மலேசியா தென்கிழக்காசியாவின் முக்கிய நாடுகளில் ஒன்று. உலகத்திலேயே மிக உயரமான பெட்ரோனாஸ் (Petronas) கட்டிடங்களுக்கும், மிக அழகிய டெலிகொட் டவருக்கும் (Telecom Tower) மலேசியா பெயர்போனது. இருள் மடிந்த இரவு நேரத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகர் முழுவதும் பளிச்சென்று ஒளிவீசுவது அந்நாட்டுக்குப்போய் வருபவர்களுக்கு எப்போதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதுவும் பெட்ரோனாஸ் கட்டடங்கள் இரவு நேரங்களில் பல வர்ணங்களில் மாறிமாறித் தோற்றமளித்து அந்நாட்டின் எழுச்சியையும், வளர்ச்சியையும் பறைசாற்றுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றும். சில வருடங்களுக்கு முன்பு தென்கிழக்காகிய நாடுகளைத் தாக்கிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு மறுபடியும் தலைதூக்கி நிற்கும் மலேசியாவில் எங்கு பார்த்தாலும் புதுப்புது கட்டிடங்களும், தொழிலகங்களும், அப்பாட்மென்டுகளும் உருவாகி வருவதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. வளர்ந்து வரும் நாடான மலேசியா கணினித் தொழில் நுட்பத்துறையில் அதிக அக்கறைக்காட்டி வருவதோடு, செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் முன்னிற்கிறது. அந்நாட்டின் பிரதமரான மகாதீர் நல்லதொரு நிர்வாகத்தை நாட்டுக்கு அளித்து அதன் வளர்ச்சிக்குக் காரணடாக இருந்து வருகிறார். பிரதமர் மகாதீர் கூடிய விரைவில் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
மலேசியா நாட்டில் 60% மலாய் இனத்தவர்களும், 32% சீனர்களும், 8% இந்தியர்களும் வாழ்கின்றனர். இந்நாட்டில் உல்லா இனத்தவர்களும் மலாய் மொழியைப் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றனர். இதனால் மலேசியத் தமிழ் மக்களால் அந்த மொழியை நன்றாகப் பேசவும், எழுதவும் முடிகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் வசதியும் செல்வாக்கும் உள்ள குறைந்த தொகையினர் ஆங்கிலப் புலமை உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால், பொதுவாகவே தமிழர் தமிழை வீட்டில் பேசினாலும் இன்றைய இளம் சமுதாயத்தால் தமிழில் சரளமாக வாசிக்கவும், எழுதவும் முடியவில்லை. தமிழைக் கற்றுக்கொள்ளும் வசதி இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பேசுவதற்கும், தொழில் செய்வதற்கும் மலாய்மொழி இருப்பதால் தமிழைப்படிப்பதில் அக்கறை கொள்ளுபவர்கள் தொகை குறைந்து வருகின்றது. வருங்காலத்தில் மலேசியாவில் தமிழின் நிலை எப்படி இருக்குமோ என்ற ஏக்கமும் எழாமலில்லை!
மலேசியத்தமிழர்களில் பெரும்பாலானோர் தோட்டப்புறங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நகர்ப்புறங்களில் வாழும் தமிழர்களைவிட வசதிகுறைந்தவர்களாக இருக்கின்றனர். பலர் தோட்டங்களில் இருந்து நகரங்களுக்குப்போய் வேலை செய்கிறார்கள். இதுதவிர நகர்ப்புறங்களைச்சுற்றி இருக்கும் கம்பம் என்று அழைக்கப்படும் கிராமங்களிலும் தமிழர்களைப் பார்க்கலாம். வசதியுள்ள படித்த தமிழர்கள் தொழிலதிபர்களாகவும், தோட்டச் சொந்தக்காரர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், அரசு ஊழியர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுபான்மையினர். தமிழ்நாட்டில் இருந்து வேலைதேடி இங்குவந்து வாழ்கிற தமிழர் அநேகர். இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்து மலேசியாவை வாழ்விடமாக மாற்றிக்கொண்ட தமிழர்களையும் இங்கு பார்க்கலாம். மலேசியாவில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள். இவர்கள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் பல காலமாக நடந்து வருகின்றது. கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் தொகை அதிகம்.
1800-ல் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1860-ல் சகோதரத்துவ சபைகளும், 1885-ல் மெத்தடிஸ்ட் சபைகளும் மலேசியாவில் தோன்றின. மலேசியாவில் குடியேற வந்த தமிழர்களாலும் தமிழ் சபைகள் வளர்ந்தன. மலேசியாவில் தமிழர்களை எல்லாக் கிறிஸ்தவ சமயப்பிரிவுகளிலும் பார்க்கலாம். 1970-களில் பெந்தகொஸ்தே குழுக்கள் ஏனைய நாடுகளைப்போலவே இங்கும் வளர்ந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சீர்திருத்த கிறிஸ்தவ சபைகளைத்தவிர ஏனைய எல்லாக் கிறிஸ்தவ சமயப்பிரிவுகளும் இவர்களின் போதனைகளினால் பாதிக்கப்பட்டு பெந்தகொஸ்தே போதனைகளையும், ஆராதனை முறைகளையும் தங்கள் சபைகளில் அனுமதித்துள்ளனர். தமிழ்நாட்டு பெந்தகொஸ்தே சுவிசேஷகர்கள் அற்புத ஊழியங்கள் நடத்த மலேசியாவுக்கு வந்துபோவது வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி. கடந்த வருட இறுதியில்கூட தினகரன் குடும்பசமேதராய் வந்து அற்புத ஊழியத்தை மலேசியாவில் நடத்திவைத்துள்ளார். 1986-ல் தோன்றிய மலேசியாவின் தேசிய சுவிசேஷ கிறிஸ்தவ ஐக்கியம் (National Evangelical Christian Fellowship) ரோமன் கத்தோலிக்க மதத்தையும் உள்ளடக்கி இயங்கி வருகின்றது.
மலேசியத் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் இறையியல் கல்லூரிகள் பெரும்பாலும் பெந்தகொஸ்தே போதனைகளையும், புதிய சுவிசேஷக் கோட்பாடுகளையும் அளிப்பனவாக இருக்கின்றன. வேதபூர்வமான இறையியல் கல்வியைப் பெற்றுக்கொள்ள மலேசியாவில் தமிழர்களுக்கு வழியில்லை. வேதபூர்வமான போதனைகளை அளிக்கும் நூல்களையும் மலேசியாவில் தமிழில் காண்பது அரிது. மொத்தத்தில் மலேசிய தமிழர் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவ ஊழியங்கள் ஆத்மீக வளர்ச்சி குன்றிக் காணப்படுகின்றன.
மலேசியத் தமிழ் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை 1800-களில் இருந்து கேள்விப்பட்டிருந்தபோதும் சீர்திருத்தப் போதனைகளை பெரிதும் அறியாமலேயே இருந்து வந்திருக்கின்றனர். கடந்த இருபது ஆண்டுக்காலப்பகுதியில் சீனர்கள் மத்தியில் தோன்றி ஆங்கில மொழியில் ஆராதனை நடத்திவரும் சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் சிலவற்றில் ஒரு சில தமிழ் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும், மலேசியத் தமிழ் கிறிஸ்தவர்கள் சிர்திருத்த போதனைகளை இன்னும் பெரியளவுக்கு அறியாதவர்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். 1999-ல் தமிழர்கள் மத்தியில் சீர்திருத்த பாப்திஸ்து சபை ஒன்று உருவானது. மலேசிய முதல் பாப்திஸ்து சமயப்பிரிவிலிருந்து வெளிவந்து சீர்திருத்தப் போதனைகளைப்பின்பற்றி, 1689 விசுவாச அறிக்கையின் அடிப்படையில் இந்த சபை இன்று இயங்கி வருகின்றது. எனக்குத் தெரிந்து மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் இருக்கும் சீர்திருத்த சபை இது ஒன்றே. இது ஒரு சிறு ஆரம்பமாக இருந்தாலும் பெந்தகொஸ்தே போதனைகளால் சீரழிந்து காணப்படும் தமிழ் சபைகள் மத்தியில் இது ஒரு சுட்டிவிளக்காக சுடர் விடுவது மகிழ்ச்சி தருகின்றது.
மலேசிய நாட்டில், தமிழர் மத்தியில் சீர்திருத்தப் போதனைகளும், சீர்திருத்த இறையியல் கல்விக்கான வசதியும் இல்லாமலிருப்பது வருந்தவேண்டிய காரியம். தமிழ் மக்கள் வாழும் ஏனைய நாடுகளைப்போலவே இங்கும் தமிழர்களை பெந்தகொஸ்தே போதனைகள் தொடர்ந்து அடிமைப்படுத்தி சீரழித்து வருகின்றன. சத்தியத்தை விளக்கிப் போதிக்கக்கூடிய பிரசங்கிகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. சீர்திருத்தப் போதனைகள் இன்று சீனக் கிறிஸ்தவர்கள் மத்தியில் சிறிது சிறிதாகப் பரவுவதுபோல தமிழ் கிறிஸ்தவர்களும் அதனை அரவணைத்துக்கொள்ளும் நாள் வரவேண்டும். சத்தியத்தை சத்தியமாகப் போதிக்கும் தமிழ் சபைகள் எழவேண்டும். மலேசியத் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றிருக்கும் ஆத்மீக இருள் அகன்று சீர்திருத்தப் பகலவன் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நாளுக்காக நாம் ஜெபிப்போம்.