‘வெளிப்படுத்தின விசேஷத்தின் விளக்கவுரை’
கடைசிக்கால நிகழ்ச்சிகளைப்பற்றி வேதத்தில் காணமுடியாத போதனைகளைத் தரும் அநேக நூல்கள் இன்று கிறிஸ்தவ புத்தக சாலைகளை அலங்கரிக்கின்றன. ஆனால், வெளிப்படுத்தல் விசேஷத்தை விளக்கும் பயனுள்ள ஒரு நூலை தமிழ் பாப்திஸ்து வெளியீடு வெளியிட்டிருக்கிறது. இதன் நிறை குறைகளை இனி ஆராய்வோம்.
இவ்விளக்கவுரை ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆசிரியர் நார்மன் டாட்மேன். பதினொரு அதிகாரங்களில் வெளிப்படுத்தின விசேஷத்தின் 22 அதிகாரங்களுக்கும் 92 பக்கங்களில் சுருக்கமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் நூலின் ஆரம்பத்தில் வெளிப்படுத்தல் விசேஷத்தை விளக்க பலரும் பயன்படுத்துகிற விதிமுறைகளை விளக்கி அவ்விதிமுறைகளில் தான், ஜடியலிச விளக்கமுறையின்படியே நூலுக்கு விளக்கம் தருவதாக அறிவிக்கிறார். ஜடியலிச விளக்கமுறை வெளிப்படுத்தலை கடந்தகாலத்தைப்பற்றி மட்டும் கூறும் நூலாகவோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டும் கூறும் நூலாகவோ கருதாது நிகழ்காலத்தில் விசுவாசிகள் ஆத்மவிருத்தி அடையக்கூடிய செய்திகளைக் கொண்டிருப்பதாகக் கருதி விளக்கமளிக்கிறது. இதற்காக இந்த வேத விளக்கமுறை கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அலட்சியம் செய்வதாகக் கருதிவிடக்கூடாது. அவற்றையும் இது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. ஆனால், வெளிப்படுத்தின விசேஷத்தை விளங்கிக் கொள்ள இந்தவிதிமுறையே ஏனைய முறைகளைவிட மேலானது; சிறப்பானது.
வெளிப்படுத்தின விசேஷத்திற்கு எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுப்பதன் ஆபத்தை அடிக்கடி நினைவூட்டும் ஆசிரியர் கவனத்தோடு இந்நூலில் காணப்படும் அடையாளங்களுக்கு விளக்கங் கொடுத்திருக்கிறார். முதல் மூன்று அதிகாரங்களில் காணப்படும் ஏழு சபைகளும் உலகில் இருக்கப்போகும் எல்லாசபைகளையும் பிரதிபலிக்கின்றன என்றும், முழு நூலும் கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் சாத்தான் கிறிஸ்துவோடு நடத்தும் போராட்டத்தை விளக்குவதாக இருக்கின்றன என்றும் கூறுகிறார். நூலின் கடைசி அதிகாரங்கள் நியாயத்தீர்ப்பு நாளையும் அந்நாளில் நடக்கப்போகும் காரியங்களிலும் அதிகமாக கவனம் செலுத்துகின்றன என்று விளக்குகிறார். இவ்வகையிலான விளக்கமே வெளிப்படுத்தல் விசேஷத்தின் சரியான விளக்கமுறையாக இருக்கின்றது. 20:1-10 வரையுள்ள வசனங்களுக்கு ‘எவர் கொடுக்கும் விளக்கமும் கடினமானது’ என்றும், இதற்கு ‘ஒருவரும் ஆணித்தரமாக விளக்கம் கொடுக்க முடியாதென்றும்’ ஆசிரியர் கூறியிருப்பது சரியல்ல (பக்கம் 71, 74 பக்கங்கள்). நல்லதொரு விளக்கத்தைக் கொடுத்துவிட்டு இப்படி எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. வேதத்திற்கு பலரும் பலவிதமாக விளக்கமளித்தாலும் அதற்கு எப்போதும் சரியான ஒரு விளக்கம்தான் இருக்க முடியும்.
இந்த நூலில் இன்னுமொரு குறை. அது நூலாசிரியரின் தவறா? மொழி பெயர்த்தவரின் தவறா? என்று தெரியவில்லை. பக்கம் 2ல் அடையாள மொழிபற்றிய விளக்கத்தில் அது ‘ரீல் சுத்துவது போல’ மிகைப்படுத்தப்பட்ட மொழிநடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு. மிகைப்படுத்தப்பட்ட மொழிநடை வேறு. அடையாள மொழி வேறு. நூலின் ஆரம்பத்தில் அதிகாரப் பிரிவுகளையும், வசனப்பிரிவுகளையும் முறையாகத் தொகுத்தளித்திருந்தால் வாசிப்பவர்கள் நூலின் முழு அமைப்பையும் புரிந்து கொண்டு வாசிக்க உதவியாக இருந்திருக்கும். நூலை வாசிக்கும்போதே அது மொழிபெயர்ப்பு என்று தெரிகிறது. இதன் தமிழ் நடையில் மேலும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். வாசிக்க வேண்டிய ஒரு நூல். வாசித்து முடித்த பின் வெளிப்படுத்தின விசேஷம் அப்படியொன்றும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நூலல்ல என்றுதான் சொல்லப் போகிறீர்கள். (தமிழ் பாப்திஸ்து வெளயீடு. சென்னை. விலை 30.)