நாம் இதுவரை இவ்விதழின் முதலாவது ஆக்கத்தில் பார்த்த வேதம் போதிக்கும் ஆராதனை விதிக்கு வரலாற்றில் திருச்சபைத் தலைவர்கள் முறையாக ஒரு பெயரைக் கொடுத்தார்கள். அதற்கு வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஆராதனை விதி என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் The Regulative Principle of Worship என்று அழைப்பார்கள். இது இப்படி ஒரு பெயரைப் பெற்று அழைக்கப்பட்டு பிரபலமானதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. சீர்திருத்தவாத காலத்திற்குப் பின்பு பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் திருச்சபையில் ஒரு ஆபத்து தலைதூக்கியது. இவ்வாபத்து முக்கியமாக ஆராதனையையும், போதக ஊழியத்தையும் பாதிப்பதாக இருந்தது. ஒரு விதத்தில் மறுபடியும் ரோமன் கத்தோலிக்க சடங்கு முறைகளை ஆராதனையில் அறிமுகப்படுத்தும் ஆபத்தாகவும் காணப்பட்டது. இவ்வாபத்து தோன்றிய வரலாற்றை முதலில் பார்ப்போம்.
பதினேழாம் நூற்றாண்டில் தூய்மைவாதிகள் என்று அழைக்கப்பட்ட பியூரிட்டன்களின் காலத்தில் இங்கிலாந்து திருச்சபையில் ஜோன் ஹீப்பர் என்ற ஒரு மனிதர் இருந்தார். இவரது திறமை, பக்தி விருத்தி என்பவற்றைப் பார்த்து திருச்சபை இவருக்கு சபைப்போதக ஊழியத்திற்கான நியமனத்தை அளிக்க விரும்பியது. அதைக் கேள்விப்பட்ட ஹீப்பருக்கும் அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. இருந்தபோதும் அவ்வூழிய நியமனத்தோடு வந்த சில நிபந்தனைகளைக் குறித்து ஹீப்பர் சந்தேகங்கொண்டார். போதக ஊழியத்தைச் செய்யும்போது அதற்குரிய அங்கிகள் மற்றும் சடங்காச்சாரியங்களையும் ஹீப்பர் பின்பற்ற வேண்டும் என்று இங்கிலாந்து சபை எதிர்பார்த்தது. சீர்திருத்தவாத போதனைகளால் வேத ஞானத்தை அடைந்து அதை அன்றாடம் ஆராய்ந்து வந்த ஹீப்பர் போதக ஊழியத்திற்கு வருபவர்கள் இவ்வாறு அங்கி அணிய வேண்டும் என்றோ அல்லது சடங்காச்சாரியங்களைப் பின்பற்ற வேண்டும் என்றோ வேதம் எங்கும் போதிக்கவில்லை என்பதை உணர்ந்து அவற்றை செய்ய மறுத்தார். கர்த்தர் கட்டளையிடாதவற்றை செய்வது தவறு என்றும் அவர் கட்டளையிடாதவற்றை ஊழியத்திலும், ஆராதனையிலும் இணைப்பது பெருந்தவறு என்றும் வாதாடினார். ஆனால், இங்கிலாந்து திருச்சபை அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல், கர்த்தர் அவற்றை செய்யும்படிச் சொல்லாவிட்டாலும் செய்யக்கூடாது என்று எங்கும் சொல்லவில்லையே என்று மறுவாதம் செய்து ஹீப்பர் இவற்றிற்கு சம்மதித்துத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தியது. ஹீப்பர் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த திருச்சபைத் தலைவர்கள் ஹீப்பரைத் தீயில் எரித்தனர்.
இவ்வாறாக எழுந்த அங்கி பற்றிய பிரச்சனை பதினேழாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளான பியூரிட்டன்களை (தூய்மைவாதிகளை) பெரிதும் சிந்திக்க வைத்தது. தமது முன்னோர் இரத்தம் சிந்திப் பெற்ற மத சுதந்திரத்தை மறுபடியும் இழந்து போகக்கூடாது என்று உணர்ந்து சபை ஆராதனையைப் பாதுகாக்கவும், ரோமன் கத்தோலிக்க சடங்காச்சாரியங்கள் மறுபடியும் புகுந்து ஆராதனையையும், ஊழியத்தையும் பாழடித்துவிடாமலிருக்கவும் ஆராதனைபற்றிய வேதபோதனைகளைத் தெளிவாக எழுதிவைத்து சபையைக் காக்கப் பாடுபட்டார்கள். இவ்வேத விதிகளே The Regulative Principle of Worship என்று அழைக்கப்படுகின்றது. பிசப்புக்கான அங்கியில் ஆரம்பித்து திருச்சபையை அங்காடியாக மாற்றும் முயற்சிகள் உலகில் தொடர்ந்திருக்கும் என்பதை உணர்ந்த பியூரிட்டன் பெரியோர்கள் இவ்விதிகளை விசுவாச அறிக்கைகளில் தெளிவாக எழுத வைத்தனர். சீர்திருத்தவாதிகளின் வழியிலும், பியூரிட்டன் பெரியோர்களின் வழியிலும் வந்த 1689 ஆம் ஆண்டு விசுவாச அறிக்கை 22 ஆம் அதிகாரத்தில் “ஆராதனையும், ஓய்வு நாளும்” என்ற தலைப்பில் இவ்விதியைத் தெளிவாக விளக்குகிறது. இவ்வதிகாரத்தின் முதல் பாரா அவ்விதி பற்றி பின்வருமாறு விளக்குகிறது:
“அனைத்தின் மீதும் ஆளுகையையும், இறை ஆண்மையையும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று உள்ளுணர்வு காட்டுகின்றது. அவர் நீதியானவரும், நல்லவருமாக இருந்து எல்லோருக்கும் நல்லதையே செய்கிறார். ஆகவே, மனிதர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், ஆவியோடும், வல்லமையோடும் அவருக்குப் பயந்து, அவர்ல் அன்பு கூர்ந்து, அவரைப்போற்றி, தொழுது, அவரில் நம்பிக்கை வைத்து அவருக்குப் பணி செய்ய வேண்டும். ஆனால், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே வழிபாட்டு முறையை தனது சித்தத்திற்கிணங்க கடவுளே ஏற்படுத்தியுள்ளார். ஆகவே, நமது வழிபாட்டு முறைகள் அவரது வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவரை மனிதனால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகள் மூலமாகவோ அல்லது பிசாசின் வழிநடத்தலின்படியோ வழிபட முடியாது. கடவுளுடைய வார்த்தையின் மூலம் ஆணையிட்டுத் தரப்படாத அனைத்து வழிபாட்டு முறைகளும், கண்களுக்குப் புலனாகின்ற கடவுளைப் பற்றிய அமையாளங்களும் (உதாரணம்: சிலைகள், கடவுளைப்பற்றிய படங்கள் போன்றவை தெளிவாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.”
இதுவே வேதம் போதிக்கும் ஆராதனை விதியாகும். இவ்விதி இரண்டு முக்கிய சத்தியங்களைப் போதிப்பதைப் பார்க்கிறோம் (1) கர்த்தரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆராதனையை அவரே ஏற்படுத்தியுள்ளார் என்பது முதலாவது. அதாவது கர்த்தரை நாம் ஆராதிக்க வேண்டிய விதத்தை வேதம் தெளிவாகப் போதிக்கிறது. (2) அவரது வார்த்தையின் மூலம் ஆணையிட்டுத் தரப்படாத அனைத்து வழிபாட்டு முறைகளும் வேதத்தால் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது இரண்டாவது. இவ்விதமாக இவ்விதி விளக்கப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. தூய்மைவாதியான ஹீப்பர் விசேஷ அங்கி அணிய முடியாதென்று மறுத்தபோது இங்கிலாந்து சபைத் தலைவர்கள் சொன்ன வரட்டு வாதத்தை மீண்டும் எண்ணிப் பார்ப்போம். அவர்கள் வேதம் போதகர்கள் விசேஷ அங்கி அணியக்கூடாதென்று எங்கும் சொல்லவில்லையே என்று சொன்னார்கள். அதனால் வேதம் சொல்லாததை செய்வதில் தவறில்லை என்பது அவர்களுடைய வாதமாக இருந்தது. வேதம் விசேஷ அங்கி அணியக்கூடாதென்று சொல்லியிருந்தால் அணியக்கூடாதுதான். ஆனால் அது அப்படி சொல்லாததால் சபை அதைச் செய்வதில் தவறில்லை என்றும் நீங்கள் அதற்கு உடன்பட மறுப்பது தவறு என்றும் சபை வாதாடியது. இவ்வாதத்திற்கு Normative Principle of Worship என்று பெயர். இந்தவிதத்திலேயே இங்கிலாந்து திருச்சபை சிந்தித்தது.
இவ்வாதத்தைப் பார்த்த தூய்மைவாதிகள் இதிலிருந்த தவறான சிந்தனையையும், அதனால் திருச்சபைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் உணர்ந்தனர். அவர்கள் இந்த ஆபத்தான் வாதத்திற்கெதிராக வேதம் உண்மையில் எதைப்போதிக்கிறது என்பதை விளக்கினர். தூய்மைவாதிகள், வேதம் சொல்வதை மட்டுமே நாம் செய்யவேண்டும் என்றும், வேதம் சொல்லாததை நாம் ஒருபோதும் செய்ய நினைக்கக்கூடாது என்றும் விளக்கினார்கள். வேதம் செய்யச்சொல்வது மட்டுமே ஆராதனையில் காணப்பட வேண்டும் என்பது அவர்களுடைய விளக்கமாக இருந்தது. அவற்றை செய்யாமல் இருப்பதும், அவற்றை மாற்றி அமைப்பதும், அவற்றோடு வேறு எதையும் சேர்ப்பதும் கர்த்தருக்கு விரோதமானது என்று போதித்தனர். அதுமட்டுமல்லாமல் கர்த்தர் வேதத்தில் சொல்லாத எதையும் நாம் ஆராதனையில் செய்வதும் தவறு என்று போதித்தனர். கர்த்தர் சொல்லாததை நாம் ஆராதனையில் செய்ய நினைத்துப் பார்ப்பது தவறு என்று அவர்கள் போதித்தனர். நாதாபும், அபியுவும் கர்த்தர் சொல்லாததை அவர் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். அதனால் அழிந்து போனார்கள். தூய்மைவாதிகளும், இங்கிலாந்து திருச்சபையும் போதித்த இரு துருவங்களான இவ்விரு விதிகளையும் பின்வரும் வரைபடத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்து திருச்சபையின் Normative Principle of Worship
தூய்மைவாதிகளின் Regulative Principle of Worship
இரு துருவங்களான இவ்விரு விதிகளும் நாம் இதுவரை விளக்கியவற்றை படம்பிடித்துக் காட்டுகின்றன. வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி வேதம் போதிக்கும் ஆராதனை விதியை விளக்குவதோடு மட்டும் நின்றுவிடாது மெய்யான ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களையும் விளக்குகிறது. தூய்மைவாதிகள் புதிய ஏற்பாட்டு ஆராதனையில் இன்று இருக்க வேண்டிய வேதம் போதிக்கும் அம்சங்களைப் பற்றியும் விளக்கியுள்ளனர். இங்கிலாந்து திருச்சபை கர்த்தரால் தடைசெய்யப்படாத எதையும் ஆராதனையில் சேர்த்துக்கொள்ளலாம் என்று போதிக்க, தூய்மைவாதிகள் கர்த்தர் தன் வார்த்தையில் விளக்கியிருக்கும் ஆராதனையில் இடம்பேற வேண்டிய அம்சங்களை மட்டுமே எப்போதும் ஆராதனையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று போதித்தனர். 1689ம் ஆண்டு விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரத்தின் 4ம் பாராவும், 5ம் பாராவும் பின்வருமாறு விளக்குகின்றன:
“நீதியான காரியங்களுக்கும், இப்போது வாழ்பவர்களுக்கும், இனிப் பிறக்கப்போகும் எல்லாவித மனிதர்களுக்கும் ஜெபம் செய்யப்படல் வேண்டும்.” (1 தீமோத்தேயு 2:1, 2).
“வேதாகமத்தை வாசிப்பதும், கடவுளின் வார்த்தையை அருளுரை செய்வதும், அதைக் கேட்பதும், சங்கிதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஞானப்பாட்டுக்களாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனை பண்ணுவதும், திருமுழுக்கையும், திருவிருந்தையும் கடைப்பிடித்தல் ஆகிய தெய்வீக வழிபாட்டு முறைகள் கீழ்ப்படிவோடும், அறிவுபூர்வமாகவும், விசுவாசத்தோடும், மரியாதையோடும் நடத்தப்படல் வேண்டும். அத்தோடு சிறப்பான காலங்களில் பயபக்தியோடு கூடிய தாழ்மையுடன் உணவு மறுப்பும் (உபவாசம்), நன்றி நவிலலும் பரிசுத்தத்தோடு, மரியாதையோடும் நடத்தப்படல் வேண்டும்.” (யாத்திராகமம் 15:1-9; எஸ்தர் 4:16; சங்கீதம் 107; யோவேல் 2:12; மத்தேயு 28:19, 20; லூக்கா 8:18; 1 கொரிந்தியர் 11:26; எபேசியர் 5:19; கொலோசெயர் 3:16; தீமோத்தேயு 4:13; 2 தீமோத்தேயு 4:2).
இப்பகுதியின் மூலம் ஆராதனையில் இருக்க வேண்டிய, வேதம் தெளிவாகப் போதிக்கும் அம்சங்களை அறிந்து கொள்ள முடிகிறது. (1) ஜெபம் (2) வேத வாசிப்பு (3) அருளுரை (4) சங்கீதங்களையும், கீர்த்தனைகளையும் ஞானப்பாடல்களையும் பாடுதல் (5) திருமுழுக்கு, திருவிருந்து ஆகியவையே ஆராதனையில் காணப்பட வேண்டும். இவற்றோடு காணிக்கை எடுத்தலையும் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றைத் தவிர பொது ஆராதனையில் வேறு எதற்கும் இடமில்லை என்றார்கள் தூய்மைவாதிகள். இவை வேதத்தால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், வேதம் அனுமதிக்காமவற்றை நாம் ஆராதனையில் சேர்ப்பது கர்த்தருக்கு விரோதமான அந்நிய அக்கினியை அவர் முன் வைப்பதாகும் என்றார்கள் சீர்திருத்தப் பெரியோர்கள். ஆராதனை எத்தேசத்தின் மூலையில், எந்த ஜாதி, இனம் மக்கள் மத்தியில் நடந்தாலும் வேதம் போதிக்கும் இவ்வம்சங்கள் காணப்பட வேண்டும் என்றும் இவற்றைத் தவிர வேறு எதையும் சேர்க்கக்கூடாது என்கிறது வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி. இன்று உலகெங்கும் இருக்கும் மெய்ச்சபைகள் வேதம் போதிக்கும் இவ்வறையறுக்கப்பட்ட ஆராதனை முறையைப் பின்பற்றியே ஆராதனையை நடத்தி வருகின்றனர். கர்த்தருடைய ஆராதனையில் அவருடைய வேதம் மட்டுமே அதிகாரம் செலுத்த வேண்டும், மனித ஞானத்திற்கும், நமக்கு இஷ்டமான ஆராதனைக்கும் அங்கு இடமில்லை என்பது சீர்திருத்தவாத ஆராதனைத் தத்துவம்.