பின்நவீனத்துவமும், கிறிஸ்தவமும்

கிறிஸ்தவம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றில் வளர்ந்த ஒரு வாழ்க்கை நெறி, வரலாறு, சமுதாய வளர்ச்சியையும், சமுதாய நிகழ்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. உலக சமுதாயங்கள் மெய்யான விடுதலையை எதன் மூலம்? எப்படி? அடைய முடியும் என்பதைக் காட்டுவதே கிறிஸ்தவம். ஆகவே, கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் தாங்கள் வாழும் சமுதாயம் எந்த விதத்தில் சிந்திக்கிறது? எந்தப்போக்கில் போகிறது? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்துவிட முடியாது. அப்படி சமதாயத்தின் போக்கை அறிந்துகொள்வதில் அலட்சியம் காட்டினால் சுவிசேஷத்தை நாம் பயனுள்ள முறையிலும், தெளிவாகவும் மக்களுக்கு ஒருபோதும் எடுத்துவிளக்க முடியாது.

கிறிஸ்தவத்தின் அடிப்படை செய்தியில் எவரும் எந்தவிதமான மாற்றத்தையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. சமுதாயத்தின் மாற்றத்திற்கேற்றவிதத்தில் சுவிசேஷத்தை மாற்றி அமைக்கிறவன் உண்மையான பிரசங்கியாக இருக்க முடியாது. ஆனால், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, அம்மாற்றங்களுக்கு மத்தியில் சுவிசேஷம் மட்டுமே கொடுக்கக்கூடிய நித்திய மாற்றத்தையும், சமுதாய விடுதலைக்கான வேதத்தின் அடிப்படைப் போதனைகளையும் சமுதாய மக்கள் புரிந்து கொள்ளும்படி தெளிவாக எடுத்துச் ‍சொல்லுவதே ஒரு பிரசங்கியின் போதக சமர்த்து.

உலக சமுதாயத்தின் இன்றைய போக்கான பின்நவீனத்துவம் (Post-modernism) கிறிஸ்தவ சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா? அப்படிப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், அந்தப் பாதிப்புகள் யாவை என்பதை ஆராய்ந்து, பின்நவீனத்துவத்தை எப்படி வேதபூர்வமாக எதிர்கொண்டு வெற்றி காண்பது என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் நாம் பார்க்கப் போகிறோம்.

முதலில் நவீனத்துவம் (Modernism), பின்நவீனத்துவம் ஆகிய வார்த்தைகளுக்கு நாம் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். பின்நவீனத்துவம் என்ற பதம் சமூகவியல் சிந்தனையாளர்களால் இன்று அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு வார்த்தை. அநேக கிறிஸ்தவர்கள் இந்த வார்த்தையை இதுவரை கேட்டிராமலும், கேள்விப்பட்டிருந்தால் அதன் பொருள் தெரியாமலும் இருக்கலாம். ஆகவே, முதலில் இவ்வார்த்தையின் பொருளை அறிந்து கொள்வது அவசியம்.

நவீனத்துவமும், பின்நவீனத்துவமும்

பின்நவீனத்துவம் என்ற வார்தையைப் பார்த்தால் அதன் முன்னால் உள்ள “பின்” என்ற வார்த்தை பின்நவீனத்துவத்திற்கு முன்னால் “நவீனத்துவம்” இருந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுக்காட்டுவதை அறியலாம். நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஆகிய இந்த இரண்டு வார்த்தைப் பிரயோகங்களும் சமூகவியல் சிந்தனையாளர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இவ்வார்த்தைகளுக்கு கிறிஸ்தவர்கள் உருவம் கொடுக்கவில்லை. மேலைத் தேசத்து ஐரோப்பிய சமூகவியல் சிந்தனையாளர்கள் (Sociologists) தாங்கள் வாழும் சமுதாயத்தின் போக்குகளை ஆராய்ந்து அவற்றின் வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டப் பயன்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்களே இவை. ஆகவே, நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஆகிய பதங்கள் மேலைத்தேய சமுதாயத்தின் சிந்தனைகளையும், போக்குகளையும் விவரிக்கின்றன. இந்நூற்றாண்டில் தொழில் நுட்பசாதனங்களின் அதிவேக வளர்ச்சியால் செய்திப்பரவலும், மேலைத்தேய, கீழைத்தேய மக்கள் தொடர்பும் பேரளவுக்கு, பெரும்பாலும் பெருநகர்ப்புறங்களில் வளர்ந்திருப்பதால் பின்நவீனத்துவம் கீழைத்தேய சமுதாயங்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே, பின்நவீனத்துவத்திற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி அதை நாம் நிராகரித்துவிட முடியாது. ஏற்கனவே கிறிஸ்தவர்ள் அல்லாத தமிழ் இலக்கிய விமரிசகர்ள் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதோடு, அதன் மூலம் தமிழ் சமுதாயத்தைக் கவரவும் முனைந்துள்ளனர். இதை முக்கியமாக மேலைத்தேய தமிழர் மத்தியில் பார்க்கலாம். பிரான்சில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையான எக்சில் (Exile) மற்றும் கனடாவில் இருந்து வெளிவரும் சில தமிழ்ப் பத்திரிகைகளிலும் பின்நவீனத்துவத்தின் வாடையை அதிகமாகவே பார்க்க முடிகின்றது.

நவீனத்துவம்

முதலில் நவீனத்துவத்தை ஆராய்வோம். டொக்டர் ரொபட் லேத்தம் என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் நவீனத்துவம் 1700-களில் ஆரம்பித்து 20ம் நூற்றாண்டின் முக்கால் பாகங்கள்வரைக் காணப்பட்டதாகக் கூறுகிறார். அதாவது 1975 வரை என்று கூறலாம். இந்தக் காலப்பகுதியின் சிந்தனைப் போக்கை சமூகவியல் சிந்தனையாளர்கள் அறிவொளிக்காலம் (Enlightenment) என்று அழைக்கிறார்கள். இக்காலப்பகுதியில் மனிதனுடைய முன்னேற்றத்தைக் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. கிறிஸ்தவ வேதம் விளக்கும் உலகக் கண்ணோட்டத்தை நவீனத்துவம் நிராகரித்தது. மனிதன் தனது புலன்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளும் காரியங்களின் அடிப்படையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிரூபிக்கலாம் என்பது நவீனத்துவத்தின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், கிறிஸ்தவ வேதம் தனது நம்பிக்கைகளுக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் தங்கியிருக்கவில்லை. அது விஞ்ஞானத்துக்கு புறம்பே இருந்து எழுந்த நம்பிக்கையாக இருந்தது. அறிவொளிக் காலத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த இமானுவேல் கான்ட் (Immanuel Kant 1724-1804) மனிதனுடைய புலன்களின் கண்டுபிடிப்புகளாலேயே விஞ்ஞான அறிவு ஏற்படுகின்றது என்றார். இத்தகைய சிந்தனைப் போக்கு, எதுவும் மனிதனுடைய புலன்களின் அனுபவத்தாலேயே உறுதியாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை சமுதாயத்தில் வளர்த்து மனித புலன்களின் அனுபவத்திற் அப்பாற்பட்ட, இயற்கையை மீறிய விளக்கங்கள், செயல்கள் அனைத்தையும் நிராகரிக்கும் போக்கை சமுதாயத்தில் உருவாக்கியது. இந்த சிந்தனைப் போக்கைப் பின்பற்றியவர்கள் வேதத்தில் நாம் வாசிக்கின்ற அற்புதங்கள், கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் தெய்வீகம் ஆகியவற்றை நிராகரித்தார்கள். இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபைத்தலைவர்கள் மத்தியிலும், நியூசிலாந்தில் 1960-களில் பிரஸ்பிடீரியன் சபைகளிலும் (பேராசிரியர் லோர்ட் கியரிங்) இவை தலைதூக்கியிருந்ததை நினைவு கூறலாம். இந்தப் போக்கு மேலைத் தேசங்களில் மட்டுமல்லாமல் கீழைத்தேசங்களிலும் இருந்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்தவிதமான நவீனத்துவ சிந்தனை விசுவாசத்தையும், வரலாற்றையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக விளக்கின. நவீனத்துவக் காலத்தில் விசுவாசம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், வரலாற்று சாட்சியங்களுக்கும் அப்பாற்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சிந்தித்தவர்கள் வரலாற்றுக் கிறிஸ்தவத்தை முற்றாக நிராகரித்தார்கள். வரலாற்று நிகழ்ச்சிகள் மூலமாக விசுவாசத்தை நிலைநாட்ட முடியாது என்ற சிந்தனைப்போக்கு வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படை வரலாற்று நிகழ்ச்சிகளான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஏற்றக் கொள்ள மறுத்தது. அத்தோடு, நவீனத்துவ காலத்தில் காரண காரியங்களின் அடிப்படையிலான மனிதனுடைய சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், மனித சிந்தனையால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேதத்தின் தனித்துவமான அதிகாரம் நிராகரிக்கப்பட்டு மனித சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவமும் மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால், நவீனத்துவத்தைப் போல அது மனித சிந்தனையை தனித்துவமான அதிகாரம் கொண்டதாக விளக்குவதில்லை. மனித சிந்தனை வேதத்தின் அதிகாரத்திற்கும், கிறிஸ்துவின் போதனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கிறிஸ்தவம் விளக்குகிறது.

மனிதனுடைய சிந்தனையின் அதிகாரத்திலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் சாட்சியங்களிலும் அதிக நம்பிக்‍ை வைத்து நவீனத்துவம் செயல்பட்டதால் அது கிறிஸ்தவ சபைகளையும், சமயப்பிரிவுகளையும் பாதித்து லிபரலிசம் (Liberalism) வளரத் துணை புரிந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் லிபரலிசம் தனது உச்ச நிலையை அடைந்திருந்ததாக டாக்டர் லேத்தம் கூறுகிறார். இக்காலத்தில் சுவிசேஷ நூல்களின் வரலாற்று சம்பவங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, வரலாற்றுக் கிறிஸ்துவைக் குறித்து அதிக கேள்விகள் எழுப்பப்பட்டன. வேத சம்பவங்கள் அனைத்தும் விஞ்ஞான ஆய்வுகளுக்கும், வரலாற்று ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டன. இக்காலத்தில் லிபரலிசம் சபைகளையும், வேதாகமக்கல்லூரிகளையும் அதிகளவுக்குப் பாதித்தன. இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள இறையியல் கல்லூரிகளும் இந்தவகையில் லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றின. இந்தியாவில் இன்றும் யூனியன் பிபிலிக்கள் செமினரியும் (Union Biblical Seminary), அரசரடி இறையியல் கல்லூரியும் (Arasaradi Theological College. Madurai) மேலும் பல கல்லூரிகளும் லிபரலிசப் போதனைகளையே பின்பற்றி வருகின்றன.

இந்தக் காலத்தில் அடிப்படைக் கோட்பாட்டியக்கம் (Fundamentalism) நவீனத்துவத்திற்கு கிறிஸ்தவம் அளித்த பதிலாக இருந்தது. அடிப்படைக் கோட்பாட்டியக்கம் நவீனத்துவத்தை நிராகரித்தது. லிபரலிசத்திற்கு எதிராக ஜிம் பெக்கர் (J. I. Packer) எழுதிய Fundamentalism and the Word of God என்ற நூலையும், இக்காலத்தில் பிரிட்டனில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்சின் சிறப்பான ஊழியத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், சுவிசேஷ இயக்கம் (Evangelicalism) இந்தக் காலத்தில் நவீனத்துவத்தின் சில அம்சங்களைத் தன்னுள் சேர்த்தக் கொண்டது வருந்த வேண்டிய காரியம். அடிப்படைக் கோட்பாட்டியக்கத்தின் நல்ல சில அம்சங்களை – மறுபிறப்பு, பரிசுத்தவாதம், சுவிசேஷ ஊழியம் – இது சேர்த்துக் கொண்டாலும், சுவிசேஷ ஊழியத்தில் வரலாற்றுக் கிறிஸ்தவ விசுவாசத்தைவிட மனிதனுடைய தேவைகளிலேயே அதிக நாட்டம் செலுத்தியது. அதாவது, வேதத்தின் அடிப்படை வரலாற்றுப் போதனைகளிலும், விசுவாச அறிக்கைகள் விளக்கும் கோட்பாடுகளிலும் நாட்டம் காட்டாது, மனிதனுடைய தனிப்பட்ட இரட்சிப்பிலும், அவனுடைய அநேக சுய தேவைகளைப் பூர்த்தி செய்வதி‍லுமே நாட்டம் கொண்டது.

பின்நவீனத்துவம்

நவீனத்துவம் பாதிக்கப்பட்டு பின்நவீனத்துவம் உருவாக உலகில் நிகழ்ந்த அநேக சம்பவங்கள் காரணமாக இருந்தன.

பெளதீகவியலில் வளர்ச்சி (Physics) – பெளதீகவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால் இம்மானுவல் கான்டின் கோட்பாடு சிதறடிக்கப்பட்டது. கான்ட் சரீரம், ஆன்மீகம் என்று இரண்டு வேறுபட்ட பிரிவுகள் இருப்பதாக அனுமானித்தார். பெளதீகவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால் அந்த அனுமானம் சிதறடிக்கப்பட்டது. விஞ்ஞான அளவுகள், கணக்கியல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும், வளர்ச்சியும் நவீனத்துவத்தைப் பாதித்தன. மொத்தத்தில் பெளதீகவியலின் தத்துவத்திற்கும், மனித சிந்தனைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை நிரூபித்தன. நவீனத்துவம் காரண காரிய அடிப்படையிலான மனித சிந்தனையின் வளர்ச்சியில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தது. அந்நம்பிக்கையை பெளதீகவியல் அசைத்தது. இயற்கை உருவாக்கப்பட்டது; மனித சிந்தனையால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணம் உருவானது.

சமுதாயத்தில் மனித சிந்தனையின் வளர்ச்சியில் (Human reasoning) இருந்த நம்பிக்கை தகர்ந்தது இன்னுமொரு காரணம். இக்காலத்தில் ஏற்பட்ட இரண்டு உலகப்போர்களும், வியட்நாம் போரும், அமெரிக்காவை உலுக்கிய நிக்சனின் வாட்டர்கேட் நிகழ்ச்சியும் மனித வளர்ச்சியிலும், மனித சிந்தனையின் சக்தியிலும் நவீனத்துவம் வைத்திருந்த நம்பிக்கையை வீணாக்கின. இச்சம்பவங்கள் மனிதசிந்தனைகள் மனித குலத்தில் சேதத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவித்ததை சுட்டிக்காட்டின. மனிதகுல வளர்ச்சிக்கு மனித சிந்தனையின் வளர்ச்சி காரணமாக ‍அமையும் என்ற நவீனத்துவத்தின் கோட்பாட்டை இவை தகர்த்து மனிதனின் நம்பிக்கைகளைக் குழைத்தன. மனிதன் அமைதியிழந்து கீழைத்தேய சமயங்களிலும், புத்திக்கு எட்டாத காரியங்களிலும் (Images) அமைதிகாணத் தொடங்கினான். ஹிப்பி இயக்கத்தையும், சமாதான இயக்கங்களையும், பீட்டில்ஸின் ஜோர்ஜ் ‍ஹெரிசன் (George Harrison) போன்றோர் இந்திய சாதுக்களை நாடியலைந்ததையும் நினைவு கூரலாம். போதைப் பொருளிலும் மனிதன் அமைதி காணப்பார்த்தான். இவற்றோடு நியூ ஏஜ் இயக்கமும் (New Age Movement) தோன்றியது. இவற்றால் மனித சிந்தனை வளர்ச்சியில் நாட்டம் குறைந்து, மனித உணர்வுகளுக்கு (Emotions and feelings) அதிகம் மதிப்பளிக்கப்பட்டது. கண்ணால் காணக்கூடிய பொருட்களைவிட (Objective substance), கண்ணால் காண முடியாத சிந்தனைத் தோற்றங்களுக்கு (Images) விளக்கம் காண்பதில் அதிக நாட்டம் ஏற்பட்டது.

இவற்றால் கடந்த நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து வருடங்கள் மனித வளர்ச்சியை குறித்த சந்தேகம் கொண்டதாக இருந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வுகளை உலகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கியது. மனித சிந்தனையில் இருந்த மதிப்புக் குறைந்து மனித உணர்வுகளுக்கு அதிகம் மதிப்புத் தரப்பட்டது. பொதுவாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தயங்கும் பிரித்தானிய மக்கள் டயானா (Diana) இறந்தபோது உலகந்தெரிய வெளிப்படுத்திய உணர்ச்சியலைகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒருவருடைய உணர்ச்சியை நாம் பாதித்துவிடக்கூடாது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலகத்தில் இன்று காணப்படும் புளூரலிசம் (Pluralism) இன்னொரு அம்சம். எல்லா மதங்களிலும், சமயக்கோட்பாடுகளிலும் அடிப்படை உண்மைகள் இருக்கின்றன என்பதே புளூரலிசம். கிறிஸ்தவமும் இந்தப் பாதிப்புகளைச் சந்தித்தது. சுவிசேஷ இயக்கம் பழைய நம்பிக்கைகளை இழந்து பின்நவீனத்துவத்துவத்திற்கு இடம் கொடுத்தது. இதன் மூலம் பிறந்தத‍ே மனித உணர்ச்சிகளுக்கு மட்டுமே அதி முக்கியத்துவம் கொடுக்கும் கெரிஸ்மெட்டிக் இயக்கம். அதுமட்டுமல்லாமல் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்டு, பாடப்பட்டு வந்த கீர்த்தனைகள், ஞானப்பாடல்களுக்கு கைகாட்டிவிட்டு திருச்சபைகள் இசைக்கும், உடலசைவுக்கும், காதுக்கும் மட்டுமே தீனிபோடும் நான்கு ஐந்து வரிகளில் அமைந்த கோரஸ்களுக்கும் இடம் கொடுத்தன.

இனி பின்நவீனத்துவத்தின் பிரதானமான நம்பிக்கைகளை ஆராய்வோம்:

1. பின்நவீனத்துவம் தெளிவானதும், ஆணித்தரமானதுமான சத்தியமென்றொன்றில்லை (Absolute truth) என்று வாதாடுகிறது

நவீனத்துவத்திற்கு உருவம் கொடுத்தவர்கள் விஞ்ஞானிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுடய கண்டுபிடிப்புகளை வார்த்தைகளாலும் செயல்களாலும் விளக்கினார்கள். ஆனால், பின்நவீனத்துவப் போக்கிற்கு உருவம் கொடுக்கிறவர்கள் இலக்கிய விமர்சகர்களாகும் (Literary Critics). இந்தப் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களின் எழுத்துக்களில் objective truthக்கு இடம் இருக்கவில்லை. அவை வெறும் எழுத்துக்கள் மட்டுமே. வெறும் அடையாளங்களைக் கொண்ட தெளிவான உண்மைகளை கொண்டிராத இந்த உலகத்தோடு சம்பந்தமில்லாத எழுத்த வடிவங்கள்.

பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் தெளிவான உண்மைகளை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். அத்தகைய உண்மைகளை மனிதர்களை ஆளுவதற்காகப் பயன்படுத்தப்படும் சிந்தனைகளாகக் கருதுகிறார்கள். இந்த சிந்தனை வரையறுக்கப்பட்ட சத்தியத்தை அ‍டிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவத்தைப் பாதிப்பதாக இருக்கிறது. கிறிஸ்தவ சத்தியம் மனிதர்களை சிறைப்படுத்தி அடிமைகளாக்குகிறது என்பது அவர்களுடைய கருத்து.

பின்நவீனத்துவம் எந்த உண்மையையும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பிரிவினரின் தனிப்பட்ட கருத்துக்களாக அணுகுகின்றது. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு வகை உணவு நன்மையானதாகத் தெரியும். இன்னொருவருக்கு வேறொருவகை உணவு நன்மையானதாகத் தெரியலாம். இரண்டு வகை உணவிலும் எந்தத்தீமையும் இல்லை. இரண்டும் நன்மையானதே; இரண்டு பேரின் கருத்துக்களும் உ‍ண்மையே. இந்த வகையிலேயே பின்நவீனத்துவ சிந்தனை அமைகின்றது. நீங்கள் கிறிஸ்தவர்களா இருந்தால், அதேவிதமான சிந்தனைப்போக்குள்ளவர்களோடு நீங்கள் இணைந்திருப்பதால் உங்களுக்கு அது நன்மையானதாகவும், இன்பமளிப்பதாகவும் இருக்கின்றது. அதே எண்ணத்தைக் கொண்டிராத மற்றவர்களுக்கு அது உண்மையில்லை. இத்தகைய சிந்தனைப்போக்கு புளூரலிச சமுதாயத்திற்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஏனெனில் அந்த சமுதாயம் எல்லா சமயத்திலும் உண்மையைக் காண்கிறதாகவும், எல்லா சமயங்களுக்கும் சம இடம் கொடுப்பதாகவும் இருக்கிறது. இந்த வகையான சிந்தனையின்படி எந்தக்குழுவும், சமயப்பிரிவும் தங்களுடைய போதனைகள் மட்டுமே சத்தியமாகக் காணும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது பின்நவீனத்துவ சமுதாய மக்கள் கிறிஸ்தவத்தை மட்டும் வரையறுக்கப்பட்ட சத்தியத்தைக் கொண்ட வாழ்க்கை நெறியாகப் பார்க்கமாட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சிந்தனைப்போக்கு மட்டுமே. கிறிஸ்தவம் மட்டுமே சத்தியம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரையறுக்கப்பட்ட சத்தியம் என்றொன்றில்லை என்று சிந்திக்கும் அவர்களுக்கு கிறிஸ்தவர் சரியானதாகப்படாது. இந்தவகை சிந்தனையை விளக்க நியூசிலாந்தின் கல்விமுறையின் பின்நவீனத்துவப் போக்கை உதாரணத்துக்குக் காட்ட விரும்புகிறேன். இங்கே சிறுவர்களை ஒரு அறையில் விளையாடவிட்டு அவர்கள் விரும்பியதை செய்ய வைத்து, ஒவ்வொருவரும் கண்டுபிடித்த, அல்லது செய்து முடித்தவற்றை அடிப்படை சத்தியமாக அறிவிக்கும் கல்வி முறை வழக்கத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சிறுவனுடைய கண்டுபிடிப்பும் அந்தந்த சிறுவர்களைப் பொறுத்தவரையிலும் சத்தியம். ஆகவே, கல்லூரிகளில் ஆசிரியர்களை வைத்து உறுதியாக எதையும் போதிக்கும் வழக்கம் இல்லாமல் போகிறது. இன்னுமொரு உதாரணமாக தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை (Homosexual, lesbian) எடுத்துக் கொள்வோம். இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அந்த முறையிலான வாழ்க்கை தனிப்பட்டவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அதைத் தீமையானது என்று இன்னொருவர் கூறுவது தவறாகக் கருதப்படுகிறது. ஒருவருக்கு அது பிடித்தமில்லாததாக இருந்தால் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகக் கருதப்படுகின்றது. இது பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கு.

இச்சிந்தனை சமுதாயத்தை மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களையும், சபைகளையும் பாதிக்கிறது. இன்று சபைகளில் சகலவிதமான கருத்துக்களும் சத்தியமாகக் கருதப்பட்ட ஒருவரும் எதையும் வரையறுக்கப்பட்ட உண்மையாக அறிவிக்க முடியாமல் இருப்பதை நாம் பார்க்கவில்லையா? வேதப்பாடம் நடக்கும் இடங்களில் அதை நடத்துகிறவர்கள் இல்லாமல், எல்லோரும் தங்களுக்கு விருப்பமானதை சொல்ல, சொல்லப்பட்ட கருத்துக்களில் எல்லாம் ஒருவகை உண்மை இருப்பதாக சொல்லப்பட்டுவருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இன்று அநேக சபைகள் நடத்துகின்ற வீட்டு வேதப்பாட வகுப்புகளில் (Home Bible Studies) இதைப்பார்க்கலாம். தகுதியுள்ள ஒருவர் வேதத்தைப் படித்துப் பாடத்தை நடத்தாமல் அவர் அதில் கலந்து கொள்கிறவர்களைப் பேசவைத்து அவர்களுடைய கருத்துக்களுக்கு (தவறானதாக இருந்தாலும்) மதிப்புக்கொடுத்து ஏற்றக்கொள்கிறவராக இருக்கிறார். இது பின்நவீனத்துவ வேத பாடத்திற்கு உதாரணம்.

அத்தோடு அநகே இறையியல் கல்லூரிகளில் (மேலைத்தேசங்களிலும்) வரையறுக்கப்பட்ட (முறைப்படுத்தப்பட்ட) இறையியலுக்கு (Systematic Theology) மதிப்புக் கொடுப்பதில்லை. மாணவர்கள் Biblical Studies போன்ற பாடங்களுக்கே முக்கியத்துவம் தருமாறு வழிநடத்தப்படுகிறார்கள். இதனால் அநேகர் முறைப்படுத்தப்பட்ட இறையியல் அறிவு இல்லாமலேயே பிரசங்கிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய பிரசங்களில் வேத போதனைகள் இருந்தாலும் அவை உறுதியானதாகவும், இறையியல்பூர்வமானதாகவும் இருப்பதில்லை. உதாரணத்திற்கு அப்படிப்பட்ட ஒரு பிரசங்கியின் பிரசங்கத்தில் இருந்து அவர் எத்தகைய இறையியல் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. இதைத் தமிழர்கள் மத்தியில் இருக்கும் பிரசங்கிகளிடம் அதிகம் பார்க்கலாம். பின்நவீனத்துவம், தெளிவான, உறுதியான உண்மை என்றொன்றில்லை என்று நிராகரிக்குமானால் அது நிச்சயம் இன்று அநேக பிரசங்கிகள் மத்தியிலும், இறையியல் கல்லூரிகளிலும் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது.

2. பின்நவீனத்துவ சமுதாயம் ஒழுக்கத்தில் உறுதியற்றும் (Unstable), பல்வகைப் பிரிவுகளைக் கொண்டும் (Diversity), சிறுசிறு கூறுகளாகவும் (Fragmentation) காணப்படுகின்றது

பின்நவீனத்துவம் தெளிவான உண்மைகள் எதையும் நம்பாததால் பிடிப்போடு எதையும் பின்பற்றி அதனால் வாழ முடியாது. இதனால் அந்த சமதாயம் உறுதியுள்ளதாக இருக்காது. இதுதான் ஒழுக்கம் என்று விளக்கும் எந்தப் போதனையும் பின்நவீனத்துவல் காணப்படவில்லை. ஒழுக்கத்தை சமுதாய மக்களின் தனிப்பட்ட கருத்து என்று அது விளக்குவதால் பத்துக் கட்டளைகளுக்கு பின்நவீனத்துவத்தில் இடமில்லை. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் சமுதாயத்தின் கருத்துக்களும் அடிக்கடி மாறிக்கொண்டும் போகலாம். உதாரணமாக தன்னினச் சேர்க்கை பற்றிய இன்றைய சமுதாயத்தின் கருத்துக்கள், மற்றும் பில் கிளின்டனின் ஒழுக்கமற்ற செய்கை என்பவற்றை உதாரணமாகக் கூறலாம். பில் கிளின்டன், மொனீகா லுவின்ஸ்கியுடன் தனக்கு இருந்த தொடர்பை முழு உலகத்துக்கும் முன்பாக மறுதளித்தபோது ‍அமெரிக்க மக்களால் உடனடியாக உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. அதே கிளின்டன் பின்பு அதை ஒத்துக்கொண்டபோதும் அமெரிக்கா ஒன்றம் செய்யவில்லை. வாட்டர்கேட் சம்பவத்துக்காக நிக்சனை ஓரங்கட்டிய அதே அமெரிக்கா கிளின்டனை தப்பவிட்டுவிட்டது. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவை உறுதியற்ற ஒரு நிலைக்கு கொண்டுபோகும் முயற்சி எடுத்ததில் பில் கிளின்டனுக்கு முக்கிய இடமுண்டு. இது அமெரிக்க சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இதை இன்று சின்னத்திறைகளில் வரும் அமெரிக்க படங்களிலும் பார்க்கலாம். அநேக வருடங்களுக்கு ஓடிய டல்லஸ் (Dallas), ஓடிக்கொண்டிருக்கும் த போல்ட் அன்ட் பியூட்டிபுல் (The Bold and Beautiful), டேய்ஸ் ஒப் அவர் லைவ்ஸ் (Days of our lives) போன்ற சின்னத்திறைப் படங்களில் திருமணமானவர்கள் பல முறை விவாகரத்து செய்து வேறொருவரை திருமணம் செய்து கொள்வதம், மனைவியுடன் இருக்கும்போ‍தே வேறு பெண்களுடன் எந்தவித மனச்சாட்சியும் இன்றி தொடர்பு வைத்திருப்பதும் ஒவ்வொரு நாள் காட்சியிலும் காட்டப்படம் சம்பவங்களாக இருக்கின்றன. வெளிப்படையாக, எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் பாலுறவுக் காட்சிகளைப் பகல் நேரங்களிலும்கூட சின்னத்திரைகளில் காட்டுவது எந்தளவுக்கு பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கிற்கு சமுதாயம் இடம் கொடுத்திருக்கிறது என்பதை விளக்குகிறது. இது சமுதாயத்தை ஒழுக்கமற்றதாகவும், உறுதியற்றதாகவும் வைத்திருக்கிறது.

சாமவேல் வால்டிரன் (Samuel Waldron) என்ற அமெரிக்க போதகர் இந்தப் பின்நவீனத்துவப்போக்கை “நவீன லிபரலிசம்” என்று தன்னுடைய நூலில் வர்ணிக்கிறார் (A Warning against Modern Liberalism). அமெரிக்காவை இன்று தீவிர தனிநபர் தனித்துவத்தின் மூலமும் (Radical Individualism), எந்த வேறுபாடுகளுக்கும் இடங்கொடுக்காத தீவிர சமத்துவப்பார்வையின் மூலமும் (Radical Egalitarianism) இந்த நவீன லிபரலிசம் தாக்கிவருவதாக அந்நூலில் குறிப்பிடுகிறார். டெலிவிஷன், விடியோ, கணினி, இன்டர்நெட் அனைத்தையும் இந்த நவீன லிபரலிசம் கட்டுப்படுத்தி, கர்த்தரின் அதிகாரத்திற்கு எதிராக சமுதாயத்தைத் திருப்பக் கங்கணம் கட்டியிருப்பதாக வால்டிரன் கூறுகிறார். கிறிஸ்தவத்திற்கு எதிராக இன்று கிளம்பி இருக்கும் முதலாவது எதிரி நவீன லிபரலிசம் (அதாவது, பின் நவீனத்துவம்) என்பது வால்டிரனின் கணிப்பு.

இந்த உலகமும் இன்று அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது. அதி தீவிர வேகத்தில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த ஒரு புதிய பொருளையும் ஆறுமாதங்களில் மியூசியம் பீஸ் ஆக்கிவிடுகிறது. இன்று எந்த வேலைகளிலும் இருப்பவர்கள் தாங்கள் தொடர்ந்து வேலையில் இருப்பதற்காகவும், துரித வேகத்தில் மாறிவளர்ந்துவரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும் ‍அடிக்கடி தங்களுடைய அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (Upgrade). அவர்களால் தொடர்ந்து அதே நிலையில் இருக்க முடியவில்லை. இத்தகைய அதிவேக மாற்றம் இன்றைய சமுதாயத்தின் ஒரு அங்கம்.

இன்று வேறுபட்ட குழுக்களைக் கொண்ட சமுதாய அமைப்பை நியாயப்படுத்தி அனைத்துக் கலாச்சாரங்களையும், வேறுபாடுகளையும் பிரதிபலிப்பதாக சமதாயம் இருக்க வேண்டும் என்ற கோஷத்தை மேலைத் தேச நாடுகளில் கேட்க முடிகின்றது. கட்டுப்பாட்‍டோடிருந்த ஒற்றுமை என்ற நிலை மாறி பிரிவுகளையும், பல இன, மத, கலாச்சார எண்ணங்களின் பிரதிபலிப்பையும் நாடி நிற்கிறது உலகம். பிரித்தானியாவில் வேல்ஸீம், ஸ்கொட்லாந்தும் இத்தகைய தனித்துவத்தை நாடுகிறார்கள். கனடாவில் குபெக்கும், ஒன்டாரியோவும் இத்தகைய தனித்துவத்தை ஏற்கனவே சமுதாயத்தில் காண்கின்றன. நியூசிலாந்தில் இன்று முக்கியமாக ஆக்லாந்தில் பல இன மக்கள் வாழ்கிறதோடு அரசாங்கம் அந்த இனங்களினதும், கலாச்சாரங்களினதும் பிரதிபலிப்புகள் சமுதாயத்தில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரேவிதமாக இருக்க முயலக்கூடாது என்பதிலும் அதிக நாட்டம் காட்டுகின்றது. ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒரே மொழி பேச வேண்டும் என்ற கொள்கை பிற்பட்டதாக பலருக்குத் தெரிகிறது. பல்வ‍கைப்பிரிவுகளையும், சிறுசிறு கூறுகளானதுமான சமுதாயம் இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக நாட்டம் காட்டப்படுகிறது. இது பின்நவீனத்துவத்தின் பிரதிபலிப்பு. இது நாடுகளில் பிரச்சனையை ஏற்படுத்தாமலில்லை. ஆனாலும், இந்தச் சிந்தனைக் கோட்பாட்டையே பின்நவீனத்துவம் வளர்க்கிறது.

இது கிறிஸ்தவத்தைப் பாதிக்காமல் இல்லை. மேலை நாடுகளில் திருச்சபைகளில் பல இனங்களுக்கான ஆராதனைகள் நடைபெற்று வருவது இன்று சகஜம். அமெரிக்காவில், ஹிஸ்பானிக் (Hispanic) மக்களுக்கான சபைகளும், டொமினிக்கன் ரிபக்லிக்கில் (Dominican Republic) இருந்து வந்தவர்களுக்கான சபைகளும், சீனர்களுக்கான சபைகளும் அதிகம். இதை பின்நவீனத்துவம் வரவேற்கிறது. ஒரு சபையில் இருக்கும் பல இன மக்களின் பல மொழி ஆராதனைகள் தொடர்வதோடு அவர்கள் தனித்தனி இனங்களாக தொடர்ந்தம் வளர்ந்து வருவது வற்புறுத்தப்படுகிறது. அத்தகைய அமைப்பில் திருச்சபை இன்று அமைதி காண்கிறத. இது வேதபோதனைக்கு முரணானது. வெளிநாட்டில் இவர்கள் எல்லோரும் வேலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் ஆங்கில மொழியைப் பேசினாலும் ஆராதனையில் மட்டும் தங்கள் சொந்த மொழியையும், கலாச்சார பிரதிபலிப்புகளையும் நாடி நிற்கிறார்கள். வீட்டில்கூட இவர்கள் பிள்ளைகளோடு ஆங்கிலத்தில் பேச வேண்டிய நிலைமையை இவர்களால் தவிர்த்துவிட முடியாமல் இருக்கிறது. இதற்கு வேதத்தில் எங்கே இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. (எபேசியர் 2).

பல மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் சமதாய மக்கள் தங்கள் மொழிகளில் ஆராதனை நடத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றே. ஆனால், ஒரு மொழி பேசும் நாட்டில் பல மொழிகளை வற்புறுத்துவதும் அம்மொழியில் ஆராதனை நடத்துவதும், கலாச்சாரப் பிரிவுகளை வற்புறுத்துவதும் கிறிஸ்தவர்களுக்கிடையில் ஒற்றுமையை ஒருபோதும் ஏற்படுத்தாது. பின்நவீனத்துவப்போக்கு இந்த வகையில் இன்று சபையைத் தாக்குகிறது.

பின்நவீனத்துவம் ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள்

1. தெளிவான சத்தியத்தைப் பொறுத்தவரையில் பின்நவீனத்துவம் உண்மை என்றொன்றில்லை என்று வாதிட்டபோதும் தனது கொள்கைகளை மட்டும் சத்தியமாகக் கருதி சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கொள்கையை அது பெரிதுபடுத்தி உயர்த்தும்போது அதை மற்றவர்கள் ஏற்றுக்‍கொள்ள வேண்டும் என்று அது வாதிடுகிறது. அவ்வாறு வாதிடும்போது அதுவே பின்நவீனத்துவத்தின் கோம்பாடாக அமைந்தவிடுகிறது. தெளிவான கோட்பாடென்றொன்றில்லை என்று கூறும் பின்நவீனத்துவத்தால் அப்படியொன்றிருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. ஆகவே, தெளிவான உண்மைகள் இல்லாமல் சமுதாயம் இருக்க முடியாது; மக்கள் வாழ முடியாது. அத்தகைய சத்தியங்களை நிராகரிக்கும்போது சமதாயம் தன்னையே அழித்துக்கொள்ளும்.

2. உறுதியற்றதும், சிறுசிறு கூறுகளாகவும் இருக்கும் சமுதாயத்தைப் பொறுத்தவரையில், அடிக்கடி ஏற்பட்டு வரும்மாற்றங்களால் அதன் உறுதி குழைந்துவிடும். இது தீவிரவாதத்திற்கு வழி வகுக்கிறது. சிறுசிறு குழுக்களாக சமதாயத்தைப் பிரிப்பதில் ஆர்வம் காட்டி, பல்லின, மத, கலாச்சார பிரதிபலிப்புகளுக்கு உற்சாகமூட்டினால் அப்பிரிவுகள் தங்களுக்குள் போராடுவதைத் தடுக்க முடியாது. பின்நவீனத்துவம் பிரிவினையை வலியுத்துகிறது. இது சமுதாயத்தை உடைத்துவிடும். பின்நவீனத்துவ பிரோகிராமில் பிரிவினை முக்கிய இடம் வகிக்கிறது. இது வேதத்தில் பார்க்க முடியாததொன்றாகும்.

பின்நவீனத்துவத்தை எதிர்கொள்ள நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

பின்நவீனத்துவத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக ஒரு முக்கியமான உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நவீனத்துவம், பின்நவீனத்துவம் எதுவாக இருந்தாலும், அல்லது இவற்றிற்குப்பின் வேறு மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்பட்டாலும் இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதனைப் பி‍டித்திருக்கும் பாவம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தின் காரணமாக மனித சிந்தனைகள் எப்படியெல்லாம் போகும் என்பதற்கு பின்நவீனத்துவம் உதாரணமாக இருக்கின்றது. பின்நவீனத்துவத்தைப் பார்த்து நாம் கலங்கிப்போக வேண்டிய அவசியமில்லை. பின்நவீனத்துவத்தைப் பெரிதுபடுத்தி இதை சமாளிக்க முடியாது என்று பிற்போக்குத்தனமாக சிந்திக்கத் தேவையில்லை. சமுதாயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கின்றன. இருந்தபோதும் நமது சுவிசேஷம் அத்தனை மாற்றங்களையும் எதிர்கொண்டு வெற்றி அடைந்திருக்கின்றது.

பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதால் ஓரளவுக்கு சமுதாயத்தின் இன்றைய போக்கு என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சமூகவியல் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் இந்தமுறையில் நமக்கு உதவுகின்றன. ஆனால், அவர்ளுடைய கருத்தக்கள் வேதமாகிவிட முடியாது. அவர்கள் தரும் ஆலோசனைகள் மனித வர்க்கத்துக்கு வாழ்வளித்துவிடாது.

பின்நவீனத்துவத்தை எதிர்கொள்ள நாம் சுவிசேஷத்தை நம்ப வேண்டும். அதை எதிர்கொள்ள இதுவரை செய்யாத ஒன்றையும் நாம் பெரிதாக செய்துவிட வேண்டியதில்லை. பின்நவீனத்துவத்தை எதிர்கொள்வது எப்படி? என்று புத்தகம் எழுதி, நமக்கு ஆ‍லோசரன சொல்லி அநேகர் பணம் சம்பாதித்து விடுவார்கள். வேதத்தில் இல்லாத எதையும் எவரும் நமக்கு ஆலோசனையாகத் தந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. சமுதாயப் பிரச்சனைகளைச் சந்திக்கவும், தீர்க்கவும் வேதமறியாத புதுமையான ஆலோசனைகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஆகவே, நம் கையில் கர்த்தருடைய தெளிவான வேதம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நாம் பின்நவீனத்துவத்தை எப்படி எதிர்கொள்வது? என்று பார்ப்போம்.

1. கர்த்தருடைய இறையாண்மையில் நம்பிக்கைவைத்து நாம் அதை வலியுறுத்திப் பிரசங்கிக்க வேண்டும்.

பின்நவீனத்துவம் கர்த்தரையும் அவருடைய இறையாண்மையையும் எதிர்க்கிறது; நிராகரிக்கிறது. அதை வெற்றிகொள்ள நாம் கர்த்தரின் இறையாண்மையில் அதிக நம்பிக்கை வைத்து பிரசங்கிக்க வேண்டும். கர்த்தருடைய ஆளுகையைப் பற்றிய அறிவை ஆத்துமாக்கள் பெற்றக்கொள்ள நமது பிரசங்கங்களிலும் போதனைகளிலும் கர்த்தரின் இறையாண்மை பற்றிய போதனை முக்கிய இடம் பெற வேண்டும். அனைத்தையும் ஒழுங்கோடும், கட்டுப்பாட்டோடும் உருவாக்கி நடத்திவருகின்றதோடு சமுதாய மக்களின் வாழ்வுக்காகவும், வளத்துக்காகவும் பத்துக் கட்டளைகளைத் தந்திருக்கின்ற கர்த்தரின் வழிமுறைகளை ஆணித்தரமாக பிரசங்கிக்க வேண்டும்.

2. வேதத்தின் தெளிவான அடிப்படைப் போதனைகளை நாம் தொடர்ந்து வலியுறுத்திப் போதிக்க வேண்டும்.

இன்று முறைப்படுத்தப்பட்ட இறையியலே தெரியாது வளர்ந்துவரும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. தமிழ் கிறிஸ்தவர்களிடம் இருந்து எனக்கு வரும் அநேக கடிதங்களில் வேதத்தின் அ‍டிப்படை உண்மைகள் பற்றி கேள்விகள் கேட்டு வரும் கடிதங்கள் அதிகமானவை. திரித்துவத்தைப் பற்றியும், வேதத்தின் அதிகாரத்தைப் பற்றியும் சரியாகத்தெரிந்து வைத்திராத ‍அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி வல்லமையுள்ள கிறிஸ்தவர்களாக, மெய்க்கிறிஸ்தவர்களாக வாழ முடியும் என்பது எனக்குத் தெரியவில்‍லை. அன்றாடம் ஜெபம் செய்வதற்கும், வாராவாரம் சபையில் ஆராதனை செய்வதற்கும் அத்தியாவசியமாக தேவைப்படும் வேத அறிவும், திரித்துவத் தேவனைப்பற்றிய ஞானமும், வேதத்தின் அதிகாரத்தைக்குறித்த நம்பிக்கையும் இல்லாமல் அநேக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படித் தொடர்ந்து வாழ்கின்ற கிறிஸ்தவன் கர்த்தரை அவருடைய சித்தத்திற்கேற்ப ஆராதிக்க முடியாது. இது பலருக்குத் தெரிவதில்லை.

கெரிஸ்மெட்டிக் இயக்கமும், நவீன சுவிசேஷ இயக்கமும் முறைப்படுத்தப்பட்ட இறையியலுக்கு இடமளிப்பதில்லை. மனிதனின் உணர்ச்சிக்கு மட்டுமே அவை உணவூட்டிக் கொண்டிருக்கின்றன. சத்தியத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கிறிஸ்தவத்தின் பெயரில் ஒரு கூட்டத்தை இந்த இயக்கங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அது நிலைக்காது. அது கர்த்தருடைய பரீட்சையில் வெற்றி அடைய முடியாது. ஆகவே, நமது சபைகளில் வேதப்பிரசங்கங்கள் முறைப்படுத்தப்பட்ட இறையியலுக்கு (Systematic theology) மதிப்புக் கொடுப்பதாக இருக்க வேண்டும். நமது சபை மக்களுக்கு நாம் அடிப்படை வேத போதனைகளை அளிக்க வேண்டும். சபை போதகர்களுக்கு மட்டும் அதில் அறிவிருந்து பலனில்லை; சபை மக்களுக்கு அதில் ஞானம் இருக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் நூல்களை அவர்கள் வாசிக்கும்படிச் செய்ய வேண்டும். இன்று நம்மத்தியில், நம் கண்முன்னால் ஒரு சந்ததியே வேதம் தெரியாது கண்போன போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட 1689 விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் போதனையையும் சபைகள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சபை மக்கள் அனைவருக்கும் போதிப்பது அவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்க உதவி செய்யும். இளைஞர்களும், சிறு பிள்ளைகளும் அவற்றைப் படிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படை சத்தியங்களை அவர்கள் அறிந்து கொண்டு வளரும் போது பின்நவீனத்துவத்தை அவர்கள் சமுதாயத்தில் எதிர்த்து நிற்க முடியும். ஒழுக்கமென்றொன்றில்லை என்று சமுதாய மனிதன் பேசி நடந்து கொள்ளும் போது அது தவறு என்று உணர்ந்து அறிவோடு கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள முடியும். வேத ஞானமில்லாத அநகே சபைகள் இன்று சுலபமாக பின்நவீனத்துவப்போக்கிற்கு இரையாகி சபை மக்கள் கேட்பதைக் கொடுத்து வருகின்றன. ஆத்துமாக்களுக்கு வேத அறிவு இல்லாததாலேயே உணர்ச்சிக்கு உணவூட்டும் பெந்தகொஸ்தே போதனைகளை அவர்கள் நாடி அலைகிறார்கள்.

3. கிறிஸ்துவின் சரீரத்தில் காணப்படும் ஒற்றுமையில் உள்ள வேற்றுமையையும், வேற்றுமையின் மத்தியில் உள்ள ஒற்றுமையையும் கிறிஸ்தவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பிரிவினையில் இன்பம் காண்கிறது பின்நவீனத்துவம். அதைத் தொலைக்க வேண்டுமானால் திருச்சபைகளில் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமையும், ஐக்கியமும் இருக்க வேண்டும். நாம் கிறிஸ்தவர்கள் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எண்ணங்கள் நமக்கு ஏற்படக்கூடாது, சாதி, குலம், கோத்திரம், நிறம், பணக்காரன், ஏழை, மொழி வேறுபாடுகளுக்கு மெய்க்கிறிஸ்தவர்களிடம் இடம் இருக்காது. சபையின் நன்மைக்காக நமக்குக் கர்த்தர் கொடுக்கும் ஈவுகளில்தான் வேறுபாடு காணப்படுமே தவிர வேறு வித்தியாசங்களுக்கு நம்மத்தியில் இடம் இருக்கக்கூடாது. இன்று தமிழ் கிறிஸ்தவர்களிடம் கடவுளை அறியாதவர்களிடம் பார்க்கக்கூடிய பிரிவினைகள் காணப்படுவது வருத்தத்துக்குரியது. எந்தப் பேதமும் பார்க்காமல் நம்மீது கிறிஸ்து காட்டிய அன்பை நாம் நமது சகோதரர்களிடமும் காட்ட வேண்டும். பின்நவீனத்துவப் பிரிவினைப் பேதங்களுக்கு நம்மத்தியில் இடமிருக்கக் கூடாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s