இன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்தின் பெரும்பகுதி திருமறையின் அதிகாரத்தில் நம்பிக்கையற்றதாகக் காணப்படுகின்றது. திருமறைக்கு வெளியில் இருந்தும் சத்தியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படைக் கோட்பாட்டைப் பின்பற்றி வரும் கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே சபைகளுக்கும், தனிநபர் ஊழியங்களுக்கும் தமிழர்கள் மத்தியில் குறைவே இல்லை. இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் ஊழியங்கள் திருமறைக்கு வெளியில் இருந்து வரும் தனிமனித அனுபவத்தின் அடிப்படையில் எதையும் சத்தியமாக ஏற்றுக் கொள்வதில் ஆச்சரியமில்லை. கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே குழுக்களைச் சாராதவர்களும் திருமறையின் மெய்த்தன்மை பற்றிய அறிவும், திருமறையில் ஆழ்ந்த நுண்ணிய ஞானமும் அற்றவர்களாக இருப்பதால் எதையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். திருச்சபைப் போதகர்கள் மத்தியில் வேதஞானம் மிகக் குறைவாக இருப்பதையும் பிரசங்கங்கள், கதா காலாட்சேயபங்களைப் போல காதைக் குளிர வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதையும் யாரால் மறுக்க முடியும்? சுவிசேஷ இயக்கம், சுவிசேஷ சபைகள் என்ற மாயத்தோற்றதில் தமிழ் கிறிஸ்தவ உலகம் முழுதும் இன்று புதிய சுவிசேஷ இயக்கத்தால் நிரம்பி வழிகின்றது. புதிய சுவிசேஷ இயக்கம் என்பது மெய்ச்சுவிசேஷ இயக்கத்திற்கு எதிரான, முரணான ஒரு கூட்டம். இது எப்படி உருப்பெற்றது, இதனால் நம்மத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்ன? என்று பார்ப்போம்.
தமிழ் கிறிஸ்தவ உலகில் “லிபரலிசம்”
1921ம் ஆண்டில் அமெரிக்க இறையியலறிஞரான கிரேசம் மேகன் “கிறிஸ்தவமும், லிபரலிசமும்” என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் அவர் லிபரலிசம் எவ்வாறு அமெரிக்க கிறிஸ்தவ உலகைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று விளக்கியுள்ளார். இந்த லிபரல் கோட்பாடுகளே தமிழ் உலகிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு இன்று கிறிஸ்தவ சபைகளையும், ஊழியங்களையும் பெருமளவிற்குப் பாதித்து வருகின்றது.
லிபரலிசத்திற்கு விளக்கம் கொடுக்கும் கிரேசம் மேகன், “லிபரலிசம், கிறிஸ்தவத்தின் பொதுவான அம்சங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும், அதன் விசேஷ அம்சங்களான கிறிஸ்துவைப்பற்றிய போதனை, அவரது மரணத்தாலும், உயிர்த்தெழுதலாலும் ஏற்படும் மீட்பு ஆகியவை தற்காலிகமான அடையாளங்களே என்றும் தெரிவிக்கின்றது. அதாவது, கிறிஸ்தவத்தின் விசேஷ அம்சங்களைப்பற்றிய விஞ்ஞான ரீதியிலான எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதன் பொதுவான அம்சங்கள் மட்டுமே கிறிஸ்தவத்தின் சாராம்சமாகக் கருதப்பட வேண்டுமென்று லிபரல் இறையியலாளன் கருதுகிறான்.” என்று கூறுகிறார்.
அத்தோடு, கிறிஸ்தவ திருமறை போதிக்கும் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் அனுபவம் மட்டுமே முக்கியமானது என்றும், அதன் வரலாற்று அம்சங்களைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்றும் போதிக்கிறது லிபரலிசம். ஆகவே, லிபரல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களைப் பொறுத்தவரையில் திருமறையின் பொதுவான போதனை மட்டுமே சத்தியம்; அதன் ஏனைய போதனைகளைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இதிலிருந்து திருமறையைப்பற்றி வரலாற்றுக் கிறிஸ்வம் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கு மாறான எண்ணங்களை லிபரலிசம் கொண்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
லிபரலிசம், திருமறையைக் கர்த்தருடைய சர்வ அதிகாரம் கொண்ட ஒரே வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. திருமறையைக் குறைபாடற்ற, முற்றும் நிறைவான, எக்காலத்திற்கும் போதுமான தேவனுடைய வெளிப்பாடாக லிபரலிசம் கருதுவதில்லை. ஆகவே, கிறிஸ்தவத்தைப்பற்றிய அதன் அணுகுமுறையும் வரலாற்றுக் கிறிஸ்தவத்திற்கு மாறானதாக இருக்கின்றது. திருமறை போதிக்கும் கிறிஸ்தவ அனுபவத்தை ஏற்றுக்கொள்ளும் லிபரலிசம், அவ்வனுபவம் திருமறை போதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை முற்றாக நிராகரிக்கின்றது. அதாவது, கிறிஸ்தவ அனுபவம்தான் முக்கியமே தவிர, ஒருவர் கிறிஸ்துவின் இறப்பைப்பற்றியும், உயிர்த்தெழுதலைப்பற்றியும் திருமறை போதிக்கும் அதே நம்பிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமில்லை என்பது லிபரலிசத்தின் போதனை.
இப்போதனையினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை நாம் ஆராய வேண்டும். இதன் மூலம் திருமறையின் மெய்த்தன்மையை லிபரலிசம் நிராகரிக்கின்றது. அதன் முழு அதிகாரத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்தவ அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் லிபரலிசம் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அது ஒரு போலியான, திருமறைக்கு மாறான ஒரு அனுபவத்தை கிறிஸ்தவத்தின் பேரில் அறிமுகப்படுத்துகிறது. மெய்யான கிறிஸ்தவ அனுபவம், எப்போதும் திருமறை போதிக்கும் கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் ஏற்படும் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே அமையும், அதாவது, கிறிஸ்துவைப் பற்றி திருமறை போதிக்கும் சத்தியங்களுக்கு முரணான எந்த அனுபவமும் கிறிஸ்தவ அனுபவமாக இருக்க முடியாது. அனுபவத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து திருமறையின் போதனைகளை நிராகரித்தால் அது சாத்தானின் வழிகளில் போவதற்கே துணைபுரியும். இதைத்தான் லிபரலிசம் செய்து வருகிறது.
கிறிஸ்தவ அனுபவம் பழைய, புதிய ஏற்பாட்டுப் போதனைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். அவ்வனுபவத்தைக் கர்த்தர் தனது வார்த்தையைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே அளிக்கிறார் (ரோமர் 10). கர்த்தருடைய வார்த்தை மட்டுதே இரட்சிப்பைப் பற்றிய நற்செய்தியை அளிக்கிறது. அதனை வேறு எதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது. அதுவும், ஆவியானவர் அந்நற்செய்தியையே நமது மனந்திரும்புதலுக் கேதுவாகப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவ இரட்சிப்பின் அனுபவத்தை வேறு எதன் மூலமாகவும் அளிப்பதில்லை. திருமறையின் அதிகாரத்திற் கெதிராகப் பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் செயல்படுவதில்லை. திருமறை போதிக்கும் இச்சத்தியங்களுக்கெல்லாம் முரணான போதனைகளையே லிபரலிசம் அளிக்கின்றது.
இதற்கெல்லாம் காரணம், லிபரலிசம் திருமறையில் எந்தக்குறைபாடோ, தவறோ இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான். அதன் வரலாற்று அம்சங்கள் நம்பத்தகுந்தவகையில் இல்லை என்ற எண்ணத்தால் அவற்றை உவமைகளாகக் கருதி விளக்கங் கொடுக்க முயல்கிறது லிபரலிசம். வேதம், நாம் நம்பிக் கடைப்பிடிக்க வேண்டிய தவறிழைக்கவியலாத கர்த்தரின் கட்டளைவிதி என்ற எண்ணமே லிபரல் கோட்பாட்டாளனிடத்தில் இல்லை. இதனால், லிபரல் இறையியலாளன் கிறிஸ்துவையும், மனிதனையும், பாவத்தையும், திருமறையின் ஏனைய சத்தியங்களையும் எப்போதும் சந்தேகக் கண்களுடனேயே ஆராய்றி£ன். லிபரல் இறையியலாளனுடைய அடிப்படை அணுகுமுறையே (Presupposition) தவறானதாக இருப்பதால் அவனைப் பொறுத்தவரை திருமறையைச் சந்தேகிப்பது அவனுக்குத் தவறானதாகப்படவில்லை.
இறையியல் கல்லூரிகளில் லிபரலிசம்
இன்று நம்மத்தியில் காணப்படும் இறையியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் லிபரல் கொள்கைகளின் அடிப்படையிலேயே வருங்கால போதகர்களுக்கு வேத ஞானம் வழங்கப்படுகின்றது. திருமறையைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதிலும், தங்களுடைய ஆன்மீக வாழ்விற்கு அழிவைத்தேடிக் கொள்வதிலுமே நான்கு வருடங்களை வீணாக்கிக் கொள்ளும் அநேக இளம் வாலிபர்களை இவ்விறையியல் கல்லூரிகளில் காணலாம். இந்து மதத்தை ஒரு முக்கிய பாடமாகவும், பிற மதத்தினரோடு கலந்துரையாடல் (Diologue) செய்வதை ஒரு முக்கிய சுவிசேஷ முறையாகவும் பல கல்லூரிகள் போதித்து வருகின்றன. இதற்குச் சான்றாக தயானந்தன் பிரான்ஸிசின் “தமிழ்ச் சைவம்”, குலொஸ்டமாயரின் “கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள இந்திய இறையியல்” ஆகிய நூல்களைக் கூறலாம். இன்றைய தமிழக, இந்திய இறையியல் சிந்தனைப் போக்கை இந்நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
மேலும், இக்கல்லூரிகள் வேதப்படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அமெரிக்காவின் மெக்காவரன் (Donald McGavran) ஏற்றுமதி செய்த சபை வளர்ச்சி முறைகளுக்கும் (Church Growth Principles), சமய சமரசக் கோட்பாட்டிற்கும் (Ecumenism) முக்கியத்துவம் கொடுத்து இறையியல் போதனைகளை அளிப்பதால் வருங்காலப் போதகர்கள் அத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே போதக ஊழியத்தை ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மெக்காவரனின் போதனைகள் நற்செய்தி ஊழியத்தில் சூழிசைவுக் கோட்பாட்டை (Contextualisation) வற்புறுத்துகிறது. இப்போதனை, நற்செய்தி ஊழியக்காரர் தாம் ஊழியம் செய்யும் மக்கள் காணப்படும் காலச்சாரப் பண்பாடு, சமய நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகும் விதத்தில் கிறிஸ்தவ போதனையை அளித்து சபை நிறுவ ஊக்குவிக்கிறது. மெக்காவரனின் போதனைகள் Cross-cultural ministryயையும் பெரிதும் வற்புறுத்துகிறது. இம்முறைகள் திருமறையின் சத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதநலவாதத்தின் (Humanism) அடிப்படையில் அமைந்த வழிகளின் மூலம் கர்த்தருக்கு ஆள் சேர்ப்பதையே தீவிரமாக வலியுறுத்துகின்றன. திருமறை, இவ்வாறான போதனைகளை அளிக்கவில்லை. கிறிஸ்து எங்குமே Cross-cultural ministry பற்றிப் போதிக்கவில்லை. அந்நிய மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் ஊழியம் செய்யும்போது, அவர்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு நாம் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்தான். அவர்கள் மத்தியில் திருமறைக்கு எதிரானதாக அமையாத பழக்க வழக்கங்களை அங்கீகரிக்க வேண்டியதும் அவசியதே (உதாரணம்: வீட்டிற்குள் நுழையுமுன் காலணியை வெளியில் வைத்தல் போன்றவை). இதற்கு மேலாக எதையும் செய்யுமாறு வேதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மெக்காவரனின் போதனைகள் சூழிசைவுக் கோட்பாடு என்ற பெயரில் வேதம் அங்கீகரிக்காத அந்நிய மத, பண்பாட்டு வழக்கங்களைப் பயன்படுத்தி நற்செய்தி ஊழியம் செய்வதை வலியுறுத்துகிறது. இப்போதனைகளுக்கே இன்று இந்திய இறையியல் கல்லூரிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்து மதத்தின் மூலமும், திராவிட சமயத்தின் மூலமும் அம்மதங்களை விட்டு விலகாமலேயே கிறிஸ்துவை அறிந்து கொள்ளலாம் என்ற போதனை இன்று சூடுபிடித்திருப்பதற்கு மெக்காவரன் போன்றோரின் போதனைகள் இறையியல் கல்லூரிகளையும், திருச்சபைகளையும் ஊடுருவியிருப்பதே காரணம்.
தமிழ் கிறிஸ்தவ உலகின் சமய சமரசப் போக்கு
லிபரலிசம் மட்டுமல்லாது இன்றைய தமிழ் கிறிஸ்தவ உலகை சமயசமரசக் கோட்பாடும் (Ecumenism) பாதித்துள்ளது. ஐக்கியத்தின் பெயரில் எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் கிறிஸ்தவ திருச்சபைகள், நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் போக்கு பரவலாகக் காணப்படுகின்றது. கிறிஸ்தவ இறையியல் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிறிஸ்தவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, சுவிசேஷ ஊழியத்திற்கு இடைஞ்சலை உருவாக்கும் என்ற மனப்பான்மை தமிழ் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோரின் இரத்தத்தில் ஊறிக்காணப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
மேலை நாடுகளில் உருவாகித் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு இறக்குமதி செய்யப்பட்ட லிபரலிசத்தைப்போன்ற இன்னுமொரு போலித்தனமான இறையியல் நம்பிக்கையே சமயசமரசக் கோட்பாடு ஆகும். இது கிறிஸ்தவ சமயக் குழுக்களுடன் ரோமன் கத்தோலிக்க மதத்தையும் இணைத்தே பார்க்கிறது. தமிழ் கிறிஸ்தவ சமயக்குழுக்களின் அநேகமானவை இன்று ரோமன் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே கணிக்கின்றன.
லிபரலிசம் திருமறையில் கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததால், இறையியல் போதனைகளற்ற ஒரு போலிச்சமயம் கிறிஸ்தவத்தின் பெயரில் உருவாகி சமய சமரசப்போக்கிற்கும் எந்தத்தடையும் இருக்கவில்லை. திருமறையில் நம்பிக்கைவைத்து இறையியல் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதே சமய சமரசப்போக்கிற்கு ஆபத்து ஏற்படுகின்றது. தமிழ் கிறிஸ்தவ உலகின் அனைத்து சமயக்குழுக்களும், நிறுவனங்களும் இன்று சமய சமரசத்தை வற்புறுத்தி வருகின்றன.
இறையியல் போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அவற்றை வலியுறுத்தி அவற்றின் அடிப்படையில் ஐக்கியத்தை நாடக்கூடாது, ஐக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் எந்த இறையியல் கோட்பாட்டையும் சக கிறிஸ்தவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது, திருமறையிலிருந்து ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத குறைந்தபட்ச போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பவைகளே சமய சமரச இயக்கத்தின் போதனை.
ஏற்கனவே நாம் விளக்கிய மெக்காவரனின் திருச்சபை வளர்ச்சிக் கோட்பாடுகள் இத்தகைய சமய சமரசக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவையே. இது ஒரு நாட்டின் மத, கலாச்சார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் சபைகளை அமைப்பதை வலியுறுத்துகிறதே தவிர திருமறைத்கோ அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கோ மதிப்பளிப்பதில்லை. ரோமன் கத்தோலிக்க சபை, லிபரலிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்படும் சமயக்குழுக்கள், கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே ஊழியங்கள் அனைத்தையும் எந்தவித வேறுபாடுமின்றி கிறிஸ்தவ சபைகளாக ஏற்றுக்கொள்ளும் சமய சமரசப்போக்குடைய இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்திய திருச்சபை வளர்ச்சி இயக்கமும் நடை போடுகின்றது (Indian Church Growth Movement).
கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே இயக்கங்கள்
தமிழ் கிறிஸ்தவ உலகை சுற்றி வளைத்துப் பிடித்திருக்கும் கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே இயக்கங்களை நாம் புதிய சுவிசேஷ இயக்கத்தின் ஒரு பகுதி என்று நாம் தயங்காமல் இனங்கண்டு கொள்ள முடியும். வேதத்தின் சர்வ அதிகாரத்தை இவ்வியக்கங்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன. கர்த்தர் தொடர்ந்து தனிமனிதனுக்கு தனது சித்தத்தை வெளிப்படுத்துகிறார் என்று கூறி கர்த்தரின் வெளிப்படுத்தல் வேதம் முழுமையாகக் கொடுக்கப்பட்டதுடன் முடிவடைந்துவிட்டது என்பதை இவ்வியக்கங்கள் மறுதலிக்கின்றன. வெறும் மனித அனுபவத்திற்குத் தொடர்ந்து தீனி போட்டு வேதவிரோதமான செயல்களை இவ்வியக்கங்கள் செய்து வருகின்றன. ஆராதனை என்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கள் கர்த்தருக்கு இவர்கள் அளிக்கும் அந்நிய நெருப்பு வேத சத்தியங்களை இவர்கள் ஆராதனையில் பின்பற்றுவதில்லை. வேத ஆராய்ச்சிக்கும், தெளிவான வேத பிரசங்கத்திற்கும் இவர்கள் இயக்கத்தில் இடமில்லை. தமிழ்க்கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு பெருங்குழப்பத்தையும், மயக்கத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கும் இவ்வியக்கங்கள் புதிய சுவிசேஷ இயக்கத்தின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் பலரிருப்பதே தமிழ்க்கிறிஸ்தவ உலகில் நிலவும் குழப்ப நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
புதிய சுவிசேஷ இயக்கத்தின் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவதெப்படி?
1. இதற்கு எந்தவிதமான குறுக்கு வழியும் இல்லை. நாம் “மறுபடியும் வேதம்” என்று குரலெலுப்பி பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளைப்போல வேதத்தைப் படிப்பதிலும், ஆராய்வதிலும், அதிலிருப்பவற்றைப் பிரசங்கிப்பதிலும் ஆர்வமும், ஊக்கமும் காட்ட வேண்டும். வேதத்திற்கு மதிப்பளிக்காதவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்கக்கூடாது. வேதத்தை வைத்தே வேதத்திற்கு எதிராக செயல்படும் “பிலேயாம்” களை இனங்கண்டு அவர்களுடைய முகத்திரையைக் கிழிக்க வேண்டும். பச்சோந்திகள் நிரம்பி வழியும் நம் சூழ்நிலையில் உண்மையோடும், நேர்மையோடும் நடந்து கொள்ள வேண்டும்.
2. போதகர்கள் வேதத்தை நன்றாகப் படித்து பிரசங்கங்களும், போதனைகளும் வேதபூர்வமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேதத்திற்கு மட்டுமே நீங்கள் மதிப்புக் கொடுக்கிறீர்கள் என்பது உங்களுடைய சபை மக்களுக்குத் தெரியவேண்டும். வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து பிரசங்கிக்காதவர்களை சபையின் பிரசங்க மேடைப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு சமூகத்தில் எத்தனை மதிப்பு இருந்தபோதும் அவர் வேதபூர்வமாக பிரசங்கிக்காதவராக இருந்தால் நமது சபைகளில் இடமளிக்கக்கூடாது.
3. நமது சபையில் ஊழிய வாஞ்சையுடையவர்களை ஏதாவதொரு இறையியல் கல்லூரிக்கு அனுப்பிவிடாமல் சபையில் போதித்து, ஊழியத்தில் பயன்படுத்தி வளர்க்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் 90%மான இறையியல் கல்லூரிகள் புதிய சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவை. நமது இளைஞர்களை அங்கே அனுப்பி அவர்களது வாழ்க்கையையும் ஊழியத்தையும் நாமே கெடுத்தால் கர்த்தர் நம்மை சும்மா விடமாட்டார். அக்கல்லூரிகளுக்குப் போய் புதிய சுவிசேஷ இயக்க போதனைகளை பெற்றுடிவருகிறவர்கள் ஆத்துமாக்களுக்கு சத்தியத்தை அல்ல விஷத்தையே கொடுக்க முடியும். சீர்திருத்தப் போதனைகளை விசுவாசிக்கும் சபைகளும் போதனைகளும் தமிழ் மக்கள் மத்தியில் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சமய சமரச இறையியல் கல்லூரிகளை முற்றாக நிராகரிக்க வேண்டும். நமது மக்களுக்கு அவற்றின் சுயரூபத்தை வெளிப்படுத்தி அவற்றால் ஏற்படும் ஆபத்தை உணர்த்த வேண்டும். இதைச் செய்யத் துணிவில்லாத போதகன் சீர்திருத்தப் போதகனாக இருக்க முடியாது.
4. நீங்களும் சபை மக்களும் சத்தியத்தில் நிலைத்திருக்க சபையாக விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொண்டு இதைத்தான் நாம் விசுவாசிக்கிறோம் என்று ஊரறிய வெளிப்படுத்த வேண்டும். 1689 விசுவாச அறிக்கையும், வினாவிடை போதனைகளும் சபை சத்தியத்தில் ஊறி வளரப் பெருந்துணை செய்யும். அவற்றை சபை மக்களுக்கு தொடர்ந்து போதிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் சபையின் அங்கத்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சபையில் அங்கத்தவர்களாக சேர்பவர்கள் இவற்றை படித்து விசுவாசித்து, ஏற்று அங்கத்தவர்களாக சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய சபை மக்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஒரு போதகன் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது. புதிய சுவிசேஷ இயக்கத்தை நமது விசுவாச அறிக்கையும், வினா-விடைப்போதனைகளும் முற்றாக நிராகரிக்கின்றன. இவற்றை ஏற்க மறுப்பவர்களோடும், இவை இல்லாமல் சபை நடத்த முடியும் என்று பேசுபவர்களோடும் நாம் மிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாம் விசுவாசிப்பதை அறிக்கையிடவும், வெளிப்படையாக சொல்லவும் மறுப்பவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள். அவர்களால் நமது சபைகளுக்கு எந்தப்பிரயோசனமும் இருக்க முடியாது.
5. போதகர்களும், உதவிக்காரர்களும் நேர்மையாகவும், உண்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இன்று சபைகளில் அத்தகைய ஊழியக்காரர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கின்றது. சத்தியத்திற்காக உயிர் கொடுத்து உழைப்பவர்கள் நாம் என்பதை நமது மக்கள் அறிந்து கொள்ளும்படி நமது வாழ்க்கையும், ஊழியமும் இருக்க வேண்டும். இப்படி வாழ முயல்வதால் அநேகர் நம்மை வெறுக்கலாம், சபைக்கு வருவதை பலர் நிறுத்திக்கொள்ளலாம். வெளியில் நம்மை அநேகர் குறை கூறுவார்கள். ஆனால், அத்தகைய ஊழியக்காரர்களையே கர்த்தர் நேசிக்கிறார். அத்தகைய ஊழியம் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.