பிரசங்கம் தயாரித்தல்-1

தேவ செய்தியை ஆத்துமாக்கள் அறிந்து கொள்வதற்கு கர்த்தரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதும், பரிசுத்த ஆவியால் பயன்படுத்தப்படுகிறதுமான ச‍ெய்திப் பரிமாறல் முறை பிரசங்கம் மட்டுமே என்று பார்த்தோம். அந்தப் பிரசங்கம் அதிகாரமுள்ளதாக, உலகப்பிரகாரமானதாக இல்லாமல், தேவபயத்துடன் செய்யப்பட வேண்டும் என்று கடந்த இதழில் பார்த்தோம். இனி இந்தப் பிரசங்கத்தை எப்படித் தயாரித்தளிப்பது என்று ஆராய வேண்டியது அவசியம். பிரசங்கம் உலகத்தில் நாம் பார்க்கிற ஏனைய செய்திப் பரவல் முறைகளையெல்லாம் விட சிறப்பானதும், கர்த்தரால் பயன்படுத்தப்படுகிறதம், ஆத்துமாக்களின் ஆத்மீகத் தேவைகளை நிறைவேற்ற அவசியமானதுமாக இருப்பதால் அதைத் தயாரிக்கும்போது வேதம் எதிர்பார்க்கின்ற சில காரியங்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அவற்றை இனிப்பார்ப்போம்.

பிரசங்கப் பொருளைத் தெரிவு செய்தல்

எந்தப் பிரசங்கியும் முதலில் தான் எதைப் பிரசங்கிக்கப் போகிறேன், அதை எந்த வேதப்பகுதியில் இருந்து பிரசங்கிக்கப் போகிறேன் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டம். எதையும் ஏற்கனவே தயார் செய்யாது பிரசங்க மேடைக்குப் போனபின் அங்கே ஆவியானவர் திடீரென பிரசங்கப் பொருளைத் தருவார் என்ற பொய்யை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற அநேக பிரசங்கிகளை நாமறிவோம். இவர்கள் தம்மையும் ஏமாற்றிக் கொண்டு தங்களுடைய அறிவீனத்தால் அநேக ஆத்துமாக்களின் ஆத்மீக வாழ்க்கையையும் பாதிக்கிறார்கள். ஆனால், மெய்யான பிரசங்கி பிரசங்கங்களை ஏற்கனவே தயார் செய்கிறவனாக இருப்பதால் அவன் முதலில் பிரசங்கத்திற்கான பொருளைத் தயார் செய்வதில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவான். அதைச் செய்வதற்கு பிரசங்கி முதலில் இரண்டு முக்கியமான காரியங்களில் ஈடுபடுதல் அவசியம்.

ஜெபம்

பிரசங்கம் தயாரிப்பதற்கு எந்தப் பிரசங்கியும் அதிகமாக ஜெபத்தில் தரித்திருத்தல் அவசியம். சிலர், ஜெபம் செய்வதோடு நின்று விடுவார்கள். பிரசங்கத்தைக் கவனத்தோடு தயாரிப்பதில்லை. அவர்களுடைய பிரசங்கம் ஆவிக்குரியதாக இருக்காது. பிரசங்கி முதலில் பிரசங்கப் பொருளுக்காக தன்னுடைய ஜெபத்தில் கர்த்தரை நாட வேண்டும். பிரசங்கங்களை ஆசீர்வதிக்கும் கர்த்தரே நாம் பிரசங்கிக்க வேண்டிய பிரசங்கத்திற்கான பொருளையும் காட்டித் தருகிறவராக இருக்கிறார். இதைக் கர்த்தர் எப்படிச் செய்கிறார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். நாம் அன்றாடம் வேதத்தைப் படிக்கும்போது ஜெபத்தோடு சிந்தித்துப் படிக்க வேண்டும். அப்படிக் கருத்தோடு படிக்கும்போது அந்தப் பகுதிகளில் எந்த நூலில் இருந்து, எந்தப் பகுதியில் இருந்து பிரசங்கிக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் ஜெபத்தோடு சிந்திக்க வேண்டும். அப்படி ஜெபத்தோடு சிந்திக்கின்றபோது கர்த்தர் நாம் பிரசங்கிக்க வேண்டிய பகுதியையும், பொருளையும் குறித்து நம்மை வழிநடத்துவார். இது மெஜிக் காட்சி போல திடீரென்று நடக்கின்ற ஒரு காரியமல்ல. நாம் நேரத்தை செலவிட்டு அன்றாடம் தொடர்ந்து ஜெபத்தோடு வேதத்தைப் படிக்கின்றபோது அதன் மூலமாக கர்த்தர் நமக்குத் தருகின்ற ஞானம். ஜெபித்துப் படிக்காத பிரசங்கியை கர்த்தர் வழி நடத்த மாட்டார்.

ஆத்துமாக்களின் தேவை

பிரசங்கப் பொருளைத் தெரிந்து கொள்வதில் பிரசங்கிகள் அதிக கவனம் செலுத்துவது அவசியம். முக்கியமாக சபைகளில் போதர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து தம் மக்களுக்கு ஆத்மீக உணவளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருப்பதால், ஆத்துமாக்களின் தேவைக்கேற்ப உணவளிக்க வேண்டியது அவசியம். பலவீனமானவர்களுக்கும், பலமுள்ளவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சிறுபிள்ளைகளுக்கும் அவரவர் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவிதத்தில் முழு வேதத்தில் இருந்தும் தகுந்த போதனைகளை அளிப்பது அவசியம். அத்தோடு ஒரேவிதமான உணவை எப்போதும் கொடுக்க முடியாது. அதேபோல ஒரே பொருளை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பிரசங்கிக்க முடியாது. கேட்பவர்களுக்கு அப்படிப்பட்ட பிரசங்கம் சலித்துப் போகும். வேதத்தின் பலபகுதிகளில் இருந்தும் சகல போதனைகளையும் ஆத்துமாக்களின் வளர்ச்சிக்குத் தேவையான விதத்தில் பிரசங்கிக்க வேண்டும். சுவிசேஷம், திரித்துவம், இயேசு கிறிஸ்து, கிருபையின் போதனைகள், வேதத்தின் தன்மைகள், கர்த்தரின் குணாதிசயங்கள், இரட்சிப்பின் நிச்சயம், மரணம், பரலோகம், நரகம், கிறிஸ்துவின் வருகை என்று வேதம் போதிக்கும் பல்வேறு சத்தியங்களையும் முறையாக முறைப்படுத்தி பிரசங்கிக்க வேண்டியது பிரசங்கியினுடைய கடமை. அத்தோடு ஒவ்வொரு வேத நூலையும் முறையாக வியாக்கியானம் செய்ய வேண்டியதும் பிரசங்கியின் பொறுப்பு. தங்களுடைய சபை மக்களை நன்றாக அறிந்து வைத்திருக்கும் போதகர்கள் பிரசங்கங்களைத் தயாரிக்கும்போது அவர்களை நினைவில் கொண்டே எப்போதும் பிரசங்கங்களைத் தயார் செய்வார்கள்.

பிரசங்கப்பகுதியை ஆராய்தல்

பிரசங்கத்திற்கான வேதப்பகுதியையும், பொருளையும் கர்த்தரின் வழிநடத்தல் மூலமாக தெரிந்து கொண்டபின் பிரசங்கி பிரசங்கத்தைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாளும் பிரசங்கி தகுந்த நேரத்தை ஒதுக்குவது அவசியம். எவருடைய தலையீடும், இடையூறும் இல்லாத நேரத்தில் சில மணிநேரங்களை இதற்காக ஒதுக்கி அமைதியான ஓர் இடத்தில் இருந்து பிரசங்கத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும். பிரசங்கத் தயாரிப்பில் ஈடுபடுகிறபோது எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகளை இனிப் பார்ப்போம்.

பிரசங்கம் தயாரிக்கும்போது எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் (Initial discipline)

அ. அப்பகுதி எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது (Context)

பிரசங்கி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது சில ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். முதலில் பிரசங்கம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதி எத்தகைய சந்தர்ப்பத்தில் அமைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, அதைப் பலமுறைப் படித்து அந்தப் பகுதி எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று பார்ப்பது அவசியம். எப்போதும் அரைகுறையாக தொடர்பில்லாத ஒரு பகுதியை பிரசங்கிப்பதற்கு தெரிந்து கொள்ளக்கூடாது. பிரசங்கிக்கத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கும் வேதப்பகுதிக்கு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வேத வசனமும் அல்லது வசனங்களும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பகுதியோடு தொடர்புடையதாகவே காணப்படும். அந்த வசனமோ, வசனங்களோ காணப்படும் வேதப்பகுதி எது என்பதைக் கண்டுபி‍டிப்பதுதான் பிரசங்கியின் ஆரம்ப வேலையாக இருக்க வேண்டும்.

முக்கியமாக, ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரசங்கிப்பது அவ்வளவு நல்லதல்ல. இன்று அநேகத் தமிழ் பிரசங்கிகள் மத்தியில் இந்தப் பழக்கத்தைக் காணலாம். ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த வசனம் காணப்படும் வேதப்பகுதியை ஒரு முறையாவது ஆராயாது அந்த வசனத்தைப் பயன்படுத்தி தாம் நினைத்ததை சொல்லுவது பல தமிழ் பிரசங்கிகளின் தொழிலாக இருக்கின்றது. எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமும், வசனமும் வேதத்தில், அவை காணப்படும் வேதப்பகுதியோடு தொடர்புடையதாக இருக்கின்றன. ஆகவே, எந்த வசனத்திற்கும் அது காணப்படும் வேதப்பகுதியோடு தொடர்புபடுத்தி ஆராயாமல் விளக்கம் கொடுப்பது அநீதியான காரியம். உதாரணத்திற்கு ரோமர் 15:1-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே, “அன்றியும் பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்” என்று எழுதியிருக்கிறது. இந்த வசனத்தைப் பிரசங்கப் பொருளாக எடுத்துக்கொண்டு, பலமுள்ளவர்கள் பலவீனருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற பொருளில் பிரசங்கம் செய்கிறவர்கள் அநேகர். அவர்கள் தொடர்ந்து பலமுள்ளவர்கள் எந்தவகையில் பலவீனருக்கு துணை செய்ய வேண்டும் என்று பல காரணங்களைக் கூறிப் பிரசங்கம் செய்வார்கள். இதில் என்ன தவறு என்று பார்ப்போம். பலமுள்ளவர்கள் பலவீனருக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும் என்று பிரசங்கி பல நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருந்தாலும் அவர் விடுகிற மிகப் பெரிய தவறு அந்த வசனத்தை அது காணப்படம் வேதப்பகுதியின் அடிப்படையில் பிரசங்கிக்காததுதான். ஒரு நல்ல பிரசங்கி அந்த வசனம், “அன்றியும்” என்ற வார்த்தையுடன் ஆரம்பமாகிறது என்பதை முதலில் கவனிப்பான். அடுத்ததாக, அதற்குக் காரணம் என்ன என்று ஆராய்வான். அப்படி ஆராய்கிறபோது அந்த வார்த்தை ரோமர் 15:1-ஐ அதற்கு முன்னால் காணப்படும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதனைகளோடு இணைக்கிறது என்பதை அறிந்து கொள்வான். அவன் தொடர்ந்து அந்த வசனம் காணப்படுகின்ற பகுதி முழுவதையும் ஆராய்கிறபோது, அவ்வசனம் பொதுவாக பலமுள்ளவர்கள் பலவீனருக்கு செய்ய வேண்டிய உதவிகளைப் பற்றி விளக்காமல் விசுவாசிகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்த ஒரு பிரச்சனையைக் குறித்தம், அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதற்கு பவுல் தந்துள்ள ஆலோசனைகளையுமே விளக்குகின்றது என்பதையும் அறிந்துகொண்டு பிரசங்கத் தயாரிப்பில் ஈடுபடுவான்.

இதனால்தான் ஒரு வசனத்தை மட்டும் பயன்படுத்தி பிரசங்கம் செய்யும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. தமிழ் வேதத்தில் ஆழ்ந்த அறிவில்லாத நம்முடைய மக்களுக்கு வேத சத்தியங்களை முறையாகப் போதிக்க அந்த முறை உதவாது. எத்தனை நல்ல காரியங்களை ஒருவசனத்தை மட்டும் பயன்படுத்தி சொல்ல முடிந்தாலும் நாம் சொல்லுகின்ற அனைத்தும் அந்த எந்தவிதமான பலனும் இல்லை. ஆகவே, பல வசனங்களை அல்லது பல பத்திகளைக் கொண்ட ஒரு வேதப்பகுதியை பிரசங்கிக்க எடுத்துக்கொள்வது எப்போதுமே பலன் தரும். அதாவது, பிரசங்கப்பகுதி ஒரு அதிகாரம் அல்லது அந்த அதிகாரத்தின் அரைவாசிப் பகுதியாகவாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்திற்காகவே சொல்லுகிறேன். முக்கியமாக அப்படி எடுத்துக்கொள்கிற பகுதிக்கு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தின் முதலாவது அதிகாரத்தில் இருந்து பிரசங்கிக்கப் போவதாக வைத்துக்கொள்வோம். அது எங்கு தொடங்கி எங்கு முடிகின்றது என்று முதலில் பார்ப்பது அவசியம். இந்தப் பகுதியில் பவுல் கர்த்தரிடம் செய்யும் ஜெபத்தைப் பார்க்கிறோம். மூலமொழியில் இந்தப் பகுதியில் முற்றுப் புள்ளி இல்லாமல் முதல் 14 வசனங்களையும் பவுல் எழுதியிருக்கிறார். அதாவது பதினான்கு வசனங்கள் தொடர்ச்சியாக ஒரே வசனமாக இருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் இந்தப் பகுதியில் இருந்து பிரசங்கிக்கப் போவது ஆபத்து. இந்தப் பதினான்கு வசனங்களிலும் பவுல் தனது ஜெபத்தில் இரட்சிப்பின் பலன்களாக விசுவாசிகளுக்கு கர்த்தர் அளித்திருக்கும் ஆசீர்வாதங்களை படிப்படியாக அடுக்கி வைக்கிறார். ஆகவே, இந்தப்பகுதியின் ஆரம்பம் 1-ம் வசனத்தில் தொடங்கி 14-வது வசனத்தில் வந்து முடிகின்றது. இதை உதாசீனப்படுத்திவிட்டு இந்தப் பகுதியில் இருந்து பிரசங்கிப்பது கர்த்தரின் வார்த்தையை அலட்சியப்படுத்தும் செயலாகவே இருக்கும்.

சுவிசேஷ நூல்களில் காணப்படும் உவமைகளில் இருந்து பிரசங்கிக்கும்போது அந்த உவமை எங்கு ஆரம்பித்து எப்படி முடிகின்றது என்று பார்க்க வேண்டும். முக்கியமாக உவமைகளுக்கான அர்த்தம் அதன் ஆரம்ப வசனத்திலோ அல்லது அந்தப்பகுதியின் கடைசி வசனத்திலோ கொடுக்கப்பட்டிருக்கும். உவமை காணப்படும் பகுதியின் ஆரம்பத்தையும், முடிவையும் அலட்சியப்படுத்தினால் அந்த உவமையையே புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். அது மட்டுமல்லாமல் சில வேளைகளில் இயேசு கிறிஸ்து தான் ஒரு உவமையின் மூலமாகப் போதிக்கப்போவதாக சொல்லாமலேயே உவமையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அது உவமை என்பதை அது காணப்படும் பகுதி முழுவதையும் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு மத்தேயு 13-ம் அதிகாரத்தில் காணப்படும் உவமைகளை அவை உவமைகள் என்பதை “அவர் அநேக விஷயங்களை உவமைகளாக அவர்களுக்கு சொன்னார்” என்று 3-ம் வசனத்தில் இருந்தும், 18, 24, 31, 33 ஆகிய வசனங்களில் இருந்தும் தெரிந்து கொள்கிறோம். இந்த வசனங்கள் அங்கே தரப்பட்டுள்ள ஒவ்வொரு உவமையும் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

ஆனால், சில வேளைகளில், “நான் இப்போது உவமையின் மூலமாக ஒரு கருத்தை விளக்கப் போகிறேன்” என்று சொல்லாமலேயே உவமையைத் தந்திருக்கிறார் இயேசு கிறிஸ்து. உதாரணத்திற்கு மத்தேயு 25-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். இங்கே தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த போதனைகள் காணப்படுகின்றன. இந்தப்பகுதியில் தேவனுடைய இராஜ்யத்தை விளக்குவதற்காக இயேசு சில உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். இந்த அதிகாரத்தின் 1-ம் வசனம், 14-ம் வசனம் ஆகியவற்றில் காணப்படும் “ஒப்பாயிருக்கிறது”, “ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது” ஆகிய வார்த்தைகளின் மூலமாக மட்டுமே இவை உவமைகள் என்று அறிந்து கொள்ள முடிகின்றது. இப்படி இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆகவே, ஒவ்வொரு வேதப்பகுதியையும் ஆராய்ந்து அவை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகின்றன என்று பார்ப்பது அவசியம். தொடர்பற்றதாகக் காணப்படும் ஒரு பகுதியில் இருந்து பிரசங்கிக்க முயற்சி செய்தால் அந்தப் பகுதி சொல்லும் கருத்தையே புரிந்து கொள்ள முடியாது. நமது பிரசங்கமும் குழப்பத்தில் போய் முடிந்துவிடும்.

ஆ. அப்பகுதியின் இலக்கிய அம்சத்தை (Literary style) ஆராய வேண்டும்

அடுத்ததாக நாம் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் வேதப்பகுதி எத்தகைய இலக்கிய வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வேதத்தில் பல்வேறு இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அதில் வரலாற்று நூல்கள் இருக்கின்றன. தீர்க்கதரிசன நூல்கள் உள்ளன. போதனைகளை அளிக்கும் பகுதிகளைப் பார்க்கிறோம். உவமைகளைக் காண்கிறோம். சங்கீதங்களைப் பார்க்கிறோம். இந்த முறையில் பலவிதமான இலக்கியங்களைக் கொண்டதாக வேதம் அமைந்திருக்கின்றது. ஆகவே, வேத போதனைகளை சரியாக விளங்கிக் கொள்ள பிரசங்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் வேதப்பகுதியின் இலக்கிய அமைப்பு பற்றிய அறிவு அவசியமாகிறது. அது உவமையா? வரலாறா? தீர்க்கதரிசனமா? சங்கீதமா? அடையாள மொழியா? என்று கேள்வி எழுப்பி பிரசங்கப்பகுதி எந்த இலக்கிய வகையைச் சேர்ந்தது என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்மானித்துக் கொண்டபிறகுதான் அந்தப் பகுதியை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிமுறைகளைப் பயன்படுத்தி அதைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு பகுதி உவமையாக இருப்பின் அது உவமை என்பதை அறிந்து கொண்டபின் அதன் போதனைகளை ஆராய முற்பட வேண்டும். உவமையாக அமைந்து காணப்படும் ஒரு வேதப்பகுதிக்கு நாம் எழுத்துபூர்வமாக ஒருபோதும் விளக்கம் கொடுக்க முடியாது. முதலில் உவமையின் மூலம் முக்கியமாகப் போதிக்கப்படும் சத்தியம் என்ன என்பதை அறிய வேண்டும். உவமையின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருள் கொடுக்க முயற்சி செய்யக்கூடாது.

இதே முறையில்தான் தீர்க்கதரிசனமாக அமைந்திருக்கும் வேதப்பகுதிகளும், வெளிப்படுத்தல் நிருபமும் அநேக அடையாள மொழிகளைக் (Symbolical Language) கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் எழுத்துபூர்வமாக விளங்கிக் கொள்ள முடியாது. அடையாள மொழிகளைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டிய விதிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் போதிக்கப்படும் சத்தியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். சங்கீதங்களும், நீதிமொழியும் பாடல் இலக்கிய வகையைச் சேர்ந்தவை. ஏசாயா போன்ற தீர்க்கதரிசன நூல்களிலும் பாடல்களைப் பார்க்கலாம். அந்தப்பகுதிகளைப் பிரசங்கப் பொருளாக எடுத்துக் கொண்டால் அந்த இலக்கியத்தில் காணப்படும் Paralalism என்று அழைக்கப்படும் தன்மையைக் கவனித்துப் படிக்க வேண்டும். அதாவது, ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து அடுத்த வரியில் வித்தியாசமான விதத்தில் சொல்லப்பட்டிருக்கும். ஒரே கருத்து இரண்டு வரிகளில் வெவ்வேறு விதத்தில் சொல்லப்படுவதே Paralalism.

வரலாற்றம்சங்களைக் கொண்டு காணப்படும் பகுதிகளை அவை வரலாறு என்ற எண்ணத்தோடு ஆராய்ந்து படிக்க வேண்டும். வரலாறு நடந்து முடிந்த நிகழ்ச்சி. அப்போஸ்தலர் நடவடிகள் வரலாறு என்பதை உணராது அலட்சியம் செய்ததால்தான் தவறான பெந்தகொஸ்தே போதனையான “ஆவியின் அபிஷேகம்” உருவானது. வரலாற்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆகவே, பிரசங்கிக்கப்போகும் வேதப்பகுதிகளை முதலில் அவை எத்தகைய இலக்கிய வகையைச் சேர்ந்தவை என்று ஆராய மறக்கக்கூடாது.

இ. இலக்கண அமைப்பு

அடுத்ததாக பிரசங்கிப்பதற்கு எடுத்துக்கொண்டுள்ள வேதப்பகுதியின் இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பகுதியை ஆராய வேண்டும். இலக்கணமில்லாத மொழிகள் உலகத்தில் இல்லை. வேத போதனைகள் அத்தனையும் நமது மொழியில் பல்வேறு இலக்கியங்களாக, இலக்கணக் கட்டுக்கோப்போடு தரப்பட்டுள்ளன. ஆகவே, இலக்கணத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது.

பிரசங்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதியை ஆராயும் போது, அதன் வசனங்களில் காணப்படும் வார்த்தைப் பிரயோகங்களையும், வசனங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் வார்த்தைகளையும், அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறையையும், கவனத்தில் கொள்வது அவசியம். அத்தோடு அந்தப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள் கடந்த காலத்தைச் சேர்ந்தவையா, நிகழ்காலத்தோடு சம்பந்தமுடையவையா அல்லது எதிர்காலத்தைக் குறிப்பவையா என்று ஆராய்வதும் அவசியம். இதையெல்லாம் அறிந்துகொள்ள வசனங்களைத் தொடர்புபடுத்துகின்ற வினைச் சொற்கள், இடைச்சொற்கள் (Particles), தெரிநிலை வினைகள், விகுதிகள் (Termination), உருபுகள் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி, அவை எந்தவிதத்தில் வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

புதிய ஏற்பாடு எழுதப்பட்டுள்ள கிரேக்க மொழியில் இந்த இடைச்சொற்கள் (Particles) ஒரு பொருளை அழுத்தத்தோடு வலியுறுத்திச் சொல்லுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை காணப்படும் வேதப்பகுதியின் போதனையைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு யோவான் 4:4-ல் “அவர் சமாரியா நாட்டின் வழியில் போக வேண்டியதாயிருந்தபடியால்” என்றிருப்பதை வாசிக்கிறோம். எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பின்படி அவர் சமாரியா நாட்டின் வழியில் “நிச்சயம்” போகவேண்டியிருந்தபடியால் என்றிருக்க வேண்டும். ஏனெனில், இந்த வசனத்தில் கிரேக்க மொழியில் dei (particle of necessity) என்ற இடைச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது இயேசு இந்தப் பகுதிக்கு கர்த்தருடைய பாராமரிப்பின்படி நிச்சயமாக போக வேண்டியிருந்தது என்ற சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த இடைச்சொல் தமிழ் மொழி பெயர்ப்பில் “போகவேண்டியிருந்தபடியால்” என்ற வார்த்தையில் மறைந்து காணப்படுகின்றது. இதேவிதமாகத்தான் மாற்கு 8:31-லும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு, இயேசு நிச்சயமாக சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது என்ற சத்தியத்தை விளக்குகிறது. ஆனால், தமிழ் மொழிபெயர்ப்புகளில் எல்லா இடங்களிலும் இந்த அழுத்தம் வெளிப்படையாகத் தெரியாமல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு லூக்கா 19:4-ஐயும் கவனிக்கவும். இடைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் கவனித்துப் படிப்பது வேத சத்தியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள உதவும்.

அத்தோடு, அந்த வேதப்பகுதியில் காணப்படும் தன்வினை (Verb denoting direct action), பிறவினை (Causative verb), செய்வினை (Active verb), செயப்பாட்டு வினைகளுக்கும் (Passive verb) முக்கியத்துவம் கொடுத்து அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறைகளைக் கவனித்துப் படிக்க வேண்டும். ஆனால், ஆகயைால், ஆதலால், அன்றியும், ஆகவே, அந்தப்படி, எப்படியென்றால் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தையும் கூர்ந்து கவனித்தல் அவசியம். அவை வசனங்களைத் தொடர்புப்படுத்தி வேதப்பகுதியில் விளக்கப்படும் உண்மைகள் எவ்வாறு தரப்பட்டிருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளத் துணை செய்கின்றன. அத்தோடு சொல்லியலுக்கும் (Etymology) முக்கியத்துவம் கொடுத்து ஒரு சொல் எந்தத் திணை, பால், இடம், வேற்றுமையைக் கொண்டு அமைந்திருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 1 கொரிந்தியர் 13:10-ல் வேதத்தைக் குறிக்கும் “நிறைவானது” என்ற வார்த்தை பொருட்பாலில் (Neuter gender) தரப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை வேதத்தைத்தான் குறிக்கிற்து என்பதைத் தீர்மானிக்க இது எந்தப்பாலில் அமைந்திருக்கிறது என்பதையும் கவனிக்காமல் இருக்க முடியாது.

மார்டின் லொயிட் ஜோன்ஸ் என்ற பிரசங்கி எபேசியர் 2:4-ன் “தேவனோ” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி செய்த ஒரு பிரசங்கத்தை எடுத்துக் கொள்வோம். (ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி அவர் பிரசங்கித்திருந்த போதும், பிரசங்கம் எந்த வார்த்தை காணப்படும் முழு வேதப்பகுதியின் அ‍டிப்படையிலேயே அமைந்திருந்தது). இந்த வார்த்தை ஆங்கில வேதத்தில் “But God” என்று இருக்கின்றது. But (ஆனால்) என்ற வார்த்தை தமிழ் ‍வேதத்தில் “தேவனோ” என்ற வார்த்தைக்குள் அடங்கியிருக்கிற்து. “ஆனால் தேவன்” என்றும் அதனைத் தமிழில் எழுதலாம். அந்த இடைச்சொல் இந்தப்பகுதியில் மிகவும் முக்கியமானது. பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றும் இந்த வார்த்தை அதற்கு முன்னால் காணப்படும் 3 வசனங்களை அதற்குப் பின்னால் வரும் வசனங்களோடு இணைக்கின்றது. அத்தோடு, முன்னால் உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகளை வலியுறுத்தி விளக்குவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. எபேசியர் 2:1-3 வரையுள்ள வசனங்கள் விசுவாசிகள் எத்தகைய மோசமான பாவிகளாக இரட்சிப்பை அடையுமுன் இருந்திருக்கிறார்கள் என்பதை விளக்குகின்றன. 4-ம் வசனம் அத்தகைய பாவிகளைக் கர்த்தர் எப்படிக் கரைசேர்த்தார் என்பதை விளக்க ஆரம்பிக்கிறது. இவ்வசனத்தில் “ஆனால்” என்ற இடைச்சொல் வசனங்களை இணைக்கும் வெறும் இடைச்சொல்லாக மட்டும் இல்லாமல் மனிதன் பாவத்தில் மூழ்கிக் கரை சேர முடியாத நிலையில் இருந்தபோது கர்த்தர் இடைப்பட்டு அவனை எப்படிக் கரைசேர்த்தார் என்பதையும் அழுத்திச் சொல்லுவதற்கு உதவுகிறது. இந்த வார்த்தையை நாம் அலட்சியப்படுத்தினால் இந்தப்பகுதி போதிக்கும் சத்தியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளாமல் போய்விடும். மார்டின் லொயிட் ஜோன்ஸ் இலக்கணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இந்தப் பகுதியில் “ஆனால்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்த விதத்தைப் புரிந்து கொண்டு இப்பகுதி போதிக்கும் சத்தியத்தை அருமையாக பிரசங்கித்திருந்தார். அந்தப் பிரசங்கமும் பலராலும் பாராட்டப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பிரசங்கமாக இருந்தது.

எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியின் இலக்கண அமைப்பை ஆராயும் போது எத்தகைய அழுத்தத்தோடு அதன் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். அப்பகுதியின் இலக்கண அமைப்பைக் கவனிக்காவிட்டால் அந்தப் பகுதி தரும் போதனையையே நாம் மாற்றிச் சொல்லிவிடக்கூ‍டிய ஆபத்து உண்டு. உதாரணத்திற்கு எபேசியர் 1:3-14 வரையுள்ள வசனங்களை மறுபடியும் பார்ப்போம். அதில் சொல்லப்படும் இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் கடந்த காலத்தில் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு செலுத்திய பலியின் காரணமாக இப்போது நிகழ்காலத்தில் விசுவாசியாக இருந்து நாம் அனுபவிக்கும் பலன்களை விளக்குகின்றன. அத்தோடு, அந்தப்பகுதியில் எதிர்காலத்தில் நாம் பரலோகத்தில் அனுபவிக்கப் போகும் ஆசீர்வாமங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன. “பரிசுத்த ஆவியினால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்” என்று 13-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள உண்மை ஏற்கனவே நம்மில் நடந்து முடிந்து விட்டதும், இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறதுமான ஆவியின் ஆசீர்வாதத்தைச் சுட்டிக்காட்டுகிறது. “விசுவாசிகளானபோது . . . பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டீர்கள்” என்ற வார்த்தைப்பிரயோகத்தில் “விசுவாசிகளானபோது” என்பதற்கும், “முத்திர‍ை போடப்பட்டீர்கள்” என்பதற்கும் இடையில் இலக்கணத்தின்படி கால இடைவெளி இருப்பதாகவும், விசுவாசிகளானவுடன் கிறிஸ்தவர்கள் ஆவியின் முத்திரையை உடனேயே அடைவதில்லை என்றும் ஒரு போதனை இருக்கிறது. இந்தப் போதனை தவறானது. இது தவறா? சரியா? என்று இலக்கணம் தெரியாமல் நாம் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாது. உண்மையில் இலக்கணப்படி அப்படி ஒரு இடைவெளி அந்த வார்த்தைகளுக்கிடையில் இல்லை. விசுவாசிகளானபோது நமக்குக் கிடைத்த அனுபவத்தையே அந்த வார்த்தைகள் விளக்குகின்றன.

வேதத்தில் பல பகுதிகளில் காணப்படும் உணர்ச்சிக் குறிப்பு வினாக்களையும் (Rhetorical questions) நாம் கவனத்தில் எடுப்பது அவசியம். 1 கொரிந்தியர் 12:29, 30 ஆகிய வசனங்கள் இதற்கு நல்ல உதாரணம். இங்கே பவுல் கேட்கும் கேள்விகளுக்கு “இல்லை” என்ற பதில் எதிர்பார்க்கப்படுகிறது. இதை விளங்கிக்கொள்ளாமல் இந்தப் பகுதியின் போதனையை அறிந்து கொள்ள முடியாது.

மேலும் வேதத்தில் பல போதனைகள் கட்டளைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன (Imperative). பிரசங்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் பகுதியில் காணப்படும் வசனங்களையும், அவற்றின் இலக்கண அமைப்பையும் ஆராய்வதன் மூலம் மட்டும்தான் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தந்த வேதப்பகுதிகளின் இலக்கண அமைப்பை ஆராயாமல் வேதபோதனைகளை விளங்கிக்காள்ளவோ, பிரசங்கம் செய்யவோ முடியாது. இலக்கணத்தை அலட்சியப்படுத்தினால் வேதம் நமக்குப் புரியாத நூலாக இருந்துவிடும். ஆகவே, இலக்கணத்துக்கு மதிப்புக் கொடுத்து பிரசங்கப்பகுதியை வாசித்து விளங்கிக் கொள்வது அவசியம். இதற்கெல்லாம் நேரத்தை செலவிட்டுப் படிக்க பிரசங்கி ஒருபோதும் தயங்கக்கூடாது.

ஈ. மொழிக்கு அழகு சேர்க்கும் அணிகள்

உலகத்தின் எல்லா மொழிகளுமே அணிகளையும், பழமொழிகளையும் கொண்டு எழுத்தை அழகு செய்கின்றன. அ‍தேபோல் வேதமும் தன்னுள் அது எழுதப்பட்ட காலத்து மொழிக்குரிய பழமொழிகளையும், பல அணிவகைகளையும் கொண்டு காணப்படுகின்றது. உவமையணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சியணி, உயர்வு நவிற்சி அணி போன்றவற்றை வேதம் முழுவதும் பார்க்கலாம். இவை‍ மொழியையும், வேதத்தையும் அழபடுத்துவதோடு வேதசத்தியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன. ஆகவே, பிரசங்கி தான் பிரசங்கிப்பதற்கு எடுத்துக்கொண்டுள்ள வேதப்பகுதிகளில் காணப்படும் அணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு பவுலினுடைய எழுத்துக்களில் பல இடங்களில் வஞ்சப் புகழ்ச்சியனி (Irony) பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். 1 கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தில் இந்த அணி அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால் இந்தப்பகுதியை நாம் தவறாக விளங்கிக் கொள்ள நேரிடும். 1 கொரிந்தியர் 14:12-ல் அந்நியபாஷை பேசுகிறவன் அதற்கு விளக்கம் கிடைப்பதற்காக ஜெபிக்க வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார். ஏனெனில் அந்நியபாஷை ஒரு மொழியில் இருப்பதால் அதைக் கேட்பவர்கள் புரிந்து கொள்ள அதற்கு விளக்கம் சொல்லப்பட வேண்டும். அதை மேலும் விளக்கும் பவுல் அடுத்த வசனத்தில் தான் அந்நியபாஷையில் பேசநேரிட்டால் அது ஆவியானவரால் தன்னில் நடக்கிற காரியமாக இருந்தாலும் அதற்குரிய விளக்கம் தனக்கு இல்லாமலிருக்கும் என்கிறார். பேசப்பட்ட பாஷையின் மூலம் சொல்லப்பட்ட கருத்து விளங்காவிட்டால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிறார் பவுல். இதை விளக்குவதற்காக 15-ம் வசனத்தில், “இப்படியிருக்க செய்ய வேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன், நான் ஆவியோடும் பாடுவேன்; கருத்தோடும் பாடுவேன்” என்கிறார். இந்த வசனத்தில் பவுல், தான் அந்நிய பாஷையில் விண்ணப்பம் செய்யப்போவதாகவும், பாடப்போவதாகவும் சொல்லவரவில்லை. இது வஞ்சப்புகழ்ச்சியணி. இதில் ‍மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஒரு கருத்தும், ஆழ்ந்து சிந்திக்கும்போது நேர் எதிர்மாறான பொருளும் தொனிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வசனத்தில் பவுல், தான் எதைப்பேசினாலும் கருத்தில்லாமல் (பொருள் இல்லாமல்) பேசமாட்டேன் என்கிறார். இந்த வசனத்தில் வஞ்சப்புகழ்ச்சியணி பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியாத பெந்தகொஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தோர் பவுல் சொல்வது போல் நாம் ஆவியிலும் விண்ணப்பிக்கலாம், ஆவியிலும் பாடலாம் என்ற தவறான போதனையை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில் 16-17 ஆகிய வசனங்கள் நான் சொல்வதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. அந்த வசனங்களில் பவுல், “நீ சபையில் ஸ்தோத்திரம் பண்ணும்போது (ஜெபம் செய்யும்போது) ஒருவருக்கும் விளங்காத மொழியில் பேசினால் மற்றவர்கள் எப்படி ஆமேன் சொல்ல முடியும், அவர்கள் அதனால் எந்தப்பயனும் அடைய மாட்டார்கள்” என்கிறார். இதே முறையில் இந்த அணி பின்வரும் வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; நியாயாதி. 10:14; 1 இராஜா. 18:27; 22:15; மாற்கு 7:9; 1 கொரி. 4:8.

1 கொரிந்தியர் 13:1-ல் உயர்வு நவிற்சி அணி பயன்படத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இங்கே பவுல் “தூதர் பாஷை” என்று சொல்வது இல்லாததை இருப்பதுபோல் உயர்த்திப் பேசும் உயர்வு நவிற்சி அணி. இதன் மூலம் பவுல், நான் எத்தனை பெரிய பாஷைகளைப் பேசினாலும் என்னிடம் அன்பு இல்லாவிட்டால் ஒரு பயனுமில்லை என்ற உண்மையை விளக்குகிறார்.

இதைத்தவிர உவமைகளும் (Simile), உருவகங்களும் (Metaphor) வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை பல இடங்களிலும் பார்க்கிறோம். உவமைகளுக்கு உதாரணங்களாக மத்தேயு 13; 24 ஆகிய அதிகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். இயேசு இப்பகுதிகளில் உவமைகளைப் பயன்படுத்தி தேவராஜ்யத்தைக் குறித்த சத்தியங்களை விளக்கியுள்ளார். யோவானின் சுவிசேஷத்தில் இயேசு தன்னை ஜீவ அப்பமாகவும், கதவாகவும், மேய்ப்பனாகவும், திராட்சைச் செடியாகவும், ஒளியாகவும் உருவகப்படுத்திப் பேசியிருப்பதைப் பார்க்கிறோம். பிரசங்கத்திற்கெடுத்துக் கொள்ளப்பட்ட பகுதியில் இவை காணப்படுமானால் அவற்றை நாம் கவனத்தில் எடுத்து ஆராய்ந்து விளங்கிக் கொள்வது அவசியம்.

உ. அப்பகுதியின் மையப் போதனை (Central message)

அடுத்தபடியாக பிரசங்கிக்க எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதி போதிக்கும் மையக்கருத்து, அல்லது அதன் முதன்மையான போதனை என்ன என்பதை ஆராய்தல் அவசியம். பிரசங்கப் பகுதி எப்போதும் ஒரு மையக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அந்த மையக்கருத்து பிரசங்கிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பகுதியில் தெளிவாகக் காணப்பட வேண்டும். இன்று 90% தமிழ்ப் பிரசங்கிகள் பிரசங்கத்திற்காக ஒரு வசனத்தைத் தெரிவு செய்து கொண்டு, அந்த வசனத்தை ஆராய்ந்து பார்க்காமல் இதைத்தான் அந்த வசனம் சொல்லுகிறது என்று தாம் நினைப்பதை அந்த வசனத்திற்குள் திணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஆதியாகமம் 4:1-5 வரையுள்ள வசனங்களைப் பாருங்கள். இந்த வசனங்களில் அடிக்கடி “காணிக்கை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து இந்தப்பகுதி காணிக்கை கொடுப்பதைப் பற்றித்தான் ‍பேசுகிறது என்று தீர்மானித்து, இந்த வசனங்களைப் பயன்படுத்தி காணிக்கை என்ற தலைப்பில் பிரசங்கம் செய்கிற பிரசங்கிகள் அநேகர். இது பிரசங்கிக்கப்போகிற வேதப்பகுதியை ஆராய்ந்து படிக்காததால் ஏற்படுகின்ற விளைவு. ஒரு வேதப்பகுதியின் மையக்கருத்தை அந்தப்பகுதியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அதை நாம் அந்தப்பகுதிக்குள் ஒருபோதும் திணிக்கப் பார்க்கக்கூடாது.

ஒரு பிரசங்கத்தில் பல மையக்கருத்துக்கள் இருக்கக்கூடாது. அவை ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் அமைந்து ‍கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சலிப்பைத் தந்து அவர்ளை சிந்திக்கவிடாமல் செய்துவிடும். அத்தோடு, பல மையக்கருத்துக்களை அவர்களால் ஒரே நேரத்தில் சுமக்க முடியாமலும் போய்விடும். ஒரே வேதப்பகுதியில் இருந்து கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, மீட்பு, அவருடைய வருகை அனைத்தையும் பிரசங்கத்தில் கொடுக்க முனைந்தால் ஆபத்து. ஒவ்வொரு பிரசங்கமும் எப்போதும் ஒரே ஒரு மையக்கருத்தை மட்டும் போதிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதைக் கேட்பவர்களும் இன்று இந்த சத்தியத்தைத்தான் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்ற மன அமைதியுடன் போகமுடியும். சிறுவர்களும்கூட அதை இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஓய்வுநாளில் நான் சபையில் இருந்து வீடு திரும்பும்போது என்னுடைய பிள்ளைகளிடம் அன்றைய பிரசங்கத்தின் மையப் போதனை என்ன என்று கேட்பது வழக்கம். பிள்ளைகள் இன்று வளர்ந்துவிட்டாலும்கூட இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பிரசங்கம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் அந்த மையப்போதனையை அவர்கள் விளங்கிக் கொண்டிருப்பார்கள்.

முதலில் நாம் பார்த்த எபேசியர் 1:3-14-ஐ மறுபடியும் எடுத்துக்கொண்டால் அதன் மையப் போதனையாக “கிறிஸ்து இலவசமாகத் தந்துள்ள இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள்” இருப்பதைக் காண்கிறோம். 3-ம் வசனம் அந்த மையக்கருத்தை விளக்குவதாக இருக்கிறத. அந்தப் பகுதியின் ஏனைய வசனங்கள் ஒவ்வொன்றாக நமது இரட்சிப்பின் பலன்களைப் படிமுறையாக விளக்குகின்றன. மையக் கருத்தைச் சுற்றியே அந்தப்பகுதியில் காணப்படும் ஏனைய உண்மைகளும் அமைந்திருக்கின்றன. அங்கே ஒன்றுக்கொன்று முரண்பாடானதும், ஒன்‍றோடொன்று தொடர்பில்லாததுமான சத்தியங்களை நாம் பார்க்க முடியாது. இந்தப் பகுதியில் காணப்படும் சத்தியங்களை ஒன்றுக்கு மேற்பட்ட பிரசங்கங்களின் மூலமாக பிரசங்கிக்க முடிந்தாலும் முழுப்பகுதியும் ஒரே மையப் போதனையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்த முறையில்தான் பிரசங்கத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் எந்த வேதப்பகுதியும் இருக்குமாறு பார்த்தக்கொள்ள வேண்டும்.

இன்னொரு உதாரணமாக யோவான் 3:1-18 வரையுள்ள வசனங்களை எடுத்துக்கொண்டால் அப்பகுதியின் முக்கிய போதனையாக “மறுபிறப்பு” இருக்கின்றது. மறுபிறப்பின் அவசியத்தையே நிக்கொதேமு இயேசுவை இரவில் சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளுகிறோம். அதேபோல் யோவான் 4:1-26-ஐ எடுத்துக் கொண்டால், “ஜீவத்தண்ணீரான நித்திய ஜீவன்” அந்தப்பகுதியின் முக்கிய போதனையாக, பிரசங்கப் பொருளாக இருக்கின்றது. பிரசங்கத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள வேதப்பகுதியை கவனத்தோடு ஆராய்ந்து படிக்கும்போது அதன் முக்கிய போதனையைக் கண்டு கொள்ளலாம். சில பகுதிகளில் அவை ‍தெளிவாகப் புலப்படும். அப்படித் தெளிவாகத் தெரியாமல் இருக்கும் பகுதிகளை ஆழமாகப் படிப்பதன் மூலம் அப்பகுதிகளின் பிரதான போதனையைக் கண்டுகொள்ளலாம். எது எப்படியிருந்தபோதும் எந்தப் பகுதியை பிரசங்கிக்க எடுத்துக் கொண்டாலும் அந்தப்பகுதியின் பிரதான போதனையை கண்டுகொள்ள வ‍ேண்டியது பிரசங்கத்திற்கு மிகவும் அவசியம்.

முடிவாக

இதுவரை நாம் பார்த்து வந்துள்ள பிரசங்கம் தயாரிப்பதற்கான வழிமுறைகளை வாசித்ததும், இதையெல்லாம் செய்வதற்கு நமக்கெங்கே நேரம் கிடைக்கப் போகிறது என்று சிலர் எண்ணக்கூடும். வேறுசிலர், வாசிப்பதற்கு இது நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைக்கு உதவாது என்று அங்கலாய்ப்பார்கள். இத்தகைய சோம்பேரித்தனமான போக்கைக் கொண்டிருப்பவர்களாலும், பிரசங்க ஊழியத்தைக் குறித்த அலட்சிய மனப்பான்மை கொண்டவர்களாலும்தான் பிரசங்க ஊழியம் இன்று தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தலைகுனிந்து நிற்பதோடு வல்லமையான ஆத்மீக வாழ்வளிக்கும் பிரசங்கங்களுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. கஷ்டப்பட்டு உழைத்துப் பிரசங்கிப்பதில் வாஞ்சையுள்ளவர்களை இந்த வழிமுறைகள் பயமுறுத்தாது; மாறாக உற்சாகப்படுத்தி அவர்களை மேலும் பாடுபட வைக்கும். பெரிய படிப்பும், பட்டமும் பெற்றவர்களாக அவர்கள் இல்லாதிருந்தாலும் நேரத்தைப் பயன்படுத்தி நேர்மையுடன் உழைத்துப் பிரசங்கிக்க வேண்டும் என்ன நோக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்களே இன்று திருச்சபைகளுக்குத் தேவையானவர்கள். அவர்கள் மட்டுமே ஆத்துமாக்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s