சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னபடியால் பெனிஹின்னின் ஒரு டி.வி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் தென் ஆபிரிக்க மனிதன் ஒருவன் இறந்து உயிர்த்தெழுந்தது மட்டுமல்லாமல் பரலேகம் போய் கர்த்தரிடம் முக்கியமான ஒரு செய்தியையும் பெற்று மீண்டும் திரும்பி இந்த உலகத்திற்கு வந்துள்ளதாக ஒரு நிகழ்ந்நி காண்பிக்கப்பட்டது. இந்த தென் ஆபிரிக்க மனிதனே தன்னுடைய அனுபவங்களை இதில் விளக்கியிருந்தான். தான் இறந்தபின் பரலோகம் கொண்டு போகப்பட்டதாகவும், அங்கே அதிசயமான காட்சிகளைக் கண்டதாகவும், பூக்கள் மரங்கள், கட்டடங்கள் எல்லாம் தங்கத்தில் இருந்ததாகவும் கண் சிமிட்டாமல் இந்த மனிதன் விளக்கினான். அதற்குப்பின் தன்னோடிருந்த தேவதூதன் தன்னை நரகத்திற்கு அழைத்துப் போனதாகவும், நகைத்தில் இருந்த கொடுந்துன்பங்களைத் தான் கண்டதாகவும் விளக்கினான். நரகத்தில் ஒரு போதகன் அலறிய காட்சியையும் வர்ணித்தான். அந்தப் போதகன், ஐயா, நான் ஊழியம் செய்யும்போது பணத்தை திருடியது உண்மைதான் ஆனால், அதை திரும்பவும் வைத்து விடத்தான் நினைத்தேன் அதற்கு இந்தக்கஷ்டமா? என்று அலறியதைத்தான் கேட்டதாகவும் சொன்னான். இந்த ஆபிரிக்க மனிதன் சொன்னதில் விசேஷம் என்னவென்றால், கர்த்தர் தன்னைப் பார்த்து, “அப்பா, நீ மறுபடியும் பூவுலகுக்கு போக வேண்டும். அங்கே போய், இயேசு லாசருவின் உவமையில் நரகத்தில் இருந்து ‘ஜெபித்த’ ஐசுவரியவானின் ஜெபத்திற்கு இப்போது பதில் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் நான் உன்னை மீண்டும் பூவுலகுக்கே அனுப்பியிருக்கிறேன். நீ மிகுதியான உன்னுடைய பூவுலக வாழ் நாளில் என்னைப் பற்றி எல்லோருக்கும் சொல்லி அவர்கள் மனந்திருந்துமாறு கேட்டுக்கொள்” என்று தன்னைப் பார்த்து சொல்லி அனுப்பியதாகவும் சொன்னான்.
இந்த மனிதனுடைய அனுபவத்தையும், அவன் சொன்னதையும் கேட்டு பெனிஹின் மட்டுமல்ல பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டத்தாரெல்லாம் உணர்ச்சிகள் கரைபுரண்டோட, இயேசு சீக்கிரமே வரப்போகிறார் அதனால்தான் இப்படி நடந்திருக்கிறதென்றும், இனி அநேகர் நரகத்திற்குப் போகாதிருக்க மரித்தவர்கள் அடிக்கடி உயிர்த்தெழுந்து நற்செய்தி சொல்வது தொடர்ந்து நடக்கப்போகிறதென்றும் பேசித்திரிகிறார்கள். இந்தப் புதுச்செய்தி இப்போது பரவிக்கொண்டிருப்பதால் வாசகர்கள் இதைக்குறித்து வேதபூர்வமாக சிந்தித்து பயனடைவதற்காக இதைப்பற்றி எழுதத் தீர்மானித்தேன்.
இந்த மனிதன் சொன்ன காரியங்களை முதலில் பார்ப்போம்.
(1) தான் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்தேன்.
(2) உடனடியாக பரலோகம் போனேன். அங்கே அதிசயக் காட்சிகளைப் பார்த்தேன்.
(3) அதன்பின் தேவதூதனோடு நரகத்திற்குப் போய் நரக துன்பங்களைக் கண்டேன்.
(4) கர்த்தர் ஐசுவரியவானையும், லாசருவையும் பற்றிய உவமையில் அலறிய ஐசுவரியவானின் கூக்குரலை ஜெபம் என்று சொல்லி, அந்த ஜெபத்திற்கு இத்தனை காலத்திற்குப் பிறகு இன்று பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் என்னிடம் சொன்னார்.
(5) கர்த்தர், உவமையில் உள்ள அந்த ஐசுவரியவானின் ஜெபம் நிறைவேறும்படியாக மீண்டும் உலகத்திற்குப் போய் எல்லோருக்கும் நடந்ததை சொல்லி அவர்கள் மனந்திரும்ப உதவும்படி என்னை அனுப்பினார். அதனால்தான் இப்போது உயிர்த்தெழுந்திருக்கிறேன்.
அடுத்ததாக இந்த மனிதனின் அனுபவத்தின் அடிப்படையில் பெனிஹின்னும், கெரிஸ்மெட்டிக் கூட்டமும் புதிதாக உருவாக்கியுள்ள போதனையைப் பார்ப்போம்:
(1) இந்த அனுபவம் கர்த்தரின் வருகை வெகு சீக்கிரம் நடக்கபோகிறது என்பதற்கு கர்த்தர் அனுப்பியிருக்கும் ஒரு அடையாளம்.
(2) நரகத்தில் இருந்த ஐசுவரியவானின் ஜெபம் நிறைவேறியிருப்பதால் இனி அடிக்கடி மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள்.
(3) இந்த அனுபவத்தைச் சொல்லி, மனந்திருந்தி நரகத்தில் இருந்து தப்பிக்கொள்ளும்படி எல்லோரையும் எச்சரிக்கை செய்யவேண்டியது சபையின் கடமை.
நமது திருமறைத்தீப வாசகர்கள் வேதத்தின் அதிகாரத்திலும், போதுமான தன்மையிலும் மட்டுமே அக்கறை கொண்டவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மெய்க்கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு போல் இருக்கும்வேதம் இந்த மனிதனின் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று இனி ஆராய்வோம்.
முதலாவது மனிதனி மரணத்தைப்பற்றி சிந்திப்போம். ஒரு மனிதன் இறந்துவிட்டான் என்று டாக்டர்கள் அறிவித்தபிறகும் உயிரோடு இருந்தவர்கள் பற்றிய அநேக நிகழ்ச்சிகளைப்பற்றி உலகம் கேள்விப்பட்டிருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், டாக்டர்கள் கூட சில சமயங்களில் ஒருவன் இறக்காமலிருக்கும்போதே இறந்துவிட்டான் எந்ற எண்ணிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. இது ஒன்றும் புதுமையானதல்ல. இப்படி எத்தனையோ தடவை நடந்திருக்கிறது. ஆகவே, இறந்ததுபோல் இருந்து எழுந்தவர்களை எல்லாம் பரலோகம் போய் திரும்பிவந்தவர்களாக நாம் நினைத்துவிடக்கூடாது.
உண்மையிலேயே இறந்து மீண்டும் எழுந்த சிலரைப்பற்றி பழைய, புதிய ஏற்பாடுகளில் வாசிக்கிறோம். அது கர்த்தருடைய வெளிப்படுத்தல் (வேதம்) முழுமையாகக் கொடுக்கப்படுவதற்கு முன்பு அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதற்காகவும் கிறிஸ்து கர்த்தரால் அனுப்பப்பட்ட ஆண்டவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் நிகழ்ந்த அற்புதங்கள். இயேசு இவ்வுலகில் இருந்தபோது சிலரை உயிர்த்தெழச் செய்திருக்கிறார். அப்போஸ்தலர்களும் அதைச் செய்துள்ளனர். உதாரணத்திற்கு புதிய ஏற்பாட்டில் லாசருவையும், பவுல் பிரசங்கித்தபோது உறங்கியதால் மேல்வீட்டிலிருந்து விழுந்து இறந்த மனிதனை பவுல் உயிர்ப்பித்ததையும் குறிப்பிடலாம். ஆனால் இவை வழமையாக நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல. இயேசுவுக்குப்பின் அப்போஸ்தலர்களால் மட்டுமே இந்த அற்புதங்களைப் புதிய ஏற்பாட்டக் காலத்தில் செய்ய முடிந்தது. இவர்களில் ஒருவர்கூட உயிர்த்தெழுந்தபின் பரலோக அனுபவங்களைப்பற்றி பேசவில்லை. இறந்து உயிர்த்தெழாமலே பரலோக அனுபவத்தை விண்ணகக் காட்சி மூலம் பெற்ற பவுல்கூட அதைப்பற்றி தனக்குப் பேசக்கட்டளை இல்லை என்று புதிய ஏற்பாட்டில் சொல்கிறார்.
இயேசு இறந்தபின் ஹேடிஸில் (Hades) இருந்தார் என்று வேதம் சொல்கிறது (அப்போஸ். 2:27). ஹேடீசுக்கு வேதத்தில் பல விளக்கங்கள் உள்ளன. தமிழ் வேதத்தில் ஹேடிசை எல்லாப் பகுதிகளிலும் பாதாளம் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அப்போஸ்தலர் 2:27ல் ஹேடீஸை (பாதாளம்) நரகம் என்று மொழி பெயர்க்கக்கூடாது. இது இயேசு இறந்தபின் ஆவியும், சரீரமும் பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தார் (State of death) என்று மட்டுமே விளக்குகிறது. பேதுரு அப்போஸ்தலர் 2:25-31 வரையுள்ள வசனங்களில் சங்கீதம் 16:8-11ப் பயன்படுத்தி கிறிஸ்துவை மரணத்திற்குப்பின் ஆவியும், சரீரமும் பிரித்த நிலை கட்டுப்படுத்தவில்லை என்ற இதே உண்மையை விளக்குகிறார். இறந்தபின் இயேசுவின் ஆவி கர்த்தரை அடைந்தது (லூக்கா 23:46). அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது. இந்த நிலையில் (Disembodied existence) இயேசு மூன்று நாட்கள் இருந்திருக்கிறார். அதன்பின் பிதா அவரை உயிர்த்தெழச்செய்தார். இயேசு இறந்தபின் நரகத்தை அடைந்தார் என்ற ரோமன் கத்தோலிக்க போதனையில் எந்த உண்மையும் இல்லை. (இயேசு நரகத்திற்குப் போனாரா? என்ற கட்டுரையைப் பார்க்கவும்).
மரணமடைந்த ஒருவன் விசுவாசியாக இருந்தால் பரலோகத்துக்கும், அவிசுவாசியாக இருந்தால் நரகத்துக்கும் போகிறான் என்று வேதம் சொல்கிறது. லூக்கா 16:19-31 வரையிலான வசனங்களில் இயேசு போதிக்கும் சத்தியத்தை நாம் கவனமாகப்படிக்க வேண்டியது அவசியம். இப்பகுதியில் இயேசு ஐசுவரியமுள்ள ஒரு மனிதனையும், லாசரு என்ற தரித்திரினையும் பற்றிய ஒரு உவமையை விளக்குகிறார். இந்த உவமையைப் பயன்படத்தி இயேசு பல சத்தியங்களை விளக்குகிறார். உவமைகளின் எல்லாப் பகுதிகளுக்கம் நாம் ஒருபோதும் பொருள்காண முயற்சி செய்யக்கூடாது. அது போதிக்கும் அடிப்படை உண்மைகளை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உவமையின் மூலம் (ஒருதடவை அதை வாசியுங்கள்) இயேசு இறந்தபின் மனிதனுக்கு ஏற்படும் நிலை பற்றிய சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். இவை ஒருபோதும் மாறாது. அப்படி இயேசு விளக்கும் உண்மைகள் என்ன?
1. இறந்தபின் விசுவாசி உடனடிகே பரலோகம் போகிறான். பரலோகம் போனபின் அவன் திரும்பவும் இந்த உலகத்துக்கு வர முடியாது. பரலோகத்தைத் தாண்டி நரகத்துக்கும் போக முடியாது (22, 27, 29-31).
2. இறந்தபின் அவிசுவாசி நரகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறான் (22). அங்கே தன் பாவத்துக்கு ஏற்ற தண்டனையை அனுபவிக்கிறான். (இந்த உவமையில் பாதாளத்திற்கு Hades என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு அது இந்த இடத்தில் பொருத்தமாக நரகத்தைக் குறிக்கிறது. நரகம் பற்றிய இந்தப்பகுதியின் வர்ணனை அதை மேலும் தெளிவாக்குகின்றது). அக்கினி ஜீவாலையில் வேதனையை நித்தியத்துக்கும் அனுபவிக்கிறான் (24, 25). அவன் நரகத்தைத் தாண்டி பரலோகத்திற்குப் போக முடியாது. இந்த உலகத்துக்கும் மறுபடியும் வர முடியாது. நரகத்தில் அவன் இருக்கும் நிலை நித்தியத்துக்குமாக நியமிக்கப்பட்டிருக்கிறது. அதை ஒருவராலும் மாற்றமுடியாது (26-31).
3. இந்த உவமையில் ஐசுவரியவான் ஆபிரகாமை நோக்கிப் பேசியதற்கு எழுத்துபூர்வமாக சொல்லுக்கு சொல் பொருள் கொடுப்பது தவறு. ஏனெனில் இது ஓர் உண்மையை விளக்க இயேசு பயன்படுத்தும் உவமை. ஐசுவரியவானின் பேச்சு ஜெபம் அல்ல. நரகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நரக வாழ்க்கையில் ஆத்மீக விருத்தி அடைவதில்லை. அவர்கள் ஆவிக்குரிய ஜெபம் செய்வதில்லை. அவர்கள் மனம் திரும்பவும், ஆத்மீகவிருத்தி அடையவும் வழி இல்லை. நரகத்தில் இருப்பவனுக்கு நல்ல எண்ணங்கள் ஏற்படாது. இந்த உவமையின் மூலம் இயேசு பாவி நரகத்தில் தன் பாவத்துக்கு தகுந்த தண்டனையை அனுபவிப்பதை விளக்குவதை மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உவமையின் ஏனைய பகுதிகளுக்க (ஐசுவரியவானின் பேச்சு) நாம் ஆத்மீக விளக்கம் கொடுக்க முயற்சி செய்யக்கூடாது. அது தவறான விளக்கங்களைக் கொடுப்பதில் முடிந்துவிடும்.
4. இயேசு இந்த உவமையின் கடைசிப் பகுதியில், இறந்தவர்கள் உயிர்த்தெழுவதால் மனிதர்கள் மத்தியில் ஆத்மீக உணர்வு ஏற்படாது என்பதை உறுதியாக விளக்குகிறார். மனிதன் தான் பாவி என்று உணர்ந்து கர்த்தரிடம் ஓடிவருவதற்கு உயிர்த்தெழுதல் போன்ற அற்புதங்கள் உதவாது என்பதை இயேசு தெளிவாகக் கூறுகிறார். அற்புதங்கள் அந்த நோக்கத்தில் எப்போதுமே பயன்படுத்தப்பட்டதாக வேதமும் எங்கும் போதிக்கவில்லை (27-31).
5. பாவிகள் தங்களுடைய பாவத்தையும், இரட்சிப்புக்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்ள கர்த்தர் வேதத்தை மட்டுமே (மோசேயும், தீர்க்கதரிசிகளும்) கொடுத்திருக்கிறார் என்று இயேசு தெளிவாக விளக்குகிறார் (29). வேத போதனைகளைக் கேட்டு அவற்றை விசுவாசிக்காத ஒருவன் வேறு எந்த அற்புதத்தைப் பார்த்தாலும் மனந்திரும்ப மாட்டான் என்று இயேசு உறுதியாகச் சொல்கிறார் (31). அத்தோடு, வேதத்தை நம்புவதைத்தவிர மனிதனுக்கு வேறு வழியில்லை என்பதையும் இயேசு ஆணித்தரமாக விளக்குகிறார் (31). நற்செய்திக்கு செவிகொடாவிட்டால் ஆத்மீக விடுதலைக்கு இடமே இல்லை என்கிறார். நற்செய்தியைக்கேட்டு, பரிசுத்த ஆவியின் கிரியையால் மட்டுமே எந்த மனிதனும் இரட்சிப்பை அடைகிறான். பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்க கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் இந்த தெய்வீக மீட்பின் வழிகளில் ஒருபோதும் எந்த மாற்றமும் ஏற்படாது; கர்த்தரும் அதை மாற்றவோ, அதற்கு எதிராக நடக்கவோ மாட்டார் என்பதை இந்தப்பகுதி விளக்குகிறது.
கர்த்தர் முன்பு இந்த உவமை மூலம் தான் கொடுத்த போதனையை மாற்றி இனி பரலோகம் போன அநேகரை மீண்டும் உயிர்த்தெழச்செய்து பாவிகளை மனம் திரும்பும்படி எச்சரிக்கப் போகிறார் என்று இந்த ஆபிரிக்க மனிதனும், பெனிஹின்னும் சொல்கிறார்கள். அற்புதங்களைவிட அழியாத வேதத்தை நம்பும்படிச்சொன்ன இயேசு தன் வார்த்தையை ஏன் மாற்றிக் கொள்ளப் போகிறார்? இயேசுவின் வார்த்தைகள் மாறாது. வேதம் ஒருபோதும் பொய் சொல்லாது. மனிதனே எப்போதும் பொய் பேசுவான். இயேசு தான் ஏற்கனவே கொடத்த போதனையை இப்போது மாற்றிக் கொண்டுள்ளார் என்று இவர்கள் சொல்வது பெரும்பொள். வேதம் தன்னை மட்டுமே நம்பும்படி சொல்கிறது. மத்தேயு 6ம், வெளிப்படுத்தின விசேஷத்திலும் இயேசு தன்னுடைய வார்த்தையோடு எதையும் சேர்க்கவோ அல்லது அதிலிருந்து எதையும் குறைக்கவோ கூடாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். அவரே வார்த்தை மாறி நடப்பாரா? இவர்கள் இயேசு தன் வார்த்தையை மீறி நடப்பதாக அல்லவா சொல்கிறார்கள். இது கடைசிக் காலம். சாத்தானின் விளையாட்டுக்கள் தீவிரமடைந்திருக்கும் காலம் என்பதை நாம் உணர வேண்டும். போலிப்போதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் நம்பக்கூடாது.