‘தேவனுடைய இராஜ்யம், ஆயிரம் வருட அரசாட்சி’
தமிழகத்தில் வாழும் ம. பிரேம் குமார் என்பவர் இந்நூலை எழுதியுள்ளார். கடைசிக்காலம் பற்றிய விளக்கங்களுடன் இந்நூல் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் -பியூச்சரிச டிஸ்பென்சேஷனல் கோட்பாட்டை- நிராகரித்து எழுதப்பட்டிருக்கிறது; அதாவது வெளிப்படுத்தல் விசேஷத்தின் மூன்றாம் அதிகாரத்திற்குப் பிறகு வரும் அதிகாரங்கள் இனித்தான் நடக்கப் போகின்றன என்ற விளக்கத்தை அடியோடு ஆசிரியர் நிராகரிக்கிறார். அக்கோட்பாட்டின் ஒன்றுக்கு மேற்பட்ட கிறிஸ்துவின் வருகை, அவரது இரகசிய வருகை, இரண்டுக்கு மேற்பட்ட உயிர்த்தெழுதல்கள், இவ்வுலகில் அமையப் போவதாக அவர்கள் கருதும் இஸ்ரவேலை மையமாகக்கொண்ட கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி, கர்த்தர் இரண்டுவிதமான மக்களைக் கொண்டிருக்கிறார், கர்த்தரின் திட்டத்தில் திருச்சபை ஒரு தற்காலிக இடைச்செருகல் ஆகிய போதனைகளனைத்தையும் வேத விளக்கங்களுடன் இந்நூல் நிராகரிக்கிறது. அதுவரையில் இதன் விளக்கங்கள் நல்ல பயனுற்ற முயற்சி.
தேவ இராஜ்யத்தைப்பற்றிய விளக்கத்துடன் ஆரம்பிக்கும் இந்நூல் திருச்சபையே தேவ இராஜ்யம் என்ற விளக்கத்தைத் தருகிறது. திருச்சபை என்ற பெயரைப் பயன்படுத்தி கர்த்தரின் ‘தெரிவு செய்து கொள்ளப்பட்ட மக்களையே’ தேவ இராஜ்யமாக நூலாசிரியர் அடையாளம் காண்கிறார். அப்படி ஒரு விளக்கம் திருச்சபைக்கு இருப்பது உண்மைதான். ஆனால், திருச்சபை என்ற பெயரை நூலாசிரியர் ‘கர்த்தரின் மக்களைக்குறிப்பதாக மட்டும்’ பயன்படுத்தியிருப்பதால் அவர் உலகில் கண்ணால் காணக்கூடியதான கிறிஸ்து எழுப்பியிருக்கும் திருச்சபையை அலட்சியப்படுத்துவதுபோல் இருக்கிறது. தேவ இராஜ்யமும் திருச்சபையும் ஒரே பொருளைக்குறிக்கும் இரு வார்த்தைகள் என்ற ஆசிரியர் முடிவு பொருந்தாது. திருச்சபை (Ekklesia -Called out and assembeld together) என்ற வார்த்தை உலகில் நாம் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும் திருச்சபையைக் குறித்தே வேதத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 115க்கு மேற்பட்டவற்றில் 99% உள்ளூர் சபைகளைக் குறித்தே பயன்படுத்தப்பட்டள்ளது. ஆகவே, தேவ இராஜ்யத்திற்கும் இந்தத் திருச்சபைக்கும் இடையில் overlap இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது உலகில் காணப்படும் திருச்சபைகள் அனைத்தும் விசுவாசிகளை மட்டுமே கொண்டிருக்க பாடுபட வேண்டியிருந்தபோதும் அவற்றின் அங்கத்தவர்கள் எல்லோரும் நிச்சயமாக பரலோகம் போவார்கள் என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில், ஆத்துமாக்களின் இருதயத்தைக் கர்த்தரே அறிந்திருக்கிறார். இருந்தாலும், உலகில் காணப்படும் மெய்த்திருச்சபைகள் கிறிஸ்து நேசிக்கும் திருச்சபைகள். வெளிப்படுத்தல் விசேஷத்தில், ஏழு திருச்சபைகளின் மத்தியிலும் நான் நடக்கிறேன் என்று கிறிஸ்து சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். ஆகவே, தேவ இராஜ்யம் என்பது தேவனுடைய மக்களின் இருதயத்தில் நடக்கும் கர்த்தரின் ஆட்சி என்ற விளக்கமே சரியானது, பொருத்தமானது.
ஆயிரம் வருட ஆட்சி பற்றி எழுதும் ஆசிரியர் அதை எழுத்துபூர்வமாக விளக்காமல் நீண்டதொரு காலத்தைக்குறிக்கும் அடையாளம் என்கிறார். அப் ‘பொற்காலம்’ இப்போது நடந்து கொண்டிருக்கும் சபையின் காலம் என்று விளக்குகிறார். வேதம் போதிக்கும் கர்த்தரின் முன்குறித்தலை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றது (பக்கம் 44). ரோமன் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாக குறிப்பிட்டிருப்பது தவறு (58). பரிசுத்த ஆவியை பல அளவுகளில் விசுவாசிகள் பெற்றுக்கொண்டார்கள் என்று கூறியிருப்பது தவறாக விளங்கிக்கொள்ள இடமளிக்கிறது. பல முறைகளில் கொடுக்கப்பட்டார் என்று எழுதியிருக்கலாம். மேலே நாம் பார்த்த குறைபாடுகளைத் தவிர ஏனைய பகுதிகள் மூலம் ஆசிரியர் விளக்கும் பல உண்மைகள் பயனளிப்பதாக இருக்கின்றன. கவனத்துடன் ஆராய்ந்து வாசிக்க வேண்டிய நூல். 81 பக்கங்கள். விலை ரூபாய் 30. ELS ல் பெறலாம்.