தெய்வீக பராமரிப்பு
விளக்கவுரை: லமார் மார்டின் (Lamar Martin)
தமிழில்: ஆசிரியர்
(1689 விசுவாச அறிக்கையின் 5-வது அதிகாரத்திற்கான விளக்கவுரையின் ஆரம்பத்தை ஏப்பிரல்-ஜீன் 2002 இதழில் பார்க்கவும். அவ்வதிகாரத்திற்கான விளக்கவுரையின் இறுதிப்பகுதி இது. 1689 விசுவாச அறிக்கையை இதுவரை பெற்றுக்கொண்டிராமவர்கள் அதனை இந்தியாவிலும், ஸ்ரீலாங்காவிலும் 51-ம் பக்கத்தில் தரப்பட்டுள்ள முகரிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். திருச்சபைகள் சத்தியத்தில வளர இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவும்).
இந்த அதிகாரத்தின் முதல் மூன்று பத்திகளை இதற்கு முன் ஆராய்ந்தோம். முதலாவது பத்தி தெய்வீக பராமரிப்பு என்றால் என்ன என்பதை விளக்கியது. அதாவது கர்த்தர் தன்னுடைய சிருஷ்டிகளைக் காத்து, வழிநடத்தி, கட்டுப்படுத்தி ஆளுவதே தெய்வீக பராமரிப்பாகும். இந்த முதலாவது பத்தி இரண்டாவதாக கர்த்தரின் பராமரிப்பு அவருடைய சிருஷ்டிகளில் எதையெல்லாம் தொட்டு எந்தளவுக்கு அவற்றைக் கட்டுப்படுத்தி ஆளுகை செய்கிறதென்பதை விளக்கியது. அதாவது, தான் படைத்த அனைத்தையும், பெரியதில் இருந்து சிறியவை வரையும் அனைத்தையும் கர்த்தர் பராமரிக்கிறார் என்பது இரண்டாவது உண்மை. இறுதியாக முதலாவது பத்தி தெய்வீக பராமரிப்பின் இறுதி நோக்கத்தை விளக்கியது. கர்த்தருடைய பராமரிப்பின் இறுதி நோக்கம் இரண்டு அம்சங்களைக் கொண்டிருப்பதாகப் படித்தோம். (1) வேற்றுதல். (2) பராமரிப்பின் மூலம் கர்த்தரின் ஞானமும், வல்லமையும், நீதியும், எல்லையற்ற நன்மையும், கருணையும் மகிமை அடைதல். சுருக்கமாகக் கூறப்போனால், கர்த்தர் தன்னுடைய மகிமைக்காகவே தான் படைத்த உலகத்தை ஆண்டு, பராமரிக்கிறார் என்று விசுவாச அறிக்கை விளக்குகிறது.
இவ்வதிகாரத்தின் 2-ம் 3-ம் பத்திகள் பராமரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்ற சாதனங்களை விளக்கியது. இவற்றை நினைவுபடுத்திக் கொள்ள மறுபடியும் ஏப்பிரல்-ஜீன் 2002 இதழை ஒருமுறை வாசியுங்கள். இந்தப் பகுதியைப் படிக்கும்போது விசுவாச அறிக்கையையும், வேதப்புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு வாசித்தால் தொடர்புபடுத்திப் படிக்க மிகவும் வசதியாக இருக்கும்.
இனி இந்த அதிகாரத்தின் ஏனைய பகுதிகளை சுருக்கமாகப் பார்ப்போம். 4-ல் இருந்து 7-வரையிலான பத்திகளில் 4-6 வரையுள்ளவை, கர்த்தருடைய பராமரிப்பில் நமது பாவங்கள் எவ்வாறு உள்ளடங்கியுள்ளன என்பதை விளக்குகின்றன. 7-வது பத்தி திருச்சபையைப் பற்றி விளக்குவதாக இருக்கிறது.
(1) தெய்வீகப் பராமரிப்பில் பாவமும் உள்ளடங்கியிருக்கிறது (4-6 பத்திகள்)
நான்காவது பத்தி இவ்வாறாக ஆரம்பிக்கிறது: “கடவுளின் வல்லமையும், கண்டு அறியமுடியாத ஞானமும், எல்லையற்ற நன்மையும் எல்லையற்றதும், அனைத்தையும் உள்ளடக்கியதாயும் இருப்பதால் அவருடைய இறையாண்மையுடைய நோக்கங்களின்படி முதல் மனிதன் பாவத்தில் விழுந்தமையும், ஏனைய தேவதூதர்களும், மனிதர்களும் பாவத்தில் வீழ்ந்த செயல்களும் நிகழ்ந்தன.” விசுவாச அறிக்கையின் இந்த வார்த்தைகள், கர்த்தர் அனைத்தையும் தோற்றுவித்து, நடத்திப் பராமரித்து மனிதன் செய்கிற அனைத்து நல்ல காரியங்களையும் தன்னுடைய பராமரிப்பில் உள்ளடக்கியிருப்பதோடு அவன் செய்கிற பாவங்களையும் அதில் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறது. இதை விளங்கிக் கொள்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இந்த உண்மையைத்தான் வேதம் போதிக்கின்றது. 1 நாளாகமம் 21:1-ஐ வாசியுங்கள். அதில் இஸ்ரவேல் படைகளின் எண்ணிக்கையை தாவீது எண்ணுவதைப் பார்க்கிறோம். 7-ம் வசனம் அதற்காக கர்த்தர் இஸ்ரவேலைத் தண்டித்ததாகக் கூறுகிறது. ஏனெனில், தாவீது செய்தது பாவம். 8-ம் வசனம், தாவீதுக்கும் தான் செய்தது பாவம் என்பது தெரிந்திருந்ததாகக் கூறுகிறது. மறுபடியும் 1-ம் வசனத்தைப் பாருங்கள். அங்கே தாவீதைப் பாவம் செய்யத்தூண்டியது சாத்தான் என்று வாசிக்கிறோம். ஆகவே, விசுவாச அறிக்கையின் வாசகங்களின்படி மனிதனுடைய பாவச் செய்கைகளும் கர்த்தரின் பராமரிப்பில் உள்ளடங்கியுள்ளன. சாத்தான் தாவீதைப் பாவம் செய்யத் தூண்டினான். தாவீது சாத்தானின் தூண்டுதலுக்குள்ளாகி பாவம் செய்தான். ஆனால், இதே வேதப்பகுதியோடு தொடர்புடைய 2 சாமுவேல் 24-ஐ ஆராய்ந்து பாருங்கள். முதலாம் வசனத்தில் இஸ்ரவேல், யூதா என்பவர்களை இலக்கம் பண்ணத் தாவீதை ஏவியது கர்த்தர் என்று இருப்பதை வாசிக்கிறோம். 1 நாளாகமம் சாத்தான் தாவீதை ஏவியதாகவும், 2 சாமுவேல் கர்த்தர் தாவீதை ஏவியதாகவும் சொல்வதைப் பார்க்கிறோம் அல்லவா? இதை வாசித்த பின் வேதத்தில் முரண்பாடு இருக்கிறது என்று முடிவு கட்டிவிடாதீர்கள். அது தவறு. தாவீதின் பாவச்செயல்களும் கர்த்தரின் பராமரிப்பில் அடங்கியிருக்கின்றன என்பதைத்தான் இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன. இதையே 1 நாளாகமம் 10-வது அதிகாரத்திலும் பார்க்கலாம். அங்கே 4-ம் வசனத்தில் சவுல் தன்னுடைய ஆயுததாரியைப் பார்த்து மற்றவர்கள் தன்னை அவமானப்படுத்தாதிருக்க தன்னைக் கொன்றுவிடும்படிக் கூறுகிறான். ஆயுததாரி பயந்து அப்படி செய்ய மாட்டேன் என்றான். உடனே சவுல் பட்டயத்தை நட்டு அதன் மேல் விழுந்து இறந்தான் என்றிருப்பதாக வாசிக்கிறோம். ஆனால், 14-ம் வசனத்தில் கர்த்தர் சவுலைக் கொன்றதாக வாசிக்கிறோம். இங்கே எந்தவித முரண்பாடுகளும் இல்லை. சவுலினுடைய செய்கை கர்த்தரின் பராமரிப்பில் அடங்கியுள்ளதை வேதம் இந்தவிதமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த உண்மையை மேலும் விளங்கிக் கொள்ள பின்வரும் வசனங்களையும் ஆராய்ந்து பாருங்கள். 1 இராஜாக்கள் 22:22. 23. அப்போஸ்தலர் 2:23-ஐ 4:27, 28-டோடு ஒப்பிட்டு வாசியுங்கள்.
இவை எந்தளவுக்கு கர்த்தருடைய பாராமரிப்பில் மனிதனுடைய பாவச் செயல்களும் உள்ளடங்கியுள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றன. இந்த உண்மையை நாம் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதற்காக விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் இன்னுமொரு உண்மையையும் சேர்த்து விளக்கியிருக்கிறார்கள். இந்த 4-ம் பத்தி தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறது: “கடவுள் வெறுமனே இவற்றின் நிகழ்வுகளுக்கு அனுமதிகொடாமல், பலவிதங்களில் அவர் பாவத்தை வல்லமையோடும் ஞானத்தோடும் கட்டுப்படுத்தியும், கட்டளையிட்டம், அதிகாரம் செலுத்தியும் தனது பரிசுத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.” “சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தார்” என்று அப்போஸ். 14:16 சொல்லுகிறது. அதாவது, கர்த்தர் வெறுமனே சும்மா இருந்து, மனிதன் பாவம் செய்வதற்கு இடம் கொடுத்து, அதைப் பார்த்துக்கொண்டிராமல், தானே நேரடியாக மனிதன் அவறறை செய்வதற்கு அனுமதியளித்தும், அவன் மீது அதிகாரம் செலுத்தியும், அவன் செய்யும் காரியங்களை வழிநடத்தியும், எல்லாவிதத்திலும் அவனைக் கட்டப்படுத்துகிறவராகவும் இருக்கிறார்.
அப்போஸ்தலர் 14:16-ல், “சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்க விட்டிருந்தார்” என்று வாசிக்கிறோம். கர்த்தர் மனிதனுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி ஆளுவதை இவ்வசனம் விளக்குகிறது. அத்தோடு, சங்கீதம் 76:10-ல் சங்கீதக்காரன், “மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர்” என்று சொல்கிறான். இதிலிருந்து மனுஷனுடைய கோபத்தை கர்த்தர் அடக்குகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். தான் நினைத்தபடி மனிதனால் எப்போதும் நடந்துவிட முடியாது. கர்த்தர் அவனைக் கட்டுப்படுத்துகிறார் என்கிறது விசுவாச அறிக்கை பின்வரும் வசனங்களை வாசித்துப் பார்த்து இந்த உண்மையை மேலும் விளங்கிக் கொள்ளலாம் – 2 இராஜா. 19:28; ஆதி. 45:5; 50:20; ஏசாயா 10:6, 7.
அதிகாரம் 5-ன் நான்காவது பத்தி மேலும் தொடர்ந்து, “இருப்பினும் இந்நிகழ்வுகளின் பாவம் தேவதூதர்களிடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் தோன்றினவேயல்லாமல் மிகப் பரிசுத்தமும், நீதியும் கொண்ட கடவுளிடம் இருந்து தோன்றவில்லை. அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதை அனுமதிப்பவரோ அல்ல.” என்று கூறுவதுடன் முடிவடைகிறது. 3-ம் அதிகாரத்தின் முதலாவது பத்தியில் சொல்லப்பட்ட அதே சத்தியத்தை மறுபடியும் இங்கு வலியுறுத்துகிறது விசுவாச அறிக்கை. கர்த்தர் பாவத்திற்கு காரணகர்த்தாவோ அல்லது அதைச் செய்வதில் அவருக்கு எவருடனும் எந்தக்கூட்டும் இல்லை என்றும் கர்த்தரைப் பாவத்திற்கு பொறுப்பாளியாக்க முடியாதென்பதையும் விசுவாச அறிக்கை விளக்குகிறது. பாவங்கள் சிருஷ்டிகளிடம் இருந்து புறப்படுகின்றனவேயன்றி சிருஷ்டிகர்த்தாவிடமிருந்தல்ல. 1 யோவான் 2:16, “ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” என்கிறது. யாக்கோபு 1:13, 14-ல் யாக்கோபு, “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமலிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினால் இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்” என்கிறார். இந்த இரண்மு உண்மைகளையும் நமது குறைந்தளவான ஞானத்தைக்கொண்டு விளங்கிக் கொள்வது கஷ்டம்தான். ஆனால், கர்த்தரின் பராமரிப்பு மனிதனுடையதும், தூதர்களுடையதுமான பாவச்செயல்களை உள்ளடக்கியிருந்தபோதும் கர்த்தர் அவர்களுடைய பாவங்களுக்கு காரணகர்த்தாவும் இல்லை; அவற்றை ஆதரிப்பவரும் இல்லை என்ற உண்மையை வேதம் விளக்குகிறதை நாம் அறிந்து கொள்வது அவசியம். இந்த இரண்டு உண்மைகளையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தை அவற்றைப் போதிக்கிறது என்பதை உணர்ந்து சமாதானமடைய வேண்டும்.
இனி 5-வது பத்தியைப் பார்ப்போம். 5-வது பத்தி கர்த்ததே பொதுவாக பாவத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பதோடு, அவர் தன்னுடைய மக்களுடைய பாவங்களையும் கட்டுப்படுத்தி ஆள்பவராக இருக்கிறார் என்று விளக்குகிறது. “மகா ஞானமும், நீதியும், கருணையுமுள்ள கடவுள் தன்னுடைய மக்களை அடிக்கடி பலவிதமான சோதனைகளுக்குள்ளாகப் போகும்படியும், அவர்கள் தங்களுடைய சொத் இருதயத்தின் பாவத்தை அறிந்து கொள்ளவும் அனுமதிக்கிறார். அவர்கள் செய்த பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதற்காகவும், அவர்களுடைய இருதயங்களில் காணப்படும் பாவத்தின் வல்லமையையும், கபடத்தையும் வெளிப்படுத்தி தாழ்மையைப் படிப்பிப்பதற்காகவும் இதை அவர் செய்கிறார். எல்லா சமயங்களிலும் எப்போதும் அவர்கள் கடவுளில் தங்கியிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி, எதிர்காலத்தில் பாவத்தில் இருந்து அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டே அவர் இவற்றைச் செய்கிறார். இவ்விதமாகவும், வேறு பலவிதங்களிலும் அவருடைய நீதியுள்ள பரிசுத்த நோக்கங்கங்கள் நிறைவு பெறுகின்றன. அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் நிகழும் அனைத்தும் அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய மகிமைக்காவும், அவர்களுடைய நன்மைக்காகவுமே நிகழ்கின்றன.”
இந்தப்பகுதி பராமரிப்பின் தேவனாகிய கர்த்தர் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு (நிரந்தரமாக அல்ல) தன்னுடைய மக்கள் பாவத்தில் விழவும், தங்களுடைய இருதயங்களின் பாவத்தன்மைகளை அறிந்து கொள்ளவும், அனுமதிக்கிறார் என்ற உண்மையை விளக்குகிறது. இதற்கு விசுவாச அறிக்கை பல காரணங்களை நம்முன் வைக்கின்றது. முதலாவதாக, “அவர்கள் செய்த பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதற்காகவும், அவர்களுடைய இருதயங்களில் காணப்படும் பாவத்தின் வல்லமையையும், கபடத்தையம் வெளிப்படுத்தி தாழ்மையைப் படிப்பிப்பதற்காகவும் இதை அவர் செய்கிறார். எல்லா சமயங்களிலும் எப்போதும் அவர்கள் கடவுளில் தங்கியிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி, எதிர்காலத்தில் பாவத்தில் இருந்து அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டே அவர் இவற்றைச் செய்கிறார். இவ்விதமாகவும், வேறு பலவிதங்களிலும் அவருடைய நீதியுள்ள பரிசுத்த நோக்கங்கங்கள் நிறைவு பெறுகின்றன.” என்கிறது விசுவாச அறிக்கை.
விசுவாச அறிக்கை சத்தியத்தைத்தான் விளக்குகிறதா என்பதை அறிந்து கொள்ள 2 நாளாகமம் 32:24-26 வரையிலுள்ள வசனங்களைப் பார்ப்போம். எசேக்கியா விளாதிப்பட்டு மரணத்தைச் சந்திக்க நேர்ந்தபோது கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார். இருந்தும் எசேக்கியா அகங்காரத்தோடு நடந்து கொண்டான். அதனால் கர்த்தரின் கோபத்தை அவனும் அவனுடைய மக்களும் சந்திக்க நேர்ந்தது. எசேக்கியாவும், மக்களும் கர்த்தருக்கு முன் தங்களைத் தாழ்த்தியபடியால் அவருடைய கோபம் எசேக்கியாவின் காலத்தில் அவர்கள் மேல் வரவில்லை என்றிருப்பதை இவ்வசனங்களில் வாசிக்கிறோம். 31-ம் வசனம், பாபிலோனில் இருந்து வந்தவர்கள் தேசத்தில் நடந்த அற்புதத்தைக் கேட்க வந்தபோது, எசேக்கியாவின் இருதயத்தில் இருந்ததை அறியும்படி சோதிப்பதற்காக கர்த்தர் அவனைக் கைவிட்டார் என்று வாசிக்கிறோம். இனி ஏசாயா 39-ஐ வாசித்தால் அங்கே கர்த்தர் தன்னை வியாதியில் இருந்து காத்தபின்பு எசேக்கியா அதை மறந்து பாபிலோனில் இருந்து வந்தவர்களுக்கு இஸ்ரவேலின் சொத்துக்களைக் காட்டியதையும் அதற்குப்பின் நடந்தவைகளையும் வாசிக்கலாம்.
ஆனால், 2 நாளாகமம் 32-ல் எசேக்கியாவின் வாழ்க்கைக் குறிப்பை வாசிக்கும்போது யூதாவின் நீதியான இந்த அரசனின் வாழ்க்கையில் கர்த்தர் செயல்பட்ட விதத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இதெல்லாம் எசேக்கியாவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எசேக்கியா அகங்காரத்திற்கு இடம் கொடுத்தபோது அவன் தன்னுடைய இருதயத்தின் பாவத்தன்மைகளை முழுவதுமாக அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு கர்த்தர் அவனுடைய அகங்காரச்செயல்கள் வெளிப்படும்படி அவனைக் கைவிட்டார். எசேக்கியா பாபிலோனில் இருந்து வந்தவர்களுக்கு இஸ்ரவேலின் சொத்துக்களைக் காட்டுவான் என்பதும் கர்த்தருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அது அவன் தன்னுடைய அகங்காரத்தை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. இப்படியாக கர்த்தர் தன்னுடைய மக்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களுடைய சோதனைகளை அனுபவிக்கும்படியாக கைவிடுகிறார் என்ற விசுவாச அறிக்கை போதித்த உண்மையை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. இந்த விதமாக கர்த்தர் தம் மக்களை சோதித்ததை 2 சாமுவேல் 1-ல் தாவீதின் சோதனைகளில் இருந்தும், 2 கொரிந்தியர் 12:7-ல் நாம் வாசிக்கும் பவுலின் சோதனைகளில் இருந்தும், லூக்கா 22:31, 32-ன் மூலம் பேதுருவின் சோதனைகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறாக கர்த்தர் நமது நன்மைக்காக சில காலத்துக்கு நாம் சோதனைகளை அனுபவிக்கும்படியாக கைவிட்டுவிடுகிறார். ரோமர் 8:28 கூறுவது போல் இறுதியில் அவை எல்லாம் நமது நன்மைக்காகவே நடந்து முடிகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இனி இவ்வதிகாரத்தின் 6-ம் பத்தியைப் பார்ப்போம். இப்பத்தி கர்த்தருடைய பராமரிப்பு பொதுவாக பாவத்தையும், தமது மக்களின் பாவச்செயல்களையும் மட்டுமன்றி அநீதிகளை இழைக்கும் மக்களின் பாவச்செயல்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பதை விளக்குகிறது. “நீதியுள்ள நீதிபதியாகிய கடவுள் கேடான, பரிசுத்தமற்ற மனிதர்களை நியாயத் தீர்க்கிறார். அவர்களுடைய பாவத்தினால் அவர்களுடைய இருதயத்தை இருளடையச் செய்து கடினப்படுத்துகிறார். அவர்களுடைய மனதிற்கு அறிவொளி தந்து, இருதயத்தில் கிரியை செய்திருக்கக்கூடிய கிருபையை அவர்கள் அடையமுடியாதபடி தடுத்துக்கொள்வதோடு, வேறு சிலருக்கு அவர் கொடுத்திருந்த வரங்களையும் திரும்ப எடுத்துக் கொள்கிறார். அவர்கள் தங்களுடைய கேடான இருதயத்தின் பாவத்தினால் பாவ சந்தர்ப்பங்களை நாடிப் பயன்படுத்திக் கொள்ளும்படியான சந்தர்ப்பங்களிலும் கடவுள் அவர்களை விடுகிறார். வேறுவிதத்தில் கூறப்போனால், அவர்களில் காணப்படும் உள்ளார்ந்த பாவத்தின் சீரழிவுகளுக்கும், உலகத்தின் சோதனைகளுக்கும், சாத்தானின் வல்லமைக்கும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார். இதன் காரணமாக ஏனையோருடைய இருதயங்களை மென்மையாக்கக் கடவுள் பயன்படுத்தும் அதே சாதனங்களை அவர்கள் தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தப் பயன்படத்திக் கொள்கிறார்கள்.”
இந்தப் பகுதி நமக்குத் தெரிவிக்கின்ற முதலாவது உண்மை, கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதியாக, அநீதியான மனிதர்களின் இதயக்கண்களைக் குருடாக்கி அவர்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார் என்பதாகும். ரோமர் 1:24, 26, 28 ஆகிய வசனங்களை வாசிக்கவும். பராமரிப்பின் தேவன் அநீதியானவர்களை அவர்களுடைய பாவப்போக்கிலேயேவிட்டு தூக்கத்தில் இருப்பவர்களைப் போல இருக்க விட்டுவிடுகிறார் என்பதை ரோமர் 11:7, 8 விளக்குகின்றன. இதையே 6-ம் பத்தியின் பின்வரும் வாசகங்கள் விளக்குகின்றன: “அவர்களுடைய பாவத்தினால் அவர்களுடைய இருதயத்தை இருளடையச் செய்து கடினப்படுத்துகிறார் . . . அவர்கள் தங்களுடைய கேடான இருதயத்தின் பாவத்தினால் பாவ சந்தர்ப்பங்களை நாடிப் பயன்படுத்திக் கொள்ளும்படியான சந்தர்ப்பங்களிலும் கடவுள் அவர்களை விடுகிறார். வேறுவிதத்தில் கூறப்போனால், அவர்களில் காணப்படும் உள்ளாந்த பாவத்தின் சீரழிவுகளுக்கும், உலகத்தின் சோதனைகளுக்கும், சாத்தானின் வல்லமைக்கும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார்.” சங்கீதம் 81:11-12-ம் இதையோ சுட்டிக்காட்டுகின்றது: “என் ஜனமோ என் சத்தத்துக்கு செவி கொடுக்கவில்லை. . . ஆகையால் அவர்களுடைய இருதயத்தின் கடினத்துக்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.” 2 தெசலோனிக்கேயர் 2:8-11 வரையுள்ள வசனங்களும் இதே உண்மையைத்தான் விளக்குகின்றன.
இந்த 6-ம் பத்தியின் இறுதிப்பகுதி, “இதன் காரணமாக ஏனையோருடைய இருதயங்களை மென்மையாக்கக் கடவுள் பயன்டுத்தும் அதே சாதனங்களை அவர்கள் தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்று முடிகின்றது. இது தேவபயத்தோடு சிந்தித்து வாசிக்க வேண்டிய உண்மை. எந்தக் கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்தி கர்த்தர் சிலருடைய இருதயங்களை மென்மைப்படுத்துகிறாரோ அதே சாதனங்கள் அநீதியானவர்களின் இருதயங்களை மேலும் கடினமாக்குவதற்கு கர்த்தரால் பயன்படுத்தப்படுகின்றன. பவுல் 2 கொரிந்தியர் 16-ல் “கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்துக்கேதுவான மரண வாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான வாசனையாகவும் இருக்கிறோம்” என்று இதைக்குறித்துத்தான் சொல்கிறார். ஏசாயா 8:14. 1 பேதுரு 2:6-8 ஆகிய வசனங்களும் இதே உண்மையை விளக்குகின்றன.
(2) தெய்வீகப் பராமரிப்பில் திருச்சபை (7-ம் பத்தி)
இறுதியாக இந்த அதிகாரத்தின் 7-வது பத்தி திருச்சபையைக் குறித்துப் பேசுகிறது. “கடவுளின் பொதுவான பராமரிப்பு எல்லாப் படைப்புயிர்களையும் அடைகின்றது. ஆனால், மிகச்சிறப்பான விதத்தில் அது அவருடைய திருச்சபையின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. திருச்சபையின் நலனுக்காக அனைத்தும் தேவ பராமரிப்பினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.” கர்த்தர் பெரியதில் இருந்து சிறியதுவரை தான் படைத்த அனைத்தையும் ஆண்டும், பராமரித்தும் வந்தபோதும் அவருடைய முழுக்கவனமும் திருச்சபையின் நலத்திலேயே இருக்கின்றது. இந்த உண்மையை 2 நாளாகமம் 16:9-ல் பார்க்கலாம். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” என்று தீர்க்கதரிசியாகிய அனானி அரசனாகிய ஆசாவிடம் கூறுகிறான். கர்த்தருடைய அக்கறை அவருடைய திருச்சபையின் மீதிருப்பதாக அனானி கூறுகிறான்.
இதை விளக்கும் இன்னுமொரு வேத வசனம் நீதிமொழிகள் 2:7, 8: “அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார். அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்கறின் பாதையைக் காப்பாற்றுகிறார்.” இதே உண்மையை ஏசாயா 43:1-ல் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில் ரோமர் 8:28 இதை அழகாக விளக்குகிறது. 1 தீமோத்தேயு4:10, “எல்லா மனிதருக்கும் விசேஷமாக விசுவாசிகளுக்கு இரட்சகர் இயேசு” என்கிறது. இந்த வசனங்கள் எல்லாவற்றையும் ஆண்டும், கட்டுப்படுத்தியும், பராமரித்தும் வருகிற கர்த்தர் தன்னுடைய மக்களுக்கு சிறப்பான விதத்தில் இரட்சகராகவும் இருக்கிறார். வேறு எவரையும் கவனிக்காதவிதத்தில் தன்னுடைய மக்களை அவர் போஷித்து வருகிறார். அவருடைய திட்டத்தில் அதிமுக்கியமான இடத்தை அவருடைய திருச்சபையே வகிக்கிறது. இது நமக்கு மிகவும் ஆறுதலளிக்கும் சத்தியம்