தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் கிராமங்களுக்குக் குறைவில்லை. அதேபோல் மலேசியாவில் தோட்டங்களிலும், கம்பங்களிலும் வாழும் தமிழர்களுக்குக் குறைவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் 64,000 கிராமங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இருக்கும் கிராமங்களின் எண்ணிக்கை பற்றி சொல்லத் தேவையில்லை. இந்தக் கிராமப்புற மக்களில் அநேகர் இன்றும் இயேசு கிறிஸ்துவை அறியாதிருக்கிறார்கள். இக்கிராமங்களுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டியது மட்டுமல்ல, அங்கெல்லாம் வேதபூர்வமான கிறிஸ்தவ சபைகள் உருவாக வேண்டியதும் அவசியம். இவ்விதழின் அட்டைப்படம் தமிழகத்தின் ஒரு கிராமத்தையும், இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள இன்னுமொரு கிராமத்தில் கூடிவரும் ஒரு சபையையும் காட்டுகிறது. நாம் திருமறைத்தீபத்தை ஏழு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தபோது இறையியல் போதனையை போதகர்களுக்கு வழங்கி உதவுவது மட்டுதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று பட்டிதொட்டியெல்லாம் தீபத்தை வாசிக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அட்டைப்படத்தில் இருக்கும் கிராமத்து விசுவாசிகளுக்கும் அது சீர்திருத்த இறையியல் போதனைகளை அளித்து வருகிறது. லூதரைப்பற்றியும், கல்வினைப்பற்றியும், ஜோன் ஓவனைப்பற்றியும், ஸ்பர்ஜனைப்பற்றியும், கேரியைப்பற்றியும் இன்று கிராமத்து மக்களும் வாசித்து அறிந்து வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் மேன்மையை உணர்கிறார்கள். கிராமத்து மக்களுக்கும் இறையியல் புரியும் என்பதை திருமறைத்தீபம் நமக்குப் புரிய வைத்திருக்கிறது. இதுவரை நான் ஏன் சீர்திருத்தவாதிகளைப்பற்றி கேள்விப்படாமலிருந்தேன்? என்று ஒரு விசுவாசி ஒரு முறை வருத்தத்துடன் எழுதிக் கேட்டிருந்தார்.
சுவிசேஷ ஊழியம் எப்படி இருக்க வேண்டுமென்றும், கர்த்தருடைய ஊழியக்காரரைக் குறைகூறலாமா? என்றும், உதவிக்காரர்களின் பணி பற்றியும் இவ்விதழில் எழுதியிருக்கிறோம். இவையெல்லாவற்றையிம் வேதபூர்வமாக அணுகி ஆராய முயற்சி செய்திருக்கிறோம். வளரும் சீர்திருத்த சபைகள் இவற்றைக் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. கர்த்தர் இந்த ஆக்கங்களையும் இந்த இதழில் வரும் ஏனைய ஆக்கங்களையும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்வாராக. ஜெபித்தும், கடிதங்கள் எழுதியும், இமெயிலில் தொடர்பு கொண்டும் தொடர்ந்து எம்மை இந்தப்பணியில் ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு எமது அன்பு கலந்த நன்றிகள்! – ஆசிரியர்