பாவ உணர்வு சொட்டும் கண்ணீர்த்துளிகள்

சில கிறிஸ்தவர்கள தாம் முதல் முதலாக சுவிசேஷத்தைக் கேட்ட உடனேயே தங்களுடைய பாவத்தை உணர்ந்து, கிறிஸ்துவின் அன்பின் மேன்மையை உணர்ந்து, மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்ததாகக் கூறுவார்கள். தங்களுடைய வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டு உடனடியாகவே இரட்சிப்பைக் குறித்த நிச்சயத்துவத்தை அடைந்ததாகக் கூறுவார்கள். அத்தகைய மனந்திரும்புதல் நிச்சயம் மறுபிறப்பின் அடையாளமாக இருந்தபோதும், விசேஷமான சுவிசேஷ எழுப்புதல் காலங்களில் மட்டும்தான் இத்தகைய மனந்திரும்புதல்களைப் பெரும்பாலும் பார்க்கக்கூடியதாக இருக்கும். பல கூட்டங்களில் போதகர்களோடு பேசி நான் சேகரித்த தகவல்களின்படி இன்றைக்கு நூற்றில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் சுவிசேஷத்தைக் கேட்ட அந்த நிமிஷமே மனந்திரும்பி இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள். அநேகமானோர் உண்மையாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பாக பல தடவைகள் அதற்காக முயற்சி செய்ததாகக் கூறினார்கள். வேறு சிலர் தாம் உண்மையில் மனந்திரும்புதலாகிய அனுபவத்தைப் பெறுவதற்கு முன் மாதக்கணக்கான அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு சலித்துப் போய் இருந்திருப்பதாகக் கூறினார்கள்.

இதன்படிப்பார்த்தால் நிலைத்திருக்கக்கூடிய உண்மையான மனந்திரும்புதலாகிய அனுபவத்தை அடைந்த பெரும்பாலானோர் ஆண்டவரை விசுவாசிப்பதற்கு முன்பு சில நாட்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு ஏன், சில மாதங்களுக்குக்கூட ஜெபத்தில் தரித்திருக்க வேண்டியதாக இருந்திருக்கிறது. அவர்கள், இரட்சிப்பை அடையுமுன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இரட்சிப்பு நமக்குக் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஆதங்கத்தோடும், தவிப்போடும் பல இடர்களைக்கடந்து வர வேண்டியிருந்திருக்கிறது.

இதன்படிப் பார்க்கும்போது இன்று பயன்படுத்தப்பட்டுவரும் பல நவீன சுவிசேஷ உத்திகள், மனந்திரும்புதல் உடனடியாகவும், சடுதியாகவும் நடக்கக்கூடியது என்ற அடிப்படையில் உருவானவையாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இன்றைய நவீன சுவிசேஷ உத்திகளும், அர்ப்பண அழைப்பு முறைகளும், ஆண்டவரைத்தேடி இரட்சிப்பின் வாசலைத்தாண்டத் துடித்துக்கொண்டு, அதற்கான ஆலோசனைகளை நாடி நிற்பவர்களுக்கு எந்த ஆலோசனையையும் தர முடியாதவையாக இருக்கின்றன.

உண்மையில் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் அந்நிமிடமே இரட்சிக்கப்படுவார்கள் என்ற கர்த்தரின் வாக்குறுதியை நாம் நிச்சயம் ஆத்துமாக்களின் முன் வைக்க வேண்டும். அதேவேளை, ஆண்டவராகிய கிறிஸ்துவின் வார்த்தைகளான, உன்னுடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் அவரைத்தேடினால் அவரைக்கண்டு கொள்வாய் என்ற வார்த்தைகளையும் அவர்கள் முன் வைப்பது அவசியம். சுவிசேஷத்தைக் கேட்கும் அநேகர் கேட்ட உடனேயே மனந்திரும்பி சரியான முறையில் கிறிஸ்துவை விசுவாசித்துவிட மாட்டார்கள் என்பது மறைக்கமுடியாத ஒரு உண்மை. அவர்களுக்கு நாம் மேலும் வழிகாட்டி, ஆர்வமூட்டி, ஆலோசனை சொல்லி, உண்மையாகவே ஆண்டவரிடம் அவர்கள் ஆத்மசுத்தத்தோடு வரும்வரை உதவ வேண்டியது அவசியமாகிறது.

இந்த ஆக்கம், கர்த்தரைத் தேடுகிற ஒருவரின் மனந்திரும்புதலைப் பாதித்து அவருடைய விசுவாசத்தைக் குழப்பிவிடக்கூடிய அவருடைய தவறான எண்ணங்களை சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கர்த்தரைத் தேடுகிற ஆத்துமாக்களை நாம் சரியானவிதத்தில் அவரிடம் போவதற்கு எப்படி உதவலாம்? இனி நாம் பார்க்கப்போகின்ற இடர்களில் இருந்து ஆத்துமாக்கள் தங்களைக் காத்துக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளை சுவிசேஷப் பிரசங்கங்களில் நாம் கொடுக்க வேண்டும். மனந்திரும்பியிருக்கிறோம், ஆனால் இன்னும் ஆண்டவரைத் தெரியவில்லையே என்று குழம்பிப்போயிருக்கும் ஆத்துமாக்களுக்கும் இவற்றை நாம் கனிவோடு சொல்லிக்கொடுத்து உதவ வேண்டும்.

இதற்காக குழம்பிப்போய் நிற்கும் ஆத்துமாக்ளைப்பார்த்து, மனந்திரும்புதலின்போது நீங்கள் எந்தெந்தப் பாவங்களில் இருந்து மனந்திரும்பவில்லை என்று கேட்க வேண்டுமென்று நாம் சொல்லவில்லை. அப்படி நேரடியாகக் கேட்காமல், கர்த்தரை விசுவாசிக்கும் காரியத்தில் அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டும்விதமாக சில பொதுவான ஆலோசனைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவற்றைக் கேட்கும் ஆத்துமாக்கள் அவற்றில் தங்களுடைய அனுபவத்திற்கும், சூழ்நிலைக்கும் பொருந்திவருகிற உண்மைகளைப் பயன்படுத்திக்கொண்டு தவறுகளைத் தங்கள் வாழ்க்கையில் தவிர்த்துக்கொள்ளலாம். அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் எண்ணம் நமக்கில்லை.

ஆண்டவரைத் தேடிக்கொண்டிருப்பவர்களின் தனிப்பட்ட பாவங்களைக் குறித்து நாம் எதுவும் கேட்கக் கூடாதென்பதற்கு ஒரு முக்கிய காரணமிருக்கிறது. அப்படிக் கேட்பதால் அந்த ஆத்துமா தன்னுடைய பாவங்களை இன்னொருவர் முன் அறிக்கையிடுவதன் மூலம், உண்மையிலேயே பாவ உணர்வு தோன்றும்போது ஒருவரில் ஏற்படக்கூடிய வலியின் பாதிப்பை அனுபவிக்க முடியாமல், கர்த்தரை நாடி மனந்திரும்ப வேண்டும் என்ற பாரத்தையும் இழந்து போகலாம். கர்த்தரைத் தேடுகிற ஒரு ஆத்துமா தன்பாவங்களை நம்மிடம் அறிக்கையிட முன்வந்தால், அதைச் செய்யவிடாது நாம் அவரை நேரடியாக கர்த்தரிடம் போய் முறையிடும்படி வற்புறுத்த வேண்டும். எப்போதுமே நாம் ஒரு ஆத்துமாவின் தனிப்பட்ட பாவங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தலைமை ஆசாரியராக இருக்கிற கிறிஸ்துவிடம் மட்டுமே அவரைத் தேடுகிறவர்கள் போக வேண்டும் என்பதே நமது சுவிசேஷ செய்தியாக இருக்க வேண்டும்.

ஆத்துமாக்கள் தாங்கள் செய்திருக்கும் பாவங்களை விபரிக்கும்போது அதைக்கேட்பதால் தங்களுக்கு ஒருவித ஆத்மீகதிருப்தியும், தாம் முக்யிமானவர்கள் என்ற எண்ணமும் ஏற்பட்டிருப்பதாக சில சுவிசேஷ ஊழியக்காரர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆத்துமாக்கள் மனந்திரும்புவதற்கு இடையூறு ஏற்படுவதோடு அவர்கள் ஆண்டவரைவிட்டே ஓடிவிடும் நிலையும் ஏற்படும். அவ்வாறு ஒரு பிரசங்கியிடமோ, ஊழியக்காரரிடமோ தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்ட ஒருவர் அச்செயலுக்காக பின்பு வருத்தப்பட நேரிடுவதோடு, சபைக்கு மீண்டும் வருவதற்கும் வெட்கப்படலாம். இவ்வாறு அறிவீனமாக ஆத்துமாக்கள் செய்திருக்கும் பாவங்களைப்பற்றி துருவித்துருவிக் கேட்ட சுவிசேஷ ஊழியர்களிடம் அவற்றை அறிக்கையிட்டு அதனால் மனங்குழம்பிப்போய் பல வருடங்கள் ஆத்மீக ஆர்வமே இல்லாமல் அலைந்து திரிந்தவர்களை நாமறிவோம்.

நாம் இனி விளக்கப்போகும், பலருடைய மனந்திரும்புதலில் காணப்படும் தவறான அம்சங்களைப்பற்றிய பட்டியலைப் படித்துவிட்டு, மனந்திரும்புதல் கிரியையின் மூலம் ஏற்படுகிற‍தென்றும், அதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதே! என்றும் சிலர் எண்ணிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. மனந்திரும்புதல் கிரியைகளினால் ஏற்படுவதல்ல; அப்படியானதொன்றாக அதை மாற்றிவிடுவதும் நமது நோக்கமல்ல. சிலுவையில் மரணத்தின் மடியில் நின்று கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் சொன்னதுபோல், ஆண்டவரே நீர் உம்முடைய இராஜ்யத்தில் வருகின்றபோது என்னை நினைவுகூறும் என்ற சுருக்கமாக ஜெபத்தின் மூலம் மெய்யான மனந்திரும்புதலை வெளிப்படுத்தலாம். இருந்தாலும் ஆத்மீக வைத்தியர்களாகிய நாம் மனந்திரும்புதல் பற்றிய நடைமுறைக்குப் பொருந்துகிற தெளிவான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது நம்முடைய பிரசங்கத்தையும், ஆத்மீக ஆலோசனையையும் வளப்படுத்தும்.

இன்றைய சுவிசேஷ ஊழியங்களில் செயற்கையான மனந்திரும்புதலே முக்கிய இடத்தைப் பெறுவதோடு, அதுவே சுவிசேஷ ஊழியத்தின் மிகப் பெருங்குறையாகவும் இருப்பதால்தான் இந்தத்தலைப்பில் நாம் எழுதத்துணிந்தோம். முதலில் நாம் சொல்லப்போகிறவற்றை சுருக்கமாக பட்டியிலிட்டுத் தந்துவிட்டு பின்பு அதை விளக்க ஆரம்பிப்போம்.

(1) ஆண்டவரைத் தேடுகிறவனுக்கு பாவத்தைப்பற்றிய செயற்கையான எண்ணமே இருக்கிறது.

(அ) அவனுக்கு மனந்திரும்புதலைப்பற்றிய பொதுவான அறிவு மட்டுமே இருக்கிறது.

(ஆ) தேடுகிறவன் வெளிப்புறமான பாவத்தை மட்டுமே பார்க்கிறான்.

(இ) அவன் ஓரிரு பாவங்களையும், தவறுகளையுமே அறிக்கையிடுகிறான்.

(ஈ) தான் செய்துள்ள நற்கிரியைகளைப்பற்றி பெருமையுடையவனாக இருக்கிறான்.

(உ) பாவத்தை அவன் வெறும் நோயாக எண்ணிக் கொண்டிருக்கலாம்.

(ஊ) பாவத்தை மறைக்க அவன் சாக்குப்போக்கு சொல்லலாம்.

(எ) கிறிஸ்துவை நிராகரிப்பதை மட்டுமே பாவமாக எண்ணிக்கொண்டிருக்கலாம்.

(ஏ) யாருக்கும் தெறியாமலிருக்கும் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டியதில்லை என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறான்.

(2) ஆண்டவரைத் தேடுகிறவன் தன் நிலைக்காக வெட்கப்படுவதில்லை

(அ) மன்னிப்பைவிட ஏதாவதொரு நன்மையை மட்டுமே நாடுகிறவனாக இருக்கிறான்

(ஆ) நித்திய தண்டனையைக்குறித்து அவன் பயந்தாலும் அதற்காக வெட்கப்படுவதில்லை.

(இ) வெட்கப்படுவதைவிட மன உறுத்தலை மட்டுதே கொண்டிருக்கிறான்

(3) மனந்திரும்புதல் கர்த்தரை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை

(அ) தேடுகிறவன் கர்த்தரிடம் வருத்தப்பட்டு வரவில்லை

(ஆ) தேடுகிறவன் கிறிஸ்துவின் துன்பங்களினால் அதிகம் பாதிப்படையவில்லை

(4) அடங்காக்குணம் இன்னும் ஆள்கின்றது

(அ) தேடுகிறவன் சில பாவங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறான்

(ஆ) புதிய வாழ்க்கையில் பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கிறது

(இ) கிறிஸ்துவின் பூரண ஆளுகையை இன்னும் ஏற்றக்கொள்ளவில்லை

பொதுவான பிரச்சனை 1

ஆண்டவரைத் தேடுகிறவனுக்கு பாவத்தைப் பற்றிய செயற்கையான எண்ணங்களே இருக்கிறது

(அ) அவனுக்கு மனந்திரும்புதலைப்பற்றிய பொதுவானதும், தெளிவில்லாததுமான எண்ணங்களே இருக்கின்றன

தேடுகிறவனுக்கு தொடர்ந்து பாவத்தின் அவலட்சனத்தைப் பற்றியும், அது எவ்வளவு மோசமானது என்பதும் தெரியாமலிருக்கலாம். சில வேளைகளில் சுவிசேஷப் பிரசங்கிகள் பாவத்தைப் பற்றிய பொதுவான விளக்கத்தை மட்டும் கொடுத்து அதன் கொடூரத்தன்மையை விளக்காமல் விடுவதால் கேட்கிறவர்களுக்கு தாம் கர்த்தருக்கு முன் எத்தனை பெரிய பாவிகளாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது தெரியாமல் போகிறது. பாவிகள் ஒட்டுமொத்தமாக தங்களுடைய பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கையிட வேண்டு‍மென்று கர்த்தர் எதிர்பார்க்காவிட்டாலும், அவர்கள் தங்களுடைய இருதயம் மகாக்கேடுள்ளதும், திருக்குள்ளதுமாக இருக்கிறது என்பதை அறிக்கையிட்டு, தங்களுடைய வெளிப்படையான பாவங்களில் இருந்து உளபூர்வமாக மனந்திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஒருவன் தன்னுடைய பாவங்களை அலட்சிய மனப்போக்குடன் பொதுவான விதத்தில் அறிக்கையிடுவது மெய்யான மனந்திரும்புதலுக்கு அடையாளமல்ல. மனந்திரும்புதல் துள்ளியமானதும், தெளிவுள்ளதுமாகும். இதையே தாவீதின் மனந்திரும்புதலில் நாம் பார்க்கிறோம். தாவீதின் ஜெபத்தில் பாவத்தைக்குறித்த மூன்று முக்கிய அம்சங்களை அவதானிக்க முடிகின்றது.

“தேவனே, உமது கிருபையின்படி எமக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்குமுன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.” (சங்கீதம் 51:1-4).

தாவீது அறிக்கையிட்ட பாவத்தின் மூன்று அம்சங்களாவன: மீறுதல், அக்கிரமம், பாவம் என்பவையாகும். பாவத்தைப் பற்றிய தெளிவான போதனையை அளிக்காமல் இருப்பதே இன்றைய நவீன சுவிசேஷ ஊழியத்தின் மிகப் பெருங்குறைபாடாக இருப்பதால்தான் இம்மூன்றைப்பற்றியும் நாம் விபரமாக விளக்குகிறோம்.

“மீறுதல்கள்” என்பதற்கான எபிரேய வார்த்தை கர்த்தருக்கெதிராக செய்யப்படும் எதிர்ப்புச்செயல்களைக் குறிக்கின்றது. நாம் அவருடைய நீதிப்பிரமாணங்களை உதறித்தள்ளிவிட்டு, நம்முடைய வாழ்க்கைக்கு நம்மையே அதிபதிகளாக்கிக்கொண்டு, கர்த்தருடைய அதிகாரத்‍தை அலட்சியப்படுத்தி அவருடைய நீதிச்சட்டங்களுக்கு விரோதமாக நடக்கிறோம். நாம் தன்னலத்தோடும், சுய சித்தத்தோடும் நடந்துகொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தருக்கு எதிராக நடந்து கொள்கிறோம். எனவேதான், தாவீது அவையெல்லாவற்றிலிருந்தும் தன்னைக்கழுவிச் சுத்திகரிக்கும்ப‍டி ஜெபித்தான். கர்த்தரைத் தேடி அலுத்துப்போய் நிற்கிற ஆத்துமா கர்த்தருக்கெதிராக எவ்வளவு தூரம் மீறுதல்களைச் செய்திருக்கிறோம் என்பதை உணர்கின்றதா? பாவத்தின் கோரத்தை விளக்கிச் சொல்வதற்காக ஒரு பிரசங்கி ஆத்துமாக்கள் ஆத்திரமடையக்கூடியவகையில் எதிர்மறைப்பிரசங்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி, விடாமல் வசைமாறிப்பொழியும் பிரசங்கியாக இல்லாமல் தெளிவாகவும், விசுவாசத்தோடும் அமைந்த, சுவையும், கனிவும் கலந்த பிரசங்கத்தை நம்மால் அளிக்க முடியும்.

பாவத்தைப் பற்றிய இன்னொரு அம்சம் “அக்கிரமமாகும்”. இதற்கான ‍எபி‍ரேய வார்த்தைக்கு “கோணல்” என்ற பொருள். நாம் பாவத்தின் காரணமாக வளைந்து கோணலாகிப்போயிருப்பதால் தொடர்ச்சியாக தன்னலமில்லாமலும், உண்மையோடும் நம்மால் இருக்க முடியவில்லை. தாவீது தனது ஜெபத்தில் தன்னைக் கழுவும்படியாக ஜெபிக்கிறான். இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தை சரீரத்தைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்படும் வார்த்தையல்ல. அழுத்தமாக கறைகள் நிறைந்துள்ள ஒரு துணியை, அதன் கறையைப் போக்க அடித்துத் துவைத்துக் கழுவ வேண்டும் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்கிரமம் என்பது மிக ஆழமாகப்பதிந்திருக்கும் கறையாகும். கர்த்தரைத்தேடுகிறவன் தனக்குள் இத்தகைய கோணல் தன்மைகாணப்படுகின்றது என்பதை உணர்ந்து அதிலிருந்து கழுவப்பட வேண்டும் என்று துடிப்போடு இருக்கிறானா?

பாவத்தின் மூன்றாவது அம்சத்திற்கு “பாவம்” என்றே பெயர். இதற்குப் பொருள் “குறிதவறுதல்” என்பதாகும். இது தன்னுடைய சிந்தனைகளினாலும், செயல்களினாலும், பேச்சினாலும் கர்த்தருக்கு விரோதமாக நடந்து அவருடைய கட்டளைகளை மனிதன் மீறிப்போயிருக்கிறான் என்பதைக் குறிக்கிறது.

அத்தோடு, தாவீது இத்தனையும் துர்க்குணம் என்று கூறுகிறான். இதற்குப்பொருள் “அழிவு” என்பதாகும். பாவங்கள் கர்த்தருடைய கட்டளைகளை உடைத்தெறிந்து, அவருடைய உலகத்தைக் கறைபடுத்தி, தனியொருவனின் வாழ்க்கையை சீர்குலைத்து, ஏனையோரையும் தாக்கித் துன்பத்துக்குள்ளாக்குகின்றன. தாவீது இத்தகைய பாவங்களில் இருந்து விடுதலை அடைய வேண்டுமென்று துடிக்கிறான். அவற்றைப்பற்றிய குற்ற உணர்விலிருந்தும், நினைவுகளில் இருந்தும் விடுபடத்துடிக்கிறான். கர்த்தரை தேடுகிறவன் தன்னுடைய பாவங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை ஓரளவுக்காவது உணர்ந்திருக்கிறானா?

(ஆ) தேடுகிறவன் வெளிப்புறமான பாவத்தை மட்டுமே கவனிக்கிறவனாக இருக்கிறான்

பெரும்பாலும் ஆத்துமாக்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள பாவத்தைப் பற்றிய உணர்வே இல்லாமல், வெளிப்புறமாகத் தாங்கள் செய்யும் பாவங்களை மட்டுமே கவனிக்கிறார்கள். கர்த்தரைத் தேடுகிறவன் தன்னுள் இருக்கும் அகங்காரம், தன்னலம், தன்னிச்சை, ஏமாற்றும் தன்மை, பொருளாசை, வெறுப்புணர்வு, கோபம் ஆகியவற்றை பற்றி அறிந்திருக்கிறானா? தன்னுள் காணப்படும் ஆழமான அசுத்தத்தைப்பற்றிய அறிவோடு, அதைத் தன்னால் மாற்றமுடியாதென்றும், வருடங்கள் போகப்போக அவை மோசமாகவே போய்க்கொண்டிருக்கும் என்பதையும் அறிந்திருக்கிறானா?

(இ) அவன் ஓரிரு பாவங்களையும், தவறுகளையுமே அறிக்கையிடுகிறான்.

தேடுகிறவன் தான் செய்துள்ள ஒரு குறிப்பிட்ட பாவத்திற்காக மட்டும் வருந்தி தன்னுடைய நிலமை முழுவதையும் பற்றிய உணர்வில்லாமல் இருக்கக்கூடும். உண்மையான மனந்திரும்புதலோடு அவன் கர்த்தரிடம் போவதற்கு தான் முழுமையாக மன்னிப்பும், மாற்றமும் அடைய வேண்டிய நிலையிலிருப்பதை அவன் உணர வேண்டும். தான் செய்துள்ள குறிப்பிட்ட ஓரிரு பாவங்களைப் பற்றி மட்டுமே அவன் சிந்தித்துக் கொண்டிருந்தால் தன்னுடைய ஏனைய நடத்தைகளில் மாற்றம் ‍தேவையில்லை என்ற எண்ணத்தை அவன் கொண்டிருக்கக்கூடும். யூதாசு தன்னுடைய ஒரேயொரு பாவத்திற்காக மட்டும் வருத்தப்பட்டான். ஆனால், தன்னுடைய பாவங்கள் முழுவதையும் அவன் ஒருபோதும் உணரவில்லை. ஆகவே, அவன் ஒருபோதும் தன்னுடைய பாவங்களில் இருந்து சரியான முறையில் மனந்திரும்பவில்லை (மத்தேயு 27:3-5).

(ஈ) தான் செய்துள்ள நற்கிரியைகளைப்பற்றி பெருமையுடையவனாக இருக்கிறான்.

தன்னுடைய வாழ்க்கையில் தான் செய்துள்ள சில நன்மைகளைப் பார்த்து கர்த்தர் தன்னைப் பாராட்டுவார் என்று தேடுகிறவன் சில வேளை நினைத்துக்கொண்டிருக்கலாம். என்னுடைய பெருமை பாராட்டுதலுக்கும், ஆத்திரப்படும் தன்மைக்கும் வேண்டுமானால் மன்னிப்பு தேவைப்படுகிறது, ஆனால், கர்த்தர் என்னுடைய பெருந்தன்மையையும், கனிவு பாராட்டுதலையும் பார்த்து நிச்சயம் ஆனந்தப்படுவார் என்று தேடுகிறவன் தனக்குள் சொல்லிக் கொள்ளலாம். தேடுகிறவன் தன்னைப்பற்றித் தனக்குள் எந்தவிதத்திலும் பெருமையாக எண்ணிக்கொண்டிருந்தால் அவன் மனந்திரும்புதலைப்பற்றித் தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதோடு, மெய்யாக மனந்திரும்புவதற்கும் எந்த வாய்ப்புமேயில்லை. தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் கர்த்தருக்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்ப‍தை உணர்வதோடு, தன்னுடைய பாவங்களனைத்திற்குமாக கர்த்தரின் இலவசமானதும், அனைத்தையும் உள்ளடக்கியதுமான மன்னிப்பை நாடினால் தவிர தனக்கு எந்தவிதமான ஆசீர்வாதமோ பரலோக வாழ்க்கையோ கிடைக்காது என்பதை அவன் உணர வேண்டும். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் தன்னுடைய தாயிடம் தான் எப்போதுமே மரியா‍தையுடன் நடந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வதுபோல்தான், கர்த்தரைத்தேடுகிற ஒருவன் தன்னைத்தானே பெருமைப்பாராட்டிக்  கொள்ளுவதும், பாவியொருவன் கர்த்தருக்கெதிராக செய்துள்ள பெரும்பாவங்களுடன் ஒப்பிடும்போது அவன் பெருமைபாராட்டி கொள்ளக்கூடிய எந்த நன்மையும் மிகச் சாதாரணமானதே.

(உ) பாவத்தை அவன் வெறும் நோயாக எண்ணிக் கொண்டிருக்கலாம்.

தேடுகிறவன் பாவத்தை வெறும் நோயாக எண்ணிக் கொண்டிருக்கலாம். பாவத்திற்கு தானே சொந்தக்காரன் என்பதை ஒப்புக்கொண்டு அதற்காக வெட்கப்படாமல், கர்த்தாவே! என்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வியாதியில் இருந்து என்னை விடுவியும் என்று அவன் கர்த்தரை நோக்கிக் கேட்பவனாக இருக்கலாம். சில பிரசங்கிகள், நோயினால் பாதிக்கப்பட்டு பரிதாபமான நிலையில் இருக்கும் ஒரு ஆத்துமாவாக பாவியைப் படம் பி‍டித்துக்காட்டுவதால் இந்தமாதிரியான எண்ணங்கள் வளருவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்துவிடுகின்றனர். கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய கரங்கள் இரட்சகரின் கரங்களில் வைத்தார்களானால், இயேசு அவர்களுடைய கஷ்டங்களில் இருந்து அவர்களை விடுவிப்பார் என்பது அவர்களுடைய பிரசங்கமாக இருக்கின்றது. தங்களுடைய பாவங்களுக்காக வருந்தமறுக்கும் ஆத்துமாக்களுக்கு, பாவத்தைப் பற்றிய இந்த விளக்கம் மிகவும் ஆர்வத்தை ஊட்டுவதாகவே இருக்கும்.

(ஊ) தன்னுடைய பாவத்திற்கு வெறும் சாக்குப்போக்கு சொல்கிறான்

தங்களுடைய பாவங்களுக்கு சாக்குப்போக்கு சொல்வதன்மூலம் சிலர் அவற்றிற்கான பொறுப்பை ஏற்க மறுக்கிறார்கள். தவறானவர்களுடன் சேர்ந்ததாலேயே திருட நேரிட்டது என்றும், வேறு எந்த வழியும் இல்லாததாலேயே பொய் சொல்ல நேரிட்டது என்றும் சாக்குப்போக்கு சொல்வார்கள். தங்களுடைய பெற்றோர் அன்புடன் தங்களை வளர்க்காததாலேயே தங்களுடைய பிள்ளைகளைக் கொடுமைப்படுத்த நேர்ந்ததாகவும், வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட விரக்தி தங்களைக் குடிகாரர்களாகவும், உலக இச்சைகளில் ஈடுபடுபவர்களுமாக்கிவிட்டது என்றும் பல காரணங்களைக் கூறுவார்கள். ஒரு பாவி, தன்னுடைய திருமண வாழ்க்கையில் அமைதியின்மையே தன்னை ஒழுக்கக்கேடுள்ளவனாக மாற்றிவிட்டது என்றும், இன்னொருவன் தன்னுடைய வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சினைகளே தனது கோபங்களுக்கெல்லாம் காரணம் என்றும் இப்படிப் பலவிதமான காரணங்களைச் சொல்வார்கள். ஆனால், கர்த்தரின் முன்பு வருகின்றபோது நாம் சகல சாக்குப்போக்குகளையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, தாவீதைப்போல, என்மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன் . . . தேவரீர் ஒருவருகே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்னதாக பொல்லாங்கானதை நடப்பித்தேன் என்று சொல்ல வேண்டும்.

ஒரு பாவி தன் பாவங்களுக்கான சகல பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவனுக்கு மன்னிப்பு கிடையாது. மெய்யாக மனந்திரும்புகிறவன், ஆண்டவரே, நான் பாவஞ்செய்துவிட்டேன் என்று கதறுவான். பவுல் தன்னுடைய மனந்திரும்புதலை பின்னோக்கிப் பார்த்து சொல்கிறார், “பாவிகளை இரட்சிக்க இயேசு இந்த உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உம்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்”. (1 தீமோத்தேயு 1:15). மெய்யாக மனந்திரும்புகிறவன் தன்னைக் குற்றவாளியாகக் காண்பான். அத்தகையவனுடைய குற்ற உணர்வையே கர்த்தர் நீக்குவார்.

(எ) கிறிஸ்துவை நிராகரிப்பது மட்டுமே பாவம் என்ற தவறான எண்ணம்

கிறிஸ்துவை நிராகரிப்பது மட்டுமே பாவமென்றும், மனந்திரும்புவதற்கு அந்தப் பாவத்திலிருந்து மன்னிப்புப்பெற்றால் போதுமென்ற தவறான எண்ணத்தால் கர்த்தரைத்தேடுகிறவன் தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கலாம். சில பிரசங்கிகள், மனிதன் செய்துள்ள அனைத்துப்பாவங்களுக்காகவும் கிறிஸ்து தன்னைப் பரிகாரப்பலியாகக் கொடுத்திருப்பதால், கிறிஸ்துவை நிராகரிக்கின்ற பாவத்திற்காக மட்டுமே எந்த மனிதனும் தண்டனையை அனுபவிக்க முடியும் என்று போதிக்கின்றார்கள். இத்தகைய செய்தியைக் கேட்டு கர்த்தரைத் தேடுகிற ஒருவன் தான் செய்ய வேண்டியதெல்லாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டியது மட்டுமே என்ற எண்ணத்தில் தன்னுடைய பாவங்களெல்லாவற்றிலும் இருந்து மனந்திரும்ப வேண்டிய உந்துதல் இல்லாமல் போகலாம். அவன் தன்னுடைய ஜெபத்தில், “ஆண்டவரே! உம்மை நிராகரிக்கின்ணு பாவத்தை ‍செய்துவிட்டேன்” என்று மட்டுமே அறிக்கை செய்பவனாக இருக்கிறான்.

இந்தவகையில் ஜெபிப்பது இலகுவானது. உண்மையில் மனந்திரும்பாதவர்களும், மேலெழுந்தவாரியாக மட்டும் சுவிசேஷத்தில் ஆர்வம் காட்டுபவர்களும் இந்தவகையிலான மனந்திரும்புதலையே கொண்டிருக்கிறார்கள். நாம் மேலே பார்த்தவிதத்தில் ஜெபம் செய்கிறவன், அதோடு மனப்பூர்வமாக தன்னுடைய பாவங்கள் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக மன்னிப்புக்கேட்டால் அதை மெய்யான மனற்திரும்புதல் என்று கூறலாம். ஆனால், அத்தகைய ஜெபத்தைப் பெரும்பாலும் கேட்டக்கூடியதாக இல்லை. தன்னை ஆத்துமாக்கள் நிராகரிப்பதற்கு அவர்களுடைய பொல்லாங்கான செயல்களே காரணாக இருக்கின்றன என்று நமது ஆண்டவர் சொல்லியிருக்கிறார் (யோவான் 3:19-21). தம்மை நிராகரித்ததற்காக மட்டும் கர்த்தர் அவர்களை ஆக்கினைத்தீர்ப்புக்கு நியமிக்கவில்லை, அவர்களுடைய பாவங்களனைத்தும் கர்த்தரை நிராகரிக்கும்படி அவர்களை வழிநடத்தியிருப்பதால்தான்.

வேதத்தில் காணப்படும் அநேக போதனைகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது, பாவி தன்னுடைய அனைத்துப்பாவங்களிலும் இருந்து மனந்திரும்ப வேண்டும் என்ற உண்மையை தகுந்த உதாரணங்களுடன் நிரூபிக்க முடியும். பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் முதலாவது அதிகாரத்தில் அநேக பாவங்களைப் பட்டியலிட்டுத் தந்து, அப்பாவங்களைச் செய்பவர்களைக் கர்த்தர் நிச்சயம் தண்டிப்பார் என்று எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். அதேவேளை, கர்த்தருடைய தயவும், பொறுமையும், நீடிய சாந்தமும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பாவங்களனைத்திலிருந்தும் பாவிகள் மனந்திரும்புவதற்கு வழி நடத்துவதற்காகவே இருக்கின்றன என்று பவுல் கூறுவதைக் கவனிக்கவும்.

(ஏ) யாருக்கும் தெறியாமலிருக்கும் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டியதில்லை என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறான்

மெய்யான மனந்திரும்புதல் குறிப்பிட்டுக்கூற முடியாத பெருமளவு பாவங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. பாவி தான் செய்துள்ள பெரும்பாவங்களுக்காக வருந்துகிற அதே நேரம் தான் செய்திருக்கும் இன்னும் அநேக பாவங்கள் தனக்குத் தெறியாமலிருக்கின்றது என்பதையும் உணர்கிறவனாக இருக்கிறான். தனக்குத் தெரிந்திருப்பதைவிட மேலும் அநேக பாவங்கள் இருக்கின்றன என்பதை அவன் அறிந்திருக்கிறான். தாவீது தான் செய்து தனக்குத் தெரிந்திருந்த பாவங்களுக்காகவும், தனக்குத் தெரியாமலிருக்கும் எண்ணிக்கையற்ற இன்னும் அநேக பாவங்களிலிருந்தும் மனந்திரும்பியதை பின்வருமாறு விளக்குவதைப் பார்க்கிறோம்:

“தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீக்கலாக்கும்.” (சங்கீதம் 19:12).

கர்த்தரின் மகா பரிசுத்தத்தைப் பார்த்து அவரைத் தேடுகிறவன் பிரமித்துப்போய் இருக்கிறானா? ஆண்டவருக்கு நெருப்பைக்கக்கும் அனல்விழிகள் இருக்கின்றன என்பதையும் அவருடைய கண்களுக்கு எதுவும் தப்பமுடியாது என்பதையும் அவன் அறிந்திருக்கிறானா? யோபுவைப்போல, “இதோ, நான் நீசன்;” . . . “இப்பொழுதே என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அறுவறுத்து, தூறிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.” (யோபு 19:4; 42:5, 6) என்று அவனால் கதற முடியுமா?

(மிகுதி அடுத்த இதழில்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s