வேத வசனம் வல்லமையுள்ளதாய் இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அது தேவனுடைய வசனமாக இருப்பதால் உலகத்து மனிதர்களின் எழுத்துக்களைவிட மேன்மையுள்ளதாய் இருக்கிறது. வேத வசனத்தால் மனிதன் ஜீவனை அடைய முடியும். வேறு நூல்களால் அதை அளிக்க முடியாது. வேத வசனம் ஆத்துமாக்களை பரலோக வாழ்வில் வழி நடத்தக்கூடியதாய் இருக்கிறது. வேத வசனம் ஆத்துமாவின் பாவத்தை கண்டித்து உணர்த்தி கர்த்தரின் வழியில் செல்ல உதவக்கூடியதாய் இருக்கிறது. அதை உலகத்தில் காணப்படும் சாதாரண மனிதர்களின் எழுத்துக்களால் செய்ய முடியாது. இது நம்மில் அநேகர் அறிந்த சத்தியம். ஆனால், வேத வசனங்கள் ஆத்துமாவில் இவற்றை எப்படிச் செய்கின்றன என்ற உண்மை சிலருக்குப் புரியாமலிருக்கின்றது.
சமீபத்தில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மாதாந்தர தினசரி தியான இதழில் (அன்றன்றுள்ள அப்பம், அக்டோபர் 2001 – சாம் ஜெபத்துரை) பின்வரும் செய்தி இருந்தது. அதை எழுதிய ஆசிரியர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். “நான் வருமானவரி இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இடைவிடாமல் ஊழியம்செய்து கொண்டிருந்தேன். அதனால் அலுவலகத்தில் பிரமோஷனுக்காக படிப்பதற்கு நேரமில்லாமல் போனது. அப்போது நடந்த தேர்வுகளில் இரண்டுமுறை நான் தோல்வியடைந்துவிட்டேன். ஒரு நான் என்னுடைய மனைவி பிலிப்பியர் 4:13ஐ எனக்கு வாசித்து காண்பித்து, இந்த வேத வசனத்தை உறுதியாய் பி¬த்துக்கொண்டு படியுங்கள். நிச்சயமாகவே வெற்றி பெறுவீர்கள் என்றாள். நான் அந்த வசனத்தை படித்தேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே இந்த பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு எனக்கு பெலண்டு, ஞானமும் உண்டு என்று திரும்பத் திரும்ப விசுவாச அறிக்கை செய்தேன். படிப்பதற்கு புத்தகத்தைத் திறக்கும்போதெல்லாம் இந்த வசனம் என்னை பெலப்படுத்தியது. விசுவாசம் எனக்குள் வந்தது. அப்படியே அந்தத் தேர்வில் வெற்றி பெற கர்த்தர் எனக்கு உதவி செய்தார்.” என்று அவர் எழுதியிருந்தார். அத்தோடு “ஒவ்வொரு பக்தர்களையும் பெலப்படுத்தக்கூடிய வாக்குத்தத்த வசனங்கள் வேதத்தில் உண்டு” என்றும் சொல்லியிருந்தார்,.
இந்த ஊழியர் மேலே விளக்கிய தனது அனுபவத்தை இன்று அநேகர் நம்பிப் பின்பற்றி வருகிறார்கள். வேத வசனங்களை இந்தவிதமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வசனத்தைத் தெரிவு செய்து அந்த வசனத்தை விசுவாசித்து தொடர்ந்து தியானித்து வந்தால் தமக்குள் விசுவாசம் ஏற்படும் என்றும், தாம் செய்ய நிச்சயித்திருக்கும் காரியம் நிச்சயமாக வெற்றி அடையும் என்றும் எண்ணி வருகிறார்கள். வேத வசனம் இந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வேதம் போதிக்கிறதா? வேத வசனம் வல்லமையுள்ளது என்று நாம் கூறும்போது, வாழ்க்கையில் நடக்க வேண்டிய காரியங்களில் வெற்றி பெற இந்தவகையில் அது உதவுகிறது என்றா கூறுகிறோம்? என்ற கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.
முதலில், மேலே நாம் பார்த்தவிதமாக வேத வசனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனையை பிரபலப்படுத்திய மனிதரை நாம் அடையாளங்கண்டு கொள்வது நல்லது. தென் கொரியாவைச் சேர்ந்த முன்பு போல் யாங்கி சோ (Paul Yonggi Cho) என்று அழைக்கப்பட்டு இப்போது தன் பெயரை டேவிட் யொங்கி சோ (David Yonggi Cho) என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் மனிதர்தான் எழுபதுகளில் இப்போதனையை பிரபலப்படுத்தினார். தனது “நான்காம் பரிமாணம்” (Fourth Dimension) என்ற நூலில் வேத வசனம் இந்தவிதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று டேலிட் யொங்கி சேத விளக்குகிறார். அது வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ உதவும் என்பது இந்த மனிதரின் போதனை, வசனம் என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் இரு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று லோகொஸ் (Logos), இன்னொன்று ரேமா (Rema) இதில் லோகொஸ் வசனத்தைக் குறிக்கும் பொதுவான ஒரு வார்த்தை என்றும், ரேமா கர்த்தரிடம் இருந்து நமக்குக் கொடுக்கப்படும் விசேஷமான வார்த்தை என்றும் டேவிட் யொங்கி சோ விளக்கட் கொடுக்கிறார். ரேமாவைக் கர்த்தரிடம் இருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் விசுவாசத்தை அடைந்து வாழ்க்கையில் வெற்றிகளை அடையலாம் என்றும் விளக்குகிறார். ஆனால், இந்த இரு வார்த்தைகளும் வேதத்தில் யொங்கி சோ கூறும்விதமாக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. வேத வல்லுனர்கள் ஒருவராவது இந்தவகையில் இவ்வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்ததில்லை. உண்மையில் இந்த இரு வார்த்தைகளுக்கும் இடையில் கிரேக்க மொழியில் அப்படி ஒரு பெரிய வித்தியாசமில்லை. லோகொஸ் என்ற வார்த்தை முக்கியமாக இயேசு கிறிஸ்துவை குறித்துப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (யோவான் 1). அவர் தெய்வீக வார்த்தையாய் இருக்கிறார் என்பதால் இப்படி விளக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் பொதுவாக வசனத்தைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டள்ளது. லோகொஸ், ரேமா என்ற இரு வார்த்தைகளுமே வேத வசனத்தைக் குறிக்கும் ஒரே பொருளுடைய இரு வார்த்தைகளாகவே பெரும்பாலும் புதிய ஏற்பாடெங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைவைத்து வார்த்தை ஜாலம் செய்து ஒரு போதனையை உருவாக்குவது பெருந்தவறு. வெறும் வார்த்தைகளை வைத்து இறையியல் போதனைகளை உருவாக்குவதை வேதம் எப்போதும் அடியோடு நிராகரிக்கிறது. அவ்வாறு செய்வது வேதவிளக்க விதிகளுக்கெல்லாம் எதிரானது.
யொங்கி சோவின் வேதத்திற்குப் புறம்பான போதனை எழுபதுகளிலும், எண்பதுகளிலும் அநேக கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே சபைகளால் பின்பற்றப்பட்டது. தனக்கு ஒரு கார் வேண்டும் என்பதற்காக அதைப்பெற்றுக்கொள்வதற்காக ஒரு வேத வசனத்தைக் கர்த்தர் தந்திருக்கிறார் என்று சொல்லி அவ்வசனத்தை வைத்து அன்றாடம் கார் கிடைத்துவிடும் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஒரு போதகரையும் நான் எண்பதுகளில் சந்தித்திருக்கின்றேன். இப்போதனை அன்றிருந்தளவுக்கு இன்று பிரபலமடைந்திராவிட்டாலும் தொடர்ந்தும் விசுவாசிகளைப் பாதித்து வருகின்றது என்பதற்கு அன்றாட அப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் ஒரு உதாரணம். (யொங்கி சோவின் நூலான நான்காம் பரிமாணத்தை ஆராய்ந்த நாம் ஒரு சிறு நூலை சில வருடங்களுக்கு முன் “போல் யொங்கி சோவின் நான்காம் பிரமாணம்” என்ற தலைப்பில் வெளியிட்டோம். அது தேவையானவர்கள் எமக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்).
இனி வேத வசனத்தை இப்படிப்பயன்படுத்தலாமா? உண்மையில் அதை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதை இனிப்பார்ப்போம்.
“அன்றாட அப்பத்தில்” நாம் பார்த்தவிதத்தில் வேத வசனங்களை நாம் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வேத வசனங்கள் அலாவுதீனின் அற்புத விளக்கைப்போல் வேலை செய்யாது. அது மாஜிக் போல நாம் நினைத்தபோது கேட்பதைக் கொடுத்துவிடும் என்று வேதம் புரியாத அநேக விசுவாசிகள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதாவது ஒரு வேத வசனத்தைத் தேடிப்போவது பலருடைய வழக்கமாக இருக்கின்றது. தமிழ் கிறிஸ்தவ உலகம் அறிந்துள்ள அநேக பிரசங்கிகளே இப்பழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் வேதத்தை இவர்கள் தெளிவாகப் போதிக்காது இம்மாதிரியான வாக்குத்தத்த வசனங்களைக் கொடுத்து அப்பாவி விசுவாசிகளை ஏமாற்றி வருகிறார்கள். இந்தவிதமாக வேதத்தைப் பயன்படுத்துவது தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் வல்லமையானதுதான், ஆனால் அது நாம் கேட்பது கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டிய மாஜிக் புத்தகம் அல்ல.
இதேபோல் ஒரு வேதவசனத்தை எடுத்துக்கொண்டு கர்த்தர் அதை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருக்கிறார் என்று கூறும் வழக்கத்தையும் அநேக பிரசங்கிகளிடம் பார்க்கலாம். அவ்வசனத்தைக் கர்த்தர் அவர்களைத் தனிப்பட்டவிதத்தில் சந்தித்துக் கொடுத்ததுபோல் அவர்கள் பிரசங்கம் செய்யவும், எழுதவும் செய்வார்கள். ஒரு மாதாந்தர ஜெபக்குறிப்பு (பண வசூல் செய்யும்) பத்திரிகை ஒவ்வொரு மாதமும் இவ்வாறு ஒரு வசனத்தை வாசிப்பவர்களுக்கு வாக்குத்தத்தமாக முதல் பக்கத்தில் கொடுத்து வருகிறது. வாசிப்பவர்கள் அதை அம்மாதம் முழுவதும் தொடர்ந்து மந்திரம் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும் வந்தால் அது வெற்றியளிக்கும் என்பது அப்பத்திரிகையை வெளியிடுபவரின் போதனை. கிராமத்து மக்கள் மட்டுமல்லாது நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் கூட இம்மாதிரியான மாயாஜால வித்தைகளுக்கு பலியாகிவிடுவதுதான் பெரும் புதுமை! இது பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த இருண்டகால சூழ்நிலையைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. அன்று ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை மக்கள் வாசிக்க முடியாதபடி செய்து அவர்களுடைய ஆத்மீக மீட்புக்கு எந்த வழியுமில்லாமல் செய்து வைத்திருந்தது. இன்று, வேதத்தை கண்கட்டி வித்தை செய்யும் மந்திரக்கோலைப் போல் பயன்படுத்தி அநேக பிரசங்கிகள் ஆத்துமாக்களின் அறிவுக்கண்களைத் தொடர்ந்து இருட்டில் வைத்திருக்கிறார்கள்.
வேதத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தி ஆத்துமாக்களைப் பலர் ஏமாற்றி வருகிறார்கள் என்று பார்த்தோம். ஆனால் வேதத்தை நாம் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். இதை வாசிக்கும் ஆத்துமாக்களாவது தம்மைக்காத்துக்கொள்ள இது உதவட்டும். முதலில், வேதம் வல்லமையுள்ள கர்த்தரின் வசனம் என்று நாம் கூறும்போது, அதிலுள்ள வசனங்கள் தீடிரெனக் குதித்தெழுந்து அற்புதங்கள் செய்யும் என்று நாம் சொல்லவில்லை. வேத வசனங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று, கலாச்சார, சமூக அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வசனங்கள் போதிக்கும் சத்தியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் அவ்வசனங்களை அவை கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தின் அடிப்படையில் இலக்கணபூர்வமாகவும், கலாச்சார வரலாற்றடிப்படையிலும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முறையாக ஆராய்ந்து படிக்கும்போது அவ்வசனங்கள் உண்மையில் எதைப் போதிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படிப் படித்துப் புரிந்து கொண்ட பின்பே அவ்வசனங்களின் மூலம் கர்த்தர் நாம் வாழ்க்கையில் எதைச்செய்யும்படி எதிர்பார்க்கிறார் என்று உணர்ந்து அதன்பின் ஜெபத்தோடு நடக்க வேண்டும். சாதாரண கடிதங்களையும், நூல்களையும் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்த வேண்டிய முறைகளை வேதத்தைப் படிக்கவும் பயன்படுத்த வேண்டும். ஒரு வசனத்தைப் புரிந்து கொள்ள அந்த வசனம் எந்த வரலாற்று, கலாச்சார, சமூக சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது? அதற்கும் முழு வேதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? அது பழைய ஏற்பாட்டு வசனமாக இருந்தால் புதிய ஏற்பாடு அதைப்பற்றி என்ன சொல்கிறது? என்ற கேள்விகளையெல்லாம் முதலில் கேட்க வேண்டும். வேதம் நாம் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண உலக மொழியில் இலக்கண சுத்தத்தோடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைக் கவனமாக கர்த்தரின் ஆவியின் துணையோடு முறையாகப்படித்தால் மட்டுமே அதன் போதனையை எவரும் அறிந்து கொள்ள முடியும். கஷ்டப்பட்டுக் கவனத்தோடு படிக்காமல் வேத சத்தியங்களை புரிந்து கொண்ட எந்த மனிதனும் இந்த உலகத்தில் பிறந்ததோ, வாழ்ந்ததோ இல்லை. இனிப்பிறக்கப் போவதும் இல்லை. இயேசு கூட தான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பழைய ஏற்பாட்டிற்கு விளக்கம் கொடுத்தபோது நாம் மேலே பார்த்த விதிகளுக்கு உட்பட்டே விளக்கங் கொடுத்துள்ளார். அவர் தேவனாக இருந்தபோதும்கூட பழைய ஏற்பாட்டின் எந்தப் பகுதியையோ அல்லது வசனத்தையோ அவர் மந்திரம் சொல்வதுபோல் பயன்படுத்தியது இல்லை. இயேசுவின் மலைப்பிரசங்கத்தை உதாரணத்திற்கு வாசித்துப் பாருங்கள் (மத்தேயு 5-7).
நாம் வேதப்பகுதிகளை ஜெபத்தோடு வாசித்து தியானிக்க வேண்டும். தியானிப்பது என்றால் வேதத்தை விசுவாசத்தோடு ஜெபத்தோடும் படிப்பது என்றுதான் பொருள். அப்படித் தியானிக்கும்போது அவ்வசனங்களின் மூலம் கர்த்தர் நம்மோடு பேசி நமக்கு ஆவிக்குரிய பெலத்தை அளிக்கிறார். அப்போதே நாம் கிறிஸ்துவுக்குள் நமது விசுவாசத்தில் உறுதியடைகிறோம். ஆத்மீக விருத்திக்காக ஜெபத்தோடும், கருத்தோடும் வேதத்தைப் படிப்பவர்கள் மட்டுமே கர்த்தரின் சித்தத்தை வேதத்தின் மூலம் எப்போதும் அறிந்து கொள்கிறார்கள். இதெல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமான அனுபவம் அல்ல. வேதத்தை வாசிக்கும் எல்லா விசுவாசிகளும் இதை அனுபவிக்க முடியும். ஒரு போதகரோ, ஊழியக்காரரோ, சக விசுவாசியோ நாம் வாழ்க்கையில் வெற்றியடைய நமக்கு தந்திர வித்தைபோல (Magic formula) வாக்குத்தத்த வசனம் தர வேண்டிய அவசியமில்லை. ஆவியின் துணையோடு நாம் வேதத்தைப் படிக்க வேண்டும். அப்போது அது கர்த்தரின் வழியில் நம்மை வழிநடத்தி உயிர்ப்பிக்கிறது. இதையே சங்கிதக்காரன் 119ம் சங்கீதத்தில் வலியுறுத்துகிறான்.
கிறிஸ்தவர்கள் இனிப் பரீட்சையில் தேற வாக்குத்தத்த வசனங்களைத் தேடி அலையாமல் கஷ்டப்பட்டு பரிட்சைக்குத் தம்மைத் தயார் செய்து கொள்வது நல்லது. கஷ்டப்பட்டுப் படிக்காமல் பரிட்சையில் தேறியவர்கள் ஒருவருமில்லை. நிச்சயம் பரிட்சைக்காக ஜெபிக்கலாம். உழைக்க விரும்பாத சோம்பேரியின் ஜெபம் அவன் இருக்கும் வீட்டுக்கூரைக்கு மேல் போகாது. வேதத்தை மந்திரக்கோல் போல் பயன்படுத்துவதை விசுவாசிகள் கைவிட வேண்டும். அவ்வாறு பயன்படுத்துகிறவர்களின் பிரசங்கங்களையும். பத்திரிகைகளையும் நாடக்கூடாது. மாறாக, வேதத்தை ஜெபத்தோடு படித்துத் தியானிப்பது நல்லது. வேதவசனங்கள் வல்லமையுள்ளவைதான். அவற்றை முறையாக ஆவிக்குரிய விதத்தில் படித்துத் தியானித்துப் பயன்படுத்தும்போதே அவற்றின் வல்லமையை நாம் அனுபவிக்க முடியும்.