ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அமெரிக்காவில் கொனெடிகெட் மாநிலத்தில் அக்டோபர் 5-ம் திகதி 1703-ல் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு கொங்கிரிகேஷனல் சபையில் (Congregational Church) 64 வருடங்கள் போதகராக இருந்தார். அவருடைய தாயார் மசசுசெட்ஸ் மாநிலத்தில் (Massachussetts) இருந்த நொர்தாம்டன் (Northampton) என்ற ஊரில் இருந்த சபையின் போதகரான சொலமன் ஸ்டொடரின் (Solomon Stoddar) மகள். இத்தனையையும் பார்க்கிறபோது நிச்சயமாக ஜொனத்தன் எட்வர்ட்ஸ் கிறிஸ்தவனாக வராமலும், ஊழியத்துக்கு வராமலும் இருக்க முடியாது என்று தீர்மானித்து சிறுவயதிலேயே கர்த்தருக்கு அவரை அர்ப்பணித்திருப்பார்கள் இந்திய கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவமோ, போதக ஊழியமோ குடும்பச் சொத்து இல்லை. குடும்பப் பாரம்பரியத்தின் மூலம் ஒருவர் கிறிஸ்தவராகவோ போதகராகவோ வரமுடியாது. எத்தனை பெரிய ஆத்மீக வளமுடைய குடுத்பத்தில் பிறந்திருந்தாலும், எத்தனை பெரிய போதகருக்கு மகனாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தானாக கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து, அவரால் அழைக்கப்பட்டால் மட்டுமே போதக ஊழியத்திற்கு வரமுடியும். கர்த்தர் செய்ய வேண்டிய காரியத்தை மனிதன் செய்ய முடியாது.
ஜொனத்தன் எட்வர்ட்ஸ் 1721-ம் ஆண்டில் கர்த்தரை விசுவாசித்தார். சிறுவயதில் தன்னுடைய தந்தையின் சபைக்குப் போய்வந்தபடியால் அவருக்கு கர்த்தரில் நாட்டம் ஏற்பட்டிருந்தது. ஆனால், கல்லூரிக்குப் போய்வரும் காலத்தில்தான் அவருக்கு பாவத்தைப் பற்றிய உணர்வுகளும், மனந்திரும்புதலும், கிறிஸ்துவில் அன்பும் ஏற்பட்டன. கிறிஸ்துவை விசுவாசித்த பின்பு 1722-ம் ஆண்டில் அவருக்கு பிரசங்கம் செய்வதற்கு சபையின் அனுமதி கிடைத்தது. என்னடா! ஒருவருடத்திலேயே அவருக்கு ஊழியமா? என்று சிலர் அங்கலாய்க்கலாம். இன்று கிறிஸ்துவை விசுவாசித்த மூன்று மாதத்திலேயே பலர் சொந்தமாக சபை அமைக்கப் போய்விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் சாதாரண மனிதன் அதிக வேத ஞானமுள்ளவனாக இருந்தான். குடும்பத்திலும், சபை மூலமாகவும் அதிக வேத ஞானத்தை மக்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. எட்வர்ட்ஸ் வாழ்ந்த காலம் வேத பண்டிதர்களான பியூரிட்டன்களின் காலம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும் போதகரின் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே அதிக வேத ஞானத்தையும், பின்பு உறுதியான விசுவாசத்தையும், சிந்திக்கும் திறனையும் கொண்டிருந்த எட்வர்ட்ஸ் ஒருவருடத்தில் பிரசங்கிக்க ஆரம்பித்ததில் ஆச்சரியமில்லை. பவுல், ஸ்பர்ஜன் போன்றோரின் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர் எட்வர்ட்ஸ். எட்வர்ட்ஸ் விசுவாசித்த ஒருவருடத்தில் பிரங்கம் செய்தார் என்று நாமும் புறப்பட்டுவிடக்கூடாது. உலகத்தில் சாதாரண மனிதர்கள் தான் அதிகம்; எட்வர்ட்ஸைப் போன்ற அசாதாரண மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவரே.
1721-ல் பிரசங்கிக்க ஆரம்பித்தாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு எட்வர்ட்ஸ் கடுமையாகப் படிக்க வேண்டி இருந்தது. அதற்குப்பிறகு 1726-ல் தன்னுடைய தாத்தாவுக்கு உதவிப்போதகராக அவர் சபையில் நியமிக்கப்பட்டார். 1727-ல் தனது 24-ம் வயதில் அவர் ஆண்டவருடைய அழைப்பை ஏற்ற போதக ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டார். அதே வருடத்தில் அவர் சேரா பியர்பொன்ட் (Sara Piorpont) என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இப்படியாக அமெரிக்கா பெற்றெடுத்த மிகப்பெரிய இறையியல் அறிஞன் என்று அழைக்கப்படுத் ஜொனத்தன் எட்வர்ட்ஸின் ஊழியம் ஆரம்பமானது.
1726-ல் எட்வர்ட்ஸின் தாத்தா சொலமன் ஸ்டொடார்டுக்கு 83 வயதாயிருக்கும் போது எட்வர்ட்ஸ் அவருக்கு உதவப்போதகரானார். ஸ்டொடார்டின் ஊழியம் பல ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தபோதும் சபையில் ஒரு பிரச்சனை காணப்பட்டது. இது திருவிருந்து சம்பந்தமான பிரச்சனையாக இருந்தது. சபையில் வெகு சிலரே திருவிருந்து எடுப்பதற்கு முன்வந்தனர். இதனால் சலனமடைந்த ஸ்டொடார்ட், ஓரளவுக்கு கிறிஸ்தவத்தை பற்றிய அறிவிருந்து ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறவர்களை எல்லாம் திருவிருந்து எடுப்பதற்கு அனுமதித்தார். இதனால் திருவிருந்து எடுப்பதற்கு ஒருவர் ஏற்கனவே கிறிஸ்துவை விசுவாசித்திருக்க வேண்டும் என்ற நிலமை மாறி திருவிருந்தின் மூலம் விசுவாசத்தை அடையலாம் என்ற எண்ணப் போக்கு சபையாரிடம் ஏற்பட்டது. 1727-ல் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் சபையில் உதவிப் போதகராக சேர்ந்தபோது இந்த முறையே தொடர்ந்தும் இருந்தது. ஸ்டொடார்ட் இறந்தபின் இது எட்வர்ட்ஸீக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது. 1729-ல் எட்வர்ட்ஸ் சபையின் போதகராக பதவியேற்றார்.
எட்வர்ட்ஸ் இயற்கையிலேயே அதிக திறமைசாலியாகவும், சிந்தனையாளராகவும் இருந்தார். அதேவேளை தன்னுடைய பாவத்தைக் குறித்தும் பலவீனங்களைக் குறித்தும் உணர்வுள்ளவராகவும் இருந்தார். ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு கர்த்தரின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ உறுதிபூண்டு அவருடைய துணையை நாடினார். இதற்காக எட்வர்ட்ஸ் ஒரு குறிப்புப் புத்தகத்தில் தான் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்காக செய்யவேண்டிய காரியங்களை எழுதி வைத்து படுக்கப்போகுமுன் அவற்றை நிறைவேற்றியிருக்கிறேனா என்று மனத்தூய்மையுடன் ஆராய்ந்து கர்த்தரிடம் ஜெபத்தில் வந்தார். அந்தளவுக்குத் தன்னுடைய பரிசுத்த வாழ்க்கையில் எட்வர்ட்ஸ் அக்கறை செலுத்தி, அன்றாடத் மனத்தூய்மையுடனும், பரிசுத்தத்துடனும் வாழ்வதில் அக்கறை செலுத்தினார்.
1731-ல் தன்னுடைய 28-வது வயதில் பொஸ்டனில் பிரசங்கம் செய்ய எட்வர்ட்ஸீக்கு அழைப்பு வந்தது. 1 கொரிந்தியர் 1:29-31 ஆகிய வசனங்களின் அடிப்படையில் எட்வர்ட்ஸ் செய்த பிரசங்கம் அவரது பிற்கால ஊழியங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இரட்சிப்பிற்கும், விசுவாசத்திற்கும் கர்த்தரிலேயே முழுமையாகத் தங்கியிருக்க வேண்டும் என்று எட்வர்ட்ஸ் பிரசங்கித்தார். 1734-1735-களில் நொர்தாம்டன் சபை கர்த்தரின் எழுப்புதலைச் சந்தித்தது. இதைத்தொடர்ந்து 1739-ல் ஏற்பட்ட எழுப்புதல் நொர்தாம்டனையும் தாண்டி ஏனைய பகுதிகளையும் பாதித்தது. இது பெரும் எழுப்புதல் (Great Awakening) என்று அழைக்கப்பட்டது. இந்த எழுப்புதல்களுக்கும் இன்று நாம் கேள்விப்படும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் எழுப்புதல்களுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இன்று நாம் கேள்விப்படுவது வெறும் மாம்சத்தை அடிப்படையாகக் கொண்ட மனித உணர்ச்சிப் பிரவாகம் மட்டுமே. ஆவியின் பெயரில் மனிதன் செய்யும் காரியம் இது. ஆனால், எட்வர்ட்சின் காலத்தில் 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட எழுப்புதல் இறையாண்மையுள்ள கர்த்தருடைய மெய்யான எழுப்புதலாய் இருந்தது. அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதற்குரிய இரண்டு காரணிகளை நாம் சுட்டிக்காட்ட முடியும்.
(1) முதலில், இது ஆவியின் கிரியையாக இருந்தது. அன்று அநேகர் தங்களுடைய பாவங்களை உணர்ந்து வருந்தி கிறிஸ்துவின் இரட்சிப்பை மெய்யாக நாடினார்கள். அநேகருடைய மனந்திரும்புதல் வெறும் மாயையாக இல்லாமல் கண்ணீரோடும், பெரும் பாரத்தோடும் ஏற்பட்டதாக இருந்தது. கர்த்தருடைய பிரசன்னத்தில் மனந்திரும்பியவர்கள் தங்கள் இரட்சிப்பிற்காக அவரைத்துதித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். பெந்தகொஸ்தே இயக்கங்கள் எதிர்பார்ப்பதுபோல் ஒருவரும் அன்று அந்நியபாஷையையோ, தீர்க்கதரிசனத்தையோ பேசவில்லை. எட்வர்ட்ஸ், பெனி ஹின்னைப் போல எவரையும் நிலத்தில் பிடித்து தள்ளவில்லை. ஒருவரும் கரடியாய்க் கத்தவோ, பித்தர்களைப்போல சிரிக்கவோ இல்லை. ஆவியின் தூய்மையான வல்லமையினால் அநேகர் தங்களுடைய பாவத்தை உணர்ந்து கர்த்தரிடத் சரணடைந்தனர். அதேவேளை பிசாசும் இந்த எழுப்புதல் காலத்தில் தன்னுடைய வேலையைக் காட்டாமல் இருக்கவில்லை. அதனால், மெய்யான கிறிஸ்தவம் என்றால் என்ன? என்றும், மெய்யான ஆவியின் வல்லமைக்கு அடையாளம் என்ன? என்றும் பலரும் அறிந்து கொள்ளும்படியாக விளக்கி எட்வர்ட்ஸ் ஒரு நூலை எழுதினார். மெய்யான மனந்திரும்புதல் இல்லாத இடத்தில் ஆவியின் கிரியை இருக்காது என்பது எட்வர்ட்ஸின் அசைக்க முடியாத நம்பிக்கையாயிருந்தது. இன்று எழுப்புதல் என்ற பெயரில் போலித்தனமான பித்தலாட்டங்களைத்தான் பார்க்க முடிகின்றதே தவிர மெய்யான மனந்திரும்புதலையும், பாவத்தைவிட்டு விலகியோடுகிறவர்களையும் பார்க்க முடியாதிருக்கின்றது.
(2) அன்று வல்லமையான பிரசங்கத்தை மக்களால் கேட்க முடிந்தது. அன்றைய பிரசங்கம் அறிவுபூர்வமான பிரசங்கமாக மட்டும் இருக்கவில்லை. ஜொனத்தன் எட்வர்ட்ஸ் ஒரு சிந்தனையாளர், ஞானி, வேதமறிந்த அறிஞன், நல்ல பிரசங்கி. இருந்தபோதம் இத்தனைக்கும் மேலாக எட்வர்ட்ஸின் ஊழியத்தில் இன்னுமொன்றும் காணப்பட்டது; அதுதான் ஆவியின் வல்லமை. அவருடைய பிரசங்கங்கள் அறிவுபூர்வமாக இருந்ததோடு ஆவியின் வல்லமையோடும் கொடுக்கப்பட்டதாக இருந்தது. அவற்றைக் கேட்டவர்கள் கூட்ட முடிவில் தங்களுடைய இருதயம் கிழிக்கப்பட்டு, பாவங்கள் உணர்த்தப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தருக்கு முன் நிற்பதுபோன்ற உணர்வை அடைந்தனர். இது எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள் எந்தளவுக்கு ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. இன்றைய பிரசங்கங்களில் போதனைகள் இல்லை; அவை ஆத்துமாக்களை சிந்திக்க வைப்பதாக இல்லை; ஆவியின் வல்லமையும் அவற்றில் இல்லை. போலித்தனமான மனித மாம்ச செய்கைகளுக்கு இன்று எழுப்புதல் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது. நல்ல பிரசங்கங்கள் மட்டும் எழுப்புதலுக்கு காரணமாக இருந்துவிடாவிட்டாலும் ஆவியின் வல்லமை இருக்கின்ற இடங்களில் நிச்சயம் நல்ல பிரசங்கங்கள் இருக்கும் என்பதற்கு எட்வர்ட்ஸின் பிரசங்கங்களும், ஊழியமும் நல்ல உதாரணம்.
எட்வர்ட்ஸின் ஊழியத்தைக் கர்த்தர் ஆசீர்வதித்து எழுப்புதலை உண்டாக்கியபோது நொர்தாம்டனிலும், நியூ இங்கிலாந்திலும் மனந்திரும்பியவர்களில் பெரும் தொகையினர் இருபத்தாறு வயதிற்கும் குறைந்தவர்களாக இருந்தனர். இந்த எழுப்புதலின் காரணமாக எட்வர்ட்ஸீக்கு அநேக சபைகளில் இருந்து பிரசங்கிக்க வருமாறு அழைப்பு வந்தது. எட்வர்ட்ஸின் எழுப்புதல் கூட்டங்களில் இங்கிலாந்தின் பெரும் பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டும் (George Whitefield) பல தடவைகள் பிரசங்கம் செய்திரக்கிறார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்; ஊழியத்தில் பங்காளிகள்; சீர்திருத்த அறிஞர்கள்.
இத்தனை அற்புதமான எழுப்புதலைத் தன் வாழ்நாளில் எட்வர்ட்ஸ் கண்டிருந்தபோதும் அவருடைய ஊழியம் பிரச்சினைகளை சந்திக்காமல் இருக்கவில்லை. 1744-ல் அவர் தன்னுடைய சபையில் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. அப்பிரச்சினைகளால் அவர் இறுதியில் சபையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு எட்வர்ட்ஸின் தாத்தா ஸ்டொடாரின் காலத்தில் இருந்து திருவிருந்து கொடுப்பதில் சபை பின்பற்றிய முறை பெருங்காரணமாக இருந்தது. சபையில் இருந்த அநேகர் திருவிருந்து பெறும் தகுதியில்லாதவர்கள் என்று எட்வர்ட்ஸ் நம்பினார். அவருடைய நம்பிக்கையில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், தவறாக வெறும் கிறிஸ்தவ அறிவைக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் திருவிருந்து கொடுக்கப்பட்டு வந்த முறையை அவர் மாற்றி மெய்யாக மனந்திரும்பியவர்களுக்கு மட்டும் திருவிருந்து கொடுக்க ஆரம்பித்ததால் பலர் அவருக்கு எதிராகக் கிளம்பினர். 1750-ல் சபையில் 230 பேர் அவருக்கு எதிராகவும் 23 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
அதற்குப்பிறது எட்வர்ட்ஸ் ஸ்டொக்பிரிட்ஜ் (Stockbridge) என்ற இடத்தில் இருந்த சபையில் போதகராக சேர்ந்தார். இங்கிருந்தே 1751-ல் அவர் அமெரிக்க இந்தியர்களுக்கு சுவிசேஷம் சொல்லும் ஊழியத்தைத் தொடங்கினார். இந்த சபையில் இருந்த காலத்தில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் மன அமைதி மிக்க ஊழியத்தைக் அநுபவித்திராவிட்டாலும் இங்கிருந்தபோதே அவருடைய அருமையான போதனைகளில் பெரும்பாலானவை நூலுருவம் பெற்றன. ஜோன் பனியன் பன்னிரண்டு வருடங்கள் சிறையிலிருந்த காலத்திலேயே மோட்ச பயணத்தை எழுதினார். தன்னுடைய ஊழியக்காரர்களைக் கர்த்தர் துன்பங்களுக்கு மத்தியிலேயே அதிகமாக ஆசீர்வதித்திருப்பதை வேதமும் சுட்டிக் காட்டுகிறது. 1751-ல் பிரின்ஸ்டன் கல்லூரியின் தலைமைப்பதவி எட்வர்ட்ஸை வந்தடைந்தது. ஆனால், அவர் அதில் அதிக காலம் வாழ முடியாதபடி அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு 1758, மார்ச் மாதம் 28-ல் இறைவனடியைச் சேர்ந்தார்.
ஜொனத்தன் எட்வர்ட்ஸின் எழுத்துகள் இன்றும் பலருக்கும் ஆசீர்வாதமாக இருக்கின்றன. “தேவ கோபமுள்ள கர்த்தரின் கையிலிருக்கும் பாவிகள்” என்ற தலைப்புக்கொண்ட எட்வர்ட்ஸின் பிரசங்கம் கர்த்தரால் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டு இன்றும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகின்றது. எட்வர்ட்ஸின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக தொடர்ந்தும் ஆங்கிலத்தில் அச்சில் இருந்து வருகின்றன. அவருடைய பல ஆக்கங்களை உள்ளடக்கியதாக இருந்த இரண்டு முக்கிய தொகுதிகள் நாற்பது வருடங்களுக்கு தொடர்ச்சியாக அச்சிடப்பட்டு இன்றும் அச்சில் இருக்கின்றன.
ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அமெரிக்கா பெற்றெடுத்த அருமையான தேவ ஊழியர். மெய்யான பிரசங்க ஊழியத்திற்கு எட்வர்ட்ஸின் ஊழியம் இலக்கணம் வகுத்தது. தன் வாழ்நாளில் ஊழியத்தில் எழுப்புதலைச் சந்தித்திருந்த போதும் தாழ்மையையும், தேவ பயத்தையும் கொண்டு கர்த்தரின் மகிமைக்காக மட்டும் உழைத்த சிறந்த மனிதர் ஜொனத்தன் எட்வர்ட்ஸ்.