தென் ஆசியாவில் இந்திய துணைக்கண்டத்தை ஒட்டிக்கொண்டு இந்து மகா சமுத்திரத்தில் அமைந்திருக்கும் தீவான ஸ்ரீலங்கா இயற்கை காட்சிகள் நிறைந்த அழகான நாடு. ஐரோப்பியர்களும், ஏனைய நாட்டைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக ஓடிவரும் நாடு. நாட்டைச் சுற்றியுற்ற அருமையான வெண்மணற் கடற்கரையோரங்களையும், மத்தியில் குறிர்மையான உயர்ந்த மலைப்பிரதேசங்களையும், எந்நாட்டாரையும் ஏங்க வைக்கும் கண்கவரும் சூழலையும் கொண்டு விளங்கும் நாடு ஸ்ரீ லங்கா. இத்தனைக்கும் பெயர் பெற்ற அந்நாட்டில் கடந்த 20 வருடங்களாக அரச படைகளுக்கம், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வந்துள்ள போர் ஒரு வருடத்திற்கு முன்பி நோர்வே நாட்டின் உதவியுடன் ஆரம்பமான சமாதானப் பேச்சு வார்த்தையின் காரணமாக ஒரு முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தினால் உள்நாட்டில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்யவும், புலிகளின் கட்டப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு பொருட்கள் போகவும் முடிகின்றது. செக் பாயின்டுகளில் அரச படைகளின் தொல்லைகள் இல்லாமல் எங்கும் பிரயாணம் செய்ய முடிவதே பெதும் வசதிதான். இந்தப் போர் நிறுத்தத்தால் உல்லாசப் பிரயாணிகளின் வருகை இந்தவருடம் ஜனவரி மாதத்தில் மட்டும் 12% அதிகரித்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதுவரை படைகளுக்கும், ஆயுதங்களுக்கும் செலவிட்டு வந்த கோடிக்கணக்கான பணத்தையெல்லாம் நாட்டைச் செழிப்படையச் செய்யப் பயன்படுத்தலாம் என்பதை எண்ணும்போதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஆனால், இது போர் நிறுத்தம்தானே தவிர பிரச்சனைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தீர்ந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. நிலையான சமாதானம் ஏற்பட பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடக்க வேண்டும். எடுக்கப்படும் முடிவுகளுக்கு எல்லாப் பிரிவினரும் ஆதரவு கொடுத்து நாடு அதை அங்கீகரிக்க வேண்டும். இத்தனையும் நடக்க அதிக காலங்கள் எடுக்கலாம் என்பதை அரசும், விடுதலைப் புலிகளும் உணர்ந்திருக்கின்றனர். ஸ்ரீ லங்காவின் சமாதானத்திற்காகவும், தொடர்ந்து நடந்து வரும் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியவும் நாம் ஜெபிப்பது அவசியம்.
1516ல் இருந்து போர்த்துக்கேயரும், ஒல்லாந்து தேசத்தாரும், பிரித்தானியர்களும் மாறி மாறி ஸ்ரீ லங்காவை 500 வருடங்களுக்கு ஆண்டு வந்துள்ளனர். 1948ம் ஆண்டு பிரித்தானியரிடமிருந்து நாடு சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. 1856ல் சிங்கள மொழி அரச மொழியாக்கப்பட்டதால் தமிழர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர். இன்று ஓரளவுக்கு அரசும், புலிகளும் ஒப்புக்கொண்டுள்ள பிரதேச நிர்வாகப்பங்கீடு, ஆட்சியில் தமிழர்களுக்கு சம அதிகாரம் என்ற கொள்கைகளை தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த “தந்தை செல்வா” என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் அப்போதே கேட்டுப் பார்த்தார். அன்று அதற்கு அரசு உடன்படவில்லை. போரால் 60,000 பேர் இறந்தபிறகு இன்று அதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “கண்கெட்ட பிறகு சூரிய தரிசனம்” என்று இதைத்தான் சொல்கிறார்களோ. எது எப்படியிருந்தாலும் இன்றாவது அமைதிக்கு வழி ஏற்பட்டிருக்கிறதே.
போர்த்துக்கேயர் ஸ்ரீலங்காவில் ரோமன் கத்தோலிக்க மதத்தையும், ஒல்லாந்து தேசத்தவர்கள் டச்சு சீர்திருத்த சபைகளையும், பிரித்தானியர் ஆங்கிலிக்கன் சமயப்பிரிவையும் ஸ்ரீ லங்காவில் அறிமுகப்படுத்தினர். மொரேவியன் மிஷனரிகள்கூட ஸ்ரீ லங்காவிற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இன்று நாட்டில் எல்லா சமயப் பிரிவுகளையும் பார்க்கலாம். பெந்தகொஸ்தே சபைகளும், கெரிஸ்மெட்டிக் சபைகளும் ஏராளம். புற்றீசல்கள் போல் இவர்கள் எல்லா இடங்களிலும் சபைகளை ஆரம்பித்துவிடுகிறார்கள். பெந்தகொஸ்தே சபைகள் அனைத்தும் அமெரிக்காவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும், கொரியாவில் இருந்தும் வரும் அத்தனை மோசமான போதனைகளையும் அரவணைத்து அநேக ஆத்துமாக்களை ஏமாற்றி வருகின்றன. ஒழுங்குக் கட்டப்பாட்டுக்கு இச்சபைகளில் இடமில்லை. இச்சபைகளில் ஒழுக்கக்குறைவாக நடந்து கொள்கிற போதகர்களைப் பற்றி நாட்டின் நாளிதழ்களில் கூட செய்திகள் வந்திருக்கின்றன. வேத அடிப்படையிலான இறையியல் போதனைகளை துச்சமாக எண்ணி, அனுபவத்திற்கு மட்டும் ஆரத்தி எடுத்து வரும் இச்சபைகளை சுவிசேஷ இயக்கத்தின் பிரதிநிதிகளாகக் கருத முடியாது.
ஒருநாள் இந்நாட்டின் தலைநகரில் ஒரு கிறிஸ்தவ புத்தகக்கடைக்கு நான் சென்றபோது பரிசுத்த ஆவியானவர் பற்றி தமிழில் வந்துள்ள ஒரு நல்ல சிறு நூல் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். குனிந்து அதை நான் எடுக்க முயன்றபோது. அதைத் தொடாதீர்கள்! என்ற ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பி ஏன், என்று குரல் கொடுத்த கடைக்காரரை நான் கேட்டபோது, அது மோசமான புத்தகம் என்று கேள்விப்பட்டோம், அதனால் அதை நாங்கள் விற்பதில்லை என்ற பதில் கிடைத்தது. அந்தப்புத்தகத்தில் அப்படி என்ன மோசமான போதனை இருக்கின்றது என்ற என்னுடைய கேள்விக்கு கடைக்காரரால் பதில் கூற முடியவில்லை. சரி, இதை நீங்கள் விற்கப்போவதில்லை. இருக்கின்ற அத்தனை புத்தகத்தையும் எனக்கு விற்று விடுங்களேன் என்று பேரம் பேசி அத்தனையையும் (175 புத்தகங்கள்) வாங்கிக் கொண்டேன். அந்த நூல் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி விளக்கும் தமிழில் இருக்கின்ற ஒரு நல்ல சிறு நூல். புத்தகக்கடைக்காரர் பெந்தகொஸ்தே சபையைச் சேர்ந்தவராக இருப்பதாலும், அறியாமையாலும் அதன் மகிமை தெரியாமல் புத்தகத்தை நிராகரித்து விட்டார். இந்நாட்டில் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் மாயை எந்தளவுக்கு மக்களை சிந்திக்கவிடாமல் வசப்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
ஏராளமான சபைத்தொடர்பில்லாத பரா-சர்ச் (Para-Chuch) ஸ்தாபனங்களையும் நாட்டில் பார்க்கலாம். இறைஞர்களை வசப்படுத்தி வரும் இந்த ஸ்தாபனங்களால் சபைகளுக்கு எந்தப் பயனுமில்லாமல் இருக்கின்றது. சபைகளைத் தொடர்ந்து குறைகூறி தங்கள் ஸ்தாபனங்களையே இவை வளர்த்து வருகின்றன. முக்கியமாக இந்த ஸ்தாபனங்கள் உறுதியான ஒரு இறையியல் கோட்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. இவை எல்லாப் பாரம்பரிய (லிபரல்) சமயப்பிரிவுகளோடும், பெந்தகொஸ்தே சபைகளோடும் இணைந்து எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடிய சமயசமரசப்போக்கைப் பின்பற்றி வருபவையாகவே இருக்கின்றன.
பாரம்பரிய சபைப்பிரிவுகள் (Mainline churches) அனைத்தும் லிபரலிசத்தால் பாதிக்கப்பட்டு வேதத்தை நிராகரித்துவிட்டு சுவிசேஷ வாஞ்சையையும் இழந்து நிற்கின்றன. சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக தம்மைக் கருதுகின்ற பல சபைகளும்கூட சமயசமரசப் போக்கை (Ecumenism) வெளிப்படையாகவே பின்பற்றுகின்றன. ஸ்ரீலங்காவின் சுவிசேஷ சபைகளின் கூட்டுப் பேரவை என்றழைக்கப்படும் அமைப்பும் குறைந்தளவிலான விசுவாச அறிக்கையைக் கொண்டு லிரலிசத்தைப் பின்பற்றும் சபைகளையும், கெரிஸ்மெட்டிக் சபைகளையும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களையும் உள்ளடக்கி இயங்கி வருகின்றது. இது புதிய சுவிசேஷ கோட்பாடுகளின் (New Evangelicalism) அடிப்படையிலான அமைப்பே தவிர சுவிசேஷ இயக்கத்தைப் (Evangelicalism) பிரதிபலிக்கும் அமைப்பல்ல.
இத்தனைக் குழுப்பங்களுக்கும் மத்தியில் சீர்திருத்தப் போதனைகளிலும், சபை அமைப்பிலும் ஆர்வம் கொண்டு ஓரிரு சீர்திருத்த சபைகள் இன்று தோன்றி நிற்பது மகிழ்ச்சி தருகின்றது. இவை சத்தியத்தில் வாஞ்சையுள்ளவையாக, வேதத்தின் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்து, சமய சமரசப் போக்குக்கு இடங்கொடுக்காமல், சுவிசேஷ வாஞ்சையுடன், தொடர்கின்ற சீர்திருத்தத்தை (Continuing Reformation) தங்களுடைய சபைகளில் நடத்திவருமானால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
ஸ்ரீலங்காவில் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாக வேதத்திற்கு அதிக மதிப்பில்லாதது வருத்தத்தைத் தருகிறது. வேதத்தை அநேகர் பயன்படுத்துகிற போதும் அதையே கர்த்தரின் இறுதி வெளிப்பாடாக அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதுவும் சரி, அதுவும் சரி என்ற போக்கில் எந்தப் போதனைக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. சத்தியம் ஒன்றே! என்ற சிந்தனை அநேகருக்கு இல்லை. சத்தியத்தை, சத்தியம் என்று ஆணித்தரமாக சொல்லிப் பிரசங்கிப்பவர்களும் குறைவு. மற்றவர்களுடைய முகம் கோணக்கூடாது என்பதற்காக எல்லோருடனும் ஒத்துப்போய் சத்தியத்தை விலை பேசுகிறவர்கள் அதிகம். இந்தப் போக்கிற்கு இந்நாட்டில் இருக்கும் இறையியல் கல்லூரிகளும் தூபம் போட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா சபைப் பிரிவினரோடும் ஒத்துப்போகும் விதத்திலும், பெந்தகொஸ்தே சபைகளையும் பாதிக்காத விதத்திலும் வேத போதனைகளை அளிப்பது இந்நாட்டின் முக்கிய (புதிய) சுவிசேஷ இறையியல் கல்லூரிகளின் போக்காக இருக்கின்றது. இது சமயசமரசப் போக்கு (Ecumenism) என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இந்தக் குளருபடியான கிறிஸ்தவ சூழ்நிலைக்கு மத்தியில் துணிவோடும், ஆவியின் பலத்தோடும், சேர வேண்டியவர்களோடு மட்டும் சேர்ந்து உழைக்கக்கூடிய ஊழியக்காரர்களும், சபைகளும் நாட்டுக்கு அவசியம் தேவை.
போனவருடம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டிருப்பதுபோல் கட்டாய மத மாற்றத்தடுப்பிற்கான ஒரு சட்டத்தை ஸ்ரீலங்காவின் இந்துக்கலாச்சார அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரோமன் கத்தோலிக்கசபையும், பெளத்த தீவிரவாதிகளும் இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பேச்சு. இது சட்டமாக அமுலுக்கு வருமா, இல்லையா என்பது இப்போது தெரியவில்லை. ஆனால், கிறிஸ்தவத்திற்கு நாட்டில் ஒரு புதிய ஆபத்து துளிர்விட்டிருக்கிறது என்பதைக் கிறிஸ்தவர்களில் பலர் உணர்ந்திருக்கிறார்கள். நாட்டில் அமைதி ஏற்பட்டு, சீர்திருத்த சத்தியங்களின் அடிப்படையில் கிறிஸ்தவ சபைகள் தமிழர்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் தோன்றி வளரக் கர்த்தர் இந்நாட்டை ஆசீர்வதிக்கட்டும்.