ஆதி சபையின் பொற்காலமாக 4-ம் 5-ம் நூற்றாண்டுகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர். இக்காலப்பகுதியில் பல சிறப்பான தலைவர்களை திருச்சபை பெற்றெடுத்திருந்தது. ஏற்கனவே அத்தனேசியஸ், அம்புரோஸ் போன்றவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இந்த இதழில் சபை கண்ட மூன்று முக்கிய தலைவர்களில் இருவரைப்பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம். இவர்களுடைய வாழ்க்கையும், ஊழியமும் 4-ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகி 5-ம் நூற்றாண்டுகளில் முடிந்திருந்தது.
ஜோன் கிறிசொஸ்தொம் (John Crysostom 344-407)
ஜோன் கிறிசொஸ்தொம் (John Crysostom) திருச்சபையின் சிறப்பான பிரசங்கிகளில் ஒருவராக இருந்தார் என்று வரலாறு கணிக்கிறது. 344-345-களில் அந்தியோகியாவில் (Antioch) பிறந்தார் கிறிசொஸ்தொம். போர்வீரராக இருந்த தந்தை, கிறிசொஸ்தொம் சிறுவனாக இருந்தபோதே மரித்ததால் கிறிஸ்தவராக இருந்த தாயே கிறிசொஸ்தொம்மை வளர்த்தார். இளம் கிறிசொஸ்தொம் சட்டம் படிப்பதில் ஆர்வம் கொண்டு லைபேனியஸ் என்பவரிடம் சட்டம் பயின்று அவருடைய சிறந்த மாணவனாக இருந்தார். 370-ல் ஞானஸ்நானம் பெற்றக் கொண்ட கிறிசொஸ்தொம் சட்டத்துறையில் இருந்த ஆர்வத்தைக் கைவிட்டு குருத்துவத்தை நாடினார். அப்பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு தன்னைத் தயாரித்துக் கொண்ட கிறிசொஸ்தொம் 370-ல் அந்தியோகியாவுக்கு வந்து அதற்கு அடுத்த வருடமே திருச்சபையில் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அந்தியோகியாவின் சபைத்தலைவராக இருந்த பிசப் பிளேவியன் (Bishop Flavian) கிறிசொஸ்தொம்மை மூப்பராக 386-ல் நியமித்தார்.
அடுத்த 12 வருடங்களுக்கு அந்தியோகியாவில் கிறிசொஸ்தொம் அற்புதமாக பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டார். மக்களால் மிகவும் பாராட்டப்பட்டார். அவர் இறந்த பிறகு மக்கள் அவருக்கு கிறிசொஸ்தொம், அதாவது “பொற்குரலோன்” என்ற பட்டத்தை அளித்தனர். வேதத்தில் இருந்து ஒவ்வொரு வசனமாக வியாக்கியானப் பிரசங்கம் செய்தார் கிறிசொஸ்தொம். அவருடைய பிரசங்கங்கள் நேரடியாகவும், கேட்பவர்களின் பாவங்களை சுட்டிக்காட்டுவதாகவும், முக்கியமாக உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்பவர்களைக் கண்டிப்பதாகவும் இருந்தது. பணக்காரர்களாக இருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியதையும் கிறிசொஸ்தொம் கண்டித்துப் பிரசங்கித்தார். இவருடைய பிரசங்கங்களைப் பலர் கேட்டு எழுதிவைத்திருந்தனர். அதன் காரணமாக அவருடைய பிரசங்கங்களில் சங்கீதப்புத்தகத்திலிருந்து 58 பிரசங்கங்களும், மத்தேயு சுவிசேஷத்திலிருந்து 90 பிரசங்கங்களும், யோவானில் இருந்து 80 பிரசங்கங்களும் இன்றும் அச்சில் இருக்கின்றன.
ஒரிகன் (Origen), வேதவசனங்களில் காணப்படும் நேரடி அர்த்தத்தின் அடிப்படையில் பிரசங்கிக்காது உருவகப்படுத்தல் முறையைப் பயன்படுத்திப் பிரசங்கித்திருந்ததை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால், கிறிசொஸ்தொம் அந்த முறையைப் பின்பற்றவில்லை. மாறாக இலக்கண, வரலாற்று அடிப்படையில் வேதப்பகுதிகளை ஆராய்ந்து பிரசங்கிக்கும் முறையை கிறிசொஸ்தொம் பயன்படுத்தினார். வேத வசனங்கள் அவற்றின் மூல மொழிகளான எபிரேயம், கிரேக்கம் ஆகியவற்றில் எந்த நோக்கத்தில், எந்த அர்த்தத்தில் தரப்பட்டிருக்கின்றனவோ அந்த அடிப்படையில் அவற்றின் நேரடியான அர்த்தத்தை இலக்கணபூர்வமாகவும், வரலாற்றுபூர்வமாகவும் விளங்கிக்கொண்டு பிரசங்கங்களை கிறிசொஸ்தொம் தயாரித்தார். பிரசங்கிக்க எடுத்துக்கொண்டுள்ள வேதப் பகுதியில் தரப்பட்டுள்ள போதனைகளின் மூலம் கர்த்தர் ஆத்துமாக்களிடம் எதை எதிர்பாக்கின்றார் என்பதையும் கிறிசொஸ்தொம் வலியுறுத்திப் பிரசங்கம் செய்தார். இந்த முறையிலான இலக்கண, வரலாற்று அடிப்படையில் வேதத்தை விளக்கும் முறையையே சிசரியாவின் பெசிலும் (Basil of Caesarea) வற்புறுத்தி வந்திருக்கிறார். அந்தியோகியாவின் திருச்சபை பெசிலினுடையதும், கிறிசொஸ்தொம்மினுடையதுமான வேதவிளக்க முறையையே பின்பற்றி வந்தது. இதனால் வரலாற்று அறிஞர்கள் இந்த வேதவிளக்க முறைக்கு “அந்தியோகிய வேதவிளக்க முறை” என்ற பெயரை அளித்திருந்தனர். ஒரிகனுடைய உருவகப்படுத்திப் பிரசங்கிக்கும் முறையை அலெக்சாந்திரிய சபை பின்பற்றியதால் அதற்கு “அலெக்சாந்திரிய வேதவிளக்க முறை” என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.
போதக ஊழியத்தைக் குறித்த ஒரு பிரபலமான நூலையும் (On the Priesthood) எழுதி வெளியிட்டார் கிறிசொஸ்தொம். அவருடைய ஏனைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் விட இந்நூல் அநேக தடவைகள் பிற மொழிகளிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
398-ல் கொன்ஸ்தாந்திநோபிளின் தலைவனாக இருந்த நெக்டாரியஸ் (Nectarius) இறந்தான். அவனுடைய இடத்தைப் பிடிக்கப் பலரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரரசனான ஆர்கேடியஸ் கிறிசொஸ்தொம்மைக் குறித்து தனது மந்திரியின் மூலம் கேள்விப்பட்டு தன் நாட்டுக்கு அவரைக் கொண்டு வரத் தீர்மானித்தான். கிறிசொஸ்தொம்மின் புகழ் இக்காலத்தில் எங்கும் பரவியிருந்தது. அந்தியோகியாவின் மக்கள் தன் நோக்கத்திற்கு இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்த ஆர்கேடியஸ் தன்னுடைய படையை அனுப்பி கிறிசொஸ்தொம் சந்திக்க வரும்படி அந்தியோகியாவின் கவர்னர் மூலம் அழைப்பு அனுப்பினான். எதையும் சந்தேகிக்காத கிறிசொஸ்தொம் பேரரசன் அனுப்பியவர்களைப் பார்க்கப்போனபோது அவர்கள் கிறிசொஸ்தொம் சிறைபிடித்து கொன்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டு சென்றார்கள். கொஸ்தாந்திநோபிளின் மக்கள் கிறிசொஸ்தொம் தங்களுடைய நகரில் பிரசங்க ஊழியத்தை நடத்தும் வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தனர். கிறிசொஸ்தொம் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பின்பு வேறு வழியில்லாமல் உடன்பட வேண்டியதாயிற்று.
கொன்ஸ்தாந்திநோபிளின் பிரதான சபையான பரிசுத்த ஞான சபையில் கிறிசொஸ்தொம் பிரசங்கித்தபோது அந்நகர மக்கள் மத்தியில் அவருக்குப் பேரும் புகழும் கிடைத்தது. அதேவேளை, பணபலமும், அதிகார பலமுமுள்ள மோசமான எதிரிகளையும் அவர் தேடிக்கொள்ள நேர்ந்தது. அநீதியும், கேடும், அரசியல் தந்திரங்களும் நிறைந்திருந்த கிழக்குத் தேசத்தின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோபிளுக்கு கிறிசொஸ்தொம்மின் பரிசுத்தமும், ஒழுக்கமும், கட்டுப்பாடுமுள்ள வாழ்க்கை பொருந்திவரவில்லை. பேரரசன் ஆர்கேடியஸின் மந்திரிகளினதும், ஊழியர்களினதும் பாவங்களைக் கிறிசொஸ்தொம் கண்டித்தது அவர்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக ஆர்கேடியஸின் அழகிய ஜேர்மன் மனைவியான யூடொக்சியா (Eudoxia) கிறிசொஸ்தொம்மை தீவிரமான வெறுத்தாள். பழைய ஏற்பாட்டு எசபேலைப் பற்றி கிறிசொஸ்தொம் செய்த ஒரு பிரசங்கத்தை மக்கள் அரசியோடு ஒப்பிட்டுப் பார்த்ததால் அவளுக்கு கிறிசொஸ்தொம் மீது இருந்த வெறுப்பு அதிகரித்தது. கிறிசொஸ்தொம்மின் கண்டிப்பும், நேர்மையும் நிறைந்த விசுவாசமுள்ள பிரசங்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நகரில் இருந்த அதிகாரிகளையும் மற்றவர்களையும் நேர்மையான வாழ்க்கை வாழத்தூண்டியதால் கிறிசொஸ்தொம் நகரிலும் சுற்றி இருந்த பிரதேசங்கள் அனைத்திலும் அநகே எதிரிகளை சம்பாதித்துக்கொண்டார். கிறிசொஸ்தொம்மின் தீவிர எதிரியாக இருந்தவன் தியோபீலஸ் (Theophilus) என்பவன். அலெக்சாந்திரியாவின் அதிகாரியாக 385-ல் இருந்து 412-வரை பணி புரிந்தான் தியோபீலஸ். 403-ல் கிறிசொஸ்தொம்மின் எதிரிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கெல்சிடன் கவுன்சிலைக்கூட்டி கிறிசொஸ்தொம்முக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினான் தியோபீலஸ். அவருக்கு எதிராக பல அநீதியான குற்றச்சாட்டுகள் கவுன்சில் முன்பு கொண்டுவரப்பட்டன. பேரரசன் ஆர்கேடியஸீம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிறிசொஸ்தொம்மை நாடுகடத்தினான். சில நாட்களுக்குப் பின்பு கொன்ஸ்தாந்திநோபிளை நிலநடுக்கம் அதிர வைத்தது. கடவுளிடம் இருந்து வந்த தண்டனையாக இதைக் கருதி பேரரசி யூடோக்சியா பயமடைந்து கிறிசொஸ்தொம்மை மறுபடியும் நகருக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்தான். நகர் மக்கள் பாதைகள்தோறும் நின்று மலர் பொழிந்து வரவேற்க கிறிசொஸ்தொம் நகர்ப்பிரவேசம் செய்தார். பேரரசனுடனான முதல் போராட்டத்தில் இப்படியாக கிறிசொஸ்தொம்முக்கு வெற்றி கிடைத்தது.
ஆனால், இந்த வெற்றி நிலைக்கவில்லை. 404-ல் யூடோக்சிடா வெள்ளியிலான தன்னுடைய உருவச்சிலையை பரிசுத்த ஞான சபைக்கு அருகில் நிறுவினாள். அங்கு நடந்த ஆர்ப்பாட்டங்களால் சபை ஆராதனையை அமைதியாக நடத்த முடியாமல் போனது. இதனால், கிறிசொஸ்தொம் யூடோக்சியாவை யோவான் ஸ்நானனின் தலையைக் கேட்ட ஹெரோடியஸீக்கு ஒப்பிட்டு காரசாரமாக பிரசங்கித்ததால் ஆத்திரமடைந்த யூடோக்சியாவும், ஆர்கேடியஸீம் அவரை பதவி நீக்கம் செய்து ஆர்மீனியாவுக்கு நாடு கடத்தினர். மக்களின் ஆர்ப்பாட்டத்தால் போப் இனொசன்ட் 1 (Pope Innocent I) கிறிசொஸ்தொம்மை விடுவிக்குமாறு ஆர்கேடியஸை வற்புறுத்தினார். ஆனால், பேரரசன் கிறிசொஸ்தொம்மை 407-ல் இன்னும் தூரதேசத்திற்கு நாடு கடத்தினான். போகும் வழியில் வெய்யில் கொடுமையினால் நோயுற்று கிறிசொஸ்தொம் இறந்தார். 438-ல் பேரரசன் தியோடோசியஸ் II (Theodosius II 408-50) கிறிசொஸ்தொம்மின் அஸ்தியைக் கொன்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டு வந்ததோடு அவருடைய பெற்றோரிடம் கிறிசொஸ்தொம்முக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
கிழக்குப் பேரரசின் சபைத்தலைவர்களில் கிறிசொஸ்தொம் மிகவும் சிறந்த வேத அறிஞராகவும், பிரசங்கியாகவும் இருந்தார். கிழக்குப் பேரரசில் எந்த சபைத்தலைவரும் பேரரசர்களுக்கு எதிராக நிற்க முடியவில்லை என்பதை கிறிசொஸ்தொம்மின் வாழ்க்கையின் முடிவு காட்டுகிறது.
ஜெரோம் (Jerome 347-420)
ஆதி சபையில் மிகவும் திறமைசாலியான வேதவல்லுனராக இருந்தவர் ஜெரோம். ஸ்டிரைடோனியா (Stridonia) என்ற இடத்தில் (இன்றைய குரொவேசியாவும் சுலொவேனியாவும் Croatia and Slovenia) 347-ல் செல்வமிக்கதொரு குடும்பத்தில் பிறந்தவர் ஜெரோம். தத்துவம், உளவியல், பேச்சாற்றல் ஆகியவற்றில் தேர்ந்த ஜெரோம் 370-ல் ஞானஸ்நானம் பெற்றக்கொண்டார். 372-ல் மத்திய கிழக்குப்பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜெரோம் சிரியாவின் பாலைவனத்தில் 374-ல் சந்நியாச வாழ்க்கைக்கு தம்மை ஒப்புக்கொடுத்தார். சிரியாவில் இருக்கும்போது அவர் எபிரேய மொழியைக் கற்றக்கொண்டார். அக்காலத்தில் கிறிஸ்தவர்களில் ஒருவருக்காவது யூத மொழியான எபிரேயம் தெரிந்திராததால் ஜெரோம் அம்மொழியறிந்த தனித்துவமிக்க மனிதராக விளங்கினார். 379-ல் அந்தியோகியாவில் மூப்பராக நியமனம் பெற்ற பின்பு கொன்ஸ்தாந்திநோபிளுக்குப் போய் அந்நகரின் பிரபலமான கெப்படோசியன் பிதாவாகவிருந்த நாசியேன்சஸின் கிரெகரி (Gregory of Nazianzus) என்பவரிடம் இரண்டு வருடங்களுக்கு இறையியலைக் கற்றார். கிரெகரியும், ஜெரோமும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். 382-ல் ஜெரோம் ரொம் நகருக்குப் போனபோது அங்கிருந்த போப் டெமாஸ்கஸ் (Pope Damascus 366-384) வேதத்தின் புதிய இலத்தீன் மொழிபெயர்ப்பைக் கொண்டுவரும்படியாக அவரைக் கேட்டுக் கொண்டார். ஜெரோம் அதற்கு இணங்கினார். அந்த மொழிபெயர்ப்பை முடிக்க ஜெரோமுக்கு 23 வருடங்கள் எடுத்தன. ஜெரோமின் காலத்தில் மேற்குப்பகுதியில் வேதத்தின் வேறு இலத்தீன் மொழிபெயர்ப்புகள் காணப்பட்டபோதும் எதுவும் ஜெரோமின் மொழிபெயர்ப்புக்கு ஈடாக இருக்கவில்லை. ஜெரோம் எபிரெய, கிரேக்க மொழிகளில் இருந்த பழைய, புதிய ஏற்பாடுகளை நேரடியாகப் பயன்படுத்தி தனது மொழிபெயர்ப்பைத் தயாரித்தார். 405-ல் அவருடைய மொழிபெயர்பு நிறைவு பெற்றது. ஒரு பெரும் ஆராய்ச்சியின் முடிவாக அமைந்த இந்த மொழிபெயர்ப்பு வல்கேட் (Vulgate) என்ற பெயரால் அழைக்கப்பட்டு மேற்குப்பிரதேச இலத்தீன் பேசும் பகுதிகளில் அங்கீகாரம் பெற்று பயன்படுத்தப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் சீர்திருத்த காலம்வரை இதுவே அங்கீகரிக்கப்பட்ட இலத்தீன் மொழிபெயர்ப்பாக இருந்தது. வல்கேட் என்ற இலத்தீன் வார்த்தைக்கு “பொதுவானது” என்று அர்த்தம். எல்லோராலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட மொழிபெயர்ப்பாக இது இருந்தது.
எபிரேய மொழியைக் கற்றபின் ஜெரோமுக்கு ஒரு முக்கியமான உண்மை புலப்பட்டது. செப்டுவாஜின்ட் (Septuagint) என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பான பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட சில நூல்கள் யூதர்கள் பயன்படுத்திய எபிரேய மொழியிலிருந்த பழைய ஏற்பாட்டில் காணப்படாததை அவர் உணர்ந்தார். அன்றைய கிறிஸ்தவர்களில் ஒருவருக்காவது எபிரேய மொழி தெரியாததாலும், பெரும்பாலானோர் கிரேக்க மொழி பேசியதாலும் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுவாஜின்ட்டையே சபையில் ஆராதனைக்காகவும், படிப்பதற்காகவும், பிரசங்கத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜெரோம், யூதர்கள் தங்களுடைய எபிரேய மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டு நூலில் சேர்த்துக் கொண்டிருந்த நூல்களை மட்டுமே திருச்சபை அங்கீகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்றும், ஏனையவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் சொன்னார். அதாவது எபிரேய பழைய ஏற்பாட்டு நூலில் இருந்த நூல்கள் மட்டுமே செப்டுவாஜின்டிலும் இருக்க வேண்டும் என்றார். பழைய ஏற்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படாதிருந்த இந்த நூல்களை சபை தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைத்தது. இந்நூல்கள் வேதத்துக்கு சமமான அதிகாரத்தைக் கொண்டிராததால் அவற்றைப் பொது ஆராதனைகளில் வாசிக்கக்கூடாதென்று சபை தடைவிதித்திருந்தது. இன்று சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திவருகின்ற பழைய ஏற்பாட்டையே அன்று ஜெரோம் அங்கீகரித்திருந்தார். ரோமன் கத்தோலிக்க டிரென்ட் கவுன்சில் (Council of Trent) 1546-ல் தள்ளுபடி ஆகமங்களை வேதத்தின் ஒரு பகுதி எனக் கட்டளை பிறப்பித்து அவற்றை நிராகரித்தவர்களை கண்டித்து தண்டித்தது. 16-ம் நூற்றாண்டில் சபை சீர்திருத்தம் ஆரம்பமாவதற்கு முன்பு மத்திய காலப்பகுதியில் (இருண்ட காலத்தில்) மேற்கு சபை பழைய ஏற்பாட்டில் எந்த நூல்கள் இருக்க வேண்டுமென்பதில் உறுதியான கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. இன்று கிரேக்க பாரம்பரியச்சபை தள்ளுபடி ஆகமங்களை வேதத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ரஷ்யப் பாரம்பரிய சபையைச் சேர்ந்த அநேகர் அவை வேதத்தோடு சம்பந்தமற்றவை என்றே கருதுகின்றனர்.
ஜெரோம் ரோமில் இருந்தபோது அநேக ரோம செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கடிள சந்நியாச வாழ்க்கை வாழ உற்சாகப்படுத்தினார். செல்வந்தர்கள் இப்படியான சந்நியாச வாழ்க்கை வாழ தங்களுடைய சொத்துக்களைத் துறந்து சென்றதைப் பார்த்து சமுதாயம் வியந்தது. ரோம சமுதாயத்தின் ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையைத்தாக்கிப் பேசி வந்ததால் ஜெரோமுக்கு அங்கு பல எதிரிகள் தோன்றினர். ஜெரோமை ஆதரித்த போப் டெமஸ்கஸ் 384-ல் இறந்த பின்பு தனது சீடர்களோடு ஜெரோம் ரோமைவிட்டு வெளியேறி எருசெலேமுக்கு போய் வாழ்ந்தார்.
386-ல் இருந்து தன்னுடைய இறுதிக்காலம்வரை ஜெரோம் பெத்லகேமில் வாழ்ந்தார். அங்கே எழுதுவதிலும், சந்நியாசிகளுக்கு போதிப்பதிலும் தனது காலத்தை செலுத்தினார். வேதத்தின் பல நூல்களுக்கு விளக்கவுலை எழுதினார். அநேக கிரேக்க இறையியல் நூல்களையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இலத்தீன் மொழிப் பாண்டியத்தினாலும், எழுத்துத் திறத்தினாலும் மேற்கு சபைப்பிதாக்களில் ஜெரோம் முக்கிய இடத்தை வகித்தார். அக்காலத்தில் பல இறையியல்கருத்து முரண்பாடுகளிலும் ஜெரோம் பங்கு பெற்றார். பெலேஜியன் கருத்து முரண்பாட்டில் அவர் ஆகஸ்தீனை ஆதரித்தார். இதனால் ஆத்திரமற்ற பெலேஜியனின் ஆதரவாளர்கள் 416-ல் அவருடைய பெத்லெகேம் குருமடத்தை தீக்கிரையாக்கினர். இதனால் ஜெரோம் இரண்டு வருடங்களுக்கு தலை மறைவாக வாழநேர்ந்தது.
ஜெரோம் சந்நியாச வாழ்க்கையை பெரிதும் ஆதரித்து, திருமணமற்ற தனி வாழ்க்கையே திருமண வாழ்க்கையைவிட சிறந்தது என்று கருதினார். அநேக ரோம் நகரப் பணம்படைத்த பெண்கள் ஜெரோமின் சீடர்களாகி சந்நியாச வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததோடு, பல மடங்களையும், வைத்தியசாலைகளையும் கட்டினர்.
ஜெரோம் 420-ம் ஆண்டளவில் பெத்லெகேமில் பார்வையிழந்த நிலையில், நோயுற்று மரணத்தைத் தழுவினார். மேற்கின் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஹிப்போவைச் சேர்ந்த அகஸ்தீனுக்கு அடுத்தபடியாக ஜெரோமுக்கே அதிக மதிப்பிருந்தது.