நூலின் புதிய அமைப்பு வாசகர்களுக்க வசதியாக இருக்கின்றதென்று வருகின்ற கடிதங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். பல வேலைகளுக்க நடுவில் இன்னுமொரு இதழை தேவனுடைய கிருபையின் துணையால் முடித்து அனுப்ப முடிந்திருக்கிறது. இந்த இதழில் வழமையான ஆக்கங்களுடன் கடைசிக் கால நிகழ்ச்சிகள் பற்றிய ஆக்கங்களையும் தந்துள்ளோம். வெளிப்படுத்தின விசேஷம் நமக்குப் புரியாத புதிர்போல் இருக்க வேண்டும் என்பதற்காக கர்த்தர் அதைத் தரவில்லை. வெளிப்படுத்தின விசேஷத்திற்கு அருமையான விளக்கத்தைத் தந்துள்ளவர்களில் என்னைப் பொறுத்தவரையில் வில்லியம் ஹென்றிக்சனே சிறந்தவர். அவரது நூலின் சாராம்சத்தை இவ்விதழில் தந்திருக்கிறோம். வாசகர்கள் அந்நூலை எந்தக் கோணத்தில் படிக்க வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வெளிப்படுத்தல் விசேஷத்திற்கு விளக்கவுரை தந்து தமிழில் வந்துள்ள ஒரு நூலையும், ஆயிரம் வருட அரசாட்சி பற்றி எழுதப்பட்டுள்ள ஒரு நூலையும் விமர்சனம் செய்திருக்கிறோம். தமிழில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ நூல்கள் இருந்தபோதும் முத்தாகக் கருதிப் படிக்கக்கூடியவை மிகச்சிலவே. முடிந்தவரை நல்ல நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது எமது நோக்கம்.
இவ்விதழோடு 1 கொரிந்தியர் 12-14 வரையுள்ள வேதப்பகுதிகளுக்கு நாம் தந்த விளக்கங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை நல்ல பயன் தருகின்றன என்று அநேகர் எழுதியிருக்கிறார்கள். 1689 விசுவாச அறிக்கை இப்போது தமிழில் வெளிவந்துவிட்டது. அதைப் பெற்று வாசிப்பவர்களுக்கு துணைசெய்யும் வகையில் அதன் வரலாற்று, இறையியல் பின்னணியையும், அதன் விசேடதன்மைகளையும் விளக்கும் ஒரு ஆக்கத்தைத் தந்திருக்கிறோம். இது வாசகர்கள் 1689 விசுவாச அறிக்கையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள துணை செய்யும் என்று நம்புகிறோம்.
நாளுக்கொன்றாக புதிது புதிதாக எதையாவது செய்து கொண்டிருக்கும் கெரிஸ்மெட்டிக் கூட்டம் பரலோகம் போன ஒருவன் திரும்பிவந்துவிட்டதாக சொல்லி இப்போது கூத்தாடிக் கொண்டிருக்கிறது. அதுபற்றியும் இவ்விதழில் வாசியுங்கள். கர்த்தர் நல்லவர். அவருடைய வருகைக்காக காத்திருக்கும் நாம் போலித்தனத்திலிருந்து நம்மைத் தொடர்ந்து காத்துக் கொண்டு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயல்வோம்.
– ஆசிரியர்