கேள்வி 85: எந்த மனிதனும் கர்த்தருடைய கட்டளைகளைப் பூரணமாகக் கைக்கொள்ளக்கூடியவனா?
பதில்: வீழ்ச்சிக்குப்பிறகு எந்த மனிதனும் கர்த்தருடைய கட்டளைகளை இவ்வுலக வாழ்க்கையில் பூரணமாக கைக்கொள்ள முடியாதவனாக இருக்கிறான். ஆனால், அனுதினமும் தனது சிந்தனைகளாலும், வார்த்தைகளாலும், செயல்களாலும் அவற்றை மீறுகிறான்.
(பிரசங்கி 7:20; 1 யோவான் 1:8; கலாத்தியர் 5:17; ஆதியாகமம் 6:5; 8:21; ரோமர் 3:9-20; யாக்கோபு 3:2-12)
கேள்வி 86: நியாயப்பிரமாணத்திற்கெதிரான எல்லா மீறுதல்களுமே கொடியவைதானா?
பதில்: சில பாவங்கள் அவற்றின் தன்மையினாலும், அவற்றால் ஏற்படுகின்ற சில பாதகங்களினாலும் ஏனைய பாவங்களைவிட கர்த்தருடைய பார்வையிலே மிகவும் கொடியவையாய் இருக்கின்றன.
(எசேக்கியல் 8:6, 13, 15; யோவான் 19:11)
கேள்வி 87: ஒவ்வொரு பாவமும் எதைத் பெறத்தகுதியானது?
பதில்: ஒவ்வொரு பாவமும் இவ்வுலகத்திலும், இனிவரப்போகும் உலகத்திலும் கர்த்தருடைய கோபத்தையும், சாபத்தையும் பெறத்தகுதியானது.
(எபேசியர் 5:6; கலாத்தியர் 3:10; புலம்பல் 3:39; மத்தேயு 25:41)
விளக்கவுரை: கிறிஸ்தவத்திற்கும் ஏனைய எல்லா மதங்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு கர்த்தர் மனிதனை இரட்சிக்கிறாரா? அல்லது மனிதன் தன்னுடைய சுயமுயற்சியால் இரட்சிப்பை அடைகிறானா? என்ற கேள்விக்கான பதிலிலேயே தங்கியிருக்கிறது. கத்தோலிக்க மதம் உட்பட உலகில் உள்ள சகல மதங்களும் மனிதன் தன்னுடைய கிரியைகளின் மூலம் இரட்சிப்பை அடைவதாகப் போதிக்கின்றன. கிறிஸ்தவத்தின் பெயரில் தவறான போதனையளிப்பவர்களும் இதையே சொல்லுகின்றனர். ஆனால், வேதபூர்வமான கிறிஸ்தவம் கர்த்தர் மட்டுமே மனிதனை இரட்சிக்கிறவராக இருக்கிறார் என்று விளக்குகின்றது. இரட்சிப்பில் அவருக்கு மட்டுமே எல்லா மகிமையும் சேர வேண்டும் என்பது அதன் போதனை. அதுமட்டுமல்லாமல் வேதபூர்வமான கிறிஸ்தவம், மனிதன் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கையின் ஆரம்பத்திற்கு மட்டுமல்லாமல், அதன் ஆரம்பமுதல் முடிவுவரையும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் கர்த்தரிலேயே தங்கியிருக்கிறான் என்று விளக்குகிறது. “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு கூறுகிறார் (யோவான் 15:5).
மேலே நாம் பார்க்கின்ற வினாவிடைகளில் இருந்து கர்த்தரை விசுவாசிக்கின்ற ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சிந்தனைகளாலும், வார்த்தைகளாலும், செயல்களாலும் பாவம் செய்கிறான் என்று பார்க்கிறோம். இந்த மனிதன் விசுவாசியான பின்பும் இந்தவிதத்தில் பாவங்களைச் செய்கிறான். இந்த விசுவாசிக்கு பாவத்தை பற்றி நன்றாகத் தெரியும். அவன் பாவம் செய்வதை ஒருபோதும் விரும்பவில்லை. அத்தோடு, அவன் பாவம் செய்யாமல் இருக்க தன் வாழ்க்கையில் சகல முயற்சிகளையும் எடுக்கிறான். அதேவேளை, பவுல் சொல்லுவதுபோல், “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் நான் விரும்பாத தீமையையே செய்கிறேன்” என்று அவன் தன் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து அறிக்கையிடுகிறான். இந்தப் போராட்டத்தை விசுவாசத்தில் வளர்ந்த, முதிர்ந்த விசுவாசிகளிலும் நாம் பார்க்கலாம். இதனால்தான் இயேசுவைத் தவிர வாழக்கையில் பூரணமானவர்களாக, பாவம் செய்யாதவர்களாக இருந்த வேறு எவரைப் பற்றியும் நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. அதனால்தான் ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய பலவீனத்தைப் பற்றிய அறிவையும், கர்த்தரில் தான் எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்ற உணர்வையும் கொண்டிருக்க வேண்டும்.
எந்தவொரு மனிதனும் பாவமில்லாத பூரணமான வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழ முடியாது என்ற சத்தியத்தின் அடிப்படையில் இரண்டு தவறான போதனைகளை நாம் ஆராய்வது அவசியமாகிறது.
(1) பாவமற்ற பூரணத்துவம் (Sinless Perfection)
இந்தப் போதனை விசுவாசி இந்த உலகத்தில் தன்னுடைய வாழ்க்கையில் பாவமற்ற பூரணத்துவத்தை அடைய முடியும் என்று போதிக்கின்றது. உதாரணமாக ரோமன் கத்தோலிக்க மதத்தில் சிலரை “புனிதர்களாக” (Saints) அறிவிக்கிறார்கள். இப்படிப் புனிதர்களாக அறிவிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பரிசுத்தத்தை அடைந்துவிட்டதாகவும் அதற்கும் ஒருபடி மேலே போய் கர்த்தர் எதிர்பார்த்ததையும்விட அதிகமாக தங்கள் வாழ்க்கையில் செய்திருப்பதாகவும் ரோமன் கத்தோலிக்க மதம் சொல்லுகிறது. அவர்கள் மேலதிகமாக செய்திருக்கும் “நல்லவைகள்” ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் சேர்த்துவைக்கப்படுகின்றன. இந்த “மேலதிகமானவற்றை” the works of supererogation என்பார்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் அந்த மதத்திற்கு ஏதாவது கிரியைகளைச் செய்து அந்த மதம் சேகரித்து வைத்திருக்கும் புனிதர்களின் புண்ணியங்களில் இருந்து ஒரு பகுதியை பெற்று தங்கள் குறைகளைப் (பாவத்தைப்) போக்கிக் கொள்ளலாம்.
இது தவிர சில புரட்டஸ்தாந்து மதப்பிரிவுகளிலும், பாரம்பரிய சபைப் பிரிவுகளைச் சேராத சில சபைகள் மத்தியிலும் இன்னுமொருவிதமான தவறான போதனை காணப்படுகின்றது. ஒரு விசுவாசி கர்த்தரிடம் பூரண மாக சரணடைந்தால் கர்த்தர் வெற்றியைத் தருவார் என்கிறது இந்தப் போதனை. இதுவே மேலான வாழக்கையின் இரகசியம் என்கிறது இந்தப் போதனை. இப்போதனையின்படி, சில கிறிஸ்தவர்கள் வெற்றிகரமான விசுவாச வாழ்க்கைக்கான இரகசியத்தைப் பயின்று பாவத்திலிருந்து பூரண விடுதலை அடைகிறார்கள். இந்தப் போதனை Higher life teaching, let God and let go doctrine என்ற பெயர்களில் அழைக்கப்படுகி¢றது. இங்கிலாந்தில் நடக்கும் கெசிக் கொன்வென்சனில் (Keswick convention) இதுவே போதிக்கப் படுகின்றது. இந்தியாவில் சில சகோதரத்துவ பிரிவுகளின் மத்தியில் இந்தப் போதனை காணப்படுகின்றது. பெந்தகொஸ்தே சபைகள் மத்தியிலும் இப்போதனைகளைப் பார்க்கலாம். இந்தப்போதனைக்கு எதிராக வேதம், இந்த உலகத்தில் பாவம் செய்யாத மனிதன் ஒருவனுமேயில்லை என்று சொல்லுகிறது (பிரசங்கி 7:20). யோவான் சொல்லுகிறார், “நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரை பொய்யராக்குகிறவர்களா யிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது (1 யோவான் 1:10). ஆகவே, வேதபோதனையின்படி பாவமே இல்லாது பூரணமாக ஒரு மனித னும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. பூரணத்துவத்தை இந்த உலகத்தில் அடையளாம் என்ற போலிப் போதனைக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.
(2) அன்டிநோமியனிசம் (Antinomianism)
நாம் மேலே பார்த்த போலிப்போதனையைப் போலவே ஆபத்தான இன்னுமொரு போதனை “அன்டிநோமியனிசம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. “நியாயப்பிரமாணத்திற்கு எதிரானது” என்று இதற்கு அர்த்தம் (Anti – எதிரான, Nomian – நியாயப்பிரமாணம்). இந்தப் போதனையை ஏற்கனவே சந்தித்திருக் கிறோம். இது, நியாப்பிரணாணத்தை ஒருவராலும் பூரணமாகக் கடைப்பிடிக்க முடியாததாலும், கிறிஸ்து அதனைத் தன் வாழ்க்கையில் நமக்காக பூரணமாகக் கடைப்பிடித்து நிறைவேற்றியிருப்பதாலும் நியாயப் பிரமாணத்திற்கு விசுவாசிகள் கட்டுப்பட்டவர்களல்ல என்று போதிக்கிறது. அதாவது, பத்துக்கட்டளைகளுக்கு விசுவாசிகள் இன்று கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது அன்டிநோமியனிசம். இது கிறிஸ்தவ வாழ்க்கையை அலங்கோலத்தில் கொண்டுபோய் முடிக்கும் மோசமான போதனை.
சில அன்டிநோமியனிச பக்தர்கள், விசுவாசி இரண்டு பேராக (இரண்டு நபர்கள்) இருப்பதாகப் போதிக்கிறார்கள். அதாவது அவனில் “ ஆதாமின் பழைய மனிதனும்” “கிறிஸ்துவில் புது மனிதனும்” இருப்பதாக விளக்குகிறார்கள். இந்தப் போதனையின்படி விசுவாசி பாவம் செய்கிறபோது அவனில் இருக்கும் “ஆதாமின் பழைய மனிதனே” அந்தப் பாவத்தைச் செய்கிறான். கிறிஸ்துவின் புதிய மனிதனோ, “நான் என்ன செய்யட்டும், என்னுள் இருக் கும் பழைய மனிதன்தான் இந்தப்பாவத்தைச் செய்கிறான்” என்று சொல்லுவான். இப்படியொரு போதனை வேதத்தில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தால், வேதம் சொல்லுகிறது, விசுவாசி, இப்போது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதன் என்றும், அவன் கிறிஸ்துவை விசுவாசித்த அன்றே தனது பழைய மனிதனை கிரியைகளோடு முற்றாக ஒழித்துவிட்டான் என்றும் விளக்குகிறது (கொலோசெயர் 3:9). அதாவது, கிறிஸ்துவில் புதிய மனிதனாக இருக்கும் விசுவாசி இனிப் பழைய மனிதனாக இருந்து ஆதாமின் பழைய மனிதனுக்குரிய சிந்தனை, செயல்களோடு வாழமாட்டான். அவனில் இப்போது கிறிஸ்து ஜீவிக்கிறார், ஆள்கிறார். இருந்தாலும், நம்மில் பாவத்தின் எச்சங்கள் இன்னும் இருக்கதான் செய்கிறது. அது நம்மைத் தொடர்ந்து இந்த உலகத்தில் பாதிக்கத்தான் செய்யும். அதற்காக நம்மில் இரண்டு நபர்கள் (Two-personalities) ஒரே நேரத்தில் இருப்பதாக விளக்குவது பெருந்தவறு. அப்படியொரு போதனை வேதத்தில் இல்லை. எனவே, விசுவாசியை பாவம் ஆளமுடியாது. அவன் பாவத்தால் ஆளப்படவும் மாட்டான். அதேநேரம், அவன் பாவத்தை செய்துவிட்டால், அதற்குத் தான் பொறுப்பாளியல்ல என்று சொல்லி பழைய மனிதனில் பலியைப் போடவும் மாட்டான்.
உண்மையான விசுவாசி இந்த இரண்டு தப்பான போதனைகளுக்கும் இடம் கொடுக்காமல் வேதம் போதிக்கிறபடி,
(1) முதலாவதாக, தொடர்ந்து தன் வாழ்க்கையில் கர்த்தருக்கு விசுவாசத்தோடு கீழ்ப்படிகிறவனாக இருப்பான்.
(2) இரண்டாவதாக, தொடர்ந்தும் தன்னுடைய பலவீனங்களையும், பாவங்களையும் கர்த்தருக்கு முன் அறிக்கையிடுகிறவனாக இருப்பான். அவன் பரிசுத்தமாக வாழ ஆசைப்படுகிறவனாக இருக்கிறபடியால் “கர்த்தருடைய கட்டளைகளை நேசிக்கிறேன்” என்று சொல்லுவான். கர்த்தருடைய கட்டளைகளில் எதுவும் தனக்கு மனவருத்தத்தை அளிப்பதாக அவன் எண்ணமாட்டான் (ரோமர் 7:22; 1 யோவான் 5:3). மரணத்திலிருந்து விடுதலையாகி ஜிவிக்கிற படியால் தன்னில் பூரணத்துவத்தை அடைவது அவனுடைய நோக்கமாக இருக்கும். ஆனால், அதைத் தான் இன்னும் அடையவில்லை என்பதையும், அதை இவ்வுலக வாழ்வில் ஒருபோதும் அடைய முடியாதபோதும் அதை அடைவதே தன் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதையும் அவன் எப்போதும் மனதில் வைத்திருப்பான். தன்னுடைய நீதிக்காக அவன் எப்போதும் கர்த்தருக்கு முன் கிறிஸ்துவிலேயே தங்கியிருப்பான். இதுவரை நாம் பார்த்தவற்றை இன்னொருவிதமாக விளக்குவதானால், தன்னுடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு பரிசுத்தம் அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு விசுவாசி அடிக்கடி மனந்திருந்தி தன்னுடைய சகல நம்பிக்கைகளுக்கும் கிறிஸ்துவிலேயே தங்கியிருந்து அவரை மேலும் மேலும் விசுவாசிப்பான்.
விசுவாசி இந்த முறையில் வாழ்வதற்கான காரணத்தை நாம் விளங்கிக்கொள்வது அவசியம். கிறிஸ்து நிறைவேற்றிய நியாயப்பிரமாணத்தில் அறிவு அதிகரிக்க அதிகரிக்க கர்த்தர் தன்னில் எதிர்பார்க்கும் பரிசுத்தம் எத்தனை பெரியது, மகா விசாலமானது என்பதை விசுவாசி உணர்வான். பரிசுத்தத்தில் வளர வளர அவனுள் இருக்கும் பலவீனமும், பாவமும் அவனுக்கு கண்ணாடியில் தெரிவதுபோல் மேலும் தெளிவாகத் தெரியவரும். இதற்குக் காரணம் மெய்யான விசுவாசி கர்த்தருடைய பரிபூரணப் பரிசுத்த நியமத்தின் அடிப்படையில் தன்னை எப்போதும் ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுவதுதான். அதனாலேயே அவனால் கிறிஸ்துவுக்குள்ளான கீழ்ப்படிதலில் வளரமுடிகிறதோடு, தொடர்ந்தும் மனந்திரும்பி கிறிஸ்துவில் தன்னுடைய ஆத்மவிருத்திக்காக தங்கியிருக்கவும் முடிகிறது.