்டிருக்கும் துன்பங்களும், துயரங்களும் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களாக இருந்து அத்துன்பங்களில் எப்படிப் பங்கு கொள்வது, அவர்களுக்கு எப்படி சமாதானம் சொல்வது என்பது தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் இயேசு குணமாக்குவார், இயேசு பணவசதி செய்து கொடுப்பார், இயேசு வேலை வாங்கிக் கொடுப்பார் என்று சொல்லி மாயாஜாலம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் செய்து வரும் போலித்தனத்தை இன்று கிறிஸ்துவை அறியாதவர்களும் பார்த்துக் கேலி செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. “இயேசு அற்புதத்தின் தேவன்; ஒவ்வொரு நாளும் அவர் நம் வாழ்க்கையில் அற்புதம் செய்கிறார்” என்று சொல்லிச் சொல்லி, ஊழியம் செய்கிறோம் என்ற பெயரில் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்கள் தமிழர்கள் மத்தியில் ஏராளம். கூட்டத்துக்கு வருகின்ற ஏழை, எளியவர்கள் நிலை எப்போதும் அப்படியே இருக்க கையில் செல் போனும், ஹையுன்டா காருமாக அலைகிறார்கள் இன்றைய தமிழக சுவிசேஷ ஊழியர்கள். தட்டிக் கேட்க யாருமில்லாததால் இன்று இவர்கள் பாடு பெருங் கொண்டாட்டமாக இருக்கின்றது.
இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்ய ஆரம்பத்தில் வந்த சில கத்தோலிக்க மிஷனரிகள் சூழிசைவுக் கோட்பாட்டைத் (Contexualization) தழுவி சாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இந்து மதக் கலாச்சாரங்களுக்க இடம் கொடுத்தும் ஊழியம் செய்தார்கள். ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவான ஜெசுயிட் பிரிவைச் (Jesuits) சேர்ந்த டீ நொபிளி (De Nobile, 1606-1741) இந்தவிதமாக மதுரையில் இருந்து ஊழியம் செய்து மதமாற்றத்தில் ஈடுபட்டார். பிராமணர்களைக் குடுமி வைக்கவும், பூணூல் வைத்துக் கொள்ளவும், விபூதி பூசவும் அனுமதித்து சாதிவேற்றுமையை தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். ஒரு சன்னியாசி போல் உடை தரித்தும், ஜெபத்திற்குப் பதிலாக மந்திரங்கள் சொல்லியும் இந்துக்களுக்கு ஒத்துப் போகும்விதத்தில் ஊழியம் செய்து பலர் கத்தோலிக்க மதத்தில் சேர வழி ஏற்படுத்தினார். இத்தாலியைச் சேர்ந்தவரும், உயர் குலத்தில் பிறந்தவருமான டீ நொபிளி தனது குலம் சத்திரியர் குலம் என்று கூறி தன்னை குரு என்றும், அய்யர் என்றும் அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதம் மாற்றுவதற்காக எந்தளவுக்கு இந்துக்களுடைய வழிமுறைகளைப் பின்பற்ற முடியுமோ அந்தளவுக்கு எல்லாவற்றையும் பின்பற்றினார் இந்த மனிதர். ‘ஐந்தாம் வேதம்’ என்று அழைக்கப்பட்ட இந்துமத தத்துவங்களுக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுத்த ஒரு நூலையும் இவர் எழுதி வெளியிட்டார். இவருடைய முறை பிராமணர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவுவதை சுலபமாகிக்யது. டீ நொபிளி ‘ரோம பிராமணன்’ என்றும் அழைக்கப்பட்டார். இந்த மனிதர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ விசுவாசி அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இவருடைய காலத்துக்குப் பின்வந்த சில கிறிஸ்தவ மிஷனரிகளும் இத்தவறான முறைக்குப் பலியாகி சுவிசேஷ ஊழியத்தைக் கறைபடுத்தியுள்ளார்கள். கத்தோலிக்கர்களாக மாறும் இந்துக்கள் சாதியை விட்டுவிடத்தேவையில்லை என்று டீ நொபிளியின் போதனையை அவருக்குப் பின் வந்து ஊழியம் செய்த மெய்க் கிறிஸ்தவ சீர்திருத்த விசுவாசியான வில்லியம் கேரி அடியோடு எதிர்த்தார் என்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. சாதி பார்த்து கூட்டம் சேர்க்கும் இந்தப் பாவகரமான செயலை அனுமதித்து நம்மக்கள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்து கொண்டிருப்பவர்கள் இன்று அநேகம். தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த பல சபைகள் தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில சாதியைச் சேர்ந்தவர்களுக்கென்று தனிச்சபைகள் நடத்துவது நாமறியாததல்ல.
இதே வகையில்தான் இந்து மதத்துக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுத்து சிலர் இன்று சுவிசேஷ ஊழியம் செய்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பிராமண விரோதிகளாகவும், திராவிட ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மேலைத்தேசத்தைச் சேர்ந்தவரல்ல, கிழக்கில் பிறந்தவர் என்று நாம் நம்பும்படிச் செய்வதற்காகவும், அவருடைய போதனைகளே இந்திய தத்துவஞானத்திற்கு வழிகாட்டி என்று காட்டவும் இவர்கள் படும்பாடு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இவர்களுடைய போதனைகளை வாசித்து அறியாமையால் பலர் இவற்றிற்கு பலிக்கடாக்களாக மாறியிருக்கிறார்கள். இதெல்லாம் வேதம் அறியாத, லெளகீக செயல்கள்; கர்த்தருடைய பெயரை மாசுபடுத்தும் செயல்கள்.
நாமெல்லோரும் அறிந்த, பரவலாக எங்கும் காணப்படும் இன்னுமொரு ஒரு சித்துவேலைதான் சுவிசேஷக் கூட்டத்தில் அர்ப்பண அழைப்புக் கொடுப்பது. இதைப்பயன்படுத்தி ஒருவரைக் கிறிஸ்தவராக அறிவிக்கும் செயல் வாசகர்கள் அறியாததல்ல. இதையெல்லாம் நாம் எழுத வேண்டிய காரணம் சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் இன்று நடந்து வரும் அவலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான். சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் நடக்கும் இத்தனை சித்துவேலைகளுக்கு மத்தியில்தான் மெய்யான சுவிசேஷ ஊழியம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று ஊழியம் செய்ய ஆசைப்படுகிறவர்களெல்லாம் தாம் நினைத்தபடி ஒன்றை ஆரம்பித்துவிடுவது வழக்கமாக இருக்கின்றது. அரசாங்க அனுமதி இல்லாமல் வீதியோரம் பெட்டிக் கடைபோட்டு வியாபாரம் செய்கிறவர்களுக்கம் இவர்களுக்கம் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படி ஊழியம் செய்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் கர்த்தருடைய பெயரைப் பயன்படுத்தி இயேசுவைப் பிரசங்கிக்கப் புறப்பட்டிருந்தாலும், கர்த்தருடைய வேதத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. அந்த வேதம், சுவிசேஷ ஊழியம் செய்வதெப்படி? என்று விளக்கும் போதனைகளையெல்லாம் இவர்கள் சட்டை செய்வதில்லை. சுவிசேஷத்தை சொன்னால் போதும், அதை எப்படிச் சொல்ல வேண்டும், அந்த ஊழியத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்றெல்லாம் கவலைப்படக்கூடாது என்பது இவர்களுடைய நினைப்பு. பலர், வேதம் இதுபற்றியெல்லாம் விளக்கமளித்து நேரத்தை வீணடிக்கவில்லை, பொதுவான போதனைகளை மட்டுமே கொடுப்பதோடு நின்று விடுகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய எண்ணங்கள் பரவலாகக் காணப்படும் ஒரு ஆத்மீக சூழ்நிலையில் சுவிசேஷ ஊழியத்தைப் பற்றி வேதம் தரும் போதனைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுபற்றி இனி விபரமாகப் பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவை பாவிகளுக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமே சுவிசேஷ செய்தியின் இலக்காக இருக்க வேண்டும்
சுவிசேஷ செய்தியின் மூலம் இயேசு கிறிஸ்துவை, கர்த்தரை அறியாத மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது. இதுவே ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு பிரசங்கியின் முக்கிய பணி. இதை இலக்காகக் கொள்ளாத எந்த ஊழியமும் சுவிசேஷ ஊழியமாக இருக்க முடியாது யோவான் ஸ்நானனும், சரி, இயேசு கிறிஸ்துவும் சரி இதையே தங்கள் இலட்சியமாகக் கொண்டிருந்தனர் (யோவான் 3:35, 36; 3:16). இயேசு கிறிஸ்துவை பாவிகளுக்கு அறிமுகப்படுத்தவே சுவிசேஷ ஊழியப்பணி என்பதை ரோமர் 10:9-15 வரையுள்ள வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் மிகத்தெளிவாக விளக்குகின்றார். கிறிஸ்துவை விசுவாசிப்பமே ஒவ்வொரு மனிதனுடைய இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதையும், அவரை விசுவாசிப்பவர்கள் மட்டுமே இரட்சிப்பை அடைவார்கள் என்பதையும் இப்பகுதி சந்தேகமில்லாமல் அறியத்தருகிறது. அத்தோடு நிறுத்திவிடாமல் பவுல் அப்போஸ்தலன், ஒரு பிரசங்கியின் அதிமுக்கிய பணி கிறிஸ்துவை மற்றவர்கள் அறியச் செய்வதே என்று இப்பகுதியில் வலியுறுத்தியிருப்பதைக் கவனியுங்கள். கிறிஸ்துவும், பவுலும், ஏனைய அப்போஸ்தலர்களும், திருச்சபையும் இதையே எப்போதும் தங்களுடைய அதிமுக்கிய திருப்பணியாக செய்து வந்திருக்கிறார்கள்.
இன்று சுவிசேஷப் பணி செய்கிறோம் என்று சொல்கிற அநேகர் கிறிஸ்துவை பிரசங்கிப்பதை விட்டுவிட்டு தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதிலும், சொந்த லாபத்தைத் தேடிக் கொள்வதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். யோவான் ஸ்நானன் தன் ஊழியத்தின் மூலம் அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று சொல்லியிருப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் (யோவான் 3:30). பல சுவிசேஷ ஊழியர்கள் கிறிஸ்துவின் மரணபலியையும், இரட்சிப்புக்குரிய வழிகளையும் பற்றிச் சொல்வதை விட்டுவிட்டு, கிறிஸ்து சுகமளிக்கிறார் என்று சொல்லி சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களுடைய செய்திகளில் இரட்சிப்புக்குரிய வழிமுறைகளுக்கு இடமிருக்காது. சுகமளிப்பதற்காகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்திருக்கிறார் என்று சொல்லி அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இயேசுவும் இதையே செய்தார் என்று கூறி வேதத்தை திரித்துப் போதித்து அநேக ஆத்துமாக்களை இவர்கள் ஏமாற்றிப் பகற்கொள்ளை நடத்தி வருகிறார்கள். ஆனால், கிறிஸ்துவின் வேதம், சுவிசேஷ ஊழியத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்பதை ஆணித்தரமாக விளக்குகின்றது. வேதத்தில் ஓரிடத்திலாவது, கிறிஸ்து பிணி தீர்ப்பதை மையமாக வைத்து சுவிசேஷம் சொன்னதாக நாம் வாசிக்கவில்லை. அப்போஸ்தலர்களும் கூட அப்படி ஒருபோதும் செய்யவில்லை. இயேசு அநேகருடைய குறைகளைத் தீர்த்ததற்குக் காரணம் அவர் ஆண்டவர், தேவனுடைய ஒரே குமாரன். அவரோடு நாம் நம்மை நிகராக்கிக் கொள்ள முடியாது. பெனிஹின், தினகரன் போன்றோர் இயேசுவுக்குள்ள சகல அதிகாரமும் தங்களுக்கும் இருப்பதாக வேதவிரோத போதனை செய்து வருகிறார்கள். ஜொய்ஸ் மாயர் என்ற பெண் பிரசங்கி? இயேசு செய்த எல்லாக் காரியங்களையும் ஒட்டு மொத்தமாக நாமும் செய்ய முடியும் என்று அடித்துப் பேசி வருகிறார். இவர்களில் ஒருவராவது ஏன் இன்னும் தண்ணீரில் நடந்து காட்டவில்லை என்பது புரியவில்லை! உலகங்களையும், சகல அதிகாரங்களையும் கர்த்தர், தன்னுடைய ஒரே குமாரனான இயேசுவுக்கு மட்டுமே கொடுத்து அவரை அனைத்தையும் ஆளும் ஆண்டவராக நியமித்திருப்பதாக எபேசியர் 20:20-23 வரையுள்ள வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் எழுதியிருக்கிறார். இத்தகைய அதிகாரத்தை தேவனுடைய ஊழியர்களோ, அவருடைய மக்களோ அனுபவிப்பதில்லை என்பதை இந்த மனிதர்கள் அறியவில்லை. ஊழியக்காரர் என்று தம்மை அறிவித்துக் கொள்ளம் பலர் இன்று இயேசுவுக்கு சமமாக தம்மை ஒப்பிட்டுப் பேசிவருகிறார்கள். இவர்கள் தங்களுக்குள் தெய்வீகத்தன்மை இருப்பதாகவும் கூறிவருகிறார்கள். மெய்யான சுவிசேஷத்தைச் சொல்வதை இவர்கள் இலட்சியமாகக் கொண்டிருக்கவில்லை.
இயேசு கிறிஸ்து மட்டுமே இரட்சகர் என்றும், அவரை விசுவாசிக்காதவர்கள் இரட்சிப்பை அடைய முடியாது என்றும் விளக்கி, அந்த இரட்சிப்புக்கான வழிமுறைகளைத் தெளிவாகப் போதிக்காத எந்த ஊழியக்காரனும் சுவிசேஷ ஊழியக்காரனாக இருக்க முடியாது. கசக்கும் ஒரு மருந்துக்கு இனிப்பைச் சுற்றிக் கொடுப்பதுபோல், சுவிசேஷத்தை அறிவிக்க சுகமளிப்பு கூட்டம் நடத்தியும், தாலக்கச்சேரி வைத்தும் சுவிசேஷத்தை வியாபாரப் பொருளாக்குவோர் மெய்யான ஊழியக்காரர்கள் இல்லை. சுவிசேஷம் அறிவிக்கப்படும்போது அதை அறிவிக்கும் மனிதனின் பெருமை தெரியக்கூடாது, அவனுடைய மேன்மைகளுக்க கூட்டத்தில் இடமிருக்கக்கூடாது. இயேசு மட்டுமே பிரசங்கத்தால் வெளிப்படுத்தப்பட்டு மகிமைப்படுத்தப்பட வேண்டும். அவரை வெளிப்படுத்தும் வெறும் சாதாரண கருவிகளே பேச்சும், அதைப் பேசும் மனிதனும். யோவான் ஸ்நானனைப் போல தன்னை சிருகச் செய்து இயேசுவை பெறுகச் செய்யாத மனிதர்கள் உண்மையான சுவிசேஷ ஊழியக்காரரில்லை.
சுவிசேஷ செய்தி எப்போதும் கிறிஸ்துவின் மரணத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாவ நிவாரண வழிமுறைகளை விளக்குவதாக இருக்க வேண்டும்
வேதத்தில் நாம் வாசிக்கும் அப்போஸ்தலருடைய சுவிசேஷச் செய்திகளப் போலவும், சீர்திருத்தவாதிகளும், பரிசுத்தவான்களும் வாழ்ந்த காலங்களில் ஆத்துமாக்கள் அனுபவித்த பிரசங்கங்களைப் போலவும், ஏன் இன்றும் உலகின் பல பாகங்களிலும் இருக்கும் பல நல்ல சீர்திருத்த சபைகளில் கொடுக்கப்பட்டு வரும் சுவிசேஷப் பிரசங்கங்களைப் போலவும் தமிழ் கூறும் நல்லுலகில் நடந்து வரும் சுவிசேஷக் கூட்டங்களிலும், சபைகளிலும் கேட்க முடியாதிருக்கின்றது. இதற்குக் காரணம் நம்மத்தியில் நாம் கேட்கக்கூடியதாயிருக்கின்ற சுவிசேஷச் செய்திகளில் தெளிவான எந்தப் போதனைகளும் இல்லாமலிருப்பதுதான். நற்செய்தி என்று அதற்குப் பெயர் இருந்தாலும் அந்தச் செய்தியில் சொந்த அனுபவத்தையும், பொய்யான வாக்குறுதிகளையும்தான் கேட்க முடிகின்றதே தவிர மெய்யான சுவிசேஷத்திற்கு துளியும் இடமில்லை. மெய்யான சுவிசேஷ செய்தியில் கிறிஸ்துபற்றிய தெளிவான விளக்கமிருக்கும். அவருடைய கல்வாரி மரணத்திற்கான காரணம் வேதபூர்வமாக எடுத்துக் கூறப்படும். கர்த்தரை அறியாதவர்கள் மேல் இருக்கும் தேவ கோபத்திற்கான காரணமும் விளக்கப்படும். அத்தேவகோபம் நீங்க கர்த்தரே ஏற்படுத்தியிருக்கும் வழிமுறைகள் விளக்கப்படும். ஆத்துமாக்கள் தங்களுடைய பாவப்பரிகாரத்திற்காக என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான விளக்கத்தையும் அதில் பார்க்கலாம். அச்செய்தியில் வியாபாரத்தோனி இருக்காது. விளையாட்டுக்கு இடமிருக்காது. ஆத்துமாக்களுடைய உணர்ச்சிகளை மட்டும் தொடக்கூடிய இனிப்பான வார்த்தைகள் இருக்காது. ஆனால், ஆத்துமாக்களுடைய இருதயத்தைப் பிளந்து, அவர்கள் பாவிகள் என்று உணர்த்தி, அப்பாவத்திற்காக அவர்கள் இயேசுவை நாடி ஓட வேண்டும் என்ற ஆணித்தரமான செய்தி பரிசுத்த ஆவியின் வல்லமையால் கொடக்கப்படும்.
இன்றைய சுவிசேஷப் பிரசங்கங்களில் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் காண முடியாமலிருப்பதற்குக் காரணம் அவற்றில் தெளிவான வேத போதனை இல்லாததுதான். இன்றைய போதகர்கள் அப்போஸ்தலர்களுடையதும், சீர்திருத்தவாம காலத்தில் கொடுக்கப்பட்டதுமான வேதபூர்வமான நல்ல சுவிசேஷப் பிரசங்களை மீண்டும் மீண்டும் வாசித்து அவற்றில் காணப்படும் முக்கிய அம்சங்களை கவனத்தில் எடுப்பது மிகவும் அவசியம். ஆத்துமாக்களின் இருதயத்திற்கு தேவையான நற்செய்தியைக் கேவலப்படுத்தும் பிரசங்கியைக் கர்த்தர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். சுவிசேஷப் பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள விரும்புபவர்கள் அல்பர்ட் என். மார்டின் எழுதி நாம் தமிழில் வெளியிட்டிருக்கும், கிறிஸ்தவன் யார்? என்ற சிறுநூலை வாங்கி வாசிக்கலாம். தெளிவான வேதபோதனையைத் தன்னில் கொண்டிராமல் நற்செய்தி என்ற பெயரில் கொடுக்கப்படும் எந்த செய்தியும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற முடியாது. ஆவியானவர் அத்தகைய செய்திகளை ஆசீர்வதிக்க மாட்டார். 1 தெசலோனிக்கேயரில் பவுல் சொல்லியிருப்பதைப் பாருங்கள், “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; . . .” என்று சொல்கிறார் பவுல். இதற்குப் பொருள் என்னவென்றால், பவுல் பிரசங்கித்த சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சகல வேதபோதனையையும் கொண்டிருந்தது, அது மட்டுமல்லாமல் வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் அது கொடுக்கப்பட்டது என்பதுதான். தான் கொடுத்த சுவிசேஷப் பிரசங்கத்தில் தெளிவான, மெய்யான வேதபோதனை இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்ததால்தான் பவுலால் வல்லமையோடும், கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார் என்ற முழு நிச்சயத்தோடும் பிரசங்கிக்க முடிந்தது. அப்படி முறையான ஒரு செய்தியை வேதபயத்தோடு தயாரித்துப் பிரசங்கித்தால்தான் ஆவியானவர் அதை தெசலோனிக்கேயர் மத்தியில் ஆசீர்வதித்தார். பலர் போலித் தெய்வங்களைத் தூக்கி எறிந்துவிட்டு மெய்யான கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அதனால்தான் பவுலால், “எங்கள் சுவிசேஷம் பரிசுத்த ஆவியுடன் வந்தது” என்று சொல்ல முடிந்தது. நல்ல, சத்தான சுவிசேஷ செய்திகளை பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்பலாம். அதேவேளை கிறிஸ்துவின் பெயரில் கொடுக்கப்படும் போலி வியாபாரச் செய்திகள் அவருயை ஆசீர்வாதத்தை ஒருபோதும் அடையாது. எத்தனை ஜெபத்தோடு கொடுக்கப்பட்டாலும் அவற்றில் ஆவியின் வல்லமைக்கு இடமிருக்காது.
சுவிசேஷத்தை அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமையாகும்
சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியை கர்த்தர் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிறிஸ்தவன் சபை அதிகாரியாக, மூப்பராக, போதகராக, உதவியாளனாக இல்லாமலிருக்கலாம், ஆனால், கர்த்தரை அறியாத ஆத்துமாக்களக்க சுவிசேஷத்தை சொல்லாதவனாக இருக்க முடியாது. சுவிசேஷம் சொல்லும்பணி எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எவருடைய அனுமதியும் இல்லாமல் நாம் எல்லோருக்கும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி தைரியத்தோடும் பெலத்தோடும் (சபை அங்கத்தவர்களாக இருந்து) சொல்ல வேண்டும். கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது கிறிஸ்தவ பெண்கள் பக்கத்திலிருக்கும் பெண்களுக்கும், ஆபீசில் வேலை செய்பவர்கள் அங்கிருப்பவர்களுக்கும், பள்ளித்தளங்களிலும், கல்லூரிகளிலும் எல்லா இடங்களிலும் நாம், அத்தேனியக் கிறிஸ்தவர்களைப் போல இயேசுவைப் பற்றிச் சொல்லி அவரை மகிமைப்படுத்த வேண்டும். அவர்களைத் தாங்கள் ஆராதிக்கும் சபைக்கும், கூட்டங்களுக்கும் வரும்படி அழைக்க வேண்டும். அவர்களோடு நட்பை ஏற்படுத்தி தங்களுடைய வீடுகளுக்கு அவர்களை அழைத்து கிறிஸ்துவைப் பற்றி சொல்ல வேண்டம். கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லும் நல்ல கையேடுகளைக் கையில் வைத்திருந்து ஆத்துமாக்களக்கு அவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். இதைச் செய்வதற்கு ஒரு கிறிஸ்தவன் இறையியல் வல்லுனனாக இருக்க வேண்டியதில்லை. இறையியல் கல்லூரிக்குப் போயிருக்கத் தேவையில்லை. சுவிசேஷத்தை இந்தவகையில் கர்த்தரை அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லாத கிறிஸ்தவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள். கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றியும், டி. வி புரோகிரேம்களைப் பற்றியும் பேசுவதில் எடுக்கும் ஆர்வம் சுவிசேஷத்தைச் சொல்வதில் இல்லாமலிருப்பது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அறிகுறியல்ல.
சுவிசேஷ ஊழியப்பணி கிறிஸ்துவின் சபைக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது
சுவிசேஷ ஊழியங்களைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான ஒரு வேதப்பகுதி மத்தேயு 28:18-20. இப்பகுதியில் இயேசு தனது சீடர்களுக்கு இறுதிக் கட்டளையாக அவர்கள் செய்ய வேண்டிய ஊழியத்தைக் குறித்து விளக்குகிறால். இயேசுவின் சீடர்களுக்கு (அப்போஸ்தலர்களுக்கு) கொடுக்கப்பட்ட இப்பணி அவர்களுக்குப் பின் திருச்சபை செய்ய வேண்டிய பணியாக மாறியது. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் பொதுவாக எல்லாக் கிறிஸ்தவர்களுமே கிறிஸ்துவைப் பற்றி அவரை அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டிருந்தாலும், சபைகளை ஆரம்பிப்பது, திருமுழுக்கு கொடுப்பது, திருவிருந்து வைப்பது மற்றும் சீடத்துவம், பிரசங்கம், போதனை ஆகிய அனைத்தையும் கொண்டு நடத்த கிறிஸ்து தன் சபையை மட்டுமே நிறுவியிருக்கிறார். திருச்சபை செய்ய வேண்டிய ஊழியங்களை, திருச்சபையால் அனுப்பப்படாமல் தனி மனிதர்கள் செய்யப்பார்ப்பது தவறு. ஆகவே, இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள போதனை இன்று திருச்சபை பின்பற்ற வேண்டிய கடமைகளை விளக்குகிறது.
வேதம் பொதுவாகவே எல்லாக் கிறிஸ்தவர்களும் திருச்சபைக்கு மதிப்புக் கொடுத்து அதில் அங்கத்தவர்களாக இருந்து கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. திருச்சபை இல்லாமல் ஒரு ஆத்துமா கிறிஸ்தவ வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து தன் குடும்பத்தைக் கர்த்தரின் வழியில் நடத்த முடியும் என்று கனவு காணமுடியாது. திருச்சபையை உதாசீனப்படுத்துவது கர்த்தரையே உதாசீனப்படுத்துவதற்கு சமமாகும். ஆத்துமாக்களுக்குத் தேவையான சகல ஆத்மீக உதவிகளையும் பெற்றக் கொள்வதற்காகவே கிறிஸ்து தன் சபையை நிறுவி இருக்கிறார். இதனால் நாம் உலகத்தில் காணப்படும் அத்தனை சபைகளும் நல்ல சபைகள் என்று சொல்ல வரவில்லை. சபைகளுக்கு மத்தியில் நல்லதும் கெட்டதும் எப்போதும் இருக்கும். ஆத்துமாக்கள் சபைகளை ஆராய்ந்து பார்த்து தங்களுடைய ஆத்மீக வாழ்க்கைக்கு நல்லுணவளிக்கக்கூடிய சபைகளில் இணைந்து வாழ வேண்டும். அந்த சபைகளில் இருந்தே எல்லா ஆத்துமாக்களும் சுவிசேஷப் பணியில் ஈடுபட வேண்டும். சபையையே கண்ணால் பார்க்காத ஒரு ஆத்துமா எந்த சுவிசேஷத்தை கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு சொல்ல முடியும்? கிறிஸ்து நேசிக்கும் சபையில் வாழ்ந்து வளராதவர்கள் சுவிசேஷத்தை வல்லமையோடு சொல்ல முடியாது.
மத்தேயு 28:18-20, (இது கிறிஸ்து தன் சபைக்குக் கொடுத்த கட்டளை) சுவிசேஷ ஊழியத்தை திருச்சபை கொண்டு நடத்த வேண்டும் என்று போதிக்கின்றது. அதாவது சபைத்தலைவர்களின் தலைமையில் (போதகர்களும், உதவிக்காரர்களும்) எல்லா சுவிசேஷ ஊழியங்களும், சபை நிறுவும் காரியங்களும் கொண்டு நடத்தப்பட வேண்டும். இத்தகைய பொறுப்புள்ள காரியங்களை ஆத்மீக வாழ்க்கையில் முதிர்ச்சியையும், தகுந்த வரங்களையும் கொண்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டவர்களே கொண்டு நடத்த வேண்டும். எல்லாக் கிறிஸ்தவர்களும் சுவிசேஷத்தை கர்த்தரை அறியாதவர்களோடு பகிர்ந்து கொண்டாலும், ஓரிடத்தில் ஆத்துமாக்ளைக்கூட்டி வேதப்பாடம் நடத்தி சபை அமைக்கும் வேலையில் ஈடுபடுதல், சபையாக சுவிசேஷக் கூட்டங்களை நடத்துதல் போன்ற ஊழியங்களைச் செய்யும்படியாக கிறிஸ்து கட்டளையிடவில்லை. அவற்றைச் செய்யும் தகுதியையும், தகுந்த வரங்களையும் கொண்டிருப்பவர்களை திருச்சபை அங்கீகரித்து அவ்வூழியங்களக்கு அனுப்ப வேண்டும் என்றே வேதம் போதிக்கின்றது. அந்த வகையிலேயே ஆதி சபையில் ஊழியங்களனைத்தும் நடந்து வந்திருக்கின்றன. இன்று நாம் பார்த்து வருகிற, சுவிசேஷ ஊழியங்கள் என்ற பெயரில் நடக்கும் ‘சொந்த ஊழியங்களை’ (Independent ministries) வேதத்திற்கு கட்டுப்பட்டு இயங்கிய ஆதிசபை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.
சுவிசேஷ ஊழியத்தின் இறதியில் ஆத்துமாக்களைக் கிறிஸ்தவர்களாக அறிக்கையிடுவது ஆபத்தான காரியம்
இன்று சுவிசேஷக் கூட்டங்களின் இறுதியில், கூட்டத்தில் கைகளை உயர்த்துபவர்கள், வலிப்பு வந்ததுபோல் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கி ஆடுபவர்களையெல்லாம் ஆவியின் அனுக்கிரகத்தைப் பெற்றவர்கள் என்றும், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அறிவித்து வருகிறார்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் பல சுவிசேஷப் பிரசங்கிகள். சுவிசேஷத்தையும் முறையாக சொல்லாமல், வெறும் பிணி தீர்க்கும் முயற்சியில் ஏதோ ஜெபத்தை செய்துவிட்டு பரிசுத்த ஆவி வந்து ஆத்துமாக்கள் கிறிஸ்தவர்களாகிவிட்டார்கள் என்று அறிவிக்கும் முறையை வேதத்தில் நாம் எங்கும் வாசிக்க முடியாது. இந்த சுவிசேஷகர்கள் இதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள். “இன்று கர்த்தர் புதிய அற்புதங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார். எக்காலத்திலும் இல்லாத வகையில் ஆவியின் அனுக்கிரகம் கிடைக்கிறது” என்பதுதான் அந்தப் பதில். இப்படிச் சொல்லி அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தப் பதிலுக்கு அவர்கள் வேதத்தில் இருந்து எந்த சான்றும் காட்ட முடியாது. இயேசு நேரடியாக இதை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தான் பெனிஹின்னும், தினகரனும் இன்னும் பலரும் சொல்லும் பதிலாக இருக்கின்றது. இயேசு நேரடியாக பேசுவதற்கு இவர்களை மட்டும் ஏன் தெரிந்து கொண்டார்? இவர்கள் மட்டும் எப்படி விசேஷ மனிதர்களானார்கள்? என்றைக்கும் நிலைத்திருக்கும் தன்னுடைய வேதபோதனைகளுக்கெல்லாம் முரணான காரியத்தை செய்ய கர்த்தர் ஏன் இந்த மனிதர்களைத் தேடி அவர்களோடு பேச வேண்டும் என்று சிந்தித்துக் கேள்வி கேட்கும் ஒருவரும் இன்று தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் இல்லாதது துக்ககரமான காரியமே. இதற்கெல்லாம் சரியான வேத ஞானமில்லாததே காரணம்.
சுவிசேஷம் சொல்லும் போது நாம் செய்ய வேண்டியதென்ன? செய்யக் கூடாததென்ன? என்பதை வேதத்தைப் படித்து நாம் தெரிந்து கொள்ளலாம். வேதபூர்வமான சுவிசேஷ செய்தியைக் கொடுத்தபின், அதைக்கேட்கின்ற ஆத்துமாக்கள் கர்த்தரிடம் வர வேண்டும், இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று மட்டுமே பிரசங்கிகள் சொல்ல வேண்டும். அதற்கு மேல் எதையும் செய்யச் சொல்லும்படி வேதம் போதிக்கவில்லை. ஆதி சபையில் சுவிசேஷம் சொன்னபிறகு ஆத்துமாக்களக் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வாசிக்கிறோம். ஆனால் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தாமே முன்வந்து கிறிஸ்துவை அறிக்கையிட்டதாலேயே அவர்களுக்கு ஞானஸ்நானத் கொடுக்கப்பட்டதாக ஒவ்வொரு இடத்திலும் வாசிக்கிறாம். ஞானஸ்நானம் கொடுத்தவர்கள் அவர்களைக் கைகளை உயர்த்தி கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுக்க வைத்தார்களென்று நாம் வேதத்தில் எங்கும் வாசிக்கவில்லை. ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் தலையில் பிரசங்கிகள் கைகளை வைத்துத் தற்றி நிலத்தில் விழச் செய்து அவர்கள் மேல் ஆவி வந்துவிட்டதாக அறிவித்ததாகவும் நாம் எங்கும் வாசிப்பதில்லை. சுவிசேஷத்தைக் கேட்டு தங்களுடைய பாவத்தை உணர்ந்து, அதற்காக மன்னிப்புக்கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் வேண்டும் என்று கேட்டபடியாலேயே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வேதத்தின் எல்லாப் பகுதிகளும் போதிக்கின்றன. ஆகவே, இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும், கேள்விப்படும், சுவிசேஷக் கூட்டங்களில் நடக்கும் கூத்துக்களுக்கும் பரிசுத்த வேதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
சுவிசேஷ கூட்ட இறுதியில் ஆத்துமாக்களைத் தீர்மானம் எடுக்க செய்வதும், கிறிஸ்தவர்கள் என்று அறிவிப்பதும் மிகவும் மோசமான செயல். இச்செயல்களால் இன்று போசிக்கிறிஸ்தவர்களின் தொகை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. (இதே இதழில் வெளிவந்துள்ள ‘பாவ உணர்வு சொட்டும் கண்ணீர்த் துளிகள்’ என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்). கூட்டத்தின் முடிவில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாகிவிட முடியாது. இயேசுவை ஆரம்பத்தில் பின்பற்றியதுபோல் தோற்றமளித்த பலர் பின்பு அவரை விட்டு விலகியோடியதை நாம் வேதத்தில் வாசிக்கவில்லையா? ஒருவர் கிறிஸ்துவை அறிந்து கொண்டதாக அறிவித்தாலும் அவருடைய விசுவாசத்தை ஆராய்ந்துபாராமல் ஞானஸ்நானம் கொடுப்பது மிக ஆபத்தானது. சுவிசேஷகனின் பேச்சையும், பாடல்களையும், இசையையும் கேட்டு ஆத்துமாக்கள் உணர்ச்சிவசப்படுவது மிகவும் சகஜம். அதுவும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் அது மிக அதிகம். சினிமாக் கொட்டகையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்துக்கும், சுவிசேஷக் கூட்டத்தில் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்துக்கும் உள்ள வித்தியாசம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். சுவிசேஷக் கூட்டத்தில் சினிமாக்கவர்ச்சியும், அதை நினைவுபடுத்தும் இசையும், பாட்டும் இருந்துவிடக்கூடாது. நம்மக்கள் உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே சில காரியங்களைச் செய்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. உணர்வலைகள் கலைந்தபின் அவர்கள் அதுபற்றி சிந்திப்பதுகூட கிடையாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அதிமுக்கிய செயலான கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசம் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் ஒருபோதும் நிகழாது. ஆகவே, சுவிசேஷக் கூட்டங்களில் சுவிசேஷப் பிரசங்கத்தின் முடிவில் ஆத்துமாக்களைக் கிறிஸ்தவர்களாக அறிவிக்கும் தவறான, ஆபத்தான முயற்சி கைவிடப்பட வேண்டும். மெய்யான சுவிசேஷப் பிரசங்கி எத்தனை பேர் தனது பிரசங்கத்தின் மூலம் கர்த்தரை விசுவாசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் காலம் செலுத்த மாட்டான். அவனது நோக்கமெல்லாம் முறையாக சுவிசேஷத்தை சொல்லிவிட்டு எல்லாப் பெருமையையும் கர்த்தரின் பாதத்தில் இடுவது மட்டுமாகவே இருக்கும். ஆத்துமாக்களைக் கரை சேர்ப்பது தன்னுடைய வேலையல்ல, கர்த்தரின் வேலை என்பதில் அவனுக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருக்கும்.
இதுவரை சுவிசேஷ ஊழியத்தைக் குறித்து ஆராய்ந்திருக்கிறோம். அதை வாசிக்கும் நண்பர்களே! மெய்யான சுவிசேஷ ஊழியம் நம் மக்கள் மத்தியில் நடக்க உங்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது என்பதை உங்களால் உணர முடிகின்றதா? சபையோடு தொடர்பில்லாததும், தனிமனிதனின் சொந்தலாபங்களுக்காகவும் நடத்தப்படுகின்ற கூட்டங்களில் இனி உங்கள் கால்கள் படக்கூடாது என்று உறுதி எடுப்பீர்களா? மெய்யான திருச்சபைகளை நாடி அச்சபைகளில் உங்களை இணைத்துக்கொண்டு சுவிசேஷ ஊழியம் வேதபூர்வமாக பிரசங்கிப்பதோடு நிறுத்திக்கொள்வேன், ஆத்துமாக்களைக் கரை சேர்க்கும் காரியத்தைக் கர்த்தரின் கரத்தில் விட்டுவிடுவேன் என்று போதகர்களே! உங்களால் உறுதிகொள்ள முடியுமா? கிறிஸ்தவர்களாக கூட்டங்களில் அறிக்கையிடப்பட்டு, கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாமல் மோசம் போனவர்கள் அதிகரித்துவரும் இந்நாட்களில் மெய்ச்சுவிசேஷம் இனியாவது சுடர்விட்டு பிரசங்க மேடைகளை அலங்கரிக்குமா?