கடந்த இதழில் பிரசங்கம் தயாரித்தலின்போது பிரசங்கி எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகளை ஆராய்ந்தோம். இந்த ஆரம்ப நடவடிக்கைகள் பிரசங்கத்தை ஆவிக்குரிய விதத்தில் தயாரிக்க அவசியமானவை. இனித் தொடர்ந்து பிரசங்கம் தயாரித்தலில் நாம் அடுத்தபடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வோம்.
பிரசங்கத்திற்கான பொருளை முடிவு செய்தபின், அந்தப் பிரசங்கப் பொருள் காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அதனை இலக்கண, இலக்கிய, வரலாற்றுபூர்வமாக நிதானித்து ஆராய்ந்து அதில் கொடுக்கப்பட்டள்ள மையப் போதனை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். இது முதலில் செய்ய வேண்டிய அவசியமான பணி. இதைச் செய்யாவிட்டால் அந்தப்பகுதியைப் பயன்படுத்தி பிரசங்கம் செய்ய முடியாது. இந்தப்பணியைப் பாடுபட்டு செய்து முடிக்கும்போதுதான் கர்த்தர் அந்தப்பகுதியில் எதைப்போதிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மையப்போதனையை விளக்கும் துணைச் சத்தியங்கள்
அதன்பின் அந்த மையப்போதனையை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள துணைச் சத்தியங்களை நாம் கருத்தோடு ஆராய வேண்டும். இந்தத் துணைச்சத்தியங்கள் மையப்போதனையை விளக்குவதாகவும், வலியுறுத்திக்கூறுவதாகவும் அமைந்திருக்கம். கீழே எபேசியர் 1:3-14 வரையிலான வேதப்பகுதியின் மையப்போதனையையும் அதை மேலும் விளக்கும் துணைச் சத்தியங்களையும் படிமுறையாகத் தந்திருக்கிறேன்.
கிறிஸ்து இலவசமாக நமக்குத் தந்துள்ள இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் (எபேசியர் 1:3-14)
1. உலகத்தோற்றத்திற்கு முன்பே கர்த்தர் நம்மைத் தெரிந்து கொண்டார். (4)
2. அவருடைய சுவீகாரப்புத்திரராகும்படி நாம் முன்குறிக்கப்பட்டள்ளோம். (5-6)
3. கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்குக் கிடைத்தது. (7-8)
4. தன்னுடைய சித்தத்தின் இரகசியத்தை அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். (9-10)
5. கிறிஸ்துவுக்குள் சுதந்திரராகும்படி நாம் தெரிந்துகொள்ளப்பட்டோம். (11-12)
6. பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டிருக்கிறோம். (13-14)
இந்த உதாரணத்தில் அந்த வேதப்பகுதியின் மையப்போதனையையும் அதை மேலும் விளக்கும் பல துணைச்சத்தியங்களையும் பார்க்கிறோம். இந்தப்பகுதி பவுலின் நிருபங்களில் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதால் இதை மேலும் விபரமாக படிக்க வேண்டியது அவசியம். இங்கே நான் தந்திருப்பது ஒரு சுருக்கமான குறிப்பு (brief outline) மட்டுமே. மையக்கருத்தை மேலும் விளக்கும் இந்தத் துணைச்சத்தியங்களை ஆராயும்போது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வேதப்பகுதியின் இலக்கண அமைப்பை மனதில் கொள்வது அவசியம். எபேசியர் 1:3-14-வரையிலுள்ள வேதப்பகுதி தொடர்ச்சியாக, முற்றுப்புள்ளி இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் ஒரு பகுதி. அதில் காணப்படும் பல சத்தியங்களையும் இணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள இணையிடைச் சொற்களை (Conjuction) கவனத்தோடு ஆராய்ந்து கருத்தில் கொள்ள வேண்டும். அந்த இணையிடைச் சொற்களே அந்தப்பகுதியில் காணப்படும் துணைச்சத்தியங்களை இணைப்பவையாக இருக்கின்றன. இங்கே இலக்கண அறிவு வேதத்தை ஆழமாகப் படிப்பதற்கு இன்றியமையாததாக இருப்பதைக் கவனிப்பது அவசியம்.
பிரசங்கம் தயாரிப்பதற்கான ஆரம்பக்குறிப்புகள் (Basic Outline)
எபேசியர் 1:3-14 வேதப்பகுதியைப் பயன்படுத்தி நாம் பிரசங்கிப்பதாக இருந்தால், இதுவரை நாம் செய்திருப்பதெல்லாம் அந்த வேதப்பகுதியின் மையப்போதனையையும், அதை விளக்கும் துணைச்சத்தியங்களையும் தெரிந்துகொண்டிருப்பது மட்டும்தான். இதுவே பிரசங்கமாகிவிடாது. இது பிரசங்கத்திற்கான வெறும் ஆரம்பம் மட்டுமே. பிரசங்கத்தைத் தயாரிப்பதில் இனிச் செய்ய வேண்டிய வேலைகள் அநேகம் இருக்கின்றன. இதை ஒரு ஓவியக்காரன் ஓவியத்தை வரைய ஆரம்பித்திருப்பதற்கு உதாரணமாகக் கூறலாம். அவன் பலகையில் சில கோடுகளைப் போட ஆரம்பித்திருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் ஓவியம் ஆரம்பமாவிட்டது. அதன் இறுதி முடிவைக்கூட அவனால் ஓரளவு பார்க்க முடிகின்றது. பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு அவை வெறும் கோடுகளாக மட்டும் தான் தெரியும். ஏனெனில் ஓவியம் இன்னும் முடிவடையவில்லை. ஓவியக்காரனின் நிலையில்தான் இப்போது பிரசங்கி இருக்கிறான். சுருக்கக்குறிப்பு ஓவியக்காரன் தீட்டியுள்ள சில கோடுகள் போன்றது.
நாம் மேலே பார்த்தபடி பிரசங்கத் தயாரிப்பின் ஆரம்பத்திலேயே ஒரு சுருக்கக் குறிப்பை நாம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். குறிப்பெழுதி வைத்துக் கொள்ளும் வழக்கம் அநேக பிரசங்கிகளுக்கு இல்லை. சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகத்தின் தலைப்பு “பிரசங்கக் குறிப்பில்லாமல் பிரசங்கிப்பதெப்படி?” இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டிய அவசியமேயில்லை. பிரசங்கக் குறிப்பில்லாமல் செய்யப்படும் பிரசங்கங்கள் பெரும்பாலும் வெறும் வார்த்தை ஜாலங்களாகத்தான் இருக்கும். சாதாரணமாக எல்லாப் பிரசங்கிகளும் ஜீனியசாக இருப்பதில்லை. சரீரத்தில் பலவீனங்களையும், குறைந்தளவான ஞாபக சக்தியையும், மறக்கும் தன்மையையும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். நாற்பத்தைந்து நிமிடம் பேச இருக்கும் பிரசங்கி பிரசங்கக் குறிப்பில்லாமல் தெளிவான பிரசங்கத்தைச் செய்துவிட முடியாது. பிரசங்கக் குறிப்பில்லாமல் பிரசங்கிப்பதை சில பிரசங்கிகள் பெருமையாகக் கருதுவார்கள். அதுபற்றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறவர்களும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்களைப் போன்ற சோம்பேறிகள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
விரிவான அடிப்படைப் பிரசங்கக் குறிப்பு (Expanded Basic Outline)
பிரசங்கிக்க எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியின் போதனைகளை சுருக்கமாகக் குறிப்பெடுத்தக் கொள்ள வேண்டுமென்று இதுவரை பார்த்தோம். அந்த ஆரம்பக்குறிப்பின் அடிப்படையில் பிரசங்கம் இனி வளர வேண்டும். கட்டடத்துக்கு அடித்தளம் அமைந்தாய்விட்டது. இனிக்கட்டடத்தின் சுவர்கள் கட்டப்பட வேண்டும். அதற்கு கூரை போட வேண்டும். ஆகவே, பிரசங்கமாகிய கட்டத்தின் அடித்தளமாகிய சுருக்கக் குறிப்பின் அடிப்படையில் அதை விரிவாக்குகின்ற நடவடிக்கைகளில் இனி பிரசங்கி ஈடுபட வேண்டும்.
இந்த இடத்தில் நடைமுறைக்கு அவசியமான ஒரு ஆலோசனையைத் தர விரும்புகிறேன். பிரசங்கிகள் பிரசங்கம் தயாரிக்க கட்டுக்கட்டாய் பேப்பரும், பேனாவோ அல்லது பென்சிலோ வைத்திருப்பது அவசியம். எழுதுவதற்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் பிரசங்கத்தைத் தயாரிப்பது சுலபமல்ல. கணினி வசதியுள்ளவர்கள் அதைப்பயன்படுத்தி இதைச் செய்ய முடியும். அத்தோடு ஒரு நாளில் இவ்வளவு நேரம் என்று பிரசங்கத் தயாரிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டியதும் அவசியம். ஒவ்வொரு நாளும் தகுந்த நேரத்தைக் கொடுக்காமல் ஆவிக்குரிய பிரசங்கங்களைத் தயாரிக்க முடியாது.
சுருக்கக் குறிப்பின் அடிப்படையில் விரிவான பிரசங்கக்குறிப்பு தயாரிக்க மறுபடியும் பிரசங்கிப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியை ஆராய்தல் அவசியம். ஏற்கனவே கடந்த இதழில் நாம் சுட்டிக்காட்டியபடி அந்தப்பகுதியை ஆழமாக நிதானித்துப் படித்திருந்தால் அதில் காணப்படும் சத்தியங்களைக் கொண்டு விரிவான அடிப்படைக் குறிப்பைத் தயாரிக்க முடியும். இதைச் செய்யும்போது அந்தப்பகுதியில் காணப்படுகின்ற சத்தியங்களைத் தவிர வேறு எதுவுமே குறிப்பில் இடம்பெறக்கூடாது. இதைப் பிரசங்கி தனது இலட்சியமாகக் கொண்டு உழைக்க வேண்டும். அந்தப் பகுதி இதைத் தான் சொல்கிறது என்று நாமே கற்பனை செய்யக்கூடாது. இதைத்தான் இன்று பல பிரசங்கிகள் செய்து வருகிறார்கள். பிரசங்கிக்க எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியை ஆழமாக ஆராய்ந்து படித்தால் அந்தப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்ற சத்தியங்களை எவராலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு விசேஷமான வேறு எந்தத் தகுதியும் தேவைஇல்லை. சில சோம்பேரிப் பிரசங்கிகள் வேதத்தைப் படித்து ஆராய்வது ஆவிக்குரிய செயலல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேதசத்தியங்களை ஆராய்ந்து படிக்காதவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் எந்த சத்தியங்களையும் ஒருக்காலும் வெளிப்படுத்தப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை.
இனி எபேசியர் 1:3-14 வரையுள்ள வசனங்களுக்கான விரிவான அடிப்படைக் குறிப்பைக் கீழே பார்க்கலாம்.
கிறிஸ்து இலவசமாக நமக்குத் தந்துள்ள இரம்சிப்பின் ஆசீர்வாதங்கள் (எபேசியர் 1:3-14)
1. உலகத்தோற்றத்திற்கு முன்பே கர்த்தர் நம்மைத் தெரிந்து கொண்டார். (4)
-தமக்கு முன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாகவும் குற்றமில்லாதவர்களுமாக இருப்பதற்காக
2. அவருடைய சுவீகாரப்புத்திரராகும்படி நாம் முன்குறிக்கப்பட்டுள்ளோம். (5-6)
-தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
-தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியாக
3. கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்குக் கிடைத்தது. (7-8)
-அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படி
-அவருடைய இரக்கத்தினாலே
4. தன்னுடைய சித்தத்தின் இரகசியத்தை அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். (9-10)
-தமக்குள்ளே தீர்மானித்திருந்தபடி
-தமமுடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கம்படி
-வெளிப்படுத்தப்பட்ட சித்தம் – “காலங்கள் நிறைவேறும்போது விளக்கம் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருகிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள் கூட்டப்படும்”
5. கிறிஸ்துவுக்குள் சுதந்திரராகும்படி நாம் தெரிந்துகொள்ளப்பட்டோம். (11-12)
-அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்காகவும்
-அவருடைய சித்ததின் ஆலோசனையின்படியும், எல்லாவற்றையும் நடப்பிக்கிற தீர்மானத்தின்படியும்
6. பரிசுத்த ஆவியினால் நாம் முத்திரை போடப்பட்டிருக்கிறோம். (13-14)
-சத்திய வசனத்தைக் கேட்டு அவருக்குள் விசுவாசிகளானபோது
-பரிசுத்த ஆவியானவர்
-வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்
-நம்முடைய சுதந்திரத்துகு அச்சாரமாயிருக்கிறார்.
பிரசங்கத் தயாரிப்புக்கான விரிவான அடிப்படைக் குறிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
சங்கீதம் 1:1-3
மையப்போதனை: கர்த்தருக்கு விசுவாசமாக இருக்கின்ற மனிதன் பாக்கியவானாயிருப்பான்.
விரிவான அடிப்படைக் குறிப்பு:
பாக்கியவான் யார்?
1. அவனுடைய வாழ்க்கையில் பார்க்க முடியாத செயல்கள்:
-பாவிகளுடன் ஒருபோதும் தொடர்பு வைத்திருக்கமாட்டான்
-துன்மார்க்கரின் ஆலோசனைக்கு இடம் கொடான்
-பாவிகள் இருக்கும் இடங்களில் இருக்க மாட்டான்
-பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் அமர மாட்டான்
2. அவனுடைய வாழ்க்கையில் பார்க்ககூடிய செயல்கள்:
-கர்த்தருடைய வேதத்தை அனுதினமும் படிப்பான்
-கர்த்தருடைய வேதத்தில் அதிக அக்கறை காட்டுவான்
-இரவும் பகலும் அதில் தியானம் செய்வான்
3. அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்:
-கனிகொடுக்கும் நல்ல மரத்தைப் போல இருப்பான்
-அது எப்படிப்பட்ட மரம்?
-நீர்க்கால்களில் ஓரமாய் நடப்பட்டிருக்கும்
-தகுந்த காலத்தில் நல்ல பலன்களை அளிக்கும்
-இலையுதிராதிருக்கும்
-கர்த்தருக்கு விசுவாசமாயிருக்கிறபடியால் அவன் செயல்கள் பலனளிக்கும்
இந்த விரிவான அடிப்படைக் குறிப்பை வைத்து நாம் பிரசங்கத்தைத் தயார் செய்ய வேண்டும். இந்தக் குறிப்பை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் அதில் காணப்படும் அத்தனை அம்சங்களும் சங்கீதம் 1:1-3-ல் இருந்து மட்டுமே பெறப்பட்டவையாக இருப்பதை உணரலாம். சங்கீதம் 1-ஐ ஆராய்ந்து இந்தக் குறிப்பை வரைந்திருக்கிறோம். இதற்குப் பிறகுதான் அந்த வசனங்களை மேலும் ஆராய்ந்து பிரசங்கத்தைத் தயாரிக்க வேண்டிய பெரிய வேலை இருக்கிறது.
இங்கே சங்கீதத்தைப் படிக்கும்போது அதற்கே உரிய சில சிறப்பான இலக்கண அம்சங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். அதைத் தெரிந்து கொள்ளாமல் சங்கீதங்களை விளங்கிக் கொள்ள முடியாது; அவற்றிலிருந்து பிரசங்கிக்க முடியாது. சங்கீதங்களைப் பொறுத்தவரையில் அவை ஒரே உண்மையைத் திரும்பவும் சொல்லுகிற ஓர் தன்மையைத் தம்மில் கொண்டிருக்கும். இதை முழுமையாக இங்கு விளக்குவதற்கு வசதியில்லை. இருந்தாலும் இந்த முதலாம் சங்கீதத்தில் இருந்து அந்த உண்மையை விளக்குகிறேன்.
முதலாம் சங்கீதத்தின் முதல் வசனம், பாக்கியவான் பாவகரமான செயல்களில் ஈடுபடமாட்டான் என்பதை உணர்த்துறிது. ஆனால், அந்த உண்மையை சங்கீதக்காரன் மூன்று தடவைகள் அந்த வசனத்தில் விளக்குகிறான். அதாவது, ஒரே உண்மையை வலியுறுத்திக் காட்டுவதற்காக, சங்கீதங்களுக்கே உரிய அழகுடன் மூன்ற தடவைகள் அந்த உண்மையைக் கூறுகிறான். பாவகரமானவர்களோடு பாக்கயவான்களுக்கு தொடர்பு இருக்காது. ஆனால், பாவகரமானவர்கள் யார்? அவர்கள் துன்மார்க்கர், பாவிகள், பரியாசக்காரர்கள். பாவகரமானவர்களுடைய மூன்று குணாதிசயங்களைச் சுட்டிக்காட்டி அத்தகையவர்களோடு பாக்கியவானுக்குத் தொடர்பிருக்காது என்கிறான் சங்கீதக்காரன். ஆகவே, ஒரே கருத்து மூன்று விதங்களில் வெவ்வேறுவிதமாக இங்கு சொல்லப்பட்டிருப்பதைக் கவனித்தல் அவசியம். இதையே 2-ம் வசனத்திலும் காண்கிறோம். கர்த்தருக்கு விசுவாசமானவன் வேதத்தை அனுதினமும் தியானம் செய்கிறவனாக இருப்பான். ஆனால், அதை சங்கீதத்திற்கே உரிய அழகோடு சங்கீதக்காரன் எப்படிச் சொல்கிறான் என்பதைக் கவனியுங்கள்.
அவன் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து.
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருப்பான்.
இந்த வரிகள் சொல்லும் சத்தியம் ஒன்றுதான். ஆனால், அந்த சத்தியத்தை வலியுறுத்திக் கூறுதற்காகவும், அழகுணர்ச்சிக்காகவும் இரு தடவைகள் அது சொல்லப்பட்டிருக்கின்றது. முதலாம் சங்கீதத்தைப் போலவே வேதத்தில் காணப்படும் அத்தனை சங்கீதப்பகுதிகளிலும் இந்த அம்சத்தைப் பார்க்கலாம். ஆகவே, நாம் அவற்றை கூடுதலாக ஆராய்ந்து படிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. சங்கீதங்களில் ஒரே சத்தியம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லப்பட்டிருக்கலாம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவற்றிற்கு வெவ்வேறு விளக்கங்களை அளித்து வேதத்தையே நாம் குழப்பிவிடக்கூடிய ஆபத்து இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னும் ஒரே ஒரு உதாரணத்தோடு இந்தப்பகுதியை முடிக்க விரும்கிறேன்.
யோவான் 3:1-15
மையப்போதனை: மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம்
விரிவான அடிப்படைக் குறிப்பு:
1. மறுபடியும் பிறக்க வேண்டியதன் அவசியம் (1-3)
-மறுபடியும் பிறக்காமல் ஒருவனும் தேவனுடைய இராஜ்யத்தைக் காண முடியாது.
2. மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன? (3:4-8)
-மறுபடியும் குழந்தையாக இந்த உலகத்தில் பிறப்பது அல்ல (4)
-அதற்கு ஜலத்தாலும், ஜீவனாலும் பிறக்க வேண்டும் (5)
-இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில், இது ஆவியால் பிறக்கும் வாழ்க்கை (6, 7)
-அதை ஊனக் கண்களால் காண முடியாது, ஆனால், உணர முடியும் (8)
-இது ஆவியின் வல்லமையான கிரியையினால் ஏற்படுவது (8)
3. மறுபடியும் பிறப்பது எப்படி (3:10-15)
-மனுஷ குமாரனான இயேசு மட்டுமே இதைக் கொடுக்க முடியும் (10-13)
-இயேசுவின் கல்வாரிப் பரிகாரப்பலியின் மூலம் இந்த வாழ்க்கைக்கான வித்திடப்பட்டிருக்கிறது (14)
-இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த வாழ்க்கை (15)
மேலே நாம் பார்த்தது யோவான் 3:1-15 வரையிலான வசனங்களுக்கான ஒரு ஆரம்ப அடிப்படைக்குறிப்பு. இதைப் பிரசங்கிகள் தங்களுடைய வசதிக்குத் தகுந்தபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதை மேலும் விரிவுபடுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட பிரசங்கங்களைக்கூட இதிலிருந்து தயாரிக்கலாம். எது இருந்தபோதும் இப்படியாக வேதப்பகுதியை ஆழமாகவும், நிதானமாகவும் ஆராய்ந்து வாசித்துப்பார்த்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளாமல் பிரசங்கங்களைத் தயாரித்து விட முடியாது. ஏற்கனவே, பழமுறை நான் சுட்டிக்காட்டியது போல் இந்தக் குறிப்பின் அடிப்படையிலேயே பிரசங்கத்தை நாம் தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும்.
பிரசங்கத்திற்கான ஆரம்பக்குறிப்புகளும், அதன் அடிப்படையில் நாம் தயாரிக்கின்ற விரிவான அடிப்படைக் குறிப்புகளும் நமக்கு வழிகாட்டி. வழிகாட்டி இல்லாமல் ஒருவரும் எங்கும் பிரயாணம் செய்ய முடியாது. விரிந்து கிடக்கும் கடலில் கப்பல் சரியான இடத்தை நோக்கிப் போக கப்பலை ஓட்டுகிறவனுக்கு வழிகாட்டி தேவை. வழிகாட்டியைப் பயன்படுத்தி போகுமிடத்திற்கான வழியைக் கணித்து, கப்பலை ஓட்டுவான் கப்பலோட்டி. அடிக்கடி அவன் வரைபடத்தில் கோடுகளைப் போட்டு போக வேண்டிய பாதையைத் தீர்மானிப்பான். இதைப்போலத்தான் நாம் வேதப்பகுதியை கவனமாக வாசித்து குறிப்புகளை எழுதி நமது பிரசங்கப் பாதையை நிர்ணயிக்கிறோம்.
அநேக பிரசங்கிகள் தங்களுடைய பிரயாணத்தை பிரசங்க மேடையில்தான் தீர்மாணிப்பார்கள். அவர்கள் பிரசங்கப் பிரயாணத்திற்கான எந்த வேலையையும் அங்கு வருவதற்கு முன் செய்யவில்லை என்பதை ஐந்து நிமிடம் அவர்களுடைய பிரசங்கத்தைக் கேட்டாலே தெரிந்துவிடும். இதெல்லாம் பிரசங்கமாகாது. இது தமிழினத்தைப் பிடித்திருக்கும் தலைவலி. இதை நிவர்த்தி செய்யவே பிரசங்கிகளான நீங்கள் நாம் இதுவரை பார்த்தபடி வேதத்தை ஆராய்ந்து குறிப்பெடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.