வேதத்தின் அதிகாரத்தையும், அதன் போதுமான தன்மையும் குறித்து நமது பத்திரிகையில் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். அதற்குக் காரணம் வேதம் பற்றிய பெருந்தவறான எண்ணங்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதால்தான். கிறிஸ்தவத்தின் பெயரில் மனித சிந்தனைகளும், பாரம்பரியமும் கிறிஸ்தவ சமுதாயத்தை ஆண்டு வருகின்றனவே தவிர கர்த்தரின் வேதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. லிபரலிசமும் (Liberalism), புதிய சுவிசேஷக் கோட்பாடும் (New Evangelicalism) திருச்சபைகளையும், இறையியல் கல்லூரிகளையும் இன்று ஆட்டிப்படைத்து வருகின்றன. இன்று வேதத்தின் அதிகாரம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றவகையில் பெரும்பாலானோர் வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் அவல நிலையை தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் இன்று பார்க்கிறோம். இதுவும் சரிதான், அதுவும் சரிதான், என்று சிந்திக்கும்போக்கை வளர்த்துக்கொண்டுள்ள, வேதத்தின் அதிகாரம் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனையே இல்லாத கூட்டம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் தமிழினத்தில் பெருகி வருகின்றது. கர்த்தரின் வேதத்தின் அதிகாரத்தைத் தொடர்ந்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிசாசு தமிழர்கள் மத்தியில் வேதத்தின் அதிகாரத்தைக் குறித்து பரப்பி வரும் ஒரு கருத்தை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம். அதாவது, புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை போதனைகளும் கர்த்தரின் அதிகாரமுள்ள வார்த்தைகள் இல்லை என்பதுதான் அந்தக் கருத்து. புதிய ஏற்பாட்டில் உள்ள அப்போஸ்தலர்களின் சொந்தக் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று இந்தக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் விளக்குகிறார்கள். முக்கியமாக பவுலின் போதனைகளில் அநேகமானவை பவுலின் சொந்தக் கருத்துக்கள் என்றும் அவற்றை கர்த்தரின் சித்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவர்கள் நிராகரிக்கிறார்கள். இது சரியா? தவறா? என்று ஆராய வேண்டியது அவசியம். வேதத்தின் அதிகாரத்திற்கு ஊறு விளைவிக்க முயலும் இந்தக் கருத்தை அராய்வதன் மூலம் நாம் வேதத்தின் அதிகாரத்தைப்பற்றி மேலும் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அப்போஸ்தலர்களின் போதனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சொல்லுகிறவர்கள் உதாரணத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு வேதப்பகுதி 1 கொரிந்தியர் 7 ஆகும். இந்தப் பகுதியில் பவுல் அப்போஸ்தலன் சில இடங்களில் “நானல்ல, கர்த்தர் சொல்லுகிறதாவது” என்றும், “கர்த்தரல்ல நான் சொல்லுகிறதாவது” என்றும் எழுதியுள்ளார். இதைவைத்துக்கொண்டு சிலர் இந்தப்பகுதியில் கர்த்தரின் வார்த்தைகளும், பவுலின் சொந்தக்கருத்துகளும் சேர்ந்து காணப்படுகின்றன. ஆகவே, பவுலின் கருத்துக்களை விலக்கி நாம் கர்த்தரின் வார்த்தைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
முதலில் வேதத்தை விளங்கிக்கொள்ள வேண்டிய வழிமுறையில் இவர்கள் விடுகின்ற தவறை நாம் அறிந்து கொள்வது அவசியம். இவர்கள் ஒரு சில வசனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு தவறான தீர்மானத்திற்கு உடனடியாக வந்துவிடுகிறார்கள். இந்த வேதப்பகுதியை இவர்கள் முழுமையாக ஆராயவில்லை, அத்தோடு இந்தப்பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டுப்படிக்கவும் இல்லை. இதனாலேயே இவர்கள் தவறான ஒரு முடிவுக்கு வர நேரிடுகிறது. 1 கொரிந்தியர் 7 தரும் போதனையை முதலில் ஆராய்வோம்.
கொரிந்தியர் பவுலிடம் கேட்ட கேள்வி
இந்த வேதப்பகுதியில் பவுல் கொரிந்து சபையில் காணப்பட்ட ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு தகுந்த ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அந்தச் சிக்கல் என்ன என்பதை முதலாவது வசனம் விளக்குகிறது. ஸ்திரீயைத் தொடாமலிருப்பது மனிதனுக்க நல்லதா? என்பது அந்தக் கேள்வி. “தொடாமலிருப்பது” என்ற கிரேக்க பதத்தை இப்பகுதியில் திருமணம் செய்துகொள்வது என்ற பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். கொரிந்து சபையில் இருந்த சிலர் பவுலிடம் தாங்கள் வாழ்கிற சமுதாய சூழலில் தனிமையில் இருப்பது நல்லதா? அல்லது திருமண வாழ்க்கை நடத்துவது நல்லதா? என்று விளக்கம் கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விக்கே பவுல் இங்கு விளக்கம் தருகிறார். அவர்கள் அப்படிக்கேட்டதற்குக் காரணம் அவர்கள் வாழ்ந் சமுதாயத்தில் ஒழுக்கம் குறைவாக இருந்தது. இதனால் தனிமையில் வாழ்வது சிலருக்கு ஆபத்தாக இருந்தது. அடுத்ததாக அன்று கிறிஸ்தவர்கள் அதிக துன்பத்துக்குள்ளாகி மரணத்தையும் சந்திக்க நேர்ந்தது. பல கிறிஸ்தவ குடும்பங்கள் தலைவனை இழந்து பாதிக்கப்பட்டன. இத்தகைய நிலமையில் என்ன செய்ய வேண்டும் என்பதே கொரிந்தியர்கள் சிலரின் கேள்வி. அந்தக் கேள்விக்கு முழு சபையும் அறிந்து கொள்ளும்படியாக இந்தப் பகுதியில் விளக்கம் கொடுக்கிறார் பவுல்.
பவுலின் விளக்கம்
முதல் வசனத்தில் பவுல் பொதுவான ஒரு பதிலை அளிக்கிறார். ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதில் கேடில்லை என்பது அந்தப் பதில். ஆனால், இந்தப் பதிலை மட்டும் கொடுத்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடாது என்பதால் பவுல் மேலும் சில விளக்கங்களைத் தொடர்ந்து அளிக்கிறார். அடுத்ததாக பவுல், இருந்தாலும், சமுதாயத்தில் காணப்படும் பாலியல் ஒழுக்கக்குறைவின் காரணமாக ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வது நல்லது என்று 3ம் வசனத்தில் கூறுகிறார். முதலில் இந்த இருவசனங்களிலும் பவுல் கூறுவதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். பவுல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதில் கேடில்லை என்று கூறுகிறபோது தன்னுடைய சொந்தக் கருத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில், படைப்பில் திருமணத்தைக் கர்த்தர் ஏற்படுத்தியிருந்தபோதும் நிச்சயமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் வாழக்கூடாது என்று அவர் கட்டளையிடவில்லை. திருமணம் மனிதனின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது. அதில் ஈடுபடுவதும் ஈடுபடாததும் ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலையையும், சுதந்திரத்தையும், ஈவையும் பொறுத்தது. ஆகவே, பவுல் முதலாவது வசனத்தில் சொல்லியிருப்பது படைப்பில் கர்த்தர் ஏற்படுத்திய சமூக உறவுக்கு எதிரானதல்ல. வேதத்தோடு பொருந்திப்போகும் போதனையே. இதன் மூலம் ஆதியாகமத்தில் தரப்பட்டுள்ள திருமணம் பற்றிய போதனைக்கான மேலதிக விளக்கத்தை பவுலிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் அவ்வளவே. அடுத்ததாக பவுல், ஒருவருடைய சூழ்நிலை திருமணம் செய்து கொள்ளுவதை வற்புறுத்துமானால் நன்றாக செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார் (வச. 2). இது படைப்பில் கர்த்தர் ஏற்கனவே திருமணத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
தொடர்ந்து பவுல் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் இருக்க வேண்டிய உறவுமுறையைப்பற்றி விளக்கி அந்த உறவு முறையும், ஆத்மீக வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சில ஆலோசனைகளைத் தருகிறார். ந்த ஆலோசனைகளில் ஒன்று ஜெபத்திற்கும், உபவாசத்திற்கும் வசதியாக கணவன் மனைவி இருவரும் சில காலத்துக்கு உடலுறவு கொள்ளாமலிருப்பது நல்லது என்பதாகும் (வ. 5). 6ம் வசனத்தில் பவுல், “நான் இதைக் கட்டளையாகச் சொல்லாமல் யோசனையாகச் சொல்லுகிறேன்” என்கிறார். இதை வைத்துக் கொண்டு சிலர், பவுல் இங்கே சொல்லியிருப்பது அவருடைய சொந்தக் கருத்து என்றும், அதற்கும் வேதத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறுகிறார்கள். இங்கே பவுல் சொல்லியிருப்பதை இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. பவுல் இதுவரை திருமணத்தைப் பற்றி கர்த்தர் ஆதியாகமத்திலும், மத்தேயு 19:1-12லும் போதித்துள்ள காரியங்களுக்கு எதிரான விளக்கங்களைக் கொடுக்கவில்லை. அவற்றை மறுபடியும் நினைவுபடுத்தி அவற்றின் அடிப்படையில்தான் விளக்கம் கொடுத்திருக்கிறார். திருமண வாழ்க்கையில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பவர்களின் உடலுறவுத் தொடர்பு பற்றி அவர் சொல்லியிருப்பது நல்ல ஆலோசனை. அதை தங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதைப் பவுல் கட்டளையாகக் கொடுக்க முடியாது. கணவனும், மனைவியும் சில காலம் உடலுறவு கொள்ளாமல் இருக்கத்தான் வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டுச் சொல்லியிருந்தால் அது பரிசேயர்கள் போதித்தது போலாகிவிடும். இது பத்துக்கட்டளைகளைப் போன்ற போதனையல்ல. ஆகவேதான், வாசிப்பவர்கள் தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இதை நான் நல்ல யோசனையாக சொன்னேன் என்கிறார் பவுல்.
இதற்குப் பிறகு 10-ம் வசனத்தில் பவுல், திருமணமானவர்களுக்கு ஆலோசனை சொல்லத் தொடங்குகிறபோது, இதை நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறார் என்று கூறுகிறார். இதனால் இதுவரை பவுல் சொன்னது அவருடைய சொந்தக்கருத்துக்கள், இனி சொல்லவருவது கர்த்தருடைய கட்டளை என்று தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது. பவுலின் வார்த்தைகளுக்கும், கர்த்தரின் வார்த்தைகளுக்கும் வேறுபாடிருப்பதாக இந்தப்பகுதி சுட்டிக்காட்டவில்லை. இங்கே பவுல் இப்படி எழுதுவதற்குக் காரணம், திருமணத்தைப் பற்றியும், விவாகரத்தைப் பற்றியும் இயேசு மத்தேயு 19:1-10 வரையுள்ள வவனங்களில் கட்டளையாகத் தந்து ஏற்கனவே விளக்கியிருப்பதை நினைவுபடுத்தத்தான். இது பவுலின் விசேடமான சொல் நடை. மத்தேயு 19 விவாகரத்தைத் தவிர்க்கும்படிப் போதிக்கிறது. அதையே பவுலும் இங்கு விளக்குகிறார். ஆகவே, இயேசுவின் வார்த்தைகள் பவுலின் வார்த்தைகளைவிட அதிகாரமுள்ளவை என்ற முடிவுக்கு வருவது தகாது. பவுல் இங்கே தன்னுடைய வார்த்தைகள் கர்த்தரின் வார்த்தைகளைவிட தாழ்ந்தது என்ற பொருளில் எதையும் எழுதவில்லை. அது வேதம் தெரியாத சிலர் தவறாகக் கொடுக்கும் விளக்கம்.
இனி 12-ம் வசனத்திற்கு வந்தால் அங்கே பவுல் கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு மணவாழ்க்கை வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதைப் பார்க்கலாம். இங்கே பவுல், கர்த்தரல்ல நானே சொல்லுகிறதாவது என்று கூறி ஆலோசனைகளைத் தருகிறார். இதற்குக் காரணம் என்ன? கர்த்தர் இந்த விஷயத்தைப்பற்றி இதுவரை குறிப்பிட்டு விளக்கியிராததாலேயே பவுல் இப்படி எழுத நேர்ந்தது. தன்னுடைய ஆலோசனையை வெறும் யோசனையாக மட்டும் வாசிப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. விவாகரத்து கூடாது என்று பழைய ஏற்பாட்டிலும், மத்தேயுவிலும் இயேசு போதித்திருப்பதை வாசிக்கிறோம். ஆனால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவரல்லாதவர்களோடு மணவாழ்க்கையில் ஈடுபடும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறபோது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு இதுவரை விளக்கமாகப் போதிக்கவில்லை என்பதையே பவுல் தன் வார்த்தைகள் மூலம் விளக்குகிறார். இங்கே என் வார்த்தைகள் என்று கூறி பவுல் கொடுக்கும் போதனைகள் பரிசுத்த ஆவியின் வார்த்தைகள். அவற்றை வேதமல்ல என்று சொல்லுவது அறிவீனம்.
இனி 25-ம் வசனத்தையும் இதே விதத்தில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும். அங்கே பவுல், கன்னிகைகளைக் குறித்து கர்த்தரால் எனக்குக் கட்டளையில்லை . . . . என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன் என்கிறார். இங்கே பவுல் திருமணமாகாதவர்கள் அப்படியே இருப்பது நல்லது என்று விளக்கி அதற்கான காரணங்களைத் தருகிறார். திருமணத்தைப் பற்றியும், விவாகரத்தைப்பற்றியும் குறிப்பிட்டு விளக்கிப் பேசியிருக்கும் கர்த்தர் இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசவில்லை என்பதை சுட்டிக்காட்டவே கர்த்தரால் எனக்குக் கட்டளையில்லை என்ற வார்த்தைகள் மூலம் தெரியப்படுத்துகிறார். இதை வாசிக்கும்போது இவை கர்த்தருடைய வார்த்தைகளல்ல என்ற பொருளில் வாசிக்கக்கூடாது. இங்கு பவுல் தரும் ஆலோசனைகள் பவுல் இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ள ஆலோசனைகள். இவை இதுவரை இயேசு குறிப்பிட்டு விளக்கியிராத சத்தியங்கள். இவையும் பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தல்களே.
பவுலினுடைய நிருபங்களை வாசிக்கும்போது அவருடைய சொல்நடையை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். மேலெழுந்தவாரியாக ஒரு சில வசனங்களை மட்டும் வாசித்துவிட்டு வேதம் போதிப்பதை சரியாக விளங்கிக்கொள்ளாமல் பவுலின் போதனைகளில் குறைகாணக்கூடாது. பவுலின் எழுத்துக்களில் சிலவேளை நகைச்சுவையையும், உயர்வுநவிற்சியையும்கூடப் பார்க்கலாம். அவற்றை நாம் தவறாகப் புரிந்து கொண்டு பவுலின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் அல்ல என்று சொல்வோமானால் நாம்தான் தவறிழைத்தவர்களாகிவிடுவோம். வேதத்தில் காணப்படும் பவுலின் போதனைகள் அனைத்தும் கர்த்தர் நமக்களித்துள்ள போதனைகள். இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கும் கர்த்தரின் சித்தம். பவுலின் போதனைகளைக் குறைத்து மதிப்பிடுபவர்கள் வேதம் புரியாத அறிவீலிகள். புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு கர்த்தரின் சித்தத்தை எழுத்தில் வடித்தார்கள்.
இனி புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அதை எழுதினார்கள் என்பதற்கும், அவர்களுடைய எழுத்துக்கள் அதிகாரம் கொண்ட கர்த்தருடைய கட்டளைகள் என்பதற்கும் வேதம் நம்முன் வைக்கும் ஆதாரங்களைப் பார்ப்போம். புதிய ஏற்பாடு அத்தகைய மூன்று சாட்சியங்களை நம் முன் வைக்கின்றது.
இயேசு கிறிஸ்துவின் போதனை
கல்வாரி மரணத்தைச் சந்திப்பதற்கு முன் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு முக்கிய போதனைகளை அளித்தார். அந்த முக்கிய போதனைகளில் ஒன்றாக அவர் புதிய ஏற்பாட்டின் அதிகாரத்தை தன்னுடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். அதை இரண்டு முக்கிய பகுதிகளில் வாசிக்கலாம். யோவான் 14:25; யோவான் 16:33 ஆகியவையே அந்த வேதப்பகுதிகள். அவற்றை இப்போது பார்ப்போம்.
யோவான் 14:26 – “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” யோவான் 16:13 – “சத்திய ஆவியாகி அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப்பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்”.
இந்த இரண்டு வேதப்பகுதிகளிலும் இயேசு பரிசுத்த ஆவியை அனுப்பப்போகிறேன் என்ற வாக்குத்தத்தத்தை சீடர்களுக்குத் தந்து, அப்படியாக வரப்போகிற ஆவியானவர் மூன்று முக்கிய காரியங்களைச் செய்யப்போகிறார் என்று தெரிவிக்கிறார்.
1. நான் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார் – கிறிஸ்துவுடைய வாழ்வோடும், மரணத்தோடும் தொடர்புடைய அத்தனைக்காரியங்களையும் பரிசுத்த ஆவியானவர் நினைவுபடுத்துவார். அவற்றைத்தான் இன்று நான்கு சுவிசேஷ நூல்களிலும் நம்மால் வாசிக்க முடிகின்றது.
2. உங்களுக்கு அறிவிப்பார் – வரலாற்று நிகழ்ச்சிகளை விளங்கிக்கொள்வதெப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் போதிப்பார். அவற்றைத்தான் இன்று நாம் புதிய ஏற்பாட்டு நிருபங்களில் வாசித்து அறிந்து கொள்ளுகிறோம்.
3. வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் – உலக முடிவோடு தொடர்புடையதாக இனி நடக்கப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். இவற்றையே நாம் வெளிப்படுத்தல் விசேஷத்தில் வாசிக்கிறோம்.
இயேசு தான் மரித்து பரலோகத்திற்குப் போவதற்கு முன்பாக இந்த மூன்று உண்மைகளையும் வாக்குத்தத்தங்களாக தன்னுடைய சீடர்களுக்கு அறிவித்தார். பரிசுத்த ஆவியானவர், அவர்கள் அறிந்து எழுத்தில் வடிக்க வேண்டிய அனைத்தையும் அவர்களுக்கு விளக்கிப்போதித்தார் என்று இயேசு உறுதியாக அவர்களுக்கு விளக்கியிருப்பதை இந்த வசனங்களில் வாசிக்கிறோம். ஆகவே, புதிய ஏற்பாட்டில் பவுலுடைய எழுத்துக்களில் மாம்ச சிந்தனையின் அடிப்படையிலான அவருடைய சொந்தக் கருத்துக்களும், வேத வார்த்தைகறோடு சேர்ந்து இருக்கின்றன என்று கூறுவது இயேசுவின் வார்த்தைகளை விளங்கிக்கொள்ளாமல் பேசுகின்ற பேச்சு. இயேசு தன்னுடைய வார்த்தைகளின் மூலம், பரிசுத்த ஆவியானவர் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களை வழிநடத்தி அவர்கள் எழுத்தில் வடிக்க வேண்டிய அனைத்தையும், எந்தவித மாம்ல சிந்தனையும் அவற்றில் புகுந்துவிடாதபடி மேற்பார்வை செய்து எழுத வைப்பார் என்று விளக்குகிறார். ஆகவே, பவுலின் போதனைகளில் மாம்ச சிந்தனைக்கு இடமேயில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள அனைத்துப் போதனைகளும், விளக்கங்களும் ஒன்றுவிடாமல் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கின்றன.
பேதுருவின் போதனை
2 பேதுரு 3:15-16 – “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். எல்லா நிருபங்களிலும் இவற்றைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும், உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.”
அப்போஸ்தலனாகிய பேதுரு இந்த வாக்கியங்கள் மூலமாக கர்த்தரின் பொறுமைக்குணத்தையும், தன்மைகளையும் குறித்து விளக்குகிறார். அப்படி விளக்கும்போது அவற்றைப்பற்றி பவுலும் தன்னுடைய நூல்களில் விளக்கியிருப்பதாகக் கூறுவதைக் கவனியுங்கள். பேதுரு இங்கே, பவுல் அவற்றைத் தான் பெற்றுக்கொண்ட ஞானத்தினாலே எழுதியதாகக் கூறுவதைப் பாருங்கள். அதாவது பவுலின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்று பேதுரு விளக்குகிறார். கல்லாதவர்களும், உறுதியற்றவர்களும் அவற்றைப்புரிந்து கொள்ளமுடியாமல் குறைகூறலாம். ஆனால், பவுலின் வார்த்தைகள், கர்த்தருடைய வார்த்தைகள் என்பதை பேதுருவின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. பேதுரு பவுலின் எழுத்துக்களை தன்னுடைய நூல்களுக்கும், ஏனைய புதிய ஏற்பாட்டு நிருபங்களுக்கம், பழைய ஏற்பாட்டு நூல்களுக்கும் சமமான இடத்தில் வைத்துப்பேசுவதைப் பார்க்கிறோம். ஆகவே, பவுலின் வார்த்தைகளில் மாம்ச சிந்தனை அடங்கியிருக்கிறது, அவை நம்முடைய கலாச்சாரத்துக்கும், காலத்துக்கும் பொருந்தாது என்று பேசுவது வேதத்தின் அதிகாரம் புரியாமல் பேசுகின்ற பேச்சு.
பவுலின் போதனை
அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய நிருபங்களில், தான் பரிசுத்த ஆவியின் மூலமாகவே தன்னுடைய போதனைகளைப் பெற்றுக்கொண்டதாகவும், தனக்கு அப்போஸ்தல அதிகாரம் உண்டு என்பதையும் பல தடவைகள் கூறியிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பவுல் இயேசு கிறிஸ்துவால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அப்போஸ்தலன். அப்போஸ்தலர்கள் அனைவரும் கர்த்தரிடமிருந்து நேரடியாக வெளிப்படுத்தலைப் பெற்றுக்கொண்டவர்கள். கர்த்தருடைய சித்தத்தை ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்தி, சபைக்காரியங்களை கிரமமாகவும், சீராகவும் செய்துவைக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. அவ்வாறாக அப்போஸ்தலர்களுக்கு அன்று கொடுக்கப்பட்டிருந்த அதிகாரம் இன்று ஒருவருக்கும் இல்லை. அதனால்தான் அப்போஸ்தலராக இன்று ஒருவரும் இருக்க முடியாது. கீழ்வரும் வசனங்கள் பவுல் தன்னுடைய நிருபங்கள் மூலமாக வெளிப்படுத்தியவற்றை பரிசுத்த ஆவியிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டார் என்பதற்கான சில உதாரணங்களாகும்.
கலாத்தியர் 1:11, 12 – “மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.” இந்த வசனம் பவுல் சுவிசேஷத்தைக் கர்த்தரிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டாரென்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறது. பாரம்பரியமோ அல்லது மனித ஞானமோ அதைப் பவுலுக்கு வெளிப்படுத்தவில்லை.
பவுல் தெசலோனிக்கேயரைப் பார்த்து பின்வருமாறு கூறுகிறார்: “நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவ வசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.” இதிலிருந்து, சொந்த ஞானத்தினாலன்றி கர்த்தருடைய அதிகாரத்துடன் தான் பேசியிருந்ததை பவுல் உணர்ந்திருந்ததை அவருடைய வார்த்தைகள் விளக்குவதாக இருக்கின்றன. தான் பேசியது தேவனுடைய வசனமென்பதை பவுல் வலியுறுத்திக் கூறுகிறார்.
1 கொரிந்தியர் 14:37ல் பவுலின் இன்னுமொரு சாட்சியத்தைப் பார்க்கிறோம். அங்கே பவுல் கொரிந்தியர்களைப் பார்த்து, “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகள் என்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்” என்று அறிவிப்பதை வாசிக்கிறோம். இது தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை வலியுறுத்த பவுல் எழுதிய வசனங்களாகும். தன்னுடைய வார்த்தைகள் மனிதசிந்தனையில் இருந்து புறப்பட்டவையல்ல, அது தேவனிடத்திலிருந்து வந்தவை என்றும், அவற்றைத் தேவனுடைய கற்பனைகளாகக் கருதி கொரிந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு அப்போஸ்தலனால் மட்டுமே சொல்ல முடியும். இந்த வசனங்கள் காணப்படும் பகுதியில்தான் பவுல் பெண்கள் சபையில் பேசுவது வெட்கக்கேடான காரியம் என்ற போதனையைத் தந்திருப்பதைப் பார்க்கிறோம். இதேபோல் 1 கொரிந்தியர் 11:23ம், “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்” என்று கூறுகிறார்.
சிந்தித்துப்பாருங்கள்! இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் ஒரு நூலையும் தானே எழுதவில்லை. மத்தேயு, மாற்க்கு, லூக்கா, யோவான் ஆகியோரும், அப்போஸ்தலர்களும் அவர்களுடைய உதவியாளர்களுமே எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இயேசுவின் போதனைகளை எப்படிப்பெற்று எழுதி வைத்தார்கள்? இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நேரடியாகத் தாம் கேட்டு அறிந்துகொண்டவற்றையும், மற்றவர்கள் தங்களுக்கு வெளிப்படுத்தியவற்றையும், பரிசுத்த ஆவியானவர் நேரடியிகத் தங்களுக்கு வெளிப்படுத்திய இயேசுவின் வார்த்தைகளையும் எழுதி வைத்தார்கள். கெத்சமனே தோட்டத்தில் இயேசு பேசியவற்றை அவர்கள் பரிசுத்த ஆவியானவர் நேரடியாக வெளிப்படுத்தியதன் மூலமாகவே அறிந்துகொண்டிருக்க முடியும். ஏனெனில் அன்று இயேசுவுக்குப் பக்கத்தில் ஒருவரும் இருக்கவில்லை. ஆகவே, பவுலின் வார்த்தைகளில் அவருடைய மாம்ச சிந்தனைகளும் அடங்கியிருக்கின்றன என்று பேசுவது ‘லிபரல்’ (Liberal) பேச்சாகும். மெய்க்கிறிஸ்தவன் புதிய ஏற்பாட்டைக் கர்த்தரின் வார்த்தையாக மட்டுமே பார்ப்பான்.