இது ஏன் அத்தனை முக்கியமானது?
நாம் ஏற்கனவே 1689 விசுவாச அறிக்கையின் முக்கியத்துவத்தைக் குறித்து இவ்விதழ்களில் எழுதியிருக்கிறோம். இன்று அது தமிழில் வெளிவந்திருப்பதாலும், விசுவாசிகளும், சபைகளும் அதனை வாங்கி வாசிக்க ஆரம்பித்திருப்பதாலும், இது ஏன் வெளியிடப்பட்டது? இதன் சிறப்பான அம்சங்கள் யாவை? இதன் முக்கியத்துவம் யாது? இதனை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்று வாசகர்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. ஒரு விசுவாச அறிக்கையை சொந்தமாக தாமே எழுதிவைத்துக்கொள்ளாமல், பலநாடுகளிலும் ஒரே விசுவாசத்தைக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சபைகளால் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக இது மட்டும் ஏன் பயன்டுத்தப்பட்டுவருகிறது? திருச்சபை வரலாற்றில் பேரறிஞர்களையும், பெரும் வேத வல்லுனர்களையும் பயன்படுத்தி கர்த்தர் ஏன் இப்படியொரு விசுவாச அறிக்கையைத் தந்தார்? என்பதை இறிந்து கொள்ளத்தானே வேண்டும். ஆகவே, இந்த ஆக்கத்தில் அதை நாம் ஓரளவுக்கு விளக்கமாக ஆராயப்போகிறோம்.
1689 விசுவாச அறிக்கையின் வரலாற்றுப் பின்னணி
இந்த விசுவாச அறிக்கை சீர்திருத்த கால வரலாற்றின் மத்தியில் எழுந்ததால் அந்த வரலாற்றை ஓரளவுக்கு அறிந்திருந்தால் மட்டுமே இதன் மூலம் வேத சத்தியங்களின் முழுப்பயனையும் நாம் அடைய முடியும். “இந்த விசுவாச அறிக்கையின் முக்கியத்துவத்தை இதன் வரலாற்று, இறையியல் பின்னணியை அறிந்திருப்பதால் மட்டுமே நாம் அதிகமாக அறிந்து கொள்ள முடியும்” என்று ஜேம்ஸ் ரெனிகன் என்ற தற்கால சீர்திருத்த பாப்திஸ்து இறையியல் வல்லுனர் எழுதுகிறார். நாம் இந்த விசுவாச அறிக்கை பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த சீர்திருத்த பாப்திஸ்து பெரியோர்களால் எழுதப்பட்டது (1689) என்பதை அறிவோம். அந்தக் காலத்தில் திருச்சபை ரோமன் கத்தோலிக்கத்தின் கொடூரமான பிடியில் இருந்து விடுபட்டு வெளியே வந்திருந்தபோதும் வேறு பல தொல்லைகளைத் தன் வாழ்வில் சந்திக்க வேண்டி இருந்தது. அந்தத் தொல்லைகள் அரசியல் தொல்லைகளாக மட்டுமல்லாமல், வேதபோதனைகள் குறித்ததாகவும் இருந்தன.
அக்காலத்தில் திருச்சபை கூடி வர முடியாதபடி அரசின் சட்டம் இருந்தது. ரோமன் கத்தோலிக்க மதம் ஆட்சி புரிந்த காலத்தைப் போலவே தொடர்ந்து அரசு திருச்சபையின் பாதுகாவலன் என்ற முறையில் இயங்கி வந்ததால் இங்கிலாந்து திருச்சபை (Church of England – ஆங்கிலிக்கன்) அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரசு திருச்சபையில் வேதத்துக்கு விரோதமான செயல்களை அறிமுகப்படுத்தியபோது அதற்குக் கட்டுப்பட மறுத்த சீர்திருத்தவாதிகள் சபையாக கூடி வர முடியாத நிலை இருந்தது. அநேக கிறிஸ்தவர்களும், திருச்சபைப் போதகர்களும் துன்புறுத்தலுக்குள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மதசுதந்திரமும், வழிபாட்டு சுதந்திரமும் மக்களுக்கு இருக்கவில்லை. இங்கிலாந்தில் முதலாவம் சார்ள்ஸீம், இரண்டாம் சார்ள்ஸீம் ரோமன் கத்தோலிக்க மனைவிமாரைக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் வந்த இரண்டாம் ஜேம்ஸ் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றியவனாக இருந்தான். இந்த நூற்றாண்டு முழுவதுமே திரும்பவும் திருச்சபை ரோமன் கத்தோலிக்க மதத்தின் வழியில் போய்விடுமோ என்ற பயம் இருந்து வந்தது. ஆராதனை முறைகளில் வேதத்திற்கு முரணான காரியங்களைத் திணிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்த்த போதகர்கள் (Non Conformist) சபைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி விசுவாசிகள் சந்தித்த உபத்திரவ காலமாக இருந்தது. இக்காரணங்களாலேயே அரசும் திருச்சபையும் எப்போதும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்று பாப்திஸ்து பெரியோர்கள் வற்புறுத்தினர். அதை விசுவாச அறிக்கையில் எழுதியும் வைத்தனர்.
இத்தகைய அரசியல் தொல்லைகள் மறைந்து 1689 ல் Act of Toleration சட்டம் கொண்டுவரப்பட்ட போது மறுபடியும் சமயவழிபாட்டு சுதந்திரம் கிடைத்தது. சபைகள் மீண்டும் கூடி வழிபடக்கூடிய வசதி ஏற்பட்டது. 1677இல் பாப்திஸ்து பெரியோர்கள் தங்களடைய விசுவாச அறிக்கையை வெளியிட்டிருந்த போதும் 1689ல் தான் அதை சுதந்திரமாக வெளியிடவும் அனைவரும் வாசிக்கக்கூடிய வசதியும் கிடைத்தது. இதனாலேயே இதனை 1689 விசுவாச அறிக்கை என்று அழைத்து வருகிறோம். இதுவே இவ்விசுவாச அளிக்கையின் வரலாற்றுப் பின்னணி.
1689 விசுவாச அறிக்கையின் இறையியல் பின்னணி
பாப்திஸ்துகள் 1644/46 இல் ஒரு விசுவாச அறிக்கையை எழுதி வைத்திருந்தனர். அது அவர்களுடைய சபையின் விசுவாச அறிக்கையாக இருந்தது. 52 விதிகளை இது கொண்டிருந்தது. அப்படியானால் அவர்கள் இன்னுமொரு விசுவாச அறிக்கை எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம் திருச்சபையில் ஏற்பட்டிருந்த பெருமாற்றங்களே. சீர்திருத்தவாதமும், தூய்மைவாதமும் திருச்சபைகளில் பரவி ஒரு புதிய விசுவாச அறிக்கையின் அவசியத்தை உருவாக்கின. இதை எல்லா சபைப்பிரிவினரும் அக்காலத்தில் உணர்ந்தனர்.
இந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் திருச்சபை கர்த்தரால் அற்புதமாக ஆசீர்வதிக்கப்பட்டு அநேக வல்லமையுள்ள பிரசங்கிகளையும் வேத அறிஞர்களையும் கண்டிருந்தது. ஜோன் ஓவன், குட்வின், சிப்ஸ் போன்ற பல நல்ல வேத அறிஞர்கள் சபையை அலங்கரித்தனர். இவர்கள் திருச்சபை சீர்திருத்தத்திலும், திருச்சபையின் பரிசுத்தத்திலும் அதிக நாட்டம் செலுத்தியதால் தூய்மைவாதிகள் (பியூரிட்டன்) என்று இக்காலத்தில் அழைக்கப்பட்டனர். இவர்கள் நல்ல பல நூல்களையும் எழுதி வைத்தனர். அக்காலத்தில் பல திருச்சபை பிரிவுகளும் இத்தகைய தூய்மைவாதிகளால் நிரம்பி வழிந்தது. அதாவது பாப்திஸ்து, பிரஸ்பிடீரியன், காங்கிரகேசனலிஸ்ட் (இன்டிபென்டன்ட்ஸ் – Independants) என்று எல்லா சபைப்பிரிவுகளிலும் இவர்கள் இருந்தனர். திருச்சபை பழையபடி ரோமன் கத்தோலிக்க மதத்தின் போலிப் போதனைகளுக்கு தலைசாய்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சபையைப் பாதுகாக்க ஒரு விசுவாச அறிக்கையை எழுத வேண்டும் என்று இச்சபைப்பிரிவினர் எண்ணங்கொண்டனர். அந்த விசுவாச அறிக்கை முழுமையானதாகவும் சீர்திருத்த, தூய்மைவாதக் கோட்பாடுகளைத் தெளிவாகப் போதிப்பதாகவும், 16ம் 17ம் நூற்றாண்டு சபை சீர்திருத்தத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதும் இவர்களின் நோக்கமாக இருந்தது. பிரஸ்பிடீரியன் சபைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்ற கட்டடத்தில் கூடி ஒரு விசுவாச அறிக்கையையும் அதோடு வினாவிடைப் போதனைகளையும் வரைந்தனர். இவை வெஸ்ட்மின்ஸ்டர் கோட்பாடுகள் என்ற பெயரைப் பெற்றிருந்தன. இவை திருச்சபைக் கோட்பாடுகளைப் பொறுத்தளவில் பிரஸ்பிடீரியன் கோட்பாடுகளைப் பின்பற்றியதாக இருந்தது. அதாவது, குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கமும், திருச்சபைக்கு வெளியில் ‘சினட்’ என்ற அதிகாரம் கொண்ட ஒரு குழு அமைந்து திருச்சபைகளின் மேல் அதிகாரம் செலுத்துவதும், அரசும், திருச்சபையும் இணைந்திருக்க வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளைக் கொண்டிருந்தன. இவை தவிர்ந்த ஏனைய சத்தியங்களில் இந்த விசுவாச அறிக்கையும் வினாவிடைப் போதனைகளும் சீர்திருத்தவாத, தூய்மைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றியதாக இருந்தன. இரட்சிப்பு கர்த்தருடையது என்றும், மனிதனின் சித்தம் பாவத்திற்குக் கட்டுப்பட்டது என்றும், கர்த்தரின் ஆவியின் கிரியையால் மட்டுமே மனிதன் இரட்சிப்பை அடைய முடியும் என்ற சீர்திருத்தக் கோட்பாடுகளை இவ்விசுவாச அறிக்கை தெளிவாகப் போதித்தது.
எனவே பாப்திஸ்துகளும் நடைமுறைக்கு ஏற்றவிதத்தில் சீர்திருத்தப் போதனைகளைக் கொண்ட ஒரு விசுவாச அறிக்கை சபைக்குத் தேவை என்ற எண்ணத்தில் அத்தகைய அறிக்கையை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரஸ்பிடீரியன்களின் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை, ஜோன் ஓவன் போன்றோரின் (Congregationalist – காங்கிரிகேசனலிஸ்ட்) சவோய் விசுவாச அறிக்கை போன்ற அறிக்கைகள் எழுதப்பட்டுவந்திருப்பதை அறிந்த பாப்திஸ்து பெரியவர்கள் தாங்கள் எழுதிக் கொண்டிருந்த அறிக்கையில் தங்கள் கோட்பாடுகளுக்கு ஒத்துப் போகும்வகையில் அவற்றில் காணப்பட்டவற்றை தங்களுடைய விசுவாச அறிக்கையில் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு ஒரு முக்கியமான காரணமிருந்தது. அரசியல் சூழ்நிலையும், சபை சூழ்நிலையும் மோசமாக காணப்பட்ட அக்காலத்தில் சீர்திருத்த திருச்சபைகள் ஒன்றோடொன்று சேர்ந்து ஒத்துழைப்பது அவசியமென்றபடியாலும், வேற்றுமைகளைவிட ஒத்துப்போகக்கூடிய போதனைகளே அதிகமாக இருந்தது என்பதாலும் தங்களுடைய விசுவாச அறிக்கை அநேகமான காரியங்களில் வெஸ்ட்மின்ஸ்டர், மற்றும் சவோய் அறிக்கைகளை வார்த்தைக்கு வார்த்தை தழுவியதாக இருக்கும்படி எழுதினார்கள். இந்த விசுவாச அறிக்கைகளை ஒத்துப் பார்த்துப் படித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும்.
இருந்தாலும் சில விஷயங்கள் பாப்திஸ்துகளுக்கு முக்கியமானதாகவும், அடிப்படைப் போதனைகளாகவும் தெரிந்தன. குழந்தை ஞானஸ்நானம் ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஒரு அங்கமென்றும் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது வேதம் போதிக்கும் இரட்சிப்பு, திருச்சபைபற்றிய போதனைகளுக்கு முரணானது என்றும் அவர்கள் கருதினார்கள். விசுவாசிகளுக்கு மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்றும், விசுவாசிகள் மட்டுமே சபையில் அங்கத்தவர்களாகத் தெரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் தெளிவாய் இருந்தனர். அத்தோடு திருச்சபை மூப்பர்களால் ஆளப்பட வேண்டும் என்றும், திருச்சபைக்கு வெளியில் அதன் மீது அதிகாரம் செலுத்தும் எந்தக் குழுவும் இருக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். திருச்சபை பற்றிய பிரஸ்பிடீரியன்களின் போதனைகளை பாப்திஸ்துகள் நிராகரித்தனர். மேலும், திருச்சபையும் அரசும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடாது என்றும் திருச்சபை தனித்தியங்க வேண்டும் என்றும் அவர்கள் நம்பினார்கள். இவை ஒன்றிணைந்திருந்ததாலேயே திருச்சபைக்கு அரசால் எப்போதும் பெருந்துன்பம் ஏற்பட்டது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்தோடு அரசும், திருச்சபையும் இணைந்திருக்க வேண்டுமென்ற போதனையே வேதத்தில் இல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, தங்களுடைய விசுவாச அறிக்கை இந்தப்போதனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
இக்காலத்தில் பிரஸ்பிடீரியன்களுக்கு அரசால் பெருந்துன்பம் ஏற்பட்டு மத சுதந்திரம் இல்லாமல் இருந்தது. பாப்திஸ்துகளுக்க சுதந்திரம் இருந்ததால் அவர்களால் தங்களுடைய விசுவாச அறிக்கையை 1677ல் வெளியிட முடிந்தது. பின்பு எல்லோருக்கும் பூரண மதசுதந்திரம் 1689ல் வழங்கப்பட்டபோது தங்களுடைய விசுவாச அறிக்கையை அவர்கள் வெளியிட்டு 1689 விசுவாச அறிக்கை என்ற பெயரில் அதை அழைத்தனர். ஆரம்பத்தில் 32 பாப்திஸ்து போதகர்கள் இங்கிலாந்தில் கூடிக்கையெழுத்திட்டு இதை ஏற்றக்கொண்டனர். அன்றுமுதல் இன்றுவரை இதுவே சீர்திருத்த பாப்திஸ்துகளின் விசுவாச அறிக்கையாக இருந்து வருகின்றது.
1689 விசுவாச அறிக்கையின் குறிப்பிட்ட இரு போதனைகள்
1689 விசுவாச அறிக்கை மிக முக்கியமானதொன்றாகவும், விசேஷமானதாகவும் இருந்தாலும் அது வேதத்தைப் போல் பூரணமானதல்ல. வேதம் மட்டுமே பூரணமான கர்த்தருடைய வார்த்தை. இருந்தபோதும் நமது மூதாதையர்களான சீர்திருத்தவாதிகள் மேதைகளான பல போதகர்களை ஒன்றுகூட்டி மிகவும் கவனத்தோடு வேதபூர்வமாக இந்த விசுவாச அறிக்கையை எழுதித் தந்திருக்கிறார்கள். மேதைகளாகவும், பெரும் அறிஞர்களாகவும் அவர்கள் இருந்தபோதும் வேதசத்தியங்கள் அனைத்திலும் அவர்கள் பூரணமான ஞானத்தைக் கொண்டிருந்தார்கள் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பற்றி அப்படி ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை.
இந்த விசுவாச அறிக்கையின் இரண்டு போதனைகளை நமது மூதாதையர் தங்களுடைய அறிவுக்குப்பட்டவிதத்தில் விளக்கியுள்ளார்கள். ஆனால், அது அவர்களுடைய விளக்கம் மட்டுமே என்பதையும், அதைக்குறித்து வேதம் ஆணித்தரமான விளக்கத்தை நமக்குத் தரவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் விசுவாச அறிக்கை தவறான விளக்கத்தைத் தந்திருக்கிறது என்ற தவறான முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. இந்த இரண்டு போதனைகளைப் பொருத்தவரையிலும் வேதம் வெளிப்படையாக எதையும் சொல்லாத போதும் விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் இருக்கும் வேத வசனங்களைப் பயன்படுத்தி வேதத்தோடு ஒத்துப்போகக்கூடியது தாம் நம்பும் ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். அந்த விளக்கங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த இரு போதனைகளையும் பொருத்தவரையில் வேதம் தீர்மானமான ஒரு முடிவை நமக்குத் தெரியப்படுத்தவில்லை என்பதை இவ்விசுவாச அறிக்கையை இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் சபைகள் அனைத்தும் புரிந்து கொண்டுள்ளன. ஆகவே, இதை நாமும் அறிந்து கொள்வது அவசியம். இனி அந்த இரண்டு போதனைகளும் யாவை என்று விளக்கமாகப் பார்ப்போம்.
(1) குழந்தைப் பருவத்தில் இறப்பவர்கள்
இவ்விசுவாச அறிக்கையின் 10ம் அதிகாரத்தின் 3வது பாரா, “குழந்தைப் பருவத்தில் இறக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட குழந்தைகளை கடவுள் ஆவியின் மூலம் மறுபிறப்பளித்து இரட்சிக்கிறார்” என்று விளக்குகிறது. இதன் மூலம் இந்தப்பகுதி எதைப் போதிக்கவில்லை என்பதை முதலில் பார்ப்போம். இறக்கின்ற குழந்தைகளில் ‘சில குழந்தைகள் மட்டும்’ கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவை என்று விசுவாச அறிக்கை சொல்லவில்லை. ஆனால், இறக்கின்ற குழந்தைகளில் ‘சில குழந்தைகளாவது’ தெரிந்து கொள்ளப்பட்டவையாய் இருக்கலாம் என்று மட்டும்தான் இப்பகுதி விளக்குகிறது. இதற்கு மேல் எதையும் இது சொல்லவில்லை. யோவான் 3:8 வசனம் இவ்விளக்கத்திற்கு ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வேதத்தில் இதுபற்றி நமக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை. சிலர் தாவீது தன்னுடைய குழந்தையைப்பற்றிக் கூறியதை உதாரணமாகக் காட்டுவார்கள் (2 சாமுவேல் 12:23). தாவீது, “நான் அதனிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்திற்குத் திரும்பிவரப்போகிறதில்லை என்றான்”. ஆனால், அந்தப்பகுதியில் ‘அதனிடம்’ என்று தாவீது குறிப்பிடுவது (சியோல்) பரலோகமல்ல. அது கல்லறையையே (grave) குறிக்கிறது. எனவே, வேதம் தெளிவான விளக்கங்களைக் கொடுக்காவிட்டால் அது பற்றி நாம் தீர்மானமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இது குறித்து வேதம் அமைதியாக (Bible is silent on this issue) இருக்கிறது என்று மட்டும்தான் நாம் சொல்ல முடியும்.
இந்தப்பகுதி குழந்தைப்பருவத்தில் இறப்பவர்களைப்பற்றி மட்டும் விளக்காமல் இந்த உலகத்தில் புத்தி சுவாதீனமற்றிருப்பவர்களைப் பற்றியும், அறிவு வளர்ச்சி இல்லாதிருப்பவர்களைப் பற்றியும் விளக்குகிறது. 10:3ல் காணப்படும் “வெளிப்படையாக நற்செய்திப்பிரசங்கத்தினால் அழைக்கப்பட முடியாத தெரிந்து கொள்ளப்பட்ட அனைத்து மனிதர்களையும்” என்ற வார்த்தைகள் இவர்களையே குறிக்கின்றன. இவர்களில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் கடவுள் இரட்சிக்கிறார் என்பது இந்தப்பகுதியின் போதனை.
உண்மையில் கடவுள் பாவிகளை எப்படி இரட்சிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “வேதத்தைப் பொறுத்தவரையில் கர்த்தர் தன்னுடைய வார்த்தையைப் பயன்படுத்தியே ஒருவர் திட்ப உறுதியான அழைப்பைப் பெற்று மறுபிறப்படையும்படிச் செய்கிறார்” என்று சாமுவேல் வால்டிரன் விளக்கமளிக்கிறார் (2 தெசலோ. 2:14; 1 பேதுரு 1:23-25; யாக். 1:17-25). நற்செய்திப் பிரசங்கத்தின் மூலம் எல்லோருக்கும் கொடுக்கப்படுவது பொருவான அழைப்பு (General Call). ஒருவர் பொதுவான அழைப்பின் மூலம் மட்டும் கிறிஸ்துவிடம் வந்துவிடுவது கிடையாது. ஆனால், அவ்வழைப்பின் மூலம் கர்த்தர் எவரைத் திட்பஉறுதியாக (Effectual Call) அழைக்கிறாரோ அவர் மறுபிறப்பையும் ஆவியின் கிரியையால் அடைகிறார். திட்பஉறுதியாய் அழைக்கப்பட்டவனே நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கிறான். ஆகவே, வார்த்தையைக் கேட்காமல், அதன் உந்துதல் இல்லாமல் தெரிந்துகொண்டவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியும் என்ற ரீதியில் சிந்திப்பது தவறானது. இரட்சிப்பைப்பற்றி அறிந்து கொள்ளவும், அதை அடையவும் எல்லோருக்கும் நற்செய்தியைக் கொடுத்த கடவுள் அதன் பயன்பாடே இல்லாமல் சிலரை இரட்சிக்க வேண்டிய அவசியம் என்ன?
(2) போப் அந்திக் கிறிஸ்துவா?
இரண்டாவதாக விசுவாச அறிக்கையில் 26த் அதிகாரத்தின் 4ம் பாரா ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப் அந்திக் கிறிஸ்து என்றும், பாவ மனிதனாகவும், கேட்டின் மகனாக இருக்கிறார் என்று அடையாளம் காட்டுகின்றது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் ரோமன் கத்தோலிக்க மதம் அதிகார வெறியில் தலைவிரித்தாடிய இருண்ட காலத்தில் இந்தவிதத்தில் போப் அந்திக் கிறிஸ்துவாக அடையாளம் காட்டப்பட்டதை எவரும் குறைகூறமாட்டார்கள். இன்றும் திருச்சபையில் ஒரு சாரார் போப்பே அந்திக் கிறிஸ்து என்று விசுவாசிக்கின்றனர். ஆனால், கடைசிக்கால நிகழ்ச்சிக்ளைப்பற்றி வேதபூர்வமாக ஆராயும்போது போப் தான் அந்திக் கிறிஸ்துவா? அல்லது வேறு யாருமா? என்பதில் திருச்சபையில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த விஷயத்தில் போப்தான் அந்திக்கிறிஸ்து என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டம் என்று வேதம் எதிர்பார்க்கவில்லை. யோவான் சுட்டிக்காட்டும் அந்திக் கிறிஸ்துகளில் ஒருவராக நிச்சயம் போப்பும் இருப்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எல்லோரும் அந்திக் கிறிஸ்துகறே. ஆனால், இறுதிக் காலம் காணப்போகும் கொடிய அந்திக் கிறிஸ்து யாராக இருக்கும் என்பதில் சீர்திருத்த சபைகள் மத்தியிலும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, இந்த விஷயத்தில் இந்தப்பகுதியின் (26:4) விளக்கம் பயனுள்ள பல விளக்கங்களில் ஒரு விளக்கமாகத்தான் கருதப்பட வேண்டும். இதையே இறுதியான முடிவாகக் கருத வேண்டிய அவசியமில்லை.
1689 விசுவாச அறிக்கையின் முக்கிய அம்சங்கள் (Distinctive features)
இதுபற்றி ஒரு நூலே எழுதிவிட முடியும். இருந்தாலும் சுருக்கமாக இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்க முயற்சி செய்கிறேன். நான் கொடுக்கப்போகும் விளக்கங்களுக்கு உருவம் கொடுத்தவர் எனது நண்பரான கிரெக் நிக்கல்ஸ். அவர் ஒரு சீர்திருத்த பாப்திஸ்து. அவர் உருவம் கொடுத்த சிந்தனைகளை நான் உதாரணங்களுடன் விளக்க மட்டுமே முயன்றுள்ளேன்.
இன்று 1689 விசுவாச அறிக்கையை சபைகள் பயன்படுத்துவது மட்டுமல்ல முக்கியம். அதன் தன்மையை நன்றாக அறிந்தும், புரிந்து கொண்டும் நடைமுறையில் கொண்டுவருவதால் மட்டுமே பயன் கிடைக்கும். இதை ஏன் சொல்லவருகிறேன் என்றால் சீர்திருத்த பாப்திஸ்துகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சிலர் இன்று அது எதைக் குறிக்கிறது என்று தெரியாமலேயே அந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதோடு இவ்விசுவாச அறிக்கை போதிக்கும் பல முக்கிய போதனைகளையும் நிராகரிக்கிறார்கள். என்னுடைய சபை இருக்கும் நகரத்திற்குப் பக்கத்தில் உள்ள ஊரில் ஒரு சபை தன்னை சீர்திருத்த பாப்திஸ்து என்று அழைத்துக்கொள்கிறது. ஆனால், அச்சபை முழுக்கு ஞானஸ்நானத்தையும், குழந்தை ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த இரண்டு முறைகளையும் நம்புபவர்கள் அச்சபையின் மூப்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி 1689 விசுவாச அறிக்கையை பின்பற்றும் சபையாக இருக்க முடியும்? இந்தக் காரியங்களைப் பற்றி விசுவாச அறிக்கை மிகத்தெளிவானதும் உறுதியானதுமான போதனைகளைத் தருகிறபோது அவற்றை சரியாகப் புரிந்துகொள்ளாமலும், பின்பற்றாமலும் வெறுமனே சீர்திருத்த பாப்திஸ்து என்று அழைத்துக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை.
சிலர் இன்று கிருபையின் போதனைகள் (The Doctrines of Grace) மட்டுமே முக்கியம் மற்றதெல்லாம் அவசியமில்லை என்கிறார்கள் (மலர் 7 இதழ் 3ஐப் பார்க்கவும்). வேறு சிலருக்கு விசுவாச அறிக்கை போதிக்கும் வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி முறை கசக்கிறது (விசுவாச அறிக்கையில் 22ம் அதிகாரம் இதை விளக்குகிறது). சிலர் ஓய்வு நாளைக் கவனத்தோடு இன்று பின்பற்ற வேண்டியதில்லை என்றும், நியாயப்பிரமாணத்தை விசுவாசிகள் இன்று கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றும் போதிக்கிறார்கள் (Antinomianis, New Covenant Theology). பலருக்கு திருச்சபை அமைப்பில் அக்கறை இல்லை. சபை அங்கத்துவம், ஒழுங்குக் கட்டுப்பாடு எல்லாம் அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். இவர்கள் எப்படித் தங்களை சீர்திருத்த பாப்திஸ்து என்று அழைத்துக் கொள்ள முடியும்? 1689 விசுவாச அறிக்கையில் 50%தை அடுப்பில் எறிந்துவிட்டு அதை விசுவாசிக்கிறோம் என்று சொல்வது எந்தவிதத்தில் பொருந்தும்? அதன் சகல அதிகாரங்களும் தரும் போதனைகளை அங்கீகரிக்காதவர்களுக்கு அதன் மேல் நம்பிக்கையில்லை என்றுதான் அர்த்தம்.
இன்று சீர்திருத்தவாதிகள் என்றும் அல்லது சீர்திருத்த பாப்திஸ்துகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்பவர்களையெல்லாம் நாம் உடனடியாக அங்கீகரித்து அவர்களோடு ஐக்கியத்தில் வர முடியாமலிருக்கிறது. மலர் 8 இதழ் 1ல் பார்த்தது போல் ஒரு சபையையும், அதன் போதகரையும் நன்றாகத் தெரிந்து பழகாமலும், அச்சபை எதை விசுவாசிக்கிறது? எப்படி நடந்து கொள்கிறது? என்பதை அறிந்து கொள்ளாமலும் நாம் அச்சபையோடு மெய்யான ஐக்கியத்தில் வரமுடியாது; வரவும் கூடாது. போலி ஐக்கியத்திற்கு இதெல்லாம் அவசியமில்லை. மெய்யான இருதயபூர்வமான ஐக்கியம் வேண்டுமானால் இதையெல்லாம் பார்த்துத்தான் ஆக வேண்டும். அது மட்டுமே நமது இருதயத்தையும், நமது சபையின் ஆத்மீக வளர்ச்சியையும் காக்கும்.
இவ்விசுவாச அறிக்கை பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை இனிப்பார்ப்போம்:
1. இது கிறிஸ்தவ வேத அடிப்படையில் அமைந்த இவெஞ்சலிக்கல், சீர்திருத்தவாத விசுவாச அறிக்கையாக இருக்கிறது.
அதாவது, வேதம் போதிக்கும் அடிப்படைப் போதனைகள் அனைத்தையும் அது போதிக்கும்விதத்தில் இது விளக்குறிது. கர்த்தரைப் பற்றியும், இரட்சிப்பு பற்றியும், கிறிஸ்து பற்றியும் வேதபூர்வமான விளக்கங்களைத் தருகிறது. சகலவிதமான போலிப்போதனைகளையும் முற்றாக நிராகரிக்கிறது. இதன் முதல் அதிகாரம் வேதம் பற்றிய தெளிவான விளக்கத்தைத் தருகிறது. வேதத்தின் அதிகாரமும், போதுமான தன்மையும், அதை விளங்கிக் கொள்ள வேண்டிய முறையையும் சந்தேகத்திற்க இடமில்லாமல் விளக்குகிறது. வேதத்தின் அதிகாரத்திலும் அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையற்ற பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டத்தையும், ரோமன் கத்தோலிக்க மதத்தையும் நிராகரிக்கிறது. திருச்சபைகளும், விசுவாசிகளும் கர்த்தருடைய வேதத்தில் நம்பிக்கை வைத்து அதன்வழிப்படி மட்டுமே நடக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
2. இது வேதத்தில் கர்த்தரின் உடன்படிக்கை (Covenant of God) விளக்கும் சத்தியமாகிய கர்த்தர் ஒரே மக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது.
வேதம் கர்த்தரின் உடன்படிக்கை பற்றி விளக்கும்போது அந்த உடன்படிக்கை ஒன்றே என்று போதிக்கின்றது. அதாவது, அவர் தனது மக்களை இரட்சிக்கும் நோக்கத்துடனேயே படைப்பின் ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டு வந்திருப்பதோடு அந்த அடிப்படையிலேயே தனது உடன்படிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளார். இஸ்ரவேலருக்கு ஒரு திட்டம், புற ஜாதியாருக்கு ஒரு திட்டம் என்று வெவ்வேறு திட்டங்களை அவர் வகுத்துக் கொள்ளவில்லை. இஸ்ரவேலை அவர் தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டபோதும் மெய்யான இஸ்ரவேல் கர்த்தருடைய மக்களே. எனவே, வேதம் கர்த்தர் ஒரே மக்களைக் கொண்டிருந்ததாகவும், அவர்களை இரட்சிக்க ஒரே முறையைத்தான் எப்போதும் பயன்படுத்துவதாகவும் சொல்கிறது. கர்த்தர் தான் தெரிந்து கொண்ட மக்களை கொண்டே அவர் தன்னுடைய சபையையும் நிறுவினார். அச்சபையே கர்த்தருடைய திட்டத்தில் முக்கிய இடத்தை வகிப்பதோடு, கிறிஸ்து தனது இரண்டாவது வருகையின்போது தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகும் சபையாகவும் இருக்கிறது.
இதன்படி இந்த விசுவாச அறிக்கை டிஸ்பென்சேஷ்னலிசம் என்ற போதனையை வேதத்தோடு பொருந்தி வராததாக அடியோடு நிராகரிக்கிறது. டிஸ்பென்சேஷ்னலிசம் இஸ்ரவேலர், புதிய ஏற்பாட்டு மக்கள் என்று இரண்டு கூட்டத்தை வேதத்தில் பார்க்க முயல்வதோடு, கர்த்தர் இவர்களை இரட்சிக்க இருவேறு முறைகளைப் பயன்படுத்தியதாகவும் தவறாகப் போதிக்கிறது. சி. ஐ. ஸ்கோபீல்டின் (C. I/ Scofield) வேதக்குறிப்புகள் இப்போதனையையே இன்றும் பரப்பி வருகின்றன. விசுவாச அறிக்கையின் 7வது அதிகாரம் கர்த்தருடைய உடன்படிக்கை பற்றிய போதனையை அளிக்கிறது.
3. இந்த விசுவாச அறிக்கை கிருபையின் கோட்பாடுகளைத் தெளிவாகப் போதிக்கிறது.
கர்த்தர் தன்னுடைய மக்களை எப்படியாக இரட்சிக்கிறார் என்ற போதனையைத் தருவதே கிருபையின் கோட்பாடுகள். இதனைக் கல்வினிசக் கோட்பாடுகள் என்றும், கல்வினின் ஐங்கோட்பாடுகள் என்றும் பலவிதமாக அழைப்பார்கள். இதுபற்றி விபரமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் இப்பத்திரிகையின் மலர் 7 இதழ் 4ஐ வாங்கி வாசிக்கவும் (கல்வினிச ஐங்கோட்பாடுகள் அவசியமா?). இந்தக் கிருபையின் போதனைகள் கர்த்தர் அளிக்கும் இறை ஆண்மையுள்ள இரட்சிப்பு பற்றிய போதனைகளை வேதபூர்வமாக விளக்குகின்றன. இவை ரோமன் கத்தோலிக்க மற்றும் ஆர்மீனியனிசப் போதனைகளை அடியோடு நிராகரிக்கின்றன. மனிதன் தனது சித்தத்தைப் பயன்படுத்தி தானே சுயமாக முடிவெடுத்து இரட்சிப்பை அடைய முடியும் என்ற அசட்டுத்தனமான போதனையை அடியோடு நிராகரிக்கிறது. மனித சித்தம் பாவத்தால் கறைபடிந்து, வல்லமையற்று ஆத்மீக காரியங்களில் எந்த நன்மையான முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறது என்று தெளிவாக விளக்குகின்றது. இரட்சிப்பு கர்த்தரிடமிருந்து வருகின்றது என்ற சத்தியத்தை, ஆணித்தரமாய் அறிவிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இந்தக் கிருபையின் போதனைகள் ஹைபர்-கல்வினிசம் (Hyper-Calvinism) என்ற போலிப்போதனையையும் முற்றாக நிராகரிக்கின்றது. Gospel Standards என்ற பெயர் கொண்ட சபைகள் இங்கிலாற்தில் இந்ததப் போதனையை இன்றும் பின்பற்றுகிறார்கள். இந்தப் போதனைக்கும் கல்வினிசத்திற்கம் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் போதனை கர்த்தர் தன்னுடைய மக்களைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு நற்செய்தி சொல்லுவது அவசியமில்லை என்கிறது. இது மனிதன் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்புடையவனாக இருக்கிறான் என்ற சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், விசுவாச அறிக்கை 3, 5, 6, 8, 9 அதிகாரங்களில் கிருபையின் போதனைகளை விளக்குவதுடன் ஹைபர்-கல்வினிசத்தின் தோலை உரிப்பதற்காக 20ம் அதிகாரத்தில் நாம் கிறிஸ்துவின் நற்செய்தியை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமைப் பொறுப்புடையவர்களாக இருக்கிறோம் என்றும் விளக்குகிறது. மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியும் என்று கூறம் ஆர்மீனியனிசத்தையும், மனிதனுக்கு நற்செய்தியைக் கொடுக்க வேண்டியது அவசியமில்லை என்று கூறும் ஹைபர்-கல்வினிசத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்று விசுவாச அறிக்கை வலியுறுத்துகிறது.
4. இது தூய்மைவாதிகளின் (பியூரிட்டன்) போதனைகளை வெளிப்படையாகப் பிரதிபலிக்கிறது.
கிருபையின் போதனைகள் இரட்சிப்பின் மகத்துவத்தை அறிந்து கர்த்தரை ஆராதிக்க நமக்குத் துணை புரிகின்றன. அதேநேரம் இரட்சிப்புக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் பரிசுத்தமாக வாழ்வது மிகவும் அவசியம். இதை விசுவாச அறிக்கை ஆணித்தரமாகப் போதிக்கிறது. கிறிஸ்தவன் தவறாக கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பயன்படுத்தி அலட்சியமாக வாழ்ந்துவிடக்கூடாது என்பதில் நமது பெரியோர்கள் அக்கறை காட்டினார்கள். மனிதனுடைய போலிக் கட்டுப்பாடுகளுக்கு நாம் இலவசமாக கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்குரிய வாழ்க்கையை பணயம் வைத்துவிடக்கூடாது என்று 21ம் அதிகாரமாகிய “கிறிஸ்தவ சுதந்திரமும், மனச்சாட்சியின் சுதந்திரமும்” நம்மை எச்சரிக்கிறது. அதேவேளை விசுவாச அறிக்கை, கர்த்தருடைய சகல கட்டளைகளுக்கும் நாம் அடிபணிந்து பரிசுத்தத்துடன் அவரை ஆராதித்து, மகிமைப்படுத்தும் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 10-25 வரையிலான அதிகாரங்கள் மூலம் நமக்குத் தகுந்த போதனைகளைத் தருகின்றது. தூய்மைவாதிகள் (பியூரிட்டன்) தம் காலத்திட்ல இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இந்த அதிகாரங்கள் அனைத்தும் பரிசேயர்கள் போன்ற வாழ்க்கை முறையையும் (Legalism), உலக இச்சையுள்ள வாழ்க்கை முறையையும் (Libertarianism), கர்த்தருடைய கட்டளைகளைப் புறக்கணிக்கும் வாழ்க்கை முறையையும் (Antinomianism, New Covenant Theology) அடியோடு நிராகரிக்கின்றன. இன்று உலக இச்சையுள்ள வாழ்க்கை முறைக்கு அநேக கிறிஸ்தவர்களும், போதகர்களும், சபைகளும் பலியாகிக் கொண்டிருக்கும் வேலையில் இந்த விசுவாச அறிக்கையின் போதனைகளைப் புரிந்து கொண்டு விசுவாசிகள் வாழ்வது எத்தனை அவசியம்.
5. இது வேத போதனைகளின்படி திருச்சபை கிறிஸ்துவின் தலைமையில் தன்னைத் தானே ஆண்டுகொள்ள வேண்டுமென்றும், விசுவாசிகளுக்கு மட்டுமே முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சபைக்குள் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவே, இது பாப்திஸ்து கோட்பாடுகளை வேதபூர்வமான கோட்பாடுகளாக விளக்குகிறது.
திருச்சபை பற்றிய கோட்பாடுகளை 26-30 வரையுள்ள அதிகாரங்களில் விசுவாச அறிக்கை விளக்குகின்றது. ரோமன் கத்தோலிக்க மதப்போதனைகளையும், சமய சமரசக் கோட்பாட்டையும் இவ்வதிகாரங்கள் நிராகரிக்கின்றன. இவை வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய போதனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. அரசும், சபையும் இணைந்திருக்கும் நிலையை நிராகரிக்கும் விசுவாச அறிக்கை திருச்சபை மூப்பர்களால் ஆளப்பட்டு தனித்தியங்க வேண்டுமென்று போதிக்கின்றது. விசுவாசிகளை மட்டுமே அங்கத்தவர்களாகக் கொண்டு திருச்சபை இயங்க வேண்டும் என்று கூறுகிறது. திருச்சபை ஒழுங்கைக் கடைப்பிடித்து திருநியமங்களை விசுவாசிகளுக்க அளிக்க வேண்டும் என்றும் விளக்ககிறது. திருச்சபை என்பது ஏனோதானோவென்று, எந்தவித அமைப்பும் இல்லாமல் கூடிவரும் ஒரு கூட்டமல்ல என்பதைப் புரிய வைக்கிறது. கிறிஸ்துவின் தலைமையில் ஒரு கட்டுப்பாடுள்ள அமைப்பாக வேதபூர்வமான சபைத்தலைவர்களைக் கொண்டு இயங்கி சத்தியத்தை வளர்க்க வேண்டியது அதன் கடமையாக இருக்கின்றது என்பதை தெளிவாகக் கூறுகின்றது. “கூடில்லாத குருவிகளுக்கம்”, சபையை மதிக்காத ஊழியங்களுக்கும் திருச்சபையில் இடமில்லை என்பதைப் புரிய வைக்கின்றது.
அத்தோடு முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே வேதபூர்வமான ஞானஸ்நானம் என்பதை விளக்கி, அத்தகைய ஞானஸ்நானத்தை விசுவாசிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் போதிக்கின்றது. திருவிருந்தையும் கன்னா பின்னா வென்று கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடாமல் திருச்சபையை மதித்து அதற்குத் தம்மை முறையாக ஒப்புக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கும்படிக் கூறுகிறது.
சபைப்போதகர்களும், உதவிக்காரர்களும் சபையால் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும் அவர்கள் சபையில் விசுவாசத்துடன் உழைக்க வேண்டும் என்றும் விளக்குகின்றது.
சபைகள் இணைந்து ஐக்கியத்தில் வரவேண்டும் என்று கூறும் விசுவாச அறிக்கை அத்தகைய உறவு சத்தியத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. ஒரு சபைக்கு இன்னொரு சபை மேல் அதிகாரம் செலுத்தும் தகுதி இல்லை என்பதை தெளிவாகப் புரிய வைக்கிறது. அசோசியேஷன்களும், கமிட்டிகளும் ஐக்கியத்தை வளர்க்க அவசியமில்லை என்பதையும் தெரிவிக்கிறது. ஒரு சபை கொடுக்கும் எந்த ஆலோசனையும் இன்னொரு சபையைக் கட்டுப்படுத்தாது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
சத்தியத்தை விற்றுப்பிழைக்கும் சமயசமரசப் பச்சோந்திகளைத் தலைவர்களாகவும், அதை ஆதரிக்கும் ஆத்துமாக்களைக் கொண்டிருக்கும் சபைகளைப் “பேய்களின் குடியிருப்பாகவும்” இது வர்ணிக்கிறது.
இவையே 1689 விசுவாச அறிக்கையின் ஐந்து முக்கிய விசேட தன்மைகள். இவற்றை சுருக்கமாக முடிந்தவரையில் விளக்கியுள்ளோம். இவ்விசுவாச அறிக்கையைப் பயன்படுத்துபவர்கள் இதனை முறையாக வாசித்து, இந்தப் பகுதியில் நாம் விளக்கியுள்ளவற்றை சபை மக்களுக்கப் போதிப்பது அவசியம். சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் நமது நன்மைகருதி உழைத்து உருவாக்கித் தந்துள்ள, எக்காலத்துக்கும் பயனுள்ள 1689 விசுவாச அறிக்கையை நமது மக்கள் படித்து அதன்படி நடக்க இது உதவும், வேதத்தை மட்டுமே நம்புகிறாம், விசுவாச அறிக்கைகள் தேவையில்லை என்று கூறி தாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவித்து தங்களை இனங்காட்டிக்கொள்ள மறுக்கும் பச்சோந்திகளோடு நாம் ஒருபோதும் உறவாட முடியாது. நமது பெரியோர்கள் அது ஆபத்து என்று உணர்ந்திருந்தார்கள்.