துன்பமும், ஆறுதலும் (4-ம் நூற்றாண்டு)
அலெக்சாண்டர் செவேரஸின் (Alexander Severus 222-235) காலத்திலும், அரேபியனாகிய பிலிப்பின் காலத்திலும் (Philip the Arabian 244-249) ரோமப் பேரரசு திருச்சபையிடம் நட்போடு நடந்து கொண்டது. இந்தக் காலப்பகுதியில் மனிதர்கள் எல்லா சமயங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் இருக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகக்கூடிய காரியங்களின் அடிப்படையில் எல்லோருக்கும் பொதுவான ஒரு சமயத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். செவேரஸூடனும், பிலிப்புடனும் ஒரிகன் (Origan) நல்ல நட்புடன் கடித்த்தொடர்பை வைத்திருந்தார். 38 ஆண்டுகளுக்கு திருச்சபையால் அமைதியை அனுபவிக்க முடிந்தது. இதன் காரணமாக திருச்சபை வளர்ந்து அதன் அங்கத்தவர்களின் தொகை அதிகரித்து, சமுதாயத்தில் திருச்சபைக்கு அதிக மதிப்பும் இருந்தது. ஆனால், டேசியனாலுத் (Decius), வெலேரியனாலும் (Valerain) திருச்சபைக்கு பெருந்துன்பம் ஏற்பட்டது. திருச்சபை இத்துன்பத்தை 250-ல் இருந்து 260 வரை அனுபவிக்க நேர்ந்தது.
இந்தக்காலப்பகுதியில் ரோம அரசுக்கு பெருங் கஷ்டம் ஏற்பட்டது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் ரோம அரசை எதிரிகள் சூழ்ந்து கொண்டனர். கோதியர்களின் (Goths) தாக்குதல் இவற்றில் மிகவும் தீவிரமானதாக இருந்தது. ரோமர்களின் பழங்கால வழக்கங்களுக்குத் திரும்பினால் மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று நம்பிய டேசியஸ் (Decius 249-251) கிறிஸ்தவத்தை அடியோடு அழித்தொழிக்கக் கிளம்பினான். வெலேரியனின் (Valerian 254-260) காலத்தில் அரசியல் நிலமை மேலும் மோசமானது. மறுபடியும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த வேண்டும் என்று பலர் தூண்டியதால் வெலேரியன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். அது மிகவும் கொடூரமானதாக இருந்தது. இதனால் பல முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவ தலைவர்கள் கொடுமையான துன்பங்களை ரோம அரசின் கீழ் அனுபவித்தனர். அவர்களில் கார்த்தேஜை சேர்ந்த சிப்ரியனும் (Cyprian), ரோமின் இரண்டு பிசப்புக்களாக இருந்த ஸ்டீபனும் (Stephen), இரண்டாவது சிக்டஸூம் (Sixtus II) அடங்குவர்.
வெலேரியனின் கொடுமையான துன்புறுத்தலை அடுத்த நாற்பது வருடங்களுக்கு தொடர்ச்சியாக எந்தவிதமான துன்புறுத்தலையும் சந்திக்காமல் திருச்சபை சமாதானத்தை அனுபவித்தது. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 284-ல் ஆட்சிக்கு வந்த டயோகிளேசன் (Diocletion) தனது சாம்ராஜ்யம் விழுந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் பதினெட்டு வருடங்களுக்கு திருச்சபையைத் துன்புறுத்தாமல் இருந்தான். ஆனால், கிழக்கில் இருந்த அவனுடைய நண்பனான களோரியஸின் (Galerius) விடாப்பிடியான தூண்டுதல்களால் திருச்சபையை அவன் மிகவும் கொடூமாகத் துன்புறுத்தத் தொடங்கினான். 303-ம் ஆண்டில் இத்தகைய துன்புறுத்தல் ஆரம்பித்தது. கிறிஸ்தவர்களின் ஆராதனைத்தலங்கள் அனைத்தையும், ஆத்மீக நூல்கள் அனைத்தையும் முற்றாக அழிக்கும்படி அவன் உத்தரவிட்டான். அரசனின் படைகள் ரோம ராஜ்யத்தின் கிழக்குப் பகுதியின் தலைநகராக இருந்த நிக்கோமீடியாவுக்குள் (Nicomedia) நுழைந்து அங்கிருந்த மிக அழகிய திருச்சபையின் கட்டடத்திற்குள் போனபோது அங்கே எந்தவித உருவச்சிலைகளும் இல்லாதிருந்ததைப் பார்த்து பிரமித்துப்போனார்கள். அவர்கள் அங்கிருந்த வேதப்புத்தகங்களை ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சபைக்கட்டடத்தை தீவைத்துக் கொளுத்தினர்.
டயோகிளேசனின் சேவகனான களேரியஸ் நிர்வகித்த பகுதிகளில் இத்தகைய கொடுமைகள் அளவுக்கு அதிகமாக நடந்தன. அவன் கிறிஸ்தவர்களை இறப்பதற்கு முன்பாக சித்திரவதை செய்தான். மேற்குப் பகுதியின் அதிபதியாக இருந்த மெக்சிமியனும் (Maximian) இத்தாலி, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் இத்தகைய கொடுமைகளைத் தீவிரமாகச் செய்தான். ஆனால் பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின் ஆகிய பகுதிகளை மெக்சிமியனுக்குக்கீழ் சீசராகப் பணிபுரிந்து நிர்வகித்த கொன்ஸ்டான்டியஸ் (Constantius) இத்தகைய கொடுமைகளைச் செய்ய மறுத்தான். ஏனெனில், கர்த்தரின் ஆலயமாகிய சரீரத்தை சித்திரவதை செய்வது சரியல்ல என்பது அவனுடைய வாதமாக இருந்தது. மெக்சிமியனுக்கும், டயோகிளேசனுக்கம் பிறகு தானும், களேரியஸூம் ரோமப் பேரரசர்களாக 305-ல் பதவியேற்றபிறகும் இந்தக் கொள்கையை கொன்ஸ்டான்டியஸ் கடைப்பிடித்தான்.
கொன்ஸ்டான்டியஸ் 306-ல் இறந்தபிறகு அவனுடைய மகன் கொன்ஸ்டன்டைன் (Constantine) பதவியேற்றான். அவன் பல எதிரிகளை வென்று அரசைப் பலப்படுத்திக் கொண்டான். 312-ல் அக்டோபர் 27-ம் நாள் மெக்சென்டியஸை (Mexentius) மில்வியன் பாலத்தருகில் (Melvian Bridge) வெற்றி கொள்வதற்கு முன் அவன் ஒரு ஆத்மீக அனுபவத்தை அடைந்தான். அதாவது, அவன் வானத்தில் எரியும் ஒரு சிலுவையைப் பார்த்ததாகவும், அதற்குக் கீழ் “இந்த அடையாளத்தைக் கொண்டு நீ வெற்றி அடைவாய்” என்று கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததாகவும் கதை உலவுகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் இன்று வரை இதைப்பற்றி ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். கொன்ஸ்டன்டைன் கண்டது கனவு என்று கூறுவோரும் உண்டு. இல்லை, அது உண்மையில் அவனடைந்த ஆத்மீக அனுபவம் தான் என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியிருந்தபோதும், கொன்ஸ்டன்டைன் இதை நம்பி தன்னுடைய படைவீரர்களின் கொடிகள், ஆயுதங்கள், கவசங்களில் எல்லாம் சிலுவைக்குறியைப் பதித்து தனது எதிரிகளுடன் போருக்குச் சென்றான். அவன் போரில் அற்புதமாக வெற்றி பெற்று மெக்சேன்டியசைக் கொன்றான்.
அதற்குப்பின் கொன்ஸ்டன்டைன் தன்னைக் கிறிஸ்தவனாக அறிவித்து கிறிஸ்தவத்திற்கு தனது ராஜ்யத்தில் உயர்ந்த இடத்தை அளித்தான். கொன்ஸ்டன்டைன் தனது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருந்தபோதும் அவனுக்கு ஒருவிதத்தில் கிறிஸ்தவ அனுபவம் ஏற்பட்டிருந்திருக்கிறது. சிலைவழிபாட்டை அவன் கண்டித்து, கர்த்தரைத்துதித்து ஆராதித்திருக்கிறான். அவனுடைய சட்டங்களும், திட்டங்களும் கிறிஸ்தவ சத்தியத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அவன் தன் வாழ்நாளில் தொடர்ந்து ஆராதனைக்குப் போய் அமைதியாக பிரசங்கங்களைக் கேட்டு வந்திருக்கிறான். சுயநல நோக்கத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் அவன் இப்படி நடித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்து அவன் எந்த லாபத்தையும் சம்பாதித்திருக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம். கொன்ஸ்டன்டைன் வெளிப்படையாகத் தன்னைக் கிறிஸ்தவனாக அறிவித்து கிறிஸ்தவனாக நடந்து கொள்ள முயன்றான். கொன்ஸ்டன்டைன் மெய்யாகவே ஒரு கிறிஸ்தவனா? என்ற கேள்வியை வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து கேட்டுவருவார்கள்.
கொன்ஸ்டன்டைன் தன்னைக் கிறிஸ்தவனாக அறிவித்துக் கொண்டது திருச்சபைக்கு நன்மையும், அதேவேளை சில தீமைகளையும் விளைவித்தது. 312-ல் கொன்ஸ்டன்டைன் லைசீனியஸூடன் (Licinius) இணைந்து பேரரசர் பதவி வகித்தான். சில மாதங்களுக்கப் பிறகு மார்ச் 313-ல் அவர்கள் இருவரும் இணைந்து மிலானில் இருந்து ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின்படி கிறிஸ்தவம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமயமானது. அத்தோடு இதுவரை அரசால் பறித்தெடுக்கப்பட்ட திருச்சபைகள் அனைத்தும் திருப்பிக்கொடுக்கப்பட்டு, கிறிஸ்தவம் அடைந்திருந்த தொல்லைகள் துன்பங்களுக்கெல்லாம் ஈடு கட்டப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு இவையெல்லாம் நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாள் வராற்றில் சிறப்பான ஒரு நாள். அந்த அறிக்கை மேலும், தனிமனிதனின் சுதந்திரத்தை அங்கீகரித்து மேற்கில் இருந்த அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் மதசுதந்திரத்தை வழங்கியது. பதினொரு வருடங்களுக்கப்பின் கொன்ஸ்டன்டைன் லைசீனியஸை ஏட்டிரியநோபிள் (Adrianople) போரில் தோற்கடித்து கிழக்கு, மேற்கு ஆகிய இருபகுதிகளிலும் ரோம சாம்ராஜ்ய அதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டான். அதுமுதல் கிறிஸ்தவம் ரோமப்பேரரசு முழுவதிலும் முழுமையான சுதந்திரத்தை அனுபவித்தது.
தன்னுடைய அதிகாரங்களும், மதிப்பும் அதிகரிக்க அதிகரிக்க கொன்ஸ்டன்டைன் பெருமைகொள்ளத் தொடங்கினான். தன்னை அதிகமாக அலங்கரித்துக்கொள்வதிலும், விலைமதிப்பில்லாத அணிகளை அணிந்து பவனி வருவதையும் அவன் விரும்பினான். ஒருமுறை எருசெலேம் பிசப்புக்கு அத்தகைய அழகிய கண்ணைப்பறிக்கும் வஸ்திரத்தை அவன் பரிசாக அழித்தான். இந்தவகையில்தான் திருச்சபையில் பிசப்புக்கள் சிறப்பு அங்கி அணியும் வழக்கம் உருவாகியிருக்க முடியும்.
கொன்ஸ்டன்டைன் திருச்சபை பிசப்புக்களோடு நல்ல தொடர்பை வைத்திருந்து சமய சச்சரவுகளை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டினான். இவ்வாறு அரசன் சபைக்காரியங்களில் தலையிட்டு முடிவு காண்பது பின்பு அரசு, சபையை ஆளும் நிலைக்குத் தள்ளியதை வரலாற்றில் வாசிக்கிறோம். அரசன் சபைக்குத்தந்த ஆதரவால் இக்காலத்தில் நல்ல பல பலன்களும் இருந்தன. பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்பட்டனர். அடிமை வியாபாரம் நிறுத்தப்பட்டது. ஓய்வுநாளுக்கு நாட்டில் மதிப்புக்கொடுத்து மக்கள் நடந்து கொண்டனர். ஆராதனை ஒழுங்காக நடந்து வந்தது. அதேவேளை, அரசின் ஆதரவு சபைக்கு இருந்தபடியால் சபை மூப்பர்கள் அகங்காரத்துடன் நடந்து கொள்ளவும் பிற்காலத்தில் வழி வகுத்தது.
கொன்ஸ்டன்டைன் இத்தனை நல்ல காரியங்களைச் செய்தும் கிறிஸ்தவம் முழுமையாக ரோம சாம்ராஜ்யம் முழுவதும் பரவியதாகக் கூறிவிட முடியாது. செல்வந்தர்களாக இருந்தவர்கள் அரசனின் வழிகளைப் பின்பற்றவில்லை. அத்தோடு அரசன் ஏனைய மதங்களுக்கம் தனது ஆட்சியில் இடமளித்திருந்தான். கொன்ஸ்டன்டைன் தனக்கென்று ஒரு சிறப்பான தலைநகரத்த நிறுவி அதைக் கொன்ஸ்டன்டிநோபிள் என்று பெயரிட்டழைத்தான். 303-ல் அது கட்டி முடிக்கப்பட்டது. அந்நகரில் களியாட்டங்களுக்கும், விளையாட்டுகளுக்கம் இடமிருக்கவில்லை. கிறிஸ்தவப் போதனைகளை அனைவரும் மதித்து நடக்க அரச கட்டளை இருந்தது.
கொன்ஸ்டன்டைனுக்குப்பின் வந்தவர்கள் அவனைப்போல நடந்து கொள்ளவில்லை. அவனுடைய குணாதிசயங்களோ, திறமையோ அவர்களுக்கு இருக்கவில்லை. அவனுடைய பிள்ளைகள் அரசியலில் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. அத்தோடு அவர்கள் போலிப்போதனையான ஏரியனிசத்தை ஆதரித்தார்கள். கொன்ஸ்டன்டைனின் பிள்ளைகளால் துன்புறுத்தலுக்குள்ளான அவனுடைய பேரன் ஜீலியன் (Julian the Apostate 361-363) கிறிஸ்தவத்தை நிராகரித்து மறுபடியும் போலிமதங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பல தெய்வ வழிபாடு மறுபடியும் சாம்ராஜ்யத்தில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.
நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டயோகிளேசியனின் கீழ் பெருந்துன்பத்தையும், கொடுமைகளையும் கிறிஸ்தவ திருச்சபை அனுபவித்தது. ஆனால், நான்காம் நூற்றாண்டு முடிவதற்குள் போலிமதங்கள் ரோம ராஜ்யம் முழுவதையும் விட்டு அகன்றிருந்தன. இக்காலத்தில் ரோமில் இருந்த எல்லா சிலைவழிபாட்டு முறைகளும், புறமதக் கோவில்களும் அழிக்கப்பட்டிருந்தன என்று ஜெரோம் எழுதுகிறார். இருந்தபோதும், கிறிஸ்தவ திருச்சபை ஒருபுதுவித ஆபத்தை எதிர்நோக்கியது. குருமார்களையும், குருமடங்களையும், ஆசாரிய முறைகளையும் கிறிஸ்தவ திருச்சபை பின்பற்றும் ஆபத்து ஏற்பட்டது. சித்திரவதைகளையும், கொடுமைகளையும், துன்பங்களையும் அனுபவித்துவந்த கிறிஸ்தவம் அவற்றிலிருந்து விடுபட்டு அமைதியையும், சமாதானத்தையும், அரச ஆதரவையும் பெற்றுக்கொண்டிருந்தபோதும் அந்த சுதந்திரமே பல தீங்குகளையும் விளைவிக்கும் என்பதை திருச்சபை உணர்ந்திருக்கவில்லை.