நெகேமியா

வேதம் நமக்கு தேவனுக்குப்பயந்த பல நல்ல விசுவாசிகளையும், தலைவர்களை வரலாற்றில் உதாரணமாகத்தந்து நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், எத்தகைய தலைவர்களை சபைகளில் நியமிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் தந்து உதவுகின்றது. அப்படிப்பட்ட நல்ல விசுவாசமுள்ள தலைவர்களில் ஒருவனாக நெகேமியாவை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். சபைகளில் மோசமான மனிதர்களும், தலைவர்களும் (யெ‍ரொபேயாம், ஆகாப்) இருந்துவிடலாம். இத்தகையவர்களுக்கு மத்தியில் நெகேமியா தேவ பயமுள்ள மனிதனாகவும், கர்த்தரின் ஊழியத்தில் வாஞ்சையுள்ள மனிதனாகவும் இருந்து தேவனுடைய மக்களை வழிநடத்தியிருக்கிறான். நெகேமியா எப்படிப்பட்ட விசுவாசியாக, எத்தகைய தலைவனாக இருந்தான்?

(1) கர்த்தருக்குப் பயந்து மனிதனாக இருந்தான்.

ஒரு விசுவாசிக்குரிய முக்கிய இலக்கணம், அவன் கர்த்தருக்குப் பயந்த மனிதனாக இருப்பதுதான். வேதம் நாம் கர்த்தருக்குப் பயப்படுகிற மனிதர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது (5:9, 15). எருசலேமின் ஆலயத்தைச் சுற்றி இருக்கும் சுவர்கள் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கிறது என்பதை அறிந்த நெகேமியா, அதற்குத்தானும் பொறுப்பு என்று உணர்ந்து, அந்த செய்தியைக் கேட்ட உடனேயே கர்த்தருக்கு முன் கண்ணீர் விட்டு அழுதான் (1:1-3). இன்று, கர்த்தருடைய சபை எப்படி இருந்தாலும் நமக்கென்ன என்று நினைக்கும் அநேகருக்கு மத்தியில் விசுவாசியான தன்னால் அப்படி இருக்க முடியாது என்று கர்த்தருடைய ஆலயத்தின் நிலைமையால் கர்த்தருடைய மகிமை பாதிக்கப்பட்டுவிட்டதாகக் கதறினான் நெகேமியா. உலகத்து சுகங்களையெல்லாம் அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து அனுபவித்துக் கொண்டிருந்தபோதும் கர்த்தருடைய ஆலயத்து மதில் சுவர்கள் கட்டி முடிக்கப்படவில்லை என்பதை அறிந்ததும் உடல் பதறினான் நெகேமியா. அது கட்டி முடிக்கப்படாமல் இருப்பதற்கு தன்னுடைய மக்களும், தானும் காரணமாக இருந்திருக்கிறோம் என்று பாவ அறிக்கையிட்டு கர்த்தரின் மன்னிப்பை நாடினான் நெகேமியா (1:4-11). அது கட்டி முடிக்கப்பட தன்னால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்து அதை நிறைவேற்ற உறுதிபூண்டான். நண்பனே! நீ கர்த்தருக்கு பயந்த விசுவாசியா? உன் ஆபிஸ் வேலைக்கும், குடும்பத்திற்கும், உலக காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கர்த்தருடைய காரியங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு நீ காரணமாக இருந்து வருகிறாயா?

(2) கர்த்தருடைய ஊழியத்தில் தீவிர வாஞ்சையுள்ள விசுவாசியாக இருந்தான்

ஆலய வேலைகள் துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் நெகேமியா எடுத்ததை அந்நூலிலே வாசிக்கிறோம். அரசனிடம் அனுமதி பெற்று ஆலய வேலைகளுக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு எருசலேமுக்கு போய் உடனடியா வேலைகளை ஆரம்பிக்கும் வேலையில் ஈடுபட்டான் நெகேமியா (2:1-9). கடினமான ஒரு வேலையைச் செய்யும் பொறுப்பேற்றிருந்தான் நெகேமியா. பல தொல்லைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. வெறும் ஊழிய ஆசை மட்டும் அந்த வேலையை முடிக்க துணை செய்யாது. அது கர்த்தருடைய‍ வேலை என்ற உணர்வும், அதைச்செய்து முடிக்கும் வாஞ்சையும், தீவிரமும் இருந்தால் மட்டுதே ஒரு மனிதனால் அதைச் செய்ய முடியும். நெகேமியாவுக்கு அத்தகைய வாஞ்சையும் தீவிரமும் இருந்தது. ஆவியில் அனலுள்ள மனிதனாக கர்த்தருடைய ஆலய வேலைகளில் ஈடுபட்டான் நெகேமியா. நண்பர்களே! நீங்கள் ஆவியில் அனலுள்ளவர்களாக இருக்கிறீர்களா? கர்த்தருடைய காரியங்களைத் தீவிரமான வாஞ்சையோடு ‍செய்கிறீர்களா?

(3) ஊழியத்திற்காக தன்னுடைய சொந்த நலன்களைப் பலிகொடுக்கத் தயாராக இருந்தான்

ஆலயப்பணிகளைப் பொறுப்பேற்று செய்ய எருசலேமுக்கு போவதற்கு முன்பு பல சுகபோகங்களையும், உயர் பதவிகளையும் நெகேமியா விடவேண்டியிருந்தது. பல துன்பங்களைச் சகித்து, உலகத்தார் கண்ணில் உதவாக்கறையான வேலையாகத்தெரிந்து, எதிரிகளால் எள்ளிநகையாடப்பட்டதுமான ஆலய வேலையில் ஈடுபட வேண்டிருயிந்தது. கர்த்தருடைய வேலை என்று வந்தவுடன் நெகேமியா தன்னுடைய சொந்த நலன்களைத் தள்ளிவைக்கத் தயங்கவில்லை (1:11, நான் ராஜாவுக்கு பான பாத்திரக்காரனாக இருந்தேன்). பல துன்பங்களையும் வாழ்க்கையில் எதிர்நோக்கவும் தயாராக இருந்தான். தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவும், குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் அநேக பச்சோந்திகள் நிரம்பி வழியும் இந்நாட்களில் நாம் நெகேமியாவின் தன்னலமற்ற விசுவாசத்தைப்பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். நண்பனே! உன் வேலைகளுக்கும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சபைவேலைகளை செய்யாமலிருக்கிறாயா? கர்த்தருடைய வேலைகள் தடைப்பட்டிருக்கும்போது உன் வாழ்க்கை எப்படி வளம் பெற முடியும்?

(4) எடுத்துக்கொண்ட காரியத்தை சிரத்தையோடு செய்யும் விசுவாசியாக இருந்தான்

நெகேமியா எடுத்துக்கொண்டுள்ள வேலை மகா பெரியது (6:3). அந்த வேலை ஏனோ தானோவென்று செய்கிற வேலையல்ல. கர்த்தருடைய ஊழியங்கள் கருத்தோடு செய்யப்பட வேண்டும். நெகேமியா தன்னோடு வந்தவர்களையும், எருசலேமில் இருந்தவர்களையும் கூட்டி, தகுந்த திட்டங்களை வகுத்து, சரியான மனிதர்களை ஒவ்வொரு வேலைக்கும் நியமித்து, ஒவ்வொரு காரியத்தையும் நிதானத்தோடும், கருத்தோடும் செய்தான் (2:11-3:32). செய்யும் பிரசங்கத்தையே சரியாகத் தயாரிக்காமல் பிரசங்க மேடைகளில் உளரித்தள்ளிக்கொண்டிருக்கும் பிரசங்கிகளும், கர்த்தருடைய சபை வேலைகளையும், ஆராதனையையும் கண்ணாபின்னாவென்று நடத்திவரும் போதகர்களும் நெகேமியாவின் சிரத்தையான ஊழியத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும், சபைக் கூட்டங்களை நேரத்திற்குக் கூட்டாமலும், சபை வேலைகளை ஓழுங்கோடு நடத்தாதவர்களும் ஊழியத்திற்குத் தகுதியானவர்களல்ல.

(5) தவறான கூட்டுக்கு ஒருபோதும் இடங்கொடுக்காத விசுவாசியாக இருந்தான்

ஆலய வேலைகளில் ஈடுபட்டிருந்த நெகேமியாவுக்கு பல தொல்லைகள் ஏற்பட்டன. உள்ளிருந்தும் புறமிருந்தும் அந்தத் தொல்லைகள் புறப்பட்டன. ஆலய வேலைகளில் பங்கு கேட்டு அது கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த சன்பல்லாத்தும், தோபியாவும், கேஷேமும், ‘ஓனோ பள்ளத்தாக்குக்கு வா, அங்கே சந்தித்துப் பேசுவோம்’ என்று நெகேமியாவை அழைத்தார்கள். அந்த அழைப்புக்கு இணங்காமல், அவர்கள் நல்ல நோக்கத்தோடு தன்னை அழைக்கவில்லை என்பதை உணர்ந்து நெகேமியா என்வேலைகளை விட்டுவிட்டு வரமுடியாது என்று அவர்களுக்கு பதிலனுப்பினான் (6:1-4). பல தடவைகள் அவர்கள் கூப்பிட்டனுப்பியும் நெகேமியா அதை சட்டை செய்யவில்லை. தவறான கூட்டு ஊழியத்துக்கு எப்போதுமே ஆபத்து, நமது விசுவாசத்துக்கும் ஆபத்து. தவறான போதனைகளைக் ‍கொண்டவர்களுடன் கூடுவதும், அவிசுவாசிகளுடன் நேர‍த்தை வீணடிப்பதும், கர்த்தரின் கட்டளைகளுக்கு எதிரான செயல்கள். ஊழியக்காரர்களுடைய ஊழியங்களைத் தடைசெய்ய தவறான கூட்டுக்சேரும்படி பல போலிகளிடம் இருந்து நமக்கு எப்போதும் அழைப்பு வரும். அவற்றை இனங்கண்டு தவிர்த்துக் கொள்ள வேண்டியது ஊழியக்காரர்களின் கடமை. சொல்ல வேண்டிய நேரத்தில் முடியாது என்று சொல்லத் தயங்குகிறவன் மெய் விசுவாசியாக, கர்த்தருடைய ஊழியக்காரனாக இருக்க முடியாது.

(6) பிசாசின் சோதனைகளை கர்த்தரின் துணையோடு தைரியத்தோடு எதிர்த்தவனாக இருந்தான்

ஆலய வேலைகள் தொடர்ந்து நடப்பதைத் தடை செய்ய நெகேமியாவுக்கு பல சோதனைகள் ஏற்பட்டன. ஒருபுறம் சன்பல்லாத்தும், தோபியாவும், கேஷேமும் துர்க்குணத்தோடு பல திட்டங்களைத் தீட்டி வேலைகளை நிறுத்தப் பார்த்தார்கள். மறுபுறம் உடனிருந்தவர்கள் வேலையில் ஆர்வம் குறைந்து பலகுறைபாடுகளைப் பட்டியல்போட்டு முறையிட்டு தொடர்ந்து வேலையில் ஈடுபடத் தயங்கினார்கள் (5:1-19; 6:1-19). இதற்கெல்லாம் பின்னணியில் இருந்து செயல்படுகிறவன் சாத்தான் என்பதில் நெகேமியாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆலயவேலைகள் பெருமளவு முடிந்தபின்பும் ஓய்வுக்கு இடங்கொடுக்காமல் சாத்தான் நெகேமியாவைத் தாக்கினான். எல்லா வேலைகளும் நிறைவேறிய பின்னும் சாத்தானுடைய வேலைகள் தொடராமல் இருக்கவில்லை (13:15-31). சாத்தானின் ஒவ்வொரு சோதனையையும் கர்த்தர் முன் ஜெபத்தில் தரித்திருப்பதன் மூலமும், முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதன் மூலமும் நெகேமியாவால் வெற்றி கொள்ள முடிந்தது. பெந்தகொஸ்தேகாரர்களைப்போல பேய்விர‍ட்டுவதால் சாத்தான் ஓடிவிடமாட்டான். விசுவாசத்தில் உறுதியும், கலங்காத நெஞ்சமும், ஜெபமும், வேத ஞானமும், அதை முறையாகப் பயன்படுத்துவதும், கர்த்தரில் எப்போதும் தங்கியிருப்பதாலுமே சாத்தானோடு நடக்கும் போராட்டத்தில் வெற்றி கிட்டும்.

(7) தன்னுடைய மக்களின் பலவீனங்களுக்கு மத்தியிலும் கர்த்தருக்காக உழைத்து அவரை மகிமைப்படுத்தினான்

நெகேமியாவுடன் இருந்த மக்கள் பலவீனமானவர்கள். அவர்கள் அவனுக்கு துணையாகவும் இருந்தார்கள், தொந்தரவாகவும் இருந்தார்கள். சலிப்பேற்படுத்தும்வகையில் முறுமுறுத்தவர்கள் (5:1-12). இத்தகைய ஆத்துமாக்களைக் கொண்டுதான் ஆலய வேலைகளை அவன் செய்ய வேண்டியிருந்தது. இதேபோல்தான் நாமும் பலவீனமுள்ள விசுவாசிகளின் கூட்டத்தோடு நம்முடைய சபைகளில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய பலவீனத்தைக் கண்டு நாம் ஊழியத்தைவிட்டு ஓடிவிட முடியாது. அவர்களைத் திருத்தி, ஆலோசனைகூறி, நல்வழியில் நடத்தி கர்த்தரின் ஊழியத்தை நாம் அவருக்காக செய்ய வேண்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s