கேள்வி 88: பாவிகள் தங்களுடைய பாவத்தின் காரணமாக அனுபவிக்க வேண்டிய தேவ கோபத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் தப்ப கர்த்தர் அவர்களுக்கு என்ன வழியை வெளிப்படுத்தியிருக்கிறார்?
பதில்: பாவிகள் தங்களுடைய பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இரட்சிப்பைப் பெறும் ஒரே வழியாக கர்த்தர் அவர்களுக்கு தன்னுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
(ரோமர் 1:16; அப்போஸ்தலர் 4:12)
கேள்வி 89: பாவிகள் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தர் தன்னுடைய சுவிசேஷத் தின் மூலம் எதை எதிர்பார்க்கிறார்?
பதில்: தங்களுடைய பாவத்தின் காரணமாக அனுபவிக்க வேண்டிய தேவ கோபத் திலிருந்து தப்பி இரட்சிப்பை அடைய பாவிகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்றும், ஜீவனுக்குரிய மனந்திரும்புதலை அடைய வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
(அப்போஸ்தலர் 20:21)
விளக்கவுரை: சகல மனிதர்களும் நியாயமாக தேவ கோபத்தையும், சாபத்தையும் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வரப்போகும் நித்திய தண்டனையிலிருந்து தப்ப இயேசு கிறிஸ்து மூல மாக வரும் இரட்சிப்பைத் தவிர வேறு வழியில்லை. இதைத் தெளிவாக இந்த வினாவிடை விளக்குகிறது. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.” (அப்போஸ்தலர் 4:12).
88-வது வினாவிடை இரட்சிப்புக்கான வழியை கிறிஸ்துவின் சுவிஷே சம் விளக்குவதாகக் கூறுகிறது. அப்போஸ்தலன் பவுல், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படமாட்டேன்” என்று கூறுகிறார். தொடர்ந்து “முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவ னெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபலனாயிருக்கிறது” என்கிறார் பவுல். கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்காக கர்த்தர் நமக்கு சுவிசேஷத்தை மட்டுமே அளித¢திருக்கிறார். அந்த சுவிசேஷத்தை வேதத்தில் மட்டுமே பார்க்க முடியும். பாவிகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும். வேறு எதன் மூலமும் அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியாது. இன்று சுவிசேஷத்தை விலக்கி வைத்துவிட்டு எதை எதையோ செய்து இயேசு கிறிஸ்துவை பாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் பலர் இறங்கியிருக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்க மதத்திலும், இந்து மதத்திலும் சுவிசேஷத்திற்கு இடமில்லை. இந்த வினாவிடை, இரட்சிப்புக்கு நாம் சுவிசேஷத்தில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
88-ம் வினாவிடை சுவிசேஷத்தின் அவசியத்தை வலியுறுத்த, 89-ம் வினாவிடை அந்த சுவிசேஷத்தின் மூலம் கர்த்தர் பாவிகளிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை விளக்குகிறது. இரண்டு காரியங்களைக் கர்த்தர் எதிர்பார்ப்பதாக இந்த வினாவிடை கூறுகிறது. (1) ஜீவனுக்குரிய மனந்திரும்புதல். (2) இயேசு கிறிஸ்துவில் விசுவாசம். இந்த இரண்டு மில்லாமல் எவரும் தேவ இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. பரலோகம் போக முடியாது. பாவி தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்கிறது கர்த்தரின் சுவிசேஷம். அதாவது, அவன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து, அந்தப் பாவத்தின் காரணமாக தேவகோபம் தன்மேல் இருப்பதையும், தான் பரத்திற்கு எதிராகப் பாவம் செய்திருப்பதையும், அந்தப் பாவத்தில் தொடர்ந்திருக்கும்வரை தனக்கு மீட்பு இல்லை என்பதையும் உணர்ந்து கெட்ட குமாரனைப் போல மெய்யான மனந் திரும்புதலை அடைவது அவசியம். இத்தகைய மனந்திரும்புதலைத் தருகிறவர் பரிசுத்த ஆவியானவர் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பரிசுத்த ஆவியின் கிரியையினால் ஏற்படுவதே மெய்யான மனந்திரும்பு தல். யூதாஸினுடைய வாழ்க்கையில் நாம் பார்ப்பது போலியான மனந்திரும்புதல். அங்கே பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருக்கவில்லை. மனந்திரும்புதல் அசாதரணமான அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. சிலர் ஜோன் நியூட்டனைப் போல தங்களுடைய வாழ்க்கையில் அசாதாரணமான அனுபவங்களை அடைந்திருக்கலாம். அதாவது, ஒருவர் விசுவாசத்தை அடையுமுன் நீண்ட காலத்துக்கு பாவத் தின் கோரத்தை தன் வாழ்க்கையில் உணர்ந்து அனுபவித்திருக்கலாம். வேறு சிலருக்கு இந்த மனந்திரும்புதல் குறுகியகால அனுபவமாக மட்டும் இருந்திருக்கும். எல்லோரும் ஒரேவிதமான அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். இருந்தபோதும் கெட்ட குமாரன் தன் வாழ்வில் அனுபவித்த மனந்திரும்புதலுக்கான மெய்யான அடையாளங்கள் மனந்திரும்புகிற ஒவ்வொருவரிடமும் காணப்படுவது அவசியம்.
இரண்டாவதாக, இந்த வினாவிடை இரட்சிப்புக்காக ஒருவர் கிறிஸ்துவை முழுமனத்தோடு விசுவாசிக்க வேண்டும் என்கிறது. இரட்சிப்பை நமக்கு அளிக்கிறவர் இயேசு கிறிஸ்துவே. அவரே இரட்சிப்புக்கான அனைத்தையும் கல்வாரியில் நிறைவேற்றியிருக்கிறார். ஆகையால், அவரைப் பாவி தன்னுடைய இரட்சிப்பிற்காக விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தைத் தவிர வேறு எதையும் கர்த்தர் நமக்குக் கொடுக்கவில்லை. தன்னுடைய பாவங்களுக்காக மரித்து தனக்கு பூரண விடுதலை வாங்கித் தந்திருக்கிறவர் இயேசு மட்டுமே என்பதை முழுமனத்தோடு பாவி விசுவாசிப்பது அவசியம். ஜீவனுக்குரிய மனந்திரும்புதலும், விசுவாசமும் இணைந்தே காணப்படும். ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதை நாம் காணமுடியும். இவற்றின் தனித் தன்மைகளை விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வாறு இவற்றைத் தனித்தனியாகப் படித்தாலும் விசுவாசிக்கின்ற மனிதன் இவை இரண்டையும் ஒருசேர அனுபவிக்கிறான். ஆகவே, மெய்யான மனந்திரும்புதலில் விசுவாசம் இருக்கும் என்பதையும், மெய்யான விசுவாசமிருக்குமிடத்தில் ஜீவனுக்குரிய மனந்திரும்புதல் இருக்கும் என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.