வெளிப்படுத்தின விசேஷம் – ஒரு விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷத்தை ஒரு புரியாத புதர் போலவும், எதிர் காலத்தைப் பற்றி மட்டுமே சுட்டிக் காட்டும் ஒரு காலச்சக்கரம் போலவும், இல்லாததை சொல்லி பலரையும் மயங்க வைக்க உதவும் ஒரு தீர்க்கதரிசன நூலாகவும் பலரும் பலவிதமாக இன்று அதைப் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால், ஏனைய வேத நூல்களைப் போல இதுவும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியமான ஆத்மீக உணவளிக்கும் வேத சத்தியமாகக் கருதி எவரும் இதைப்படிக்க முன்வருவதில்லை. இந்நூலைப்பற்றி உங்களுடைய மனத்தில் ஏற்கனவே பதிந்துபோயிருக்கும் எண்ணங்களையெல்லாம் அகற்றிவைத்துவிட்டு திறந்த மனத்தோடு நாம் தரப்போகும் விளக்கத்தை ஆராய்ந்து பாருங்கள். இதை வில்லியம் ஹென்றிக்சன் (William Hendriksen) என்ற வேத அறிஞர் More than Conquerors என்ற நூலில் விளக்கியிருக்கிறார். ஹென்றிக்சன் இந்நூலை விளங்கிக் கொள்ள அவசியமான 9 விதிகளைத் தன் நூலில் விளக்குகிறார். அவர் தந்துள்ள விதிகளைப் பின்பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படித்தால் கர்த்தருடைய வார்த்தையின் இந்த முக்கியமான பகுதி நமக்கு ஒரு புதிராகத் தெரியாது. அவ்விதிகளை இப்பகுதிகளில் சுருக்கமாகத் தருகிறோம்.

விதி 1: முதலாவது விதி இந்நூலின் அமைப்பைப் பற்றியது. வெளிப்படுத்தல் சுவிசேஷம் ஏழு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் முதல் வருகையில் இருந்து அவருடைய இரண்டாவது வருகைமட்டுமான புதிய உடன்படிக்கையின் காலத்தை விளக்குவதாக இருக்கின்றன. அதேநேரம், அவ‍ை ஒவ்வொன்றும் ஒரே காலத்தைப் பற்றிவிளக்குவதாகவும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவையாகவும் காணப்படுகின்றன.

இந்நூலின் முதல் பாகம் குத்துவிளக்குத் தண்டங்களின் மத்தியில் இருக்கின்ற கிறிஸ்துவைப்பற்றி விளக்குகின்றன (1:1 – 3:22). ஏழு விளக்குத்தண்டங்களும் ஏழு சபைகளைக் குறிக்கின்றன. இந்த ஏழு சபைகளும் கிறிஸ்துவின் முதல் வருகையில் இருந்து இரண்டாம் வருகைவரையும் இந்த உலகில் இருக்கப் போகின்ற சபைகளைக்குறிப்பதாக இருக்கின்றன. “இந்தமுறையில் விளக்கும்போது ஒவ்வொரு சபையும் ஒரு ‘மாதிரியாக’ (Type) இருக்கின்றது. இம்மாதிரிகள் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை விளக்காமல் பல்வேறு சபைகளில் வாழ்க்கையிலும் தொடர்ச்சியாக மாறி மாறி நிகழ்ந்துவரும் சம்பவங்களைக் குறிப்பதாக இருக்கின்றன.” என்று ஹென்றிக்சன் கூறுகிறார். கிறிஸ்துவின் முதலாவது வருகை பற்றி 1:5ல் விளக்கப்படுகிறது. அவரது இரண்டாம் வருகைபற்றி 1:7 விளக்குகிறது.

இந்நூலின் இரண்டாம் பாகம், “பரலோக காட்சியையும், முத்திரைகளையும்” பற்றியது (4:1 – 7:17). இந்தப் பாகம் கிறிஸ்து மகிமையுடன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஏழு முத்திரைகளுடன் இருந்த புத்தகச் சுருளைத் திறப்பதுடன் ஆரம்பிக்கிறது. பலிகொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் இப்போது மகிமையுடன் ஆள்பவராக இப்பகுதியில் காட்சியளிக்கிறார். அத்தோடு, இவ்வுலக மக்களை நாடி வரும் தொடர்ச்சியான தண்டனைகளை விபரிப்பதோடு வரலாறு இப்பகுதியில் விளக்கப்படுகிறது. அவ்வரலாறு இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்புடன் முடிவுக்கு வரப்போவதையும் இப்பகுதி விளக்குகிறது. இந்தப்பகுதி கிறிஸ்துவின் முதலாம் வருகையின் ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விபரிப்பதோடு ஆரம்பித்து (5:5, 6) அவருடைய இரண்டாம் வருகையின்போது நிகழப்போகின்ற காரியங்களை விபரிப்பதோடு முடிவடைகின்றது (6:17, 7:16, 17).

இந்நூலின் மூன்றாம் பாகம், ஏழு எக்காளங்களையும் விளக்குகின்றது (8:1 – 11:19). இந்த எக்காளங்கள் இந்த உலகம் அனுபவிக்கப்போகின்ற தண்டனைகளை அறிவிக்கின்றன. அதேநேரம், திருச்சபை தொடர்ந்து இந்த உலகத்தில் சாட்சி கொடுத்து வருகின்றது (10 – 11). இந்தப் பகுதியின் முடிவில் மறுபடியும் இறுதி நியாயத்தீர்ப்பைப்பற்றிய விளக்கத்தைப் பார்க்கிறோம் (11:15, 18).

இந்நூலின் நான்காம் பாகம், “துன்புறுத்தும் வலுச்சர்ப்பத்தைப்” பற்றி விளக்குகிறது (12:1-14:20). இந்தப்பகுதி படைப்பிலிருந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரையுமான உலக வரலாற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்து இப்போது சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டுவிட்டதால் வலுச்சர்ப்பம் விசுவாசிகளின் மீது பெரும் போரை ஆரம்பிக்கிறது. அதற்காக ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் கொண்ட மிருகத்தையும் (13:1), ஆட்டுக்குட்டிக்கு ஒப்பானதாக இரண்டு கொம்பிகளைக் கொண்டதாக இருந்த இரண்டாவது மிருகத்தையும் (13:11, 12), பாபிலோன் நகரத்தையும் (13:8) பயன்படுத்திக் கொள்கிறது. இறுதி நியாயத்தீர்ப்புக்காக வரும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையோடு இப்பகுதி நிறைவுக்கு வருகிறது (14:14-16).

ஐந்தாம் பாகம், “ஏழு கோபக்கலசங்களைப்” பற்றிய விளக்கத்தைத் தருகிறது (15:1-16:21). இந்தப் பாகம் மறுபடியும் கர்த்தருடைய தண்டனைகளைப்பற்றி விளக்கி, 16:20ல் இறுதி நியாயத்தீர்ப்பைப்பற்றிக் கூறுவதோடு முடிவடைகிறது.

ஆறாம் பாகம், பாபிலோனின் வீழ்ச்சி பற்றியதாகும் (17:1 – 19:21). கிறிஸ்துவின் முதலாவம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் காணப்படும் ராஜ்யங்கள் கிறிஸ்துவால் அழிக்கப்படுவதை விளக்கி அவருடைய இரண்டாம் வருகையைப்பற்றி 19:11:16ல் தெரிவிப்பதோடு இப்பாகம் நிறைவு பெறுகிறது.

ஏழாம் பாகத்தின் மூலம் சாத்தானின் இறுதி மு‍டிவைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். சாத்தான் ஆயிரம் வருடங்களுக்கு கட்டி வைக்கப்படுவதாக 20:2, 3 வசனங்கள் சொல்லுகின்றன. இது கிறிஸ்துவின் முதலாம் வருகையுடன் ஆரம்பம்கிறது. ஆகவே, சாத்தான் இப்போது கட்டிவைக்கப்பட்டிருக்கிறான். இந்த ஆயிரம் வருடங்கள் முடிவுக்கு வரும்போது ஒரு கொஞ்சக் காலப்பகுதிக்கு (little seaseon) சாத்தான் கட்டவிழ்த்து விடப்படுவான் (20:7). பின்பு இறுதியாக அவனுடைய சகல அதிகாரங்களும் அழிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவான் (20:10). “வெளிப்படுத்தல் சுவிசேஷம் ஏழு பாகங்களைக் கொண்டது. இந்த ஏழு பாகங்களும் இரயில் தண்டவாளங்களைப் போல ஒன்றுக்கொன்று சமமாக போய்க்கொண்டிருக்கின்றன (The seven sections are parallel to one another). ஒவ்வொரு பாகமும் கிறிஸ்துவின் முதல் வருகையிலிருந்து இரண்டாம் வருகை மட்டுமான காலப்பகுதியை விளக்கின்றன. இந்த ஏழாம் பகுதி அதே காலப்பகுதியை ஏனைய பகுதிகளைவிட ஒரு புதிய கோணத்தில் விளக்குகின்றன” என்கிறார் ஹென்றிக்சன்.

இந்த நூலின் பிரிவுகளை பின்வருமாறு விளக்கலாம்:

அ, உலகத்தில் நடக்கும் போராட்டம் – திருச்சபை உலகத்தால் துன்புறுத்தப்படுகிறது. திருச்சபை பாதுகாக்கப்பட்டு, பெரு வெற்றி பெறுகிறது. அதன் எதிரிகளுக்கெதிராக அதற்கு நீதி கிடைக்கிறது. (வெளி. 1-11).

1. ஏழு பொற்குத்துவிளக்குத் தண்டங்களுக்கு மத்தியில் கிறிஸ்து (1-3).

2. ஏழு முத்திரைகளைக் கொண்ட புத்தகம் (4-7).

3. ஏழு எக்காளங்கள் (8-11).

ஆ. இதற்குப்பின்னால் உள்ள ஆழமான ஆத்மீக பின்னணி – கிறிஸ்து (திருச்சபை) வலுசர்ப்பத்தாலும் (சாத்தான்) அதன் உதவிக்காரர்களாலும் துன்புறுத்தப்படுதல். இறுதியில் கிறிஸ்துவும் அவருடைய சபையும் பெரு வெற்றி அடைதல் (வெளி. 12-22).

4. ஸ்திரீயும், ஆண்பிள்ளையும் வலுசர்ப்பத்தாலும் அதன் உதவியாளர்களாலும் (மிருகங்களும், வேசியும்) துன்புறுத்தப்படுகிறார்கள் (12-14).

5. ஏழு கோபக்கலசங்கள் (15, 16).

6. வேசியினதும், மிருகங்களினதும் பெரு வீழ்ச்சி (17-19).

7. வலுசர்ப்பத்தின் (சாத்தான்) மீதான நியாயத்தீர்ப்பும், புதிய வானமும் புதிய உலகமும் (புதிய எருசலேம்) (20-22).

விதி 2: இரண்டாவது விதி இந்நூலின் தன்மை பற்றிய இன்னுமொரு உண்மையை விளக்குகிறது. இதுவரை இந்நூலில் ஒன்றுக்கொன்று சமமாகக் காணப்படும் ஏழு பாகங்களையும் நாம் பார்த்தோம், இனி இரண்டாம் விதிரயப் பார்ப்போம், – இந்த ஏழு பாகங்களையும் இரண்டு பெரு முக்கிய பகுதிகளுக்குள் கொண்டு வரலாம். முதலாவது பெரும் பாகம் (1-11) மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாவது பெரும் பாகம் (12-22) நான்கு பகுதிகளைக் கொண்டு காணப்படுகின்றது. இந்த இரண்டு பெரும் பாகங்களும் ஆத்மீகப் போராட்டத்தின் ஆழமான வளர்ச்சியை அல்லது அதன் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. முதலாவது பெரும் பாகம் (1-11) கிறிஸ்துவைத் தனக்குள் கொண்டிருந்து இவ்வுலகத்தால் துன்புறுத்தலுக்குள்ளாகும் திருச்சபையைப் பற்றி விளக்குகிறது. இரண்டாவது பெரும் பாகம் (12-22) சபை அனுபவிக்கும் இந்த ஆழமான ஆத்மீகப் போராட்டத்தின் பின்னணியை விளக்குகின்றது. இது கிறிஸ்துவுக்கும் வலுச்சர்ப்பத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம். இந்தப்போராட்டத்தில் கிறிஸ்துவே வெற்றி அடைகிறார் – அதாவது அவரது திருச்சபை வெற்றி அடைகின்றது.

முதலாவது பாகத்தில் (அதிகாரங்கள் 1-11) மனிதர்களுக்கிடையில் நடைபெரும் போராட்டத்தை வாசிக்கிறோம். அதாவது, விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் ‍இடையில் நடைபெறும் போராட்டத்தை இது விளக்குகிறது. கிறிஸ்து வாழும் திருச்சபை உப்பாகவும், ஒளியாகவும் இருந்து இந்த உலகத்தைத் தாக்குகிறது. ஆனால், உலகம் திருச்சபையின் செய்தியை நிராகரிக்கிறது. வெறுப்போடு உலகம் திருச்சபையைத் துன்புறுத்துகிறது. இப்பாகத்தின் இறுதியில் திருச்சபை மகா வெற்றி அடைவதைப் பார்க்கிறோம். இந்தப் பாகம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

(1) குத்துவிளக்குகளுக்க மத்தியில் இருக்கும் கிறிஸ்து (அதிகாரங்கள் 1-3);

(2) ஏழு முத்திரைகளைக் கொண்ட புத்தகச் சுருள் (அதிகாரங்கள் 4-7);

(3) தண்டனைகளின் ஏழு எக்காளங்கள் (அதிகாரங்கள் 8-11).

இரண்டாம் பாகத்தில் (12-22) இந்தப் போராட்டத்தின் கண்ணால் காணமுடியாத ஆத்மீகப் பின்னணியைப்பற்றி அறிந்து கொள்கிறோம். மனிதர்களுக்கிடையில் ஏற்படும் இந்த ஆத்மீகப் போராட்டத்திற்கு ஆண்பிள்ளையான கிறிஸ்துமேல் சாத்தான் கொண்டுள்ள கொடூர வெறுப்பே காரணம். இயேசுவை தோற்கடிக்க முடியாத சாத்தான் இப்போது அவரைப்பின்பற்றும் சீடர்களின் மீது தனது கோபத்தையும், வெறுப்பையும் காட்டுகிறான். தனது காரியங்களுக்காக சாத்தான் இரண்டு மிருகங்களையும், பாபிலோனையும் பயன்படுத்திக்கொள்கிறான். இருந்தபோதும் அவையெல்லாமே இறுதியில் தூக்கி எறியப்படுகின்றன.

(1) ஸ்திரியும், ஆண்குழந்தையும் சாத்தானாலும், அவனுடைய உதவியாளர்களாலும் துன்புறுத்தப்படுகிறார்கள்: மிருகங்களும், பாபிலோனும் (12-14).

(2) கோபாக்கினையின் ஏழு கலசங்கள் (15-16).

(3) மகா பாபிலோனினதும், மிருகங்களினதும் வீழ்ச்சி (17-19).

(4) வலுசர்ப்பமான சாத்தானின் நியாயத்தீர்ப்பும், புதிய வானங்களினதும், புதிய உலகத்தினதும் தோற்றம்: புதிய எருசலேம் (20-22).

விதி 3: மூன்றாம் விதி இந்நூலின் ஒருங்கிணைந்த தன்மையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இம்மூன்றாம் விதியாவது, இந்நூல் ஒன்றே என்பதாகும். இந்நூலில் மனிதர்களுடைய நடத்தைகளும், தெய்வீக அரசாட்சியும் பகுதி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டள்ளன: உதாரணமாக, குத்துவிளக்கத் தண்டுகளுக்குப் பின் முத்திரைகள் எழுகின்றன. முத்திரைகள், எக்காளங்களுக்கு இடம் கொடுக்கின்றன.

வெளிப்படுத்தல் விசேஷம் வெவ்வேறு பாகங்களாக விளக்கப்பட்டிருந்த போதும், ‍அது முறைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த ஒரே நூலாக இருக்கின்றது. அது வெவ்வேறு விண்ணகக் காட்சிகளைக் கொண்டிருந்தபோதும், திருச்சபைகளுக்கு ஒரே செய்தியைக் கொடுக்கின்றது. இந்நூலின் பல பிரிவுகளையும் நாம் படிக்கின்றபோது அந்தச் செய்தி படிப்படியாக வளர்ச்சிபெற்று கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு தனது உச்சநிலையை அடைகின்றது. நூலின் ஒவ்வொரு பிரிவும் ஏனைய பிரிவுகளோடு நெருங்கிய தொடர்புள்ளவையாக இருக்கின்றன.

வெளிப்படுத்தல் விசேஷம், இரண்டு பெரும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை மேலும் ஏழு பிரிவுகளைக் கொண்டிருந்தபோதும், ஒரே முடிவைநோக்கி வளர்ந்து செல்லும் ஒருங்கிணைந்த நூலாகக் காணப்படுகின்றது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் மனிதனின் ஒழுக்கம், நடத்தை மற்றும் தேவனின் இராஜ்யம் பற்றிய ஒரே விபரங்களையே தருகின்றன. திருச்சபை எப்போதும் தனக்குள் ஜீவனுள்ள கிறிஸ்துவைக்கொண்டு ஒளிவிளக்காக வரலாற்றில் சுடர் விடுகிறது. உலகம் ‍எப்போதும் கிறிஸ்துவை வெறுத்து திருச்சபையை துன்புறுத்துகிறது. தேவ ஆட்டுக்குட்டிக்கும், சாத்தானுக்கம் இடையில் உள்ள போராட்டமே மனிதர்களுக்கிடையில் உள்ள போராட்டங்களுக்கெல்லாம் பின்னணியாக இருக்கின்றது. உலகம், மனிதரை மயக்கும் வேசியைப்போல விசுவாசிகளை சுகபோகத்தால் மயக்கி கிறிஸ்துவுக்கு அவர்கள் சேவை செய்வதைத் தடுப்பதில் மும்முரமாக இருக்கிறது. ஆனால், இந்த தேவ ஆட்டுக்குட்டியின் எதிரிகள் எல்லோரும் தோல்வியைத் தழுவி அழிவை சந்திக்கிறார்கள். வரலாறு முழுவதும் கிறிஸ்துவின் எதிரிகளுக்கு தோல்வியும், அழிவும் மட்டுமே மிஞ்சுகிறது. போராட்டம் தீவிரமடையும், ஆனால், இறுதி வெற்றி எப்போதும் நமக்கே. அடிவானத்தில் அது நமக்காகத் தொடர்ந்து காத்திருக்கிறது.

விதி 4: நான்காவது விதி வெளிப்படுத்தல் விசேஷத்தின் உள்ளடக்கம் பற்றியது. இந்நூலின் பொருள், அதன் நோக்கங்கள் எல்லாம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இறுதி முடிவை நோக்கி நகர்கின்றன. இம்மறைபொருள் விசேஷத்தின் ஏழு பாகங்களும் படிப்படியாக உயர்ந்து ஒவ்வொன்றும் இறுதியில் ஒரு முக்கிய கட்டத்தை அடைவதாகக் காட்டப்பட்டுள்ளது. கடைசிக்கால நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் படிப்படியாக வளர்ந்து முன்னேறுகின்றன. இறுதி நியாயத்தீர்ப்பு பற்றிய அறிவிப்பு முதலில் கொடுக்கப்படுகிறது. அதன்பின் அது அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் இதற்க விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதேமுறையில் புதிய பரலோகமும், புதிய உலகமும் இந்நூலின் ஆரம்ப பாகங்களைவிட இறுதிப் பாகத்திலேயே விளக்கமான விபரங்களைத் தருகின்றன. இந்நூலுக்கு இந்த முறையில் அளிக்கப்படும் விளக்கத்தை வில்லியம் ஹென்றிக்சன், புரோகிரசிவ் பெரலலிசம் (Progressive Parallelism) என்று அழைக்கிறார்.

இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற விதிமுறைகள் எல்லாக்காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கும் திருச்சபைகளுக்கும் பொருந்துகின்றன. இந்த முறையில் வெளிப்படுத்தல் விசேஷம் வரலாறு குறித்த வேதபூர்வமான தத்துவத்தை அளிக்கிறது. இந்த முறையில் சாத்தானின் ஏமாற்றதல்களின் தாக்கத்திற்குள்ளாகும் மனிதர்களுடைய நடத்தைகளை நாம் புரிந்து கொள்ளத் தேவையான விதிமுறைகளை இந்நூல் அளிக்கிறது. இந்த விதிமுறைகளின் அடிப்படையில் நாம் நிகழ்ந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகளையும், இனி நடக்கப்போகும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்ளலாம். இந்நூலில் நாம் பார்க்கும் இரண்டு மிருகங்களம் தங்களுடைய சொரூப வணக்க முறையின் அடிப்படையில் சமய, கலாச்சார, சமூக அமைப்புகளை ‍இவ்வுசகத்தில் வளர்ப்பதைப் பார்க்கிறோம். அதேநேரம், கர்த்தர் தன்னுடைய திருச்சபை மூலம் நற்செய்தியைப் பிரசங்கித்து பாவிகளை மனந்திரும்பும்படி பொறுமையுடன் அழைப்பதையும் பார்க்கிறோம். எக்காளங்களின் தோனியின் மூலம் வரும் நியாயத்தீர்ப்பு பற்றிய எச்சரிக்கைகளைக் கேட்டு பாவிகள் மனந்திரும்பாதபோது அந்த எக்காளங்களைத் தொடர்ந்து கர்த்தரின் கோபக்கலசங்கள் வருவதையும் நாம் இந்நூலில் இருந்து புரிந்து கொள்கிறோம். அதன்பிறகு இவ்வுலகை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சாத்தானின் ஆட்சி இறுதியாக அழிக்கப்படுகிறது; பாபிலோன் வீழ்கிறது. இதைக்குறித்து ஏற்கனவே வரலாறு நமக்குப் பல உதாரணங்களைத் தந்திருக்கிறது: ரோமப் பேரசின் காலம், கிறிஸ்தவ பைசாந்தியக் காலம், இஸ்லாமிய ஒட்டமன் துருக்கியர்களின் காலம், ஐரோப்பிய எதேச்சாதிகாரிகளின் காலம், ஹிட்சரின் நாட்களின் கொடுமை, ஸ்டாலினினி ரஷ்யா, மாவோசேதுங்கின் சீனக்கலாச்சாரப்புரட்சி, ரஷ்யாவின் பொருளுடமைவாதம் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றவைகளின் வெளிப்படுத்தல்களே. எப்படியானாலும் பாபிலோன் இறுதியில் விழத்தான் வேண்டும். அதன் முடிவு வருடங்கள், பத்துவருடங்கள், நூறுவருடங்கள் சென்றாலும் இறுதியில் வந்தேதீரும். கர்த்தர் எல்லாவற்றையும் இறுதியில் நியாயந்தீர்த்து சாத்தானின் கொட்டத்தையும், அவனுடைய தேவிரோதமான அமைப்புகளையும் முற்றாக அழிப்பான். இதன் மூலம் இக்கால முழுவதற்குமான ஒரு உதரணத்தைப் பார்க்கிறோம். அதாவது, இக்காலமும் அதன் இறுதி நியாயத்தீர்ப்பைச் சந்தித்து இருட்டின் இராஜ்யம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

விதி 5: இந்நூலின் முழுப்பகுதியும் நகருகின்ற காட்சிகளைக் கொண்டமைந்திருக்கின்றது. ஒவ்வொரு காட்சியோடும் தொடர்புடைய அம்சங்களை நாம் இந்நூலின் மையப்போதனையின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே, நாம் எப்போதும் இக்காட்சிகளைக் குறித்து முக்கியமான இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும். (1) இக்காட்சியின் முழு விபரம் என்ன? (2) இதன் மையக்கருத்து என்ன?

வெளிப்படுத்தல் விசேஷம் கண்களுக்கு விருந்தளிக்கும் பல காட்சிகளை அளிக்கும் நூலாக இருக்கின்றது. கடந்த கால சந்ததியினர் அதிகமாக செய்திகளைக் கேட்டு அறிந்துகொள்ளவதிலேயே ஆர்வம் காட்டினார்கள். நமது சந்ததி கண்களுக்கு விருந்தளிக்கம் காட்சிகளி‍லேயே அதிக அக்கறை காட்டுகிறது. வெளிப்படுத்தல் விசேஷம் சத்தியத்தை காட்சிளாக அடையாள மொழியில் விளக்கும் நூல். இது ஒரு சினிமாப்படம் போல காட்சிகளை ஒன்று மாற்றி ஒன்றாக நமக்குக் காட்டுகின்றது. ஒவ்வொரு சுழல் முறை நிகழ்ச்சியிலும் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அங்கே நடிகர்கள் காட்சிகளில் நடிக்க ஆரம்பிக்கின்றனர். இந்நூலின் ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் காட்சிகளாகத்தான் வர்ணிக்கப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை தம்முடைய ஊழியக்காரருக்கு காண்பிக்கும் பொருட்டு” என்று முதலாம் வசனத்தில் எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். காண்பிப்பது என்றால், தெய்வீக வெளிப்பாட்டை காட்சிகள் மூலம் விளக்குவது என்று பொருள்.

இதில் தரப்பட்டுள்ள மறைபொருள் விளக்கப்படக்காட்சியை நாம் பார்க்கும்போது முதலாவதாக கேட்க வேண்டிய கேள்வி – இதில் நாம் பார்க்கும் முழுக் காட்சியும் என்ன? என்பதுதான். இதைப்புரிந்து கொள்ள நாம் ஒருபோதும் உருவகப்படுத்தி எதையும் விளங்கிக்கொள்ளும் முறையைப் (Allegorical method) பின்பற்றக்கூடாது. இந்த முறையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க முயல்பவர்கள் ஒரு அடையாளத்தின் எந்த ஒரு சிறு பகுதியையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு பொருள் கொடுக்க முயல்வார்கள். இந்த முறை சீக்கிரமே தேவையில்லாமல் கன்னா பின்னாவென்று சிந்திக்க ஆரம்பித்து எல்லாவற்றிற்கும் பொருளற்ற விளக்கங்களை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய வேத விளக்க முறையை சபை வரலாற்றின் இருண்டகால பகுதி அறிஞர்கள் பயன்படுத்தியதோடு, முக்கியதாக அதை உவமைகளை விளக்கப் பயன்படத்தினர். வெளிப்படுத்தல் விசேஷத்தின் மறைபொருள் விளக்கக் காட்சியைப் போலவே, உவமைகளும் பொருவாக ஒரு மையமான போதனையை அளிப்பவையாக இருக்கும். அவற்றின் மையக்கருத்தைப் புரிந்து கொள்ள நாம் முழுக்காட்சியையும் பார்த்தல் அவசியம். அதன் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாகப் பிரித்து அவற்றிற்கு பொருள் கொடுக்கப் பார்க்கக்கூடாது. அதன் ஒவ்வொரு சிறு பாகமும் ஆத்மீக அர்த்தத்தைக் கொடுப்பதற்காக அக்காட்சியில் கொடுக்கப்படவில்லை. அக்காட்சியின் மையக்கருத்தை விளக்குவதற்காக மட்டுமே அவை அக்காட்சியில் இடம் பெறுகின்றன.

மறைபொருள் விளக்கப்படக்காட்சியைப்பற்றி நாம் இரண்டாவதாக கேட்க வேண்டிய கேள்வி, அக்காட்சியின் தலைமையான போதனை என்ன? என்பதுதான். அக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் வலியுறுத்தி அவற்றிற்கு நாம்பொருள் தேடப் பார்க்கக்கூடாது. மறைபொருள் விளக்கக்காட்சி நமக்கு ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தக் கொடுக்கப்பட்டிருப்பதால் நாம் அதைக் கவனத்துடன் விளங்கிக் கொள்ளப் பார்க்க வேண்டும். இங்கே, நமக்கு அதிக ஞானம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் வேதத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிகளை சாமர்த்தியத்துடன் பயன்படுத்த வேண்டிய பக்குவமும் நமக்கு தேவைப்படுகிறது. வேதத்தில் மேலான, முதிர்ந்த அறிவை அடையும்போது அத்தகைய சாமர்த்தியம் நமக்குக் கிடைக்கிறது. யோவான், அப்போஸ்தல வெளிப்பாடுகளின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்நூலை எழுதியுள்ளார். அவர் இந்தக்காலத்தின் முழுப்பகுதிக்கும் பயன்படும்விதத்தில் தன்நூலை எழுதியிருக்கிறார். ஆகவே, இது தரும் முழுக்காட்சிதான் என்ன? ‍அதன் மையக்கருத்துதான் என்னஈ என்ற கேள்விகளை நாம் கேட்பது அவசியம். இந்தக்காட்சியின் ஏனைய பகுதிகளுக்கு நாம் விளக்கமளிப்பதனால், அதற்கு அந்தப்பகுதிகள் இந்தக்காட்சியின் மையக்கருத்தை நாம் அறிந்து கொள்வதற்குத் துணை செய்வதால் இருக்க வேண்டும். இனி அடுத்த விதியைப் பார்ப்போம்.

விதி 6: இதில் நாம் காணும் முத்திரைகளும், எக்காளங்களம், கோபக்கலசங்களும், அதேபோன்ற ஏனைய அடையாளங்களும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ அல்லது வரலாறுபற்றிய விளக்கமான விபரங்களையோ நமக்குத் தராமல் இவ்வுலக வரலாறு முழுவதிலும், முக்கியமாக இந்தப்புதிய உடன்படிக்கையின் காலத்தில் செயல்பட்டுவரும் மனிதர்களுடைய நடவடிக்கைகள், தேவ நிர்வாகம் ஆகியவற்றின் பின்னணியில் இருக்கும் அடிப்படைக் காரணிகளையே விளக்குகின்றன.

இந்த விதி, வெளிப்படுத்தல் சுவிசேஷத்தின் அடையாளங்களை மேலைத்தேய திருச்சபையின் வரலாற்றின் குறிப்பிட்ட நிகழச்சிகளோடு மட்டும் தொடர்புபடுத்தி விளக்கும் ஹிஸ்டோரிசிஸ்ட்டின் (Historicist) விளக்கத்‍திற்கு முரணானது (வரலாற்று நிகழ்ச்சிகளை மட்டும் மையமாகக் கொண்டமையும் விளக்கம்). ஹிஸ்டோரிசிஸ்ட்டின் விளக்கங்கள் ஐரோப்பாவையே பெரும்பாலும் தழுவியதாகவும் முழு உலகளாவியதான வெளிப்படுத்தல் விசேஷத்தின் தன்மைகளை அலட்சியம் செய்பவையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்ட சில வரலாற்று நிகழ்ச்சிகளை மட்டும் தனிமைப்படுத்தி அவற்றைப் பற்றி மட்டுமே வெளிப்படுத்தல் விசேஷத்தின் அடையாளங்கள் வர்ணிக்கின்றன என்று நாம் கூறுவோமானால், இந்நூலின் போதனைகளின் பயனை நாம் இழந்தவர்களாகி விடுவோம். வரலாற்றில் தொடர்ந்து காணப்படும் மனித நடவடிக்கைகள், தேவநிர்வாகம் ஆகியவற்றின் உதாரணங்களாகக் குறிப்பிட்டுக்கூறும்ப‍ட வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அநகே நிகழ்ச்சிகள் இருப்பதை நாம் காண்கிறோம். இவற்றில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து அதன் நிறைவேற்றுதலைக்குறித்துத்தான் இந்நூல் விளக்குகிறது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கு இருக்கின்றது? காட்சிளாக இந்நூலில் வர்ணிக்கப்பட்டள்ள அடையாளங்கள் உலக வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் தத்துவங்களை படம்பிடித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவை இன்றும் ஐரோப்பா, சீனா, ஆபிரிக்கத, அமேரிக்கா, ஆசியா, ஏன் இந்தியாவிலும், இலங்கையிலும்கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை மனித நடவடிக்கைகளையும், தூதர்களினதும் பிசாசினதும் நடவடிக்கைகளையும், தெய்வீக இறை ஆண்மையின் இரகசியமான செயல்முறைகளையும் படம் பிடித்துக் காட்டும் மறைபொருள் விளக்கக் காட்சிகளாக இருக்கின்றன. இவை உலகத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நிகழ்வதாகவோ அல்லது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியாகவோ மட்டும் இல்லாமல் மிகப்பரந்தவையாக, உலகளாவியதாக இருக்கின்றன. இந்நூலில் நாம் வாசிக்கும் முத்திரைகள் உலகின் நான்கின் ஒரு பாகத்தைப் பாதிக்கிறவவையாக இருக்கின்றன. எக்காளங்கள் உலகின் மூன்றின் ஒரு பாகத்தைப் பாதிப்பவையாக இருக்கின்றன. வாதைகளும், கோபக்கலசங்களும் முழு உலகத்தையும் பாதிப்பவையாக இருக்கின்றன. அடையாள மொழியில் இந்நூலில் விளக்கப்படும் நிகழ்ச்சிகள் மனித வர்க்கத்தின் பெரும் பகுதியைப் பாதிக்கின்றவையாக இருக்கின்றன. உதாரணமாக எக்காளங்கள், இருண்டகால ‍ஐரோப்பியர்கள் எதிர்த்த ஒரு போப்பை மட்டும் குறிப்பவையாக இல்லாமல் மனிதவர்க்கத்தைக் குறிப்பவையாக இருக்கின்றன. சில வேளைகளில் இவ்வடையாளங்கள் முழு மனிதவர்க்கத்தையும் அதன் துவக்கத்திலிருந்து படம்பிடித்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன. ஆகவே, இந்த அடையாளங்கள் ஆதாமின் வீழ்ச்சியிலிருந்து, அதுவும் மிகவிசேஷமாக கிறிஸ்துவின் முதலாம் வருகையிலிருந்து இரண்டாம் வருகை வரையிலான காலப்பகுதியில் வரலாற்றில் நிகழும் எல்லாவற்றிற்கும் பின்னணியான காரணிகளின் செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன.

விதி 7: இந்நூலின் மறைபொருள் வெளிப்பாடு அது எழுதப்பட்ட காலத்துக்கரிய நிகழ்ச்சிகளிலும், சந்தர்ப்பங்களிலும் வேர்விட்டு வளர்ந்ததாக இருக்கின்றது. எனவே, இதன் அடையாளங்களை இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் காணப்பட்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே விளக்க வேண்டும்.

வெளிப்படுத்தல் விசேஷம் மறைபொருள் வெளிப்பாட்டுத் தீர்க்கதரிசனமாக மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட சபைகளுக்கு, அச்சபைகளின் சூழ்நிலைகளோ‍டு தொடர்புள்ளவிதத்தில் எழுதப்பட்ட நிருபமாகவும் இருக்கின்றது. முதலாம் நூற்றாண்டில் பல போராட்டங்களையும், துன்பங்களையும் சந்தித்த குறிப்பிட்ட ஏழு சபைகளுக்கு தைரியம் அளிக்கும் வகையில் எழுதப்பட்டதே இந்நூலாகும். இந்நூலின் அடையாளங்களுக்கான தகுந்த விளக்கங்களை அளிப்பதானால் இது முதலாம் நூற்றாண்டோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த மறைபொருள் விளக்க வெளிப்பாடு அதைப் பெற்றுக்கொள்ளப்போகும் சபைகளுக்கு ஆறுதல் அளித்து பெலப்படுத்துவதைத் தனது உடனடி நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அந்தக்காலத்து சபைகளின் உடனடித்தேவைகளை சந்திப்பதற்காக இது எழுதப்பட்டதால் அக்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்கள் மட்டுமே இந்நூலின் அடையாளங்களை நாம் புரிந்து கொள்ள துணை செய்ய முடியும். இந்நூல் இக்காலத்தில் நமக்குப்பயனுள்ள செய்தியை அளிக்கிறதென்பதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. அதேநேரம், ஆவியானவர் இதன் மூலம் நமக்கு அளிக்கும் செய்தியை அறிந்து கொள்ள வேண்டுமானால் இது எழுதப்பட்ட காலத்து சம்பவங்களோடும், சந்தர்ப்பங்களோடும்த இதைத் தொடர்புபடுத்திப் படிப்பதால் மட்டுதே அதை விளங்கிக் கொள்ள முடியும்.

விதி 8: மறைபொருள் வெளிப்படுத்தல் விளக்கம் வேதத்தில் வேர்விட்டு உறுதியாக வளர்ந்திருப்பதால், முழு வேதபோதனைகளோடும் ஒத்துப் போகும் விதத்தில் வேத அடிப்படையிலேயே விளக்கப்பட வேண்டும். வெளிப்படுத்தல் விசேஷம் கிரேக்க-ரோம கலாச்சாரமாகிய மண்ணில் வளர்ந்த போதும் வேதத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. வேதத்தின் ஏனைய நூல்களைப் போலவே, இந்நூலையும் வேதத்தை வேதத்தாலேயே விளக்க வேண்டும் என்ற வேதவிளக்க விதிமுறையைப் பயன்படுத்தியே விளங்கிக் கொள்ள வேண்டும். வில்லியம் ஹென்றிக்சன் மிக முக்கியமான ஒரு அடிப்படை வேதவிளக்க விதிமுறையை நமக்கு நினைவுபடுத்துகிறார்: “வேதத்தின் தெளிவில்லாததாக தெரியும் பகுதிகளை தெளிவான விளக்கங்களைக் கொடுக்கும் பகுதிகளைக் கொண்மே விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு எதிர்மறையாக நாம் செயல்படக்கூடாது” என்கிறார் ஹென்றிக்சன். உதாரணமாக வெளிப்படுத்தின விசேஷம் 20ம் அதிகாரத்தை (20:2) எடுத்துக் கொள்வோம். இப்பகுதியை நாம், சாத்தானை வெற்றிகொள்ளும் கிறிஸ்துவின் அரசாட்சியைப் பற்றி தெளிவாக விளக்கமளிக்கும் வேதத்தின் ஏனைய பகுதிகளைக் கொண்டே விளங்கிக் கொள்ள வேண்டும். வேதத்தின் ஏனைய பகுதிகளை வ‍ைத்து ஆராய்ந்து பார்க்காமல், இந்த 20ம் அதிகாரம் இதைத்தான் சொல்லுகிறது என்ற நாமே ஒரு போதனையை உருவாக்கிக்கொண்டு, அந்தப்போதனைக்கு சார்பாகப் பேசுகிறதுபோல் தோன்றும் வேதப்பகுதிகளை நாம் வேதத்தில் தேடி அலையக்கூடாது.

விதி 9: இம்மறைபொருள் விளக்க வெளிப்பாடு கர்த்தரின் சிந்தையில் இ‍ருந்து எழுந்த வெளிப்பாடாக உள்ளது. ஆண்டவராகிய கிறிஸ்துவே இதன் மூல ஆசிரியர். இந்தநூல் திருச்சபை வரலாறு பற்றிய தேவனுடைய திட்டங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்கின்றது.

நாம் வேதத்தின் அனைத்து நூல்களையும் கர்த்தரே வெளிப்படுத்தினார் என்பதை ஏற்றக்கொள்கிறோம். இந்நூல் வேதத்தைத் தவிர வேறில்லை. சாத்தானுடனும் அவனுடைய துணைவர்களுடனும் நாம் ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை இந்நூல் நமக்கு எச்சரிக்கைகளின் மூலம் விளக்குகிறது. இந்தப் போராட்டத்தைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கும்படியும், உறுதியோடு நல்ல போராட்டத்தை நடத்தும்ப‍டியும் இந்நூல் நம்மை எச்சரிக்கிறது. நம்மை எதிர்நோக்கும் ஆபத்து மெய்யானது என்றும் அதில் நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்றும் இது வலியுறுத்துகிறது. வெளிப்படுத்தின விசேஷம் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. ஏனெனில், தேவ ஆட்டுக்குட்டியானவர் ஏற்கனவே சாத்தானை வெற்றிகொண்டு ராஜாதி ராஜனாக அனைத்தையும் ஆண்டு வருகிறார். அவர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டள்ள முடிவை நோக்கி வரலாற்றை நடத்திச் செல்பவராக இருக்கிறார். அவரைப்போலவே, நாமும் நித்திய ஆனந்தத்திற்குரிய நம்பிக்கையோடு இந்த ஓட்டத்தில் தொடர்ந்து கடைசி வரையும் ஈடுபட வேண்டும். அவரைப் போலவே, நம்மில் இருக்கும் அவரின் துணையோடு இந்தப் போராட்டத்தில் நாமும் நிச்சயம் வெற்றி அடைவோம்.

3 thoughts on “வெளிப்படுத்தின விசேஷம் – ஒரு விளக்கம்

  1. மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
    வெளி20:4
    வச5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
    வச7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

    8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.——>>>>>>>>>>>>இப்படி இருக்க உயிரோடு எழுப்பப்பட்டு ஆயிரம் வருசம் கிறிஸ்துவோடு எப்போது அரசாளுவோம் சாத்தான் ஆயிரம் வருசம் காவலில் இருக்கும் போதா?
    மற்றும் வச2:2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்——–>>>>>>>>>>>>இப்போது அந்த ஆயிரவருடமானால் ஏன் ஜனங்கள் மோசம் போகிறார்கள்?

    Like

  2. ///ஏழாம் பாகத்தின் மூலம் சாத்தானின் இறுதி மு‍டிவைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். சாத்தான் ஆயிரம் வருடங்களுக்கு கட்டி வைக்கப்படுவதாக 20:2, 3 வசனங்கள் சொல்லுகின்றன. இது கிறிஸ்துவின் முதலாம் வருகையுடன் ஆரம்பம்கிறது. ஆகவே, சாத்தான் இப்போது கட்டிவைக்கப்பட்டிருக்கிறான். இந்த ஆயிரம் வருடங்கள் முடிவுக்கு வரும்போது ஒரு கொஞ்சக் காலப்பகுதிக்கு (little seaseon) சாத்தான் கட்டவிழ்த்து விடப்படுவான் (20:7). // இது உண்மையா?

    ஆயிர வருட அரசாட்சி எப்போது ஆரம்பிக்கிறது.. வெளி20:4. 1தெச4:16,17. ஒரு உயிர்த்தெழுதல் ஆரம்பிக்கிறது.. என்று வேதம் சொல்லுகிறது..

    உயிர்த்தெழுதல் எப்போழுது நடக்ககும் இயேசுவின் இரண் டாம் வருகைதானே ஒழிய… முதல் வருகையல்ல…

    Like

மறுமொழி தருக