திருச்சபைகளில் இன்று பிரசங்கப் பஞ்சம் நிலவுகிறது என்பதை சிந்திக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் உணர்வார்கள். நம்மை இப்பஞ்சம் வாட்டிக் கொண்டிருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே இறையியல் பஞ்சம் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவி வந்துள்ளது. சத்தான இறைபோதனை எதுவும் இல்லாமல், சொந்த அனுபவங்களை மட்டும் அள்ளித்தெளிக்கும் சுவிசேஷப்பிரங்கங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும் பேச்சுக்களையே ஆத்துமாக்கள் கேட்டு வாழ வேண்டிய நிலை இருந்துவந்துள்ளது. வேத போதனைகளைப் பெற்று வளர்ந்திராத நம்மவர்கள் உணர்ச்சியூட்டம் இந்தப் பேச்சுகளையே பிரசங்கமாகக் கேட்டு வளர்ந்திருக்கிறார்கள். சொந்த ஊழியங்கள் என்ற பெயரில் பெருமளவில் தனி நபர்களின் சுவிசேஷ வியாபார ஊழியங்கள் பெருகியபின் கொஞ்சநஞ்சமிருந்த பிரசங்கமும் இல்லாமல் போய் இன்று பிரசங்கப் பஞ்சத்தால் தமிழ் சமுதாயம் வாடிக் கொண்டிருக்கின்றது. இதை அநேகர் உணருகிறதாக இல்லை.
நமது மக்களின் கலாச்சார சமுதாயப்பின்னணி இப்பிரசங்கப் பஞ்சம் நீங்காமல் இருப்பதற்கு பெருங்காரணமாக இருக்கின்றன. தமிழை மூன்று பிரிவாக இயல், இசை, நாடகம் என்று பிரிப்பார்கள். அதில் இசையும், நாடகமும் நமது சமுதாயத்தில் அதிகம் வர்ந்து இயற்தமிழுக்கு இடமே இல்லாமல் போயிருக்கிறது. இதை இன்று நம்மக்களைப் பிடித்திருக்கும் சினிதா மோகத்திலிருந்தும், மெல்லிசையின் மேலிருக்கும் நாட்டத்திலிருந்தும் புரிந்து கொள்ளலாம். திருமணவீடு, மரண ஊர்வலம், பிறந்தநாள் நிகழ்ச்சி, சுவிசேஷக்கூட்டம் என்று எங்கு பார்த்தாலும் இசைக்கும், காட்சிக்கும்தான் முதலிடம். இதற்கும் கிறிஸ்தவ பிரசங்கப் பஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம். தமிழ் கிறிஸ்தவர்கள் இன்று இசையையும், கூத்தையும், நாடகத்தையும், வில்லுப்பாட்டையும் மட்டுமே ஆவலோடு நாடிப்போவதற்கு இப்பின்னணியே காரணம். இசையும், கூத்தும், நாடகமும் மனிதனை சிந்திக்க வைக்காது. அவனது உணர்ச்சிகளையே அதிகளவில் தூண்டும். உணர்ச்சிப்பிளம்பான நம்மக்கள் இவற்றை அதிகம் நாடிப்போவதில் ஆச்சரியமில்லை. நமது மக்களுடைய கலாச்சார சமுதாயப் பின்னணி அப்படி. அதனால்தான் உணர்ச்சிகளுக்கு மட்டும் தீனிபோடும் இசைக்கு முதலிடம் தரும் கூட்டங்களுக்கும், சுகமளிக்கும் கூத்துக்கள் நடக்கும் கூட்டங்களுக்கும் நம் மக்கள் பெருந்தொகையில் போய்க்கொண்டிருக்கிறார்கள். இக்கூட்டங்களில், சிந்திக்க வைக்கக்கூடிய சத்தான வேதபிரசங்கங்களுக்கு எப்போதுமே இடமிருக்காது.
இந்நிலைமை மாற வேண்டும். மேலைத்தேய சமுதாய மக்களைப்போல நாம் முதலில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு சிந்திக்கப் பழக வேண்டும். உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுப்பதை அடியோடு நிறுத்த வேண்டும். வாசிக்காதவன் சிந்திக்க மாட்டான். சிந்திக்க முடியாதவர்களுக்கு பிரசங்கம் தேவையாயிருக்காது. வேதத்தையும் நல்ல நூல்களையும் வாசித்து சிந்தித்து ஆராய்ந்து பார்க்கின்ற ஆத்துமாக்கள் நம்மத்தியில் பெருகும்வரை பிரசங்கப் பஞ்சம் இந்த சமுதாயத்தில் தொடர்ந்து இருக்கத்தான் போகின்றது. நம்மக்கள் மாறுவார்களா? கர்த்தர்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.