என் ஆத்மீக பயணத்தின் சில அத்தியாயங்கள் . . .

என்னுடைய ஆத்மீக பயணத்தின் சில அத்தியாயங்களை இந்தப் பகுதிகளில் உங்களோடு முதன் முறையாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1970களில் என்று நினைக்கிறேன். அது என்னுடைய விசுவாச வாழ்க்கையின் ஆரம்பகாலம். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக்­ இயக்கங்கள் தலைதூக்கி பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளையும் ஏனையோரையும் பாதிக்க ஆரம்பித்திருந்த காலமது. கிறிஸ்தவர்கள் மத்தி யில் அந்நியபாஷையும், தீர்க்கதரிசனமும், அற்புதங்களும் அன்றாட சம்பாஷ னையில் அடிக்கடித் தவழ்ந்து வந்த காலம். அன்று புதிய விசுவாசியாக இருந்த என்னையும் அது விட்டுவைக்கவில்லை. கர்த்தரின் கிருபையால் வேதத்தை விசுவாசத்தோடு போதிக்கின்ற ஓர் சபையில் அப்போது நான் அங்கத்தவராக இருந்தேன். இருந்தபோதும் அந்நியபாஷை பற்றியும், தீர்க்கதரிசனம்பற்றியும், அற்புதங்கள்பற்றியும் சரியான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வாஞ்சையுடையவனாக இருந்தேன். அவைபற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் கையில் கிடைத்த ஆங்கில நூல்களை யெல்லாம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். நான் வாசித்த ஒன்றும் எனக்குக் கைகொடுக்கவில்லை. வரங்கள் இன்றும் இருக்கலாம் இல்லாம லும் இருக்கலாம் என்று நழுவிவிடுகிறவர்கள் எழுதிய நூல்களாகவே அவை இருந்தன. என் மனதைத் துளைத்துக் கொண்டிருந்த விஷயங்களைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேதத்தை ஆராய்ந்து, கிரேக்க மூல வார்த்தைகளில் கவனம் செலுத்திப் படிக்க ஆரம்பித்தேன். இந்த ஆராய்ச்சி பல வருடங்கள் தொடர்ந்தது. நான் பல்கலைக் கழகப் படிப்பை முடித்து இறையியல் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்த பின்பும் இது தொடர்ந்தது.

மார்டின் லொயிட் ஜோன்சும், அப்போஸ்தல வரங்களும்

இந்தக்காலத்தில் நான் சீர்திருத்த விசுவாசத்தில் அதிக நாட்டம் காட்டி டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Dr. Martin Lloyd Jones) அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ் வாசகர்களில் அவரை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிய சிறு விளக்கத்தை அளிப்பது அவசியம். லொயிட் ஜோன்ஸ் இங்கிலாந்தில் ஆரம்பத்தில் பிரபல்யமான வைத்தியராக இருந்து அந்நாட்டு அரசருக்கு வைத்தியராகப் பதவி பெறும் தருவாயில் அதைத் துறந்து கர்த்தருடைய ஊழியத்துக்கு வந்தவர். பிரசங்கம் மிகவும் கீழான நிலையில் இருந்த அந்தக்காலத்தில் மெய்ப்பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்து வேல்ஸ் தேசத்தில் தன்னுடைய பிரசங்க ஊழியத்தை ஆரம்பித்தார். இதனால் அவர் புகழ் எங்கும் பரவி லண்ட னில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் (Westminster Chapel) டாக்டர் கெம்பல் மோகனுடன் (Dr. Campbel Morgan) இணைந்து போதகராக இருக்கும் அழைப்பை 1938ல் பெற்றார். கெம்பல் மோகனுக்குப்பின் அவர் அங்கு போதகராக இருந்து 1938-1968 வரை ஊழியம் செய்தார். அவருடைய பணிகளால் சீர்திருத்த பிரசங்கமும், சீர்திருத்த இலக்கியங்களும், சீர்திருத்த மகாநாடுகளும் இங்கிலாந்திலும், இங்கிலாந்துக்கு வெளியிலும் பெருகி வளர ஆரம்பித்தன. லொயிட் ஜோன்ஸ் இங்கிலாந்திலும், இங்கிலாந்திற்கு வெளியிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகம் மதிப்புப் பெற்றிருந்தவர். இவரது எழுத்துக்களாலும், போதனைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அனேகர்.

இருந்தபோதும் மார்டின் லொயிட் ஜோன்ஸ் பெந்தகொஸ்தே போதனைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவில்லை. அற்புதங்கள் நிச்சயம் நிகழ்கின்றன என்றும், கர்த்தரே அத்தகைய அற்புதங்களை நடப்பிக்கிறார் என்றும் போதித்த லொயிட் ஜோன்ஸ் பிசாசும் அற்புதங்கள் போலத் தோற்றமளிக்கும் செயல்களை நடத்தும் வல்லமையுள்ளது என்றும் விளக்கியிருக்கிறார். ஆகவே, நாம் பிசாசின் செயல்களுக்கு இடங்கொடுக்கக் கூடாதென்றும், நமது ஊழியங்களின் வெற்றிக்கு அற்புதங்களை ஒருபோதும் அடையாளமாகக் கருதக்கூடாது என்றும் எச்சரித்தார். கெத்தரின் கூல்மன் (Katheryn Kulman) போன்ற பல குணப்படுத்தும் அற்புதங்கள் செய்யும் பெந்தகொஸ்தேகாரர் களின் செயல்களை நிராகரித்து அத்தகைய அற்புதங்கள் போலத் தோற்றமளிக்கும் செயல்கள் உளவியல் மற்றும் பிசாசின் செயல்களாலும் ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார். இதையெல்லாம் அவருடைய பிரசங்கங்களின் தொகுப்பான The Doctor Himself and the Human Condition என்ற நூலில் வாசிக்கலாம். இருந்தபோதும் கர்த்தருடைய கிரியை எது? பிசாசின் கிரியை எது? என்று நாம் எவ்வாறு தீர்மானிப்பது என்ற கேள்விக்கு “அது மிகவும் கஷ்டமான காரியம்” என்பது மட்டுமே லொயிட் ஜோன்சின் பதிலாக இருந்தது. லொயிட் ஜோன்ஸ் அப்போஸ்தலருடைய காலத்திற்குப் பிறகும் அற்புதங்கள் தொடர்ந்தும் நிகழ்ந்தன, நிகழ்கின்றன என்று நம்பினார். இந்த விஷயத்தில் பென்ஜமின் வார்பீல்டின் (Benjamin Warfield) கருத்துக்களை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். பென்ஜமின் வார்பீல்ட், அற்புதங்கள் அப்போஸ்தலருடைய காலத்துக்குப் பிறகு நடக்கவில்லை என்று தனது நூலான Miracles: Yesterday and Todayல் எழுதியிருந்தார். ஆனால், உண்மையான கர்த்தருடைய கிரியை எது? போலியானது எது? என்று கேட்டு பெந்தகொஸ்தே, போதனைகளால் மனக்கிலேசம் அடைந்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு லொயிட் ஜோன்சினால் சரியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. எழுப்புதல் ஏற்பட்ட காலங்களில் அற்புதங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருந்தன என்றும், சீனா, கொரியா போன்ற நாடுகளில் அத்தகைய உண்மையான அற்புதங் களை கர்த்தர் நிகழ்த்தியுள்ளார் என்றும் பாஸ்டர் சீ (Pastor Chi) போன்ற சீனப் போதகர்களின் உழியங்களை லொயிட் ஜோன்ஸ் உதாரணம் காட்டினார். ஹென்றி புரொஸ்ட் (Henry Frost) என்பவர் 1951ம் ஆண்டில் எழுதிய Miraculous Healing என்ற நூலை மறுபடியும் வெளியிடும்படி வெளியீட்டாளர்களுக்கு ஆலோசனை கூறி 1971ல் மறுபடியும் வெளிவந்த அந்நூலுக்குப் பரிந்துரை எழுதிய லொயிட் ஜோன்ஸ், “இந்த விஷயத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் இதுவே மிகவும் சிறந்தது. அனேக தடவைகள் அற்புதக் குணமாக்குதல் பற்றி எழுதும்படி என்னைப் பலர் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஹென்றி புரொஸ்ட் இந்நூலில் எழுதியிருப்பதே என்னுடைய கருத்தும், இந்த விஷயத்தில் அதுவே என்னுடைய இறுதி முடிவும் என்று நான் அவர்களுக்கு பதிலளித்திருக்கிறேன்” என்று எழுதி யிருக்கிறார். இந்த நூலில் புரொஸ்ட் தந்துள்ள கருத்துக்களை சுருக்கமாக உங்கள் முன் வைக்கிறேன்:

1. அற்புதங்கள் தொடர்ந்தும் நிகழ்கின்றன. இருந்தாலும் அப்போஸ்தலரின் காலத்தைப்போல இன்று பெருமளவுக்கு நிகழவில்லை.

2. கிறிஸ்தவ சுவிசேஷம் இதுவரை போய்ச்சேராத உலகின் பெரும¢பாகங்களில் தேவனின் வார்த்தையை உறுதிப்படுத்தி மக்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க அற்புதங்கள் இன்று நிச்சயம் தேவை. ஆகவே, கர்த்தருடைய வார்த்தை மட்டுமே போது மானது என்று நாம் கூற முடியாது.

3. இந்த அடிப்படையில் கர்த்தர் புது இடங்களில் ஊழியம் செய்யும் தன்னுடைய ஊழியக்காரரை மக்கள் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்புவதற்காக அற்புதங்கள் செய்யும்படி இன்று ஆசீர்வதிக்கிறார்.

இக்கருத்துக்களை புரொஸ்டின் நூலில் 106-113 பக்கங்களில் பார்க்கலாம். புரொஸ்டின் நூலுக்கு நிபந்தனையற்ற அங்கீகாரம் வழங்கி, அந்நூலின் கருத்துக்களே தன்னுடைய கருத்துக்களும் என்று அறிவித்ததன் மூலம் மார்டின் லொயிட் ஜோன்ஸ் அற்புதங்கள் தொடர்ந்தும் நடக்கும் என்று மட்டுமல்ல, கிறிஸ்தவ சுவிசேஷம் புதிதாகப் போகுமிடங்களி லெல்லாம் தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதற்காக அற்புதங் கள், பிணிதீர்த்தல் போன்ற கிரியைகள் ஊழியக்காரர் மூலம் நடக்கும் என்று நம்பியிருந்திருப்பதைத் தெளிவாக அறிந்து கொள்கிறோம். இது எனக்கு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது.

அற்புதங்களின் தேவனாகிய கர்த்தர் வரலாற்றில் அற்புதங்களைத் தொடர்ந்தும் நிகழ்த்துகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை. கர்த்தர் தன்னுடைய இறையாண்மையின்படி அற்புதங்களை செய்கிறவர். அத்தோடு, சிறப்பாக கர்த்தரின் கிரியையான எழுப்புதல் காலங்களில் வரலாற்றில் சில வேளைகளில் அற்புதங்கள் நடக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமிருக்கவில்லை. எழுப்புதல்கள் அன்றாடம் நடப்பவையல்ல. சார்ள்ஸ் பினி நம்பியதுபோல் எழுப்புதல்களை மனிதனால் ஒருநாளும் உருவாக்க முடியாது, அவற்றைக் கர்த்தர் தன்னுடைய சித்தத்தின்படி வரலாற்றில் எப்போதாவது நடத்துவார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. எழுப்புதல் காலங்களில் சில வேளைகளில் அற்புதங்களைக் கர்த்தர் செய்தாலும் போலியான செயல்களும் பிசாசினால் நடக்கும் என்பதற்கு வேல்ஸில் நடந்த 1904-1905ல் நிகழ்ந்த எழுப்புதல் உதாரணமாக இருக்கின்றது. அமெரிக்காவில் எழுப்புதல் காலத்தில் பிசாசின் விளையாட்டுக்களும் நிகழ்ந்து மக்கள் உணர்ச்சிவசப்பட்டபோது ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அவற்றை நிராகரித்து மெய்க்கிறிஸ்தவ அனுபவத்திற்கான அடையாளங்கள் குறித்து முக்கியமான நூலொன்றை வெளியிட்டிருந் தார் (The Distinguishing Traits of a Christian). இதே கருத்தையே ஜோர்ஜ் விட்பீல்டும் (George Whitefield), கார்டினர் ஸ்பிரிங்சும் (Gardiner Springs), ஸ்பர்ஜனும் (Spurgeon) தாங்கள் எழுதிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, எழுப்புதல் காலங்களில் நடக்கும் எல்லாவற்றையும் கர்த்தரின் கிரியைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதென்பதற்கு வரலாறு சான்றாக இருக்கின்றது. இயன் மரே (Iain Murray) தான் எழுதியுள்ள Pentecost – Today? என்ற நூலில் ஒருவித அற்புதங்களையும் காணாமலேயே அனேக எழுப்புதல்கள் வரலாற்றில் நிகழ்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அத்தோடு,  “புரட்டஸ்தாந்து கோட்பாடுகளைப் பின்பற்றியவர்கள் நிச்சயம் அற்புதங்கள் நிகழ்ந்திருப்பதாக பேசியிருக்கிறார்கள். ஆனால், அப்படிப் பேசியவர்கள் எல்லாம் மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மதவெறியர் களாக மட்டும்தான் (fanatics) இருந்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட் டுள்ளார். இவ்வாறான தீவிரவாதிகளை சீர்திருத்தவாத காலத்திலும் அதற்குப்பின்பும் வரலாறு சந்தித்திருப்பதாகவும், அதற்கு உதாரணமாக பிரெஞ்சு தீர்க்கதரிசிகளைப் பின்பற்றியவர்களையும் (French Prophets), அன்டனட் போரிக்னனைப் பின்பற்றியவர்களையும் (Antoinette Bouringnon), பிலிப் ஜேக்கப் ஸ்பேனரைப் பின்பற்றியவர்களையும் (Philipp Jakob Spener), எட்வர்ட் இர்விங்கையும் (Edward Irving) சுட்டிக்காட்டுகிறார் இயன் மரே.

ஆனால், என் கேள்வி எழுப்புதல் பற்றியதல்ல, அன்றாட சபை வாழ்க்கையில் இன்று அற்புதங்கள் செய்பவர்களும், அந்நியபாஷையும், தீர்க்கதரிசனமும் அவசியமா? என்பதுதான். இதற்கு பதிலளிக்கும் லொயிட் ஜோன்ஸ் புதிதாக ஊழியங்கள் நடக்கும் இடங்களில் கர்த்தரை அறியாத மக்கள் சுவிசேஷத்தை நம்பும்படியாக அற்புதங்களைக் கர்த்தர் ஊழியக் காரர்களைப் பயன்படுத்தி நடத்துவார் என்று புரொஸ்டின் நூலை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். அத்தோடு, ஏற்கனவே கர்த்தரை அறிந்து கொண்டுள்ளவர்கள் மத்தியில் சபைகளில் அற்புதங்கள் என்ற பெயரில் நடப்பவைகளை நாம் உடனடியாக நிராகரித்துவிடாமல் ஆராய்ந்து ஆவியின் செயல்களாக இருப்பவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் மார்டின் லொயிட் ஜோன்சின் விளக்கமாக இருந்தது. இக்கருத்துக்களை அவருடைய பேச்சுக்களின் தொகுப்பைக் கொண்டுள்ள நூலான The Doctor Himself and the Human Condition-ல் வாசிக்கலாம். லொயிட் ஜோன்சின் இக்கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இருக்க வில்லை. இரண்டு முக்கிய கேள்விகளுக்கு லொயிட் ஜோன்சின் போதனை கள் பதிலளிக்கவில்லை.

(1) சாதாரண விசுவாசிகள் எந்த அடிப்படையில் அற்புதங்களை ஆராய்ந்து அவை கர்த்தருடையனவா? அல்லது பிசாசினுடையனவா? அல்லது உளவியல்ரீதியில் ஏற்பட்டவையா? என்று தெரிந்து கொள்வது? ஆவியின் மூலமாக இவை சோதிக்கப்பட வேண்டும் என்று பதிலளிக்கிறார் லொயிட் ஜோன்ஸ். ஆவியின் மூலமாக இவற்றை எவ்வாறு சோதிப்பது? என்று அவர் எங்குமே விளக்கமளிக்கவில்லை. ஆவியின் செயல்களை வேதத்தைக் கொண்டு மட்டுமே சோதிக்க முடியும். ஆனால், இன்று அந்நியபாஷைகள், தீர்க்கதரிசனங்கள், அற்புத வரங்கள் நடைமுறையில் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை வேத அடிப்படையில் தீர்மானிக் காவிட்டால், வேதம் இவை குறித்து எதைப் போதிக்கின்றது என்பதில் நமக்குக் குழப்பம் இருந்தால், ஆவியின் செயல்களை நாம் எப்படித் தீர்மானிப்பது? ஆவியின் கிரியைகளைச் சோதிக்க இரண்டு வழிகள் உண்டு. இந்த இரண்டு வழிகளின் ஒன்று மட்டுமே சரியானது. (அ) வேத போதனைகளின் அடிப்படையில் ஒரு செயலை ஆவியின் செயலா? இல்லையா? என்று ஆராய்ந்து உறுதியானதொரு முடிவுக்கு வரலாம் அல்லது, (ஆ) ஒரு விசுவாசி தன்னுடைய மனச்சாட்சியில் ஏற்படும் அழுத்தமான நம்பிக்கைகளின் மூலம் ஒன்றை ஆவியின் செயலா? இல் லையா? என்பதைத் தீர்மானிக்கலாம். இந்த இரண்டில் முதலாவது மட்டுமே சரியானது. ஏனெனில், வேதத்தைக் கொண்டே எதைப்பற்றியும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். இயன் மரே சொல்லுகிறார்: “நாம் எப்போதும் வேதத்தைக் கொண்டே எதையும் ஆராய வேண்டும். அனுபவத்தைக் கொண்டல்ல. நம்முடைய சொந்த அனுபவங்களை, (அவை உண்மையானவையா இல்லையா என்று) ஆராய்வதற்கு நம்முடைய மனச்சாட்சி கூட நம்பக்கூடிய சாதனமல்ல. நம்வாழ்க்கையிலும், மற்றவர் களுடைய வாழ்க்கையிலும் நடந்திருப்பவைகளை நாம் பூரணமாக விளக்கக் கூடிய சக்தி படைத்தவர்களல்ல. வேதம் மட்டுமே அவற்றை ஆராய்வதற்கு பாதுகாப்பானதும் நம்பகமானதுமாகும்.” (Pentecost – Today? pg, 106). தொடர்ந்து மரே, “அனுபவங்களுக்கு விளக்கம் கொடுக்க முயன்ற பல நல்ல மனிதர்கள் தவறு செய்திருக்கிறார்கள். உண்மையான அனுபவங் கள்கூட தவறான விதத்தில் விளக்கப்படுகின்றபோது அவை பிழையான போதனைகளுக்கு மூலகாரணமாகின்றன.” என்கிறார் (Pentecost – Today? pg, 107). ஆகவே, லொயிட் ஜோன்சின் பதில் இந்த விஷயத்தில் எற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

(2) இரண்டாவது கேள்வி, சுவிசேஷம் இதுவரை அறிவிக்கப்படாத இடங்களில் அற்புதங்கள் அவசியம், ஊழியக்காரர்கள் அற்புதங்களைத் தொடர்ந்து நடத்த முடியும் என்று வேதம் எங்கே விளக்குகின்றது? இந்தக் கேள்விக்கு லொயிட் ஜோன்சும், புரொஸ்டும் தகுந்த வேத ஆதாரங்களை அளிக்கவில்லை. கர்த்தர் அற்புதங்கள் செய்கிறவராக இருக் கிறார் என்ற பொதுவான போதனையின் அடிப்படையிலும், சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தரை அறியாத மக்கள் அற்புதங்களை எதிர்பார்ப்பார்கள், அவர்களுக்கு வேதம் மட்டுமே போதுமானதாக இருக்காது என்ற அனுமானங்களினால் மட்டுமே அவர்கள் அத்தகைய பிரதேசங்களில் இன்று அற்புதங்களை ஊழியக்காரர்கள் செய்ய முடியும் என்று சொன்னார்களே தவிர புதிய ஏற்பாட்டில் இருந்து தகுந்த வேத சான்றுகளைக் கொடுக்கவில்லை. வெறும் அனுமானங்கள் ஒருபோதும் வேத சான்றுகளாகிவிடாது. ஆகவும் கூடாது.

ஆகவே, அற்புதங்கள் பற்றிய மார்டின் லொயிட் ஜோன்சின் நிலை தவறானது என்பதை நான் உணர்ந்தேன். லொயிட் ஜோன்சின் எழுத்துக் களில் நான் இன்றும் பெருமதிப்பு வைத்திருந்தபோதும் அற்புத வரங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள் சரியான, வேதபூர்வமான பதிலை அளிக்கவில்லை என்பது அன்றே எனக்குத் தெளிவாக விளங்கியது. அதுமட்டுமல்லாது லொயிட் ஜோன்ஸ், அற்புதங்களை ஊழியக்காரர்கள் இன்றும் செய்யமுடியும் என்று போதித்தது சீர்த்திருத்த போதனைகளை நம்பியவர்கள் சுவிசேஷ ஊழியத்தின் பலனுக்கு வேதத்திலும், ஆவியின் கிரியைகளிலும் மட்டும் நம்பிக்கை வைக்காமல் அற்புதங்களையும் நாடி நிற்கவேண்டுமோ? என்று மனங்குழம்ப வேண்டிய நிலையை உருவாக்கியது. அத்தோடு அவரது கருத்துக்கள் அற்புதங்களை நாடி ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கும் பால்வார்த்தது போலாயிற்று.

மார்டின் லொயிட் ஜோன்சும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும்

அத்தோடு மார்டின் லொயிட் ஜோன்ஸ், விசுவாசி தன்னுடைய வாழ்க்கையில் ஆவியின் அனுக்கிரகத்தை ஆழமாகவும், தீவிரமாகவும் அனுபவிக்க முடியும் என்று போதித்தார். இந்த அனுபவத்தை விசுவாசி தான் கிறிஸ்துவை விசுவாசித்த ஆரம்ப காலத்தில் அடையாதிருந்தாலும் தன்னுடைய விசுவாச வாழ்க்கையில் எப்போதாவது பெற்றுக்கொள்ளலாம் என்று விளக்கினார். இந்த அனுபவத்தின் மூலம் கிறிஸ்துவின் அன்பினை அதிகளவுக்கு தன்னுடைய வாழ்க்கையில் விசுவாசி அனுபவிக்க முடியும் என்றும் கூறினார். இந்த அனுபவத்திற்கும் பரிசுத்தமாக்குதலுக்கும் நிச்சயம் தொடர்பு இருந்தபோதும் இது பரிசுத்தமாக்குதலின் ஒருபகுதியோ அல்லது பரிசுத்தமாக்குதலின் உச்சகட்ட அனுபவமோ இல்லையென்றும் அதைவிட வேறுபட்டதொரு தனித்துவம் வாய்ந்த ஆவிக்குரிய அனுபவமென்றும் விளக்கினார். ஒருதடவை பெற்றுக்கொண்ட இந்த அனுபவத்தை விசுவாசி இழந்துபோய் மறுபடியும் வேறொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய லொயிட் ஜோன்ஸ் இந்த அனுபவத்திற்கு அடையாளமாக அந்நியபாஷை போன்றவை விசுவாசியின் வாழ்க்கையில் இருக்கத்தேவையில்லை என்றும் கூறியிருந்தார். லொயிட் ஜோன்ஸ் இந்தப் போதனையை “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” என்ற பெயரில் அழைத் தார். அப்¢போஸ்தல நடபடிகள் 8:17; 9:17; 19:6 பகுதிகளில் இந்த அனுபவமே கைவைத்து ஜெபிப்பதன் மூலம் கொடுக்கப்பட்டது என்று விளக்கினார். லொயிட் ஜோன்ஸ் அப்போஸ்தல நடபடிகளில் பரிசுத்த ஆவியானவரின் -ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட நான்கு அதிகாரங்களையும் (அப்போஸ் தலர் 2; 8; 10; 17) பெந்தகொஸ்தேகாரர்கள் விளக்குவதுபோல் விளக்கி அவை ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் வரலாற்றில் தொடர்ந்து நடக்கக்கூடிய நிகழ்ச்சி என்றார் (Joy Unspeakable, Kingsway). இதன் அடிப் படையில் ரோமர் 8:15, 16க்கும், எபேசியர் 1:13 க்கும் அவர் விளக்கமளித் தார். இந்த அதிகாரங்களை அனைத்தையும் அவர் புதிய ஏற்பாடு முழு வதையும் ஒருசேரப்பார்த்து வரலாற்று, இறையியல் அடிப்படையில் விளக் கம் கொடுக்கத் தவறினார். இதைவிட ஆர்மீனிய, டிஸ்பென்சேஷனலிஸ்டுக் கோட்பாடுகளைப் பின்பற்றிய டீ. எல். மூடியும் (D. L. Moody), ஆர். ஏ. டோரியும் (R. A. Torrey) இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டிருந¢தாக அவர் உதாரணங்காட்டியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

மார்டின் லொயிட் ஜோன்ஸ், பெந்தகொஸ்தேகாரர்களைப்போல விசுவாசி இரண்டாம் தடவை ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்று போதிக்கவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்த உடனேயே விசுவாசி ஆவியானவருக்குள் நிரந்தரமாக குடிகொள்கிறார் என்றும், விசுவாசி ஆவியானவரை ஒருபோதும் இழந்துபோக மாட்டான் என்றும் விசுவாசித்த மார்டின் லொயிட் ஜோன்ஸ், விசுவாசி பெற்றுக்கொண்டுள்ள ஆவியான வரே இந்த ஆழமான, தனித்துவமான, ஆவிக்குரிய ஆத்மீக அனுபவத்தை யும் விசுவாசிக்குக் கொடுப்பதாக விளக்கினார். லொயிட் ஜோன்சின் இந்தப் போதனையை அவர் எபேசியருக்கு பவுல் எழுதிய நிருபத்தின் முதலாம் அதிகாரத்திற்குக் கொடுத்த வியாக்கியானத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தோடு, அவருடைய பேரன் கிரிஸ்டோபர் கெத்தர்வுட் (Christopher Catherwood) தொகுத்து வெளியிட்ட அவருடைய பிரசங்கத் தொகுப்பான Joy Unspeakable என்ற நூலிலும் வாசிக்கலாம். இந்தப் போதனை பெந்தகொஸ்தே இயக்கத்தாரின் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” என்ற “இரண்டாம் ஆசிர்வாதப்” போதனையைப் போலத் தோற்றமளித்ததால் பலர் லொயிட் ஜோன்ஸ் பெந்தகொஸ்தே போதனை களை ஏற்றுக் கொண்டுள்ளதாக நம்பினர். பெந்தகொஸ்தேகாரர்கள்கூட அவர் தங்கள் போதனைகளை ஏற்றுக்கொண்டதாக எண்ணினர். அவரு டைய எழுத்துக்களில் ஒருசிலவற்றை மட்டும் வாசித்திருந்த ஒரு பிரபல மான அமெரிக்கப் போதகர் மார்டின் லொயிட் ஜோன்ஸினுடைய போதனைகளும் ஜோன் விம்பர் என்ற அமெரிக்க பெந்தகொஸ்தே ஊழிய ருடைய போதனைகளும் நூற்றுக்கு நூறு வீதம் ஒத்திருந்ததாக பேசினார். இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிலர் விளங்கிக் கொண்ட போதும் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் மார்டின் லொயிட் ஜோன்சின் ஆதரவாளர்களில் பலர் அவர் பெந்தகொஸ்தே போதனைகளை ஆதரிப்ப தாகத்தான் கருதினர். உதாரணமாக, The Genius of Puritanism என்ற நூலை எழுதிய பீட்டர் லூயிஸ் (Peter Lewis) இந்த வழியில் போக ஆரம்பித்தார். இது சீர்திருத்தவாதத்தில் ஆர்வம் கொண்டிருந்த பல போதகர்களைப் பாதித்து அவர்கள் பெந்தகொஸ்தே போதனைகளைப் பற்றித் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியாதபடி தடுத்தது. இதனாலேயே இன்றும்கூட கல்வினிசப் போதனைகளை விசுவாசிக்கின்ற சில சபைகளும், போதகர் களும் அற்புத வரங்களும், அந்நியபாஷையும், தீர்க்கதரிசனமும் தொடர்ந் தும் இருப்பதாக நம்புகிறார்கள். இவர்கள் மார்டின் லொயிட் ஜோன்சின் போதனைகளில் அதிதீவிரம் காட்டியதால் அவருடைய இந்தப் போதனை களை ஆராயாமல் ஏற்றுக்கொண்டனர். இங்கிலாந்தில் லொயிட் ஜோன்ஸ் மீது தீவிரமான பற்றுடையவர்களாக அவருடைய “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” என்ற போதனையை வேதபோதனையாக நம்பி வரும் சீர்திருத்த போதகர்களை இன்றும் பார்க்கலாம். உதாரணமாக கிரெகம் ஹெரிசன் (Graham Harrison) லொயிட் ஜோன்சின் இந்தப் போதனையை ஆதரித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இறையடி சேர்ந்துவிட்ட ஹேர்பட் கார்சன் (Herbert Carson) போன்றோர் சீர்திருத்தவாதப் போதனை களைத் தழுவிய பின்னும் பெந்தகொஸ்தே போதனைகளில் ஆர்வம் செலுத்திவந்ததற்கு லொயிட் ஜோன்சின் போதனைகளும் காரணமாக இருந்திருக்கின்றன. 1980களின் ஆரம்பத்தில் Reformed Pentecostal/Charismatic என்ற பதம் உருவாவதற்கு லொயிட் ஜோன்சின் போதனைகளும் ஓரளவுக்குக் காரணமாக இருந்திருப்பதை எவராலும் நிராகரிக்க முடியாது. உண்மையில் இந்தப்பதம் முரண்பாடான பதம் (contradiction of terms). சீர்திருத்தவாதமும், பெந்தகொஸ்தே போதனைகளும் என்றுமே ஒன்று சேரமுடியாது. அவை ஒன்றுக்கொன்று முரணானவை. அதேவேளை கிரிஸ்டோபர் கெத்தர்வுட் வெளியிட்ட லொயிட் ஜோன்சின் பிரசங்கங்களான Joy Unspeakable, Prove All Things ஆகிய நூல்களால் சீர்திருத்தவாத கிறிஸ்தவத்திற்கும், பெந்தகொஸ்தே இயக்கத்திற்கும் பாலம் அமைக்கும் ஒரு புது முயற்சியும் ஆரம்பமானது. இங்கிலாந்தில் நடைபெற்ற சில கிறிஸ்தவ மகாநாடுகள் இந்தப்பாதையில் செல்ல ஆரம்பித்தன. Reformed Charismatic என்ற பெயரில்கூட ஒரு கிறிஸ்தவ மகாநாடு நடைபெற்று வந்தது. இந்த முயற்சி லொயிட் ஜோன்சின் ஊழியத்தையும், பெந்த கொஸ்தே இயக்கத்தின் போதனைகளையும் சரியாக விளங்கிக் கொள்ளாத தால் ஏற்பட்ட தவறான முயற்சி. இதனால் பாதிக்கப்பட்டு இரண்டும் ஒன்று சேர முடியும் என்று பகல் கனவு கண்டவர்களும் உண்டு.

மார்டின் லொயிட் ஜோன்ஸ் பெந்தகொஸ்தேகாரரா?

மார்டின் லொயிட் ஜோன்சின் ஆவிக்குரிய வரங்கள், அற்புதங்கள், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் போன்ற போதனைகளின் குறைபாடு களை நான் சுட்டிக்காட்டியதால் அவர் ஒரு முழுப் பெந்தகொஸ்தேவாதி என்று கூறவரவில்லை. தன்னுடைய ஊழிய காலங்களில் வேல்ஸில் இருந்தபோதும் சரி, இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் இருந்த போதும் சரி சபையில் அற்புத வரங்களுக்கு அவர் இடம் கொடுக்கவே இல்லை. சபை ஆராதனையும் வேத அடிப்படையில் பிரசங்கத்திற்கு முக்கியம் கொடுப்பதாகவே இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார். 1964ல் அவரளித்த “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” பற்றிய போதனைகள் அவருடைய ஊழியத்தின் முக்கிய அம்சமாக ஒருபோதும் இருக்கவில்லை  கல்வினிசப் போதனைகள் இங்கிலாந்திலும் இங்கிலாந்திற்கு வெளியிலும் பரவுவதற்கு லொயிட் ஜோன்ஸ் 1930-1980 வரை செய்துள்ள பணிகளுக்கு ஈடு இணையில்லை. அற்புதமான பிரசங்கியாக இருந்து பிரசங்க ஊழியத் திற்கு அவர் அளித்துள்ள பங்கை எவரும் அலட்சியப்படுத்திவிட முடியாது. 45 நிமிடங்களுக்கு குறைவாக அவர் பிரசங்கித்ததே இல்லை. அதுவும் அவருடைய பிரசங்கங்கள் தெளிவான வேத வியாக்கியானப் பிரசங் கங்களாகவே இருந்தன. இருந்தபோதும் பெந்தகொஸ்தே இயக்கம் பற்றியும், ஆவிக்குரிய வரங்கள், அற்புத வரங்கள் பற்றியும் அவர் தெளிவானதும், உறுதியானதுமான போதனைகளை அளிக்காததால் சீர்த்திருத்த போதனை களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டிய அனேகர் குழப்பத்திற்குள்ளா கியதை 1970-1990 வரை நான் கவனித்து வந்திருக்கிறேன். அதேவேளை மார்டின் லொயிட் ஜோன்சின் மீது பெருமரியாதை வைத்திருந்த அனேக சீர்திருத்தவாத போதகர்கள் அவருடைய குறைகளை இக்காலத்தில் சுட்டிக் காட்டவும் தவறில்லை. உதாரணமாக இங்கிலாந்தில் பீட்டர் மாஸ்டர்ஸ் (Peter Masters), டேவிட் பவுன்டன் (David Fountain) போன்றோரையும் அமெரிக்காவில் பல சீர்திருத்த போதகர்களையும் உதாரணங்காட்டலாம். மார்டின் லொயிட் ஜோன்ஸின் அதிகாரபூர்வமான வாழ்க்கை சரிதத்தை எழுதிய இயன் மரே அதில் லொயிட் ஜோன்சின் இந்தக் கருத்துக்களைப் பற்றிக் கூறும்போது, “இதுபற்றிய விஷயங்களில் அவருடைய கருத்துகள் தெளிவானதாக இருக்கவில்லை” என்று அடக்கி வாசித்திருக்கிறார் (D. M. Lloyd Jones, The fight of Faith, Vol 2, pg, 491). இயன் மரேயினுடைய இவ்வார்த்தைகள் லொயிட் ஜோன்ஸின் பாரதூரமான கருத்துக்களை குறைத்து மதிப்பிடுவதாகவே உள்ளன.

சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும்

கர்த்தரின் வேதம் எழுதி முடிக்கப்பட்ட பின்பு அற்புத வரங்களுக்கு வேலையில்லை என்ற போதனையை மார்டின் லொயிட் ஜோன்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்தின் அதிகாரத்தை பெரிதும் நம்பிய அவர் இந்த விஷயத்தில் வேதம் போதுமானது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், சபை வரலாற்றில் ஜோன் கிரிசொஸ்டம் (John Chrysostom 347-407), அகஸ்தீன் (Augustine 354-430), ஜோன் கல்வின் (John Calvin), தொமஸ் வாட்சன் (Thomas Watson), ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel), மெத்யூ ஹென்றி (Matthew Henry), ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Johnathan Edwards), ஜோர்ஸ் விட்பீல்ட் (George Whitefield), ஜேம்ஸ் புக்கனன் (James Buchanan) போன்ற சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் வேதம் எழுத்தில் வடிப்பது நிறைவேறிய பின்னர் அந்த வரங்களுக்கு வேலை இல்லை என்றே நம்பினர். சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (Charles Spurgeon), ரொபட் எல். டெப்னி (Robert L. Dabney), ஜோர்ஜ் ஸ்மீட்டன் (George Smeaten), ஆபிரகாம் கைப்பர் (Abraham Kyper), பென்ஜ மின் வார்பீல்ட் (Benjamin Warfield), ஏ. டபிள்யூ. பின்க் (A. W. Pink) ஆகிய சீர்திருத்தவாத அறிஞர்களும் வேதம் எழுத்தில் தரப்பட்டபின்பு அற்புத வரங்களுக்கு தொடர்ந்து வரலாற்றில் இடமில்லை என்றே நம்பினர் (Signs of the Apostles by Walter Chantry, pg, 95-101). ஆகவே, லொயிட் ஜோன்சின் கருத்து சீர்திருத்தவாதிகள் மத்தியிலும், தூய்மைவாதிகள் மத்தியிலும் பெரும்பாலும் காணப்படவில்லை. லொயிட் ஜோன்சின் ஊழியத்தினால் பயனடைந்த சீர்திருத்த போதகர்களில் அனேகர் அவரு டைய, அற்புத வரங்கள் தொடர்ந்தும் இக்காலத்தில் இருக்கும் என்ற போதனையை ஆதரிக்கவில்லை. லொயிட் ஜோன்சின் உதவிப் போதகராக ஒரு காலத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் கடமைபுரிந்த இயன் மரே அற்புத வரங்கள் அப்போஸ்தலர்களுடைய காலத்தோடு முடிவடைந்து விட்டது என்றே நம்பினார் (Penecost – Today?, Iain Murray, pg, 197-199). இதுபற்றி தூம்மைவாதியான ஜோன் ஓவன் பின்வருமாறு எழுதியுள்ளார், “அப்போஸ்தலப் பணியோடு தொடர்புடைய வரங்கள் அப்போஸ்தலர் களுடைய காலம் முழுவதும் இருந்தன. அவர்களுடைய வாழ்நாட்களுக்குப் பிறகு அந்தப் பணியும் அதோடு தொடர்புடைய வரங்களும் சபை வரலாற் றில் எவருக்கும் அளிக்கப்படவில்லை. அற்புத வரங்களும், அற்புதங்கள் செய்வதும் (அப்போஸ்தலர் காலத்துக்குப்பின்) நின்று போய்விட்டன.” (The Spirit and the Church, John Owen, Abridged and made easy to read by R. J. K. Law, pg, 184)

மார்டின் லொயிட் ஜோன்சின் போதனைகளும், நானும்

அற்புதங்களுக்கு இயற்கை ரீதியாக விளக்கம் கொடுத்து கர்த்தருடைய வேதம் போதித்த அற்புதங்களை நிராகரித்த லிபரல் இறையியலாளர்களும், பிரசங்கிகளும் நிறைந்திருந்த காலத்தில் ஊழியத்தை ஆரம்பித்த லொயிட் ஜோன்ஸ் அற்புதங்களை வற்புறுத்திப் போதிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அத்தோடு, அவர் காலத்தில் கிறிஸ்தவ சபைகள் ஆவியின் வல்லமையையும், சந்தோஷத்தையும் இழந்த நிலையில் இருந்தபடியால் பரிசுத்த ஆவியின் வல்லமை சபையில் காணப்பட வேண்டுமென்பதற்காக “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” பற்றிய போதனையை 1960களில் அவர் உருவாக்கியிருந்திருக்கலாம். அவர் இந்தப்போதனையைக் கொடுத்த காலத்தில் (1964) கெரிஸ்மெடிக் இயக்கம் இங்கிலாந்தில் இன்னும் ஆரம்பமாகாமல் இருந்தது. இதை இயன் மரே (D. Martyn Lloyd Jones, The fight 1931-1981 by Iain H. Murray) எழுதிய லொயிட் ஜோன்சின் வாழ்க்கை வரலாற்றில் வாசிக்கலாம். ஆனால், அந்தப்போதனையை உருவாக்க அவர் பயன்படுத்திய வேதவசனங்களும், வேதப்பகுதிகளும் அப்படியான போதனைக்கு அடித்தளமாக அமையவில்லை என்பதே உண்மை. அப்போஸ்தல நடபடிகளையும், எபேசியருக்கு பவுல் எழுதிய நிருபத்தின் 1:13ஐயும், யோவான் சுவிசேஷத்தின் சில பகுதிகளையும், வேறு சில பகுதிகளையும் அவர் இந்தப்போதனையை அளிக்க பயன் படுத்தினார். அனுபவத்தின் அடிப்படையிலும், வரலாற்று சம்பவங்களின் அடிப்படையிலும் ஒருசில வேதப்பகுதிகளையும் மட்டும் பயன்படுத்தி கோட்பாடுகளை உருவாக்கக் கூடாது என்று எச்சரித்த லொயிட் ஜோன்ஸ் இந்த விஷயத்தில் மட்டும் அதைக் கோட்டைவிட்டுவிட்டது ஆச்சரியமே.

என்னுடைய ஆத்மீக வாழ்க்கையின் ஆரம்ப காலப்பகுதியில் லொயிட் ஜோன்சின் நூல்களை ஆர்வத்துடன் வாசித்து, அவற்றால் வசீகரிக்கப்பட்டு சீர்திருத்தக் கோட்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய நான், அவருடைய அற்புத வரங்கள், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் போன்றவை பற்றிய கருத்துக்களால் சிறிது குழம்ப நேர்ந்தது. இந்தக் குழப்பம் ஆபத்தில் முடியாமல் மேலும் ஆழமாக வேதத்தை ஆராய்ந்து படிப்பதிலும், பெந்தகொஸ்தே இயக்கத்தின் போதனைகளை ஆராயவும் தூண்டியது. வெகுசீக்கிரத்திலேயே மார்டின் லொயிட் ஜோன்ஸ் தனது “பரிசுத்த ஆவியின் ஞாஸ்நானம்” பற்றிய போதனைக்கு அளித்த விளக்கங்களுக்கு பயன்படுத்துகிற வசனங்களுக்கான மெய்யான விளக்கத்தை நான் விளங்கிக் கொண்டேன். இந்த விஷயங்களைப் பொறுத்தவரையில் அவருடைய விளக்கங்கள் தெளிவான வேத வசனங் களை ஆதாரமாகக் கொள்ளாமல், அக்காலத்தில் சபை இருந்த நிலையின் அடிப்படையிலும், வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும், எழுப்புதல்மீது அவர் கொண்டிருந்த தீவிரமான ஆர்வத்தின் அடிப்படை யிலும், தனிநபர்களின் அனுபவத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்ததை என்னால் தெளிவாக உணரமுடிந்தது. லொயிட் ஜோன்ஸ் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று அவர் எழுதியதை ஆராய்ந்து பார்க்காமல் போயிருந்தால் எத்தனையோ பேரைப் போல நானும் கூட இந்த விஷயத் தில் தவறியிருக்கலாம். இதிலிருந்து வரலாற்றுச் சிறப்புப்பெற்ற எத்தனைப் பெரிய அறிஞர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லுவதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்து சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளுவதன் ஆபத்தையும் நான் உணர்ந்தேன். இதற்காக மார்டின் லொயிட் ஜோன்சின் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட வில்லை. லூதரையும், கல்வினையும், எட்வர்ட்ஸையும், ஜோன் மரேயையும் மரியாதையுடன் எண்ணிப் பார்க்கும் நாம் ஞானஸ்நானம் பற்றிய அவர்களுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ளவா செய்கிறோம்? அதுபோல் லொயிட் ஜோன்சின் கருத்துக்களை இந்த விஷயத்தில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்னுடைய விசுவாச வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் அற்புதங் கள் பற்றியும், ஆவிக்குரிய வரங்கள்பற்றியும், பெந்தகொஸ்தே இயக்கம் பற்றியதுமான எனது ஆய்வுகள் தொடர்ந்தபோது இக்காரியங்கள் பற்றி நான் ஏற்கனவே கொண்டிருந்த நம்பிக்கைகள் உறுதிபெற துணையா யிருந்தவர்கள் என்று இரண்டுபேரை என்னால் கூறமுடியும். இவர்களு டைய வியாக்கியானங்கள் எனக்குக் கைகோடுத்தன. விக்டர் பட்ஜனும் (Victor Budgen), ஸ்டுவர்ட் ஒலியட்டும்தான் (Stuart Olyott) இந்த இருவரும். விக்டர் பட்ஜன் இப்போது இறையடி சேர்ந்துவிட்டார். அவரை இங்கிலாந் தில் ஒரு முறை மட்டும் சந்தித்திருக்கிறேன். அவர் எழுதிய Charismatics and the Word of God என்ற நூல் எனக்கு மிகவும் துணையாக இருந்தது. ஸ்டுவர்ட் ஒலியட், 1 கொரிந்தியர் வேதப்பகுதிகளுக்கு ஒரு முறை அளித்த விளக்கம் எனக்கு மேலும் உதவியது. இந்த இருவரின் வியாக்கியானங்கள், பெந்தகொஸ்தே போதனைகள் வேத அடிப்படையில் அமையாமல் தனி மனித அனுபவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை என்ற உண்மையையும், வேதம் எழுத்தில் வடிக்கப்பட்டபின்பு அற்புதவரங்கள் அவசியமற்றுப் போயின என்ற உண்மையையும் உணர்த்தின. வேதம் மட்டுமே இன்று எல்லாக்காரியங்களையும் பரிசோதித்து முடிவெடுப்பதற்கு கர்த்தர் நமக்களித்திருக்கும் ஒரே ஆயுதம், கருவி என்ற சத்தியம் எனக்கு பேராறுதல் அளித்தது. வேதத்தின் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும் நம்புவதன் மூலம் நாம் ஆவியானவர் வேதரீதியில் அளிக்கக் கூடிய எந்த நியாயமான ஆத்மீக அனுபவத்தையும் நிராகரிக்கவில்லை; அவரே அவசியமற்றவை என்று நிறுத்திக்கொண்ட வரங்களை மட்டுமே இல்லாமல் போய்விட்டன என்பதை உணர்கிறோம். வேதம் போதிக்கின்ற, நாம் கிறிஸ்துவில் அனுபவிக்கக்கூடிய ஆவியி¢ன் வல்லமை, கனிகள், சந்தோஷம், சபைக்குத் தேவையான தொடர்ந்திருக்கும் வரங்கள் எல்லா வற்றையும் நாம் அனுபவிக்கலாம் என்றும் அறிந்தேன். இதற்கு முன் அறிந்திராத அமைதியையும், சமாதானத்தையும் அடைந்தேன். இவர் களுடைய கருத்துக்களின் அடிப்படையில் மேலும் பல சீர்திருத்தவாதி களுடையதும், தூய்மைவாதிகளினுடையதும் நூல்களை வாசித்து வேதத்தை ஆராய்ந்து பார்த்து இந்த விஷயங்களில் நான் தெளிவடைந்தேன். என்னுடைய விசுவாச வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலேயே இந்த விஷயத்தில் தெளிவு பெற்றது பலவகையான ஆத்மீகப் பாதிப்புகளில் இருந்து நான் தப்ப வழிவகுத்தது.

சீர்திருத்தவாதமும், பெந்தகொஸ்தே இயக்கமும்

இதையெல்லாம் நான் விளக்குவதற்கு முக்கிய காரணம் உண்டு. இன்று தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் சீர்திருத்த, கல்வினிசப் போதனை களை அறிந்து கொண்டு ஊழியம் செய்கிற சிலர் பெந்தகொஸ்தே போதனைகளும் சீர்திருத்தவாதமும் பொருந்திப்போகும் என்றவிதத்தில் சபை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்நியபாஷையும், தீர்க்கதரிசனமும், அற்புத வரங்களும் இன்றும் உண்டு என்று இவர்கள் நம்புவதுமட்டு மல்லாமல் சபை ஆராதனையைக்கூட பெந்தகொஸ்தே சபை ஆராதனை போல் நடத்திவருகிறார்கள். கர்த்தரைத் துதிக்கிறோம் என்ற பெயரில் எல்லோரும் ஒரே சமயத்தில் சத்தமாக, ஒருவர் சொல்லுவது மற்றவர் களுக்கு விளங்காதவகையில் ஜெபிப்பதும், ஆராதனைவேளையில் எல்லோரையும் ஏதாவது செய்யும்படி அனுமதிப்பதும், கலாச்சாரம் என்ற பெயரில் கைகளைத்தட்டிப் பாடி ஆரவாரிப்பதும் கொரிந்துசபைக் குழப் பத்திற்கே வழிவகுக்கும். சீர்திருத்தவாதமும், பெந்தகொஸ்தே போதனை களும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை. இரண்டும் ஒருபோதும் சேர்ந்து வாழ முடியாது. வேதத்தின் அதிகாரத்தைக்குறித்தும், மனந்திரும்புதலைக்குறித்தும், இரட்சிப்பைக்குறித்தும், பரிசுத்தமாக்குதலைக் குறித்தும் வேறுபல முக்கியமான இறையியல் போதனைகளைக்குறித்தும் வேதத்திற்கு முரணாண போதனைகளைப் பின்பற்றிவருகிறது பெந்த கொஸ்தே இயக்கம். வேதத்திற்கு தலைமுழுகிவிட்டு ஊழியம் செய்கிறார்கள் பெனிஹின்னும், தினகரனும். கர்த்தருடைய வேதம் நிர்தாட்சன்யமாக நிராகரிக்கப்பட்டு, பிசாசின் தந்திரங்களுக்கு இடங்கொடுத்து வரும் பெந்தகொஸ்தே இயக்கமும், கர்த்தருடைய இறையாண்மையை நம்பி, வேதத்தை விட்டால் வேறுவழியில்லை என்று வளர்ந்துவரும் சீர்திருத்த வாதமும் எப்படிப் பொருந்திப் போகமுடியும்? வேத சத்தியங்களில் முறை யான ஞானமில்லாத பெந்தகொஸ்தே அன்பர்களுக்கு நாம் நட்புக் கரம் நீட்டி வேதவிளக்கமளித்து உதவுகின்ற அதேவேளை சீர்திருத்தவாதிகளாக வேஷம் போடும் பெந்தகொஸ்தே பச்சோந்திகளை இனங்கண்டு தூரத்தில் தள்ளி வைக்கவேண்டிய கடமையும் நமக்குண்டு.

அற்புதவரங்களைப் பொறுத்தவரையில் அவை இன்றும் இருக்கலாம் என்று நம்புகிற கல்வினிச விசுவாசிகள் நிச்சயமாக கர்த்தரின் வேதத்தின் அடிப்படை அதிகாரத்தில் கைவைக்கிறவர்களாகத்தான் இருக்க முடியும். வேதத்தின் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும் நம்புகிறவர்கள் அற்புதவரங்கள் (அந்நியபாஷை, தீர்க்கதரிசனம், அற்புதங்கள்) தொடர்ந்தும் இருப்பதாகக் கருத முடியாது. அவை இருப்பதாகக் கருதி சபை நடத்த ஆரம்பித்தால் 18ம் நூற்றாண்டில் எட்வர்ட் இர்விங் (Edward Irving) என்ற ஸ்கொட்லாந்து போதகருக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும். அற்புத வரங்கள் தொடர்ந்தும் இருப்பதாகக் கருதி அந்த மனிதர் தன்னுடைய ஊழியத்தையே அழித்துக் கொண்டார். சபையில் எல்லோரை யும் பேசவிட்டு பிரசங்கத்தை இல்லாமலாக்கினார். ஆவியின் கிரியைகள் என்ற பெயரில் அலங்கோலங்கள் சபையில் நடக்க ஆரம்பித்தன. இறுதியில் தவறான நம்பிக்கைகளினால் தன் ஊழியத்தையும் இழந்தார். அவருடைய மரணத்தைப் பற்றி எழுதும் சிறந்த பிரசங்கியும் போதகருமாக இருந்த ரொபட் மரே மெக்செயின் (Robert Murray McCheyne), “தன்னுடைய பல்வேறான தவறுகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் மத்தியில் இந்த மனிதன் பக்திமானாகத்தான் இருந்தார். இப்போது, தான் எந்தத் தேவனுக்கு முன்பாக அத்தனைப் பெருந்தவறுகளையும் செய்தாரோ அவரிடமே போய்ச் சேர்ந்துவிட்டார்” என்று எழுதியிருக்கிறார். இவ்வார்த்தைகள் எட்வர்ட் இர்விங்கின் பெருந்தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. அத்தோடு, விசுவாசிகளை எச்சரிக்கை செய்யும் வாசகங்களாகவும் இருக்கின்றன.

வேதம், வேதம் என்று வேதத்தை முன்வைத்து எல்லாவற்றையும் செய்வதால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளுக்கு நாம் இடமளிக்காமல் போய்விடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆவி யானவரின் கிரியைகள் பலர் மத்தியில் இல்லாமலிருப்பதற்கு அவர்கள் வேதத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையல்ல காரணம். அவர்கள் மத்தி யில் நடைமுறை ரீதியிலான பரிசுத்தமும், பக்திவிருத்தியும், ஆவியின் சந்தோஷமும் இல்லாதிருப்பதே காரணம். வேதத்தை முன்னிலைப்படுத்தி வாழ்கிறவர்கள் வேதரீதியிலான பரிசுத்த வாழ்க்கையை அனுதினமும் வாழ்ந்து, ஆவியின் கனிகளும், சந்தோஷமும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் படிப் பார்¢ததுக் கொள்ள வேண்டும். சபை வாழ்க்கை சரியில்லை என்றால் அதற்கு வேதநம்பிக்கைகளைக் குறைகூறக்கூடாது. கோட்பாடுகளை நிராகரிக்க முயலக்கூடாது. வேதக்கோட்பாடுகளின்படி விசுவாச வாழ்க் கையை ஒவ்வொருவரும் வாழும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆவியின் கிரியைகளும், கனிகளும் நம்மத்தியில் இருப்ப தற்கான அடையாளங்களைக் காணமுடியும். அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டு கரங்களைத் தட்டுவதும், குதிப்பதும், ஆடுவதும் ஆவியின் கனிகளுக்கும், கிரியைகளுக்கும் ஒருபோதும் அடையாளமாகாது. வேதக் கோட் பாடுகளை நிராகரித்து அனுபவத்தையும், அற்புதங்களையும் மட்டும் அடித் தளமாகக் கொண்டு வளர முயலும் சபைகளும், ஊழியங்களும் வெளியில் பார்ப்பதற்கு ஆவியின் வல்லமையுள்ளவை போலத் தோன்றினாலும் அவை கர்த்தருடைய ஊழியங்களாக இல்லாமலும் இருக்கலாம். புடவைக் கடையில் கண்ணாடிக்கூண்டில் கண்ணைப் பறிக்கும் சேலையோடு நிற்கும் பெண் பொம்மை அழகாகத்தான் இருக்கும், ஆனால் அது உயிரில்லாதது. வேதம் அனுமதிக்காதவற்றைக் கொண்டு ஊழியம் என்ற பெயரில் எதையாவது செய்து நூற்றுக்கணக்கானவர்களைக் கவர்ந்து, மக்கள் மத்தியில் நாடகமாடி சுலபமாகப் பெயர் பெற்றுவிடலாம். ஆனால், அது கர்த்தரின் தண்டனைக் காகக் காத்திருக்கும் ஊழியமாகத்தான் இருக்கும் (மத்தேயு 24).

இதையெல்லாம் வாசித்துவிட்டு, கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை என்று நான் சொல்லிவிட்டதாக தவறாக முடிவுசெய்துவிடாதீர்கள். கர்த்தர் அற்புதத்தின் தேவன். இந்த உலகத்தை அவர் அற்புதமாகத்தான் படைத் தார். வேதம் அற்புதமாக நமக்கு எழுத்தில் தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் பிறப்பும், வாழ்வும் அற்புதமான செயல்கள். இன்றும் கர்த்தர் அற்புதங்களை செய்கிறவராக இருக்கிறார். வரலாற்றில் அவர் சிலவேளைகளில் நடத்தக் கூடிய எழுப்புதலும் (Revival) அவருடைய அற்புத செயலே. மனித சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட வகையில், மருத்துவர்களின் மருந்து களையும் கைத்திறமைகளையும்மீறி நமக்கு சிலவேளைகளில் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்போது அது கர்த்தரின் அற்புத செயலாகவே இருக்கிறது. வழமையாக வைத்தியர்களின் மூலமும், மருந்துகளின் மூலமும் நமக்கு விடுதலை கிடைக்கும்போது அதுவும் கர்த்தரின் அற்புத செயலே. கர்த்தரின் துணையில்லாமல் எந்த மருத்துவரோ, மருந்தோ நமக்கு உதவ முடியுமா? மனிதனுடைய பாவச்செயல்கள் அதிகரித்து போரும், நோயும், இயற்கையின் கோரமும் இந்த உலகை அழித்துக் கொண்டு வருகிறவேளை உலகத்தைத் தொடர்ந்தும் தன் சித்தம் நிறைவேறக் கொண்டு நடத்தும் கர்ததரின் பராமரிப்புச் செயலும் அற்புதமே. ஆகவே, நான் அற்புதத்தை என்றும் நம்புகிறேன். ஆனால், நான் இதுவரை விளக்கியது அப்போஸ்தலர் காலத்தில் தரப்பட்ட அற்புத வரங்கள் வரலாற்றில் தொடர்ந்தும் சபைக்கும், தனிமனிதர்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதுதான். அன்று அவை கொடுக்கப்பட்டதற்கான காரணங்கள் நிறைவேறியிருப்பதால் அவற்றிற்கு இன்று வரலாற்றில் அவசியமில்லாமல் போய்விட்டது.  அவற்றை இன்று நாம் தொடர்ந்தும் எதிர்பார்க்கக் கூடாது. சர்வ அதிகாரமும் கொண்ட கர்த்தரின் சித்தத்தை விளக்கும் வேதம் கிறிஸ்து மறுபடியும் வருகிறவரைக்கும் நமக்குப் போதுமானது; நமது ஆத்மீகத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அது மட்டுமே தேவை.

பின் குறிப்பு:

1. இந்த ஆக்கம் முழுவதும் பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் குழுக்களை அடையாளம் காண பெந்தகொஸ்தே இயக்கம் என்ற பதத்தையே பயன் படுத்தியிருக்கிறேன். தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் வாழும் நாடுகளில் பலவிதமாக இந்த இயக்கமும் இதன் கோட்பாடுகளைப் பின்பற்றிவருபவர் களும் அழைக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பெந்தகொஸ்தே என்ற பெயரே பெந்தகொஸ்தே மற்றும் கெரிஸ்மெடிக் குழுக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ லங்காவில் பெந்தகொஸ்தே என்ற பதம் “சிலோன் பெந்தகொஸ்தே” சபைகளைக் குறிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பெந்தகொஸ்தே சபைகள் தவிர்ந்த அசெம்பிளிஸ் ஆவ் காட் (Assemblies of God) போன்ற சபைகளை கெரிஸ்மெடிக் சபைகள் என்று அந்நாட்டில் அழைப்பார்கள். தமிழில் பொதுவாக இவர்கள் எல்லோரையும் “பரவசக் குழுக்கள்” என்ற பெயரிலும் ஸ்ரீ லங்காவில் அழைப்பார்கள். நாட்டுக்கு நாடு இவ்வாறாக வித்தியாசமான பெயர்கள் பயன்படுத்தப்பட்டுவருவதால் இவையெல்லாவற்றையும் ஒரே பெயரில் பெந்தகொஸ்தே இயக்கம் என்று இந்த ஆக்கம் முழுவதும் குறிப்பிட் டிருக்கிறேன். ஆகவே, வாசகர்கள் இதைப்புரிந்து கொண்டு இந்த ஆக்கத்தை வாசிக்கவும்.

“அந்நியபாஷை, தீர்க்கதரிசனம், அற்புதங்கள் ஆகியவை கர்த்தருடைய சாதாரண பராமரிப்புக் காலங்களில் வரலாற்றில் கொடுக்கப்படாத தால்தான் அவை அசாதாரணமான வரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. தன்னுடைய பிள்ளைகளைப் பராமரிக்கும் கர்த்தர் வழமையாக வரலாற்றில் அவர்களுக்கு இந்த வரங்களை அளிப்பதில்லை. அசாதாரணமான காலங்களில் இத்தகைய வரங்களை அளிக்கின்ற கர்த்தர், வேதம் முழுமையாக தொகுக்கப்பட்டு எழுதி முடிக்கப்பட்ட காலத்துக்கு முன் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தி இந்த உலகத்தில் ஆதிசபையை நிறுவுவதற்காக தீர்க்கதரிசிகளுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் இந்த வரங்களை அளித்தார்.” – ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards, Charity and its Fruits, pg, 29-30)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s