கேள்வி 79: ஒன்பதாவது கட்டளை என்ன?
பதில்: பிறனுக்கு விரோதமாய் பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக, என்பது ஒன்பதாவது கட்டளையாகும்.
(யாத்திராகமம் 20:16)
கேள்வி 80: ஒன்பதாவது கட்டளை மூலமாக என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
பதில்: மனிதர்களுக்கிடையில் உண்மை பராமரிக்கப்படவும், விஸ்தரிக்கப்படவும் வேண்டுமென்றும், நம்முடையதும், அயலானுடையதும் நற்பெயர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், முக்கியமாக சாட்சி சொல்லுவதில் அது காணப்பட வேண்டும் என்றும் ஒன்பதாவது கட்டளை எதிர்பார்க்கிறது.
(சகாரியா 8:16; 1 பேதுரு 3:16; அப்போஸ்தலர் 25:10; 3 யோவான் 12; நீதிமொழிகள் 14:5, 25)
கேள்வி: 81 ஒன்பதாவது கட்டளை எதைத் தடைசெய்கிறது?
பதில்: சத்தியத்தைக் குறித்து எவரும் தப்பெண்ணங்கொள்ளுதலையும், நம்முடையதும், அயலானுடையதும் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதையும் ஒன்பதாவது கட்டளை தடைசெய்கிறது.
(ரோமர் 3:13; யோபு 27:5; லேவியராகமம் 19:16; சங்கீதம் 15:3)
விளக்கவுரை: இதுவரை நாம் பார்த்து வந்துள்ள எட்டு கட்டளைகளைப் போலவே இந்த ஒன்பதாவது கட்டளையும் மிகவும் முக்கியமானது. அதுவும் நமது இனத்தார் மத்தியில் இந்தக் கட்டளை பெருமளவில் மீறப்பட்டு வருகிறது. பாவம் இருக்குமிடமெல்லாம் இந்தக் கட்டளை மீறப்படுகிற போதும் நம்மத்தியில் இதை மீறுவது ஒரு பண்பாடாக வளர்ந்து நிற்கிறது. ஆகவே, இந்தக் கட்டளையை மிகக் கவனத்துடன் நாம் ஆராய்ந்து கர்த்தர் இதன் மூலம் போதிக்கும் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
வேதம் போதிக்கும் கர்த்தர் உண்மையானவராக இருக்கிறார். சங்கீதம் 31:5, அவரை சத்தியபரன் என்று அழைக்கிறது. தீத்து 1:2ன் மூலம் அவரால் பொய் சொல்ல முடியாது என்றும் தெரிந்து கொள்ளுகிறோம். அவர் பரிசுத்தமாக இருப்பதுபோல நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பது வேத போதனை (மத்தேயு 5:48). சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்று யோவான் (1 யோவான் 2:21) சொல்லுகிறார். கர்த்தர் உண்மையுள்ளவராக இருப்பதால் அவருக்கும் பொய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாத்தானே பொய்க்குக் காரணமானவனாக இருக்கிறான். வேதம் அவனை பொய்யின் பிதா என்று வர்ணிக்கிறது (யோவான் 8:44).
ஆதாம் பாவத்தில் வீழ்ந்த காலத்தில் இருந்தே, சத்தியம் எது? என்ற கேள்வி வரலாற்றில் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்துள்ளது. கர்த்தர், தன்னைப் பற்றிய சத்தியமான எண்ணங்களை மட்டும் கொண்டிருக்கவே மனிதனைத் தோற்றுவித்தார். கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக்குறித்து சிந்தித்து, அவற்றின்படிப் பேசி நடந்துகொண்டிருக்கும்போது மட்டுமே மனிதனால் உண்மையைப் பேசவும் உண்மையின்படி நடக்கவும் முடிந்தது. ஆனால், சாத்தான் மனிதனை ஏமாற்றி தனக்கு அடிமையாகும்படிச் செய்த நாளில் இருந்து மனிதன் நீதியைக்குறித்தும், சத்தியத்தைக்குறித்தும் தன்னுடைய சொந்த எண்ணங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான். அன்றிலிருந்து அவன் சாத்தானின் பிடியில் சிக்கி உண்மையைப் பேசவும், உண்மையாக நடக்கவும் முடியாத நிலையை அடைந்தான். இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்து ஒரு முறை, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதி முதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாமிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.” என்றார் (யோவான் 8:44). இதிலிருந்து கர்த்தருடைய சிந்தனைகளை நம் மனத்தில் கொண்டிருப்பதே சத்தியம் என்று அறிந்து கொள்ளுகிறோம். கர்த்தருடைய சிந்தனைகளுக்கு எதிரான எந்த சிந்தனையும் பொய்யாகும். இயேசு கிறிஸ்துவை தன் வாழ்வில் விசுவாசிக்கின்ற மனிதனால் மட்டுமே சத்தியத்தை அறிந்து அதன்படிப் பேசி நடக்க முடியும். இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. இதனால் இயேசுவை விசுவாசித்த உடனேயே ஒரு மனிதன் சத்தியத்தை முழுவதுமாக அறிந்து அதன்படி நடக்கும் பூரணத்துவத்தை அடைந்துவிடுவான் என்று எண்ணிவிடக்கூடாது. எந்தவொரு விசுவாசியும் இந்த உலகத்தில் பூரணத்துவத்தை அடைய முடியாது. ஆனால், ஒரு விசுவாசி கிறிஸ்துவை விசுவாசித்த நாள் முதல் சத்தியத்தை அறிந்து அதன்படிப் பேசியும், நடக்கவும் கூடிய வல்லமையை அடைகிறான். அத்தோடு அவன் சத்தியத்தில் தொடர்ந்து வளர்ந்து பூரணத்துவத்தை நோக்கி நடை போடத்தொடங்குகிறான்.
நாம் உண்மையைப் பேசி அதன்படி நடக்க வேண்டுமானால் இரண்டு காரியங்கள் அவசியம்:
(1) முதலாவதாக, நாம் மனப்பூர்வமாக எதை நம்புகிறோமோ அதை மட்டுமே பேசுகிறவர்களாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் தான் வாயால் சொல்லு வதை உள்ளத்தில் மனப்பூர்வமாக நம்புகிறவனாக இல்லாமலிருந்தால் அவனை உண்மையுள்ளவன் என்று கூற முடியாது. கர்த்தர் உங்களுக்கு இன்றே சுகத்தைக் கொடுப்பார் என்று ஆத்துமாக்களைப் பார்த்து சொல்லுகிற ஒரு கூடில்லாத குருவிக்கு உண்மையில் அது நடக்குமென்பது சத்தியமாகத் தெரியாது. இருந்தாலும் தன்னுடைய சொந்த நன்மைக்காக அவன் அத்தகைய வாக்குறுதியை ஆத்துமாக்களுக்கு கொடுக்கிறான். இதைத்தான் பொய் என்று வேதம் சொல்லுகிறது. தான் உண்மையில் நம்பாததை (அது நடக்கும் என்று உறுதியாகத் தெரியாததை) ஒருவன் பேசும்போது அவன் பொய்யனாகிறான். இதேபோல ஒரு காரியத்தை செய்து முடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை செய்யாமல் விடுவது நம்மவர்களுடைய பண்பாடு. இதை நம் மக்கள் அன்றாடம் காபி குடிப்பது போல் செய்துவருகிறார்கள். ஆனால், இப்படிச் செய்பவர்களை வேதம் பொய்யர்கள் என்கிறது. ஏன் தெரியுமா? அந்தக் காரியத்தை நிச்சயம் செய்து முடிக்க முடியும் என்பது தெரியாதபோது, செய்வேன் என்று வாக்குறுதி கொடுப்பது உண்மைக்குப் புறம்பாக நடப்பதாகும். உண்மை பேசி நடக்கவேண்டும் என்று வைராக்கியத்துடன் இருப்பவர்கள் அப்படியான வாக்குறுதியை ஒருபோதும் கொடுக்க மாட்டார்கள். பொய் சொல்லுகிறோம் என்ற விவஷ்தையே இல்லாமல் நம்மில் பலர் இப்படி அன்றாடம் பொய்யர்களாக நடந்து வருகிறோம்.
(2) இரண்டாவதாக, நாம் உண்மையை மட்டுமே பேச வேண்டும். அதாவது, உண்மையென்று நமக்குத் தெரிந்ததை மட்டுமே நாம் பேச வேண்டும். ஒன்று உண்மையாகவும் இருக்கலாம் என்று யாரோ சொன்னதைக் கேட்டு நம்பி அதை மற்றவர்களுக்கு சொல்லுவது பொய் சொல்லுவதாகும். அப்படி நடப்பது ஒன்பதாம் கட்டளையை மீறி நடப்பதாகும். இப்படி உண்மை என்று நம்பி எத்தனைப் பேரைக்குறித்து நம்மத்தியில் பலர் பொய் பேசி வருகிறார்கள். புறம்பேசுவதும், பிறரைக்குறித்து தவறான செய்திகளைப் பரப்புவதும் பண்பாடாக நம்மத்தியில் வளர்ந்திருக்கிறது. தினத்தந்தி பத்திரிகையை வளர்த்தெடுத்திருக்கும் தமிழினத்தில் இது இருப்பது ஆச்சரியமல்ல. விசுவாசிகள் மற்றவர்களைப்பற்றி தவறான செய்திகளைப் பரப்புவது ஒன்பதாம் கட்டளையை மீறுகிற செயலாகும். இப்படிப் பொய் பேசுவது அநியாயமாக நம்மத்தியில் இன்று பண்பாடாக இருந்து வரும் கொடுமை ஒழிய வேண்டும். வேதம் சொல்லுகிறது, “உன் ஜனங்களுக்குள் அங்கும்மிங்கும் கோள் சொல்லித் திரியாயாக” (லேவி. 19:16) என்று. விசுவாசி தன் காதில் விழுவதையெல்லாம் உண்மையென்று நம்புகிறவனல்ல. முக்கியமாக மற்றவர்களைப் பற்றிய தவறான செய்திகளை அவன் உடனடியாக நம்பிவிட மாட்டான்; அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதைத் தவிர்ப்பான். கேள்விப்படுகிற எதையும் அவன் ஆராய்ந்து பார்க்காமல் வெளியில் சொல்லவும் மாட்டான். வெறுமனே நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிடுவதால் ஒருவன் பரலோகம் போய்விடப் போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அன்றாடம் ஒன்பதாம் கட்டளையை மீறிப் பொய் சொல்லி வருகிறவர்கள் பரலோகம் போகப் போவதாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை.
சிலர், ஒரு காரியத்தை செய்வேன் என்று மனங்கூசாமல் சொல்லிவிட்டு பிறகு அதைச் செய்யாமல், ஏன் செய்யமுடியவில்லை என்பதற்கு குண்டுச்சட்டிக் கணக்கில் பல சாக்குப் போக்குகளைச் சொல்லுவார்கள். இது ஆத்துமாக்கள் மத்தியில் மட்டுமல்ல ஊழியக்காரர்கள் மத்தியிலும் சகஜமாக இருந்து வருகிற ஒரு பொய்யான செயல். இதைக் கர்த்தர் அடியோடு வெறுக்கிறார். ஒரு காரியத்தை செய்ய முடியும் என்றால் மட்டுமே அதைச் செய்வேன் என்று நாம் சொல்லப் பழக வேண்டும். செய்ய முடியுமா? முடியாதா? என்று தெரியாவிட்டால், அதை செய்வேன் என்று சொல்லுவது சுத்தப் பொய். கேட்கிறவர் மனங்கோணும்படி நடந்துவிடக்கூடாது, ஆகவே, அவர் சந்தோஷப்படுகிறமாதிரி ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக அந்தக் காரியத்தை செய்கிறேன் என்று சொல்லுவதை சுத்தத் தமிழில், நம்பிக்கைத் துரோகம் என்று அழைப்பார்கள். இதை ‘எட்டப்பன் வேலை’ என்று கிராமப்புறப் பாஷையில் சொல்லுவார்கள். முகத்தாட்சன்யம் பார்க்கும் காலரா வியாதி நம்மினத்தை ஆண்டு வருவதால் அது பாவமான வியாதி என்பதையே உணராமல் நாம் பொய்பேசி மற்றவர்களை ஏமாற்றிப் பொய்யர்களாக வாழ்ந்து வருகிறோம். ஒன்பதாம் கட்டளையை நாளுக்கு நாள் மீறி அதே வாயால் கர்த்தருக்கு அல்லேலூயாவும், ஸ்தோத்திரமும் சொல்லிக் கொண்டிருக்கும் பொய்யர்களுக்கு பரலோகத்தில் நிச்சயம் இடம் இருக்காது.
பொதுவாக நம்மத்தியில் காணப்படும் இன்னுமொரு பிசாசுப்பண்பாடு சொந்த நலனுக்காக சொல்லும் அன்றாடப் பொய்கள். உதாரணத்திற்கு, யாராவது நம்மைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தால் குளியலறையில் இருந்து கொண்டே மனைவியையோ, மகனையோ கூப்பிட்டு நாம் வீட்டில் இல்லை என்று வந்திருப்பவரிடம் சொல்லச் சொல்வது. இது ஒன்றும் அப்படிப் பெரிய பொய்யில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருக்கும்போதே நான் வீட்டில் இல்லை என்று போனிலோ அல்லது வந்திருப் பவரிடமோ சொல்லச் சொல்லுவது வடிகட்டின பொய். சுய நலநோக்கத்தில் ஏதாவதொரு நிலமையில் இருந்து தப்பிக்கொள்வதற்காக இப்படி சிந்தித்துப் பார்க்காமல் பலர் பொய் சொல்லிவிடுவார்கள். ஆனால், வேதமோ நன்மை வரும்படியாக தீமை செய்வது தகாது என்று கண்டிக்கிறது (ரோமர் 3:8).
சில வேளைகளில் பொய் சொல்லுவது அவசியம்தான் என்று சிலர் வாதாடுவார்கள். ஆபிரகாம் இப்படிச் செய்தானே! என்று உதாரணம் காட்டுவார்கள் (ஆதி. 12:13, 19; 20:2, 5, 12). ஆகவே, ஆபத்துக் காலத்தில் பொய் சொல்லுவது அப்படியொன்றும் பாவமில்லை என்பார்கள். ஆனால், இந்தவிதமான சிந்தனை சரியில்லை. இது வேதத்திற்குப் புறம்பானது. ஆபிரகாம் தன் வாழ்வில் பல தவறுகளை செய்திருக்கிறான். ஆனால், கர்த்தர் ஒருபோதும் அவற்றை நியாயப்படுத்தவில்லை. பொய் சொல்லக்கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருப்பதால் அந்தக் கட்டளையை எந்த சூழ்நிலையிலும், எந்த விதத்திலும் மீற முடியாது. மீறுவது பாவம். அதை ஆபிரகாம் செய்தாலும் பாவம் பாவமே. ஆகவே, கர்ததருடைய அனுமதியுடன் ஆபிரகாம் பொய் சொன்னான் என்று வேதத்தில் இருந்து நிரூபிக்க முடியாது. ஆனால், சில தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் நம் எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக நமக்குத் தெரிந்திருக்கும் உண்மைகளில் ஒரு சிலவற்றை வெளிப்படையாக சொல்லாமலிருக்க கர்த்தர் அனுமதிக்கிறார் என்பதை நாம் வேதத்தில் இருந்து உதாரணம் காட்டலாம். சாமுவேல் ஒரு சந்தர்ப்பத்தில் தனக்குத் தெரிந்திருந்த உண்மைகளில் ஒன்றை மட்டும் சொல்ல கர்த்தர் அனுமதித்தார் (1 சாமுவேல் 16:1-5). சாமுவேலை இரண்டு காரியங்களைச் செய்யும்படிக் கர்த்தர் கட்டளையிட்டார். அரசன் அந்தக் காரியங்கள் என்ன என்று கேட்டு சாமுவேலை வற்புறுத்தியபோது, அவற்றில் ஒன்றை மட்டும் அரசனுக்கு சொல்லும்படிக் கர்த்தர் சாமுவேலுக்கு கட்டளையிட்டார். எந்தக் காரியத்தை சொன்னால் சாமுவேலுக்கு ஆபத்து ஏற்படுமோ அந்தக் காரியத்தை சொல்லாமல், ஆபத்து ஏற்படுத்தாத காரியத்தை மட்டும் அரசனுக்கு சொல்லும்படிக் கர்த்தரே அனுமதித்தார். ஆனால், இங்கே நாம் கவனிக்க வேண்டிய உண்மை சாமுவேல் பொய் சொல்லவில்லை என்பதுதான். நமக்குத் தெரிந்திருக்கும் உண்மைகள் அனைத்தையும் அறிந்துகொள்வதற்கு தீய மனிதர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை இந்த உதாரணத்தின் மூலம் கர்த்தர் விளக்குகிறார். அதேசமயம் பொய் சொல்லுவதற்கு நமக்கு அதிகாரம் இருப்பதாகக் கர்த்தர் சொல்லவில்லை என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
எந்த சந்தர்ப்பத்திலும் பொய் சொல்லக்கூடாது என்று போதிக்கும் ஒன்பதாம் கட்டளை சாட்சி சொல்லுவதைப் பற்றி விஷேசமாகக் குறிப்பிடு கிறது. அதாவது, சில சந்தர்ப்பங்களில் உண்மையைத் தெளிவாக வெளிப்படையாக சொல்லுவது ஏனைய சூழ்நிலைகளைவிட மிக அவசியமானது என்கிறது. உதாரணமாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது ஏனைய சந்தர்ப்பங்களைவிட மிகவும் அக்கறையோடு நாம் உண்மையை விளக்க வேண்டும். சில வேளைகளில் உண்மை பேசுவதில் நாம் அசட்டையாக இருந்து விடுவோம் என்பது தெரிந்துதான் நீதிமன்றத்தில் நாம் கர்த்தருக்கு முன் உண்மையை மட்டும் சொல்லுவோம் என்று வாக்குறுதி எடுக்கும்படி செய்கிறார்கள். நீதிமன்றத்தில் நாம் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசக்கூடாது. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் எல்லாச் சந்தர்ப்பத்திலும் உண்மை பேசி உண்மையுள்ளவர்களாக நடக்கவேண்டும் என்று இயேசு கிறிஸ்து நமக்குப் போதித்திருப்பதால், அவிசுவாசிகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுகிறபோது அதேவிதமாக கவனத்தோடு சத்தியத்தை மட்டும் பேச வேண்டும் என்கிறது ஒன்பதாம் கட்டளை.
இந்த நேரத்தில் என்னால் ஒரு உண்மையைக் குறித்துப் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. விசுவாசிகள் சத்தியத்தை மட்டும் பேச வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்று ஒன்பதாம் கட்டளை மூலம் கர்த்தர் இத்தனை அக்கறையோடு பேசும்போது, சத்திய வேதத்தை ஆழமாகப் படித்தறிந்துகொள்ளாமலும், அதைப்படிப்பதில் எந்தவித அக்கறை எடுக்காமலும், பிரசங்க மேடையில் ஏறி ஏனோதானோவென்று ஆத்துமாக்களுக்கு வேதசத்தியம் என்ற பெயரில் தாம் நினைத்ததைப் பொய்யாகச் சொல்லியும், ஞாயிறு பாடசாலைகளில் குழந்தைகளுக்கு வேதபோதனையென்ற பெயரில் வெறும் கட்டுக்கதைகளைச் சொல்லியும் தங்களைத் தாங்களே ஏமாற்றி வரும் எத்தனையோ ஊழியக்காரர்கள், ஊழியம் என்ற பெயரில் தாங்கள் ஒன்பதாம் கட்டளையை மீறிக்கொண்டிருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்¢க்காமல் இருக்க முடியவில்லை. கர்த்தரின் வார்த்தையை வைத்துக் கர்த்தரின் பெயரில் பொய் சொல்லி வருபவர்கள் இருதயத்தில் இயேசுவுக்கு துப்பரவாக இடமிருக்க முடியாது. அதேபோல வேதம் போதிக்கும் சத்தியங்களை உண்மையென்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறவர்களும் பொய்யர்களே. இப்படி நடந்து கொள்கிறவர்கள் சத்தியதேவனை சந்தேகிக்கிறவர்களாக இருக்கிறார்கள். விசுவாசிகள் என்றுகூறிக் கொண்டு வேதம் போதிக்கும் சத்தியங்களை ஏற்று அதன்படி நடக்க மறுப்பவர்கள் ஒன்பதாம் கட்டளையை மீறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒன்பதாம் கட்டளையை நாம் மீறாமல் இருப்பதற்கான சில வழிமுறை களைக் குறித்து இனி சிந்திப்போம். (1) நாம் எதையும் பேசுவதற்கு முன்பு அதைக்குறித்து சிந்தித்துப் பார்த்து அதன்பிறகு பேசுவது உண்மை பேச உதவும் (நீதிமொழிகள் 10:19; யாக்கோபு 3:5). (2) பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருந்துவிடுவது பொய்யாக நடப்பதாகும். அது பொய்க்கு உடந்தை யாய் இருக்கும் நடவடிக்கையாகும். சுற்றி நடக்கும் தீமைகளைக் கண்டும் காணாமலும் இருந்துவிடுவது ஒன்பதாம் கட்டளையை மீறுவதாகும். (3) மனிதனைவிட கர்த்தருக்குப் பிரியமாக நடந்துகொள்வதை நாம் வாழ்க்கைத் தத்துவமாக வைத்திருக்க வேண்டும். பிறருடைய மனங்கோணக்கூடாது, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்துவிடவேண்டும் என்ற அடிப்படையில்தான் பொதுவாக நமது எல்லாப் பேச்சுக்களும் அமைந்து விடுகின்றன. ஆனால், கர்த்தருக்கு விசுவாசமாக நடப்பது மட்டுமே நமது கடமை என்பதை உணர்ந்து நாம் சிந்தித்துப் பேசத்தொடங்குவோமானால் உண்மையை மட்டுமே எப்போதும் பேசுபவர்களாக இருப்போம்.