ஏரியனும், சபைக் கவுன்சில்களும்
திருச்சபையில் 4-ம், 5-ம் நூற்றாண்டுகளில் வேத போதனைகள் சம்பந்தமான கடுமையான கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வந்திருந்திருக்கின்றன. முக்கியமாக இக்கருத்து வேறுபாடுகள் கிறிஸ்துவின் தெய்விக, மானுட தன்மைகளைப் பற்றியதாக இருந்தன. இக்காலங்களில் தனது போதனைகள் வேதபூர்வமானவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை திருச்சபைக்கு ஏற்பட்டது. சபைத்தலைவர்கள் கூடி வேத போதனைகள் சம்பந்தமான விவாதங்களை நடத்தி தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் திருச்சபை நான்கு முக்கிய சமயக் குழுக்களை (Church Councils) சந்தித்தது. இந்தக் குழுக்கள் திருச்சபையின் முக்கியமான தலைவர்களை உள்ளடக்கி சமய சம்பந்தமான கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருந்தன. இந்தக் காலப்பகுதியில் இறையியல் போதனை சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இக்காலப்பகுதிக்குப் பிறகும் சபைகளைப் பாதித்தன. அத்தகைய இறையியல் கருத்து வேறுபாடுகளில் ஒன்றுதான் “ஏரியனின் கருத்துவேறுபாடு” (Arian Controversy) என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகின்றது.
இந்தக் கருத்து வேறுபாடு திருச்சபையில் பிரிவினையை ஏற்படுத்தி மூன்று நூற்றாண்டுகளுக்கு அதைப் பாதித்ததாக இருந்தது. அலெக்சாந்திரியாவில் திருச்சபைக்குத் தலைவனாக, பிசப்பாக இருந்த ஏரியன் (Arian) என்பவனே இந்த முரண்பாட்டிற்குக் காரணமானவனாக இருந்தான். 318-ம் ஆண்டுகள் அளவில் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மைபற்றி சபை கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்க்கக்கூடிய கருத்துவேறுபாடுகளை ஏரியன் உருவாக்கினான். கிறிஸ்து ஒன்றுமில்லாமலிருந்து மனித உருவில் தோன்றினார் என்று ஏரியன் போதிக்க ஆரம்பித்தான். அதாவது, அவர் ஒருகாலத்தில் இருக்கவேயில்லை; பின்பு உருவாக்கப்பட்டு பிறந்தார் என்று ஏரியன் போதித்தான். இந்தக் கருத்துப்படி கிறிஸ்து பிதாவைவிட தெய்வீகத் தன்மையில் குறைந்தவராக இருக்கிறார் என்று ஏரியன் விளக்கினான். அலெக்சாந்திரியாவின் பிசப்பாக இருந்த அலெக்சாண்டர் 320-ல் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, கிறிஸ்து தன் பிதாவுடன் ஒரேவிதத்திலான தெய்வீகத்தைக் கொண்டிருந்து நித்தியத்திலிருந்து அவரோடு இருக்கிறார் என்று விளக்கமளித்தான். ஏரியன் தன்னுடைய போதனைகளை நேடியாக விளக்காமல் மறைமுகமாக பரப்ப முயற்சித்தான். 321-ல் ஏரியன் பதவி நீக்கம் செய்யப்பட்டான். ஆனால், அவன் மிகவும் திறமைசாலியாக இருந்ததால் மாகேரியஸ் (Macarius), எருசலேமின் பிசப், வரலாற்றறிஞனான சீசரேயாவின் எசூபியஸ் (Eusebius Caesarea), நிக்கொமீடியாவின் எசூபியஸ் (Eusebius Nicomedia) போன்றோரைக் கவர்ந்திருந்தான்.
அலெக்சாந்திரியாவின் பிசப்புக்கும், ஏரியனுக்குமிடையில் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்கும் எல்லா முயற்சிகளும் வீண்போனதால் பேரரசனான கொன்ஸ்டன்டைன் (Constantine) 324-ல் ஒரு பொதுக் கவுன்சிலை ஆசீயாமைனரின் வடமேற்குப் பகுதியிலுள்ள நைசியா (Council of Nicea) என்ற இடத்தில் கூட்டினான். இதுவே வேதபோதனைகள் சம்பந்தமான முரண்பாடுகளைத் தீர்க்கக் கூட்டப்பட்ட முதலாவது கவுன்சில். ஸ்பெயினில் இருந்து பாரசீகம் வரையிலுமுள்ள பலவித சபைகளைச் சேர்ந்த 317 தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். கோர்டோபாவைச் சேர்ந்த ஹோசியஸ் (Hosius of Cordoba) என்ற அருமையான மனிதனை தலைவராகக் கொண்டு, பேரரசன் முன்னிலையில் இந்தக் கவுன்சில் கூடியது. இதில் கலந்து கொண்ட அநேகர் கிறிஸ்துவிற்காகத் துன்பங்களை அனுபவித்ததற்கான அடையாளங்களை தங்களுடைய சரீரங்களில் கொண்டிருந்தனர். சிலருக்கு கால்கள் இல்லாமலும், கரங்கள் வெட்டப்பட்டும், கண்கள் குருடாகியும், அங்கங்கள் சிதைக்கப்பட்டும் இருந்தன. கிறிஸ்துவுக்காக அத்தனைத் துன்பங்களையும் தாங்கியிருந்த இந்தத்தலைவர்களை பேரரசனே முன்னின்று வரவேற்ற இந்தக் கவுன்சில் கூட்டம் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்ததாக இருந்தது.
அன்று நடந்த விவாதத்தில் கிறிஸ்து கர்த்தருடைய அதே தன்மைகளைக் கொண்டவராக இருந்தாரா? (Homousios – Same nature), அல்லது கர்த்தரைப் போலத் தோற்றமளிப்பவராக மட்டும் (Homoiousios – Similar nature) இருந்தாரா? என்ற கேள்விக்கு பதில் காண முயற்சி எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அத்தனேசியஸ் (Athanasius) என்ற திருச்சபை உதவியாளனும், மூப்பராக இருந்த ஏரியனுமே. விவாத ஆரம்பத்தில் இரண்டு பக்கத்தையுமே சாராத ஒரு முடிவுக்கு வரும்படியாக விவாதம் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இறுதியில் வேதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் பெரும்பாலான வாக்குப்பலத்துடன், கிறிஸ்து கர்த்தருடைய ஒரே குமாரன் என்றும், பிதாவிடத்தில் இருந்துவந்த ஒரே குமாரன் என்றும், பிதாவின் அதே தன்மைகளைக் கொண்டிருந்த கர்த்தர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். கிறிஸ்தவ சபை வரலாற்றில் இந்தக் கவுன்சிலின் முடிவு மிக முக்கியமானதொன்றாகும்.
கிறிஸ்துவைப் பற்றிய வேதத்திற்கு முரணான போதனைகளை உருவாக்கிய ஏரியன் பெரும் அவமானத்துக்குள்ளாக்கப்பட்டு இரண்டு பேரோடு இல்லிரியா (Illyria) என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டான். ஆனால், இரண்டு வருடங்களுக்குப் பிறகு பேரரசனான கொன்ஸ்டன்டைன் ஏரியனை வரவேற்றதுடன் அத்தனேசியஸை நாடுகடத்தியதால் சச்சரவு மீண்டும் பெரிதாகி கசப்புணர்வுகள் எல்லை கடந்து போய் திருச்சபையைப் பாதித்தன. ஏரியனை மறுபடியும் சபை மூப்பனாக நியமிக்க அலெக்சாந்திரியாவின் பிசப்பாக அப்போது இருந்த அத்தனேசியஸ் மறுத்ததாலேயே கொன்ஸ்டன்டைன் அத்தனேசயஸை டிரவேஸ் (Treves) என்ற பகுதிக்கு நாடு கடத்தினான். குறைந்தது ஐந்து தடவைகள் அத்தனேசியஸ் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு மறுபடியும் நாடு கடத்தப்பட்டான். ஒவ்வொரு தடவையும் அத்தனேசியஸ் திரும்பிவந்தபோது மெய்க்கிறிஸ்தவர்களான அவனுடைய ஆதரவாளர்கள் பேரானந்தத்துடன் அவனை வரவேற்றனர். ஏரியனும் அவனுடைய ஆதரவாளர்களும் பலவிதமான தொல்லைகளை இழைத்தனர். அத்தனேசியஸீக்கு எதிராக முழு உலகமே நிற்பது போலவும், அத்தனேசியஸ் முழு உலகத்தையும் எதிர்த்து தனியே நிற்பது போலவும் பல தடவைகள் நிலமை இருந்தது. தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை நாடு கடத்தப்பட்டும், தொல்லைகளை அனுபவித்தம் கழித்திருந்த அத்தனேசியஸ் தன்து வாழ்நாளில் கடைசி ஐந்து வருடங்களை (367-373) அலெக்சாந்திரியா திருச்சபையில் கழிக்க முடிந்தது. திருச்சபை கண்ட தவப்புதல்வர்களில் ஒருவன் அத்தனேசியஸ்.
திருச்சபை கண்ட இரண்டாவது கவுன்சில் 381-ல் கூட்டப்பட்டது. இது கொன்ஸ்டான்டிநோபிள் கவுன்சில் (The Council of Constantinople) என்று அழைக்கப்பட்டது. 186 பிசப்புக்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கவுன்சில் மெக்கடோனியஸ், செபேலியஸ் ஆகியோரின் பரிசுத்த ஆவியின் தெய்வீகத்திற்கெதிரான போதனைகளை நிராகரித்து சத்தியத்தை நிலை நிறுத்தியது.
இதற்குப்பிறகு 431-ல் எபேசியாவில் கூடியது மூன்றாவது கவுன்சிலான எபேசியக் கவுன்சில் (Council of Ephesus). இந்தக் கவுன்சில் கொன்ஸ்டான்டிநோபிளின் பிசப்பாக இருந்த நெஸ்டோரியஸ் (Nestorius) என்பவனின் போதனைகளை நிராகரித்து அவனை நாடுகடத்தியது. நெஸ்டோரியஸ் மொனோபிசைட்ஸ் (Monophysites) என்பவன் கிறிஸ்துவைப்பற்றிப் போதித்த தவறான போதனைகளை மறுத்து விளக்கமளிக்க முற்பட்டபோது கிறிஸ்துவில் இரண்டு ஆட்கள் (Two persons) இருப்பதாக தவறாக விளக்கமளித்தான். மோனோபிசைட்ஸ், கிறிஸ்துவில் ஒரே ஆள்தன்மை மட்டுமே இருப்பதாகவும், அவருடைய தெய்வீகத்தன்மை மானுட தன்மையை கபலீகரம் செய்துவிட்டதாகவும் தவறாகப் போதித்தான். இதற்கு எதிராக விளக்கம் கொடுத்த நெஸ்டோரியஸ் கிறிஸ்துவின் தெய்வீக, மானுட தன்மைகளை விளக்கும்போது ஒருபடி மேலே போய் அவரில் இரண்டு ஆட்கள் இருப்பதாக முரண்பாடாக விளக்கமளித்தான். இதைத் தீர்க்கவே எபேசியக் கவுன்சில் கூடியது. இதே காலப் பகுதியில் திருச்சபையில் திருமணம் ஆகாமல் தனித்திருப்பதை வலியுறுத்துவது அதிகரித்து வந்ததால் மேரி ஒருபோதும் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்ற போதனையும் வலுவடைந்தது. மேரியை மகிமைப்படுத்தும் விதத்தில் தியோடோகஸ் (Theotokos – The Mother of God) என்ற பெயரும் அவளுக்கு வழங்கப்பட்டது. நெஸ்டோரியஸ் இதை எதிர்த்து மேரி மானுடரான கிறிஸ்துவுக்கே தாயாக இருந்ததாகவும், தெய்வீகக் கிறிஸ்துவுக்கு தாயாக இருக்கவில்லை என்றும் போதித்தான். நெஸ்டோரியஸினுடைய போதனைகளை ஆராய்ந்த எபேசியக் கவுன்சில் அவனைக் குற்றவாளியாகக் கண்டு தெகேய்ட் (Thebaid) வனாந்தரத்துக்கு நாடுகடத்தியது.
நெஸ்டோரியஸீக்கு பாரசீகம், சிரியா போன்ற நாடுகளில் ஆதரவாளர்கள் இருந்ததால் அவர்கள் அங்கு நெஸ்டோரியன் சபையை நிறுவினார்கள். இது பின்பு பாரசீகத்திலும், ஆர்மீனியாவிலும் நிறுவப்பட்டது. இச்சபை மிஷனரிகள் வேறு நாடுகளுக்கும் சென்று 625-ல் சீனாவையும் அடைந்தனர். இந்தச் சபையை மெசப்பட்டோமியா, ஆர்மீனியா ஆகிய நாடுகளில் இன்றும் காணலாம். நெஸ்டோரியன் மிஷனரிகள் இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரப் பகுதிகளுக்குப் போய் அங்கு ஒரு சபையை நிறுவியிருக்கின்றனர். அதன் மிச்சங்களை இன்றும் கேரளாவில் பார்க்கலாம். நெஸ்டோரியஸ் நாடு கடத்தப்பட்டு இருபது வருடங்கள் சென்றபின், நெஸ்டோரியஸீக்கு எதிராக எபேசியக் கவுன்சிலில் செயல்பட்ட யூடிக்கஸ் (Eutyches), கிறிஸ்துவில் தெய்வீகத் தன்மை மட்டுமே இருப்பதாகப் போதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டு, கெல்சிடன் கவுன்சிலின் (Council of Chalcedon) கண்டனத்துக்குள்ளானான். 500 பிசப்புக்களை உள்ளடக்கியிருந்த இந்தக் கவுன்சில், தெய்வீகம், மானுடம் ஆகிய இரு தன்மைகளும் மாறாத்தன்மையுடனும், ஒன்றுடன் ஒன்று கலக்காமலும் கிறிஸ்துவில் இருப்பதாகத் தீர்ப்பறித்தது.