ஹிப்போவின் ஆகஸ்தீன்
திறமை வாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 11
இதுவரை நாம் பார்த்துள்ள எல்லாத் திருச்சபைத் தலைவர்களையும் விட முக்கியமாகக் குறிப்பிட்டக் கூறப்பட வேண்டியவர் ஹிப்போவைச் சேர்ந்த அவுரேலியஸ் ஆகஸ்தீன். மேற்குப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பவுலுக்குப் பிறகு தோன்றிய சிறந்த இறையியல் அறிஞராக ஆகஸ்தீனையே கருதினார்கள். ஆகஸ்தீன் உண்மையிலேயே அற்புதமான, சிறந்த வல்லமையுள்ள சிந்தனைவாதியாக இருந்தார். இந்த உலகில் வாழ்ந்து இலத்தீன் மொழியில் மிக அருமையாகவும், அழகாகவும் எழுதிய ஒரே மனிதர் ஆகஸ்தீன் மட்டுமே. ஆதி சபை வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரிலும் ஆகஸ்தீனைப் பற்றி மட்டுமே நாம் அதிகளவுக்கு அறிந்து கொள்ளுவதற்கு, ஆகஸ்தீன் எழுதிய கொன்பெஷன்ஸ் (Confessions) என்ற நூல் நமக்கு உதவுகிறது. 354-ல் வட மேற்கு ஆபிரிக்காவைச் (இன்று அல்ஜீரியா) சேர்ந்த தாகேஸ்ட் என்ற இடத்தில் ஆகஸ்தீன் பிறந்தார். ஆகஸ்தீனின் தந்தை கிறிஸ்தவரல்ல. ஆனால், தாய் மொனீகா கிறிஸ்தவர். தன் மகனை மொனீகா நல்ல முறையில் தேவ பக்தியுடன் வளர்த்தார். ஜோன் கிரிஸஸ்தொம்மின் தாய் அந்தூசாவைப்போல கிறிஸ்தவ பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழ்ந்து, தன்னுடைய மகனை ஆதி சபை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஒரு தலைவராக வருமளவுக்கு வளர்த்தார் மொனீகா. ஆகஸ்தீன் தேர்ந்த கல்வியைப் பெற்று வக்கீலாக வருமளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 370-ல் தன் தந்மை மரணமானதால் ஆசிரியராக வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் இறங்கியது. அத்தோடு, திருடணமாகாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தி அடியோடாடஸ் என்ற மகனையும் அவர் உலகத்திற்குத் தந்தார். ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவராக இருக்கவில்லை. 377-ல் ஆகஸ்தீன் கார்த்தேஜீக்கு இடம் மாறி அங்கே பேச்சுக்கலை போதிக்கும் பேராசிரியராகப் பதவியேற்றார். இங்கிருந்த காலத்தில் ஆகஸ்தீனுக்கு சீசரோவின் நூலோன்றைப் படித்ததன் காரணமாக தத்துவத்தில் பேரார்வம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமும் அவர் உள்ளத்தைக் கிளறியது. இக்காலத்தில் ஆகஸ்தீன் வேதத்தையும் வாசிக்க ஆரம்பித்தபோதும் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் அவருக்குப் புதிர்களாக இருந்தன. தத்துவ ஆர்வத்தில் காரண காரியங்களைக் கொண்டு ஆராயும் சிந்தனாவாதியாக இருந்த ஆகஸ்தீனுக்கு பழைய ஏற்பாடு ஒரு கொடூரமான, நடைமுறைக்குதவாத நூலாகப்பட்டது.
கிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்டிருந்த ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு முழுக்குப்போட்டுவிட்ட நொஸ்டிஸிசத்தின் ஒரு அங்கமாக இருந்த மெனிக்கீஸ் (Manichees) என்ற பிரிவின் போதனைகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். இந்தப்பிரிவு பழைய ஏற்பாட்டை முற்றாக நிராகரித்து, காரண காரியங்களை ஆராய்வதன் மூலம் தங்களடைய போதனைகளனைத்தையும் நிரூபிக்க முடியும் என்று நம்பியது. அதேவேளையில் ஆகஸ்தீனின் தாய் மகனுடைய மனந்திரும்புதலுக்காக கண்ணீரோடு ஜெபித்தார். மகனின் மனமாற்றத்திற்காக பலருடைய உதவியையும் நாடினார். அவருடைய கண்ணீரோடு கலந்த ஜெபத்தைப் பார்த்த ஒரு பிசப், “போ! அம்மா, இத்தனைக் கண்ணீருக்கும் சொந்தமான மகன் வீணாய்ப் போகப் போவதில்லை” என்று மொனீகாவைப் பார்த்து கூறினார்.
383-ல் ஆகஸ்தீன் ரோமுக்கு இடம் மாறி அங்கே புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் ஆகஸ்தீனுக்கு நொஸ்டிஸிச மெனிக்கீஸ் போதனைகளில் இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் ஆகஸ்தீன் நியோபிளேட்டோனியனிசம் (Neoplatonianism) என்ற புதிய போதனையை நாட ஆரம்பித்ததுதான். மெனீக்கிசம் கடவுளை சரீர ரூபத்தில் மட்டுமே பார்த்தது. ஆனால், நியோபிளேட்டோனியனிசம் கடவுள் எல்லைகளற்று பரீபூரண ஆவியானவராய் இருப்பதாகவும் மனிதனால் அவரை அறிந்து கொள்ள முடியும் என்றும் போதித்தது. மெனீக்கீஸ் போதனைகளைப் பின்பற்றியபோது வாழ்க்கை பற்றிய தனது கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆகஸ்தீன் இந்த புதிய போதனை தனக்கு உதவும் என்று நம்பினார். 384-ல் ஆகஸ்தீன் மிலானில் பேச்சுக்கலைப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
நியோபிளேட்டோனியனிசத்தைப் பின்பற்ற ஆரம்பித்த காலத்தில் ஆகஸ்தீன் மிலானைச் சேர்ந்த பிசப் அம்பிரோசின் (Bishop Ambrose) போதனைகளையும் கேட்க ஆரம்பித்தார். அம்பிரோஸ் கிறிஸ்தவத்தைப் பற்றிக் கொடுத்த விளக்கங்கள் ஆகஸ்தீனைப் பெரிதும் கவர்ந்தது கிறிஸ்தவத்தில் அவருக்கு மறுபடியும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின. அம்பிரோஸ் பழைய ஏற்பாட்டை விளக்கிய முறை எபிரேய வேதத்தில் ஆகஸ்தீனுக்கு இருந்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தின. கிறிஸ்தவம் மெய்யானது என்ற நம்பிக்கை ஆகஸ்தீனின் உள்ளத்தில் திவீரமடைய ஆரம்பித்தது. ஆனாலும், உலக ஆசை ஆகஸ்தீனை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தது. முழு இருதயத்தோடும் கிறிஸ்தவப் போதனைகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஆகஸ்தீன் போராட வேண்டியிருந்தது. இறுதியில் 386-ல் மிலானின் ஒரு பூந்தோட்டத்தில் தியானம் செய்து கொண்டிருந்தவேளை புதிய ஏற்பாட்டின் ரோமர் 13:13-14 ஆகிய வசனங்கள் அவருடைய உள்ளத்தை இடியாகத் தாக்கி அவரில் மனந்திரும்புதலைக் கொண்டு வந்தன. இது பற்றி தன்னுடைய வாழ்க்கை சரிதத்தில் எழுதிய ஆகஸ்தீன், “அதற்கு மேல் அந்தப்பகுதியை என்னால் வாசிக்க முடியவில்லை. அந்த வசனங்களை வாசித்து முடித்த உடனேயே விசுவாசத்தின் ஒளி என்னுடைய இருதயத்தை நிறைத்தது. என்னுள் இதுவரை இருந்து வந்த சந்தேக இருள் முற்றுமாக அகன்றது” என்று எழுதினார்.
ஆகஸ்தீன் விசுவாசத்தைப் பெற்றக்கொண்ட காலத்திலேயே அவருடைய மகன் அடியோடாடஸீம் மனந்திரும்புதலை அடைந்தார். இருவரும் 387-ல் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று அம்பிரோஸிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்த வருடமே தந்தையும், மகனும் ஆபிரிக்காவிற்குத் திரும்பி அங்கே ஒர மடத்தை ஆரம்பித்தார்கள். ஆகஸ்தீனின் இம்முயற்சி மடவாழ்க்கை முறையை வட மேற்கு ஆபிரிக்கா எங்கும் பரப்பியது. 391-ல் மேற்கு கார்த்தேஜிலுள்ள ஹிப்போவுக்கு ஆகஸ்தீன் போனபோது அங்குள்ள சபையாரின் அதிக வற்புறுத்தலின் காரணமாக அச்சபையின் மூப்பராக நியமிக்கப்பட்டார். ஹிப்போவின் பிசப்பாக இருந்த வெளேதியஸ் (Valerius), இலத்தீன் மொழியறியாத கிரேக்கராக இருந்தபடியால் தனக்குத் தகுந்த ஒரு உதவியாளைத் தேடிப் பல வருடங்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். ஆகஸ்தீன் சபையில் இருப்பதைப் பார்த்த வெளேரியஸ் இதைக் குறித்த தனது பிரசங்கத்தில் குறிப்பிட்டபோது முழு சபையும் ஆகஸ்தீனைச் சூழ்ந்து நின்று வெளேரியஸ் தேடிக்கொண்டிருக்கும் மனிதர் இவர்தான் என்று சத்தமிட்டது. ஆகஸ்தீன் கண்ணீரோடு மக்களின் விருப்பத்தைக் கர்த்தரின் சித்தமாக எண்ணி வெளேரியசுக்கு துணையாக இருக்க ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து ஆகஸ்தீனுக்கு ஹிப்போவுடனிருந்த 40-வருட காலத் தொடர்பு ஆரம்பித்தது. 396-ல் வெளேரியஸ் இறந்தபோது ஆகஸ்தீன் ஹிப்போவின் பிசப்பாக நியமனம் பெற்றார்.
ஹிப்போவில் ஆகஸ்தீனின் 34 வருட ஊழியம் இந்த உலகத்திலேயே ஓர் சிறந்த மனிதராக அவரை ஒளிவீச வைத்தது. ஒரு பிரசங்கியாகவும், சபை நிர்வாகியாகவும், இறையியல் அறிஞராகவும், கல்விமானாகவும், சிறந்த போதகராகவும், பல நூல்களை எழுதிய எழுத்தாளராகவும் ஆதி சபையில் ஒரு சில சபைப்பிதாக்களே ஆகஸ்தீனைப்போன்ற திறமை கொண்டவர்களாக இருந்தனர். அதுவும் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டிருந்தவர் ஒருவர்கூட இருக்கவில்லை. ஆகஸ்தீனுக்கு சமமாக கூர்மையான இறையியல் சிந்தனையையும், உணர்ச்சி மிகுந்த இறைபக்தியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்தவர்கள் ஆதி சபையில் இருக்கவில்லை. தீ போன்ற இருதயத்தோடும், பரலோக வாழ்க்கையின் தாபத்தோடும் இவ்வுலகில் வாழ்ந்த சிறந்த கிறிஸ்தவராக ஆகஸ்தீன் இருந்தார்.
தன் வாழ்நாளில் பல இறையியல் சச்சரவுகளில் ஆகஸ்தீன் ஈடுபட வேண்டியிருந்தது. அவற்றில் முக்கியமானது பெலேஜியனிசத்திற்கெதிரான (Pelagianism) அவருடைய போராட்டமே. பெலேஜியன் (Pelagian) ஒரு துறவி. பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையில் அதிக தீவிரம் காட்டி துறவியாக வாழ்ந்த பெலேஜியன் அந்தத் தீவிரத்தால் மனிதனுடைய தன்மையைக் குறித்த தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தான். கர்த்தரைப் பற்றிய போதனைகளில் நைசீன் விசுவாச அறிக்கையை பெலேஜியன் நம்பினாலும் மனிதனைப் பற்றிய போதனகைளில் பெருந்தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தான். ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகும் மனிதர்கள் பாவமற்றவர்களாகவே இந்த உலகத்தில் பிறப்பதாக பெலேஜியன் போதித்தான். ஆதாமின் பாவம் மனிதனுடைய பாவமற்ற தன்மையை மாற்றவில்லையென்றும், ஆதாம் தன்னுடைய பாவத்தால் மனித குலத்துக்கு மோசமான ஒர் உதாரணமாக மட்டுமே இருந்தான் என்றும் பெலேஜியனுடைய போதனை இருந்தது. இந்த உலகத்தில் பாவமற்ற மனிதர்களாக பிறந்து அனேகர் வாழ்ந்திருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு உதாரணமாக தானியேல் போன்றோர் இருந்திருக்கிறார்கள் என்றும் பெலேஜியன் விளக்கினான். 431-ல் எகேசிய சபைக் கவுன்சில் இறுதியில் பெலேஜியனை போலிப் போதகனாக இனங்கண்டு சபை நீக்கம் செய்து நாடு கடத்தியது.
இந்தப் பெலேஜியன் இறையியல் சச்சரவு, மனிதனுடைய தன்மையைப் பற்றிய அருமையான இறையியல் ஆக்கங்களைப் படைக்க ஆகஸ்தீனுக்கு உதவியது. இந்த உலகில் எல்லா மனிதர்களம் பாவத்தோடு பிறப்பதாகவும், அந்தப்பாவத்தையே ஆரம்பப் பாவமென்று குறிப்பிடுகிறோம் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். பாவம் மனிதனுடைய சுதந்திரத்தை இல்லாமலாக்கி அவன் பாவத்தை மட்டுமே செய்யக்கூடியவனாக ஆக்கியிருக்கிறது என்று விளக்கினார். நாம் செய்யத் தகுந்ததைச் செய்வதற்கு சுதந்திரம் கொண்டவர்களாக இல்லாமல், நமது பாவத்தன்மைக்கு உட்பட்டு பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடியவர்களாக இருப்பதாக ஆகஸ்தீன் விளக்கினார். ஒருவிதத்தில் பாவிகளாகிய மனிதர்களுக்கு சுயாதீனமான சித்தம் இருப்பதாகக் கூறிய ஆகஸ்தீன், பாவிகள் எவருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சுயாதீனமாகவே பாவத்தை விரும்பிச் செய்வதாக விளக்கினார். கிறிஸ்துவின் கிருபை நம்மை இரட்சித்தாலன்றி நாம் சுயமாக, சகல விருப்பத்தோடும், ஆர்வத்தோடும் பாவத்தையே செய்வோம் என்பது ஆகஸ்தீனின் போதனை.
மனிதன் பாவத்திற்கு அடிமையாக இருப்பதால், அவன் தன்னுடைய சுய சித்தத்தின்படி கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது என்றும், கர்த்தருடைய வல்லமையினால் மட்டுமே அவன் விசுவாசியாக முடியும் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். மனந்திரும்புதல் மனிதனுடைய சொந்த முயற்சியால் ஏற்படாமல், பரிசுத்த ஆவியானவர் இறையாண்மையுடன் பாவிகளின் இருதயத்தில் கிரியை செய்து, அவர்களை பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து, அவர்களுடைய இருதயத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றக்கூடிய சித்தத்தை உருவாக்குவதனாலேயே ஏற்படுகின்றதென்று போதித்தார். ஆகவே, கிருபை மனிதனுடைய சுதந்திரமான சித்தமாக அல்லாமல் கர்த்தரின் ஈவாக, ஜீவனை அளிக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையாக இருக்கிறத என்றார் ஆகஸ்தீன். ஆகஸ்தீனின் போதனைகளனைத்தையும் இங்கு விளக்குவதற்கு இடமில்லாமல் போனாலும், ஆகஸ்தீன் கிருபையின் போதனைகளை அற்புதமாக விளக்கியிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
சிந்தனாவாதியும், சிறந்த எழுத்தாளருமான ஆகஸ்தீன் பல அருமையான நூல்களைத் தன் வாழ்நாளில் படைத்தார். அவற்றில் குறிப்பிட்டக் கூறக்கூடியவை கொன்பெஷன்ஸ் (Confessions), திரித்துவம் (On the Trinity), கர்த்தரின் நகரம் (The City of God) ஆகியவை.
430-ல் ஆகஸ்தீன் கர்த்தரை அடைந்தார். இருந்தபோதும் அவருடைய இறையியல் போதனைகள் மேற்குப்பகுதி சபையில் தொடர்ந்தும் நிலைத்திருந்தன. அந்தச்சபையின் இறை நம்பிக்கைகளையும், நடைமுறை வாழ்க்கையையும் ஆகஸ்தீனினுடைய எழுத்துக்களம், போதனைகளும் பாதித்ததைப் போல வேறெந்த மனிதருடைய எழுத்துக்களும் பாதிக்கவில்லை.