பேர்கட்டரி (Purgatory) உண்டா?

ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஒரு முக்கிய போதனை பேர்கட்டரி (Purgatory) என்பது. ரோமன் கத்தோலிக்க சபையின் ஞானஸ்நானம் பெற்று தங்களுடைய பாவம் முழுவதுமாக மன்னிக்கப்படாது இறப்பவர்கள் நேரடியாக இந்த இடத்துக்குப் போகிறார்கள் என்று கத்தோலிக்க மதம் கூறுகிறது. பரலோகத்தையும், நரகத்தையும் தவிர இடைப்பட்ட இப்படியொரு இடம் இருப்பதாகவும் இங்கு போய்ச் சேருபவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்வரை தற்காலிகமாக இந்த இடைத்தரமான இடத்தில் துன்பங்களை அனுபவித்து தங்களுடைய பாவங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்று ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கிறது. இங்கிருப்பவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் இந்த உலகத்தில் செய்யும் ஜெபத்தால் மட்டுமே இவர்களுடைய சகல பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைத்து பரலோகம் போக முடியும் என்பது ரோமன் கத்தோலிக்க மதப்போதனை. அதனாலேயே ரோமன் கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காக ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். போப்பும் அங்கிருப்பவர்களுடைய பாவத்தைக் குறைக்கக்கூடிய ஒருவகை அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்கிறது ரோமன் கத்தோலிக்க மதம். இதைக் கவுன்சில் ஆப் டிரென்டின் (The Council of Trent) 25 வரு செசன் விளக்குகிறது. இது ரோமன் கத்தோலிக்க மதத்தின் மிக முக்கிய போதனை.

கிறிஸ்தவ வேதத்தில் எங்கும் இந்தப் போதனையைப் பார்க்க முடியாது. கர்த்தரின் வேதம் பரலோகத்தையும், நரகத்தையும் தவிர வேறு எந்த இடங்களையும்பற்றிப் பேசுவதில்லை. மனிதர்கள் இறந்தபின் இந்த இரண்டு இடங்களில் ஒன்றை அடைகிறார்கள். விசுவாசி இறந்தபின் பரலோகத்தில் கண்ணைத் திறக்கிறான். அவிசுவாசி நரகத்தில் கண்ணைத் திறக்கிறான் (லூக்கா 16:19-31). அத்தோடு கர்த்தரின் வேதம் இடைத்தரமான ஒரு நிலைபற்றி விளக்குகிறது. இது இடைத்தரமான ஒரு நிலையே தவிர இடமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறுதி நியாயத்தீர்ப்பு நாள் வரும்வரை பரலோகத்திலும், நரகத்திலும் இருப்பவர்கள் இடைத்தரமான நிலையில் இப்போது இருக்கிறார்கள் என்பது வேதபோதனை. ஏனெனில் இப்போது அவர்கள் சரீரத்தைக் கொண்டிருக்காமல் ஆவியாக மட்டுமே இருக்கிறார்கள். இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் கிறிஸ்து அவர்கள் எல்லோரையும் ‍எழுப்பி அவர்களுக்கு சரீரத்தைக் கொடுப்பார். அதன்பிறகு அவர்கள் ஆவியோடும், சரீரத்துடனும் தங்களுடைய பரலோக வாழ்க்கையையும், நரக வாழ்க்கையையும் தொடருவார்கள். இந்நியாயத்தீர்ப்பு நாள் வரும்வரையும் அவர்கள் இருக்கும் நிலையையே இடைக்கரமான நிலை என்கிறது வேதம். ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கும் ‍இடைத்தரமான இடத்திற்கும் (Intermediate place -Purgatory) கிறிஸ்தவ வேதம் போதிக்கும் இடைத்தரமான நிலைக்கும் (Intermediate stage) எந்தவிதமான தொடர்பும் இல்லை. ரோமன் கத்தோலிக்க போதனையான ‘பேர்கட்டரி’ ஒரு போலிப்போதனை. சாத்தானின் ஊழியக்காரனாக இருந்து ஆன்மீக விடுதலை என்ற பெயரில் ஆத்துமாக்களை ஏமாற்றி தன்னுடைய மதத்தை வளர்த்து வருகிறது ரோமன் கத்தோலிக்க மதம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s