தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு கடந்த வருடத் அக்டோபர் மாதத்தில் மதமாற்றத்தடைச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது எவரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். இந்தியாவிலேயே சமுதாய சீர்திருத்தங்களில் முன்னணி இடத்தை வகித்தது தமிழ்நாடு. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கொள்கைகள் தீப்பொறிகளாக சுடர்விட்டுத் தெரித்ததும் தமிழ்நாட்டில்தான். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை சாடிய பெரியாரை வளர்த்ததும் தமிழ் நாடுதான். இத்தனை சீர்திருத்தங்களுக்கும் பெயர்போன மாநிலம் மத ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் மதமாற்றத்தடைச்சட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பா. ஜ. கா ஆட்சி செய்யும் பகுதிகளில் இச்சட்டத் கொண்டுவரப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இருந்திருக்காது. இந்துத்துவாக்களுக்கு சோறுட்டி வளர்க்கும் கட்சி அது. இன்று திராவிட கட்சிகளில் ஒன்று இந்துத்துவக்கோட்பாட்டைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல.
மதவாதத்தின் அடிப்படையில் அரசியல் நடத்துவது மிகவும் பிற்போக்கான ஒரு செயலாகும், மதவாதம் அது வளரும் நாட்டின் சமாதானத்திற்கும், உலக சமாதானத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை தெலிபான் ஆப்கானிஸ்தானில் தெளிவுபடுத்தியிருக்கிறது. மதவாதம் எங்கும், எந்த மதத்தின் அடிப்படையில் எழுந்தாலும் ஆபத்துதான்.
தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றிக் கொச்சைப்படுத்தும் சக்திகளிடமிருந்து அவர்களைக் காப்பதற்காகவே இந்தச் சட்டம் என்று தமிழக அரசு காரணம் கூறுகிறது. தலித் மக்கள் சாதிப்பித்தர்களாலும், உயர்சாத இந்துக்களாலும் மிதிக்கப்படுபவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சிந்திக்கத்தெரியாத தொட்டில் குழந்தைகளல்ல. உயர்சாதி இந்துக்களின் கொடுமைகளில் இருந்து தப்பி சுயமரியாதையுடன் தாம் பிறந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற அடிப்படைத்தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக அவர்கள் தாங்களாகவே வேறு மதங்களை நாடிப்போகிறார்கள். இது ஒரு நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடந்து வந்திருக்கின்றது. தலித்துக்களை மற்ற மதத்தார் வற்புறுத்தி மதம்மாற்றுவதாக சொல்லுவது சரியல்ல. இச்சட்டம் உயர்சாதி இந்துக்கள் தலித்துக்களைத் தொடர்ந்து மிதிக்க விழ வகுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்துத்துவத்தை தமிழகத்தில் பலவந்தமாகத் திணிக்கும் முயற்சியின் ஆரம்ப கட்டம் இது. இதனால் இந்துக்களல்லாதவர்களும், சிறுபான்மை மக்களும் ஓரங்கட்டப்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள்.- ஆசிரியர்