திருச்சபைகள் தவறாமல் இன்று வாலிபர்களுக்காக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நன்மையான காரியம். அதுவும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் அத்தகைய கூட்டங்கள் அவசியம். கலாச்சாரம் இளைஞர்கள் ஒன்றுகூட முடியாதபடி தடுத்துவைத்திருக்கின்றன நிலமையில் கிறிஸ்தவ இளைஞர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள இத்தகைய கூட்டங்கள் தேவை. ஆனால், இன்று சில இடங்களில் இத்தகைய கூட்டங்கள் தவறான விதத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. சபைப் போதகர்களின் மேற்பார்வையே இல்லாமல் வாலிபர்கள் தம் மனம்போனபடி நடந்து கொள்ளும்வகையில் இந்தக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. வேறு சில இடங்களில் சபைத்தொடர்பில்லாத நிறுவனங்களைச் சேர்ந்தோர் இந்தக் கூட்டங்கள் நடத்தி தம் நிறுவனங்களுக்கு ஆள் சேர்த்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது திருச்சபையைச் சேர்ந்த வாலிபர்கள் வளர உதவி செய்யாது. இன்னும் சில இடங்களில் இந்தக்கூட்டங்களில் ஆவிக்குரிய காரியங்களைவிட உலகஇச்சைக்குரிய காரியங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.
வாலிபர்கள் கூட்டமென்ற உடனேயே பலருக்கு, இசையும், பாட்டும், படமும், விருந்தும், கேளிக்கையும் நினைவில் நர்த்தனமாடும். இதற்குக் காரணம் அநேக கூட்டங்களில் இவற்றிற்கே முதலிடம் கொடுக்கப்படுவதுதான். ஏன், இப்படி? என்று கேட்டால், இவைகளில்லாவிட்டால் வாலிபர்களாவது கூட்டங்களுக்க வருவதாவது, என்று காரணம் சொல்லுவார்கள். உண்மைதான், வாலிபர் கூட்டங்களில் தாத்தா, பாட்டன்மார்களுக்கு இருக்கக்கூடிய அயிட்டங்கள் இருக்கக் கூடாதுதான். ஆனால், கிறிஸ்தவ வாலிபர் கூட்டங்கள் இந்த உலகத்து வாலிபர்கள் கூடிவருகின்ற கூட்டங்களைவிட வேறுபட்ட முறையில் இருக்கவேண்டியது அவசியம். வாலிபர் கூட்டங்களை நடத்த வேண்டுமென்பதற்காக ஒருபோதும் நடத்தக்கூடாது.
இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய தலைவர்கள். அவர்கள் கூரான கத்தியைப்போன்றவர்கள். கத்தியை நல்லவிதமாக பயன்படுத்தினால் மட்டுமே கையை வெட்டாது. வாலிபர் கூட்டம்தானே என்று அலட்சியமாக இருந்து அது எப்படியோ போகட்டம் என்று விட்டுவிட்டால் அது போதகர்களுடைய கையை வெட்டாமல் விடாது. போதகர்கள் வாலிபர் கூட்டங்கள் நடத்தப்படும் முறையையும். அவற்றில் நடக்கும் காரியங்களையும் மேற்பார்வை செய்வது அவசியம். நல்ல ஆலோசனைகளைத் தந்து வாலிபர் கூட்டங்கள் ஆவிக்குரியகூட்டங்களாக நடக்கத் துணை செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை. முக்கியமாக வாலிபர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய அனைத்தையும் ஆவிக்குரியவிதத்தில் ஆராய்ந்து உதவும் வேதபோதனைகளைத் தரும் கூட்டங்களாக அவை அமைய வேண்டும். வாலிபர் கூட்டம்தானே என்று அலட்சியப்படுத்தி, அலங்கோலமான தலைமுடியும், ஜீன்சும், கையில் கிட்டாரும், வாயில் அலைகுறை ஆங்கிலமும் எந்த வேதஞானமும் இல்லாத யாரோ ஒருவரை பேச்சாளராக இருக்க அனுமதிக்கக்கூடாது. இன்று அநேக வாலிபர் கூட்டங்களில் சத்தான ஆவிக்குரிய செய்திகளை வாலிபர்கள் கேட்கக்கூடியதாக இல்லை. இத்தவறுக்கு சபைப்போதகர்களே முழுப்பொறுப்பு. இந்த நிலமை மாறி வாலிபர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இந்தக்கூட்டங்கள் உதவ வேண்டும்.