பாவ உணர்வு சொட்டும் கண்ணீர்த்துளிகள்

கடந்த இதழில் கீழ்வரும் அட்டவனையில் உள்ள உண்மைகளை டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ் விளக்கியதைப் பார்த்தோம். இந்த இதழில் அவரது ஆக்கத்தின் இறுதிப்பகுதியைப் பார்ப்போம்.

(1) ஆண்டவரைத் தேடுகிறவனுக்கு பாவத்தைப்பற்றிய செயற்கையான எண்ணமே இருக்கிறது.

(அ) அவனுக்கு மனந்திரும்புதலைப் பற்றிய பொதுவான அறிவு மட்டுமே இருக்கிறது.

(ஆ) தேடுகிறவன் வெளிப்புறமான பாவத்தை மட்டுமே பார்க்கிறான்.

(இ) அவன் ஓரிரு பாவங்களையும், தவறுகளையுமே அறிக்கையிடுகிறான்.

(ஈ) தான் செய்துள்ள நற்கிரியைகளைப் பற்றி பெருமையுடையவனாக இருக்கிறான்.

(உ) பாவத்தை அவன் வெறும் நோயாக எண்ணிக் கொண்டிருக்கலாம்.

(ஊ) பாவத்தை மறைக்க அவன் சாக்குப்போக்கு சொல்லலாம்.

(எ) கிறிஸ்துவை நிராகரிப்பதை மட்டுமே பாவமாக எண்ணிக்கொண்டிருக்கலாம்.

(ஏ) யாருக்கும் தெரியாமலிருக்கும் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டியதில்லை என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறான்.

பொதுவான பிரச்சினை 2

ஆண்டவரைத் தேடுகிறவன் தன் நிலைக்காக வெட்கப்படுகிறதில்லை

(அ) மன்னிப்பைவிட ஏதாவதொரு நன்மையை மட்டுமே நாடுகிறவனாக இருக்கிறான்.

கர்த்தரைத் தேடுகிறவனுடைய மனந்திரும்புதல் மெய்யானதாக இருக்க வேண்டுமானால் அவன் கர்த்தர் தரும் நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் மட்டுட் நா‍டிப்போகக்கூடாது. நாம் பிரசங்கத்தில் இரட்சிப்பின் பலாபலன்களைப் பற்றி விவரிக்கத்தான் செய்கிறோம். ஆனால், பிரசங்கத்தில் மனந்திரும்புதலை வலியுறுத்தாமல் நாம் இரட்சிப்பின் பலன்களை மட்டும் ஆத்துமாக்களுக்கு பட்டியலிட்டுக் கொடுத்தால், மனந்திரும்புதலின் வெறும் ஆரம்பப்படிநிலை இருந்தால்கூடப் போதும், அதைக் கர்த்தர் ஏற்றக்கொள்கிறார் என்ற தவறான எண்ணத்தை நாம் ஏற்படுத்திவிடுவோம்.

(2) ஆண்டவரைத் தேடுகிறவன் தன் நிலைக்காக வெட்கப்படுவதில்லை

(அ) மன்னிப்பைவிட ஏதாவதொரு நன்மையை மட்டுமே நாடுகிறவனாக இருக்கிறான்.

(ஆ) நித்திய தண்டனையைக்குறித்து அவன் பயந்தாலும் அதற்காக வெட்கப்படுவதில்லை

(இ) வெட்கத்தைவிட வெறும் மன உறுத்தலை மட்டுமே கொண்டிருக்கிறான்

இப்படி சில நன்மைகளுக்காக மட்டும் மனந்திரும்பிய ஒருவனுக்கு உதாரணமாக இஸ்ரவேலின் இராஜாவாகிய சவுலை எடுத்துக்காட்டலாம். சவுல் கர்த்தருக்கு எதிராக நடந்தான் என்று சாமுவேல் அவனை நோக்கி குற்றம் சாட்டியபோது சவுல், “நீர் என் பாவத்தை மன்னித்து நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு என்னோடு திரும்பிவாரும்” என்றான். அவன் தொடர்ந்து “நான் பாவஞ் செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு என்னோடு கூட திரும்பிவரும்” என்றான் (1 சாமுவேல் 15:25-30).

இந்த வார்த்தைகள், சவுல் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுவதையும், தன்னுடைய இராஜ்யத்தை இழந்துபோவதையும் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. அவனுடைய மனந்திரும்புதல் மெய்யானதல்ல.

தேடுகிறவன் இரட்சிப்பின் பலன்களை மட்டுமே நாடுகிறானா? விசுவாசிகளான தன்னுடைய நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் நட்போடு இருப்பதற்காக மனந்திரும்புகிறானா? விசுவாசியான ஒரு பெண்ணோடு நல்லுறவேற்படுத்திக் கொள்வதற்காக மனந்திரும்பப்பார்க்கிறானா? அல்லது தன்னுடைய வியாதியிலோ, விரக்தியிலோ இருந்து விடுபடவோ அல்லது வேறு எந்தக்காரணத்துக்காகவும் இதைச் செய்யப்பார்க்கிறானா? மனந்திரும்ப அவன் முயற்சி செய்வதற்கான உண்மையான காரணம் என்னஈ கர்த்தரைத் தேடுகிறவன் இரட்சிப்பின் பலன்களை நாடுவது நியாயமானதாக இருந்தாலும், அவனுக்குப் பாவத்தைப் பற்றிய உணர்வு பிரதானமாக இருக்க வேண்டும். இரட்சிப்பின் பலன்களுக்காகவும், வாழ்க்கை வசதிகளுக்காகவும், சுகத்துக்காகவும், சந்தோஷத்துக்காகவும், பரலோக அனுபவத்துக்காகவும் மட்டும் ஒருவன் மனம் மாறப்பார்க்கக்கூடாது.

(ஆ) தேடுகிறவன் நித்திய தண்டனையைக் குறித்துப் பயந்தாலும் அதற்காக வெட்கப்படுவதில்லை

மார்டின் லூதர் தன் பிள்ளைப்பருவம் முழுவதும் நித்திய தண்டனையைக் குறித்துப் பயந்தது போல மதநம்பிக்கையுள்ள குடும்பத்தில் வளர்ந்த ஒருவனுக்கு அத்தகைய பயம் இருப்பது இயற்கை. லூதர் சிறுவனாக இருந்தபோது பயங்கரமான இடிச்சத்தத்தைக் கேட்டுப் பயந்து கர்த்தர் தன்னைக் காப்பாற்றினால், தான் மதகுருவாக மாறிவிடுவதாக வாக்குறுதி கொடுத்தார். கர்த்தரைத் தேடுகிற ஒரு மனிதன் நித்திய தண்டனையைக்குறித்து பயப்பட்டபோதும் தன்னுடைய பாவத்துக்காக வெட்கப்படாதவனாக இருக்கலாம். அது மனந்திரும்புதல் கர்த்தரை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

பொதுவான பிரச்சினை 3

(3) மனந்திரும்புதல் கர்த்தரை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை

(அ) தேடுகிறவன் கர்த்தரிடம் வருத்தப்பட்டு வரவில்லை

(ஆ) தேடுகிறவன் கிறிஸ்துவின் துன்பங்களினால் அதிகம் பாதிப்படையவில்லை

(அ) தேடுகிறவன் கர்த்தரிடம் வருத்தப்பட்டு வரவில்லை

கர்த்தரை நோக்கிய துக்கத்தை மெய்யான மனந்திரும்புதல் கொண்டிருப்பதால், ஒரு மனிதனின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட வெறும் உணர்ச்சிமயான துக்கத்தை மெய்யான மனந்திரும்புதலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட முடியும். தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ் செய்தேன் என்ற தாவீதின் ஜெபம் இந்த வேறுபாட்டைக் காட்டுகிறது. கர்த்தர் தங்களைப் படைத்துக் கொடுத்திருக்கிற ஜீவனையும், தகுதிகளையும், தாலந்துகளையும் சுயநலத்திற்காகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை மெய்யாக மனந்திரும்புகிறவர்கள் உணர்வார்கள். கர்த்தருக்கு எதிராகப்போய் எல்லாப் பாவங்களையும் செய்திருக்கிறாம் என்பதை அவர்கள் உணர்வார்கள். கர்த்தர் தங்களுக்கு எதிரான நீதியான குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருக்கிறார் என்றும், தங்களுடைய பாவத்தால் கர்த்தர் அவமதிக்கப்பட்டிருப்பதால், அவர் தங்களை நித்தியத்துக்கும் தண்டிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்வார்கள். வெறும் ஆத்மீகப் பாதுகாப்பை அடைய ஆசைப்படுவது மெய்யான மனந்திரும்புதலுக்கு அடையாளமாகாது. கர்த்தருக்கு எதிராகப் பாவஞ்செய்து, அவரைக் காணப்படுத்திவிட்டோம் என்பதை உணர்ந்து துக்கப்படுவதே மெய்யான மனந்திரும்புதல்.

(ஆ) தேடுகிறவன் கிறிஸ்துவின் துன்பங்களினால் அதிகம் பாதிப்படையவில்லை

நம்முடைய இரட்சகரின் துன்பங்களுக்கு நாமும் காரணஸ்தர்களாக இருந்துவிட்டோமே என்ற துக்கத்தைக் கொண்டிருப்பதுதான் மெய்யான மனற்திரும்புதல். ஆகவே, ஆண்டவர் நமது பாவங்களுக்காகக் செலுத்திய கிரயத்திற்கு நாமும் ஓரளவிற்கு பொறுப்பாளிகளாக இருக்கிறோம் என்ற உணர்வு மெய்யாக மனந்திரும்புகிறவர்களில் இருக்க வேண்டும். மனந்திரும்புகிற பாவி, என்னுடைய பாவம் கல்வாரியின் சிலுவையில் இருந்தது என்பான்.

நான் செய்த பாவங்களுக்காகவா அவர் மரத்தில் பெருமூச்சுவிட்டார்? ஆச்சரியமான கருணை! இதுவரைக்காணாத கிருபை! அளவிடமுடியாத அன்பு!

கர்த்தரைத் தேடுகிறவனுடைய மனந்திரும்புதல் சுயநலநோக்கத்தைக் கொண்டிருந்து, இரட்சிப்பிற்காக கிறிஸ்து செலுத்திய கிரயத்தில் அவன் அக்கறை காட்டாமல் இருந்துவிடலாம். இலவசமாகவும், வெகு இலகுவாகவும் நமக்குக் கிடைத்திருக்கும் இரட்சிப்பை நமது ஆண்டவர் விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இறக்கும்போது அவர்பட்ட துன்பங்களை மனிதர்களுடைய வார்த்தைகளினால் வர்ணித்துவிட முடியாது. நித்திய தண்டனையை இரட்சகர் சிலுவையில் அனுபவிக்கக் காரணமாக இருந்துவிட்டேன் என்பதை உணர்ந்து மெய்யாக மனந்திரும்புகிறவன் எப்போதும் வருந்துகிறவனாக இருப்பான். கல்வாரியைப்பார்த்து ஒருவனுடைய உணர்ச்சிகள் அலைமோதுவதிலிருந்து பிறப்பதுதான் மெய்யான மனந்திரும்புதல்.

மந்திரியாகிய எத்தியோப்பியனைப் பார்த்து பிலிப்பு பின்வருமாறு விளக்கினான்: “அவர் ஓர் ஆட்டைப் போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத்திறவாதிருந்தார்.” இந்த வார்த்தைகளைக் கேட்டே எத்தியோப்பியன் மனந்திரும்பினான்.

தேடுகிறவன், தன்னுடைய பாவம் இரட்சகரை எப்படிப்பாதித்தது என்பதைக் குறித்து சிந்தித்து, அதற்காக அவன் அவருக்கு, எப்போதும் கடமைப் பாடுடையவனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும் என்று நாம் தேடுகிறவனுக்கு தெளிவாக விளக்க வேண்டியது அவசியம்.

பொதுவான பிரச்சினை 4

(4) அடங்காக்குணம் இன்னும் அவனில் ஆள்கின்றது

(அ) தேடுகிறவன் சில பாவங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறான்

(ஆ) புதிய வாழ்க்கையில் பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கிறது

(இ) கிறிஸ்துவின் பூரண ஆளுகையை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை

அடங்காக்குணம் இன்னும் அவனில் ஆள்கின்றது

(அ) தேடுகிறவன் சில பாவங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறான்.

கர்த்தரைத் தேடுகிறவன் தொடர்ந்தும் சில பாவங்களையும், சுயநல நோக்கங்களையும் விட்டுவிட மனமில்லாமல் இருப்பதால் கர்த்தரின் கிருபை கிடைக்காமல் விரக்தி அடையலாம். கர்த்தரைத் தேடுகிறவர்கள் தங்களுடைய மனற்திரும்புதலில் இருக்க வேண்டிய முக்கியமான சில அம்சங்களை விட்டுவிடுவதால் அவர்களால் மெய்யாக மனந்திரும்புதலை அடைய முடியாமல் போய்விடுகிறது. பாவத்திலிருந்துவிடுபட வேண்டும் என்றும், பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மெய்யாகவே ஒருவனுக்கு ஆர்வமிருக்கலாம். ஆனால், அவன் தன்னுடைய பழைய வாழ்க்கையின் சில அம்சங்களை விட்டுவிட மனமில்லாமல் இருப்பதால் அவனுடைய முயற்சிகளுக்குத் தடை ஏற்படுகின்றது. தேடுகிறவன், ஓரிரு பாவங்களைத் தனது அங்கிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தொடர்ந்தும் தேவனுடைய இராஜ்யத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம்.

இருமனதுள்ள ஒருவனுடைய இருதயத்தைப் போல வேறெதுவும் மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைப் பாதிப்பதில்லை. அத்தகைய மனிதன் தான் கர்த்தரிடம் எதையும் பெறலாமென்று நினையாதிருப்பானாக, என்கிறார் யாக்கோபு. அவர் தொடர்ந்து “இருமனமுள்ளவன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மை பாராட்டக்கடவன்” என்கிறார் (யாக்கோபு 1:7, 8). கர்த்தருக்கு முன் உண்மையோடும், திறந்த உள்ளத்தோடும் வருவது அவசியம். தேடுகிறவன் தன்னுடைய உள்ளத்தை தீவிரமாய் ஆராய்ந்து தன்னுடைய அனைத்து சுயநல நோக்கங்களையும், பாவங்களையும் அடியோடு வெறுத்தொதுக்கி, கர்த்தரின் கண்களுக்கு முன், சகலமும் நிர்வாணமாயும், வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் (எபிரேயர் 4:13).

(ஆ) புதிய வாழ்க்கையில் பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கிறது

தேடுகிறவனுக்கு புதிய வாழ்க்கையில் உண்மையாகவே அக்கறை இருக்கிறதா, அல்லது அவன் இரகசியமாக தன்னுடைய இருதயத்தில் அத்தகைய மாற்றத்தைக்குறித்த மாறுபாடான எண்ணத்தைக்கொண்டிருக்கிறானா? என்று கேட்பது அவசியம். அவன் உண்மையிலேயே ஆத்மீக வாழ்க்கையையும், புதிய இருதயத்தையும் நாடுகிறானா? ஒருவன் மெய்யாக மனந்திரும்புகிறபோது, தான், குருடன், பாவி, குழப்பமான இருதயம் தனக்கிருக்கிறது, கர்த்தருக்கு தன்னைப்பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதையெல்லாம் உணர்ந்தவனாய் கர்த்தர் தன்னைத் தொடுகின்ற அனுபவத்தை நாடி நிற்பான். அப்படி அவர் அவனைத் தொடுகின்றபோதே அவனுடைய வாழ்க்கையில் பழையன எல்லாம் மறைந்து அனைத்தும் புதிதாகின்றன.

(இ) கிறிஸ்துவின் பூரண ஆளுகையை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை

இதுவரை நான் சொன்னவைகளோடு தொடர்புள்ள இன்னுமொரு உண்மை என்னவென்றால், தேடுகிறவன் தன்னைக் கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்படுத்திக்கொள்ள முழுமனமில்லாமல் இருக்கலாம். ‍மெய்யான மனந்திரும்புதல் ஒருவனில் கர்த்தருக்கெதிரான எல்லா எதிர்ப்புணர்ச்சிகளையும் மாய்த்து அவருக்கு கீழ்ப்படிகிறவனாக அவனை மாற்றுகிறது. ஏதேன் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புறமான நிகழ்ச்சியாக அது இருக்கும். ஆகவே, ஆண்டவருடைய அதிகாரத்துக்கு, தேடுகிறவன் கட்டுப்பட மறுப்பானானால் அவனில் மெய்யான மனந்திரும்புதல் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

பாவத்தின் பிரதான அம்சம் கர்த்தருடைய அதிகாரத்தை மீறுவதாகும். ஆகவே, மனந்திரும்புதலின் பிரதான அம்சமாக அத்தகைய அதிகாரமீறுதலுக்கு முடிவுகட்டப்பட்டிருக்கும். நமது இரட்சகர் சொன்னார், “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று. “அத்தோடு ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அனுதினதுத் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்றும் கூறினார் (யோவான் 14:15; லூக்கா 9:23).

கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி தேடுகிறவனை வற்புறுத்துவதைவிட்டுவிட்டு, இந்த முறையில் மனற்திரும்புதலைக்குறித்து ஆராய்வது சரியா? என்று சிலர் கேட்கலாம். ஆனால், மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் இரட்சிக்கும் விசுவாசத்திற்கு ஒருவனுடைய வாழ்க்கையில் நிச்சயம் இடமிருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய பாவங்கள் அ‍டியோடு கழுவப்பட வேண்டும் என்று உண்மையோடு ஏங்காதவன் கல்வாரியைத் தழுவிக்கொள்ள முயல்வதில் எந்தப்பயனுமில்லை.

(இந்த ஆக்கத்தின் ஆங்கில மூலத்தை எழுதிய டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ், இங்கிலாந்தில் Metropolitan Tabernacle எனும் சபையின் போதகராக இருந்து வருகிறார். இது அந்த சபை வெளியிடும் Sword and Trowel என்ற பத்திரிகையில் வெளிவந்தது. ஆசிரியரின் அனுமதியுடன் இதைத் தமிழில் தந்திருக்கிறோம். (இதன் முதல் பாகத்தைக் கடந்த இதழில் பார்க்கவும்).

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s