1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 4)

படைப்பு

எழுதியவர்: டேவிட் சான்ஸ்கி
தமிழில்: ஆசிரியர்

1. ஆதியிலே கடவுளாகிய பிதா, குமாரன், ஆவி ஆகியோர் தம்முடைய மகிமையுள்ள நித்திய வல்லமை, ஞானம், நற்குணம் ஆகியவற்றின் வெளிப்பாட்டிற்காக ஆறு நாட்களில் உலகத்தையும் காணக்கூடியதும், காணமுடியாததுமான அதிலுள்ள அனைத்தையும் படைக்கத் திருவுளங்கொண்டார். அவையனைத்தும் மிக நல்லவையாக இருந்தன.

யோவான் 1:2-3; எபிரேயர் 1:2; யோபு 26:23; ரோமர் 1:20; கொலோசேயர் 1:16; ஆதியாகமம் 1:31.

2. கடவுள் மற்ற எல்லா படைப்புயிர்களையும் படைத்தபின்பு, அறிவுள்ளதும் அழியாததுமான ஆன்மாக்களோடு, ஆணும் பெண்ணுமாக மனித இனத்தை அவருக்காக வாழ வேண்டிய வாழ்க்கையைக் கொடுத்துப் படைத்தார். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டு, அறிவையும், நேர்மையையும், மெய்யான பரிசுத்தத்தையும் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் வல்லமையுடையவர்களாய் இருந்தார்கள். அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப்பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

ஆதியாகமம் 1.26, 27; 3:6; பிரசங்கி 7:29; ரோமர் 2:14, 15.

3. இருதயத்திலே எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், நன்மை தீமை அறியக்கூடிய மரத்திலிருந்து எதையும் உணவாகக் கொள்ளக்கூடாது எனவும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. இக்கட்டளையைக் கடைப்பிடித்தவரை அவர்கள் கடவுளோடு ஆனந்தமாக ஐக்கியத்தை அனுபவித்ததுடன் எல்லாப் படைப்புயிர்கள்மீதும் தன்னாதிக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

ஆதியாமம் 2:17; 1:26, 28.

படைத்தவர் – விசுவாச அறிக்கை முதலில் படைப்பைப் பற்றி விளக்காமல் நம்மைப் படைத்தவரைப் பற்றி விளக்குகிறது. நம்மைப் படைத்தவர் திரியேகக்கடவுளாயிருக்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. பிதா அனைத்தையும் படைத்ததுமல்லாமல் அவற்றைத் தனது குமாரன் மூலமாக படைத்தார். இதையே யோவான் 1:1-3 வரையிலுள்ள வசனங்கள் போதிக்கின்றன. குமாரன் பிதாவின் ஏஜன்டாக இருந்து அனைத்தையும் படைத்தார். படைப்பில் பிதாவுடன் நேரடியாக ஈடுபட்டிருந்தார் குமாரன்.

பரிசுத்த ஆவிக்கும் படைப்பில் பங்கிருந்தது. ஆதியாகமம் 1:2 வசனம் பரிசுத்த ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்று கூறி பரிசுத்த ஆவி படைப்பில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக் காட்டுகின்றது. அதனால்தான் யோபுவால், தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சரப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று (யோபு 26:13) என்று கூற முடிந்தது. எலிகூ, தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வ வல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர் கொடுத்தது (யோபு 33:4) என்கிறார்.

படைப்பிற்கான காரணம்: விசுவாச அறிக்கை கர்த்தர் ஏன் அனைத்தையும் படைத்தார் என்பதற்கான காரணத்தையும் தெரிவிக்கிறது. மனிதனுடைய நன்மைக்காக மட்டும் அவர் அனைத்தையும் படைக்கவில்லை. தன்னுடைய மகிமைக்காகவும், தனது வல்லமையும், ஞானமும், நன்மைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக அவர் அனைத்தையும் படைத்தார். உலகத்தையும் அதில் காணப்படும் அனைத்தையும் பார்க்கும்போது, ஒன்றுமில்லாததிலிருந்து அவை அனைத்தையும் படைத்த கர்த்தரின் மகிமையும் வல்லமையும் நமக்குப் புரிகிறது. அதனால்தான் பவுல் ரோமர் 1:20இல், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை என்கிறார்.

படைப்பு – கர்த்தர் அனைத்தையும் படைத்தார் என்று விசுவாச அறிக்கை சொல்லும்போது, அவர் எல்லாவற்றையும் எவருடைய துணையுமில்லாமல், எதனைப்பயன்படுத்தியும் படைக்கவில்லை என்று சொல்கிறது. கர்த்தர் தனது படைப்பை வெறுமையில் இருந்து உருவாக்கினார். மண்ணை உருவாக்குவதற்கு அவருக்கு எதுவும் தேவைப்படவில்லை. ரோமர் 4:17, கர்த்தர் இல்லாமவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவராயிருக்கிறார் என்கிறது. இவ்வுலகமும், அதிலுள்ளவைகளும் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட எதுவும் அதற்கு முன்பு இருக்கவில்லை. கர்த்தர் பேசியபோது அவை உருவாயின. எபிரேயர் 11:3, விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (சங்கீதம் 33:6, 8, 9).

அத்தோடு வேதம் கர்த்தர் உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தார் என்று சொல்கிறது (அப்போஸ். 17:24). கர்த்தர் மட்டுமே அனைத்தையும் படைத்தார். அவரோடு இணைந்து வேறு என்தக் கடவுள்களும் படைப்பில் ஈடுபடவில்லை (கொலோ. 1:16).

படைப்பின் நன்மை – கர்த்தர் அனைத்தையும் படைத்தபோது அவர் அவற்றைப் பார்த்து நல்லது என்றார். ஆதியாகமம் 1:31, தேவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாயிருந்தது என்கிறது. அவை அவரது படைப்பு அனைத்தும் நல்லவையாக இருந்தன. ஆணும், பெண்ணுமாக சிருஷ்டிக்கப்பட்ட நமது முதல் பெற்றோரும் நல்லவர்களாக, பாவமற்றவர்களாக இருந்தனர்.

படைப்பின் சிகரமாக மனிதன் – விசுவாச அறிக்கையின் இவ்வதிகாரத்தின் இரண்டாம் பாரா படைப்பின் சிகரமான மனிதனின் சிருஷ்டியைப்பற்றி விளக்குகிறது. மனிதனின் படைப்பைப்பற்றிய பல விபரங்களை வேதம் நமக்குத் தருகின்றது. (1). கர்த்தர் எல்லாவற்றையும் படைத்தபின்பு மனிதனைக் கடைசியாகப் படைத்தார். படைப்பின் இறுதி நாளில், மிருகங்கள் அனைத்தையும் படைத்தபின்பு கர்த்தர் மனிதனைப் படைத்தார் (ஆதியாகமம் 1:24-27). அத்தோடு, கர்த்தர் மனிதனை வித்தியாசமான முறையில், தனித்துவமான விதத்தில் படைத்தார். மோசே இதைப்பற்றி சொல்லுகிறான், தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7).

கர்த்தர் மனிதனைப் படைத்தபோது அவனுடைய ஜீவனை அவனுக்குள் ஊதினார் என்று வாசிக்கிறோம். அதன் பிறகு அவன் ஜீவாத்துமாவாக மாறினான். மிருகங்களும் ஒரு விதத்தில் சிந்திக்கக்கூடியவையாக இருந்தபோதும், மனிதனுக்கு உள்ளதுபோல அவற்றிற்கு ஆத்துமா இல்லை. மனிதனால் மட்டுமே கர்த்தரைப் புரிந்து கொள்ளவும், அவரோட உறவாடவும் முடியும். மனிதன் மட்டுமே அழிவில்லாத ஆத்துமாவைக் கொண்டிருக்கிறான். மிருகங்கள் அழிந்து இல்லாமல் போகின்றன. கர்த்தர் மனிதனுக்கு அழிவில்லாத ஆவியைக்கொடுத்திருப்பதால் இறந்தபிறகும் மனிதன் வாழக்கூடியவனாக இருக்கிறான். இதனால்தான் பிரசங்கி 12:7 இல், “மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்தில் நினை” என்று கூறுகிறான். இதனால்தான் இயேசுவும், சிலுவையில் இருந்த கள்ளனைப்பார்த்து. “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் (பரலோகத்தில்) என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்” என்றார் (லூக்கா 23:43). விசுவாச அறிக்கை, “மனிதனுக்கு கடவுள் சிந்திக்கக்கூடியதும், அழிவற்றதுமான ஆவியைக் கொடுத்திருக்கிறார்” என்று விளக்குகிறது. அதனால், மனிதன் இவ்வுலகில் கர்த்தரை அறிந்து அவரோடு ஐக்கியத்தில் வந்து, இறந்தபிறகு தொடர்ந்து நித்தியத்திற்கும் புதிய உலகத்தையும், புதிய வானங்களையும் கொண்டமைந்து வரப்போகிற தேவ இராஜ்யத்தில் அவரோடு அவ்வைக்கியத்தில் இருக்க முடிகிறது. விசுவாச அறிக்கை சொல்லுகிறதுபோல், “மனிதன் கொண்டுள்ள சிந்திக்கக்கூடியதும், அழிவற்றதுமான ஆவி” கர்த்தர் “அவனுக்காக ஏற்படுத்தியிருக்கிற வாழ்க்கையை” வாழ வைக்கிறது.

ஆணும் பெண்ணும் – ஆதியாகமம் 1:27, கர்த்தர் மனிதனை ஆணாகவும், பெண்ணாகவும் படைத்தார் என்று கூறுகிறது. ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம் கர்த்தர் மனிதனை எவ்வாறு படைத்தார் என்று விளக்கமாகக் கூறுகிறது. அப்பகுதி கர்த்தர் மனிதனை மண்ணில் இருந்து படைத்ததாகவும் (7). பெண்ணை மனிதனின் விலாவிலிருந்து அவர் எடுத்த எலும்பைக் கொண்டுபடைத்ததாகவும் விளக்குகிறது (20-23). ஆணும், பெண்ணும் தேவனுடைய சாயலைக்கொண்டு அவருடைய படைப்பின் சிகரமாக விளங்கினர். அதுமட்டுமல்லாமல் ஆதியாகமம் கர்த்தர் ஆணையே பெண்ணுக்குத் தலையாகப் படைத்தார் என்றும் போதிக்கிறது. இதையே பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 11:3, 8-9 பகுதியில் மேலும் விரிவாக விளக்குகிறார். இப்பகுதி ஆண் பெண்ணுக்குத் தலைவனாக இருப்பதாகவும், பெண், ஆணுக்காகப் படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. அத்தோடு, பெண் அமைதியாக இருந்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேதம் விளக்குகிறது. பவுல், தான் பெண் ஆணுக்குப் போதிக்கிற ஊழியத்தையும், அவன் மேல் அதிகாரம் செலுத்தும்படியும் நியமிக்கவில்லை என்று 1 தீமோத்தேயு 2:11-13ல் விளக்குகிறார். இதனால், ஆண் பெண்ணைவிட மேலானவன் என்றும், சிறப்பானதொரு சிருஷ்டி என்றும் பொருள் கொள்ளக்கூடாது. இருவருமே தேவனின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரையும் படைத்தபோது கர்த்தர் ஆணே தலைமைப் பொறுப்பைக் கொண்டிருக்குமாறு படைத்தார்.

சரீரமும் ஆத்துமாவும் – விசுவாச அறிக்கை ஆணும், பெண்ணும் “அறிவுள்ளதும் அழியாததுமான” ஆன்மாக்களோடு படைக்கப்பட்டார்கள் என்று கூறுகிறது. மனிதனின் ஆத்துமா அழிவில்லாததாக இருப்பதால் அவன் மகிமையின் நிலையிலோ அல்லது தண்டனையை அனுபவிப்பவனாகவோ நித்தியத்திற்கும் வாழ்வான் (அதிகாரம் 31ம் 32ம்). இதையே இயேசு மத்தேயு 10:28 இல் உணர்த்துகிறார்.

மனிதன் சரீரத்தை மட்டுமோ அல்லது ஆவியை மட்டுமோ கொண்டிருக்கவில்லை. மனிதன் சரீரம், ஆவி ஆகிய இரண்டையும் கொண்டிருக்கிறான். படைக்கப்பட்டவுடன் மனிதன் ஜீவாத்துமாவாக இருக்கவில்லை. கர்த்தர் அவனுடைய சரீரத்துடன் ஆவியை இணைத்தபோதே அவன் ஜீவாத்துமாவாக மாறினான் (ஆதியாகமம் 2:7). 1). வேதம் நமது சரீரமும், ஆவியும் இரட்சிப்பைப் பெறக்கூடியதாக படைக்கப்பட்டுள்ளன என்று போதிக்கிறது (ரோமர் 8:23). 2) வேதம், நமது சரீரமும், ஆவியும் கடவுளோடு ஐக்கியத்தை அனுபவிக்கக் கூடியதாக உள்ளன என்று போதிக்கின்றது (1 கொரிந்தியர் 6:13, 15). அத்தோடு, வேதம் நமது சரீரத்தை பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கூறுகிறது (1 கொரிந்தியர் 6:19). கடவுள் தான் மனிதனுடைய சரீரத்தை மிகவும் உயர்வானதாகக் கருதுவதால் நாமும் அதை அப்படியே நடத்த வேண்டும்.

விசுவாச அறிக்கை மனிதனை சரீரம், ஆத்துமா, ஆவி (Body, Soul – Spirit) என்று மூன்று கூறுகளாகப் பிரிக்காமல் சரீரம், ஆத்துமா (Body – Soul) என்ற இரண்டு கூறுகளாக மட்டும் பார்ப்பதேன்? என்ற கேள்வி நிச்சயம் எழக்கூடும். மனிதன் சரீரம், ஆத்மா என்ற இரு கூறுகளைக் கொண்டவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பதாக வேதம் போதிப்பதால் விசுவாச அறிக்கையும் அதன்படியே விளக்குகிறது. ஆத்துமா, ஆவி (Soul – Spirit) என்ற இரண்டு பதங்களையும் வேதம் ஒரே பொருளைக் குறிக்கவே பயன்படுத்துகிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனை மூன்று கூறுகளாக விளக்கும் போதனை வேதத்தில் காணப்படாத போலிப் போதனை. ஆதியாகமம் 2:7ஐ விட வேறு பகுதிகளும் மனிதனை சரீரம், ஆத்துமா ஆகிய இருகூறுகளைக் கொண்டவனாகவே விளக்குகின்றன (பிரசங்கி 12:17; தானியேல் 7:15; மத்தேயு 10:28; அப்போஸ்தலர் 2:31; 1 கொரிந்தியர் 7:34; யாக்கோபு 2:26 ஆகிய பகுதிகளைப் படிக்கவும்).

தேவசாயல் – மனிதன் தேவனுடைய சாயலாக இருக்கிறான் என்று வேதம் சொல்கிறது (ஆதியாகமம் 1:26-27). ஒரு மனிதனின் புகைப்படம் அவனுடைய சாயலாக இருப்பதுபோல் மனிதன் கடவுளின் சாயலாக இருக்கிறான். கர்த்தருடைய குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவனாக மனிதன் இருக்கிறான். தன்னைப் பற்றி வெளிப்படுத்துவதற்காக மனிதனைக் கர்த்தர் உருவாக்கினார். இதற்காக நாம் மனிதனை சிலை செய்து வணங்கக்கூடாது. எல்லா படைப்புயிர்களும் கர்த்தரின் மகிமைக்காகப் படைக்கப்பட்டதுபோல் மனிதனும் கர்த்தரின் மகிமைக்காகப் படைக்கப்பட்டான். மனிதனைப் பார்க்கும்போது அவன் நமக்கு தேவ குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு மனிதனின் ஞானத்தைப் பார்ப்போம். அது தேவஞானத்தைவிட மேலானதாக இல்லாமலிருந்தபோதும், மனிதனுக்கு கடவுள் கொடுத்துள்ள ஞானம் நமக்கு கர்த்தரின் எல்லையற்ற ஞானத்தை நினைவுபடுத்துகிறது.

மனிதனில் காணப்படும் தேவ சாயலை நினைவுபடுத்தும் இன்னுமொரு அம்சம் மனிதன் ஒழுக்கமுள்ளவனாக படைக்கப்பட்டிருக்கிறான் என்பதாகும். மிருகங்கள் இவ்வாறாகப் படைக்கப்படவில்லை. மிருகங்களால் நல்லது கெட்டதை செய்யமுடியாது. எது சரி, தவறு என்பது மிருகங்களுக்குப் புரியாது. மனிதனால் நீதியானவனாக வாழ்ந்து நல்லதைச் செய்ய முடியும். பரிசுத்தமாக இருக்க முடியும். மனிதன் பாவத்தில் விழுந்த நாள் தொடக்கம் கர்த்தர் அவனுக்கு புதிய இருதயத்தைத் தந்தால் தவிர அவனால் பரிசுத்தமாக வாழ முடியாது. ஆரம்பத்தில் மனிதன் நீதியானவனாகவும், பரிசுத்தமானவனாகவும் படைக்கப்பட்டிருந்தான். மனிதன் பாவத்தினால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

மனிதன் பாவத்தில் விழுந்தபோது அவனில் தேவ சாயல் தொடர்ந்திருந்ததா? சில கிறிஸ்தவர்கள் இதற்கு “இல்லை” என்று பதில் கூறுவார்கள். வேதம் “ஆம்” என்றே பதில் கூறுகிறது. பாவத்தில் வீழ்ந்த மனிதன் தொடர்ந்தும் தேவ சாயலில் எப்படி இருக்க முடியும்? இதற்கு வேதம் யாக்கோபு 3:9 மூலம் பதிலளிக்கிறது. “தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிற மனுஷனை அதினாலேயே சபிக்கிறோம்.” இவ்வசனத்தில் காணப்படும் தேவனுடைய “சாயல்” என்ற வார்த்தையே ஆதியாகமம் 1:26ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் மனிதர்களை சபிக்கும்போது தேவ சாயலில் உள்ளவர்களை சபிக்கிறோம் என்று யாக்கோபு கூறுகிறார். அதனால்தான் மனிதன் மனிதனை சபிப்பது பாவமாக இருக்கிறது. ஆகவே, பாவித்திலிருக்கும் மனிதன், நீதிமானாகவும், பரிசுத்தமாகவும் இல்லாதபோதும் தொடர்ந்து தேவ சாயலைக் கொண்டிருக்கிறான்.

மனிதன் பாவத்தில் விழுந்தபோது தேவ சாயல் கறைபடிந்து போனது. உதாரணமாக, வீதியில் இருக்கும் ஒரு பெயர்ப்பலகை வண்டியில் அடிபட்டு விழுந்த விட்டது என்று வைத்துக் கொள்வோம். அது உடைந்து உருமாறிப்போனாலும் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியாவிட்டாலும், பயனில்லாத நிலையிலிருந்தாலும் உடைந்து நொருங்கிப்போன பெயர்ப்பலகையாக இருக்கிறது. இதுபோல்தான் நாம் மனிதனில் உள்ள தேவ சாயலைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும்போது தேவ சாயல் அவனில் பிரகாசதடைகின்றது.

மனிதனின் ஒழுக்கக் குணாதிசயம் – மனிதனின் ஒழுக்கக்குணாதிசயமே கடவுளை அவன் பிரதிபலிக்கும்டிச் செய்கிறது. விசுவாச அறிக்கை இரண்டாம் பாராவில் மனிதனில் காணப்படும் சில குணாதிசயங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. ஒழுக்க முள்ளவனாக மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான். அவனில் அறிவும், நீதியும், பரிசுத்தமும் இருந்தது. இதனால் நாம் மனிதன் கடவுளுக்கு சமமானவன் என்று எண்ணிவிடக்கூடாது. மனிதன் சிறப்பான குணாதிசயங்களோடு படைக்கப்பட்டிருந்தபோது அவனுடைய குணாதியசங்களுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால், கடவுளின் நீதிக்கும், பரிசுத்தத்திற்கும் எல்லை இல்லை (ஏசாயா 6:2-3).

மனிதன் ஒழுக்கக்குணாதிசயத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவனுடைய இருதயத்திற்குள் அதைக் கர்த்தர் எழுதி வைத்திருப்பதால்தான். பவுல் ரோமர் 2:14-15ல் இதை விளக்குகிறார். அதனால் பாவியாகிய மனிதன், இதுவரை பத்துக் கட்டளைகளைக் கேள்விப்பட்டிராதபோதும் எது சரி எது தவறு என்று அறிந்து கொண்டிருக்கிறான். அதை கடவுளே அவனுடைய இருதயத்திற்குள் எழுதி வைத்திருக்கிறார்.

மனிதனில் இருக்கும் ஒழுக்கக் குணாதிசயம் மனிதனுக்கு கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் வல்லமையைக் கொடுக்கிறது. ஆதாம் படைக்கப்பட்டபோது கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் வல்லமை அவனுக்கு இருந்தது. அவனால் பாவத்தை செய்யாமலிருக்க முடிந்தது. பாவம் அவனது இருதயத்தைக் கறைபடுத்தியிருக்கவில்லை.

ஆதாமும், ஏவாளும் பாவத்தை செய்யாதபடிக்கு வல்லமை கொண்டிருந்த போதும், பாவத்தில் விழுந்துவிட முடியாதளவுக்கு வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பாவமில்லாத நிலையில் தொடர்ந்திருப்பார்கள் என்ற நிச்சயம் இருக்கவில்லை. விசுவாச அறிக்கை இதுபற்றி விளக்கும்போது, அவர்கள் “அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப்பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.” என்று கூறுகிறது. அம்முறையில் அவர்கள் பாவத்தில் விழுந்த வரலாற்றை ஆதியாகமம் 3:6ல் வாசிக்கிறோம். பாவம் இல்லாமலிருந்த மனிதன் பாவத்தில் எப்படி விழுந்தான் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்,. அவன் பாவத்தில் விழுந்து தனது தூய்மையை இழந்து போனதை வேதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

கர்த்தரின் விசேஷ கட்டளை – விசுவாச அறிக்கையில் படைப்பு பற்றி விளக்கும் அதிகாரத்தின் கடைசிப் பாரா, கடவுள் நமது முதல் பெற்றோருக்குக் கொடுத்த கட்டளையை நினைவுறுத்துகிறது. “நன்மை தீமை அறியக்கூடிய மரத்திலிருந்து எதையும் உணவாகக் கொள்ளக்கூடாது எனவும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது”. அவர்கள் ஏற்கனவே நியாயப்பிரமாணத்தை தங்கள் இருதயத்தில் கொண்டிருந்தார்கள். அதற்கு மேலாக கடவுள் இன்னுமொரு கட்டளையையும் தந்தார். இதை ஆதியாகமம் 2:16-17 விளக்குகிறது. “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்,. ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” இக்கட்டளை ஆதாமை சோதிக்கக் கொடுக்கப்பட்டது. இவ்விதத்தில் இது வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை. கடவுள் மேல ஆதாமுக்கிருக்கும் அன்பும், கீழ்ப்படிவும் இக்கட்டளையைப் பின்பற்றுவதில் தங்கியிருந்தது. இதைக் கடவுள் ஏனையோருடைய வாழ்க்கையிலும் செய்திருக்கிறார். ஆபிரகாமை இவ்வாறு கர்த்தர் சோதித்தார். அக்கட்டளையைக் கீழ்ப்படிந்து நடந்வரை நமது முதல் பெற்றோர் சமாதானத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். அனைத்தையும் ஆண்டு வந்துள்ளனர். எல்லாவற்றையும் ஆண்டு அனுபவிக்கும் வல்லமையையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்தார்.

கடவுளின் கட்டளைபடி மிருகங்களை மனிதன் ஆண்டு அனுபவித்தான். மிருகங்கள் மனிதனின் சேவகர்கள். அவற்றை மனிதன் தவறான முறையில் பயன்படுத்தக்கூடாது. அவற்றை அவன் தன்னுடைய சகல நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். (மிருகங்களை உணவாகக் கொள்ளக்கூடாதென்று சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்). அதே நேரம் மனிதன் உணவாகவும், வேறு வழிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும்படிப் படைக்கப்பட்ட மிருகங்களை தெய்வமாக வழிபடும் மனிதனுடைய முட்டாள்தனத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.

இறுதியாக இப்பாரா நமது முதல் பெற்றோர் இக்கட்டளையைக் கடைப்பிடித்தவரை கடவுளோடு சமாதானத்துடனும், அன்போடும் வாழ்ந்தனர் என்று கூறுகின்றது. அவர்களுடைய பாவமே கடவுளோடு அவர்களுக்கிருந்த அந்நல்லுறவை அழித்தது.

படைப்பின் காலம் – படைப்பின் காலத்தைப் பற்றி விசுவாச அறிக்கை இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. 1) படைப்பு ஆதியில் நடந்ததாக வேதம் போதிக்கிறது. காலம் ஆரம்பமானபோது கடவுள் அனைத்தையும் படைத்தார். ஆனாதி காலத்தில் இருந்து உலகமும், அதிலுள்ள அனைத்தும் இருந்து வருவதை அநேக தத்துவ ஞானிகளும், இறையியல் அறிஞர்களும் நிராகரித்து வந்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் வேதத்திற்கும், அறிவுக்கும் முரணானவை. 2) வேதம், கடவுள் அனைத்தையும் 24 மணி நேரத்தைக் கொண்ட ஆறுநாட்களில் படைத்தார் என்று கூறுகிறது. சார்ள்ஸ் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை வளர்த்துவிட்ட நாள் முதல் அநேகர் இவ்வேத போதனையை நிராகரித்து வந்துள்ளனர். சிலர் ஆறு நாள் படைப்பு பற்றிய போதனையை வெறும் கட்டுக் கதை என்று நிராகரித்துள்ளார்கள். வேறு சிலர் அந்த ஆறு நாட்களும் கோடிக்கணக்கான வருடங்களைக் குறிக்கும் அடையாள மொழி என்பர். ஆனால், இத்தகைய விளக்கங்களைக் கண்டு நாம் வேத போதனையை நிராகரிக்கத் தேவையில்லை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு பணிந்து போய் வேதத்தை நாம் நிராகரித்துவிடக்கூடாது. வேதத்தின் சத்தியத்தை எந்த விஞ்ஞானமும் பொய்யாக்கிவிட முடியாது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் எப்போதும் நிலையாக இருந்ததில்லை. விஞ்ஞானிகள் சாதாரண மனிதர்களே. அவர்களின் ஆய்வுகள் எப்போதும் பூரணமானதாக இருந்துவிடுவதில்லை. விஞ்ஞானம் வேதத்திற்கு அடிமை.

ஆறுநாட்களில் அனைத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர் நமது தேவன். ஆதியாகமத்தில் நாட்கள் குறித்து பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை 24 மணு நேரத்தைக்கொண்ட நாட்களையே குறிப்பிடுகின்றதே தவரி கோடிக்கணக்கான ஆண்முளைக்கொண்ட நாட்களை அல்ல. அதேவேளை ஏழாம் நாளைப் படைத்த தேவன் அதை 24 மணி நேரம் கொண்ட நாளாகத்தான் படைத்தார். இஸ்ரவேலர் ஏழாம் நாள் சபத்தைக் கொண்டாடியபோது அதை 24 மணி நேரம் கொண்ட நாளாகத்தான் அறிந்து கொண்டார்கள். அதை அடையாள மொழியாக அவர்கள் கருதவில்லை. வேதம் கர்த்தர் அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்ததாகத்தான் போதிக்கின்றது. இன்று லிபரல் கோட்பாடுகள் பரவிக்காணப்படும் இறையியல் கல்லூரிகளிலும், லிபரல் போதகர்களைக் கொண்ட சபைகளிலும் படைப்பைப் பற்றி வேதபூர்வமான போதனை கொடுக்கப்படுவதில்லை. இத்தகைய அவிசுவாசப் போக்கில் இருந்து கர்த்தர் நம்மையும் நமது சபைகளையும் காப்பாற்றுவாராக!

நான் உரத்த சத்தத்துடனும், தெளிவான விளக்கங்களுடனும் வேதத்தின் எல்லாப்பகுதிகளையும் ஒன்றுவிடாமல் பிரசங்கித்தாலும், பிசாசும், உலகமும் இந்நேரத்தில் தாக்கிக் கொண்டிருக்கிற அந்த ஒரு சிறு சத்தியத்திற்காக நான் போராடாவிட்டால், எத்தனை தைரியமாக நான் கிறிஸ்துவை அறிக்கையிட்ட போதும் அவருக்கு நான் சாட்சியாக இருக்கவில்லை. எங்கே போர் கடுமையாக இருக்கிறதோ அங்கேயே போர்வீரனின் விசுவாசம் சோதிக்கப்படுகிறது. வேறு எந்தப் போர்க்களத்தையும் இருவரை தைரியமாக எதிர்நோக்கியிருந்தாலும் இந்த சிறு சத்தியத்திற்காக போராடாதவன் ஒரு அவமானச் சின்னமே!
– மார்டின் லூதர்

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s