கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 82: பத்தாவது கட்டளை என்ன?

பதில்: பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும் பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பது பத்தாவது கட்டளையாகும்.

(யாத்திராகமம் 20:17)

கேள்வி 83: பத்தாவது கட்டளை மூலமாக என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

பதில்: நாமிருக்கிற நிலையில் முழுமையான திருப்தியோடு இருக்க வேண்டும் என்றும். நம்முடைய அயலானைக்குறித்தும், அவனது உடமைகளைக் குறித்தும் நியாயமான இரக்கமுள்ள மனநிலை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பத்தாவது கட்டளை எதிர்பார்க்கிறது.

(எபிரேயர் 13:5; ரோமர் 12:15; 1 கொரிந்தியர் 13:4-6)

கேள்வி 84: பத்தாவது கட்டளை எதைத் தடைசெய்கிறது?

பதில்: நமது நிலையைக் குறித்து திருப்தியற்றிருப்பதையும், அயலானுடைய நலத்திலே பொறாமை கொள்ளுதலையும், மற்றும் அவனுடைய எந்தவொரு பொருளின் மீதும் தகாத ஆசைகளையும், விருப்பங்களையும் வைத்திருப்பதையும் பத்தாவது கட்டளை தடை செய்கிறது.

(1 கொரிந்தியர் 10:10; கலாத்தியர் 5:26; கொலொசேயர் 3:5; பிரசங்கி 7:20; ஆதியாகமம் 8:21; யாக்கோபு 3:28)

விளக்கவுரை: கர்த்தரின் நியாயப்பிரமாணம் நாம் வெளிப்படையாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைவிட உள்ளத்தின் ஆழத்தில் நாம் பக்திக்குரிய ஆத்மீக மாற்றங்களை அடைந்திருக்கிறோமா என்பதிலேயே அக்கறை காட்டுகிறது. பத்தாவது கட்டளை இதை சிறப்பாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஏனைய ஒன்பது கட்டளைகளும் நாம் நமது வாழ்க்கையில் வெளிப்படையாக செய்யும் காரியங்களிலும், உள்ளத்தின் ஆழத்தில் கொண் டிருக்கிற எண்ணங்களிலும் அக்கறை காட்டுகின்றன. ஆனால், இந்தப் பத்தாவது கட்டளை நமது உள்ளத்தின் ஆத்மீகத் தன்மையில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது. இதனால்தான் பவுல் அப்போஸ்தலன், “பாவம் இன்னதென்று நான் நியாயப்பிரமாணத்தினால் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாதிருப்பேனே.” (ரோமர் 7:7) என்கிறார். பரிசேயனாகவிருந்த பவுல் நியாயப்பிரமாணத்தை வார்த்தை தவறாமல் வெளிப்புறமாக கைக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதனால்தான், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப் படாதவன் (பிலி. 3:6) என்று அவரால் கூறமுடிந்தது. பிறர் குற்றங்காணும்படி பவுலின் வாழ்க்கையில் வெளிப்புறமாக விபச்சாரத்தையோ, கொலை செய்வதையோ, களவெடுப்பதையோ காணமுடியவில்லை. ஆனால், இந்தப் பத்தாவது கட்டளை மற்றவர்களுக்குத் தெரியாமல் பவுலின் உள்ளத்தின் ஆழத்தில் மறைந்திருந்த இச்சையை வெளிப்படுத்தியது. இந்தக்கட்டளை மனித உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து நிற்கும் இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

உண்மையில் ஏனைய எல்லாப் பாவங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது இச்சைதான். யாக்கோபு, “¢அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்¢ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” என்று விளக்குகிறார் (யாக்கோபு 1:14, 15). ஒருவருடைய உள்ளத்தில் இச்சை இருக்குமானால் பத்துக்கட்டளைகளில் ஒன்பது கட்டளைகளையும் அவர் பொதுவாக உடனடியாக மீறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதேன் தோட்டத்தில் கைவைக்கக்கூடாத மரத்தின் கனியைப் பார்த்து ஆசைப்பட்டதே ஆதாம், ஏவாளின் பாவத்தின் ஆரம்பமாக இருந்தது. அந்த இச்சையே அவர்கள் வெளிப்படையாக கர்த்தருக்கெதிரான பாவத்தைச் செய்ய வழிநடத்தியது. அதன் மூலம் அவர்கள் ஏனைய ஒன்பது கட்டளைகளையும் மீறினார்கள்.

இந்தக் கட்டளை நாம் என்னென்ன பொருட்களில் இச்சை வைக்கக் கூடாது என்று பட்டியலிட்டுத் தருகிறது. இப்படியாக உலகப்பொருட்களைப் பற்றி இந்தக்கட்டளை பேசுவதற்குக் காரணம், நாம் இருதயத்தில் “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற சமாதானத்துடன் வாழாத போதே இச்சை ஏற்படுகிறது என்பதால்தான். நம்மைவிட மற்றொருவர் அதிகமாக வைத்திருக்கிறார் என்று நாம் அவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறபோதே இச்சை தோன்றுகிறது. இயேசு சொன்னார், “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல”. தனக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் பொருட்களில் ஒருவன் திருப்தியோடு வாழ மறுக்கிறபோது அவனுடைய வாழ்க்கையில் பாவங்கள் வெள்ளம் போல் பெருக ஆரம்பிக்கும். இது இன்றைக்கு நாம் பெருமளவில் எங்கும் பார்க்கக்கூடிய பாவமாக இருக்கின்றது. டெலிவிஷனும், கேபிள் டீவியும், இன்டர்நெட்டும், கிரெடிட் கார்டுகளும், ஆயிரக்கணக்கான விளம்பரங் களும் புதிது, புதிதாக நாம் எதையாவது வாங்க வேண்டுமென்று அன்றாடம் தூண்டிக்கொண்டிருக்கின்றன. சமுதாயத்தில் நாம் பார்க்கின்ற, சகல வசதிகளையும் கொண்டிருக்கிறவர்களே நல்ல வாழ்க்கை வாழ்கிறவர்களாக பொதுவாகவே எல்லோரும் எண்ணுகின்றனர். இன்று தமிழினத்தில் இப்படி ‘வசதிக்காக’ வாழ்கின்ற பெருந்தொகையான ஊழியக்காரர்கள் பத்தாம் கட்டளையை மீறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான வாழ்க்கை பவுல் கொண்டிருந்த எண்ணங்களுக்கு மாறானவையாக இருக்கின்றன. “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்க வும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.” என்று பவுல் தன்னுடைய வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறார். இதுவே வேதம் போதிக்கும் வாழ்க்கைநெறி. கர்த்தர் கொடுத்திருப்பவற்றில் முழுத்திருப்தி யுடன் வாழ்வதே அந்த நெறி.

ஒவ்வொருவரும் உழைத்துத் தாமிருக்கும் நிலையில் உயர்வது நியாய மானது. அப்படிச் செய்யாமல் அக்கறையற்றோ அல்லது சோம்பேரியாகவோ வாழ்வதைத்தான் வேதம் வெறுக்கிறது. “சோம்பற் கையால் வேலை செய்கிற வன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.” என்கிறது, நீதிமொழிகள் 10:4. சோம்பேரியாக இருப்பவன் சாப்பிடத் தகுதி யில்லாதவன். உழைத்து சாப்பிட விரும்பாதவன் அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படுகிறவன். இதை இந்தப் பத்தாவது கட்டளை கண்டிக்கிறது. இன்று முழுநேர ஊழியக்காரர்கள் என்ற பெயரில் முழுநேர சோம்பேரிகள் தமி ழினத்தில் அதிகமாக இருக்கிறார்கள். உழைத்துத் தங்களையும், குடும்பத்தை யும் கவனிப்பதைவிட்டுவிட்டு, ஐந்து, ஆறு ஆத்துமாக்களை மட்டும் வைத்துக் கொண்டு பணத்திற்காக அலைந்து கொண்டிருப்பவர்கள் வேதபோதனை களின்படி முழுநேரத் திருடர்களே. முழுநேர ஊழியம் என்பதை இந்த மனிதர்கள் பெருமைமிக்க ஒரு தொழிலாக மட்டுமே நினைத்துக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், வேதபோதனைகளின்படி முழுநேரத்தையும் பயன் படுத்தும் அளவுக்கு ஒரு ஊழியக்காரனுக்கு ஆத்மீகவேலை இல்லாவிட் டால் அவன் முழுநேர ஊதியம் வாங்குவதற்கு தகுதியில்லாதவன். ஆகவே, வெறும் ஐந்து, ஆறு ஆத்துமாக்களை மட்டும் வைத்திருப்பவர்கள் முழுநேர ஊழியத்தை ஒருக்காலும் நியாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு வாழ்க்கை யில் நேரம் அதிகமாக இருப்பதால் சோம்பேரித்தனம் வளரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதோடு, பணத்திற்காக பிச்சை கேட்டு அலைய வேண்டிய நிலைமையும் ஏற்படும். இதைத்தவிர்த்து மனத்தூய்மையுடன் கர்த்தருக்கு விசுவாசமாயிருக்க அவர்கள் ஒரு பகுதி நேரத்தொழிலைச் செய்தால் தங்க ளுடைய மானத்தையும் குடும்பமானத்தையும் காத்துக் கொள்ளலாம். சபை வளர்ந்து ஆத்துமாக்கள் அதிகரிக்கிறபோதே அந்த மனிதன் முழுநேரத்தையும் ஆத்துமாக்களுக்கு கொடுக்கவேண்டிவரும். அதுவரை முழுநேர ஊதியத்தை ஆத்துமாக்களிடமோ, சபைக்கு வெளியிலோ தேடப்பார்ப்பது அநீதியானது. பத்தே ஆத்துமாக்களை மட்டும் கொண்டிருக்கும் சிலர் தங்களுடைய முழுநேர ஊழியத்தை நியாயப்படுத்துவதற்காக தகுதிக்கும், வரம்புக்கும் மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். நாடு முழுவதிலும் தங்களை ஊழியம் செய்ய கர்த்தர் அழைத்திருப்பதுபோல் பேசுவார்கள், ஊர் ஊராக அலையப்பார்ப்பார்கள். இருக்கும் பத்துப்பேரையும் கவனிக்கமாட்டார்கள். இப்படி நடந்து கொள்கிற மனிதனால்  தன்னுடைய குடும்பத் தேவைகளை சந்திக்க முடியாது. அவன் மனைவி பிள்ளைகளை அன்றாடம் நிராகரிக்கிற வனாகத்தான் இருப்பான். “என்னுடைய கணவன் ஊழியம், ஊழியம் என்று ஊர் ஊராகத் திரிகிறார். வீட்டில் குழந்தைகளுடன் நான் படும் கஷ்டமே அவருக்குத் தெரிவதில்லை” என்று சொல்லி கண்கலங்குகிற ஊழியக்காரர் களின் மனைவிகள் நம்மத்தியில் அதிகம். இந்த அநியாயமெல்லாம் நடப்பதற்குக் காரணம் நூற்றுக்கணக்கான வேதஞானமற்ற சோம்பேரிகள் இன்று ஊழியம் செய்யப்புறப்பட்டிருப்பதால்தான். இதற்கெல்லாம் மாறாக வேதம், இந்தக் கட்டளையின் மூலம் ஒவ்வொரு விசுவாசியும் நேரத்தை வீணாக்காமலும், மற்றவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக அபகரிக்க முயலாமலும் நேர்மையோடு உழைத்து வாழ்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

தன்னுடைய செல்வத்தை நீதியான வகையில் பெருக்கிக் கொள்ள வேதம் விசுவாசிக்கு அனுமதியளிக்கிறது. ஆகவே, விசுவாசிகள் தங்களுடைய திறமை களை நீதியானவிதத்தில் பயன்படுத்த வேண்டும். கர்த்தர் தருகின்ற நல்ல சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதேநேரம், நம்முடைய திறமையிலும், கிடைத்துள்ள சந்தர்ப்பங்களிலும் திருப்தியுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். நம்மைவிட இன்னொருவர் உயர்வாக இருக்கிறாரே என்று ஆதங்கப்படக்கூடாது, முறுமுறுக்கக்கூடாது. நம்முடைய இருதயத்தில் கசப்பான வைராக்கியமும், விரோதமும் இருக்கக் கூடாது என்கிறார் யாக்கோபு (5:14). மற்றவர்களுடைய வசதிகளைக் குறித்து நமக்கு கசப்பான எண்ணங்கள் இருந்தால் கலகமும் சகல துர்ச்செய்கை களும் உண்டாகும் என்று எச்சரிக்கிறார் யாக்கோபு (5:15). உலகத்தில் எல்லோரும் சமமான தரத்தில் இருப்பதில்லை. கர்த்தர், சிலர் மற்றவர்களைவிட அதிகமானவற்றை அனுபவிக்கும்படி அனுமதித்திருக்கிறார். ஆகவே, கர்த்தர் நமக்குத் தந்திருப்பதில் திருப்தியுடன் இருப்பது நமது கடமை.

கர்த்தர் நமக்குத் தந்திருப்பவற்றுடன் நாம் எப்படித் திருப்தியுடன் இருப் பது என்ற கேள்விக்கு பதிலளிப்பது அவசியம். கர்த்தரை நம்முடைய வெகு மதியாக நாம் கருதுகிறபோதே போதுமென்ற மனத்தோடு நாம் திருப்தியாக வாழ முடியும். நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழுமுன்பு அவர்கள் கர்த்தரில் முழுச்சமாதானத்துடன் இருந்தார்கள். அவர்கள் அநாவசியமாக எதற்கும் ஆசைப்படவில்லை. சாத்தானின் பிடியில் அவர்கள் விழுந்தபோது இச்சை ஏற்பட்டது. உலகப் பொருள்களில் மனிதன் என்றும் முழுத்திருப்தி அடைய முடியாது. கர்த்தர் மனிதனை அந்த முறையில் சிருஷ்டிக்கவில்லை. கர்த்தரில் மட்டுமே மனிதன் முழுத்திருப்தியையும், சமாதானத்தையும் அனுபவிக்க முடியும். இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவனை அடையும்போதே மனிதன் உலக இச்சையில் இருந்து விடுபடும் வாழ்க்கையை அடைகிறான். இயேசு சொன்னார், “பூமியில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். . . உங்கள் பொக்கிஷம் எங்கே யிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (மத்தேயு 6:19-21). இந்த உலகம் நிலையானதல்ல என்பது மெய்விசுவாசிக்குத் தெரியும் (2 பேதுரு 3:12). ஆகவே, பவுல் சொல்லுகிறார், “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்த துண்டானால் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவை களையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.” (கொலோசேயர் 3:1-3).

முதலாவதாக வருபவர்கள் கடைசியிலும், கடைசியில் வருபவர்கள் முத லாவது இடத்தையும் பிடிப்பார்கள் என்று இயேசு போதித்திருக்கிறார். இதன் அடிப்படையில் இந்த உலகத்தில் அதிகம் அனுபவிக்காத விசுவாசிகள் பரலோகத்தில் அதிக வெகுமதிகளைப் பெறாமல் போகமாட்டார்கள் என்பதை மத்தேயு 25:14-30 போன்ற பகுதிகள் போதிப்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையின் மூலம் கர்த்தருக்கே சகல மகிமையும் சேரும்படி வாழுவோம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s