ஆராதனை! மனிதனின் சிந்தனைப் போக்கிலா? அல்லது கர்த்தரின் வழியிலா?

கிறிஸ்தவ திருச்சபை தன் தலைவராகிய கர்த்தரை ஆராதிக்கும் பெரும் கடமையைத் தன்னில் கொண்டிருக்கிறது. அது கடமையாக மட்டும் இல்லாமல் திருச்சபை முழு இருதயத்தோடும், ஆனந்தத்தோடும் கர்த்தரின் பாதத்தில் கொடுக்க வேண்டிய ஆம்மீக பலியாகவும் இருக்கிறது. இத்தகைய ஆத்மீக பலியை ஆத்துமா தன் சொந்த வழியில், தன்னுடைய சிந்தனைப் போக்கின்படி கர்த்தருக்கு முன் செலுத்தலாமா? அல்லது கர்த்தர் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அவர் காட்டும் வழியில் செலுத்தப்பட வேண்டுமா? என்பதைப் பற்றி நாம் இன்று சிந்தித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக கிறிஸ்தவ உலகத்தைக் குழப்பிக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி இது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் தோன்யி பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்கள் கிறிஸ்தவர்கள் கர்த்தரை ஆவியோடு ஆராதிக்க வேண்டும் என்று போதித்து, அத்தனை ஆவிக்குரிய ஆராதனையின் அமையாளங்களாக அந்நிய பாஷை பேசுதல், திர்க்க தரிசனம் சொல்லுதல், உணர்ச்சிவசப்பட்டு சுய நினைவிழந்து ஆடுதல், விழுதல் போன்றன எல்லாம் இருக்க வேண்டும் என்று ஆரம்பித்திலிருந்தே திருச்சபையில் ஆத்துமாக்கள் கூடி ஆராதிக்கும் ஆராதனைக்கு பேராபத்து ஏற்பட்டது. இவ்வியக்கங்கள் வேதத்திற்கு தவறான விளக்கங்கொடுத்து வேத அறிவில்லாத ஆத்துமாக்களை கர்த்தரின் வார்த்தைக்கு எதிரான காரியங்களைச் செய்யும்படி வழிநடத்தினார்கள். ஆராதனையில் மேலே நாம் குறிப்பிட்ட அம்சங்கள் இல்லாத இடங்களில் ஆவியானவர் இல்லை என்ற தவறான போதனையை இவ்வியக்கங்கள் ஆத்துமாக்கள் மத்தியில் ஏற்படுத்தின. காலம் செல்லச்செல்ல இவற்றோடு வேறு பல அவசியமற்ற அம்சங்களும் காட்டாறுபோல் சீறிப்பாய்ந்து சபை ஆரானை வேளைகளில் பங்குபெற ஆரம்பித்தன. அவற்றையே இன்று நாம் பல சபைகளிலும், கூட்டங்களிலும் பார்க்கிறோம். கணக்கில்லாத பாடல்களும், எண்ணிக்கையிலடங்காத இசைக்கருவிகளும், தனி நபர் துதி பாடி அவர்களுடைய திறமையைக் காட்டும் தனி நபர் பாடல்களும், ஆட்டங்களும் ஆராதனையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு யார் இவற்றை அதிகமாகவும், புதுப்புது விதங்களில் மெருகேற்றியும் செய்கிறார்களோ அவர்களை நாடிக் கூட்டம் பெருகத் தொடங்கின. ஆராதனையில் எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், எதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தனி மனிதனின் எண்ணத்தைப் பொறுத்தது என்ற அடிப்படையில் இன்று ஆராதனை எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றது

தங்களுடைய சபை மக்கள் இழந்து போகக்கூடாது என்பதற்காகவும், இப்புதிய சுவிசேஷ ஆராதனை முறையினால் ஈடுக்கப்பட்டதாலும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களுக்கு வெளியில் உள்ளவர்களும் இத்தகைய ஆராதனைமுறைகளை இன்று பின்பற்றி வருகிறார்கள். சினிமாத் தியட்டர்களிலும், பொப் இசைக் கூட்டங்களிலும் உள்ள கலகலப்பு இன்று சபை ஆராதனைக்கூட்டங்களில் தெரிகின்றது. இவையில்லாத சபைகளை நோக்கிப் போகிறவர்கள் குறைவு. பிரசங்கமும், நல்ல போதக ஊழியமும், ருக்கியமும் இருந்தபோதும் ஆராதனையில் கலகலப்பூட்டும் அயிட்டங்கள் இல்லாவிட்டால் சபைகள் வெள்ளிகரமாக இயங்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆத்துமாக்களுக்கு ஆத்மீக உணவளிப்பதை தவிர்த்துவிட்டு ஆராதனையில் எதையெதையெல்லாமோ சேர்த்து சபைக்கு ஆள் சேர்க்கும் வேலையே எங்கும் நடந்து வருகின்றது.

ஆராதனை எப்படி இருக்க வேண்டும்? அது எப்படி இருக்க வேண்டும் என்று கர்த்தர் தமது வேதத்தில் வழி காட்டியிருக்கிறாரா? அதை மனிதனின் சிந்தனை போனபடியெல்லாம் நடத்தலாமா? அல்லது கர்த்தரின் வார்த்தை காட்டும் வழிப்படித்தான் நடத்த வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு நாம் சிந்தித்து வேதபோதனையின்படி பதிலளிக்க வேண்டும். சபை ஆராதனை பற்றிய இக்கேள்விகள் சாதாரணமானவையல்ல. இக்கேள்விகளுக்கான பதில்கள் மெய்க்கிறிஸ்தவத்திற்கும் போலிக் கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டப்போகின்றன. ஆராதனை மனித சிந்தனையின்படி நடக்கலாமா? அல்லது கர்த்தரின் வழிப்படி நடக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் நாம் கிறிஸ்தவ ஆராதனை என்ற பெயரில் இன்று எல்லா இடங்களிலும் நடந்துவரும் கூத்துக்களை சட்டையை உரிய ஆரம்பித்திருக்கிறோம்.

ஆராதனையை ஏற்படுத்தியது யார்?

கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனின் உள்ளத்தில் இயற்கையாகவே இருந்ததா? அல்லது கர்த்தர் தாமே தம்மை ஆராதிக்கும் ஒரே நோக்கத்திற்காக மனிதனைப் படைத்தாரா? இந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்த்தால் மனிதனுடைய உள்ளத்தில் எப்போதுமே கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்று எண்ணம் இயற்கையாக இருந்ததில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். மனிதனைப் படைத்த கர்த்தர் அவன் தன்னை ஆராதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் ப‍டைத்தார் என்பதை வேதம் உணர்த்துகிறது. கர்த்தர் மனிதனுக்குக் கொடுத்த கட்டளைக‍ள் (யாத்திராகமம், லேவியராகமத்தில் காணப்படும் கட்டளைகள்) யாவும் கர்த்தரை அவருடைய வழிப்படி மனிதன் ஆராதிக்க வேண்டும் என்பதையே வலுயுறுத்துகின்றன.

மனிதன் பாவத்தில் விழுந்தபோது மெய்யான தேவனை ஆராதிக்கும் வல்லமையை இழந்து போனான். இருதயம் பாழாகி கர்த்தரை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதிருந்தான். ஆதாம் பாவத்தில் வீழ்ந்தபின்பு அவன் ஏதேன் தோட்டத்திலிருந்து கர்த்தர் துரத்திவிட்டார். கர்த்தரோடிருந்த ஐக்கியத்தையும், அன்னயோன்னியத்தையும் அவன் இழந்து போனான். மறுபடியும் அவனால் சுயமாக கர்த்தரோடு ஐக்கியத்தில் வரமுடியவில்லை. கர்த்தர் அதற்கான ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தபின்பே ஆதாமால் அவரை மறுபடியும் வழிபட முடிந்தது. இதிலிருந்து மனிதன் ஒருபோதுமே கர்த்தரை வழிபடும் எண்ணத்தை சுயமாகக் கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் மெய்யான தேவனை வழிபடும் எண்ணமில்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான். கர்த்தர் அதற்கான வழியை ஏற்படுத்தினால் தவிர அவனால் அவரை அறிந்து கொள்ள முடியாது. கர்த்தர் ஆதாம் தன்னை மறுபடியும் ஆராதித்து தன் வழிகளைப் பின்பற்றி வாழும் ஒரு வழியை ஏற்படுத்தித் தந்தார் என்று வேதம் போதிக்கின்றது. மனந்திருந்திய ஆதாம் அன்று முதல் கர்த்தரோடு ஐக்கியத்தில் வந்து அன்னியோன்னியமாக வாழ முடிந்தது. மனிதன் கண்டு பி‍‍டித்ததல்ல ஆராதனை. மனிதன் தன்னை வழிபடுவதற்காக ஏற்படுத்தித் தந்தது ஆராதனை.

ஆராதனையைப் பற்றிய உறுதியான வேத விதி

ஆராதனையை உருவாக்கித் தந்த கர்த்தர் மனிதன் தன்னை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார். இறை ஆண்மையுள்ள தேவன் ஆராதனையையும் ஆள்கிறவராயிருக்கிறர். மனிதன் தான் நினைத்தபடி தம்மை ஆராதிக்க அவர் அனுமதிக்கவில்லை. பாவமுள்ள மனிதன் தன்னைப் பரிசுத்தமாக ஆராதிக்க வழியில்லை என்பது கர்த்தன் முடிவு. பழைய ஏற்பாடு முழுவதும் மனிதன் தன்னை ஆராதிக்க கர்த்தர் ஏற்படுத்தித் தந்துள்ள வழிமுறைகளைப் பற்றித் தெளிவாகப் போதிக்கின்றன. அதேநேரம், பாவியான மனிதனும் கர்த்தரின் ஆராதனை வழிகளைப் புறக்கணித்து அவருக்குப் புறம்பான வழிகளில் அவரை ஆராதிக்க முயன்றதையும் பழைய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது.

ஆதாமின் இரு பிள்ளைகளும் கர்த்தரை ஆராதிக்க சென்றபோது ஆபேல் மட்டுமே கர்த்தர் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆராதனையை அவருக்கு முன் வழங்கினான். காயின் தனது மனத்துக்குப் பி‍டித்தமான முறையில் கர்த்தரை ஆராதிக்க முயன்றான். அது பி‍டிக்காத கர்த்தர் அவனது ஆராதனையை நிராரித்து ஆபேலின் ஆராதனையை ஏற்றுக் கொண்டார் என்று அதியாகமம் 4:3-7 சொல்லுகிறது. வேதத்தின் முதல் புத்தகத்திலே உள்ள இவ்வேதப்பகுதி கர்த்தரை மனிதன் ஒருபோதும் தான் நினைத்தவிதத்தில் ஆராதிக்க முடியாது என்றும், கர்த்தரின் வழிப்படியே அவரை ஆராதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இதுவே ஆராதனையைப் பற்றி வேதம் போதிக்கும் அழுத்தமான போதனை.

ஆபேல் கர்த்தருக்குப் பிடித்தமானமுறையில், அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆராதனையை செலுத்தியதற்குக் காரணம் அவன் ஆராதனையைப் பற்றி கர்த்தரின் போதனையை அறிந்திருந்து அதை மதித்து நடந்ததால்தான். ஆபேல் தன் பெற்றோர்களிடம் இருந்து அதை அறிந்து கொண்டிருந்தான். காயின் கர்த்தரை மதிக்காமல், அவர் போதனைகளை அசட்டை செய்து தனது மனத்திற்குப் பிடித்தமான வழியில் கர்த்தரை வழிபட முயன்றான். இதுவே இந்த இரண்டுபேரின் ஆராதனைமுறைகளில் நாம் பார்க்கும் வேறுபாடு. ஆத்துமாக்கள் கர்த்தர் கேட்கும் ஆராதனையை அவருக்கு முன் செலுத்த வேண்டும் என்கிறது வேதம். நமக்கு விருப்பமானதை அவருக்கு முன் செலுத்துவதல்ல மெய்யான ஆத்மீக ஆராதனை; அவர் கேட்பதை, அவரை மதித்து ஆனந்தத்தோடு அளிப்பதற்குப் பெயர்தான் ஆராதனை.

பழைய ஏற்பாட்டில் ஆராதனை

நாம் மேலே விளக்கிய இந்த அழுத்தமான ஆராதனையின் தத்துவத்தை பழைய ஏற்பாடு, ஆரம்பம் முதல் கடைசி வரை போதிக்கின்றது. ஆபேல் காயின் ஆகியோரின் உதாரணங்களைப் பார்த்தோம். இவ்வாராதனைத் தத்துவத்தை விளக்கும் வேறு சில பகுதிகளையும் பழைய ஏற்பாட்டில் இனிப் பார்ப்போம்.

கர்த்தர் இஸ்ரவேலர் தன்னை ஆராதிக்க ஒரு ஆலயத்தைக் கட்டும்ப‍டி மோசேக்கு கட்டளையிட்ட‍போது அவ்வாலயம் சம்பந்தமான அனைத்துக் காரியங்களும் தன்னுடைய வார்த்தையை ஒருசிறிதும் மீறாமல் அமைய வேண்டும் என்று ஆதியாகமம் 25:40 ல் சொல்லியிருப்பதை வாசிக்கலாம். அத்தோடு, ஆலயத்தின் கட்டுமானத்திற்கான அத்தனை பொருட்களையும் தான் கட்டளையிட்டவாறு செய்வதற்காக பெசயேலை அழைத்து அவனுக்கு அறிவும், ஞானமும் உண்டாகும்படி அவனைத் தேவ ஆவியால் நிரப்பினேன் என்று கர்த்தர் சொல்லியிருப்பதை யாத்திராகமம் 31:11-11 வரையிலுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். தனது ஆலய சம்பந்தமான காரியங்களில் மனித சிந்தனையைப் புகுத்தி இஸ்ரவேலர் தாம் நினைத்தபடி எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் கர்த்தர் மிகக் கவனமாக இருந்திருக்கிறார் என்பதை இப்பகுதிகள் உணர்த்துகின்றன. அவருடைய காரியங்கள் அவருடைய சித்தப்படி நடக்க வேண்டும் என்பதை இப்பதிகள் விளக்குகின்றன.

ஆலய ஆராதனையை நடத்துவதற்காக பழைய ஏற்பாட்டில் லேவியர்களின் ஆசாரியப் பணியை ஏற்படுத்தித் தந்த கர்த்தர் ஆலய ஆராதனையை லேவியர்கள் தனது வார்த்தையை மீறாமல் நடத்த வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார். தன் சந்நிதியில் தனது வார்த்தைக்கு விரோதமான எந்த ஆராதனை முறையையும் லேவியர்கள் கொண்டு வருவதை அவர் சகித்துக் கொள்ளவில்லை. லேவியர்கள் தங்களுடைய மனம் போனபடி எதையும் ஆராதனையில் நுழைக்கும் அதிகாரம் அவர்களுக்கிருக்கவில்லை. ஆரோனின் குமாரனாகிய நாதாபும், அபியுவும் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவர் முன் கொண்டுவந்தபோது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு அவர்களைப் பட்சித்தது (லேவியராகமம் 10:1-3). கர்த்தர் கட்டளையிட்டுத் தந்திரந்த ஆராதனை முறைகளில் மிக முக்கியமான மாற்றங்களை இந்த இருவரும் செய்ததாலேயே கர்த்தர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். கர்த்தருடைய ஆராதனை முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் அதிகாரம் ஆத்துமாக்களுக்கு ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. இவ்வேதப்பகுதியில் “கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத” என்ற வார்த்தைகள் அவர்களிருவரும் செய்த பெரும்பாவத்தை விளக்குகின்றன. கர்த்தர் கட்டளையிடாததை அவர்கள் செய்தார்கள்; அதன் பலனையும் அனுபவித்தார்கள். அத்தோடு “அந்நிய அக்கினி” என்ற வார்த்தைகளையும் கவனிக்கவும். இவ்வார்த்தைகள் நாதாபும், அபியுவும் கர்த்தர் ஏற்கனவே ஏற்படுத்தித் தந்திருந்த ஆராதனை முறைக்கு மாறானதை அவருடைய சந்தியில் கொண்டு வந்தார்கள் என்பதைப் புரிய வைக்கின்றன. எண்ணாகமம் 13:39-40 ஆகிய வசனங்களில் கர்த்தர் சொல்லியிருப்பதை கவனியுங்கள்: “நீங்கள் பின்பற்றிச் சோரம் போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்ப‍டியே செய்யும்படிக்கு அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்க வேண்டும். நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராய் இருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக” என்றார் கர்த்தர்.

கடைசியாக உபாகமம் 4:2ஐப் பார்ப்போம். இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் நாட்கள் நெருங்கியபேது, மோசே தான் இறப்பதற்கு முன்பாக அவர்களுக்கு கடைசி தடவையாக அறிவுரைகளை அளித்தார். தேவனுடைய வார்த்தைகளுடன் எதையும் கூட்டவோ அல்லது அவற்றில் இருந்து எதையும் விலக்கவா கூடாது என்று அவர்களை எச்சரித்தார். மோசேயின் இவ்வார்த்தைகள் கர்த்தர் இஸ்ரவேலருக்கு இரண்டாம் தடவையாக கொடுக்கப்போகும் நியாயப்பிரமாணங்களைக் குறித்ததாகவே இருந்தன. ஆத்துமாக்கள் எந்த வகையில் கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்று விளக்கும் உபாகமம் 12:29-32 வரையிலான வசனங்கள் இங்கு நாம் வாசிக்கும் வார்த்தைகளை அப்படியே ஒத்திருக்கின்றன. முக்கியதாக 32வது வசனத்தில் கர்த்தர் நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்று குறைக்கவும் வேண்டாம். என்றார்.

மேலே நாம் பார்த்த வசனங்களில் மோசே கர்த்தர் தடைசெய்துள்ளவற்றை பின்பற்றாதீர்கள் என்று மட்டும் சொல்லவில்லை. கர்த்தருக்கு விரோதமாக வேறு தேவர்களை ஆராதிக்காதீர்கள் என்று சொல்லியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக கர்த்தருடைய வார்த்தையோடு ‍எதையும் கூட்டவும் வேண்டாம்; அதிலிருந்து எதையும் குறைக்கவும் வேண்டாம் என்று சொன்னார். கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கின்ற ஆராதனை முறைகளுடன் எதையும் கூட்டவும் கூடாது; அதிலிருந்து எதையும் குறைக்கவும் கூடாது என்பது இதற்குப் பொருள். சாமுவேல் வால்டிரன் எனும் சீர்திருத்த இறையியல் அறிஞர் இதைப்பற்றி விளக்கும்போது, “இந்த உலகத்தை மக்கள் எந்த முறையில் ஆராதனை செய்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து அந்தமுறையில் தங்களுடைய ஆராதனை முறைகளை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூ‍யை ஒரு பெரும் ஆபத்தான சோதனை தேவமக்களுக்கு இருப்பதாகவும், அத்தகைய தவறான மனப்போக்கு கர்த்தருடைய மக்களுக்கு ஒருபோதும் இருக்கக்கூடாது” என்றும் சொல்கிறார்.

உபாகமம் 12:29-32 ஆகிய வசனங்களின் மூலம் கர்த்தர் ஆராதனைக்காக மட்டுமல்லாமல் இஸ்ரவேலர் தம்மை ஆராதித்து எப்படி வாழ வேண்டும் என்பதற்கான எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுவான கட்டளையைத் தந்தார். இதற்குள் சபத்து நாள் அனுசரிப்பும் அடங்கும். பழைய ஏற்பாட்டு மக்களின் ஆராதனையின் முக்கிய பகுதியாக சபத்து நாள் ஆராதனையும் இருந்தது. லேவியராகமம் 23:3, “ஏழாம் நாள் பரிசுத்த சபை கூடுதலான ஓய்வுநாள்” என்று ஓய்வுநானை வர்ணிப்பதைக் காண்கிறோம். இஸ்ரவேலர் எங்கே சபைகூடி வந்தார்கள்? கானான் தேசத்தை அடைந்தபின் இஸ்ரவேலர் அத்தேசத்தின் பல பகுதிகளிலும் போய் வாழ்ந்தார்கள். அவர்களால் ஒரே இடத்தில் கூடிவரமுடியாத நிலை இருந்தது. இதற்காக அவர்கள் ஓய்வுநானைக் கடைப்பிடிக்காமல் இருக்கவில்லை, இருக்கவும் கூடாது. இஸ்ரவேலர் எங்கெங்கு போய் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் ஓய்வுநாளை சபையாகக் கூடி தவறாது அனுசரித்து வந்தார்கள். லேவியராகமம் 23:3ல் உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் (வாழும் இடங்களிலெல்லாம்) கர்த்தருக்கென்று ஓய்ந்திருங்கள் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

உள்ளூரில் ஓய்வு நாளில் கூடி வந்து கர்த்தரை ஆராதித்த இந்த ஆராதனை முறையே பின்பு ஜெப ஆலய வழிபாட்டு முறையை யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. பாபிலோனியாவில் யூதர்கள் இருந்த காலத்தில் ஆலய வழிபாட்டு வசதி அவர்களுக்கு இல்லாதிருந்ததால் ஜெப ஆலய வழிபாட்டு முறை ஏற்பட்டது. இது வேதத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு முறை. அதனால்தான் இயேசு தான் வாழ்ந்த காலத்தில் ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திற்குப் போய் ஆராதனை செய்ததை புதிய ஏற்பாட்டில் (லூக்கா 4:16) வாசிக்கிறோம். இயேசு ஜெப ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு அதற்கு அங்கீகாரமளித்து இது மனித சிந்தனையில் உருவான வழிபாட்டு முறையல்ல என்பதற்கு ஆதாரமாயிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் யூதர் காலத்தில் காணப்பட்ட ஜெப ஆலய வழிபாட்டில் நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டு வேதபோதனை அளிக்கப்பட்டது. பிரசங்கம் முக்கிய இடத்தைப் பெற்றது. அத்தோடு ஆராதனையில் ஈடுபட்டவர்கள் சங்கீதம் பாடி ஜெபத்தில் ஈடுபட்டனர். இறுதியில் ஆசீர்வாகத்துடன் ஆராதனை முடிவுற்றது.

புதிய ஏற்பாட்டில் ஆராதனை

பழைய ஏற்பாட்டை விட்டு நாம் புதிய ஏற்பாட்டிற்கு வந்தால் அங்கும் ஆராதனையைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்திருந்த அதே ஆராதனை விதியை நாம் பின்பற்ற வேண்டும் என்ற போதனையையே பார்க்க முடிகின்றது. மாற்கு 7:5-13 வசனங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

இவ்வேதப்பகுதி கைகழுவாததற்காக இயேசுவின் சீடர்களை பரிசேயர்கள் குறைகூறுவதை கூட்டிக் காட்டுகின்றது. சுகாதாரத்திற்காக கைகழுவ வேண்டும் என்று பரிசேயர்கள் அதை வற்புறுத்தவில்லை. கைகழுவுதலை ஒரு சடங்காக பரிசேயர் யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன (வசனம் 3). பாரம்பரியமாக இருந்து வந்து இந்த சடங்கைச் செய்ய வேண்டியது யூதர்களின் கடமையாயிருந்தது. சீடர்கள் அதைத் தவிர்த்ததால் பரிசேயர்கள் அவர்களில் குறை கண்டனர். இயேசு சீடர்களைக் கண்டிக்காமல் பரிசேயர்களைக் கண்டித்தார். இயேசு பரிசேயர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதை கவனித்துப் பாருங்கள்: (1) பரிசேயர்கள் உதடுகளினால் கணம் பண்ணுகிறார்கள். அவர்ளுடைய இருதயம் கர்த்தரோடில்லை. (2) மனுஷருடைய கற்பனைகளைப் போதித்து வீணான ஆராதனை செய்கிறார்கள். வெறும் பாரம்பரியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். (3) தேவனுடைய ஆராதனை பற்றிய கட்டளைகளை தள்ளிவைத்தார்கள். இயேசு பரிசேயர்களின் பாரம்பரியங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார். வேதபோதனைகளோடு அவற்றிற்கு சமமான இடம் இல்லை என்பதை அடித்துச் சொன்னார். சீடர்கள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதை விளக்கினார்.

பரிசேயர்கள் செய்த முதலாவது பெரும் தவறு வேதத்தை நிராகரித்தது. இரண்மாவது, அதற்கு இணையான இடத்தைக் கொடுத்து பாரம்பரியங்களை அதோடு இணைத்துக்கொண்டது. கடைசியாக பாரம்பரியங்களுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்து வேதத்தை தாழ்ந்த நிலைக்குத் தள்ளியது. இவ்வாறு செய்ததன் மூலம் கர்த்தருடைய வார்த்தையின் அதிகாரத்தை பரிசேயர்கள் அழித்தார்கள். ஜே. சீ. ரைல் என்ற போதகர் இதை விளக்கியபோது, “மனித சிந்தனைகளை ஏற்று, வேதத்தோடு அதைச் ‍சேர்ப்பதால் சத்தியத்தை நிராகரிப்பதற்க இணையான காரியத்தை மனிதன் சுலபமாக செய்கிறான்” என்றார். இதையே பவுலும் கொலோசெயர் 2:20-23 ஆகிய வசனங்களில் சொல்கிறார். இதையெல்லாம் “சுய இஷ்டமான ஆராதனை” என்று பவுல் வர்ணிக்கிறார். சுய இஷ்டமான ஆராதனைக்கு, வேதபூர்வமான ஆராதனைக்கு இணையான அதிகாரம் இல்லை. தேவனால் ஏற்படுத்தித் தரப்படாத ஆராதனை தடை செய்யப்பட்ட ஆராதனை முறை என்ற வேதவிதியை கொலோசெயரில் பவுலின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. கொலோசெயர் 2:23, மனித சிந்தனையில் உருவாகும் ஆராதனை முறைகளை கடுமையாகக் கண்டனம் செய்கிறது.

கர்த்தரின் வேதம் இத்தனை தெளிவாக ஆராதனையைப் பற்றி விளக்கும்போது கர்த்தரை ஆராதிப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இன்று வேதத்தை உதறித்தள்ளிவிட்டு பிசாசின் பாதையில் தங்களுக்கு இஷ்டமான ஆராதனையை கர்த்தர் முன் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் ஆராதனை முறைகளும், கிறிஸ்தவ ஆராதனை என்ற பெயரில் இன்று நடந்து கொண்டிருக்கும் அநேக கூத்துக்களும் வேதத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. தனக்கு இஷ்டமானதை கர்த்தருக்கு முன் வைக்கப் பார்க்கிறவன் மெய்யான விசுவாசியாக இருக்க முடியாது. தேவ பயத்தோடு கர்த்தர் கேட்பதை அவர் முன் வைக்கப் பார்க்கிறவனே மெய்யான விசுவாசி.

நாம் இத்தனை நேரமும் சபை கூடி வந்து ஆத்துமாக்கள் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய பொது ஆராதனையைக் குறித்தே பேசி வருகிறோம் என்பது வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். அந்தப் பொது ஆராதனைக்குள் எந்த அந்நிய அக்கினியையும் எவரும் திணிக்கக்கூடாது. வேதம் ‍தெளிவாகப் போதிக்கும் ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்கள் மட்டுமே ஆராதனையை அலங்கரிக்க வேண்டும். பெண்கள் பிரசங்கம் செய்வதும், பெண்கள் வேதத்தை ஆராதனை நேரத்தில் பலர் முன்னால் வாசிப்பதும், தனி நபர்களின் இசைக்கச்சேரியும், பாடல்களைப் பாடும் நேரத்தில் கைதட்டுவதும், தாளம் போடுவதும், ஸ்தோத்திரம் சொல்கிறோம் என்ற பெயரில் அனைவரும் ‍சேர்ந்து பொருளற்ற சொற்களால் கூக்குரலிடுவதும் ஆராதனைக்குரிய செயல்களல்ல. இவை மனித ஞானத்தின் பிரதிபலிப்புகள். கர்த்தருடைய சிந்தையில் தோன்றி அம்சங்களல்ல.

பாவம் உலகத்தில் தோன்றிய காலம் முதல் கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்து வரும் போராட்ட‍மே இன்று ஆராதனையைப் பொறுத்தவரையிலும் நடந்து வருகின்றது. கர்த்தரின் வார்த்தைக்கு எதிரான ஆராதனையை கர்த்தருக்கு முன் வழங்கி தன் உள்ளத்திற்குக் குறிரூட்டிக் கொள்ள மனிதன் தொடர்ந்து போராடி வருகிறான். கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையிலான ஆராதனையா? நம் மனம் போன போக்கில் நடக்கும் ஆராதனையா? எது கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் ஆராதனை? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு இன்று ஆத்துமாக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பிரசங்கி 5:1-2 சொல்லுவதைக் கவனியுங்கள்: “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதைப்போலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். நாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள். தேவசமூகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.” சாலமோனின் இப்பொருள் பொதிந்த வார்த்தைகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை.

மறுமொழி தருக