பக்தி இயக்கத்தைப் பற்றியும், அதன் போதனைகளைப் பற்றியும் அநேக தமிழ் வாசகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆங்கிலத்தில் இதனை Pietism or Pietist Movement என்று அழைப்பார்கள். இந்த இயக்கத்தைப்பற்றி நாம் ஆராய வேண்டிய அவசியம் என்ன என்ற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றலாம். சமீபத்தில் ஸ்ரீலங்காவில் இந்த தலைப்பில் என்னைப் பேசக் கேட்டிருந்தார்கள். அப்பேச்சைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது தான் இது எந்தளவுக்கு தமிழ் கிறிஸ்தவ வாசகர்கள் இன்றைக்கு அறிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்பது எனக்கு விளங்கியது. ஏன் என்பதுதானே உங்கள் கேள்வி? அதற்கு பதில் சொல்லாமல் நான் மேலும் எழுத முடியாது. அதற்கு முதலாவது காரணம் இன்று நம்மத்தியிலே இருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்கள் மற்றும் அற்புத ஊழியங்கள் செய்து வரும் தனி மனிதர்களின் போதனைகளுக்கம் ஊழியங்களுக்கும் ஒருவிதத்தில் காரணகர்த்தாவாகவும் முன்னோடியாகவும் இந்த பக்தி இயக்கம் இருந்திருந்திருப்பதுதான். அடுத்ததாக, இன்று பல சபைகளையும், சபைத்தொடர்பற்ற கிறிஸ்தவ ஸ்தாபனங்களையும் பாதித்திருக்கும் புதிய சுவிசேஷக் கோட்பாட்டப் போதனைகளுக்கம், வேதவிளக்க முறைகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது இந்த பக்தி இயக்கம். உண்மையில் சகோதரத்துவ சபைகள் நம்மத்தியில் தோன்றி வளர்வதற்கும் இந்த பக்தி இயக்கமே காரணம். இத்தனைக்கும் காரணமாக இருந்திருக்கும் பக்தி இயக்கத்தைப் பற்றியும், அது எந்தளவுக்கு கிறிஸ்தவத்தைப் பாதித்து அதில் ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றியும் நாம் அறிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. கிறிஸ்தவ வரலாற்றையும், வரலாற்று இறையியல் கோட்பாடுகளையும் புறக்கணித்திருப்பதால்தானே இன்று தமிழ் கிறிஸ்தவம் தலைகுனிந்த நிலையில் வேத அறிவின்றி அனுபவத்தை மட்டும் நாடி இருட்டில் நிற்கிறது. ஆகவே, பக்தி இயக்கத்தைப் பற்றி நாம் விபரமாகத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த இயக்கத்தைப் பற்றியும், அதன் போதனைகளையும் அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் விசுவாச வாழ்க்கையில் அறிவுபூர்வமான ஒரு மாற்றம் ஏற்படுமானால் அதுவே இந்த ஆக்கத்திற்குக் கிடைத்த பலனாக இருக்கும்.
பக்தி இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சபையையோ, சபைப்பிரிவையோ அடையாளங்காட்டும் வார்த்தையல்ல. அது 17ம் நூற்றாண்டின் முடிவில் ஆரம்பித்து இன்று பலவித சமயப்பிரிவுகளையும், சபைகளையும் பாதித்திருக்கம் ஒரு இயக்கமாகும். ஆனால், அதற்கு முன்பே, ரோமன் கத்தோலிக்க மதத்திலும், 16ம் நூற்றாண்டுகளில் அனாபாப்திஸ்துகள் (Anabaptist) மத்தியிலும்கூட பக்தி இயக்கத்தின் சிந்தனைப்போக்கு இருந்திருக்கிறது.
பக்தி இயக்கத்தின் போதனைகளை நாம் முறையாக விளங்கிக் கொள்ள அதன் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் அறிந்திருப்பது அவசியம். அதை இனி சுருக்கமாகப் பார்ப்போம்.
அனாபாப்திஸ்து இயக்கம் (Anabaptist Movement)
பக்தி இயக்கம் 17ம் நூற்றாண்டில் ஜேர்மனியில் ஓர் இயக்கமாக ஆரம்பித்த போதும் அதன் போதனைகளின் சாயல்கள் அதற்கு முன்பே வரலாற்றில் வேறு சில இயக்கங்களில் இருந்துள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது அனாபாப்திஸ்து இயக்கம் (Anabaptist Movement). மத்திய ஐரோப்பாவில் 1525-ம் ஆண்டளவில் ஆரம்பமான ஓர் இயக்கம் அனாபாப்திஸ்து இயக்கம். நமது விசுவாசம் வேத அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு இந்த இயக்கம் ஆரம்பத்தில் உருவானது. கிறிஸ்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியிருப்பதால் பழைய ஏற்பாட்டு உடன்படிக்கை நமக்கு அவசியமில்லை என்ற அடிப்படையில் கிறிஸ்துவைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்க இந்த இயக்கம் முயன்றது. இதன் காரணமாகவே அனாபாப்திஸ்துகள் குழந்தை ஞானஸ்நானத்தை எதிர்த்து விசுவாசிகளுக்கு மட்டுமான முழுக்கு ஞானஸ்நானத்தை அறிமுகப்படுத்தினார்கள். குழந்தை ஞானஸ்நானம் ரோமன் கத்தோலிக்க மதம் உருவாக்கிய, வேதத்தில் காணமுடியாத ஒரு முறை என்று இவர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அத்தோடு விசுவாசிகளுக்கு மட்டுதே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் மட்டுமே சபைகளில் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் புதிய சபைகளையும் ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக இவர்கள் “மறுபாப்திஸ்துகள்” அல்லது “அனாபாப்திஸ்துகள்” என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டார்கள்.
இந்த அனாபாப்திஸ்து இயக்கம் ஆரம்பத்தில் மூன்று குழுக்களைக் கொண்டு உருவாகியது. இவற்றில் மிகப்பெரியது மெனோனைட் இயக்கம் (Menonite Movement). இதன் தலைவராக இருந்த மெனோ சிமன்ஸின் (Meno Simons) பெயரோடு இந்த இயக்கம் தோன்றியது. இந்த இயக்கத்தில் இருந்து வளர்ந்து இன்று அமெரிக்காவில் பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் காணப்படுவதே மெனோனைட் சகோதரத்துவ (Menonite Brethren) சபைகள். அனாபாப்திஸ்து இயக்கத்தைச் சார்ந்த அனைவரும் ஒரே கோட்பாடுகளை விசுவாசிக்கவில்லை. அவர்களுக்கு மத்தியில் பல வேறுபாடுகள் இருந்தன.
அனாபாப்திஸ்து இயக்கத்தின் முதலாவது பிரிவான சுவிஸ் சகோதரத்துவ இயக்கதே (Swiss Brethren Movement) 1525-ல் முதல் முதலில் தோன்றியது. இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஒரு சபையில்லை, வெறும் சகோதரர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.
இரண்டாவது பிரிவு தன்னை அனாபாப்திஸ்து என்று மட்டுமே அழைத்துக் கொண்டது. இது ஜேர்மனியில் ஆரம்பித்து கலாச்சார அடிப்படையில் ஒல்லாந்து (Dutch), பிரீசியன் (Frisian), பிளெமிஸ் (Flemish) என்று மூன்று பிரிவுகளாக இருந்தன. இந்த மூன்று பிரிவுகளும் 1530-களுக்குப் பின்பு மெனோசிமன்சுக்கு இருந்த பிரபல்யத்தால் மெனோனைட்ஸ் (Menonites) என்று அழைக்கப்பட்டனர்.
மூன்றாவது பிரிவினர் ஹட்டேரியன் சகோரர்கள் (Hatterian) என்று அழைக்கப்பட்டனர்.
16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் அனாபாப்திஸ்துகள் கத்தோலிக்கர்களாலும், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாலும் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர். அதறகுக் காரணம் அவர்கள் பின்பற்றிய கோட்பாடுகள்தான். இவர்கள் ஞானஸ்நானத்தைக் குறித்தும், சபையைக்குறித்த பொதுவான கோட்பாட்டிலும் சரியான விளக்கத்தைக் கொண்டிருந்தபோதும், பல பெந்தவறான போதனைகளையும் பின்பற்றினர். முழுக்கு ஞானஸ்நானத்தை வற்புறுத்தியதாலும், எந்தவிதத்திலும், எக்காலத்திலும் கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபடக்கூடாது என்று போதித்தாலும் அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அத்தோடு அனாபாப்திஸ்துகளில் மெனோ சிமன்ஸ் (Meno Simons), ஹீப்மெயர் (Hubmaier) போன்ற சில நல்ல தலைவர்களைத் தவிர்த்த ஏனையோரின் போதனைகள் வேதத்திற்குப் புறம்பானதாகவும், மோசமானவையாகவும் இருந்தன. இவர்களில் பலர் அறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை நாடி (mustical experience) வேதம் மட்டுமே கர்த்தரின் சித்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதை நம்பாமல் வேதத்திற்கு வெளியில் இருந்து கர்த்தரின் வெளிப்படுத்தலை நாடினார்கள். அனாபாப்திஸ்து இயக்கத்தில் காணப்பட்ட முக்கியமான ஆபத்து இது. இப்படிப் போதித்த அனாபாப்திஸ்துக்களில் ஒருவர் செபஸ்டியன் பிரான்கே (Sebastian Francke). இந்த மனிதர் மார்டின் லூதரின் காலத்தில் வாழ்ந்துள்ளார். அத்தோடு வேதத்தை மட்டுமே விசுவாசிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த தூய நம்பிக்கையைக் கொண்டிரந்த அனாபாப்திஸ்துகள் மனிதர்களால் எழுதப்பட்ட விசுவாச அறிக்கைகளுக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்தகைய விசுவாச அறிக்கைகள் வேத நம்பிக்கைகளில் இருந்து தம்மை விலகச் செய்து விடும் என்ற தவறான எண்ணத்தை அவர்கள் வளர்த்துக் கொண்டனர். மேலும் சமுதாயத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே பரிசுத்த வாழ்க்கை வாழ முடியும் என்று நம்பிய இவர்களில் பலர் சமுதாயத்தைவிட்டு விலகி வாழும் போக்கைப் பின்பற்றினர். அனாபாப்திஸ்துகளின் மத்தியில் காணப்பட்ட இத்தகைய சிந்தனைப்போக்கை 17ம் நூற்றாண்டில் ஜேர்மனியில் தோன்றிய பக்தி இயக்கத்தில் பெருமளவு பார்க்க முடிகிறது. பக்தி இயக்கத்துக்கு அனாபாப்திஸ்து முன்னோடிகள் என்று வரலாற்று ரீதியில் நம்மால் சொல்லமுடியாவிட்டாலும் இந்த இரண்டு இயக்கங்களும் பலவிதங்களில் ஒரே போக்கினைக் கொண்டிருந்தன. முக்கியமாக, புத்திக்கப்பாற்பட்ட, விளக்க முடியாத, உணர்வு சார்ந்த அனுபவங்களை நாடுவதில் இவை இரண்டும் ஒத்துப்போவதைப் பார்க்கலாம்.
அனாபாப்திஸ்துகள் தங்களுக்கு ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க மதத்தாலும், சீர்திரத்த கிறிஸ்தவத்தாலும் ஏற்பட்ட கடுந்துன்பத்தினால் நாடுகடந்து வட அமெரிக்காவிலும், கனடாவிலும் போய்க் குடியேறினர். கத்தோலிக்க மதம் சீர்திருத்தவாதிகளைப் போலவே இவர்களையும் எதிரிகளாகக் கருதியது. அதேவேளை சீர்திருத்த சபைகள் இவர்களுடைய புரட்சிகரமான சபை சம்பந்தப்பட்ட போதனைகளையும், அறிவுக்கெட்டாத உணர்வு சார்ந்த அனுபவத்தை (mystical experience) நாடும் போக்கையும் கடுமையாக எதிர்த்தன. இவ்வாறாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் போய்க் குடியேறியவர்களின் வழியில் வந்தவர்களின் மிச்சங்களே இன்று அமெரிக்காவில் ஆமிஷ் மக்கள் என்றும் (Amish), மெனோனைட்டுகள் (Menonite) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மெனோனைட்டுகள் மத்தியில் ஏற்பட்ட இன்னுமொரு பிரிவு வெளிப்புறப் பாதிப்பால் உருவானது. இது ஜேர்மனியில் 17, 18-ம் நூற்றாண்டுகளில் லூதரன் சபைகளில் மத்தியில் தோன்றிய பக்தி இயக்கத்தின் தாக்கத்தினால் உருவானது. பக்தி இயக்கத்தின் கோட்பாடுகளை ஏற்று இந்த மெனோனைட் பிரிவு 1859-ல் மெனோனைட் சகோதரர்கள் (Menonite Brethren) என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. 19-ம் நூற்றாண்டில் இவற்றைத்தவிரவேறு சில மெனோனைட் பிரிவுகளும் தோன்றின.
பக்தி இயக்கத்தின் போதனைகளைக் கொண்டிருந்த இன்னுமொரு இயக்கம் குவேக்கர்களாகும் (Quakers-Society of Friends). வில்லியம் பென் (William Pen) என்ற குவேக்கர் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் குடியேறி குவேக்கர் இயக்கத்தை வளர்த்தார்.
ஜேர்மனியில் தோன்றிய பக்தி இயக்கம்
பக்தி இயக்கம் (Pietist Movement) 17-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜேர்மனியில் லூதரன் சபைகள் மத்தியில் ஆரம்பமானது. இந்த இயக்கம் இறை போதனைகளில் அதிகம் நாட்டம் காட்டாது இறை பக்திக்குரிய காரியங்களில் அதிக நாட்டம் காட்டியதால் இந்தப் பெயரைப் பெற்றது. இதை ஆரம்பித்து வைத்தனர் ஜேர்மனியில் பக்தி இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படும் பிலிப் ஜேக்கப் ஸ்பெனர் (Philip Jakob Spener 1637-1705) என்பவர். ஆங்கிலேய பியூரிட்டன்களான ஜோன் பனியன் போன்றவர்களின் போதனைகளால் பாதிக்கப்பட்ட ஸ்பெனர் பியூரிட்டன் போதனைகளில் அதிக அக்கறை காட்டினார். லூதரின் சீர்திருத்தவாத கருத்துகளின் அவர் ஏற்கனவே அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஸ்ராஸ்பர்க் (Strasbourg) பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றிருந்த ஸ்பெனர் லூதரின் எழுத்துக்களாலும், ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மார்டின் போசர் (Martin Bucer) என்ற பிரபல்யமான லூதரன் இறையியல் அறிஞரின் எழுத்துக்களாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அக்காலத்தில் லூதரின் மறைவுக்குப் பிறகு ஜேர்மனியில் இருந்த லூதரன் சபைகள் ஆத்மவிருத்தியில் அதிக நாட்டம் செலுத்துவது குறைந்து கொண்டுவந்தது. இறை போதனைகளிலும், சபைக்கோட்பாடுகளிலும், பாரம்பரியங்களிலும் அதிக ஆர்வம் காட்டிய சபைகள் பக்திவிருத்தியில் அந்த நாட்டத்தைக் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் சபைகளில் Formalism அதிகமாக இருந்தது. அதாவது, முறையாக ஆராதனையை நடத்துவதில் காட்டப்பட்ட அக்கறை அந்த ஆராதனையை ஆர்வத்தோடு, உளப்பூர்வமாக கொடுக்க வேண்டுமென்பதில் காட்டப்படவில்லை. சபைத்தலைவர்களினதும், நாட்டுத் தலைவர்களினதும் வாழ்க்கையிலும் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் பல துறைகளில் இருந்து சபையில் சீர்திருத்தம் தேவை என்ற கூக்குரல் எழுந்தது. பக்தியில் அதிக நாட்டம் காட்டி வந்த ஸ்பெனரை இவையெல்லாம் அதிகமாகப் பாதித்தன. அதேவேளை, ஜேர்மன் லூதரனிசத்தில் யொகான் ஆர்ன்ட் (Johann Arndt) என்பவரின் அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை அனுபவிக்கத் தூண்டும் (mystical) எழுத்துக்களுக்கு இக்காலத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. லூதரன் சபையில் காணப்பட்ட உணர்ச்சியற்ற, ஆராதனையும், பக்திவிருத்தியற்ற வாழ்க்கை முறையும், அனுபவத்திற்கும், மனித உணர்ச்சிகளுக்கும் மட்டும் முதலிடம் கொடுத்து எழுந்த புதுக்கருத்துக்களும் ஸ்பெனரில் பெருந்தாகத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனால் பக்திவிருத்தியில் மனித உணர்ச்சிகளுக்கே ஸ்பெனர் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். யொகான் ஆர்ன்டின் கருத்துக்களின் சாயலை பின்னால் ஸ்பெனர் எழுதிய நூல்கள் அனைத்திலும் பார்க்கலாம்.
ஜேர்மனியில் பக்தி இயக்கம் தோன்றியதற்கு இன்னுமொரு காரணம் அங்கு ஐரோப்பாவே காணாத வகையில் நடந்து வந்திருந்த 30 வருடப் போர் (1618-1648) ஆகும். போரினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் சபைகளையும், போதனைகளையும், விசுவாச அறிக்கைகளையும்விட உள்ளார்ந்த பக்தியையும், அகம் சார்ந்த அனுபவங்களையும் நாடி அலைந்தனர். அவர்களுக்கு அமைதியும், சமாதானமும் தேவைப்பட்டது. அதைத்தேடி அலைந்த மக்களுக்கு இதமூட்டுவதாக அமைந்தன பக்தி இயக்கப் போதனைகள். மக்களின் மனப்போக்கு பக்தி இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இவை எல்லாவற்றையும்விட கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான நீதிமானாக்குதலைவிட (Justification by Faith) பக்திவிருத்திக்குரிய அனுபவம் சார்ந்த போதனைகளிலேயே (feeling oriented mystical experience) பக்தி இயக்கம் அதிக நாட்டம் காட்டியதும் அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது.
பக்தி இயக்கத்தின் குறைபாடுகள்
இப்படி ஸ்பெனரால் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டுப் பரவிய பக்தி இயக்கத்தின் போதனைகளில் உள்ள குறைபாடுகளை நாம் ஆராய்வது அவசியம்.
1. பக்தி இயக்கத்தின் எழுத்துக்களில் அனுபவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.
பக்தி இயக்கத்தைப் பொறுத்தவரையில் தனி மனிதனின் அனுபவமே (இயற்கையைப் பொறுத்தவரையிலும், சமயத்தைப் பொறுத்தவரையிலும்) அனைத்தையும் தீர்மானிக்கும் நீதிமன்றமாக இருந்தது. இதன் காரணமாக ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய சொந்த அனுபவத்தால், பக்தியால் கண்டுபிடிப்பவைகளே அவனுடைய இறையியல் அறிவின் வளர்ச்சியாகக் கருதப்பட்டது. ஆகவே, பக்தி இயக்கத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவனே வெளிப்படுத்தலுக்கான ஞானத்தைக் கொண்டிருக்கிறான். அத்தோடு அறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை பக்தி இயக்கம் நாடி இருண்டகால ரோமன் கத்தோலிக்க மத நடவடிக்கைகளை மறுபடியும் நினைவூட்டியது.
2. பக்தி இயக்கம் வேதத்தைப் பற்றிய தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது
பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தபோதிலும் லூதரன் சீர்திருத்தவாதிகளைவிட வித்தியாசமான விதத்தில் வேதத்தைப் பயன்படுத்தினர்.
அ. அவர்களைப் பொறுத்தவரையில் வேதம் மட்டும் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டிருக்கவில்லை.
ஆ. வேதத்தோடு, நம்முடைய மனந்திரும்புதலும், மறுபிறப்பும், உள்ளார்ந்த அனுபவங்களும் நம்மை வழிநடத்துவனவாகக் கருதப்பட்டன.
இ. அவர்கள் தனிப்பட்டவிதத்தில் வேதத்தைப் படிக்கவும், தனிநபர்கள் வேதத்திற்கு சொந்த விளக்கங்களைக் கொடுக்கவும் அனுமதித்தனர்.
ஈ. அவர்களைப் பொறுத்தவரையில் பிரசங்கம் நன்மையானதாகத் தென்பட்டாலும், பிரசங்கங்கள் வேதத்தைப்போல நமக்குப்புறத்தில் காணப்படும் ஒரு அதிகாரம் மட்டுமே. ஆகவே, அது முழுமையான அதிகாரத்தையும், பயனையும் கொண்டிருக்கவில்லை. பக்தி இயக்கம் தனி மனிதனின் அனுபவத்தையே இறுதி அதிகாரமாகக் கருதியது.
3. பக்தி இயக்கம் விசுவாச அறிக்கையை சந்தேகக் கண்ணோடு பார்த்தது.
விசுவாச அறிக்கை போதிக்கும் சத்தியங்களை தனி மனிதனின் அனுபவம் மட்டுமே சரியா? தவறா? என்று தீர்மானிக்க முடியும் என்று அது கருதியது. வேதமோ, விசுவாச அறிக்கையோ எதுவாக இருந்தாலும் தனி மனிதனின் உள்ளுணர்வுக்கு அது சரியாகப்பட்டால் மட்டுமே அவனுடைய பக்திவிருத்திக்குப் பயன்படும் என்று பக்தி இயக்கம் கருதியது.
4. அடிப்படை இறையியல் போதனைகளுக்கு பக்தி இயக்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இறைபோதனைகளுக்கு பக்தி இயக்கம் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கவில்லை. போதனைகள் பிரிவினையை ஏற்படுத்தும் என்று தவறாக நம்பிய அவர்கள் எல்லாக் கிறிஸ்தவர்களும் போதனைகளை விட தங்களுடைய சொந்த அனுபவங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருதினார்கள்.
5. பக்தி இயக்கம் சபைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்தது.
பக்தி இயக்கத்தார் சபையை பாபிலோனாகக் கருதினார்கள். சபையை அவர்கள் நிராகரித்து ஆத்துமாக்கள் சிறுகுழுக்களாகக் கூடி ஜெபிக்கவும், வேதத்தைப் படிக்கவும், ஐக்கியத்தில் வரவும் உற்சாகப்படுத்தினர். சபை அமைப்பும், கட்டுப்பாடுகளும் ஆத்துமாக்களின் பக்தி விருத்திக்கு இடைஞ்சலாக அமைகிறது என்று அவர்கள் கருதினார்கள். இந்தப்போக்கை இன்று அநேக சகோதரத்துவ குழுக்களிடமும், 20-ம் நூற்றாண்டுகளில் தோன்றி பரவியுள்ள அநேக சுயாதீன கிறிஸ்தவ ஸ்தாபனங்களிலும் பார்க்கலாம்.
6. பக்தி இயக்கம் சமயசமரசக் கோட்பாட்டை வலியுறுத்தியது.
சபைகளை பாபிலோனாகக் கருதிய பக்தி இயக்கம் சபை அமைப்பையும் (Church order) நிராகரித்ததால் எல்லாக் கிறிஸ்தவர்களும் எந்தவித வேறுபாடுமில்லாமல் கூடுவதை ஆதரித்தது. இறையியல் போதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் அது முக்கியத்துவம் கொடுக்காமல் அனுபவத்தை மட்டுமே நாடியதால் சத்தியத்தின் அடிப்படையில் இல்லாமல் எவருடனும் கூட்டுச் சேரும் சமய சமரசப் போக்கிற்கு வழிவகுத்தது.
7. நீதிமானக்குதலைவிட மறுபிறப்புக்கே பக்தி இயக்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? மனந்திரும்பியிருக்கிறீர்களா? என்ற வார்த்தைகளை பக்தி இயக்கத்தாரின் எழுத்துக்களில் அதிகம் காணலாம். புதிய மனிதன், உள்ளார்ந்த அனுபவம், அன்பு, விசுவாசம் என்பவற்றைக் குறித்து அதிகம் பேசும் அவர்கள் கர்த்தர் கிறிஸ்துவை அடிப்படையாகக்கொண்டு ஏற்படுத்திய நீதிமானாக்குதலை முற்றாக அலட்சியம் செய்தனர். இறையியலை அலட்சியப்படுத்தி அனுபவத்தை மட்டும் அவர்கள் நாடியதால் வேதம் போதிக்கும் மிக அத்தியாவசியமான இறையியல் போதனைகளைத் தவிர்த்தனர். லூதருக்க (Martin Luther) விசுவாசத்தின் ஊற்று முக்கியமாக இருந்தது. ஆனால், பக்தி இயக்கத்துக்கு விசுவாசத்தின் கனி மட்டுமே முக்கியமானதாக இருந்தது. லூதர், விசுவாசி ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவரிலேயே எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்று போதித்தார். இவர்கள் விசுவாசி தன்னுடைய உள்ளத்தை ஆராய்வதிலேயே காலத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவுரை செய்தார்கள்.
8. பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உலகத்தைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள்.
இந்த உலகத்தை அவர்கள் சாத்தானுக்கு சொந்தமானதாகப் பார்த்ததால் எப்போதும் சமுதாயத்தை விட்டு விலகி வாழ முயன்றார்கள். இதையே 16-ம் நூற்றாண்டுகளில் அனாபாப்திஸ்து இயக்கத்தில் பலரும் பின்பற்றினர். கர்த்தரால் நாம் அனுபவிக்கும்படிக் கொடுக்கப்பட்டிருக்கும் ஈவுகளைக்கூட ஆத்துமாக்கள் சுதந்திரத்தோடு அனுபவிப்பதை பக்தி இயக்கத்தார் தடை செய்தார்கள். இதனால் இவர்கள் மனச்சாட்சியை வேதத்திற்கு புறம்பான போதனைகளால் கட்டுப்படுத்தும் பரிசேயர்களைப் போலப் போதனைகளை உருவாக்கினர். பாவமுள்ள இந்த உலகம் பக்தியைக் குழைத்துவிடும் என்று நம்பி சமுதாயத்தைப் புறக்கணித்து வாழ முயன்றனர். அமெரிக்காவில் பென்சில்வேனியாப் பகுதிகளிலுள்ள ஆமீஷ் மக்கள் இந்த முறையிலேயே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். மெனனைட் சகோதரத்துவ சபைகளும் இந்தப் போக்கைக் கொண்டிருக்கின்றன.
இத்தனைத் தவறுகளைத் தன்னில் கொண்டிருந்த பக்தி இயக்கம் ஒரு சில நன்மைகளையும் கொண்டிருந்தது. அது வெறும் அறிவை மட்டும் நாடி நிற்பதைக் கண்டித்தது. பரிசுத்த வாழ்க்கையையும், இறை பக்தியையும் வலியுறுத்தியது. சபை வெறும் சாட்டுக்காக கூடிவருவதையும், கிளிப்பிள்ளை போல பக்திக்குரிய காரியங்களை அன்றாடம் செய்வதையும் அது கண்டித்தது. அநேக, நல்ல காரியங்களை சமுதாயத்தில் செய்தது. மிஷனரி ஊழியத்தில் அக்களை காட்டியது (சின்சென்டோர்ப் – Zinzendorf பக்தி இயக்கத்தில் இருந்து வளர்ந்து மொரேவியன் மிஷனரியாகப் பணியாற்றியவர்).
பக்தி இயக்கத்தின் இன்றைய வழித்தோன்றல்கள்
பக்தி இயக்கத்தின் இன்றைய வழித்தோன்றல்கள் யார்? மெத்தடிஸ்ட் சபைகள் தோன்றக் காரணமாக இருந்த ஜோன் வெஸ்லி (John Wesley) பக்தி இயக்கத்தின் தாக்கத்துக்குள்ளாகி தன்னுடைய போதனைகளை வளர்த்துக் கொண்டவர்களில் ஒருவர். வெஸ்லியின் போதனையான “பூரணமான பரிசுத்தமாக்குதலுக்கு” (Entire Sanctification) பக்தி இயக்கப் போதனைகள்தான் காரணம். வெஸ்லியை அதிகம் கவர்ந்தவர் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த மொரேவியன் மிஷனரியான வின்சென்டோர்ப் (Zinzendorf). வெஸ்லி உருவாக்கிய மெத்தடிஸ்ட் சபைகள் பக்தி இயக்கத்தின் பரிசுத்தமாக்குதல் பற்றிய போதனைகளைப் பின்பற்றுகின்றன.
அடுத்ததாக, சகோதரத்துவ சபைகள் (Brethren Churches) பக்தி இயக்கத்தின் குழந்தைகள். அவர்களிலும் பல்வேறு பிரிவுகளைப்பார்க்கலாம். இந்தியாவில் உள்ள பக்த்சிங் சகோரத்துவ சபைகள் (Bakth Singh) பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பக்தி இயக்கத்தின் சபை சம்பந்தமான போதனைகளை சகோதரத்துவ சபையைச் சேர்ந்தவர்களில் காணலாம்.
1830-குப் பிறகு அமெரிக்காவில் ஒபர்லீன் கல்லூரியில் (Oberlin College) ஆரம்பித்து ஒபர்லீன் பூரணப் பரிசுத்தமாக்குதல் (Oberlin Perfectionism) என்ற பெயரில் அழைக்கப்பட்ட போதனைகளுக்கும் பக்தி இயக்கமே காரணமாக இருந்திருக்கிறது. ஒபர்லீன் போதனைகளுக்கு காரணகர்த்தாக்களாக இருந்துள்ள ஆசா மேகன் (Asa Mahan), சார்ள்ஸ் பினி (Charles Finney) போன்றோர் ஸ்பெனரின் எழுத்துக்களின் தாக்கத்துக்குள்ளாவனவர்கள். அத்தோடு அமெரிக்காவில் தோன்றி Higher life Movement, Victorious life Movement மற்றும் German Higher Life Movement எல்லாவற்றிற்கும் ஸ்பெனர் ஆரம்பித்து வைத்த பக்தி இயக்கப் போதனைகள் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும், வெஸ்லியின் பூரணப் பரிசுத்தமாக்குதலையும், ஆவியின் ஞானஸ்நானம் பற்றிய போதனைகளையும் (Baptism of the Holy Spirit), பெலேஜியனிசப் போதனைகளையும் கொண்டிருந்தன. இவற்றில் இருந்து முளைத்தவையே பில்பிரைட்டின் (Bill Bright) இன்றைய Campus Crusade இயக்கமும், Deeper Life Campகளும். இங்கிலாந்தில் தோன்றி இன்றும் நடந்து வரும் கெஸ்சிக் கன்வென்ஷனும் (Kewick Convention) பக்தி இயக்கப் போதனைகளையே அளித்துவருகின்றன, ஸ்பர்ஜனும் (Spurgeon), பிசப் ரைலும் (J. C. Ryle) அக்காலத்தில் கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளை எதிர்த்தனர். பக்தி இயக்கத்தின் போதனைகளைப் பின்பற்றி வேதவிளக்கமளித்த மேலும் சிலரை நாம் குறிப்பிட வேண்டியது அவசியம். தென் ஆபிரிக்க போதகராக இருந்த அன்ட்ரூ மரே (Andrew Murray), அமெரிக்காவில் ஏ. பி. சிம்சன் (A. B. Simson), எப். பி, மேயர் (F. B. Meyer), சீனாவின் வாட்ச்மன் சீ (Watchman Nee) போன்றோர் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள்.
20-ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகி இன்று உலகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்கள் பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களே. பக்தி இயக்கத்தின் பரிசுத்தமாக்குதலுக்கான போதனைகளை இன்று எங்கோ கொண்டு போய்விட்டன அதன் தத்துக்குட்டிகளான இந்த நவீன பக்தி இயக்கங்கள்.
வேதம் போதிக்கும் மெய்யான பரிசுத்தமாக்குதல்
ஸ்பெனர் போன்றோர் ஆரம்பத்தில் 17-ம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் போதனைகளால் கவரப்பட்டிருந்தாலும் தாங்கள் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு அந்தப் போதனைகளைத் தவறாக விளங்கிக் கொண்டார்கள். அதன் விளைவே பக்தி இயக்கம். ஆகவே, நாம் பக்தி இயக்கத்துக்கு எதிர்மாறான (Opposite position), வேத அடிப்படையில் அமைந்த மெய்யான பக்தி விருத்திக்கு வழிகாட்டும் சீர்திருத்தவாத, பியூரிட்டன் போதனைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
பியூரிட்டன் இயக்கத்தைக் குறித்து முதலில் சுருக்கமாகப் பார்த்த பின்பு அவர்களுடைய வேத அடிப்படையிலான பரிசுத்தமாக்குதல் பற்றிய போதனைகளை ஆராய்வோம். 17-ம் நூற்றாண்டை பியூரிட்டன்களின் காலமாக வரலாறு வர்ணிக்கிறது. இதை கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு அற்புதமான காலமாகக் காணலாம். பியூரிட்டன்கள் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இக்காலத்தில் இருந்தார்கள். இங்கிலாந்தில், இங்கிலாந்து சபை மறுபடியும் ரோமன் கத்தோலிக்க சமயத்தின் பாதையில் போக ஆரம்பித்தபோது அச்சபைகளில் இருந்த இந்த சீர்திருத்தவாதிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அப்படி எதிர்த்ததால் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர். ஜோன் பனியன் (John Bunyan) 18 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்தார். ஹீப்பர் (Hooper) இந்தவிதமாக சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பியூரிட்டன்களே அமெரிக்காவை உருவாக்கியவர்கள். கொட்டன் மேத்தர் (Cotton Mather) போன்றோர் அமெரிக்காவில் போயிறங்கிய ஆரம்ப பியூரிட்டன்கள்.
இங்கிலாந்திலிருந்த பியூரிட்டன்கள் தாம் போராடிப் பெற்றுக்கொண்டுள்ள மதசுதந்திரத்தை இழந்தபோகக்கூடாது என்பதற்காகவும், மறுபடியும் ரோமன் கத்தோலிக்கப் போதனைகளுக்க கிறிஸ்தவர்கள் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒன்றுகூடி விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் எழுதி வைத்தார்கள். இதில் பாப்திஸ்துகள் விசுவாசிப்பதே 1689 விசுவாச அறிக்கையும் பாப்திஸ்து வினாவிடைப் போதனைகளும். 1689 விசுவாச அறிக்கை சீர்திருத்தவாதிகளான பியூரிட்டன்கள் பக்தி இயக்கத்தின் போதனைகளுக்கு எதிராகப் போதித்த வேதபூர்வமான போதனைகளைத் தெளிவாக விளக்குகிறது. அவற்றை இனி ஆராய்வோம்.
1689 விசுவாச அறிக்கையில் பெரும்பாலான அதிகாரங்கள் பியூரிட்டன் போதனைகளை உள்ளடக்கியிருக்கின்றன. 13-ம் அதிகாரத்தில் இருந்து 26ம் அதிகாரம் வரை உள்ள பகுதிகள் பியூரிட்டன் போதனைகளைக் கொண்டிருக்கின்றன. இவையனைத்துமே பக்தி இயக்கத்தின் போதனைகளையும், பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களான இன்று இயங்கி வரும் மெனோனைட் சபைகள், சகோதரத்துவ சபைகள், பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்கள் அனைத்தின் போதனைகளையும் நிராகரித்து வேதம் பரிசுத்தமாக்குதலைப்பற்றி தரும் போதனைகளை விளக்குகின்றன. இவற்றை இனிப் படிப்படியாக ஆராய்வோம்.
1. வேதமும் விசுவாச அறிக்கையும்
பக்தி இயக்கத்தினர் வேதத்திற்குப் புறத்திலிருந்து கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொள்ள முடியும் என்று போதித்து, அறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை நாடினர். அதற்கு சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் தந்த பதிலை 1689-ல் முதல் அதிகாரத்தில் பார்க்கலாம். இவ்வதிகாரம் வேதத்திற்கு வெளியில் இருந்து இன்று நாம் வெளிப்படுத்தலை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெளிவாக வலியுறுத்திப் போதிக்கின்றது. வெளிப்படுத்தல் முடிவுபெற்று எழுத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைமீறி வேறு எங்கிருந்தும் வெளிப்படுத்தலை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. பக்தி இயக்கமும், அதன் வழித்தோன்றல்களும் வேதத்தை மட்டும் முழுமையான வெளிப்படுத்தலாக ஏற்றுக்கொள்ளாமல் தங்களுடைய அகத்திலிருந்து கர்த்தரின் செய்தியைப் பெற்றுக்கொள்ள அலைகிறார்கள். இதைத்தான் ஸ்பெனரின் எழுத்துக்கள் வற்புறுத்துகின்றன. இதே போக்கை இன்று பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களாக இருக்கின்ற அத்தனை இயக்கங்களிலும் பார்க்கலாம்.
பக்தி இயக்கம் வேதத்தை விளங்கிக்கொள்ளும் முறை சீர்திருத்தவாத பியூரிட்டன் போதனைகளில் இருந்து வேறுபட்டிருப்பது மட்டுமல்லாமல் வேதத்திற்கு எதிரான ஒரு முறையுமாகும். அவர்கள் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் வேதவிளக்கமுறைகளைப் பயன்படுத்திப் படித்து விளங்கிக்கொள்ளுவதைத் தவிர்க்கிறார்கள். வேதத்தைப் படிக்கும்போது விசுவாசிக்கு எது கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறதோ அதுவே விசுவாசிக்கு தேவன் கொடுத்த செய்தியாக அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே, கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ளும் இறுதி அதிகாரம் விசுவாசியின் கையிலேயே தங்கியிருக்கிறது என்பது அவர்களுடைய போதனை. இதற்கு மாறாக சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் வேதத்தை நாம் வேத விதிகளைக்கொண்டு கவனமாகப் படித்துப்புரிந்து கொள்ள வேண்டும் என்று போதித்தார்கள். கர்த்தருடைய சித்தத்தை வேதமே உள்ளடக்கி இருக்கிறதென்றும் அதை ஆவியின் துணையோடு, ஆழமாகவும், கவனமாகவும் படிப்பதன் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் என்பதும் அவர்களுடைய போதனை. தனக்கு இதுதான் தேவனுடைய சித்தமாகப்படுகிறது என்று விசுவாசி எதையும் சொந்தமாகத் தீர்மானித்துவிட முடியாது. அவன் ஒரு போதனையை வேதத்தின் ஏனைய பகுதிகளனைத்தோடும் ஒப்பிட்டுப்படித்து தவறில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறான். சீர்திருத்தவாதமே வேதத்தை எப்படி முறையாகப் படிப்பது என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றது.
இதனால்தான் டிவோஷனல் (devotional) முறையில் வேதத்தைப் படிப்பதையும், அந்தமுறையில் பிரசங்கம் செய்வதையும் பிரசங்கிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நம்முடைய இருதயத்துக்கு சாமாதானம் தரும் மேலெழுந்தவாரியான சில உண்மைகளை மட்டும் தெரிந்து கொள்ள முடியுமே தவிர வேதத்தின் சகல சத்தியங்களையும், தேவனின் முழுமையான சித்தத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இந்த முறையில் வேதத்தைப் படிப்பதால் உடனடியாக, தற்காலிகமான ஒரு ஆறுதல் மட்டுமே கிடைக்கும். என்றும் நிலைத்திருந்து, பரிசுத்த வாழ்க்கைக்கு உதவக்கூடிய போதனைகள் கிடைக்காது. ஆகவே, வேதத்தை எப்போதும், அதன் வார்த்தைகள், இலக்கணம், வரலாற்றுப் பின்னணி, கலாச்சாரம் என்பவற்றையெல்லாம் கவனித்துப்படித்து முறையாக விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தக் கலையை நமக்குக் கற்றுத்தந்தவர்களே சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியோரும்தான். அவர்களுடைய உழைப்பால் நமக்குக் கிடைத்திருப்பதுதான் விசுவாச அறிக்கை.
2. பரிசுத்தமாக்குதலும் விசுவாச அறிக்கையும்
பரிசுத்தமாக்குதலைப் பற்றிய ஒரு தவறான முடிவுக்கு பக்தி இயக்கம் வந்தது. அது தோன்றிய காலத்தில் ஜேர்மனியில் இருந்த சபைகளில் அது கண்ட குறைபாடுகளைத் தீர்க்க தானே ஒரு மார்க்கத்தை அது வகுத்துக் கொண்டது. சபைகளில் அன்று பக்திவிருத்தி குறைவாக இருந்ததற்கு அதிக படிப்பும், விசுவாச அறிக்கைகளும் தான் காரணமென்ற தவறான முடிவுக்கு வந்து வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ள வேண்டிய முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஸ்பெனரும் அவரைச் சார்ந்தவர்களும். அவர்கள் டிவோஷனல் (devotional) முறையில் மட்டுமே வேதத்தைப் படித்தார்கள்.
அத்தோடு விசுவாசிகள் பரிசுத்தமாவதற்கு அதிகமாக ஜெபிக்க வேண்டும் என்றும், கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், புதிய மனிதர்களாக வாழ வேண்டும் என்றும் பேசியும், எழுதியும் வந்தார்களே தவிர, விசுவாசி வேதபோதனைகளுக்குக் கட்டுப்பட்டு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதை அவர்கள் ஒருபோதும் வற்புறுத்தவில்லை. பரிசுத்தமாக வாழ்வதற்கு பரிசுத்தமான எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதிலேயே அவர்கள் அக்கறை காட்டினார்கள். அத்தோடு அறிவுக்கு அப்பாற்பட்ட தெய்வீக அனுபவங்களை நாடி, அந்த அனுபவங்களை அடைவதன் மூலம் பரிசுத்த வாழ்க்கை வாழலாம் என்ற தவறான எண்ணத்தையும் கொண்டிருந்தார்கள். இதிலிருந்துதான், நமக்குள்ளே இருக்கும் கிறிஸ்து நம் பாவத்தைப் போக்குவதால் கிறிஸ்துவுக்கு நம்மை அர்ப்பணித்தால் நம் பாவமெல்லாம் போய்விடும் என்ற போதனை உருவானது (Let go and let God). அன்ட்ரூ மரேயின் (Andrew Murray) போதனைகளும், கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளும் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள்.
பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களான பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களிடம் இன்று பரிசுத்தத்தையோ, கர்த்தரின் நீதிச்சட்டத்திற்கு கீழ்ப்படியும் தன்மையையோ காணமுடியாதிருக்கின்றது. மெய்யான பரிசுத்தமாக்குதலை பக்தி இயக்கம் பலவீனப்படுத்திவிட்டதால் அதைப்பின்பற்றியவர்கள் பரிசுத்தமாக்குதலைப் பற்றிய வேதபூர்வமான போதனைகளைப் பின்பற்றத் தவறினார்கள். அவர்கள் மத்தியில் இன்று ஊழல்களே மலிந்திருக்கின்றன.
இதற்கு மாறாக 1689 விசுவாச அறிக்கை பரிசுத்த வாழ்க்கை கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டும் ஏற்படுகின்றதெனப் போதிக்கின்றது. (1689:13-ம் அதிகாரம்) கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் தன்னுடைய உணர்ச்சிகளுக்கு விருந்து வைப்பதால் மட்டும் விசுவாசி பரிசுத்தத்தில் வளர முடியாது என்பதை அது வலியுறுத்துகிறது. எந்தளவுக்கு கர்த்தரின் கட்டளைகளை விசுவாசி கடைப்பிடிக்கிறானோ அந்தளவுக்கு அவன் பரிசுத்தமாக வாழ முடியும் என்பது வேதமும், விசுவாச அறிக்கையும் தரும் போதனை.
ஆகவேதான் விசுவாச அறிக்கை கர்த்தரின் நீதிச்சட்டத்தை (1689:19-ம் அதிகாரம்) வலியுறுத்துகிறது. பரிசுத்தவான்களின் விடாமுயற்சியை வற்புறுத்துகிறது. அத்தோடு மாம்சத்திற்கெதிராக நாம் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்றும், அதில் வெற்றி காணும் அனுபவமே பரிசுத்தமாகுதல் என்கிற வேத போதனையையும் நினைவூட்டுகின்றது. அந்தப் போராட்டத்தை நாம் வெற்றிகரமாக நடத்துகின்றபோதே நாம் ஆவியினால் வழி நடத்தப்படுகிறோம், ஆவியின் பலன்களை நம்மில் பார்க்கிறோம். அதேவேளை நாம் பாவத்தில் விழுகிறபோது, அந்தப் பாவத்திற்கு உடனடியாக முடிவுகட்டி, கர்த்தரின் மன்னிப்பை நாடி, சமாதானத்தையும் அடைய வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இந்தப் பரிசுத்தத்திற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபடும்போது நிச்சயமாக நமது உணர்வலைகள் பாதிக்கப்படத்தான் செய்கின்றன. ஆனால், இச்செயல்கள் வெறும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவையல்ல.
3. சமுதாயமும், விசுவாச அறிக்கையும்
பக்தி இயக்கங்கள் உலகத்தைப்பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தன. அனாபாப்திஸ்துகளும், மெனோனைட்ஸீம், சகோதரத்துவ சபைகளுஙட போரை விரும்பவில்லை, அவர்கள் உலகத்தை விட்டும், சமுதாயத்தைவிட்டும் ஒதுங்கி வாழ முயன்றார்கள். கர்த்தர் நாம் அனுபவிக்கும்படிக் கொடுத்திருக்கும் சிருஷ்டிகளையும் அனுபவிக்க மறுத்தார்கள். இவற்றை அனுபவிப்பதால் பரிசுத்தமாக்குதல் குறைந்துவிடும் என்று அவர்கள் கருதினார்கள். இதனால் அவர்கள் பரிசேயர்களைப்போல நடந்து கொண்டார்கள்.
சீர்திருத்தவாதம் கர்த்தர் படைத்த உலகம் பாவத்தால் கரைபடிந்து காணப்பட்டாலும் அதைக் கர்த்தர் இன்னும் ஆளுகிறார் என்று விளக்குகிறது. இந்த உலகத்தில் அரசாங்கங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று போதிக்கின்றது. (ரோமர் 13). கிறிஸ்தவர்கள் அரச படைகளில் பணியாற்றலாம் என்றும், நாட்டின் நன்மைக்காகப் போரில் ஈடுபடலாம் என்றும் போதிக்கின்றது. திருமணத்தை எல்லோரும் நாடலாம் என்றும் குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்றும் போதிக்கின்றது. சந்நியாசியைப்போல் இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் உலக இச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் நீதியாக நாம் அனுபவிக்க வேண்டியவற்றை கர்த்தர் அளித்துள்ள ஈவாகக்கருதி கர்த்தரின் மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போதிக்கின்றது. இவற்றைத் திருமணம், நீதியுள்ள ஆணையிடுதலும், வாக்குறுதியளித்தலும், குடிமக்களின் அரசு ஆகிய அதிகாரங்களில் 1689 விசுவாச அறிக்கையில் வாசிக்கலாம்.
4. திருச்சபையும், விசுவாச அறிக்கையும்
பக்தி இயக்கம் சபையை அலட்சியம் செய்தது. சபையே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று முடிவு செய்து ஆத்துமாக்கள் சிறுகுழுக்களாகக் கூடிவந்து ஆத்மீகக் காரியங்களில் ஈடுபடுவதை வலியுறுத்தியது. இதனால் கட்டுப்பாட்டோடு, சபை அமைப்போடு விசுவாச அறிக்கைகளைக் கொண்டு சபைகள் இருப்பதையும் அது விரும்பவில்லை. இதனால்தான் சகோதரத்துவ சபைகளில் சபை அமைப்பைப் பார்க்க முடியாது. பக்தி இயக்கம் விசுவாசிகளின் ஆசாரித்துவத்தை (Priesthood of Believers) வலியுறுத்தினாலும் அதை தவறாக விளங்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஆசாரியன் ஆகவே, அவன் தான் நினைத்தவிதத்தில் செயல்படலாம், தனது வரங்களை எங்கும், எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம், சபைகளில் அவனுக்குக் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்ற விதத்தில் அவர்களுடைய போதனைகள் அமைந்திருந்தன. பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களின் வளர்ச்சியாலும், தாக்கத்தாலும் இன்று எல்லா நாடுகளிலும் சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் தனி ஊழியம் செய்கிறவர்களின் தொகை அதிகரித்து இருப்பதைப் பார்க்கலாம். சபைகளுக்கும், சபைத்தலைவர்களுக்கும் கட்டுப்படவிருப்பமில்லாமல் ஊழியம் செய்யப்போகிறவர்கள் அநேகர். சகோதரத்துவ சபைகளிலும், பெந்தகொஸ்தே இயக்கங்களிலும், பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களான பரா-சர்ச் இயக்கங்களிலும் இந்தப்போக்கை நாம் பார்க்கலாம். ஆராதனையில் இன்று ஒழுங்கில்லாமல் இருப்பதற்கும், சபைகளில் சபை அமைப்பும், ஒழுங்கு நடவடிக்கையும் இல்லாமலிருப்பதற்கும் பக்தி இயக்கத்தின் போதனைகள் காரணமாக இருந்திருக்கின்றன. 1689 விசுவாச அறிக்கையின் 26-ம் அதிகாரம் திருச்சபை பற்றிய வேதம் போதிக்கும் கோட்பாடுகளை முறையாக விளக்கி திருச்சபை எத்தகைய அமைப்பைக் கொண்டிருக்க வேண்டுமென்று காட்டுகின்றது.
5. கிறிஸ்துவின் வருகை பற்றிய போதனை
பக்தி இயக்கம் கிறிஸ்துவின் வருகை பற்றிய போதனையில் அதிக நாட்டம் காட்டியது. கிறிஸ்துவின் உடனடி வருகை பற்றி இந்த இயக்கத்தைச் சேர்ந்தோர் தவறான விளக்கங்களை அளித்தார்கள். கிறிஸ்துவின் வருகைக்கு நாள் குறிப்பது இவர்களுடைய வழக்கமாக இருந்தது. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அந்த முறையில் விளக்கங்கொடுக்கவில்லை. கிறிஸ்துவின் வருகை உடனடி வருகையாக இருந்தபோதும், நாம் இன்றும் எதிர்பார்த்திருக்க வேண்டியதாக இருந்தபோதும், அடுத்த நிமிடமே அவர் வருவார் என்ற முறையில் அவர்கள் போதிக்கவில்லை. உலகத்தில் கர்த்தரின் திட்டப்படி அனைத்தும் நடக்கும் என்றும், அந்த நடவடிக்கைகளை மீறி அவர் வந்துவிடமாட்டார் என்பதையும் அவர்கள் நம்பினார்கள். இந்த உலகத்தில் சுவிசேஷம் பரவி சபைகள் அமைக்கப்பட்டு வளரவேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சகோதரத்துவ சபைகள் சபை அமைப்பிலும், சபை வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டாது சுவிசேஷ ஊழியத்தில் மட்டும் ஈடுபாடு காட்டுவதற்கு பக்தி இயக்கப் போதனைகள்தான் காரணம். கிறிஸ்து அடுத்த நிமிடமே வந்துவிடுவார் எந்த நம்பிக்கையில் திருச்சபை அமைப்பில் கவனம் செலுத்தாமல், சுவிசேஷத்தை மட்டும் இருக்கின்ற நேரத்தைப் பயன்படுத்தி சொல்லிவிட்டுப் போவோம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது. இந்த வகையிலான சிந்தனைப்போக்கை பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்கள் மத்தியில் இன்று பார்க்கலாம்.
பக்தி இயக்கத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள்
பக்தி இயக்கம் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய தவறான விளக்கங்களைத் தந்தபோதும் அதன் மூலம் நாம் படிக்க வேண்டிய சில பாடங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் இரண்டை நினைவுறுத்த விரும்புகிறேன்.
1. உணர்ச்சியற்ற, ஆத்மவிருத்திக்குதவாத, வெறும் இறையியல் அறிவுமட்டும் கொண்ட புத்திஜீவிகளாக நாம் இருக்கக்கூடாது.
பரிசேயர்கள் இப்படித்தான் இருந்தார்கள். அவர்களில் கிறிஸ்து இருக்கவில்லை. கிறிஸ்துவை நாம் மெய்யாகவே விசுவாசித்தால் வேதபோதனைகளை தாழ்மையுடன் நமது பரிசுத்த வாழ்க்கையின் வளர்ச்சிக்காக எப்போதும் படித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் புத்திஜீவிகளாக இருப்பதற்காக வேதத்தைப் படிக்கக்கூடாது. படிக்கும் சத்தியங்கள் கிறிஸ்துவை நாம் அதிகமாக நேசிக்கவும், அவரில் வளரும்படியும் செய்வதாக இருக்க வேண்டும். ஜேர்மனியில் ஸ்பெனரின் காலத்தில் இருந்த லூதரன் சபைகளில் இதற்கு இடமில்லாதிருந்ததால்தான் இறைபோதனைகள் நமக்கு உயிரளிக்காது என்ற தவறான எண்ணத்திற்கு ஸ்பெனர் வர வாய்ப்பேற்பட்டது. இன்றும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைகளை நாடி அலைகிறவர்கள் சீர்திருத்த சபைகளில் உயிர்மீட்சிக்கு இடமில்லை என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். ஆகவே, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதிலும், கிறிஸ்துவில் நமக்கிருக்கும் அன்பை, ஜெபிப்பதிலும், ஆராதனையிலும், சுவிசேஷம் சொல்லும்போதும், சக சகோதரர்கள் மீதும் நாம் காட்டத் தவறிவிடக்கூடாது. எந்தளவுக்கு இறை போதனைகளை சுத்தமாக அறிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ஆத்மவிருத்தியும், அன்பும் இருக்க வேண்டும்.
2. வேத சத்தியங்களை நாம் முறையாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
நீதிமானாக்குதலுக்கும், மறுபிறப்புக்கும், பரிசுத்தமாக்குதலுக்கும் இடையில் இருந்த தொடர்பை பக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் முரண்பாடான போதனைகளை உருவாக்க நேர்ந்தது. வேத சத்தியங்களை நாம் சரியாக விளங்கிக் கொள்ளாவிட்டால் நமது விசுவாசம் பாதிப்புக்குள்ளாகும். இதைத் தவிர்த்து சபைகளும், விசுவாசிகளும் சத்தியத்தில் ஆழ்ந்த அறிவு பெறவும், நிலைத்திருக்கவும் விசுவாச அறிக்கைகள் எழுதி வைக்கப்பட்டன. வரலாற்றால் நிரூபிக்கப்பட்ட அந்த அறிக்கைகள் நாம் சரியான வேதசத்தியங்களைப் பின்பற்ற வழி செய்யும். பக்தி இயக்கத்தின் வழித்தோன்றல்களான பெந்தகொஸ்தே இயக்கங்கள் முறைப்படுத்தப்பட்ட வேத போதனைகளைப் புறக்கணிப்பதால்தான் சத்தியத்தை மீறிய போதனைகளை இன்று பின்பற்றி வருகின்றன.