ரோம சாம்ராஜ்யத்தில் ரோமுக்குப் பிறகு அலெக்சாந்திரியா முக்கிய இடத்தை வகித்தது என்றும், அலெக்சாந்திரியாவில் இருந்த திருச்சபையின் முக்கிய தலைவர்களைப் பற்றியும் இதுவரை பார்த்தோம். இனி வட மேற்கு ஆபிரிக்காவில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த நகரான கார்த்தேஜில் இருந்த சபை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வட ஆபிரிக்காவுக்கு எப்போது கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கான எந்தக்குறிப்புகளும் இல்லை. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் கி.பி. 180ல் திடீரென ஒரு வல்லமையுள்ள, வளரும் சபை கர்த்தேஜில் இருந்ததாக வாசிக்கிறோம். இச்சபையின் அங்கத்தவர்கள் அக்காலத்தில் தங்களுடைய விசுவாசத்திற்கெதிரான பல துன்பங்களையும் சந்தித்து வந்துள்ளனர். டர்டூலியன், சிப்ரியன், அகஸ்தீன் ஆகியோர்கள் இந்த சபையின் அங்கத்தவர்களாக இருந்து வருங்காலத்து மக்கள் அறிந்து கொள்ளும்படியாக தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலம் வரலாற்றில் ஒரு முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளனர். கார்த்தோஜிலிருந்தே முதன்முறையாக லத்தீனில் கிறிஸ்தவ இலக்கியம் உருவானது. அழகாகவும், பெரியதாகவும் இருந்த கார்த்தேஜ் நகரம் லத்தீன் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியது.
டர்டூலியன் (கி.பி 160-225)
டர்டூலியன் கார்த்தேஜில் கி.பி. 155ம் 160ம் இடையில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் கர்த்தரை அறியாதவர்களாக இருந்தபடியால் டர்டூலியன் புறஜாதிக் கலாச்சாரத்தையும், கார்த்தேஜ் நகர மக்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி சுகபோகத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தன்னுடைய படிப்பை கிரேக்கமொழியில் தொடர்ந்த டர்டூலியன் ரோம கலாச்சாரத்தையும் படித்தார். இறுதியில் வக்கீலாகத் தேர்ச்சி பெற்றார். வக்கீல்படிப்பு டர்டூலியன் இறையியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும், இறையியல் தர்க்கங்களில் ஈடுபடவும் பெருந்துணை புரிந்து திருச்சபையின் இறையியல் கோட்பாடுகளை வளர்த்துக் கொள்ள துணை செய்தது. டர்டூலியனே முதன் முதலாக “திரித்துவம்” என்ற வார்த்தையை தனது எழுத்துக்களில் பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டர்டூலியன் தனது 30வது வயதில் கர்த்தரை விசுவாசித்ததாக அறிகிறோம். அவர் திருச்சபையில் எத்தகைய பணிபுரிந்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகிற்ன. ஜெரோம், அவர் சபை மூபபராக இருந்தார் என்று எழுத, ஏனையோர் அவர் உபதேசியாக மட்டுமே பணிபுரிந்துள்ளார் என்று கூறுகின்றனர்.
கார்த்தேஜின் திருச்சபையும், அலெக்சாந்திரியாவில் இருந்த திருச்சபையும் எதிரும் புதிருமாகவே எப்போதும் செயல்பட்டன. கார்த்தேஜ் திருச்சபை தத்துவத்தை நிராகரித்து கிறிஸ்தவ போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடத்தது. ஆனால், அலெக்சாந்திரிய சபையோ தத்துவத்தில் ஆர்வம் கொண்டு இறையியல் சிந்தனைகளை தத்துவங்கள் மூலமாக விளக்குவதில் ஆர்வம் காட்டியது.
டர்டூலியன் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவருடைய சக்தி, எதையும் சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் ஆகியவற்றைப்பார்த்து நம்மால் வியந்து நிற்கே முடிகின்றது. அவருடைய பிரமிக்கத்தக்க வரங்களும், திறமைகளும் கிறிஸ்தவத்திற்காகப் போராடுவதற்காகவே பயன்பட்டன. ரோம சாம்ராஜ்யத்தின் உயர் அதிகாரரிகளை எதிர்த்துத் தாக்கிய டர்டூலியனின் தைரியம் அளப்பரியது. அவருடைய எழுத்தாக்கங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றில் முப்பது ஆக்கங்களும் வேறு சிலவும் நம்மை வந்தடைந்துள்ளன. கி. பி. 197ல் அவர் எழுதிய Apologyயே அவர் எழுதிய அனைத்திலும் சிறப்பானது. இந்நூலில், கிறிஸ்தவத்திற்காக வாதாடிய எவரும் இதுவரை சிந்தித்திராத வகையில் பல வாதங்களை ஒரு வக்கீலுக்கே உரிய திறமையுடன் டர்டூலியன் எழுத்தில் வடித்திருந்தார்.
அவர் எழுதிய De Praescriptione என்ற நூல் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்திய ஒரு நூலாக இருந்தது. டர்டூலியன் இதை கிறிஸ்தவத்திற்கு எதிரான நொஸ்டிசிஸப்போக்குடையவர்களுக்கம், ஏனைய வேத விரோதிகளுக்கும் எதிராகவே எழுதிய போதம் அவருடைய வாதங்கள் எல்லைமீறிப்போய் கிறிஸ்தவ சபைக்கே பின்பு ஆபத்தானவையாக மாறின. இந்நூலில் டர்டூலியன், சத்தியம் திருச்சபையிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று வாதாடினார். ஆகவே, அவரைப் பொறுத்தவரையில் வேத விரோதிகளுடன் சத்தியத்தைப் பற்றிய வாதப்பிரதாபங்களை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருச்சபை மட்டுமே சத்தியத்தை அறிந்திருப்பதால், அது மட்டுதே சரியான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது என்றார் டர்டூலியன். இது மிகவும் ஆபத்தான் ஒரு போதனை. இதுவே பின்பு சபை தவறான போக்கில் போவதற்கும் வழி வகுத்தது. டர்டூலியன், சபைப்பாரம்பரியம் எப்போதும் வேதத்திற்கு சமமானது என்று வாதாடியதால் இந்த விஷயத்தில் அவர் ஐரேனியசின் சிந்தனைப்போக்கில் போக ஆரம்பித்தார். இதிலிருந்தே ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனையான வேதமும், சபைப்பாரம்பரியங்களும் சம அதிகாரம் கொண்டவை என்ற போதனைக்கு வழிவகுக்கப்பட்டது.
டர்டூலியன் ஐரேனியஸைப் போலவே பாவத்தைப் பற்றிய கோட்பாட்டைக் கொண்டிருந்தபோதும், மனிதவர்க்கத்தைப் பாதித்துள்ள பாவத்தைக் குறித்து அதிக நாட்டம் காட்டினார். இதுபற்றி டர்டூலியன் சொன்ன கருத்துக்களே பின்பு அகஸ்தீன் கிருபையைப்பற்றியும், பாவத்தைப்பற்றியும் தெளிவாக எழுதுவதற்கு வழிவகுத்தது. டர்டூலியன் அகஸ்தீன் அளவுக்கு இந்தவிஷயத்தில் தெளிவில்லாதிருந்தார். அவர் கிருபை இயற்கைக்கு எதிரானது என்று நம்பிய அதேவேளை அது கிரியைகளுக்கு எதிரானதல்ல என்றும் நம்பினார். இது இரட்சிப்பு கிரியைகளினால் கிடைக்கின்றது என்ற போதனைக்கு ஓரளவாவது வழிவகுத்தது.
டர்டூலியனே முதலில் திரித்துவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர் என்று பார்த்தோம். திரித்துவத்தைப்பற்றி அவர் தந்த போதனைகளை திருச்சபையும் விரைவில் கிறிஸ்தவ போதனையாக ஏற்றுக்கொண்டது. திரித்துவத்தைப் பற்றிய அடிப்படைப் போதனைகளை டர்டூலியன் முறையாக விளக்க முயற்சித்தபோதும், குமாரன் நித்தியத்திலிருந்தே பிதாவிற்கு குமாரனாக தனித்துவத்தோடு இருந்ததை டர்டூலியன் ஏற்றக்கொள்ளவில்லை. உலகம் உருவாக்கப்படுவதற்கு சில காலத்துக்கு முன்பே இத்தன்மையைக் குமாரன் அடைந்தார் என்றும் அதற்கு முன்பு அவர் பிதாவில் தனித்தன்மையோடு இருக்கவில்லை என்றும் விளக்கினார். இதுபற்றி அவர் ஒரிகன் அளவுக்கு தெளிவுபெற்றிருக்கவில்லை. திரித்துவத்தை விளக்கியதுபோலவே கிறிஸ்துவைப்பற்றியும் டர்டூலியன் விளக்கினார். கிறிஸ்து பூரணமாக கர்த்தராகவும், மனிதனாகவும் இந்த உலகத்தில் ஒரே தோற்றத்தில் இருந்தார் என்று டர்டூலியன் விளக்கினார். டர்டூலியனின் திரித்துவம் மற்றும் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய போதனைகளை சில மாற்றங்களுடன் மேற்கிலிருந்த இலத்தீன் பேசிய திருச்சபை ஏற்றக்கொண்டது. இதனால் நான்காம் நூற்றாண்டில் ஏரியன் திரித்துவத்தைப்பற்றிய தவறான போதனைகளைக் கொடுத்தபோது அதைத் தீவிரமாக இந்தத்திருச்சபையால் எதிர்த்து நிற்க முடிந்தது.
டர்டூலியன் கிறிஸ்தவர்கள் படைகளில் சேர்வதை விரும்பவில்லை. அத்தோடு இரண்டாவது தடவை எவரும் திருமணம் செய்வதையும் எதிர்த்தார். அவர் சுகபோகங்களைத்துறந்த துறவிபோல் வாழ்வதில் நாட்டம் காட்டினார். தியெட்டர்களுக்கும், களியாட்டக்கூட்டங்களுக்கம் எவரும் போவதைக் கடுமையாக எதிர்த்தர். கடுமையான தோற்றத்தையும், சோகம் சொட்டும் முகத்தையும் வைத்திருந்த டர்டூலியன் மொன்டனிசத்தைப் பின்பு பின்பற்றியதில் ஆச்சரியமில்லை. டர்டூலியன் பொதுவாக பெரும் திறமைசாலியாகவும், ஞானமும் உள்ள மனிதராக இருந்தபோதும், ஆபத்தான பல தவறுகளையும் தன்னில் கொண்டிருந்தார். டர்டூலியனின் மொன்டனிசக் கொள்கைகள் அவருக்குப்பின் வந்த சபைப்பிதாக்களால் அவரை சந்தேகக் கண்ணோடு பார்க்க வைத்தது. அவர்கள் டர்டூலியனை ஒரு வேத விரோதியாகவே பார்த்தனர். டர்டூலியன் கி. பி 225ல் அமைதியாக மரித்தார்.
சிப்ரியன் (கி. பி. 200 – 258)
டர்டூலியனின் காலத்திலும் அவருக்குப்பிறகும் கிறிஸ்தவம் வட மேற்கு ஆபிரிக்காவில் துரிதமாகப் பரவியது. ரோம சக்கரவர்த்திகளான டேசியஹஸீம் (கி. பி. 249-51), வெலேரியனும் (கி. பி. 253-60), கிறிஸ்தவர்களுக்கு எதிரான பயங்கரத் துன்பங்களைக் கட்டவிழ்த்துவிட்ட காலத்தில் கிறிஸ்தவம் பலமாக வட மேற்கு ஆபிரிக்காவில் நிலைத்துவிட்டது. இக்காலத்தில் கார்த்தேஜின் திருச்சபை பிசப்பாக சிப்ரியன் இருந்தார்.
சிப்ரியன் கி. பி. 200ம் ஆண்டளவில் கார்த்தேஜில் பிறந்தார். அவர் உயர்குலத்தில் பிறந்து செல்வந்தராகவும் இருந்தார். அவர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பு வக்கீலாக தொழில் செய்ததோடு பேச்சில் சிறந்தவராக, பேச்சுக்கலைப் பேராசிரியராகவும் இருந்தார். புறஜாதி மதங்களில் நம்பிக்கையிழந்து சமாதானத்தைத் தேடிய சிப்ரியன் கி. பி. 246ல் கிறிஸ்துவை விசுவாசித்தார். உடனடியாக தன்னுடைய செல்வங்களை வறுமையில் வாடுபவர்களுக்கு அள்ளியளித்தார். கிறிஸ்துவை விசுவாசித்த இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாகவே அவருடைய கனிவும், நன்னடத்தையும், அமைதித்தன்மையும் கொண்ட பல நல்ல குணங்களும் கார்த்தேஜின் பிசப்பாக அவரைத் தெரிவு செய்ய வைத்தன.
சிப்ரியன் மிகவும் கவர்ந்தவர் டர்டூலியனே. சிப்ரியன் டர்டூலியனைத் தனது தலைவன் என்று அழைப்பதோடு அவருடைய நூல்களையும் ஒவ்வொரு நாளும் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். (இக்காலத்தில் டர்டூலியனின் எழுத்துக்கள் இன்னும் கத்தோலிக்க சபையால் நிராகரிக்கப்படவில்லை). சிப்ரியன் ஒரிகனைவிட வேதத்தை எழுத்துபூர்வமாக விளங்கிக்கொள்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவர் பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் விளக்க முயன்றார். புதிய ஏற்பாட்டு சபைத்தலைவர்களை பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களுக்கு ஒப்பிட்டும், திருவிருந்தை பழைய ஏற்பாட்டுப் பலிகளுக்கும் ஒப்பிட்டார். திருவிருந்தின் மூலம் கிறிஸ்து ஒவ்வொருமுறையும் பலியிடப்படுகிறார் என்று சிப்ரியன் போதிக்கவில்லை. ஆனால், திருவிருந்தின்போது தன்னுடைய மக்களைக் கிறிஸ்து தனது பிதாவின் முன் சமர்ப்பிக்கிறார் என்று போதித்தார். அத்தோடு அவர் திருவிருந்தின் மூலம் இறந்துபோன விசுவாசிகளும் ஏதோ ஒருவிதத்தில் பயனடைவதாக விளக்கினார். இது நிச்சயம் பின்பு ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனைகளுக்க இக்காலத்திலேயே தொடர்ந்து வித்திடப்பட்டு வந்துள்ளதைக் கவனிக்க முடிகின்றது.
திருச்சபைத் தலைவர்கள் பற்றிய சிப்ரியனின் போதனைகள் பின்பு சபைத்தலைமை மோசமான நிலைக்குப் போகக்காரணமாக இருந்தன. சிப்ரியனின் விளக்கத்தில் அப்போஸ்தலர்களுக்கும், பிசப்புக்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இருக்கவில்லை. சிப்ரியனைப் பொறுத்தவரை பிசப்புக்கள் சபையில் ஒழுங்கு நடவடிக்கை கொண்டு வருவதில் அப்போஸ்தல அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அத்தோடு அவர்கள் மட்டுமே திருமுழுக்கையும், திருவிருந்தையும் அளிக்கக்கூடிய இயற்கையை மீறிய அசாதாரண வல்லமையையும் கொண்டிருந்தனர் என்றார் சிப்ரியன். இக்காலத்தில் இவற்றைக்குறிக்க Sacrament என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது. சிப்ரியனின் போதனைகள் நிச்சயம் பிசப்புக்களை அப்போஸ்தல அதிகாரம் உள்ளவர்களாக மாற்றியது. அத்தோடு ரோமில் இருந்த பிசப்புக்கு விசேஷ முக்கியத்துவமும், சலுகையும் அளிக்கப்பட வேண்டும் என்றும் சிப்ரியன் கருதினார். பேதுரு ரோமின் முதல் பிசப்பாக இருந்தார் என்று இவர் நம்பியதே இதற்குக் காரணம். இருந்தாலும், ரோமின் பிசப் மற்ற பிசப்புக்களின் மீது அதிகாரம் கொண்டவராகவோ அல்லது சகல அதிகாரம் கொண்ட தெய்வீகத் தன்மையுடையவராகவோ சிப்ரியன் கருதவில்லை.
சிப்ரியன் சபையைப்பற்றி விளக்கும்போது, சபையை விட்டு விலகுவது பாவம் என்று குறிப்பிட்டார். கத்தோலிக்க சபை மட்டுமே அப்போஸ்தல சபை என்றும், ஏனையதெல்லாம் போலிகள் என்றும் விளக்கினார். பரிசுத்த ஆவி கத்தோலிக்க சபையில் மட்டுமே இருந்தாகக் கூறினார். சபைக்கு வெளியில் இரட்சிப்புக்கு வழியில்லை என்பது சிப்ரியனின் போதனையாக இருந்தது. கத்தோலிக்க சபைக்கு வெளியில் எவராலும் கொடுக்கப்படும் திருமுழுக்கும் பயனற்றது என்று விளக்கினார். இதனால் ரோம பிசப்புக்கும் இவருக்கும் பெரும் கருத்து வேறுபாடும், போராட்டமும் ஏற்பட்டது.
258ல் வெலேரியனின் கொடுமைகள் ஆரம்பித்த காலத்தில் சிப்ரியன் கார்த்தேஜில் இருந்து 40 மைல்களுக்கு அப்பால் தலைகொய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிப்ரியனின் சபைத்தலைவர்கள் பற்றிய போதனைகள் திருச்சபையை பின்பு பிசப்புக்களின் சபையாக மாற்றத் துணை செய்தன. சிப்ரியன் எல்லா பிசப்புக்களும் சமம் என்று கூறியிருந்தாலும் பின்பு அது கைவிடப்பட்டு ரோம பிசப்பே எல்லோருக்கும் தலைவர் என்ற கொள்கை உறுதிபெறத் தொடங்கியது.