பவுல் அப்போஸ்தலன் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் பத்தாவது அதிகாரத்தில் இஸ்ரவேலரைப்பற்றி எழுதும்போது “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கிய மில்லை” என்று குறிப்பிடுகிறார் (ரோமர் 10:2). அதாவது, இஸ்ரவேலருக்கு கடவுளைப்பற்றிய வைராக்கியம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அவர்க ளுடைய வைராக்கியத்துக்கும் கர்த்தரின் வேதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதுதான் பவுலின் வார்த்தைகளின் பொருள். நாம் மேலே பார்த்த வசனத்தில் வைராக்கியம் என்ற வார்த்தைக்கு ‘மனத்தில் உண்டாகும் ஆர்வம்’ (Zeal) என்பது அர்த்தம். இது கர்த்தரில் நமக்கு ஏற்படு கின்ற ஆர்வத்தைக் குறிக்கிறது. அத்தோடு, இந்த வசனத்தில் ‘அறிவு’ என்ற வார்த்தை உலக ஞானத்தைக் குறிக்கவில்லை. வேதத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வேதஞானத்தைக் குறிக்கிறது. வேதபோதனைகளின் அடிப்படையில் இல்லாமல் கர்த்தரின் மேல் எவருக்கும் வைராக்கியம் இருக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்க முடியும். அப்படியானதொரு வைராக்கியத்தைத்தான் நாம் இன்று பெந்தகொஸ்தே காரர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிற அனேக தமிழர்கள் மத்தியிலும் பார்க்கிறோம். இந்த வைராக்கியம் விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்படுகிற மெய்யான வைராக்கியம் அல்ல.
இவர்களுடைய வைராக்கியத்தில் என்ன குறை என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. பவுல் கூறுவதுபோல் இவர்களுடைய வைராக்கியம் வேத போதனைகளில் இருந்து உருவாகவில்லை. வேத அடிப்படையிலில்லாமல் ஒரு மனிதன் கர்த்தர்மேல் வைராக்கியங்கொள்ள முடியும், அன்பு வைக்க முடியும். அனேக ஆத்மீக காரியங்கள் போலத் தோற்றமளிக்கும் செயல்களை யும் செய்யமுடியும். இதற்கு யூதாஸ் ஓர் நல்ல உதாரணம். அவன் இயேசு வைக் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்மேல் வைராக்கியமுடைய வனாக இருந்தான். இதேபோல்தான் பரிசேயர்கள் யெகோவாவின் மேல் வைராக்கியமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பழைய ஏற் பாட்டைக் கரைத்துக் குடித்தவர்கள். இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை யில் மெய்யான விசுவாசம் இருக்கவில்லை. வைராக்கியம் இருந்தது, ஆத்மீக வலிமை இருக்கவில்லை. கர்த்தர்மேல் வாஞ்சை இருந்தது ஆனால், விசுவா சம் இருக்கவில்லை. பரிசுத்த ஆவியைப் பணம் கொடுத்து வாங்க முயன்ற சீமோனுக்கு அதை அடைய வேண்டும் என்ற வைராக்கியமிருந்தது (அப்போஸ் 8:18, 19). அவன் ஏற்கனவே ஞானஸ்நானம் கூடப்பெற்றிருந்தான். ஆனால், அவனுடைய இருதயத்தில் விசுவாசம் இருக்கவில்லை.
பவுல், இந்தப் போலியான வைராக்கியம் ஆபத்தானது என்கிறார். இது கர்த்தரின் மேல் மெய்யான வாஞ்சையுள்ள வைராக்கியமல்ல. இது மதச் சடங்குகளைப்போன்ற ஆத்மீக வலிமையற்ற, சரீர உணர்ச்சிகளின் வெளிப் பாடு மட்டுமே. இதற்கு கர்த்தரின் வேதமோ, பரிசுத்த ஆவியின் செயல்களோ ஆதாரமாக இருப்பதில்லை. ஆகவே, இந்த வசனத்தில் இரண்டு உண்மை களை பவுலின் வார்த்தைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
(1) வேதஞானம் இல்லாமல் நாம் விசுவாசியாக இருக்க முடியாது – சரீரத்திற்கு எலும்புகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது கிறிஸ்தவ அனுபவத்திற்கு வேதபோதனைகள். நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அனைத்தையும் குறித்த சரியான வேதஞானம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். மெய்யான சத்தியங்களின் அடிப்படையிலேயே நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அமைந்திருப்பது அவசியம். கிறிஸ்துவின் சீடன் அவரைப் பற்றிய சத்தியங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்க முடியாது. நாம் எப்போதும் நமது கிறிஸ்தவ அனுபவங்கள் வேதம் போதிக்கும்படியாக அமைந்திருக் கின்றனவா என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம். வேதம் அனுமதிக்காத அனுபவங்கள் கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவ போதனைகளில் கவனம் செலுத்தாத ஆத்துமா விசுவாச முள்ள விசுவாசியாக இருப்பது கடினம். “ஜெபத்தோடு கூடிய ஊக்கமான வேதப்படிப்பு ஒருபோதும் எந்த ஆத்துமாவையும் வேதவிரோதியாக மாற்றிய தாக வரலாறில்லை” என்கிறார் ஏர்னஸ்ட் ரைசிங்கர் (Ernest C. Reisinger). ஆகவே, விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனை போன்றவைகளைப் பயன்படுத்தி வேதபோதனைகளைப் பெற்று வேத அறிவில் தேர்ச்சி பெறு வது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாகிறது.
(2) வேதஞானம் மட்டுமே நம்மில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் – நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்கள் நம்மில் மெய்யான வைராக்கியத்தை யும், நீதியான பரிசுத்தத்தையும், சுயவெறுப்பையும், சுவிசேஷ ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் விசுவாசிக்கும் வேதபோதனைகள் அத்தகைய வைராக்கியத்தை நம்மில் ஏற்படுத்தாவிட்டால் அவைகளை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் அல்லது அலட்சியப்படுத்தி வருகிறோம் என்று தான் பொருள். கிருபையின் போதனைகளும், சீர்திருத்தவாத பேரறிஞர் களின் போதனைகளும் நாம் கர்த்தரையும் வேதத்தையும் ஜெபத்தோடு நேசித்து, பரிசுத்தமாக வாழ்வதில் அக்கறையுள்ளவர்களாக இருந்து, வைராக்கியத்தோடு கர்த்தருடைய சபை வாழ்க்கையில் ஆர்வம் செலுத்தி சுவிசேஷத்தை அறிவிப்பவர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. அதைத்தான் நாம் கல்வினிலும், லூதரிலும், ஸ்பர்ஜனிலும், பனியனிலும் பார்க்கிறோம். ஆழமான வேதசத்தியங்களை அறிவுபூர்வமாக படிக்கும்போது அவை நாம் கிறிஸ்தவ அனுபவத்தில் வளரப் பயன்படுவதாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும் படிக்கக்கூடாது. இதனால்தான் விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ இறையியலையும் படிக்கும்போது அவற்றோடு சேர்த்து ஜோன் பனியனின் ‘மோட்ச பயணம்’, வின்ஸ்லோவின் ‘கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை’ போன்ற நூல்களையும் சேர்த்து வாசிப்பது அவசியம். இறையியல் நமக்கு இறை போதனைகளை வழங்க, இந்த நூல்கள் நம் இதயத்தில் கிறிஸ்துவில் வாஞ்சையை வளர்க்கும். இவை இரண்டுமே விசுவாசிக்கு அவசியம். அறிவு மட்டும் இருந்து வைராக்கியம் இல்லாமல் இருந்தால் அந்த அறிவு அடுப்பெரிக்கத்தான் உதவும். வைராக்கியம் மட்டும் இருந்து அறிவு இல்லாமலிருந்தால் அது நம்மை வெறும் மதவெறியனாக மாற்றிவிடும். கிறிஸ்துவில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் கிறிஸ்தவ இறையியலைக் கொண்டிருப்பவன் மட்டுமே கிறிஸ்தவ விசுவாசி.